12 March 2014

வாசித்தவை – 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,


பத்து செகண்ட் முத்தம்
ரசி என்கிற தமிழரசி ஒரு ஓட்டப்பந்தயக்காரி. நூறு மீ தூரத்தை 9.58 நொடிகளில் கடந்திருப்பது தற்போதைய உலக சாதனை. செய்திருப்பவர் உசேன் போல்ட். பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளாரென்ஸின் 10.49 உலக சாதனை. பெண்கள் யாரும் பத்து நொடிக்கு குறைவான நேரத்தில் ஓடியதில்லை. அதுதான் நாயகி ரசியின் லட்சியமாக இருக்கிறது. அவளுடைய மாமனும் பயிற்சியாளருமான ராஜ் மோகன் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறான். அதற்காக சராசரி பதின்பருவ பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷங்களை எல்லாம் பறித்து வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் காதல் ரசியின் லட்சியத்திலிருந்து அவளை திசை மாற வைக்கிறது. பத்து செகண்ட் முத்தத்தை பூர்த்தி செய்தாளா ரசி...?

சுமார் நூறு பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். நாவல் முழுக்க ரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு தொற்றிக்கொண்டே வருகிறது. இங்க்லீஷ்காரன் என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ், நமீதா பகுதி கிளைக்கதையை ப.செ.மு.விலிருந்து உருவியிருக்கக்கூடும். ரசி க்ளைமாக்ஸில் திருந்தும் வில்லன் போல கடைசி பக்கத்தில் திருந்துவது அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை.

பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.80 – ஆன்லைனில் வாங்க

காதல் விதிகள்
ரிச்சர்ட் டெம்ப்ளர் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் வேலை விதிகள், காதல் விதிகள், செல்வம் சேர்க்கும் விதிகள் போன்ற தலைப்புகள் உட்பட சில சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை கிழக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை எப்போதோ ஒரு சமயம் ஆர்வக்கோளாரில் வாங்கி வைத்திருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு கிளான்ஸ் புரட்டிப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு என்பதாலேயே இருபது பக்கங்களை தாண்ட முடியவில்லை. யோகா சாமியார்களை போல பொத்தாம் பொதுவாக காதலுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் காதல் என்பதற்கு பொதுவான விதிகள் எல்லாம் வகுக்க முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். அது ஒரு கஸ்டமைஸ்ட் உணர்வு. காதலிப்பவர், காதலிக்கப்படுபவர், அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து காதலின் தன்மையும் அதற்கான விதிகளும் வேறுபடுகின்றன.

காதல் விதிகள் - ரிச்சர்ட் டெம்ப்ளர் - கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

கிளியோபாட்ரா
நான் அபுனைவு புத்தகங்களை அவ்வளவாக விரும்புவது கிடையாது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் நித்திராதேவி வந்து என்னை கட்டி அணைத்துக் கொள்வாள். ஆனால் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என்றால் ஒரு ஆர்வக்கோளாரில் வாங்கிவிடுவேன். குறிப்பாக அய்யா இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, தோழர் அனில் அம்பானி, பில் கேட்ஸு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே எனக்கு நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ளும். வாங்கி அடுத்தநாளே படித்து கிழித்து அவர்களைப் போலவே பெரிய ஆட்களாகி விட வேண்டுமென்ற உத்வேகம். ஆனால் வாங்கியபிறகு அவற்றை பிரித்து அரை பக்கம் கூட படித்ததில்லை.

கிளியோபாட்ரா அப்படியில்லை. சிறுவயதிலிருந்தே கிளியோபாட்ரா என்றால் ஒரு மதிமயக்கம். இருப்பினும் ஆங்காங்கே படித்த செய்தி துணுக்குகளை தவிர கிளியோபாட்ரா பற்றிய நூல்களை படித்தோ, திரைப்படங்களை பார்த்ததோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சீமாட்டி வெலிங்கடன் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் போது கிழக்கு வெளியீடான கிளியோபாட்ராவை வாங்கியிருந்தேன்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் முறையே ஒன்றாம், பன்னிரண்டாம் டாலெமிகளைப் பற்றி சொல்கிறது. அதன்பின் கிளியோபாட்ரா அறிமுகமாகி நூல் பிடித்தாற்போல அவருடைய மரணம் வரை செல்கிறது. ரோமப் பேரரசுகளான ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆண்டனியையும் காதலில் வீழித்தியவள். நிச்சயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கிளியோபாட்ராவின் வரலாறு...!

கிளியோபாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

60 அமெரிக்க நாட்கள்
சுஜாதா மூன்றாவது முறையாக அமெரிக்க சென்றபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பை படித்துவிட்டு வழக்கமான பயணக்கட்டுரைகள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஒருவகையில் பயணக்கட்டுரை தான். ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றியோ டிஸ்னிலேன்ட் சென்றுவந்த அனுபவத்தையோ எழுதிவிடவில்லை. 

பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் நிலையையும் அலசுகிறது நூல். தவிர அமெரிக்க அரசியல், தொழில்நுட்பம் என்று ஏனைய விஷயங்களையும் எழுதியிருக்கிறார். இறுதியில் முத்தாய்ப்பாக அமெரிக்காவில் குடிபெயர விரும்பும் இந்தியர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். எப்போதோ எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை தற்சமயம் படிக்கும்போது சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்றே தோன்றுகிறது.

60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை – ரூ.65 – ஆன்லைனில் வாங்க

மனிதனும் மர்மங்களும்
ஆவிகள், பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக வாசிகள், இன்னபிற ஆமானுஷ்யங்களை பற்றி எழுதியிருக்கிறார் மதன். ஆரம்பத்தில் இதையெல்லாம் உண்மையிலேயே மதன் தான் எழுதினாரா சுத்த பேத்தலாக இருக்கிறதே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகம் தனக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

குறிப்பாக, மார்கன் ராபர்ட்ஸன் பற்றிய தகவல். அவர் ஒரு எழுத்தாளர். 1898ல் கப்பல் விபத்து சம்பந்தமாக கற்பனையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கற்பனை கப்பலின் பெயர் டைட்டன். அவர் எழுதிய பல விஷயங்கள் 1912ல் விபத்தை சந்தித்த டைட்டானிக்குடன் ஒத்துப்போகிறது. இறுதியில், வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதனின் விந்தணு, கருமுட்டை மாதிரிகளை சேகரித்து செல்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மதன் புனைவாக எழுதியிருந்தால் பட்டைய கெளப்பியிருக்கும் என்பது என் எண்ணம்...!

மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140 – ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

சீனு said...

பத்து செகண்ட் முத்தம் - வெகுநாட்களாக கண்ணை உறுத்திக் கொண்டிருக்கும் புத்தகம், மையக் கதை படிக்கத் தூண்டுகிறது படிக்க வேண்டும்...

காதல் விதிகள் - சக்கை போடுபோட்ட ஷிவ்கெராவின் you can win பாதி கூட படித்து முடிக்காமல் தூங்கிக் கொண்டுள்ளது. இதையெல்லாம் படித்தாவது முன்னேறி விடமாட்டோமா என்பது தான் நம் மற்றும் இது போன்ற எழுத்தாளர்களின் விற்பனை ரகசியம்

முகில் எழுதிய வெளிச்சத்தின் நிறம் கருப்பு முதலில் படிக்க வேண்டும், கிட்டத்தட்ட மதன் பாணியில் முகில் எழுதத் தொடங்கியுள்ளார் என நினைக்கிறன்

r.v.saravanan said...

இது குமுதத்தில் வந்த போது படித்திருக்கிறேன் புத்தகமாக வந்த பின் படிக்கவில்லை

N.H. Narasimma Prasad said...

முடிந்தால் எலிசெபெத் டெய்லர் நடித்த 'கிளியோபாட்ரா' திரைப்படத்தை பார்க்கவும். புத்தகத்தின் வரிகள் அனைத்தும் நம்முன் அழகிய காட்சிகளாக விரியும்.

”தளிர் சுரேஷ்” said...

நிறைய வாசிப்பீர்கள் போலுள்ளது! கிழக்கின் விலை பட்டியல்தான் என்னை போன்றவர்களை பயமுறுத்துகிறது! நன்றி!

அனுஷ்யா said...

Couldn't get exactly what u mean as "vaasippil"
U read the single novel for weeks together??
But i dont know how that s possible for u.. :)

Philosophy Prabhakaran said...

அய்யா,

இந்த 'வாசிப்பில்' பகுதியை தொடர்ந்து அப்டேட் செய்ய முடியவில்லை... அதுதான் பிரச்சனை...

ஒரு புத்தகத்தை படிக்கத் துவங்குவதற்கு முன்பு அதனை இங்கே அப்டேட் செய்கிறேன்... திரும்பவும் அடுத்த புத்தகத்தை எடுத்ததும் மாற்றுவேன்...

மரப்பல்லியை நான் நான்கு நாட்களுக்கு முன்பே வாசிக்கத் துவங்கி அன்றிரவே முடித்தாயிற்று... அடுத்த புத்தகம் என்று எதையும் தொடாததால்... அந்த பகுதி அப்படியே இருக்கிறது...

'பரிவை' சே.குமார் said...

உங்கள் வாசிப்பின் அனுபவத்தை எங்களுக்கு புத்தக அறிமுகமாகத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

'மனிதனும் மர்மங்களும்' இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாசித்திருந்தேன். அப்புறம் வீட்லருந்து யாரோ சுட்டுட்டுப் போயிட்டாங்க பாஸ்!:(
மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' வாசிச்சீங்களா? கலவரமா இருக்கும்!