Showing posts with label naiyandi. Show all posts
Showing posts with label naiyandi. Show all posts

27 December 2014

கந்தன் கருணை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சலூனுக்கும் மருத்துவமனைக்கும் அடிக்கடி செல்வதில்லை. வருடத்தில் ஒன்றிரண்டு முறை 'தலை' காட்டினால் பெரிய விஷயம். எப்போதாவது உடலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் கூட, 'டாக்டர்கிட்ட போனா ஒரே வாரத்தில் சரியாகிடும். இல்லன்னா ஏழு நாள் நீடிக்கும்’ என்று வியாக்கியானம் பேசக்கூடிய ஆள். என்னைப் பொறுத்தவரையில் டோலோ 650 ஒரு சர்வரோக நிவாரணி. என்ன ஆனாலும் ஒரு டோலோவை விழுங்கிவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று திடமாக நம்புபவன். ஆமாம், ஏழு நாள் வரை பிரச்சனையில்லை. ஆனால் எட்டாவது நாள் ஆகிவிட்டால் உடலில் ஏற்பட்ட கோளாறு மனதிலும் தொற்றிக்கொள்ளும். வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு ஓடுவேன். அப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் செல்ல வேண்டியதாகி விட்டது.

மருத்துவரின் மையத்தில் டோக்கன் ஒழுங்குமுறையெல்லாம் கிடையாது. நாம் போனதும் கடைசியாக வந்தது யாரென்று கேட்டுவிட்டு அமர்ந்துகொள்ள வேண்டும். அந்த கடைசி ஆள் எப்போது செல்வார் என்று காத்திருந்து அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல வேண்டும். ஆனால் நம்முடைய நேரம் எப்படி இருக்கும் என்றால், சரியாக நமக்கு பின்னால் கைக்குழந்தையோடு ஒரு அம்மா வருவார். கொயந்தைக்கு உடம்பு சரியில்லை என்று இறைந்து மன்றாடுவார். சரி போகட்டும் என்று விடுவோம். அடுத்தது ஒரு நடுத்தர வயது பெண்மணி பத்து கிலோமீட்டர் மாரத்தான் ஓடிவிட்டு வந்தது போல மூச்சிரைத்துக் கொண்டே வருவார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா ம்ம்ம்ம்மா முடியலயேம்மா என்று தமக்குள் முனகிக்கொள்வார். உடனே ஒரு சோடாவை வாங்கி புளிச் என்று அவருடைய முகத்தில் அடிக்காவிட்டால் ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று நமக்கே பயமாக இருக்கும். அவரை சகல மரியாதையோடு நமக்கு முன்பாக அனுப்பி வைப்போம். அதற்குள் நமக்கு அடுத்து போக வேண்டியவர்கள் எல்லாம் நாங்க போன மாசமே வந்து காத்திருக்கிறோம் தெரியுமா ? என்று நம்மை சத்தம் போட ஆரம்பிப்பார்கள். போய்த் தொலைங்க என்று ஒவ்வொருவரையாக அனுப்பிக் கொண்டிருக்கும்போது யாரேனும் ஒரு இறக்க சுபாவி புன்னகையுடன் நீங்க போங்க சார் என்பார். அவர் வேறு யாருமில்லை நம்மைப் போன்ற இன்னொரு ஈனா வானா தான்.

உள்ளே போனால் அங்கே வீற்றிருப்பார் கந்தன். நியாயமாக பார்த்தால் சேவித்துக்கொள்ள வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவர். எனது தாத்தாவில் துவங்கி எனது மகள் வரை மருத்துவம் பார்த்துவிட்டார். சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். (இப்போது புரிகிறதா நான் ஏன் அவரிடம் மருத்துவம் பார்க்கிறேன் என்று !). எனது பதின்பருவ வயதில் அவரிடம் செல்லும்போது நானொரு அடல்ட் என்று காட்டிக்கொள்வதற்காகவே தோள்பட்டையில் ஊசி குத்திக்கொள்வேன். இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்கும் தோள்பட்டையில் ஊசி போடுவதாக தெரியவில்லை. புட்டம்தான். ஜெண்டாமைஸின், கேராமைஸின் என்று (வயது முதிர்ந்த) செவிலியிடம் மருத்துவ மொழியில் ஏதோ சம்பாஷித்தார். அந்த அம்மாள் எனது இரண்டு புட்டங்களையும் பஞ்சர் ஆக்கினார்.

வழக்கமாக என்னுடைய சிகை அலங்காரத்தைப் பற்றி ஏதாவது கோக்கு மாக்காக கேள்வி கேட்பார் கந்தன். நானும் கோக்கு மாக்காக ஏதாவது பதிலளிப்பேன். இந்தமுறை அது இல்லாததால் ‘ப்ளாக்’ பற்றி கேட்டார். அவரும் முன்பொரு காலத்தில் ‘ப்ளாக்’ வைத்திருந்ததாகவும் அதனை பராமரிக்க நேரமில்லை என்றும் கொஞ்சமாக வருத்தப்பட்டுக் கொண்டார். 

இந்த இடத்தில் மருத்துவர் பற்றி கொஞ்சம் முன்னுரை வேண்டும். ஜிகர்தண்டாவில் சங்கிலிமுருகன் குருவம்மா என்றொரு கதை வைத்திருப்பார். அது அந்த காலத்தில் வெளிவந்திருந்தால் பெரிய ஹிட் ஆகியிருக்கும் என்பார். உண்மையிலேயே குருவம்மா என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது என்று கார்த்திக் சுப்பராஜிற்கு தெரிந்திருக்காது. 2002ல் லிவிங்க்ஸ்டன், தேவயாணி நடிப்பில் வெளிவந்தது. அத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன். பிளாட்பார வாசிகளுக்கு வீட்டின் தேவையைப் பற்றி உணர்த்த வந்த படம் அது. அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மருத்துவர் கந்தன். (இன்னொருவர் தற்சமயம் ச.ம.க சார்பாக நாங்குநேரி ச.ம.உ.வாக பணியாற்றும் எர்ணாவூர் நாராயணன்). அது மட்டுமில்லாமல் அதற்கு முன்பே மருத்துவர் ‘நையாண்டி மேளம்’ என்கிற தமது கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். 

பேச்சு ‘ப்ளாக்’ வரை சென்றுவிட்டதால் மருத்துவரிடம் நையாண்டி மேளம் ஒரு காப்பி கிடைக்குமா ? என்றேன். தற்சமயம் கைவசம் இல்லை. எடுத்து வைக்கிறேன், அடுத்த முறை வரும்போது வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். கிழிந்தது. அடுத்தமுறை நான் அவரிடம் செல்ல மாதங்கள் ஆகக்கூடும். சரி என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.

தற்செயலாக திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்க நூலகத்திற்கு சென்றபோது அங்கே நையாண்டி மேளம் கிடைத்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஒரு மருத்துவர் எழுதிய கவிதைகள் என்பதால் அதனை நியாயத்தராசில் எல்லாம் வைக்க மனம் ஒப்பவில்லை.

மருத்துவர் எழுதிய மருத்துவக் கவிதை ஒன்று :-

உள்ளங்கையில் வெறுமனே
விளையாடிக் கொண்டிருந்தது
இருபத்தைந்து காசு வில்லை

திடீரெனத் தாவிவிட்டது
குழந்தையின் வயிற்றுக்கு

பதைத்துப் போனாள் தாய்
மூக்குத்தியைத் தடவியபடி

‘விழுங்கிவிட்டான் மருத்துவன்
இருபத்தைந்து ரூபாய் !’

இன்னொன்று :-

கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

காலையில் தாமதமாய் கண்விழித்து

நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து

செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து

வயிற்றில் வலியென்றதும்
தன் நெஞ்சில் வலி கொண்டு

ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து

மருந்துக்கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து

ஒரு வழியாக
ஒரு வழி யாக

குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு\

மருத்துவமனை
நீங்கும் வேளை

கட்டணப் பணத்தை
பெட்டியோடு கொடுத்திட்டு

தாயையும் சேயையும்
வாடகைக் காரினில் சுமந்து

வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு

பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா !

மேலதிக தகவல்கள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 09122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒலிம்பியா வாசலில் உள்ள சிட்டிபேங்க் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக காத்திருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிலை இருக்கிறது. ராமரோ, பெருமாளோ யாரென்று தெரியவில்லை. முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்...? சட்டென ஒரு பெண் அந்த சிலைக்கு முன் வந்து நின்று சிலையுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அதாவது சினிமாவில் எல்லாம் ஹீரோயின்கள் கடவுளை நண்பனாக பாவித்து பேசுவார்களே (உ: ரோஜாவில் மதுபாலா) அதுபோல. நான் அவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தசமயம் என்னையே அறியாமல் என் உதட்டோரத்தில் லேசாக புன்னகை கசிந்திருக்கும் போல தெரிகிறது. அவள் எதார்த்தமாக என்னைப் பார்த்ததும் நாக்கை கடித்துக்கொண்டு டெம்ப்ளேட்டாக கைகூப்பி, கண்களை மூடி சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டாள். அப்புறமென்ன, ஃபிகர் சுமாராக இருந்ததால் என் முகத்திற்கு நேரே ப்ரொப்பெல்லர் காற்று வீசி, முன்னம்மயிரெல்லாம் சிலுசிலுத்து, டங்’கென மணியோசை எல்லாம் கேட்டு என்றெல்லாம் எழுத முடியவில்லை.

கொஞ்சநேரத்திற்கு டைம்பாஸ் செய்ய ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று என்னுடைய பெட்டகத்தை துழாவியபோது கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா கிடைத்தது. 2008ன் இறுதியில் துவங்கி 2009 வரை கேபிளார் எழுதிய கொத்து பரோட்டா பதிவுகளின் தொகுப்பு. வருங்காலத்தில் ‘ஒயின்ஷாப்பை’ புத்தகமாக வெளியிட்டால் (!!!) அது எப்படியிருக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்வதற்காக அந்த புத்தகத்தை வாங்கியதாக நினைவு. உல்டாவாக எப்படி இருக்கக்கூடாது என்று சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. அடல்ட் ஜோக்குகள் தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவும் உருப்படியாக கிடையாது. கேபிளே புத்தகத்தை பற்றி சும்மா ‘டைம்பாஸ்’ மச்சி என்று சொல்லியிருப்பது பொருத்தம். கொ.ப வாங்கிப் படித்ததில் ஒரேயொரு நல்ல விஷயம் – ஒருகாலத்தில் கேபிள் கூட அமெச்சூராகத்தான் எழுதியிருக்கிறார். கலவை இடுகைகள் விஷயத்தில் கேபிளை ரோல் மாடலாக நினைக்கும் என் போன்றவர்களுக்கு ஒரு சிறிய ஆறுதல். அம்புட்டுதேன்...!

கொ.ப.வில் டக்கீலா பற்றி கேபிள் சங்கர் :-
மெனுகார்டில் டக்கீலாவை பார்த்ததும் ஷகீலாவை பார்த்தவன் போல் உற்சாகமாகி ஒரு ஸ்மாலை அர்டர் செய்தேன். பார்மேன் ஒரு சின்ன டெஸ்ட் டூயூப் போன்ற ஓரு குடுவையில் ஓரு ஸ்மாலுடன் ரெண்டு எலுமிச்சையுடன் உப்பை ஓரு டேபிளின் முன் வைத்தான். எதனுடன் அதை அடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ’அப்படியே சாப்டணும்னுஎன் நண்பர் ஹார்லிக்ஸ் பேபி போல் சொல்ல ஒரே ஷாட்டில் அடித்தேன். நெஞ்சுக்குள் சல்லென்று இறங்கி, உடனடியாய் கீழே போய் ஓரு 'பக்' என தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று வாய் வழியாய் தீ வர, உடனடியாய் உப்பை எலுமிச்சையில் தோய்த்து நாக்கில் வைத்து தேய்க்க, சூப்பர். டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்...!

நையாண்டி பார்த்தேன், தொப்புள் காட்சி உட்பட. நஸ்ரியா கதாபாத்திரம் அரை லூசெல்லாம் இல்லை. முழு லூஸு. அதற்கு மிக பொருத்தமாக ஓவியாவுக்கு வாய்ஸ் கொடுப்பவரே டப்பிங் பேசியிருக்கிறார். படத்தில் புன்முறுவல் அளவுக்கு ஆங்காங்கே சிரிப்பு வருகிறது. மனம் விட்டு சிரித்த ஒரே காட்சி சத்யனின் லுங்கி டான்ஸ் மட்டும்தான்.

குடிப்பழக்கம் உள்ள ஒருவன் மதுக்கூடத்திற்கு சென்று ஒரு துளி கூட குடிக்காமல், குடிப்பவரை வாய்பார்த்து விட்டு வருவது எவ்வளவு மோசமான அனுபவம். சனியன்று மாலை கிடைத்தது. சிறுதூறல், சில்லென காற்று, சில்ட் பீர் கிடைத்தால் எப்படி இருக்கும்...? ஆனால் பார்க்க மட்டும் என்றால்...? சிங்கம் ஒரு கிங்ஃபிஷர் பியரோடு என் முன்னால் அமர்ந்திருந்தார். எனக்கு அடிக்க வேண்டும் போலிருந்தது. ஒன்று, பியரை எடுத்து ‘பாட்டம்ஸ் அப்’ அடிக்க வேண்டும். அல்லது பாட்டிலை எடுத்து சிங்கத்தின் மண்டையில் அடிக்க வேண்டும். மிகுந்த சிரத்தை எடுத்து பொறுத்துக்கொண்டேன். கூடுமான வரை சிங்கத்திடம் பேச்சு கொடுக்காமல், குறிப்பாக வரலாறு சம்பந்தமாக பேச்சு கொடுக்காமல் உட்கார்ந்திருந்து வேடிக்கை மட்டும் பார்த்தேன். FYI, நான் திரவ உணவு உட்கொள்வதை நிறுத்தி / நிறுத்தப்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது :)

சனியிரவு தூர்தர்ஷனில் ஸ்போர்ட்ஸ் க்விஸ் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாத காலகட்டத்தில் எனக்கு கிடைத்த ஒன்றிரண்டு பொ.போ நிகழ்ச்சிகளில் ஸ்போர்ட்ஸ் க்விஸ் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி இன்னமும் (பன்னிரண்டு வருடங்களாக) தொடர்ந்துக் கொண்டிருப்பது சர்ப்ரைஸ். சுமந்த் சி ராமன் நிகழ்ச்சியை நடத்திச்செல்லும் விதம் அலாதியானது. ஒருமணிநேர நிகழ்ச்சி என்றால் அதில் விளம்பர இடைவேளை தவிர்த்து ஒரு நொடியைக் கூட வீணாக்கமாட்டார் என்று நினைக்கிறேன். என்ன ஒன்று, சில நேயர்கள் லைன் கிடைத்து பதில் தெரியாமல் நேர விரயம் செய்கிறார்கள். அது போன்றவர்களை அல்லையில் போட்டு மிதிக்கலாம். சுமந்த் சி ராமன் அதிகம் கவனிக்கப்படாத ஒரு லெஜன்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

வணக்கம் சென்னை படத்தின் ஒசக்க பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இப்படியொரு பாடல் ‘மொக்கை’ சிவாவிடம் வந்து கிடைத்திருப்பது காலக்கொடுமை. அதிலே குற்றாலத்துண்டை வைத்து ஒரு பெசல் ஸ்டெப் போடுகிறார் பாருங்கள் அடடா அவசியம் பார்க்கவும்.

வருகிற சனிக்கிழமை துவங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு புனே வாசம். ஒயின்ஷாப் திறக்கப்படாது என்பதை அறிக :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment