Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

31 March 2014

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் - ஆடியோ போஸ்ட்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆடியோ போஸ்ட் வெளியிட வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் அவா. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை முயற்சி செய்தேன். தோல்வி. மொத்தம் நூற்றி எழுபத்தைந்து முறை அந்த ஆடியோ கேட்கப்பட்டிருப்பதாக தரவு சொல்கிறது. அதில் நானே ஐம்பது முறை கேட்டிருப்பேன். எத்தனை பேர் முழுவதுமாக கேட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்குப் பிறகு ஆடியோ முயற்சி ஏதும் செய்யவில்லை.

ஆடியோ போஸ்ட் வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. முக்கியமானது இரைச்சல். நள்ளிரவில் அறையில் மின்விசிறியை எல்லாம் கூட நிறுத்திவிட்டு பதிவு செய்ய தயாரானேன். சி.பி.யூவிலிருந்து ஒரு சத்தம், கடிகாரம் டிக் டிக் என்று அடிக்கிறது. ‘நிசப்தத்தை’ புறக்கணித்துவிட முடியாத இடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். கடிகாரத்தை நிறுத்தியிருந்தால் இன்னும் கூட சத்தம் குறைந்திருக்கும். அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாமென விட்டுவிட்டேன். அடுத்தது குரல். சென்ற முறை பதிவிட்டபோது வாய்ஸ் சர்பத் சாப்பிட்டு பேசியது போல இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். என்னுடையது இயல்பிலேயே அப்படித்தான். சாதாரணமாக பேசும்போது பிரச்சனையில்லை. ஏதாவது திட்டமிட்டு பேசினால் நாக்கு குழறும். ஒவ்வொரு பத்தியாக பதிவு செய்து அடோசிட்டியில் ஒன்று சேர்த்திருக்கிறேன்.

இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்க விரும்பினேன். ஆனால் அநியாயத்துக்கு ஐந்தரை நிமிடங்கள் வரை நீண்டுவிட்டது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...!



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 January 2014

அஜக்கு’ன்னா அஜக்குதான்...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்று ஃபேஸ்புக்கில் பிரபலமாக செயல்படும் அராத்து என்பவருடைய இரண்டு புத்தகங்கள் வெளியாகின்றன. இதற்கென சென்ற மாதத்திலிருந்தே விளம்பரப்படுத்துகிறேன் பேர்வழி என்று அல்லோல கல்லோலப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அராத்து என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டாக்கரா...?

அராத்து எப்போதிலிருந்து ரெளடியானார் என்று எனக்கு தெரியவில்லை. ஆரம்பகாலத்தில் டிவிட்டரில் அவரை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தேன். ட்விட்டர் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. அங்கே யார் பெரிய வஸ்தாது...? எத்தனை குரூப்புகள் உள்ளன...? போன்ற விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. இரவு வந்ததும் ஒரு க்ளான்ஸ் டைம்லைனை ஸ்க்ரோல் செய்து படிப்பேன். அவற்றில் குறிப்பாக ராஜன், தோட்டா, அராத்து போன்றவர்களின் ட்வீட் ரசிக்கும் வகையில் இருக்கும். அவ்வளவுதான். பெரும்பாலும் டிவிட்டரில் ராஜா / ரஹ்மான், ஐபோன் / அண்டிராய்ட் என ஏதாவது விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்கும். அல்லது ஏதாவதொரு டாபிக் கொடுத்து அதையொட்டியே எல்லோரும் ட்வீட்டிக் கொண்டிருப்பார்கள். நான் இரவில் வந்து அன்றைய ட்வீட்டுகளை பின்னோக்கி படிப்பதால் இவ்வாறான விவாதங்கள் அவ்வளவாக பிடிபட்டதில்லை. காலப்போக்கில் ட்விட்டரை மறந்துபோனேன்.

திடீரென ஒருநாள் ஃபேஸ்புக்கில் அராத்து இருப்பதையும், அங்கே அவர் ஆயிரக்கணக்கான அடிபொடிகளுடன் பெரிய வஸ்தாது ஆகியிருப்பதைக் கண்டேன். அவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பினேன். நீண்ட நாட்களாக அது கிடப்பிலேயே இருந்தது. ஆயினும் ஃபாலோயர் என்ற முறையில் அவருடைய நிலைத்தகவல்கள் எனக்குத் தெரிந்து நானும் அவற்றை விரும்பி வாசித்துக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் அவர் என்னுடைய நட்பு கோரிக்கையை கவனித்திருக்கவில்லையோ என்றெண்ணி பழைய கோரிக்கையை கேன்சல் செய்துவிட்டு மறுபடி நட்பு கோரினேன். இம்முறை என்னுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அராத்து மிக நன்றாக எழுதுவார் என்றாலும், மிகுந்த தலைக்கனம் கொண்டவர் என்பதும், தனக்கு வரும் எதிர்வினைகளை நேர்மையற்ற முறையில் அவர் கையாண்டு வந்ததும் காரணமாகி நான் லைக், கமெண்ட் போன்ற எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் அவருடைய எழுத்துகளை மட்டும் ரசித்து வந்தேன். ஒரு தனிப்பட்ட மனிதரை பிடிக்காது என்பதற்காக அவருடைய எழுத்துகளை புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது மட்டுமில்லாமல் அவருடைய எழுத்துகளை நான் தவறவிட விரும்பவில்லை.

அராத்து போன்றவர்கள் தங்களுக்கு வரும் எதிர்வினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதைப் பற்றி எழுதுவதென்றால் அராத்து மேனேஜ்மென்ட் கான்செப்ட் போல தனி புத்தகமாகவே எழுதலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘யாரோட கண்ணுக்கெல்லாம் கடவுள் தெரியுறார்...?’ என்கிற வடிவேலு நகைச்சுவை காட்சியைப் போன்ற டெக்னிக் தான். ஒரு எழுத்தாளர் என்றால்... ஏன் ஒவ்வொரு மனிதனுக்குமே திமிர் என்பது கட்டாயம் இருக்கும். இருக்க வேண்டும். ஆனால் அந்த திமிர் ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் வகையில் அமைந்தால் நலம். அராத்துவின் திமிரோ ‘என்னைத்தவிர எல்லாரும் முட்டாப்பயலுக’ (அவருடைய மொழியில் வேறொரு வார்த்தை) என்பதாக அமைந்துள்ளது. இதுவரையில் தனக்கு வரும் எதிர்வினைகளுக்கு அராத்து பொறுப்பாக பதில் சொல்லி நான் பார்த்ததே இல்லை. சில சமயங்களில் பெண்களுக்கு பதில் சொல்லியிருக்கலாம். மற்றபடி பெரும்பாலான நேரங்களில் கேள்வி கேட்பவனை கெட்டவார்த்தையில் அர்ச்சனை செய்து, ஒரு மாதிரியாக மனோதத்துவ முறையில் அவருடைய செயலுக்கு நியாயம் கற்பித்து, அடிபொடிகளையும் தூண்டிவிட்டு கும்மி அடிப்பதே அவருடைய ஸ்பெஷாலிட்டி கிக்.

அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு டாபிக். கதைகளுக்கென இருக்கும் வரைமுறைகளை பின்பற்றாமல், எல்லைகள் மீறி, ஒரு மாதிரியாக கை போன போக்கில், செக்ஸ் கலந்து எழுதும் அவருடைய தற்கொலை குறுங்கதைகளில் ஒரு கிக் இருக்கிறது. அது புத்தகமாக வெளிவரப்போகிறது என்றதும் கண்டிப்பாக வாங்க வேண்டிய லிஸ்டில் அதனை சேர்த்துக்கொண்டேன். ஆனால் சாரு போன்றவர்கள் தற்கொலை குறுங்கதைகள் என்பது ஆகச்சிறந்த இலக்கியம் என்னும் வகையில் ப்ரொமோட் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி யாரேனும் அதுதான் இலக்கியம் என்று கூறினால் ஒன்று, அப்படிச் சொல்பவர் போலியாக இருக்க வேண்டும். அல்லது இலக்கியம் என்பதே போலியாக இருக்க வேண்டும். என்னளவில், தற்கொலை குறுங்கதைகள் என்பது விகடன் டைம்பாஸ் போல ஒரு ரசிக்கவைக்கும் ஜாலியான புத்தகம். அவ்வளவுதான். இதே விதி அராஜகம் ஆயிரம் என்னும் அவருடைய ட்வீட் புத்தகத்திற்கும் பொருந்தும். ஜாலியான ஒன்லைனர்கள் கொண்ட ஒரு புத்தகத்தை திருக்குறளோடு ஒப்பிடுவது உச்சக்கட்ட அபத்தம். ஒரு மாதமாக அவர்கள் இப்படியெல்லாம் உதார் விட்டதன் விளைவு:- மூன்றாவது பத்தியிலுள்ள என்னுடைய கொள்கையைத் தாண்டி, அவருடைய எந்த புத்தகத்தையும் நான் விலை கொடுத்து வாங்குவதாக இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் எனக்குத்தான் இழப்பு என்றாலும் கவலையில்லை.

நிற்க. அராத்து செக்ஸியாக எழுதுவதோ, கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது குறித்தோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது அவர் அவருடைய தனிப்பட்ட விருப்பம், கருத்து சுதந்திரம். சொல்லப் போனால் அவ்வாறாக கிளுகிளுப்பாக எழுதப்படும் விஷயங்களை நான் கூடுதல் கவனம் கொடுத்து படிக்கிறேன். ஆனால் சன்னி லி’யோனி’யை பற்றி எழுதிவிட்டு இது குறியை சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றிய விழிப்புணர்வு நிலைத்தகவல் என்று சொல்வது, வித்தியாச மசுறா ஸ்டேட்டஸ் போடுகிறேன் பேர்வழி என்று கற்பழிப்பு செய்தியை வைத்து காமெடி செய்துவிட்டு உள்ளூர் கற்பழிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் மீடியா, மக்களை பகடி செய்தேன் என்று சொல்வது போன்ற ‘டகுல் பாச்சா’ வேலைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அஜக்கு’ன்னா அஜக்குதான், குமுக்கு’ன்னா குமுக்குதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 September 2013

இதழில் எழுதிய கவிதைகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்த இடுகையை என்னுடைய வரைவிலிருந்து ஒருமுறை படித்துப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பேசாமல் எல்லாக் கோட்டையும் அழித்து விடலாமா என்றுகூட யோசித்தேன். இருப்பினும் எவ்வளவு வேண்டுமானாலும் கழுவி கழுவி ஊத்துங்க என்று புத்தக ஆசிரியரே முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் பிரசுரிக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் சில பதிவர்களின் படைப்புகள் புத்தகங்களாக வெளிவந்தபோது அது எனக்கு மிகவும் வியப்பை தருவதாக அமைந்திருந்தது. கொஞ்சம் பொறாமையையும். எப்படியாவது ஒரு புத்தகம் எழுதிவிட வேண்டும் என்பதை என்னுடைய வாழ்நாள் லட்சிய பட்டியலில் சேர்த்திருந்தேன். நாளடைவில் சில உண்மைகள் புரிய ஆரம்பித்தன. பதினைந்தாயிரம் பணம் இருந்தால் யார் வேண்டுமானால் புத்தகம் வெளியிடலாம் என்று தெரிந்துக்கொண்டேன். கிழக்கு பதிப்பக ஃபார்மேட்டில் கொஞ்சம் தரமான தாளில் அச்சிடுவதென்றால் இருபத்தைந்தாயிரம். அவ்வளவுதான் வாழ்க்கை !

அப்படியொரு புத்தகம் இதழில் எழுதிய கவிதைகள் (!!!) என்கிற பெயரோடு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. நல்ல நகைச்சுவை புத்தகம். அணிந்துரையில் இருந்தே நகைச்சுவை துவங்கிவிடுகிறது. சரக்கடிக்க சிறிதளவு சைட் டிஷ் இல்லாதபோழ்து பயன்படுத்தி கொள்ளக்கூடிய பயனுள்ள புத்தகம். நிற்க. மொக்கை விஷயங்களை வைத்து புத்தகம் எழுதுவது, அதனை சொந்தக்காசில் வெளியிடுவது, வெளியீட்டு விழாவிற்கு ‘வைரமுத்து’ ஜிப்பா அணிந்து வருவது, புத்தகக்காட்சியில் போவோர் வருவோரையெல்லாம் கைபிடித்து இழுத்து புத்தகம் வாங்கச்சொல்லி மிரட்டுவது, ஏதோ நண்பர் என்ற முறையில் ஆட்டோகிராப் வாங்கினால் அதற்காக வருடக்கணக்கில் ஃபீல் பண்ணுவது, புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வரியாக எடுத்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் விடுவது – இவை எல்லாமே அவரவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் ‘செய்வன திருந்தச்செய்’ என்றொரு பொன்மொழி இருக்கிறது. அதாவது ‘நாதாரித்தனம் செஞ்சாலும் நாசூக்கா செய்யணும்’. அந்த மாதிரி என்னளவில் தோன்றிய சில விஷயங்களை அடுத்த சில பத்திகளில் பார்க்கலாம்.

சொந்தக்காசில் புத்தகம் வெளியிடுவது என்று முடிவாகிவிட்டது. அதை ஏன் அற்ப தொகைக்கு பாடாவதி தாளில் அச்சிட வேண்டும்...? இதில் பேரம் வேறு பேசி அச்சீட்டாளருக்கு ஏன் நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும்...? ஒரு இருபத்தைந்தோ முப்பதோ செலவிட்டு, நல்ல தாளில், கலர் படங்களுடன் வெளியிட்டு தொலைக்கலாம...?

சங்கவி தன்னுடைய புத்தகத்திற்கு “இதழில் எழுதிய கவிதைகள்” என்று மட்டும் தலைப்பிடாமல் இருந்திருந்தால் நிறைய கலாய்ப்புகளை தவிர்த்திருக்கலாம். சுருங்கச் சொல்வதென்றால் கவிதைகள் என்ற சொல்லையே தவிர்த்திருக்க வேண்டும். புத்தக தலைப்பிற்கு என்னுடைய பரிந்துரை: முத்தம் செய்...!

விசைப்பலகையில் எண்டர் பட்டன் மட்டும் இல்லையென்றால் இது கவிதை புத்தகம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. உள்ளேயிருக்கும் சில வரிகளை படித்தால் அரசியல் தலைவர்களின் அறிக்கைகளை போல சப்பென்று இருக்கிறது.

சில உதாரணங்கள் :-

- என்னோடு இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள். இப்போது இல்லத்தரசியாக இருக்கிறாள்.
- என்னவள் அழகு என்று சொல்லிட முடியாது. இல்லை என்று மறுக்கவும் முடியாது.
- உன்னைப் பார்க்க, பேச, கொஞ்ச, சண்டை போட சத்தியமாய் ஆசை இல்லை.

பதின்ம வயதில் காதலிப்பவர்கள் ஏதாவது நான்கைந்து வார்த்தைகளை சேர்த்துப்போட்டு ஃபிகர் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்வார்கள். சங்கவியின் சில கவிதைகளில் வரிகளில் அப்படியொரு தொனி தெரிகிறது. குறிப்பாக ஃபேஸ்புக்கில் ஏதோவொரு சுமார் மூஞ்சி / ஃபேக் ஐடி ஃபிகரை உஷார் செய்யும் நோக்கில் எழுதியது போலவே தோன்றுகிறது. கூடவே சில சம்பவங்களையும் அவதானிக்க முடிகிறது.

சில அவதானிப்புகள் (கவனிக்க: இவை வெறும் கற்பனையே !) :-

- தொலைந்து போ என்று சொல்லிவிட்டாய். எனது மொத்த உலகமும் நீ தான் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (சாட்டில் சு.மூ ‘கெட் லாஸ்ட்’ என்று சொன்னபோது எழுதியது).
- முத்தம் கேட்டேன். நீ மின்னஞ்சலில் அனுப்பினாய். வெட்கத்தில் வேலை செய்ய மறுக்கிறது என் மெயில் ஐடி. (ஃபேக் ஐடியிடம் முத்தம் கேட்டு, அது மெயிலில் ஸ்மைலி அனுப்பி சமாளித்த போது).
- “சரி” என ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லடி. செய்கூலி சேதாரமில்லாமல் உன்னை அற்புதமான அணியாக்குகிறேன். நான் அணிந்துக் கொள்ள. (ஃபேக் ஐடி ஃபிகரு ஓகே சொல்லாமல் சதாய்க்கும் போது எழுதியது).
- கோவைப்பழ இதழில் இடைப்பட்ட ஈரமாய் இருக்க ஆசை. உன் இதழ்சுளை கண்டநாள் முதல். (சு.மூ.வை நேரில் கண்டபிறகு போட்ட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ். இதைப் போட்டுவிட்டு சு.மூவின் உள்டப்பிக்கு போய் உன்னைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்).

கவிதை எழுதும்போது வார்த்தைகளை கூடுமானவரை குறைக்க வேண்டும் என்று சொல்வார்கள். சங்கவி அப்படியொரு குறைந்தபட்ச முயற்சி கூட எடுக்காமல் ஏனோ தானோ என்று எழுதியிருப்பதாக தோன்றுகிறது. ஒரு வாசகனான நான் படிக்கும்போதே சில மாற்றங்கள் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது.

சில மாற்றங்கள் (சிகப்பில் நான் எழுதியது) :-

- உன்னுடன் விளையாடும்போது மட்டும் வேண்டுமென்றே தோற்றுப் போகிறேன். நீ வேண்டும் என்பதற்காக...!

உன்னிடம் மட்டும்
வேண்டுமென்றே தோற்கிறேன்...
நீ வேண்டுமென்றே...!

- கத்தியின்றி ரத்தமின்றி சத்தமில்லா யுத்தமொன்று நடக்குது...! தோல்வியே இல்லாத போர்...!!

கத்தியின்றி 
ரத்தமின்றி
சத்தமின்றி
யுத்தம் – உன் முத்தம்...!

- முத்தமிழில் கை தேர்ந்தவள் என்றிருந்தேன். உன் முத்தத்திற்கு பின்தான் தெரிந்தது. நீ முத்தத்தமிழும் அறிந்தவள் என்று...!

முத்தமிழ் அறிந்தவள் நீ ! 
உன் முத்தத்தமிழ் அறிந்தவன் நான் !!

- மழை பெய்து ஓயலாம்... ஆனால், உனக்கான என் முத்த மழை ஓயாத அலை...

மழையில் முத்தமிடத் துவங்கினோம்... 
சிறிது நேரத்தில் ஓய்ந்துவிட்டது !
மழை மட்டும் !

மொத்த புத்தகத்திலும் ஒரேயொரு கவிதை மட்டும்தான் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருப்பதாக தோன்றியது. அந்த ஒரு உருப்படி :-

உன்னை  
மகிழ்ச்சியாக வைத்திருக்க
வாழ்வில்
பாதி தொலைத்த
பைத்தியக்காரன் நான்...!
பிறகுதான் தெரியும்
என்னை
சந்தோஷமாக வைத்திருக்க
நீ
பைத்தியக்காரியானாய் என்று...!!

இதைக்கூட இன்னும் கொஞ்சம் மடக்கி எழுதியிருக்கலாம். இது தவிர்த்து ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், சுமாரான பேப்பர் குவாலிட்டி, சம்பந்தமில்லா புகைப்பட தேர்வுகள். சிலவற்றிற்கு சங்கவி காரணமில்லை என்றாலும் கூட ஒரு மேற்பார்வையாவது பார்த்து சரி செய்திருக்கலாம்.

இனியாவது புத்தகம் வெளியிடும் பதிவர்கள் கொஞ்சம் அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதழில் எழுதிய கவிதைகள்
சங்கவி
அகவொளி பதிப்பகம்
விலை ரூ.70

ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 August 2013

பதிவர் சந்திப்பு: சில கேள்விகளும் பதில்களும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில், வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி (01.09.2013) பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அதுகுறித்த ஒரு கேள்வி – பதில் பகுதி. (புதியவர்களுக்கானது).

பதிவர் சந்திப்பு எங்கே, எப்போது நடைபெறுகிறது ?
01.09.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை சென்னை, வடபழனி கமலா திரையரங்கத்திற்கு அருகிலுள்ள இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெறுகிறது.

யாரெல்லாம் கலந்துக்கொள்ளலாம் ?
வலைப்பதிவர்கள், ஃபேஸ்புக் பயனாளர்கள், ட்விட்டர்கள், ப்ளஸ்ஸர்கள், வேறு ஏதேனும் சமூக வலைத்தளம் விட்டுப் போயிருந்தால் அதனுடைய பயனாளர்கள், வாசகர்கள். சுருங்கச் சொல்வதென்றால் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.

பதிவர் சந்திப்பில் அப்படி என்னதான் நடக்கும் ?
வழக்கம் போல, பதிவர்கள் சுய அறிமுகப்படலம். சிறப்பு விருந்தினர்களின் (எழுத்தாளர்கள் திரு.பாமரன் மற்றும் திரு.கண்மணி குணசேகரன்) உரை. சில புத்தக வெளியீடுகள். நிறைய அரட்டை.

என்னென்ன புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன ?
மொட்டைத் தலையும் முழங்காலும் – சேட்டைக்காரன்
இதழில் எழுதிய கவிதைகள் – சதீஸ் சங்கவி
வெற்றிக் கோடு – மோகன்குமார்
அவன் ஆண் தேவதை – யாமிதாஷா

சாப்பாடு உண்டா ?
நிச்சயமாக. சைவம், அசைவம் இரண்டும் கொண்ட மதிய உணவு உண்டு. அதுபோக இடையிடையே டீ, சூஸ் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், உணவு ஏற்பாட்டிற்காக முன்பே வருகையை உறுதிப்படுத்திவிடுவது நல்லது.

யாரிடம் உறுதிப்படுத்த வேண்டும் ?
வரவேற்புக் குழுவில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், அஞ்சா சிங்கம் செல்வின், காணாமல் போன கனவுகள் ராஜி, தென்றல் சசிகலா, ஆரூர் மூனா செந்தில் ஆகியோரில் யாராவது ஒருவரிடம் மெயில் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.

மொத்தம் எத்தனை பேர் வருவார்கள் ?
இதுவரையில் கிட்டத்தட்ட 250 பேர் தங்களுடைய வருகையை உறுதி செய்திருப்பதாக தகவல். இன்னமும் கூடலாம். வருகையை உறுதி செய்தவர்கள் லிஸ்ட்.

இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது ?
விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான பணம் வசூலாகும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் பணத்தில் ஏதேனும் நற்செயல்கள் செய்யலாம் என்பது திட்டம்.

பதிவர் சந்திப்பை யார் ஏற்பாடு செய்கிறார்கள் ? இதனால் அவர்களுக்கென்ன லாபம் ?
இதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று இயங்குகிறது. அதன் விவரங்களை இந்த சுட்டியில்  காணலாம். இதுபோன்ற சந்திப்புகளால் அவர்களுக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை.

அப்ப யாருக்குத்தான் லாபம் ?
லாபம், நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை, இது நம் உணர்வு, ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம்.

புதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே ?
இருக்கலாம். அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.

எல்லாம் சரி, சும்மா பதிவு போட்டா ஆச்சா ? எனக்கான அழைப்பிதழ் எங்கே ?
மன்னிச்சிக்கோங்க பாஸ். இதோ உங்களுக்கான அழைப்பிதழ்.

மேலதிக தகவல்களுக்கு:
மதுமதி kavimadhumathi@gmail.com 9894124021
பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com 9094969686
சிவக்குமார் madrasminnal@gmail.com 9841611301
ஆரூர்மூனா.செந்தில்குமார் senthilkkum@gmail.com 8883072993
அஞ்சாசிங்கம் செல்வின் selwin76@gmail.com 9444125010
பாலகணேஷ் bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment