5 February 2018

பிரபா ஒயின்ஷாப் – 05022018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டில் முதன்முதலாக திரையரங்கில் பார்த்த படம் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். படம் எப்படி இருக்குமோ என்று உள்ளூர ஒரு பயம் இருந்தாலும், ஒரு மாதம் தியேட்டருக்கு போகவில்லை என்பது ஒரு மாதிரி நெருடலாக இருந்ததால் சென்றுவிட்டேன். (எஸ்கேப் தியேட்டரில் இன்னமும் தேசிய கீதம் ஒலிபரப்புகிறார்கள்). படம் துவங்கி ஐந்தே நிமிடங்களில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகிறது.

1. நாம் வித்தியாசமான ஒரு படத்தை பார்க்கப் போகிறோம்.
2. நம் பொறுமையை ரொம்ப சோதிக்கப் போகிறார்கள்.

பயங்கரமான சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி படம் போல பல்லண்டம், அண்டம், பால் வீதி, சூரியக் குடும்பம் என்று நீட்டி முழக்கிவிட்டு கடைசியில் ஒரு கிராமத்துல என்று சப்பையாக முடிக்கும்போதே நமக்கான ஏமாற்றம் துவங்கிவிடுகிறது. நகைச்சுவையில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, நகைச்சுவை நன்றாக இருந்து நம்மை சிரிக்க வைக்கும் ரகம். இன்னொன்று, தாத்தா என்னங்கடா பண்ணி வச்சிருக்கீங்க என்று நம்மை காண்டாக்கி சிரிக்க வைக்கும் ரகம். ஒ.ந.நா.பா.சொ. இரண்டாவது ரகம். ஆனால் நிறைய தருணங்களில் மனது விட்டு சிரித்தேன் என்பது மட்டும் உண்மை. அதே சமயம், நிறைய தருணங்களில் வெறுப்பாகவும் உணர்ந்தேன். இப்படத்தின் ஐரணி அதுதான். இவ்வளவு மனம் விட்டு சிரித்துவிட்டு இது மொக்கை என்று சொல்வதற்கு எனக்கு மனது வரவில்லை. மற்றபடி இன்னமும் பட்டக்ஸில் குத்துவதை எல்லாம் ஒரு காமெடி என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி துவங்கியபிறகு மிகவும் சோதிக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் ஒரு முக்கால் மணிநேர படத்தை வெட்டி வீசியிருக்க வேண்டும். 

விஜய் சேதுபதியையும், சிவ கார்த்திகேயனும் முறையே அடுத்த அஜித் / விஜய் என்று சினிமா ரசிக வட்டாரத்தில் சிலர் பேசிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் ஒருவேளை விஜய் சேதுபதிக்கே இருந்தால் அவர் உடனடியாக அதனை கைவிடுவது நல்லது. சும்மா ஸ்லோ மோஷனில் நடந்து வருவது, புது கெட்டப் போடுவது என்று தியேட்டரில் கிளாப்ஸ் / விசில் வரும் என்று நம்பி சில ஷாட்டுகளை வைத்து ஏமாந்திருக்கிறார்கள். சிரஞ்சீவியின் பங்காரு கோடிபெட்டா பாடலை எங்காவது சொருக வேண்டும் என்று பிரயாசப்பட்டு அதற்காக வேறு ஒரு காட்சி. யாரு ஸ்வாமி மியூஸிக் ? இவர் வேறு ஒரு பக்கம், பேரிரைச்சலைக் கொடுத்து காண்டைக் கூட்டுகிறார். கெளதம் கார்த்திக்குக்கு புத்திசாலித்தனமான, கூலான இளைஞன் வேடம். தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வேடங்கள் அவருக்கு கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். கூடுதலாக இம்முறை அவரை அப்பா வாய்ஸில் மிமிக்ரி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். பதற்றமடையாத, உணர்ச்சிவசப்படாத அவரது கதாபாத்திரம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. 

காயத்ரியின் முகத்தை டீஸரில் எங்கேயோ பார்த்திருக்கிறேன். அதனால் ஹீரோயின் யாரென்று எதுவும் யோசிக்காமல் போய் திரையரங்கில் உட்கார்ந்தால் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் – நிஹாரிகா. சிரஞ்சீவியின் தம்பி மகளாம். தெலுங்கு சினிமாவில் சுற்றிச் சுற்றி எல்லோரும் உறவுக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. இந்த நிலையில் போனால் ஹீரோ, ஹீரோயின் புக் செய்யும் முன்பு அவர்களுக்குள் முறை வருகிறதா என்று பார்த்துதான் புக் செய்ய வேண்டும். ஏற்கனவே இப்படியிருக்க நிஹாரிகாவுக்கும், பிரபாஸுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று தெலுங்கு சினிமா தொழிற்சாலையில் ஒரு புரளி பரவிக்கொண்டிருக்கிறது. படத்தில் நிஹாரிகாவின் கதாபாத்திரப் பெயர் அபாயலட்சுமி. படம் முழுக்க சிடுசிடுவென இருக்கிறார் என்றாலும் அவரது க்யூட்டான முகபாவனைகளால் திணறடித்துவிடுகிறார்.

**********

புத்தகக் காட்சியில் கிடைத்த இரண்டு சர்ப்ரைஸ்கள். முதலாவது, பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை. பூம்புகார் பதிப்பகத்தில் பார்த்ததும் பழைய நினைவுகள் வர, வாங்கிவிட்டேன். பதினோராம் வகுப்பு துணைப்பாடத்தில் வந்த சிறுகதைகளில் ஒன்று. செவ்வாழை என்கிற சிறுகதை உங்களுக்கு நினைவில் இருப்பது உங்களுக்கு வாய்த்த தமிழாசிரியரை பொறுத்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இக்கதையை மிகவும் விஸ்தாரமாக, காட்சிகளை கண் முன் நிறுத்தும் வகையில் வர்ணனைகளோடு சொன்னார் எனது அப்போதைய தமிழாசிரியர் பத்மநாபன். அவரது விவரணையின் காரணமாக இப்போது செவ்வாழையை படிக்கும்போது மொத்தக் கதையும் இவ்வளவுதானா என்று தோன்றுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு சிறுகதை பூபதியின் ஒருநாள் அலுவல். இவ்விரு கதைகளில் வரும் உரையாடல்களையும் அக்காலத்தில் மனப்பாடமாக வைத்திருந்தேன். (ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர் !)

இரண்டாவது சர்ப்ரைஸ் – கலைஞரின் ஒரே இரத்தம். ஸ்டாலின் நடித்த இரண்டு திரைப்படங்களில் ஒன்றான ஒரே ரத்தத்தைப் பற்றி கடந்த வாரம் எழுதியிருந்தேன். அதன் முகப்பு உரையில் குங்குமத்தில் தொடராக வந்த கதை என்று கலைஞர் குறிப்பிடுகிறார். எனின் அது சூரியன் பதிப்பக வெளியீடாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன், ஆனால் கிடையாது. அப்புறம் எதார்த்தமாக பார்த்தால் கலைஞர் கருவூலம் என்கிற ஸ்டாலை யாருக்கும் தெரியாமல் ஒரு மூலையில் வைத்திருந்தார்கள். அங்கே கிடைத்தது ஓர் இரத்தம். வெளியீடு: பாரதி பதிப்பகம். நாவல் – சினிமா இரண்டாகவும் வெளிவந்துள்ள கதைகளில் முதல்முறையாக இவ்வளவு ஒற்றுமைகளைக் காண்கிறேன். எழுத்தில் என்ன இருக்கிறதோ அது எழுபத்தைந்து சதவிகிதம் சினிமாவில் எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான சில வசனங்கள் அப்படியே மாறாமல் வருகின்றன. இருப்பினும் சில மாற்றங்கள். நாவலில் பிரசார நெடி அதிகம், ஸ்டாலின் கதாபாத்திரம் சாகவில்லை, கிஷ்மு கதாபாத்திரம் ரசனையாக இல்லை, பாண்டியன் – சீதா பிட்டு கிடையாது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

ஸ்ரீராம். said...

அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் அல்லவா திருமணம் என்று கிசுகிசுத்தார்கள்? மாறிவிட்டதா?