Showing posts with label 2014. Show all posts
Showing posts with label 2014. Show all posts

31 December 2014

2014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு வருடம் துவங்கும்போதும் சென்ற ஆண்டை விட அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். இந்த வருடத்தை பொறுத்தவரையில் அதில் பாதியை கூட நிறைவேற்ற முடியவில்லை. இருக்கட்டும் அடுத்த வருடத்திற்கு கிடைத்துவிட்டது ஈஸியான டார்கெட்!


2014ல் நான் ரசித்த சில விஷயங்கள்...

நாவல்: உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார் 

சுஜாதா நாவல்கள்: ஆ, நில்லுங்கள் ராஜாவே

கட்டுரைத்தொகுப்பு: பாம்புத்தைலம் – பேயோன்

அபுனைவு: கிளியோபாட்ரா – முகில்

ஃபேஸ்புக் எழுத்தாளர்கள்: (வரிசைபடுத்தவில்லை)
VeeBaa Vee (ஃபேஸ்புக் அக்கவுண்டை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்).

பாடல்கள்: (வரிசைபடுத்தவில்லை)
கூட மேல கூட வச்சு – ரம்மி
விண்மீன் விழிகள் – தெகிடி
முன்னே என் முன்னே – சதுரங்க வேட்டை
போ இன்று நீயாக – வேலையில்லா பட்டதாரி
பாண்டி நாட்டு – ஜிகர்தண்டா
இறந்திடவா – மெட்ராஸ்
செல்ஃபி புள்ள – கத்தி
மழைக்காத்தா – ஒரு ஊருல ரெண்டு ராஜா
ஏய் மிஸ்டர்.மைனர் – காவியத்தலைவன்
போகும் பாதை – பிசாசு

பாடகர்: அந்தோணி தாசன் (பாண்டி நாட்டு, கண்ணம்மா)

பாடகி: வந்தனா ஸ்ரீநிவாசன் (கூட மேல கூட வச்சு, மழைக்காத்தா)

இசையமைப்பாளர்கள்: சந்தோஷ் நாராயன் (ஜிகர்தண்டா, மெட்ராஸ்), ஷான் ரோல்டன் (சதுரங்க வேட்டை)

படங்கள்: (வரிசைபடுத்தவில்லை)
தெகிடி
யாமிருக்க பயமே
சதுரங்க வேட்டை
ஜிகர்தண்டா
மெட்ராஸ்

நடிகர், நடிகையர்: (வரிசைபடுத்தவில்லை)
சாந்தினி (கோலி சோடா)
ஐஸ்வர்யா ராஜேஷ் (ரம்மி)
வாணீ கபூர் (ஆஹா கல்யாணம்)
அசோக் செல்வன் (தெகிடி)
ஓவியா (யாமிருக்க பயமே)
நடராஜ் (சதுரங்க வேட்டை)
பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
குரு சோமசுந்தரம் (ஜிகர்தண்டா)
ரித்விகா (மெட்ராஸ்)
ஹரி (மெட்ராஸ்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 17022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தகக்காட்சியில் நித்தியானந்தா கடையில் நுழைந்து ஆனந்த கீர்த்தன் என்ற ஒலிநாடா வேண்டுமென கேட்டு, அவர்கள் ஒரு கொட்டையை கொடுத்து அனுப்பியதை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி. அடுத்த வாரம் சொல்லி வைத்திருந்த ஒலிநாடா வந்துவிட்டதா என்று கேட்பதற்காக சென்றிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இன்னொரு கொட்டையையும் கொடுக்க முயற்சித்தார்கள். அய்யா, போன வாரமே வாங்கியாயிற்று என்று சொல்லி தப்பித்துவிட்டேன். என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் என்னை விடமாட்டார்கள் போல. சென்ற வாரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து பேசுறோம் என்றது ஒரு அம்மையார் குரல். வார்த்தைக்கு வார்த்தை அடியேனை அய்யா என்று விளித்தார். ஏற்கனவே அவர்களிடம் என்னுடைய முகவரி கொடுத்திருந்தேன். அதை வைத்துக்கொண்டு அய்யா, திருவான்மியூரில் வகுப்பு நடக்குது. வந்தீங்கன்னா வகுப்பில் கலந்துக்கிட்டு சிடியையும் வாங்கிட்டு போயிடலாம் என்றார். என்ன வகுப்பு என்று தெரியவில்லை. அம்மாடி நான் வசிப்பது திருவான்மியூர் அல்ல, திருவொற்றியூர். அது தெற்கு, இது வடக்கு என்று சொல்லி புரியவைத்தேன். அப்படியும் அம்மையார் விடுவதாக இல்லை. விரைவில் மணலியில் வகுப்பு நடைபெற இருப்பதாகச் சொல்லி கலந்துகொள்ள பணித்திருக்கிறார். பேசாமல் ஒரு எட்டு போய்தான் பார்த்துவிடலாமா என்றுகூட தோன்றுகிறது. நகிர்தனா திரனனா னா...!
*

ஐ.பி.எல் ஜூது ஏலத்தை பார்த்து கடுப்பாகிவிட்டது. நிறைய நல்ல வீரர்களை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வதே இல்லை. சென்றமுறை நிகழ்ந்த கூத்துகளுக்காக இலங்கை வீரர்களை யாரும் பெரிதாக சீண்டவில்லை. இங்கிலாந்து வீரர்களை ஏன் தவிர்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. போனியாகாத வீரர்களில் Rusty Theron என்பவர் எனக்கு முக்கியமானவராக தோன்றுகிறார். அபாரமான மிதவேக பந்து வீச்சாளர். குறிப்பாக இறுதி நேரத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். ஏற்கனவே ஹைதரபாத் அணிக்காகவும் (டெக்கான் கிரானிக்கல் வசமிருந்தபோது), பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். அசம்பாவிதமாக தெரான் ஐ.பி.எல்லில் அதிக போட்டிகளில் சோபிக்கவில்லை. இருப்பினும் சில போட்டிகளில் அபாரமாகவும், மற்ற போட்டிகளில் மோசமில்லை என்ற வகையிலும் தான் விளையாடியிருக்கிறார். தற்சமயம் கொள்ளை விலைக்கு வாங்கியிருக்கும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களை விட தெரான் எவ்வளவோ பரவாயில்லை. அதே போல பேட்ஸ்மேன்களில் Richard Levi. ஏற்கனவே மும்பைக்காக விளையாடியிருக்கிறார். லெவிக்கு கிடைத்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தென் ஆப்பிரிக்க உள்ளூர் போட்டிகளை பொறுத்தமட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். தென் ஆப்பிரிக்கா அணியைப் போலவே, அதன் விளையாட்டு வீரர்களுக்கும் ராசி இல்லையோ என்னவோ...? அவரைத் தவிர்த்து Cameron White, David Hussey, Jesse Ryder போன்றவர்களும் விலை போகவில்லை. ஆசிஷ் நெஹ்ராவை சென்னை வாங்கியிருக்கிறது. ஆனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் போன்றவர்களை யாரும் வாங்கவில்லை. இருக்கட்டும் ப்ரீத்தி ஜிந்தா இருக்கும்வரையில் நமக்கு கவலையில்லை.
*

விஜய் டிவியில் Connexions என்றொரு நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு தவறாமல் பார்க்கிறேன். ஹண்ட் ஃபார் ஹின்ட் பாணியில் ஆனால் அதிக கஷ்டமில்லாமல் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் சுற்றில், இரண்டு புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. இரண்டிற்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். வார்த்தை ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இரண்டும் கலந்தும் இருக்கலாம். மற்ற சுற்றுகளும் இதே போல புகைப்படங்களை வைத்து தான். முக்கியமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நண்டு ஜெகன் போட்டியாளர்களை நன்றாக கலாய்த்து தள்ளுகிறார். அதே சமயம் போட்டியாளர்கள் யாராவது டென்ஷன் ஆகிவிட்டால் அந்த சூழ்நிலையை நன்றாக கையாள்கிறார். சென்ற வாரத்தில் தொலைக்காட்சி நடிகை சூசன் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். ஒரு கட்டத்தில் சூசன் துப்பட்டா அணிந்திருந்த பாங்கை ஜகன் கிண்டலடித்தார். சூசன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்துவிட்டார். இதுவே விஜய் டிவியின் வேறு நிகழ்ச்சியாக இருந்தால் இதையே சாக்காக வைத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியிருப்பார்கள். ஆனால் ஜகன் சாமர்த்தியமாக பேச்சை மாற்றி நிலைமை மோசமாவதை தவிர்த்துவிட்டார். Connexions முடிந்ததும் ஒளிபரப்பாகும் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என்ற நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது.
*

இப்போது கனெக்ஷன்ஸ் பாணியில் சில கேள்விகள்.

One by Two: இரண்டு படங்களுக்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

 


Joint Family: இரண்டு அல்லது மூன்று படங்கள் குறித்த வார்த்தைகளை சேர்த்து விடை கண்டுபிடிக்க வேண்டும்.



மொக்கையாக இருப்பின் தனிமடலுக்கு வந்து திட்டவும். நன்றாக இருந்தால் தெரியப்படுத்தவும். வாராவாரம் தொடரலாம்.
*

பிரியாணியில் இடம்பெற்ற மிஸ்ஸிஸிப்பி பாடல் தான் ரீப்பீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒளி வடிவத்தில் மந்தி டக்கராக செய்த வேலையை ஒலி வடிவத்தில் ப்ரியா ஹிமேஷ் செய்திருக்கிறார். கடைசி காலத்தில் வாலி எழுதிய பாடலில் கூட வாலிபால் விளையாடியிருக்கிறார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 January 2014

சி.ஐ.டி நகர் பாபு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மது அருந்துதல் உடல்நலத்திற்கு தீங்கானது.

உங்களுக்கு சர்பத் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா...? தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் அடிக்கடி ஓமத்திரவம் வாங்கி குடிப்பீர்களா...? ஆமாம் என்றால் உங்களுக்கு நிச்சயமாக சி.ஐ.டி.நகர் பாபுவை தெரிந்திருக்கும். நீங்கள் சி.ஐ.டி நகர் பக்கம் தலை வைத்துக்கூட படுத்ததில்லை என்றாலும் பரவாயில்லை. சி.ஐ.டி. நகர் பாபு என்பவர் தமிழகத்தின் எல்லா நியாயவிலை கடைகளிலும் காணப்படும் ஒரு சராசரி உயிரினம் தான். அதற்காக, டேபிளுக்கு பக்கத்தில் கையில் வெறும் கிளாஸோடு தயங்கியபடியே வந்து நின்று தலை சொறிவார்களே அந்த கூட்டத்தோடு பாபுவை சேர்த்துவிட வேண்டாம். அண்ணன் கொஞ்சம் யூனிக். பாபு அண்ணனைப் பற்றி அடையாளம் சொல்வதென்றால், ஐந்தரை அடி உயரம், உறுத்தாத உடல்வாகு, வயது முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பதுக்குள் இருக்கலாம். அங்கொன்று இங்கொன்று என்றே தலையிலுள்ள பாதி மயிர் நரைத்துவிட்டது. மங்காத்தா படம் வெளிவந்தபிறகு அவருடைய தலைச்சாய செலவு மிச்சமாகிவிட்டது. சிக்ஸ் பேக் இருக்கவேண்டிய இடத்தில் சிறிய அளவிலான ஸ்கூல் பேக். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவார் இல்லை. யூத்தாக தன்னை நிறுவிக்கொள்ள டீ-ஷர்டையும் ட்ராக்ஸையும் எடுத்து மாட்டிக்கொள்வார். பார்ப்பதற்கு நடிகர் மயில்சாமி போலவே தோற்றமளிப்பார். அவருக்கு தண்டபாணி என்ற புனைப்பெயரும் உண்டு...!

ஏதேனும் விடுமுறை நாளாக இல்லாத பட்சத்தில் காலை பத்து மணிக்கு முன்பு பாபு அண்ணன் வீட்டிலிருந்து கிளம்பமாட்டார். அதே சமயம் பத்து மணிக்கு மேல் வீட்டிலிருக்கவும் மாட்டார். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு...! 

பாபுவுக்கு நிரந்தர நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இன்றைய தினம் அவர் யாருடைய நண்பர் என்பது அவருக்கே தெரியாத சுவாரஸ்யம். அழுக்கு பிடித்த அந்த கடையின் பின்புறத்தில் உள்ள சிறிய அறைக்குள் அவர் நுழைந்ததுமே அவருடைய பழைய நண்பர்கள் கொஞ்சம் மிரளுவார்கள். சுற்றி அமர்ந்துள்ள மனிதர்களை ஒரு சில மணித்துளிகள் நோட்டம் விடுவார். அவர் யாரை தேர்ந்தெடுப்பார் என்பது உச்சபட்ச மர்ம முடிச்சு. அறையின் மூலையில் தனியாக அமர்ந்திருக்கும் ரிக்ஷாக்காரன், தீவிரமாக இலக்கியமோ பிஸினஸோ என்ன எழவோ பேசிக்கொண்டிருக்கும் ஜெண்டில்மென், மத்திய வயதினருக்கு மத்தியில் நீளமாக மயிர் வளர்த்திருக்கும் அந்த இளைஞன், ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்புல என்கிற ரீதியில் அமர்ந்திருக்கும் பொடியன்கள் எல்லோரையும் ஒரு எட்டு பார்வையால் வலம் வருவார். மோட்டுவளையை பார்த்தபடி கணநேரம் உக்கிரமாக சிந்திப்பார். தீர்க்கமான முடிவொன்றை எடுத்தவராக தன்னுடைய புதிய நண்பரை அணுகி தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார். புதிய மனிதர்களிடம் பேசத்துவங்குவது அவருக்கு ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. வெள்ளை நிற ஜிப்பா, காதில் அணிந்திருக்கும் கடுக்கன், நீளமான தலைமயிர் என்று எதையாவது காட்டி சூப்பர் பாஸ் என்றபடி கச்சிதமாக பேச்சை துவங்கிவிடுவார். புகழ்ச்சிக்கு மயங்காத ஆண்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன...? கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும். சமர்த்தாக ஒரு ஸ்டூலை எடுத்துவந்து போட்டு உங்கள் அருகிலேயே அமர்ந்துவிடுவார். சொற்பொழிவை ஆற்ற தொடங்குவார்.

உங்க பேரென்ன பாஸ்...? எங்க வேலை பாக்குறீங்க...? என்பது போன்ற சம்பிரதாய கேள்விகளுடன் தான் ஆரம்பிப்பார். பேச்சினூடே அடிக்கடி அவருடைய முதல் வசனமான ஜிப்பா சூப்பர் பாஸை சொல்லிக்கொல்வார். முடிந்தால் நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க என்ற பிட்டையும் போட்டுவிடுவார். நிம்மதியான வேலை. இத்தனை அட்ராசிட்டியையும் உங்களுடன் வந்த நண்பர் யாரேனும் கலவரமாக பார்த்துக்கொண்டிருந்தால் சந்தேகமே இல்லாமல் அவர்தான் காமெடியன். கூட்டத்தில் யாராவது குறுந்தாடி வைத்திருந்தால் அவர் டைரக்டர். முரட்டுத்தனமாக யாரேனும் தோற்றமளித்தால் வில்லன். வில்லனைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் அவருடைய கையாட்கள். இந்த மூஞ்சிகளை எல்லாம் வச்சி படம் எடுக்குற ப்ரொட்யூசர் யாரென்று தானே கேட்கிறீர்கள்...? அது ஷாத்ஷாத் அந்த பாபு அண்ணனே தான்...! ப்ரொட்யூசர் சரி... பணம்...? என்ன பாஸ் வெளையாடுறீங்க...? படம் எடுக்கத்தானே பணம் தேவை. சும்மா ஒரு பேச்சுக்கு பணம் தேவையில்லை தானே...? பேச்சுக்கு இடையே சமயத்தில் ஹீரோவே காமெடியனாகவும், ப்ரொட்யூசர் வில்லனாகவும், டைரக்டர் ஹீரோவாகவும் மாறி மாறி அவதாரம் எடுப்பார்கள். புரியலையா...? இந்த கதையில எல்லாருக்கும் டபுள் ரோல்... போறுமா...?

பாபு அண்ணன் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதம் அலாதியானது. நம்முடைய வலது கையை எடுத்து அவருடைய வலது கையில் பற்றிக்கொள்வார். அந்த பற்றுதலில் ஒரு கரிசனம் இருக்கும். அச்சமயத்தில் அவருக்கு எப்போதெல்லாம் அன்பு ஊற்றெடுக்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய புறங்கையை கடித்து வைப்பார். யாராவது நம்மை கடித்தால் வலிக்கும் தானே...? ஆனால் பாபு அண்ணன் கடித்தால் வலிக்காது. அது அன்புக்கடி. பாம்பு கொத்தி வைத்தாற்போல புறங்கையில் பல் பதிந்து அதிலிருந்து சிகப்பு நிற திரவம் கூட வழியும். அது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஏதோ கே.எப்.சி கோழி கறித்துண்டை கடித்த களிப்புடன் பாபு அண்ணன் அமர்ந்திருப்பார். அதுதான் பாபு அண்ணன்...!

இவ்வளவு அன்பாக பழகும் பாபு அண்ணன் யார் தெரியுமா...? அவர் எங்கே பணிபுரிகிறார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். டைடல் பார்க்...! ஒன்றுமில்லை டைடல் பார்க் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து M70 என்ற பேருந்தை பிடித்தால் ஒரு மணிநேரத்தில் சி.ஐ.டி நகர் வந்து சேர்ந்துவிடலாம் என்று சொல்ல வந்தேன். அங்கே எம்ஜியார் ஒரு கையால் ரோப்பை பிடித்துக்கொண்டே மறுகையால் வாள் வீசுவது போலவோ அல்லது எம்ஜியார் ஜெயலலிதாவின் தோள்பட்டைகளை தாங்கிப்பிடித்திருப்பது போலவோ ஒரு பதாகை இருக்கும். அதற்கு கீழே எம்ஜியார் பக்தர்கள் குழு என்று எழுதியிருக்கும். அதற்கும் கீழே சில ப(க்)தர்களின் திருவுருவப் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றில் இடமிருந்து வலம் மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது எம்ஜியார் பாபு என்றும் அழைக்கப்படும் பாபு அண்ணன் தான். ஆமாம், பாபு அண்ணன் ஒரு தீவிர எம்ஜியார் பக்தர்.

அது மட்டுமல்ல, தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான தொண்டரும் கூட. எந்த அளவிற்கு தீவிரம் என்றால் நீங்கள் ரோஸ்மில்க் குடித்துக்கொண்டிருக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். அட ரோஸ்மில்க் என்னய்யா ரோஸ்மில்க். ஒரு ஆப்பிள் மில்க்ஷேக்கோ, ஸ்ட்ராபெர்ரி ஜூஸோ குடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அங்கே பாபு அண்ணா வருகிறார். நீங்கள் அவருக்கும் சேர்த்து ஒரு ஆப்பிள் மில்க்ஷேக் சொல்லுகிறீர்கள். அவர் அதை குடிப்பார் என்றா நினைக்கிறீர்கள்...? அம்மாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் அவர் அதனை குடிக்க மாட்டார். அவர் தன்னுடைய வாழ்நாளில் ஏழைகளின் பானமான அம்மா குடிநீர் தவிர்த்து வேறு எந்த திரவத்தையும் ஒரு மிடறு கூட குடிப்பதில்லை. அம்மா குடிநீரை சுமார் நூற்றியெண்பது மில்லி மட்டும் பருகக்கொடுத்தால் போதும். நடுத்தெரு என்றாலும் கூட கவலைப்படாமல் அம்மாவே நேரில் காட்சியளித்ததாக கருதிக்கொண்டு சாஷ்டாங்கமாக குப்புற விழுந்து வணங்கிவிடுவார். சில சமயங்களில் அப்படி விழுந்து வணங்கினார் என்றால் சில மணிநேரங்கள் ஆனாலும் கூட விழுந்தது விழுந்தபடியே தான் இருப்பார்.

நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது கூட உங்கள் காலில் யாரேனும் ஒரு சி.ஐ.டி. பாபு இடரலாம். அவரை தொந்தரவு செய்யாமல் தாண்டிச் செல்லுங்கள். அதுதான் நல்லது... உங்களுக்கு...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment