Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

12 March 2014

வாசித்தவை – 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,


பத்து செகண்ட் முத்தம்
ரசி என்கிற தமிழரசி ஒரு ஓட்டப்பந்தயக்காரி. நூறு மீ தூரத்தை 9.58 நொடிகளில் கடந்திருப்பது தற்போதைய உலக சாதனை. செய்திருப்பவர் உசேன் போல்ட். பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளாரென்ஸின் 10.49 உலக சாதனை. பெண்கள் யாரும் பத்து நொடிக்கு குறைவான நேரத்தில் ஓடியதில்லை. அதுதான் நாயகி ரசியின் லட்சியமாக இருக்கிறது. அவளுடைய மாமனும் பயிற்சியாளருமான ராஜ் மோகன் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறான். அதற்காக சராசரி பதின்பருவ பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷங்களை எல்லாம் பறித்து வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் காதல் ரசியின் லட்சியத்திலிருந்து அவளை திசை மாற வைக்கிறது. பத்து செகண்ட் முத்தத்தை பூர்த்தி செய்தாளா ரசி...?

சுமார் நூறு பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். நாவல் முழுக்க ரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு தொற்றிக்கொண்டே வருகிறது. இங்க்லீஷ்காரன் என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ், நமீதா பகுதி கிளைக்கதையை ப.செ.மு.விலிருந்து உருவியிருக்கக்கூடும். ரசி க்ளைமாக்ஸில் திருந்தும் வில்லன் போல கடைசி பக்கத்தில் திருந்துவது அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை.

பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.80 – ஆன்லைனில் வாங்க

காதல் விதிகள்
ரிச்சர்ட் டெம்ப்ளர் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் வேலை விதிகள், காதல் விதிகள், செல்வம் சேர்க்கும் விதிகள் போன்ற தலைப்புகள் உட்பட சில சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை கிழக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை எப்போதோ ஒரு சமயம் ஆர்வக்கோளாரில் வாங்கி வைத்திருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு கிளான்ஸ் புரட்டிப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு என்பதாலேயே இருபது பக்கங்களை தாண்ட முடியவில்லை. யோகா சாமியார்களை போல பொத்தாம் பொதுவாக காதலுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் காதல் என்பதற்கு பொதுவான விதிகள் எல்லாம் வகுக்க முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். அது ஒரு கஸ்டமைஸ்ட் உணர்வு. காதலிப்பவர், காதலிக்கப்படுபவர், அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து காதலின் தன்மையும் அதற்கான விதிகளும் வேறுபடுகின்றன.

காதல் விதிகள் - ரிச்சர்ட் டெம்ப்ளர் - கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

கிளியோபாட்ரா
நான் அபுனைவு புத்தகங்களை அவ்வளவாக விரும்புவது கிடையாது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் நித்திராதேவி வந்து என்னை கட்டி அணைத்துக் கொள்வாள். ஆனால் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என்றால் ஒரு ஆர்வக்கோளாரில் வாங்கிவிடுவேன். குறிப்பாக அய்யா இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, தோழர் அனில் அம்பானி, பில் கேட்ஸு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே எனக்கு நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ளும். வாங்கி அடுத்தநாளே படித்து கிழித்து அவர்களைப் போலவே பெரிய ஆட்களாகி விட வேண்டுமென்ற உத்வேகம். ஆனால் வாங்கியபிறகு அவற்றை பிரித்து அரை பக்கம் கூட படித்ததில்லை.

கிளியோபாட்ரா அப்படியில்லை. சிறுவயதிலிருந்தே கிளியோபாட்ரா என்றால் ஒரு மதிமயக்கம். இருப்பினும் ஆங்காங்கே படித்த செய்தி துணுக்குகளை தவிர கிளியோபாட்ரா பற்றிய நூல்களை படித்தோ, திரைப்படங்களை பார்த்ததோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சீமாட்டி வெலிங்கடன் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் போது கிழக்கு வெளியீடான கிளியோபாட்ராவை வாங்கியிருந்தேன்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் முறையே ஒன்றாம், பன்னிரண்டாம் டாலெமிகளைப் பற்றி சொல்கிறது. அதன்பின் கிளியோபாட்ரா அறிமுகமாகி நூல் பிடித்தாற்போல அவருடைய மரணம் வரை செல்கிறது. ரோமப் பேரரசுகளான ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆண்டனியையும் காதலில் வீழித்தியவள். நிச்சயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கிளியோபாட்ராவின் வரலாறு...!

கிளியோபாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

60 அமெரிக்க நாட்கள்
சுஜாதா மூன்றாவது முறையாக அமெரிக்க சென்றபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பை படித்துவிட்டு வழக்கமான பயணக்கட்டுரைகள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஒருவகையில் பயணக்கட்டுரை தான். ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றியோ டிஸ்னிலேன்ட் சென்றுவந்த அனுபவத்தையோ எழுதிவிடவில்லை. 

பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் நிலையையும் அலசுகிறது நூல். தவிர அமெரிக்க அரசியல், தொழில்நுட்பம் என்று ஏனைய விஷயங்களையும் எழுதியிருக்கிறார். இறுதியில் முத்தாய்ப்பாக அமெரிக்காவில் குடிபெயர விரும்பும் இந்தியர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். எப்போதோ எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை தற்சமயம் படிக்கும்போது சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்றே தோன்றுகிறது.

60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை – ரூ.65 – ஆன்லைனில் வாங்க

மனிதனும் மர்மங்களும்
ஆவிகள், பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக வாசிகள், இன்னபிற ஆமானுஷ்யங்களை பற்றி எழுதியிருக்கிறார் மதன். ஆரம்பத்தில் இதையெல்லாம் உண்மையிலேயே மதன் தான் எழுதினாரா சுத்த பேத்தலாக இருக்கிறதே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகம் தனக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

குறிப்பாக, மார்கன் ராபர்ட்ஸன் பற்றிய தகவல். அவர் ஒரு எழுத்தாளர். 1898ல் கப்பல் விபத்து சம்பந்தமாக கற்பனையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கற்பனை கப்பலின் பெயர் டைட்டன். அவர் எழுதிய பல விஷயங்கள் 1912ல் விபத்தை சந்தித்த டைட்டானிக்குடன் ஒத்துப்போகிறது. இறுதியில், வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதனின் விந்தணு, கருமுட்டை மாதிரிகளை சேகரித்து செல்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மதன் புனைவாக எழுதியிருந்தால் பட்டைய கெளப்பியிருக்கும் என்பது என் எண்ணம்...!

மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140 – ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2014

வாசித்தவை - 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புக் மார்க்ஸ்
புத்தகக்காட்சி முடிந்த கையோடு முதலில் துவங்கிய புத்தகம். எழுத்தாளர்களைப் பற்றியும், புத்தகங்களை பற்றியும் சுவாரஸ்யமான துணுக்குகள் அடங்கிய தொகுப்பு. ‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது...?, சீத்தலை சாத்தனார் பெயர்க்காரணம், தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் என நிறைய தகவல்கள், சுவையான நிகழ்வுகள், ஆதாரங்களோடு. சீவக சிந்தாமணியில் வரும் தாமரைக் கண்ணால் பருகினார்கள் என்ற சொற்றொடரைப் பற்றிய பத்தி மாஸ்டர் பீஸ்...!

சில கைவினைப் பொருட்கள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் சிறப்பாக இருக்காது. ஆனால் அது அதிக உழைப்பில் உருவாகியிருக்கும். அதுபோல புக் மார்க்ஸ் பெரிய ஆரவாரங்கள் ஏதுமில்லாத புத்தகம் என்றாலும் அத்தனை தகவல்களை தொகுக்க என்.சொக்கன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. 

புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

தமிழா! நீ ஒரு இந்துவா?
பொதுவாக எனக்கு பிரசார வகைமை புத்தகங்களின் மீது ஈடுபாடு கிடையாது. நண்பர் ஒருவர் கேட்டிருந்ததால் தமிழா நீ ஒரு இந்துவா என்ற புத்தகத்தை தேடி, அது எங்கேயும் கிடைக்கவில்லை. திடல்லயே இல்லையாம்...! புத்தகக்காட்சிக்கு சென்றிருந்தபோது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் இருக்கிறதா என்று ஒரு வார்த்தை கேட்டுப்பார்த்தேன். உடனடியாக கிடைத்துவிட்டது.

சங்ககாலத்திலிருந்து தமிழனின் வழிபாட்டு முறைகள், பிரிவுகள் (சாதிகள் அல்ல), திருமண முறைகள் என்று துவங்கி ஆரியர்களின் வருகை, அவர்களுடைய வளர்ச்சி, தமிழனின் வழிபாட்டு முறைகள் கடவுள் வழிபாடாக மாறியது என்று அறுபத்தைந்து பக்கங்களில் தேவையற்ற தகவல்கள் ஏதுமின்றி நீட்டாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சங்ககால பாடல்களை ஆதாரங்களாகக் கொண்டும் விளக்கியிருக்கிறார். அதன்பிறகு மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை தமிழில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். நான் ஹிந்து தமிழன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழா! நீ ஒரு இந்துவா? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும்
இதுவும் கிட்டத்தட்ட முந்தய புத்தகத்தை போன்றது தான். தமிழர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் மிகவும் குறைந்த அளவில் ஆதாரங்களை வைத்துக்கொண்டு, பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், லெமுரியா,  சுமேரியா, மினோயன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் எல்லாமே அடிப்படையில் தமிழ் நாகரிகம் தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகிப் போய்விட்டது. கிரேக்க கடவுள்களையும் ஹிந்து கடவுள்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் பகுதி கொஞ்சம் ரசிக்க வைத்தது. சுஜாதா விருது பெற்ற நூல் என்று கேள்விப்பட்டேன். ஒன்றும் சொல்வதற்கில்லை.

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும் – பா.பிரபாகரன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.125 – ஆன்லைனில் வாங்க

கி.பி.2087இல்...
நான் சிறுவனாக இருந்த சமயத்தில் வெளிவந்த சிறுவர்களுக்கான அறிவியல் புனைகதைகள் அடங்கிய நூல். ஒருவேளை நூல் வெளியான சமயத்திலேயே வாசித்திருந்தால் விரும்பியிருக்கக்கூடும். பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் நான்கைந்தை கூட முழுமையாக வாசிக்கவில்லை. 

கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25

திசை கண்டேன் வான் கண்டேன்
வாத்தியாருடைய சயின்ஸ் ஃபிக்ஷன். நோரா என்ற கிரகத்தினர் விண்வெளியில் ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக பூமியை அழிக்க திட்டமிடுகிறார்கள். அது குறித்து பூமியின் தலைமையகத்திற்கு தகவல் சொல்லும்பொருட்டு பாரி என்னும் நோராவாசியும் அவனுடைய வாகனமும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு பூமியின் எதிர்ப்பு நடவடிக்கை என்ன...? பூமி அழிந்ததா தப்பித்ததா...? என்பது கதை. மளமளவென வாசிக்க முடிந்தது. எனினும், இயந்திரா, ஜீனோ, சொர்க்கத்தீவு போன்ற அளவிற்கு ஈர்க்கவில்லை.

திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா - கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 January 2012

இது உங்க டைரியா பாருங்க...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதல் வாரம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தபோது நான் அந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே இல்லை. அடுத்தவாரம் நுழைந்தால் திரும்பிய திசையெல்லாம்... “இது உங்க டைரியா பாருங்க!” இதுதான் புத்தகத்தின் தலைப்பு. எழுத்தாளர் பெயர் பொறிக்கப்படவேண்டிய இடத்தில் முந்தாநாள் புத்தம் புதிதாக வெளியான “நண்பன்” பட டைட்டில், அதே ஸ்டைலில். அட்டைப்படத்தின் பேக்ரவுண்டில் ரஃப் நோட்டு கிறுக்கல்கள். சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் புத்தகங்களை மார்கெட்டிங் செய்வதில் ஒன் ஆஃப் தி கில்லாடீஸ். ப்ளீஸ்... இந்த புத்தகத்தை வாங்காதீங்கன்னு சொல்லி சொல்லியே நிறைய பேரை வாங்க வச்சவங்க. கையில் எடுத்து புரட்டிப் பார்த்தேன். பின் அட்டைப்பத்தியை படித்துப் பார்த்தேன். ஏதோ ஒரு உணர்ச்சிப்பெருக்கில் கடை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு நகர்ந்தேன்.

மதியம் கடந்து புத்தகங்களை வாங்க ஆரம்பித்த நேரத்தில் இது உங்க டைரியா பாருங்க மனதை ஆக்கிரமித்திருந்தது. ஏனோ அதன் அட்டைப்படத்தில் அறிவியல் = வரலாறு என்று அச்சடிக்கப்பட்டிருந்தது நினைவிற்கு வந்து சென்றது. நேராக குறுக்குவழியில் (!!!) புகுந்து F15 ஸ்டாலுக்கு நடையை கட்டினேன். திருநெல்வேலி சந்தையில் சீனிமிட்டாய் வைத்திருப்பது போல மேற்படி புத்தகத்தை அடுக்கி வைத்திருந்தார்கள். இந்தமுறை புரட்டிப்பார்க்கவில்லை. பணிப்பெண்ணிடம் பில் போடச்சொன்னேன். என் நீளமான தலைமயிரைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடியே பில் போட்டார். வீட்ல கஷ்டம்... முடி வெட்டக்கூட காசில்லைன்னு நினைச்சிருப்பாங்க போல. அருகிலிருந்த நடுத்தரம், இந்த புஸ்தகத்தை எழுதினவர் வர்றாரு பாருங்க என்று வலப்புறமாக ஜாடை காட்டினார். அங்கே திரும்பிப் பார்த்தால்...

நம்முடைய படைப்பு ஒருவரால் வாங்கப்படுகிறது என்கிற பெருமிதத்தோடு சிரித்தபடி நடந்து வந்துக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். என்னைவிடவும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் முன்பு பிறந்திருக்கக்கூடும். கை குலுக்கினேன். எனக்கு உங்களைப் பத்தியோ உங்க புத்தகத்தைப் பத்தியோ சத்தியமா எதுவும் தெரியாது. ஆனா, உங்க மார்கெட்டிங் திறமையும், அட்டைப்பட க்ரியேட்டிவிட்டியும் தான் இந்த புத்தகத்தை வாங்க வைத்தது என்றேன். அவரும் அவரது நண்பர்கள் இருவரும் இணைந்து எழுதியதாகச் சொன்னார். கூடவே, புத்தகம் படித்துவிட்டு கருத்து தெரிவிக்கவும் சொன்னார். ம்ம்ம் சரியென்று மையமாக தலையாட்டிவிட்டு கிளம்பினேன்.

முதல் சில பக்கங்களில் தான் தெரிந்துக்கொண்டேன் என்னிடம் காலையில் பேசியவர் பதிப்பாளரின் மகனாம். அதானே பார்த்தேன்... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இந்த “அதானே பார்த்தேன்...” என்ற வார்த்தைக்குள் மட்டும் ஆயிரம் வலிகள், இயலாமைகள். திறமையிருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும் திறமையில்லாதவர்கள் ரெகமண்டேஷனில் முன்னேறுவதையும் பார்த்து பொங்கி வழியும் பொங்கல். நிற்க, புத்தகத்தையே படிக்காமல் எப்படி அந்த இளைஞனை திறமையில்லாதவன்னு முடிவு செய்யலாம். புத்தகத்தை தொடர்ந்தேன். ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை மச்சான் இதுதான் முதல் உபதலைப்பு. மொத்தம் ஒன்பது. முதாலவதை படித்து முடித்ததும்தான் என் கையில் தவழ்ந்துக்கொண்டிருப்பது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதையே உணர்ந்தேன்.

கடந்த பத்தியில் குறிப்பிட்ட அந்த முதல் சிறுகதை ஒன்றும் ஆஹா ஓஹோ வகையில்லை. “காலையில் எழுந்தேன்... காபி குடித்தேன்...” வகையறா தான். என்ன, காரை லவட்டுவது எப்படி என்று வேண்டுமானால் தெரிந்துக்கொள்ளலாம். அடுத்த கதையை வாசித்துக்கொண்டிருந்த வேளையில் முதல்முறையாக புத்தகத்தின் உள்ளே ஒரு வாக்கியம் எண்ணை ஈர்த்தது. மணி ஒன்பதே கால் என்று சொல்ல வந்த வரிகள், “எண்கள் இல்லாத என் கைக்கடிகாரத்தில் பெரிய முள்ளும் சின்ன முள்ளும் எங்களுக்குள் வாய்க்கால் தகராறு என்பதுபோல் வெவ்வேறு திசையைப் பார்த்துக்கொண்டு ஒன்றிற்கொன்று செங்குத்தாய் நின்றுக்கொண்டிருந்தன...” (குறிப்பு: அதற்கு முந்தய பத்தியில் மணி எட்டு ஐம்பது என்று குறிப்பிடப்பட்டிருந்தது). மெல்லிய புன்னகையோடு தொடர்ந்து புரட்டலானேன்.

மூன்றாவது கதையில் அறிவியல் = வரலாறு கோட்பாடு விளக்கப்பட்டிருந்தது. இப்படியொரு கோட்பாட்டை படித்தவுடன் நம்ம அஞ்சாசிங்கம் செல்வின் ஞாபகம் வராமல் இருக்குமா...? வந்து தொலைத்தார். ஆனால் புத்தகத்தை முடிக்கும்வரையில் அடிக்கடி செல்வின் நினைவுக்கு வருவார் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பக்கங்களை புரட்ட, சேத்தன் பகத் ஸ்டைல் நினைவிற்கு வந்தது. அதையே தமிழில் பின்பற்றியிருக்கிறார்கள். இளமை + புரட்சியாக கதைகள் நகர்ந்தன. கூடவே ஆன்மிகம், வரலாறு எல்லாம். காளான் சூப் தன்னுடைய வேலையைக் காட்ட தொடங்கியிருந்தது.

ஐந்தாவது கதையான பொறி இயல் நாயகனின் பெயர் பிரபாகரன். அவனும் பொறியியல் படிக்கிறான். அதுவும் மின்னணு மற்றும் தொலைதொடர்பியல். சினிமா பற்றிய அந்தக்கதைக்கு, அழகன், தாவணிக்கனவுகள், வறுமையின் நிறம் சிகப்பு என்று சினிமா வசனங்களாலும் காட்சிகளாலும் உயிர்ப்பூட்டிய விதம் அழகு. ஆனாலென்ன, அடுத்ததாக படித்த தங்க மீன் கதைதான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிவதாய் நெருடுகிறது.

ஆண் பாவம் கதை மட்டுமில்லாமல் பெரும்பாலான கதைகள் அல்லது கதைகளினூடே வரும் சம்பவங்கள் ஐடி கம்பெனிக்களை சுற்றியே வலம் வந்தன. அந்த வகையில் ஆண் பாவம் ஐடி காதல் என்றால் என்னவென்று சொல்கிறது. அதைப் பற்றி தனி புத்தகமே போடலாம். ஒரு வீணையின் நாட்குறிப்புகள் என்ற கதையில் ஆவி என்ற வார்த்தையை கடக்கும்போது மணி அதிகாலை நான்கு. பேய்ங்க வாக்கிங் போற நேரமாச்சே... மனதை திடப்படுத்திக்கொண்டு படித்தால் அட “அதுவும்” ஒரு சமூகப்பொறட்சி கதைதான்.

கடைசியாக படித்ததாலோ, அல்லது புத்தகத்தில் கடைசியாக இருந்ததாலோ அல்லாமல் இப்படிக்குக் காதல் என்ற கதையை அதிகம் பிடித்திருந்தது. அதற்கு காரணம் காதல். முந்தய கதைகளைப் போல வெட்டியாக புரட்சி பேசாமல் நானுண்டு என் காதலுண்டு என்று என் மனதிற்குள் கர்சீப் போட்டு இடம் பிடித்தது கடைசி சிறுகதை. (ஆனா அதுக்காக 167-வது பக்கத்தில் கல்யாணம் என்ற வார்த்தையை கால்யானம் என்று அச்சடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது). பொண்ணுங்க மனசும் அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டின் பேப்பரும் ஒன்னு...! ரெண்டையும் புரிஞ்சிக்கவே முடியாது.

சினிமாவாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, ஏன் பதிவுலகமாக இருந்தாலும் திறமை மட்டும் இருந்தால் வெற்றி தேடி வராது. சொல்லப்போனால் அதீத திறமையும் தேவையில்லை. பாதி திறமை மீதி மார்கெட்டிங். இதுவே புத்தகக்கடையில் சீனி மிட்டாய் மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்த “இது உங்க டைரியா பாருங்க” என்ற புத்தகத்தின் வெற்றிக்கு சாட்சி. ஆங்... புத்தகத்தின் தலைப்பை மறுபடி டைப்பியதும் தான் நினைவுக்கு வருகிறது. இந்தப்புத்தகத்தை டைரியோடு ஒப்பிடும் அளவிற்கு ஒன்றும் மனதை உரசிச்செல்லவில்லை.ஆனாலும் இந்த தலைப்பு வைக்கக் காரணம், அதுவும் மேலே கூறிய மீதி சமாச்சாரம் தான்.

“சில சமயம் உப்புமா கூட டேஸ்டா தான் இருக்கும்...!”

தலைப்பு: இது உங்க டைரியா பாருங்க!
விலை: ரூ.100/-
கிடைக்குமிடம்: ஸ்டால் எண் F15 (சென்னை புத்தகக் கண்காட்சியில்)
அலுவலக முகவரி:
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
தி.நகர், சென்னை -17.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 September 2011

பேசும் ஊமைகள்


அன்புள்ள சாந்திலால் அவர்களுக்கு,

“நான் அனுப்பிய புத்தகங்கள் வந்து சேர்ந்ததா...?” என்று அக்கறையுடன் விசாரித்திருந்தீர்கள். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்பதற்காக “ஆம். நன்றி..” என்ற ஒற்றை வரி பதிலை தவிர்த்து வந்தேன். புத்தகங்கள் வந்துசேர்ந்தது பேசும் ஊமைகளை படித்தும் முடித்துவிட்டேன்.


ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு என்னுரை, முன்னரையெல்லாம் படிப்பது அவசியமா என்று தெரியவில்லை. இனி வரும் காலங்களில் அவற்றை தவிர்க்க விரும்புகிறேன். ஏனென்றால் என்னுரையிலேயே நீங்கள் ஒரு நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட் என்றும் சீரிய(ஸ்) கதைகள் எழுத முயற்சித்திருப்பதாகவும் குட்டை வெளிப்படுத்திவிட்டீர்கள்.

அடுத்தது, கதைகள் அனைத்தும் 1999ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டிற்குள் கல்கி, தேவி, சாவி, ஆ.வி, அ.வி (அவள் விகடன்) போன்ற இதழ்களில் வெளியானதாக சொல்லியிருந்தீர்கள். அப்படியென்றால் அனைத்தும் பத்து வருடத்திற்கு முந்தய அவுட்டேட்டட் கதைகள். இந்த இரு ஏமாற்றங்களையும் கடந்துதான் புத்தகத்திற்குள் நுழைந்தேன். இனி பேசும் ஊமைகளை பற்றி பேசுகிறேன்.
(நான் கொஞ்சம் உண்மைகள் சொல்வேன் அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைக்க வேண்டாம்).

முதலில் ஒரு விஷயம், இந்த புத்தகத்தை நான் படித்தது உங்கள் கதைகளை படித்து மனிதநேயத்தை கற்றுக்கொள்வதற்கு அல்ல. இந்த புத்தகத்தின் மூலம் நான் உங்களைத்தான் படித்தேன். (இதை எனது ப்ரோபைல் பக்கத்தில் உள்ள வரிகளை படித்தால் புரிந்துக்கொள்ளலாம்). அதற்கு தகுந்தாற்போல உங்கள் கதைகளும் உங்களைப் பற்றி தெளிவாக எடுத்து சொல்லிற்று.

நீங்கள் தொழில்ரீதியாக ஒரு மருத்துவர் என்பது தெரியாதவர்கள் கூட உங்கள் கதைகளை படித்தால் இதை எழுதியவர் ஒரு மருத்துவர் என்று கண்டுபிடித்துவிடுவார். பதினைந்தில் கிட்டத்தட்ட நான்கைந்து கதைகள் மருத்துவம் சார்ந்தவை. அதென்ன நான்கைந்து, இரண்டு கதைகள் மேலோட்டமாக மருத்துவம் சார்ந்தவை. அதான் குத்துமதிப்பாக சொன்னேன். ஒரு மருத்துவராக நீங்கள் நிறைய அனுபவப்பட்டிருப்பீர்கள். நிறைய சுகதுக்கங்களை பார்த்திருப்பீர்கள். அவை உங்கள் கதைகளில் பிரதிபலித்தன. அதிலும் பாதி மட்டுமே உங்கள் நோயாளிகளின் அனுபவம் மிச்சத்தை நீங்களே உங்கள் கற்பனையில் தொடர்ந்திருப்பது போல தெரிகிறது. என்ன சரிதானே....?

ராஜபாளையத்தில் பிறந்ததாலோ என்னவோ உங்களுக்கு தாய்ப்பாசத்திற்கு இணையாக நாய்ப்பாசமும் இருக்கிறது. நாய்ப்பாசம் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள், ஏன் மரங்களின் மீதும் கூட. அந்த வகையில் உங்களுடைய “ஷிவாவின் திருவிளையாடல்” சிறுகதை செம டச்சிங். அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. சீரியஸ் கதைகளில் நாய்கள், மாடுகள் பேசுவது போல எழுதியிருக்கும் ஃபேண்டஸி ரசிக்க முடியவில்லை. ஒருவேளை நகைச்சுவை கதைகளாக இருந்தால் பொருந்தியிருக்கும்.

நான் மூன்றாவது பத்தியில் குறிப்பிட்டது போல நிறைய கதைகள் அவுட்டேட்டட். அதையும் மீறி அவற்றை ரசிக்க வைத்தது உங்கள் எழுத்து நடை என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்காங்கே கொஞ்சம் சமூகச்சாடல்கள். குறிப்பாக, மதுக்கடைகளில் ஒரிஜினல் லேபிளை ஒட்டி விற்கப்படும் போலி சரக்குகளை பற்றிய உங்கள் நியாயமான கோபத்தை ரசித்தேன். நீங்கள் ஆதிசேஷன் – அல்சேஷன் என்று எழுதியிருந்த வரிகள் “சிவாஜி” படத்தில் இடம்பெற்றது தெரியும்தானே. 

சில கதைகளில் உள்ள கிராமம் சார்ந்த விஷயங்களை நகரவாசியான என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. கிராமங்களில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைக்க தோன்றியது. “பொதர்”, “ஒரே கல்லில் மூணு மாங்கா” கதைகளைப் பற்றிதான் சொல்கிறேன். மற்ற கதைகள் அதிகம் ஈர்க்கவில்லை.

சரி மேட்டருக்கு வர்றேன். உங்கள் புத்தகத்தின் பதினைந்து கதைகளில் மூன்று முத்தான கதைகளைப் பற்றி சொல்கிறேன், கவுன்ட்டவுன் ஆர்டரின்படி. மூன்றாவது, வானவில் கனவு என்ற மனநலம் குன்றிய பெண் அல்லது முதியவர் பற்றிய கதை. கதையின் இறுதியில் ஒரு மரணம் இருக்குமென எண்ணினேன். அதை மாற்றி வேறு திசையில் கொண்டு சென்று கதையை முடித்த உங்கள் யுத்தி கவர்ந்தது.

இரண்டாவது, குழந்தையும் தெய்வமும். இந்தக்கதையை பற்றி எனக்கு இரண்டு மாற்றுக்கருத்துகள். ஒன்று கதையின் தலைப்பு சரியான தேர்வல்ல. (பெரும்பாலான கதைகளுக்கு அப்படித்தான்). இந்தக்கதைக்கு “ஊஸ்” என்று பெயர் வைத்திருக்கலாம். அப்புறம், கதையை பாதியிலேயே முடித்திருக்கலாம். இரண்டாம் பாதி தேவையற்றது. அந்த மாறுதல்களோடு இந்தக்கதைக்கு இரண்டாவது இடம்.

முதலிடம் பெற்ற அல்டிமேட் கதை – பொன்குஞ்சு. சான்ஸே இல்லை. ஒருசில கதைகளை படித்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு நினைவில் கிடந்தது பாடாய்ப்படுத்தும். அப்படிப்பட்ட கதைதான் இது. அப்படி ஒரு சிறுவனை நான் நெருக்கமான முறையில் சந்தித்திருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் அந்த வலி எனக்கு புரிந்தது. 

மொத்தத்தில் இவை சீரியஸ் கதைகள் தான். ஆனால் சீரிய கதைகள் என்று சொல்லமாட்டேன். அப்புறம் முழு புத்தகத்தையும் படித்தபிறகு தான் பின் அட்டையில் உங்கள் பக்கத்தில் நிற்கும் நாய்க்குட்டியை பார்த்தேன். உங்கள் நாய்ப்பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 February 2011

கொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்ந்தால்...?


வணக்கம் மக்களே...

மீண்டுமொரு நாள் புத்தக சந்தையில் பதிவுலக நண்பர் ஒருவருடன் மேயந்துக்கொண்டிருந்தேன். வானதி பதிப்பகம் வாசலில் நின்று புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று நண்பர் நீங்க, சாண்டில்யனின் கடல்புறா நாவலை படித்திருக்கிறீர்களா...? என்றார். நான் சாண்டில்யனா...? யாருங்க அவருன்னுற மாதிரி பேந்தப் பேந்த முழிச்சேன். அந்த ஜெர்க்கை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஏதோ நான் சாண்டில்யன் ஒருவரது புத்தகங்களைத் தவிர அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவன் போல இல்லிங்களே... என்று நெற்றிச்சுருக்கி பதில் சொன்னேன். சாண்டில்யன் எழுத்துக்களை படிக்காதவனெல்லாம் உயிரோட இருக்குறதே வேஸ்டுன்னு சொல்றா மாதிரி ஏற இறங்க ஒரு லுக் விட்டார்.

அதன்பிறகு அவருக்கே தெரியாமல் சில சாண்டில்யன் நாவல்களை நோட்டமிட்டபடி வந்தேன். ஒவ்வொன்றிலும் மன்னர் காலத்து கதை என்பது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பொதுவாக இந்தமாதிரி நாவல்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஆன்மிக புத்தகமாக இருந்துவிடுமோ என்ற ஐயப்பாடு. நண்பர் பார்த்த பார்வை மனதை பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. சரி, என்ன தான் இருக்கிறதென்று படித்துப் பார்த்துவிடுவோமே என்று எண்ணம் மெலிதாக எட்டிப்பார்த்தது. முப்பதிற்கும் மேற்பட்ட நாவல்களில் எதை வாங்குவது என்று தெரியவில்லை.

மறுபடியும் அந்த நண்பரிடமே சென்று வெட்கத்தை விட்டு சாண்டில்யன் நாவல்களில் எது அருமையாக இருக்கும் என்றொரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியைக் கேட்டேன். அவர் கடல் புறா என்று கையை நீட்டி காண்பித்தார். ஆங்கே உண்மைத்தமிழன் பதிவு சைஸில் மூன்று புத்தகங்கள் இருந்தன. வெளங்கிடும்ன்னு மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஒரு மரியாதைக்காக அந்த மூன்றில் ஒன்றினை கையில் தூக்கிப்பார்த்தேன். என்னுடைய புஜங்கள் இதுநாள் வரை பலமில்லாமல் இருந்ததன் ரகசியம் புரிந்தது. நண்பர் ஜீன்ஸ் போட்டிருந்த பிகர் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த கேப்பில் நைஸாக புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்தேன்.

அடுத்தமுறை சாண்டிலயனைப் பற்றி கொஞ்சம் விக்கிபீடியா பார்த்து தெரிந்துக்கொண்டு மீண்டும் புத்தக சந்தைக்கு சென்றேன். ஓவர் டூ வானதி பதிப்பகம். அடுக்கி வைத்திருந்த நாவல்கள் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்துக்கொண்டிருந்தேன். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் எது குறைந்த விலை, குறைந்த பக்கங்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது சாண்டில்யனின் எழுத்துக்களை ருசி பார்த்துவிடும் முனைப்பில் ராஜ யோகம் என்ற தலைப்பிட்ட நாவலை தேர்ந்தெடுத்தேன்.

அடுத்ததாக சாரு. பதிவுலகை பொறுத்தவரையில் இங்கே சாருவின் சாற்றை ஒருதுளி கூட விடாமல் பிழிந்துக்குடித்தவர்கள் அதிகம். (சாருவையே பிழிந்தவர்கள் அதைவிட அதிகம்). இவ்வாறாக சாருவை ஆராதிக்கும் ஒரு கூட்டமும், சாருவை அசிங்கப்படுத்தும் ஒரு கூட்டமும் இருக்குமிடத்தில் சாருவைப் பற்றி எழுதவே பயமாக இருக்கிறது. ஏனெனில் எனக்கு சாரு பற்றி எதுவும் தெரியாது என்பதே அப்பட்டமான உண்மை.

சாருவைப் பற்றி முதல் முதலாக அறிந்துக்கொண்டது குமுதத்தில் தொடராக வெளிவந்த கோணல் பக்கங்களின் மூலமாகத்தான். நான் படித்த சில எபிசோடுகளும் மது, மாது சார்ந்தவையாகவே இருந்தன. அந்த போதையும் எழுத்துநடையில் இருந்த வசீகரமும் எனக்கு பிடிக்கவே செய்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த புத்தக சந்தையில் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) சாருவின் எழுத்துக்களை இன்னும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கலகம், காதல், இசை என்ற கட்டுரைத்தொகுப்பை வாங்கினேன்.

ஏன் அந்த புத்தகத்தை வாங்கினேன் என்று பின்னாளில் என்னை நானே திட்டிக்கொண்டேன். சத்தியமா சொல்றேன், அந்த புத்தகத்தில் இருக்கும் எதுவுமே எனக்கு புரியவில்லை. ஒருவேளை பின்நவீனத்துவவாதிகளுக்கு மட்டும்தான் புரியுமோ என்னவோ...? அதன்பிறகு அந்த புத்தகத்தை அலமாரியில் இருந்து எடுக்கவே இல்லை. பரிசளிக்கும் சாக்கில் யாருடைய தலையிலாவது கட்டிவிட வேண்டுமென்று உத்தேசம்.

அப்புறம், பதிவுலகம் வந்தபின்பு குறிப்பாக நித்தியானந்தா டிவி சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டிருந்த சமயம் சாருவை நக்கலடித்து ஆங்காங்கே சில பதிவுகள் எழுதப்பட்டு வந்தன. படிப்படியாக மனதில் சாருவின் மீதிருந்த மரியாதை தேய்ந்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது எந்திரன், மன்மதன் அம்பு படங்களின் விமர்சனங்களை படிக்க நேர்ந்தது. அதன்பிறகு சொல்லவே வேண்டும். சாருன்னா யாருன்னு கேட்குற அளவுக்கு மாறினேன்.

என்னதான் நடந்தாலும் ஒருசிலர் சாருவை சிலாகிப்பதை பார்க்கும்போது என்னதான் இருக்கிறது சாருவிடம் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் தேகம் நாவலை வாங்கியிருக்கிறேன். யாரோ ஒருவர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு நாவலைப் படிக்கும்போது எந்தவித எதிர்ப்பார்ப்பும் மனதில் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் மட்டுமே நாவலை முழுமையாக ரசிக்க முடியுமென்று. எனவே எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. யாரிடமும் கருத்து கேட்கவில்லை. கேட்டாலும் தெளிவான விடை கிடைப்பதில்லை. ஒருவர் ராஸ லீலா மாதிரி யாரும் எழுத முடியாதுன்னு சொல்றார். ஒருவர் ஜீரோ டிகிரி தான் சாருவின் மாஸ்டர் பீஸ் என்கிறார். மற்றொருவர் ஜீரோ டிகிரி படித்தால் தலைவலி நிச்சயம் என்கிறார். இப்படியாக சாருவைப் பற்றி தெளிவான எண்ணங்கள் கிடைக்காத நிலையில் எந்தவித எதிர்ப்பார்ப்புக்களுமின்றி தேகத்தில் இருந்து சாருவை படிக்க ஆரம்பிக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment