Showing posts with label சிறுகதை முயற்சி. Show all posts
Showing posts with label சிறுகதை முயற்சி. Show all posts

9 July 2013

ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது ஒரு மாலை நேரம். வெறுமனே மாலை நேரம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. கார்மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதற்காக காத்திருந்த மிக மிக ரம்மியமான மாலைப்பொழுது. அலுவலகத்தில் அரக்க பறக்க மின்னஞ்சலொன்றை தட்டச்சிக் கொண்டிருந்தேன். இதை மட்டும் அனுப்பி முடித்துவிட்டால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் முந்தானை முடிச்சு சீரியல் பார்க்கலாம், ஜொள்ளு வடிய வடிய சேட்டுக்கடை ஜிலேபி இரண்டை உள்ளே தள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக ரமாவின் தினசரி வசையருவியிலிருந்து தப்பிக்கலாம். “ஸ்லர்ப்” – அன்றைய தினத்தின் ஆறாவது டீயின் கடைசி மடக்கை குடித்தேன், கூடவே மின்னஞ்சலையும். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியேறத் தயாரானேன். ரிசப்ஷனில் பாலா தன்னுடைய கணினித்திரையில் எதையோ வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியுடன் எழுந்து நின்றாள். நான் அவளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தப்பித்தவறி அவள்மீது பார்வை பட்டுவிட்டால் ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் படுத்தியெடுத்து விடுவாள் ராட்சசி. இருப்பினும் அவளைக் கடந்துவந்த பின், பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

Thanks: gapingvoid.com

பாலாவை காணத்தவறிய விழிகளின் மீதுள்ள கோபத்தை பைக்கின் கிக் ஸ்டார்ட்டர் மீது காண்பித்தேன். அது உறுமியபடி வேகமெடுத்தது. அதிகபட்சம் இரண்டு சிக்னல்களை கடந்திருக்க மாட்டேன், ஒரு கவிதைத்துளி என் மீது சிந்திய உணர்வு. அதெல்லாம் இருக்காது என்றெண்ணியபடியே வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அடுத்ததடுத்து கவிதைத்துளிகள் என்னை சீண்டிக்கொண்டிருந்தன. சில நிமிடங்களில் வானிலிருந்து அதீத கவிதைகள் பொழிய ஆரம்பித்தன. ஆம், பெருமழை. அடடே முந்தானை முடிச்சு பார்க்க முடியாதே ! ம்ம்ம் பரவாயில்லை ரமாவிடம் கதை கேட்டுக்கொள்ளலாம். மொத்தமாக நனைந்து முடிவதற்குள் டீக்கடையின் ஓரமாக வண்டியை செலுத்திவிட்டு ஒதுங்கினேன்.

அது நாயர் டீக்கடை என்று சொன்னால் க்ளேஷேவாக இருக்கும். தாராளமாக நின்றால் ஐந்து பேர் நிற்கக்கூடிய அந்த டீக்கடையின் வெளிப்பகுதியில் மழையின் காரணமாக சுமார் இருபது பேர் நின்றுக்கொண்டிருந்தோம். அதாவது அடைந்திருந்தோம். நான்கைந்து ஐ.டி. பணியாளர்கள், ஒருவன் கையில் டீ கிளாஸும் ஒருத்தியின் விரலிடுக்கில் கிங்ஸும் அகப்பட்டது. ஒரு தாத்தா அவருடன் அழைத்து வந்திருந்த சிறுமிக்கு ஜாம் பன் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அது அவரை சட்டை செய்யாமல் குர்குரே கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. ஒருத்தி சுற்றியிருந்த காடா துணிக்கிடையே இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது. அவளுடைய ஸ்கூட்டி என்னுடைய ஸ்ப்ளெண்டருடன் சேர்ந்து நனைந்துக்கொண்டிருந்தது. எனக்கு எதிரில் ஒருத்தன் வாழைக்காய் பஜ்ஜியை தினத்தந்தியில் வைத்து பிதுக்கி கொடுமைபடுத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்த எனக்கு சற்றே அயர்ச்சியான காரணத்தினால் “மாஸ்டர்... ஒரு டீ...!” என்று அலறினேன்.

பட உதவி: கூகிள்
டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம். என்னுடைய நினைவுக்குவியலிலிருந்து அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான் தேன்மொழியிடமிருந்து கஜூராவை அபகரித்துத் தின்ற காட்சியை “சார்... டீ...” என்ற பாழாய்ப்போன மாஸ்டரின் குரல் கலைத்து தொலைத்தது.

ஒரு கையில் டீ கிளாஸை வாங்கியபடி மறு கையில் கஜூரா ஒன்றினை எடுத்து வாயில் வைத்தேன். அய்யுய்யோ ! நான் கஜூராவையா சாப்பிடுறேன்... கடவுளையே சாப்பிடுறேன். நான் கடைசியாக கஜூரா சாப்பிட்டது எப்போது என்று நினைவில்லை. ஆனால் நிச்சயமாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். கஜூரா சாப்பிடுவதில் ஒரு மிகப்பெரிய நன்மை உள்ளது. வயிறு துரிதமாக நிரம்பிவிடும். கஜூராவை கடித்தபடியே உலகத்தைப் பற்றி சிந்திக்க துவங்குகிறேன். உலகம் ஏன் கஜூராவைப் போல சதுரமாக அல்லாமல் போண்டாவை போல உருண்டையாக இருக்கிறது. ஆனால் அத்தகைய உலகத்தில் வாழக்கூடிய வாழ்க்கை மட்டும் போண்டாவை போல மென்மையாக அல்லாமல் கஜுராவைப் போல கடினமானதாக இருக்கிறதே ! போண்டாவின் சுவை போண்டாவில் இல்லை, அதன் இடையிடையே தென்படும் மிளகில் தான் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அதுபோலத்தான் கஜூராவும். கஜூராவின் சுவை கஜூராவில் இல்லை, அதனை மெல்லும் வாயில்தான் இருக்கிறது. அடுத்ததடுத்து கஜூராக்களை லபக்கிக்கொண்டிருந்தேன். கடைசியாக ஒரேயொரு கஜூரா மட்டும் பலகார பலகையில் எஞ்சியிருந்தது.

பட உதவி: கூகிள்
ஒரு புதிய மனிதர் டீக்கடைக்குள் நுழைகிறார். உடைந்து விழுந்து விடுவாரோ என்று அச்சப்படுகின்ற வகையில் ஒல்லியான தேகம், வழுக்குப்பாறை போன்றதொரு சொட்டைத்தலை, தன்னுடைய அளவிற்கு பொருந்தாத முழுக்கை சட்டை, பாலைவனச்சோலை காலத்து பேண்ட், கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை. கணநேரம் கஜூராவை மறந்து கண்ணசைக்காமல் அந்த மனிதரை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன வாங்க வந்திருப்பார் ? மாஸ்டரிடம் ஒற்றை விரலைக்காட்டி சைகையில் ஏதோ சொன்னார். ரெகுலர் கஷ்டமராக இருக்கக்கூடும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அது புகையை கக்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவர் சைகையில் குறிப்பிட்ட பானம் அவருடைய கைகளுக்கு வந்தது. அது டீ ! டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்தார். அதுவே சில நிமிடங்களுக்கு தொடர்ந்தன. சிகரெட் தன்னுடைய கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. திடீரென ஒரு சுதாரிப்பு. நான் ஏன் அவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் ? உண்மையில் எனக்கு என்ன பிரச்சனை ? ஏதோவொரு உண்மை உரைக்க அவர் மீதிருந்து என்னுடைய பார்வையை விலக்கிக்கொண்டேன். கடைசி கஜூராவை எடுக்க கையை நீட்டினேன். என்னை முந்திய ஒரு கை அதனை அபகரித்துவிட்டது. அது அவருடைய கை. அவருக்கும் கஜூரா பிடிக்கும் போலிருக்கிறது. வந்த கோபத்திற்கு அவரை நாலு மிதி மிதிக்கவேண்டும் போல தோன்றியது. எனக்கொரு தேன்மொழி இருந்தது போல அவருக்கொரு கனிமொழி இருந்திருக்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மழை குறைந்திருந்தது.

சாலையில் வாகனங்கள் நகர ஆரம்பிக்கின்றன. நான் என்னுடைய நந்தவனத்தேரை நகர்த்தி அதன் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முற்படுகிறேன். அதற்குள் பாலைவனச்சோலை கடைசி கஜூராவை விழுங்கிவிட்டு அவருடைய வாகனத்தை எடுக்கிறார். அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி. அவர் என்னைக்கண்டு லேசாக புன்னகைக்கிறார். கஜூராவை அபகரித்ததற்காக மன்னிப்பு கேட்கும் புன்னகை. புது உற்சாகத்துடன் வண்டியை கிளப்பி வேகமெடுக்கிறேன். அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு எனக்கு நேரெதிர் திசையை நோக்கி தன்னுடைய பயணத்தை துவங்குகிறார். சிறு தூறலுக்கிடையே தொடர்கிறது எங்கள் பயணம்... சாலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூட !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2011

ரயில் சிநேகிதி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அதிகாலை சூரியனை பல வருடங்கள் கழித்து பார்த்தேன். நான் பரனூரில் இருக்குமொரு பரங்கியர் நிறுவனத்தில் வேலை செய்வதால் மதியம் இரண்டு மணி ஆபீஸுக்கு காலை பத்தரை மணிக்கு எழுந்தே பழக்கமாகி விட்டது. அன்று மாலை நண்பனின் திருமணத்திற்காக கேரளா செல்லவேண்டி இருந்ததால் அலுவலகத்திற்கு சீக்கிரம் சென்று சீக்கிரம் திரும்ப வேண்டிய கட்டாயம். நிற்க... கேரளத்து கப்பக்கிழங்குகள் பற்றி ஏதோ ஜொள்ளப்போகிறேன் என்று நினைத்தால்... ஐயாம் ஸாரி.

காலை எட்டரை மணி, பீச் ஸ்டேஷன் சந்திப்பு, பலவித முகங்கள், ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு ஃபீலிங். என்னுடன் ஒட்டிப்பிறக்க தவறிய நண்பன் சிவகுமாருக்கு போனினேன்.

“மச்சி... எங்கடா இருக்க...?”

“...”

ரயில் கூவ, “டேய்... (பீப்) எங்கடா இருக்க...?” என்று கொஞ்சம் பாசத்தை கூட்டினேன்.

போன்லைன் கட்டாக, பின்னாலிருந்து என் தோள்பட்டையில் கை வைத்தது அவனாகத்தானே இருக்க முடியும். 

ப்ரைம் டைம் என்பதால் எப்போதும் போல ஜன்னலோர இருக்கை வாய்க்கவில்லை. அன்றைய விலைவாசி உயர்வு அறிக்கையை, அதாங்க நியூஸ்பேப்பரை பிரித்தேன். பார்க் ஸ்டேஷன் வந்ததும் கம்பார்ட்மென்ட்டில் காற்றும் நுழைய முடியாத அளவிற்கு கூட்டம் சேர்ந்திருந்தது. என்னைச் சூழ்ந்து  சுமார் ஏழெட்டு பேர் ஓசி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது அடுத்த பக்கத்தை திருப்புவதற்கு தர்ம சங்கடமாக இருந்தது.

தற்செயலாக என் கண்கள் நியூஸ்பேப்பருக்கு அப்பால் பாய, அங்கே... எதிர்சீட்டில்... வேறென்ன அழகான பொண்ணுதான். பிங் நிற ஸ்லீவ்லெஸ், நீல நிற ஜீன்ஸ், கொழு கொழுவென்று கொள்ளை அழகாக இருந்தாள், அந்த ரயில்பெட்டியில் அவள் புன்னகையை கண் தெரியாத ரிமோட் கவர் வியாபாரி தவிர அனைவருக்குமே பிடிக்கும். ஒரே ஒரு ஃபீலிங், பொண்ணு பக்கத்துல அவங்க அப்பா உட்கார்ந்திருந்தார். கொஞ்சி கொஞ்சி பேசிய அவளுடைய தமிழ் போதி தர்மருக்கே தானொரு தமிழனென்ற திமிரைத் தரும்.

நானும் சிவாவும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த நிமிடத்தில் செய்தித்தாளில் இருந்த பால் விலை உயர்வு செய்தி கூட எங்களை பதறடிக்கவில்லை. அவள் என் செய்தித்தாளின் பின்புறமிருந்த மன்மோகன் சிங்கை தந்தையிடம் காட்டி ஹர்பஜன் சிங் என்று சொல்ல, எனக்கு குபீரென்று சிரிப்பு பொங்கியது. அதே சமயம், “பிரபாகரா... இதாண்டா சான்ஸ் கோல் போட்ரு...” என மனசாட்சி சொல்ல, அவங்க அப்பாவை முந்திக்கொண்டி அவளுக்கு விளக்கம் கொடுத்தேன்.

சிவா பக்கமிருந்து ஏனோ கருகிய வாடை வீசியது. ஐ டோன்ட் கேர். நானும் செய்தித்தாளில் இருந்த மன்மோகன் சிங் மாதிரி என் விளக்கத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அவளோடு பேசலானேன். அவளும் என்னைப் பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டாள். முன்பின் தெரியாத ஒருத்தியிடம் என்னைப் பற்றிய விவரங்கள் ஒன்றுவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவள் பெயரை கேட்டேன், பதிலேதும் சொல்லாமல் தந்தையின் முகத்தை பார்த்தாள். “அடிப்பாவிகளா... இந்த பொண்ணுங்க எல்லாரும் ஏண்டி இப்படி இருக்கீங்க...” என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். அவள் தந்தை பர்மிஷன் கொடுப்பது போல ஒரு பார்வை பார்க்க, “ஜனனி...” என்றாள். இப்போது பேக்ரவுண்டில் இளையராஜா தாய் மூகாம்பிகை படப்பாடலை பாடிக்கொண்டிருந்தார். அவள் என்னுடைய பெயரை கேட்காதது செம பல்பு. ஆனாலும் நாங்கள் பேச்சை நிறுத்தவில்லை. பக்கத்திலிருந்து சிவா அவ்வப்போது கோல் போட முயன்றுக்கொண்டிருந்தான். ஆனால் அவளுக்கு என்னிடம் பேசுவதில்தான் ஈடுபாடு. 

தாம்பரம் வந்ததும் என் பக்கத்தில் இருந்தவர் இடத்தை காலி செய்ய, அவள் அங்கே உட்கார விரும்புவதாக கோரிக்கை வைத்தாள். பெயர் சொல்லவே யோசித்தவள் பக்கத்தில் உட்கார விழைவது அதிசயம்தான். அப்புறம்தான் அவள் என் பக்கத்தில் உட்கார விரும்பவில்லை, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க விரும்பியிருக்கிறாள் என்று உணர்ந்துக்கொண்டேன். இப்பொழுது என் மனதிற்கு நெருக்கமாக அவள் அமர்ந்திருந்தாள். ஸ்டேஷன்கள் கடந்துக்கொண்டிருந்தது. அவளருகில் இருந்ததினால் சாதா ரயில் கூட மெட்ரோ ரயில் வேகத்தில் பயணிப்பதாக தோன்றியது. 

இன்னும் சில நிமிடங்களில் பிரியப் போகிறோம். அவள் முகத்திலும் அதே கவலை தெரிந்தது. திடீரென என் செல்போன் அலற, அந்த சில நிமிடங்களையும் கெடுக்க நினைத்த பாவியை கடிந்துக்கொண்டு கட் பண்ணினேன். அடுத்த நிமிடமே போன் செய்த அந்த பாவியிடம் மனதளவில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது. என் போனை பார்த்தவள், “உங்க நம்பர் என்ன...?” என்று அழகு தெறிக்க கேட்டாள். இந்தமுறை இளையராஜா மியூசிக். ஸ்தம்பித்தபடி நானிருக்க, சிவா என்னை உலுக்கி, “மாப்ள... கேக்குறால்ல குடுறா...” என்றான். நான் வாயெல்லாம் பல்லாக அவளுக்கு பதில் சொல்ல, அவள் தந்தையின் பாக்கெட்டில் இருந்து பேப்பர், பேனா எடுத்து குறித்துக்கொண்டாள். சில நொடிகள் மெளனத்திற்குப்பின் “உன் நம்பர் தரமாட்டியா...?” என்று வழிந்தேன். “ம்ம்ம் என்கிட்ட செல்போன் இல்லை... எங்கப்பா நம்பர் தர்றேன் நோட் பண்ணிக்கோங்க...” என்று கொஞ்சலாக சொன்னாள். அவள் சொன்ன நம்பர் சிவா காதில் விழுந்துவிடக்கூடாதென சிவபெருமானை வேண்டிக்கொண்டேன். இந்த நொடி வரைக்கும் அவள் என் பெயரை கேட்காதது புரியாத புதிராகவே இருந்தது. பெயரே தெரியாமல் போன் நம்பர் வாங்கி வைத்திருக்கிறாளே... என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

ரயில் தன்னை பரனூர் ஸ்டேஷனில் நுழைத்துக்கொண்டிருந்தது. “போலாமா ஆபீசர்...” என்று சிவா என் தோளை தட்டி நக்கலடிக்க பல்லைக்கடித்துக்கொண்டு எழுந்தேன். என் அசட்டு புன்னகையை அவளுக்கு பரிசளித்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கினேன். ரயில் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது. இனம் புரியாத சோகத்துடன் அவளைப் பார்த்து கையசைத்தேன். அவளும் பதிலுக்கு கையசைத்தாள். ரயில் என் கண்ணில் இருந்து மறையும் வரை கையசைத்துக்கொண்டிருந்தாள். 

ஜனனி... மறக்கக்கூடிய பெயரா அது...? அவள் முகம்... அந்த கண்கள்... பப்ளிமாஸ் கன்னங்கள்... எல்லாம்தான் எத்தனை அழகு... அவளுடைய கொஞ்சல் குரல்... அவளுடைய முகபாவனைகள்... அடடா, அதிலும் அவள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறிச் சொன்ன அந்த ரைம்ஸ்... ச்சே சான்ஸே இல்லை நாலு வயது எல்.கே.ஜி பெண்ணிடம் இவ்வளவு அறிவா...? என்று அவள் அழகையும் அறிவையும் நினைத்து இன்னும் இன்னும் இன்னும் வியந்துக்கொண்டிருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 November 2011

நித்யா – சிறுகதை முயற்சி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்த அலுவலகத்தின் வரவேற்பறையில் தபு சாயலில் இருந்த ரிசப்ஷனிஷ்டை தவிர நானும் அவளும் மட்டுமே அமர்ந்திருந்தோம். அவளும் என்னைப்போலவே பணியில் சேரத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும்போதே “கண்ணா... லட்டு தின்ன ஆசையா...” என்று மனதிற்குள் மணியடித்தது. பெயர் நித்யா. சுமாரான கலர்தான். ஆனால் ஷார்ப்பான கண்கள், லிப்ஸ்டிக் போடாமலே இளஞ்சிவப்பு வண்ணம் கொண்ட உதடுகள், சுருள் சுருளாக படர்ந்த தலைமுடி என்று கொள்ளை அழகாக இருந்தாள். மாடர்ன் டிரஸ் அணிந்தால் இன்னும் அழகாக தெரிவாள். ஆமாம், இந்த காலத்துல சப்பை ஃபிகரையே எவனும் விட்டுவைக்க மாட்டேங்குறான். கண்டிப்பா இவளுக்கு ஒரு காதலனாவது இருப்பான் என்று பெருமூச்சு விட்டபோது, போன் ரீசிவரை காதில் வைத்தபடி “Now both of you can go and meet your manager” என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொன்னாள் ரிசப்ஷனிஷ்ட்.

மேனேஜருக்கே உரிய வழுக்கையுடன் வரவேற்றார் அந்த மனிதர். எங்களை மற்ற ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு பெரிதாக சிரித்தார். எல்லா முகங்களுமே அன்னியமாய் தெரிந்தன நித்யாவின் முகம் தவிர. எங்களுக்கு எதிரெதிர் கேபின் அமைந்தது. இருவரும் அவரவர் கணினியைப் பார்க்கும் நேரத்தை விட, என் முகத்தை அவளும், அவள் முகத்தை நானும் பார்த்த நேரமே அதிகம் இருக்கும். நிறைய பேசுவாள். ஆனால் அவள் குடும்பம், அவங்க வீட்டு நாய்க்குட்டி, டைரிமில்க் சாக்லேட், சூர்யா, ஜோதிகா இதைத்தாண்டி எதுவும் பேசமாட்டாள். நான்தான் கடாஃபி, ஒபாமா, inflation, corruption’ன்னு ஏதோ உலக பொருளாதாரத்தை தூக்கி நிருத்துவறனாட்டம் மொக்கை போட்டுக்கொண்டு இருப்பேன்.

நாளடைவில் இருவருக்கும் வேலைப்பளு அதிகமாகி பேச்சுவார்த்தை குறைந்திருந்தது. லஞ்ச் டைமில் அவள் அம்மா சமைத்த உருளைக்கிழங்கு பொரியலுடன் சேர்த்து கொஞ்சூண்டு பேச்சையும் பரிமாறுவாள். மற்றபடி அலுவலக நேரத்தில் உச்சக்கட்ட டென்ஷனில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது வந்து ஏதாவது சந்தேகம் கேட்டு நச்சரிப்பாள். ஆரம்பத்தில் நானும் அவளுடைய வேலைகளை இழுத்துப் போட்டு செய்தேன். பின்ன, சாதாரண அழகியா அவள். அவளுக்காக இதுகூட செய்ய மாட்டேனா. ஆனால் நாளடைவில் இதையே சாக்காக வைத்து பாதி வேலையை என் தலையில் கட்ட ஆரம்பித்துவிட்டாள். சமயங்களில் எரிச்சலாக வரும். அவள் “ப்ளீஸ்டா...” என்று உதடு குவித்து கேட்கும்போது அத்தனையும் பறந்துபோகும்.

மேனேஜரிடம் அத்தனை வேலையையும் அவளே செய்ததாக சொல்லுவாள். நான் மனதிற்குள் நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்வேன். இப்படி ரொம்பவும் மெனக்கெடாமல் சம்பளம் வாங்குபவள் சந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் மாதிரி இருப்பாள். என்னடா ஆச்சு’ன்னு இயக்குனர் சேரன் மாதிரி பரிவாக கேட்டால் தலைவலி, வயித்துவலின்னு பொய்க்காரணம் சொல்வாள். அதற்கு மேல் அவள் பர்சனல் விஷயங்களில் தலையிட நான் யார்...? அடிக்கடி லீவ், அரைநாள் பர்மிஷன் என்று ஓபியடிக்க தொடங்கினாள். வேலை பிடிக்கலையாடி என்று கேட்டால் அடுக்கடுக்கான காரணங்கள் சொல்லி சலித்துக்கொள்வாள். இத்தனைக்கும் வீட்டில் இரண்டு மூத்த சகோதரிகள் போதாத குறைக்கு அம்மாவும் இருக்கிறார். நிச்சயம் வீட்டில் இவளுக்கு ஒரு வேலையும் இருக்காது என்று எண்ணிக்கொள்வேன்.

அதற்கு மேல் அவளை சமாதானப்படுத்த எனக்கு பொறுமையில்லை. வேலைப்பளு இன்னும் அதிகமாக ஆரம்பித்தது. அடுத்த இரண்டு வாரத்திற்குள் அந்த ப்ராஜெக்டை முடித்தாக வேண்டும். நைன் டூ ஃபை ஆபீஸ் ஹவர்ஸ் என்ற லாஜிக் மறந்துபோக தொடங்கியிருந்தது. இப்போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் கூட கிடைப்பதில்லை. பசிக்கும்போது கேண்டீனில் ரெண்டு சமோசா, ஒரு கோக் அவ்வளவுதான். 

ப்ராஜெக்ட் டெட்லைன் முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்க, கருமமே கண்ணாக வேலை செய்துக்கொண்டிருந்தேன். சீனியர் ப்ரோக்ராமர் முகிலன் என்னைப் பார்த்து சிரித்தபடி “என்னடா இந்தமுறை Employee of the month ஆகாமல் விடமாட்ட போல இருக்கே...” என்றார். என் முகத்தில் பெரிதாக மாற்றம் காட்டவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தமாதிரி பத்து பேராவது சொல்லியிருப்பார்கள். அடுத்த இரண்டு நாட்கள் அல்லும் பகலுமாக வேலை செய்ததில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்திருந்தது. மேனேஜர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எனக்கும் தான். ஏதோ ஸ்கூல் டீச்சரிடம் வெரி குட் வாங்கிய எல்.கே.ஜி பையன் மாதிரி அகமகிழ்ந்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில் அலுவலகமே ஆர்ப்பாட்டமாக இருந்தது. வழக்கமான நடக்கும் மாதாந்திர மீட்டிங்குக்குத்தான் அத்தனை ஆர்ப்பாட்டம். எம்.டி முன்னிலையில் கிளார்க் அந்த மாதத்தின் நிதி அறிக்கையை வாசித்தார். அலுவலகத்தின் அந்த மாதத்தின் செயல்பாடுகள் பற்றியும் அடுத்த மாதத்தின் செயல்திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. இறுதியாக Employee of the month அறிவிக்கும் நேரம் வந்தது. என்னை அறியாமல் எழுந்து முன்னே செல்வதற்கு என் கால்கள் தயாராகின. போட்டோவிற்கு எப்படி சிரிக்க வேண்டுமென என் உதடுகள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தன. அடுத்த கனம், அதிர்ச்சி. எம்.டி உதடுகள் உச்சரித்தது என் பெயர் இல்லை. யாரோ ஒரு பெண் முன்னேறிச் செல்ல அனைவரும் கைதட்டுகிறார்கள். யாரது...? என் கண்களை நம்ப முடியவில்லை. அது நித்யாவே தான். அவள் எம்.டி கையிலிருந்து பரிசுப்பொருளை வாங்கியது என் கையில் இருந்து பிடுங்கியது போல இருந்தது. மீட்டிங் நிறைவடைய அனைவரும் அவரவர் இடத்திற்கு திரும்பினோம்.

என் மனம் முழுவதும் ஏமாற்றமே நிறைந்திருந்தது. எனக்கு அந்த பெருமை கிடைக்கவில்லை என்பதைவிட அவளுக்கு கிடைத்தது என்பதே அதிக ஏமாற்றம். அவள் மீது கோபமும் பொறாமையும் பொங்கி வழிந்தது. சுற்றியிருந்த யாரும், ஏன் முன்னால் இருந்த கணினி உட்பட எதையுமே பொருட்படுத்தாமல் நான் ஸ்தம்பித்திருந்தேன். ஒரு கனம் யாரோ உரக்கப்பேசுவது என் காதில் விழுந்தது. திரும்பிப்பார்த்தேன். கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வழக்கமாக வெட்டியாக நேரத்தை கடத்தும் நித்யா அந்த ஜூனியர் பையனுக்கு ஏதோ சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நம்பிக்கையும் பெருமையும் தெரிந்தன. அவள் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அடுத்தடுத்து மும்முரமாக வேலை செய்துக்கொண்டிருந்தாள். பின்னாலிருந்து யாரோ என் தோள் பட்டையில் கை வைப்பது போல தெரிந்தது. நான் திரும்பிப்பார்த்தபோது என் மேனேஜர் என்னைப்பார்த்து மெலிதாக புன்னகைத்தார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment