Showing posts with label post. Show all posts
Showing posts with label post. Show all posts

9 July 2013

ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது ஒரு மாலை நேரம். வெறுமனே மாலை நேரம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. கார்மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதற்காக காத்திருந்த மிக மிக ரம்மியமான மாலைப்பொழுது. அலுவலகத்தில் அரக்க பறக்க மின்னஞ்சலொன்றை தட்டச்சிக் கொண்டிருந்தேன். இதை மட்டும் அனுப்பி முடித்துவிட்டால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் முந்தானை முடிச்சு சீரியல் பார்க்கலாம், ஜொள்ளு வடிய வடிய சேட்டுக்கடை ஜிலேபி இரண்டை உள்ளே தள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக ரமாவின் தினசரி வசையருவியிலிருந்து தப்பிக்கலாம். “ஸ்லர்ப்” – அன்றைய தினத்தின் ஆறாவது டீயின் கடைசி மடக்கை குடித்தேன், கூடவே மின்னஞ்சலையும். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியேறத் தயாரானேன். ரிசப்ஷனில் பாலா தன்னுடைய கணினித்திரையில் எதையோ வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியுடன் எழுந்து நின்றாள். நான் அவளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தப்பித்தவறி அவள்மீது பார்வை பட்டுவிட்டால் ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் படுத்தியெடுத்து விடுவாள் ராட்சசி. இருப்பினும் அவளைக் கடந்துவந்த பின், பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

Thanks: gapingvoid.com

பாலாவை காணத்தவறிய விழிகளின் மீதுள்ள கோபத்தை பைக்கின் கிக் ஸ்டார்ட்டர் மீது காண்பித்தேன். அது உறுமியபடி வேகமெடுத்தது. அதிகபட்சம் இரண்டு சிக்னல்களை கடந்திருக்க மாட்டேன், ஒரு கவிதைத்துளி என் மீது சிந்திய உணர்வு. அதெல்லாம் இருக்காது என்றெண்ணியபடியே வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அடுத்ததடுத்து கவிதைத்துளிகள் என்னை சீண்டிக்கொண்டிருந்தன. சில நிமிடங்களில் வானிலிருந்து அதீத கவிதைகள் பொழிய ஆரம்பித்தன. ஆம், பெருமழை. அடடே முந்தானை முடிச்சு பார்க்க முடியாதே ! ம்ம்ம் பரவாயில்லை ரமாவிடம் கதை கேட்டுக்கொள்ளலாம். மொத்தமாக நனைந்து முடிவதற்குள் டீக்கடையின் ஓரமாக வண்டியை செலுத்திவிட்டு ஒதுங்கினேன்.

அது நாயர் டீக்கடை என்று சொன்னால் க்ளேஷேவாக இருக்கும். தாராளமாக நின்றால் ஐந்து பேர் நிற்கக்கூடிய அந்த டீக்கடையின் வெளிப்பகுதியில் மழையின் காரணமாக சுமார் இருபது பேர் நின்றுக்கொண்டிருந்தோம். அதாவது அடைந்திருந்தோம். நான்கைந்து ஐ.டி. பணியாளர்கள், ஒருவன் கையில் டீ கிளாஸும் ஒருத்தியின் விரலிடுக்கில் கிங்ஸும் அகப்பட்டது. ஒரு தாத்தா அவருடன் அழைத்து வந்திருந்த சிறுமிக்கு ஜாம் பன் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அது அவரை சட்டை செய்யாமல் குர்குரே கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. ஒருத்தி சுற்றியிருந்த காடா துணிக்கிடையே இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது. அவளுடைய ஸ்கூட்டி என்னுடைய ஸ்ப்ளெண்டருடன் சேர்ந்து நனைந்துக்கொண்டிருந்தது. எனக்கு எதிரில் ஒருத்தன் வாழைக்காய் பஜ்ஜியை தினத்தந்தியில் வைத்து பிதுக்கி கொடுமைபடுத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்த எனக்கு சற்றே அயர்ச்சியான காரணத்தினால் “மாஸ்டர்... ஒரு டீ...!” என்று அலறினேன்.

பட உதவி: கூகிள்
டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம். என்னுடைய நினைவுக்குவியலிலிருந்து அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான் தேன்மொழியிடமிருந்து கஜூராவை அபகரித்துத் தின்ற காட்சியை “சார்... டீ...” என்ற பாழாய்ப்போன மாஸ்டரின் குரல் கலைத்து தொலைத்தது.

ஒரு கையில் டீ கிளாஸை வாங்கியபடி மறு கையில் கஜூரா ஒன்றினை எடுத்து வாயில் வைத்தேன். அய்யுய்யோ ! நான் கஜூராவையா சாப்பிடுறேன்... கடவுளையே சாப்பிடுறேன். நான் கடைசியாக கஜூரா சாப்பிட்டது எப்போது என்று நினைவில்லை. ஆனால் நிச்சயமாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். கஜூரா சாப்பிடுவதில் ஒரு மிகப்பெரிய நன்மை உள்ளது. வயிறு துரிதமாக நிரம்பிவிடும். கஜூராவை கடித்தபடியே உலகத்தைப் பற்றி சிந்திக்க துவங்குகிறேன். உலகம் ஏன் கஜூராவைப் போல சதுரமாக அல்லாமல் போண்டாவை போல உருண்டையாக இருக்கிறது. ஆனால் அத்தகைய உலகத்தில் வாழக்கூடிய வாழ்க்கை மட்டும் போண்டாவை போல மென்மையாக அல்லாமல் கஜுராவைப் போல கடினமானதாக இருக்கிறதே ! போண்டாவின் சுவை போண்டாவில் இல்லை, அதன் இடையிடையே தென்படும் மிளகில் தான் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அதுபோலத்தான் கஜூராவும். கஜூராவின் சுவை கஜூராவில் இல்லை, அதனை மெல்லும் வாயில்தான் இருக்கிறது. அடுத்ததடுத்து கஜூராக்களை லபக்கிக்கொண்டிருந்தேன். கடைசியாக ஒரேயொரு கஜூரா மட்டும் பலகார பலகையில் எஞ்சியிருந்தது.

பட உதவி: கூகிள்
ஒரு புதிய மனிதர் டீக்கடைக்குள் நுழைகிறார். உடைந்து விழுந்து விடுவாரோ என்று அச்சப்படுகின்ற வகையில் ஒல்லியான தேகம், வழுக்குப்பாறை போன்றதொரு சொட்டைத்தலை, தன்னுடைய அளவிற்கு பொருந்தாத முழுக்கை சட்டை, பாலைவனச்சோலை காலத்து பேண்ட், கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை. கணநேரம் கஜூராவை மறந்து கண்ணசைக்காமல் அந்த மனிதரை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன வாங்க வந்திருப்பார் ? மாஸ்டரிடம் ஒற்றை விரலைக்காட்டி சைகையில் ஏதோ சொன்னார். ரெகுலர் கஷ்டமராக இருக்கக்கூடும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அது புகையை கக்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவர் சைகையில் குறிப்பிட்ட பானம் அவருடைய கைகளுக்கு வந்தது. அது டீ ! டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்தார். அதுவே சில நிமிடங்களுக்கு தொடர்ந்தன. சிகரெட் தன்னுடைய கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. திடீரென ஒரு சுதாரிப்பு. நான் ஏன் அவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் ? உண்மையில் எனக்கு என்ன பிரச்சனை ? ஏதோவொரு உண்மை உரைக்க அவர் மீதிருந்து என்னுடைய பார்வையை விலக்கிக்கொண்டேன். கடைசி கஜூராவை எடுக்க கையை நீட்டினேன். என்னை முந்திய ஒரு கை அதனை அபகரித்துவிட்டது. அது அவருடைய கை. அவருக்கும் கஜூரா பிடிக்கும் போலிருக்கிறது. வந்த கோபத்திற்கு அவரை நாலு மிதி மிதிக்கவேண்டும் போல தோன்றியது. எனக்கொரு தேன்மொழி இருந்தது போல அவருக்கொரு கனிமொழி இருந்திருக்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மழை குறைந்திருந்தது.

சாலையில் வாகனங்கள் நகர ஆரம்பிக்கின்றன. நான் என்னுடைய நந்தவனத்தேரை நகர்த்தி அதன் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முற்படுகிறேன். அதற்குள் பாலைவனச்சோலை கடைசி கஜூராவை விழுங்கிவிட்டு அவருடைய வாகனத்தை எடுக்கிறார். அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி. அவர் என்னைக்கண்டு லேசாக புன்னகைக்கிறார். கஜூராவை அபகரித்ததற்காக மன்னிப்பு கேட்கும் புன்னகை. புது உற்சாகத்துடன் வண்டியை கிளப்பி வேகமெடுக்கிறேன். அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு எனக்கு நேரெதிர் திசையை நோக்கி தன்னுடைய பயணத்தை துவங்குகிறார். சிறு தூறலுக்கிடையே தொடர்கிறது எங்கள் பயணம்... சாலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூட !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment