அன்புள்ள வலைப்பூவிற்கு,
முந்தைய பகுதி: கோவா - ரயில் பயணம்
வடக்கு கோவாவில் நாங்கள் தங்குவதற்காக
தேர்ந்தெடுத்த இடம் அஞ்சுனா. முதலில் எங்களுக்கு அஞ்சுனா பற்றி அதிக விவரங்கள்
தெரியாது.
அஞ்சுனாவை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இங்கே
பரவலாக மலிவான வாடகையில் அறைகள் கிடைக்கின்றன. எங்களுக்கு தினசரி வாடகை 1600ல்
நீச்சல் குளம் கொண்ட டீஸண்டான ஹோட்டல் கிடைத்தது. இரண்டாவது காரணம், இது வடக்கு
கோவாவின் மய்யம். அங்கே சென்ற பிறகு தெரிந்துகொண்ட விஷயம், வடக்கு கோவாவில்
அஞ்சுனா, மோர்ஜிம், அரம்போல் போன்ற பகுதிகளில் ரஷ்யர்களின் நடமாட்டம் அதிகம். இப்பகுதியையே லிட்டில் ரஷ்யா என்கிறார்கள். அத்தோடு முடியவில்லை.
அஞ்சுனா எங்களுக்கு இன்னும் ஆச்சர்யங்கள் கொடுத்தாள்.
![]() |
நாங்கள் தங்கிய விடுதி (படம்: இணையம்) |
கோவா சென்ற முதல்நாள் டூ-வீலர் வாடகை
எடுத்து, அங்கிருந்து வடக்கு நோக்கி பயணித்து, ஹோட்டலை கண்டுபிடித்து செட்டில்
ஆவதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது. மதிய உணவு கூட சாப்பிடவில்லை. இரவு நல்ல
உணவகமாக பார்த்து செமத்தியாக சாப்பிட வேண்டுமென தீர்மானித்தோம். மேலும் கோவா
மண்ணில் காலடி எடுத்து வைத்தபிறகே தொண்டையை நனைக்க வேண்டுமென வைராக்கியமாக
இருந்தோம். எனவே மதுக்கூடத்துடன் கூடிய உணவகங்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம்.
அப்போது திட்டமிடலின் போது கர்லீஸ் என்கிற பெயரை அடிக்கடி கடந்தது நினைவுக்கு
வந்தது. இரவு உணவுக்கு கர்லீஸ் போவதென்று முடிவானது. இருப்பினும் ஒரு சிறிய
தயக்கம், ஒருவேளை பயங்கர பாஷான இடத்தில் போய் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது ?
ஒருவேளை அப்படி நடந்தால் கூச்சப்படாமல் எழுந்து வெளியே வந்துவிடலாம் என்று பேசி
வைத்துக்கொண்டோம்.
நாங்கள் இருந்த இடத்திலிருந்து கர்லீஸ்
சில கிலோமீட்டர்கள் மட்டும்தான். ஆனால் டூ-வீலர் சந்து சந்தாக வெகு தூரம் சென்றது.
அங்கே எல்லோருக்கும் கர்லீஸுக்கு வழி தெரிந்திருந்தது. நீண்ட தேடலுக்குப் பின்
கர்லீஸ் கார் பார்க்கிங்கை அடைந்தோம். ஏராளமான கார்கள் நின்றிருந்ததை பார்த்ததும்
மீண்டும் தயக்கம் தலையெடுத்தது. கார் பார்க்கிங் தாண்டி கொஞ்ச தூரத்திற்கு
டூ-வீலர்கள் அனுமதிக்கப்பட்டன. அதன்பிறகு டூ-வீலர்களை பார்க் செய்துவிட்டு
ஒற்றையடி பாதை மாதிரி இருளுக்குள் கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஏதோ பழைய
படங்களில் வில்லன் தங்கியிருக்கும் ரகசிய இடத்திற்கு செல்வது போல கர்லீஸுக்கு
செல்லும் பாதையே ஒரு மாதிரி அமானுஷ்யமாக இருந்தது. இடையே சிறு சிறு கடைகள். மேகி
எல்லாம் தயார் செய்து விற்கிறார்கள். கடைசியில் ஒரு கடற்கரையை சென்றடைந்தோம்.
அங்கே தனியாக ஒரு உலகம் இயங்கிக்கொண்டிருந்தது !
சிவன் பள்ளத்தாக்கு (கர்லீஸ்) - இரவுத் தோற்றம் |
அங்கே போன பிறகுதான் எங்களுக்கு ஒரு
விஷயம் புரிந்தது. கர்லீஸ் என்பது அந்த இடத்தின் பொதுவான பெயர். (அங்கே கர்லீஸ்
என்ற உணவகம் பிரதானம், அது தவிர வேறு சில உணவகங்களும் உண்டு). கடற்கரை
மணல்பரப்பில் உட்கார்ந்து சாப்பிட மேஜைகள் போடப்பட்டிருந்தன. பூல் பெஞ்சுகள்
போடப்பட்டிருந்தன. இவை தவிர்த்து உணவகங்களில் தரை தளம், முதல் தளம் இருந்தன. இங்கே
கடற்கரையில் அமைந்துள்ள உணவகங்களை Shack என்கிறார்கள். Shack என்றால் தற்காலிகமாக
அமைக்கப்பட்ட சிறு குடில் என்று பொருள். எல்லா கடற்கரை உணவகங்களிலும்
பாரபட்சமில்லாமல் அசைவ உணவுகளும், மதுவகைகளும் கிடைக்கின்றன.
முதல் தளத்திலிருந்து |
மீண்டும் கர்லீஸுக்கு வருவோம்.
முதல்முறை கோவாவின் இரவுலகை பார்ப்பதால் ஒருமாதிரி தயங்கித் தயங்கி நின்றோம்.
உணவகங்களில் நோட்டமிட்டவரை பெரும்பாலானவர்கள் ஹூக்கா அடித்துக்கொண்டிருந்தார்கள்.
கர்லீஸ் என்கிற அப்பிரதான உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கே வேண்டாம்
என்று பக்கத்திலிருந்த இன்னொரு உணவகத்திற்கு சென்று அமர்ந்தோம்.
சிவன் பள்ளத்தாக்கு - பகல் தோற்றம் (படம்: இணையம்) |
ஆங்காங்கே NO DRUGS என்று கொட்டை
எழுத்தில் போர்டு வைத்திருக்கிறார்கள். நிற்க. கோவாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட
கடற்கரைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஏராளமான உணவகங்கள் உள்ளன. ஆனால் இந்த
கடற்கரையில், இந்த சில உணவகங்களில் மட்டும்தான் NO DRUGS என்கிற போர்டு
வைத்திருக்கிறார்கள். ஏன் ? இந்த இடத்தைப் பற்றி உங்களுக்கு சில
குறிப்புகள் சொல்கிறேன். நாங்கள் சென்ற உணவகத்தின் பெயர் ஷிவா வேலி (Shiva
Valley). குறைந்த ஒளியில் இயங்கும் இந்த உணவகத்தின் சுவர்களில் சைக்கடெலிக்
ஆர்ட்டில் சிவன் படங்கள் வரைந்திருக்கிறார்கள். டிரான்ஸ் இசையை ஒலிக்க
விடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் சிலர் கீழே மெத்தையில் அமர்ந்து ஹூக்கா
புகைக்கிறார்கள். முக்கியமான ஹிண்ட், கர்லீஸை அடையும் வழியெங்கும் பாப் மர்லி படம்
பொறித்த பனியன்கள், கீ செயின்கள், லைட்டர்கள் விற்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும்
மேலாக, வழியில் சின்னச் சின்ன கடைகளில் ரோலிங் பேப்பர் விற்கிறார்கள். இதற்கு மேல்
கர்லீஸைப் பற்றி விவரமாக சொல்ல வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.
கோவாவில் எளிதில் வீடுபேறு அடையக்கூடிய இடம் கர்லீஸ் !
![]() |
சைக்கடெலிக் சுவர் சித்திரம் (படம்: புஷ்பிதா பலித்) |
இப்பயணக்கட்டுரையை தொடர்வதற்கு முன்
டிரான்ஸ் இசையைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். இவ்வகை இசையை நான் முதன்முதலாக
அஞ்சுனாவில் தான் அறிந்துக்கொண்டேன். யூடியூபில் Trance Music என்று தேடிப்
பாருங்கள். டிரான்ஸ் இசையை ஹெட்செட் மூலமாக கேட்பதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆரம்பத்தில் உங்களுக்கு இந்த இசை பிடிக்காமல் இருக்கலாம். பின்னணியில் ஓடவிட்டு
உங்கள் வேலைகளை கவனியுங்கள். (வாகனம் ஓட்டும்போது வேண்டாம்). ஜிம்மில் வொர்க்
அவுட் செய்யும்போது கேட்பது கச்சிதம் அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது. டிரான்ஸில் பயன்படுத்தப்படும்
இசைக்கருவிகள், தாளங்கள், ஏற்ற இறக்கங்கள் உங்கள் மூளைக்குள் ரசாயன மாற்றத்தை
ஏற்படுத்தி ஒரு புது உத்வேகத்தைக் கொடுக்கும். இதனை நானே தனிப்பட்ட முறையில்
அனுபவித்திருக்கிறேன். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ண தாஸ் என்பவரின் ஓம் நமச்சிவாய பாடலை எதேச்சையாக
கேட்டேன். ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இப்பாடல் படிப்படியாக பிரவாகமெடுத்து
பெருவெள்ளமாக மாறி பன்னிரண்டு நிமிடப்பாடல் முடியும்போது ஒரு புத்துணர்வு
கிடைக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் ப்ளிஸ் என்கிறார்கள். நம்மூரில் பல சாமியார்
மடங்களில் கும்பல் கூடுவதற்கு காரணம் இந்த டிரான்ஸ் இசைதான் ! வெறுமனே டிரான்ஸ்
இசையைக் கேட்டாலே இப்படியெல்லாம் ஆகிறது என்றால் ‘வீடு’ எடுத்துக்கொண்ட சமயத்தில்
டிரான்ஸ் கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தமிழ் சினிமாவில்
ஓ ஈசா என் ஈசா (ஆயிரத்தில் ஒருவன்), துஷ்டா (இறைவி) ஆகிய இரண்டு பாடல்களில்
டிரான்ஸின் தடயங்களை கவனிக்கலாம்.
இங்கே ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லி
விடுகிறேன். இந்த ‘வீடு’ விஷயத்தில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய தெளிவான
புரிதல் இல்லாததாலும், வெளியூர் போகுமிடத்தில் ஏதேனும் அசம்பாவிதம்
ஏற்பட்டுவிடலாம் என்கிற பயம் இருந்ததாலும் நாங்கள் அதனை முயன்று பார்க்கவில்லை.
ஹூக்கா கூட முயலவில்லை. வெறும் கேள்வி ஞானம்தான்.
கர்லீஸை பற்றி இரண்டு விஷயங்கள் என்னால்
உறுதியாக சொல்ல முடியும். ஒன்று, இங்குள்ள வெயிட்டர்களை ரகசியமாக விசாரித்தால்
சகலவிதமான போதை வஸ்துகளும் கிடைக்கும். (2017ல்சில வெயிட்டர்கள் போதை வஸ்து சப்ளை
செய்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்) இரண்டாவது, கஞ்சா புகைக்கும்
பழக்கமுடையவர்களுக்கு இந்த இடம், இந்த ஆம்பியன்ஸ் ஒரு சுவர்க்கம் ! வாரந்தோறும்
செவ்வாய்க்கிழமை இரவுகளில் இங்கே ட்ரான்ஸ் இசை பார்ட்டி நடைபெறுகிறது. இக்கிழமைகளில்
மட்டும் இங்கே கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதாக கேள்விப்படுகிறேன்.
அஞ்சுனாவில் கர்லீஸீல் கிடைக்கும்
இப்பரவச அனுபவத்தை தவிர்த்து நல்ல உணவு, நல்ல மதுவகைகள், நல்ல கடற்கரை, புதன்கிழமை
மார்க்கெட், சனிக்கிழமை இரவு மார்க்கெட் (சீஸனில் மட்டும்) என்று சகலமும்
கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ஏற்கனவே கோவாவிற்கு சென்று வந்தவர்கள் மறுமுறை
அஞ்சுனாவிற்கு மட்டும் தனியாக ஒரு திட்டம் போடலாம். குறிப்பாக சிவராத்திரி, ஹோலி,
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு சமயங்களில் போனால் தரமான சம்பவத்திற்கு
கியாரண்டி !
அடுத்து வருவது: கோவா – வடக்கு கடற்கரைகள்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
N.R.PRABHAKARAN
|
No comments:
Post a Comment