Showing posts with label itharkuthane. Show all posts
Showing posts with label itharkuthane. Show all posts

13 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 13012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,


வீரம் படத்துக்கு டிக்கெட் எடுத்த தள்ளு முள்ளில் தான் கவனித்தேன். செங்கல்பட்டில் லாரெல் மால் என்கிற பிரம்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. அடடே, நாம பொரண்டு வளர்ந்த மண்ணாச்சே. செங்கல்பட்டுல எங்க’ன்னு தேடினா இன்னும் ஆச்சரியம். மாமண்டூரில் சரியாக ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிரில் லாரெல் மால் அமைந்திருக்கிறது. அந்த அத்துவானக் காட்டில் யார் மாலுக்கு வந்து ஷாப்பிங் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஈ.சி.ஆரில் இருந்திருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அண்டையில் உள்ள மகேந்திரா சிட்டி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, கற்பக விநாயகர் கல்லூரி, நம்மோட ஆண்டாள் அழகர் அப்புறம் செங்கல்பட்டு பொதுஜனம் போன்றவர்களை நம்பித்தான் காம்ப்ளக்ஸ் இயங்கக்கூடும்.

ஒரு நாள் வண்டி கட்டிக்கொண்டு போய் லாரெல் மாலை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே கல்லூரியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் தான். ஆனால் உள்ளே சேர்ப்பார்களா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொன் மகேஸ் மாதிரி யாராவது எம்ஜியாரு டைப்பு ஆசாமியை உடன் அழைத்துச் செல்லலாம்.
******************************

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பார்த்தேன். சராசரிக்கு மேல் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம். இதைப்போய் ஏன் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள் என்று தெரியவில்லை. ஒரு படத்தில் இடையிடையே வரும் இருபது நிமிடக்காட்சிகள் மொக்கையாக இருந்ததென்றால் அந்த படத்தையே மொக்கை என்று சொல்லிவிடலாமா...? ஜில்லா, வீரம் போன்ற அரைத்த மாவு குப்பைகளோடு ஒப்பிடும்போது இ.ஆ.பா நூறு மடங்கு தேவலாம். விஜய் சேதுபதி வட சென்னை ஹவுஸிங் போர்ட் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்வாதி, நந்திதா இருவரும் க்யூட். ஸ்வாதிக்கு டப்படித்த மானசிக்கு (டைட்டில் க்ரெடிட்ஸ் ஓடவிட்டு அவருடைய பெயரை கண்டுபிடித்தேன்) குடோஸு. திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் தொடங்கி நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் பார்த்து குபுகுபு’வென சிரித்திருக்கிறேன். ஆனால் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மலையாளியென்ன தமிழனென்ன என்றொரு மேனேஜர் செண்டிமெண்ட் காட்சி செய்திருக்கிறார் பாருங்கள். கண்ணுல வேர்த்துவிட்டது.

******************************

ஓவர் டூ ஒய்.எம்.சி.ஏ...!

சனிக்கிழமை ஸோலோவாக சென்றிருந்தேன். டிஸ்கவரி வாசலில் வா.மணிகண்டன் நின்றுக்கொண்டிருந்தார். அடித்துவிடுவாரோ என்று பயமாக இருந்தது. அவர் கண்ணில் படாமல் தப்பித்து வந்துவிட்டேன். நிறைய பேரை எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. எல்லாம் ஃபேஸ்புக்கால் வந்த வினை. காலச்சுவடு (என்று நினைக்கிறேன்) அரங்கில் இருந்தவரை எங்கேயோ நினைவிருக்க, அவரிடமே கேட்டு அவர்தான் கிருஷ்ண பிரபு என்று உறுதி படுத்திக்கொண்டேன். அவருக்கு என்னை அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை. சினிமா பத்தியே நிறைய எழுதுவீங்களோ...? என்றார். அங்கிருந்த சில எளிய இலக்கிய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதென்ன இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர் என்றாலே ஒருவித கேலி, தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். நம் சமூகத்தில் சினிமாவை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. சினிமாவையே தொடாமல் எழுதும் எழுத்தாளர் கூட ஜனவரி பத்தாம் தேதி வேண்டுமென்றே தன்னுடைய பதிவிற்கு வீரம் என்று பெயர் சூட்டுகிறார். சினிமாவையே ஒழிக்க வேண்டும் என்று முழங்கியவர் (!!!) கூட அவருடைய வலைப்பூவிற்கு சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை வைத்திருந்தார். கடைசியில், சினிமா என்பதும் எழுத்தைப் போல கலையின் ஒரு வடிவம்தானே...?

லெக்கின்ஸ் அணிந்த தோழி ஒருவர் கார்க்கி மனோகரன் சாயலில் தெரிந்தார். கோயமுத்தூர் மோனி சாயல், சரவணக்குமார் சாயல் என சிலரிடம் அடையாளங்கள் தெரிந்தாலும் நாமாகவே போய்ப் பேசி அவர் வேறு யாராகவோ இருந்து பல்பு வாங்கிவிட வேண்டாமென அடக்கியே வாசித்தேன். ஒரு முழுச்சுற்று சுற்றிவிட்டு வந்தபின்பும் வா.ம டிஸ்கவரி வாசலிலேயே இருந்தார். மனிதர் கிளம்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால் ஒரு ஹாய் சொல்லி ஆரம்பித்தேன். இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று, அவர் என்னை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். இரண்டாவது, அவர் இணையத்தில் எழுதுவது போல அடாவடியாக தெரியவில்லை. தட் அந்த கொழந்தையே நீங்கதான் சார் மொமண்ட். அவரை சந்தித்த மற்ற நண்பர்களும் அதையே வழிமொழிந்தனர். இணையத்தில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு அக்செஸிபிளாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்தது தான் அவர் மீதான தவறான புரிதல்களுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

யாராவது கொலைப்பசியில் இருந்துவிட்டு சாப்பிடுவதை கவனித்திருக்கிறீர்களா ? வள்ளு வதக்குன்னு அள்ளிச் சாப்பிட்டு ஐந்து நிமிடங்களுக்குள் அந்த இடத்தை ரணகளமாக்கி விடுவார்கள். இன்னொரு உதாரணமாக, யானை வெண்கலக்கடைக்குள் புகுவதை எடுத்துக்கொள்ளலாம். ஆரூர் மூனா புத்தகங்கள் வாங்கியது அப்படித்தான் இருந்தது. ஒரு பதினைந்து நிமிடங்கள் இருக்கும். பாய்ந்து பாய்ந்து முப்பத்தி இரண்டு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை என்னுடைய பரிந்துரைகள். சில புத்தகங்கள் வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும், சில புத்தகங்கள் படிக்க ஆசையாக இருந்தாலும் கொள்ளைக்காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும் அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் ஆரூரார் ஜஸ்ட் லைக் தட் வாங்கிவிட்டார். நல்ல மனுஷன்.

நேற்று சிங்கம் உடன் வந்திருந்தார். சில விளம்பரங்கள் காரணமாக, மினி மெல்ட்ஸ் ஐஸ்க்ரீமுடன் இனிதே துவங்கினோம். சிங்கம் தேடித் தேடி அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டும் வாங்கினார். மாலைக்கு மேல் வழக்கம் போல நண்பர்கள் கூடி கும்மியடிக்க தொடங்கியாயிற்று. இத்தோடு அடுத்த வாரயிறுதியில் தான் புத்தகக் காட்சிக்கு செல்ல முடியும்.

நித்யானந்தாவின் பம்ம பம்மதான் பாடலின் முழு பதிப்பை நான் நீண்டகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். புத்தகக் காட்சியில் அவர்களுடைய ஸ்டாலை பார்த்ததும் சட்டென உள்ளே புகுந்து அந்த ஆல்பத்தின் பெயரைச் சொல்லி அது இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை. ஆனால் ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொண்டார்கள். அடுத்த வாரம் கிடைக்கும் என்றார்கள். இப்போதைக்கு நித்தியானந்தா படம் பொறிக்கப்பட்ட ஒரு கொட்டையை கொடுத்திருக்கிறார்கள்.

நான் இதுவரையில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment