Showing posts with label புத்தகக் கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தகக் கண்காட்சி. Show all posts

12 January 2013

புத்தகக் காட்சி புலம்பல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல புத்தகக் காட்சி ஆரம்பித்துவிட்டாலே கம்யூனிச சிந்தனை, சமூகக் கோபம், அறச்சீற்றம் எச்சச்ச கச்சச்ச இவையெல்லாம் எங்கிருந்தோ பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.


புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ புத்தகக் காட்சி ஆரம்பித்தவுடன் முதல்நாள் முதல்காட்சி சினிமா ரசிகன் போல முண்டியடித்துவிட வேண்டுமென்று எனக்கொரு கோட்பாடு. எனினும் அன்றாட அக்கப்போருகள். வாரநாட்களில் என்னுடைய இயந்திரம் என்னை எங்கேயும் அனுமதிப்பதில்லை.

இன்று காலை வெள்ளென வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டேன். கடந்த வாரம் ஏற்பட்ட சிறிய விபத்தொன்றின் காரணமாக அரை நிஜார் அணிந்து செல்ல வேண்டிய சூழல். (விபத்து என்றதும் வாசகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் :) ). பபாசியில் அரை நிஜாரை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. பச்சையப்பாஸ் எதிரே நடைபெற்ற வரையில் போக்குவரத்து சுமூகமாகவே இருந்தது. நந்தனம் என்றால் திருவொற்றியூரிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.கூகுள் மேப்ஸ் வேறு YMCA ராயப்பேட்டையில் இருக்கிறது என்று சொல்லி குழப்பி வைத்திருந்தது. பிறந்ததிலிருந்து சென்னையில் இருந்துக்கொண்டு YMCA மைதானம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றால் மானக்கேடு. SIET வரை பயணிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதன்பிறகுதான் போக்குவரத்து நெரிசல் விழி பிதுங்கியது. முந்தய புத்தகக் காட்சிகளில் இடம்பெற்றது போல அரங்கு வாயிலில் பழைய புத்தகக்கடைகள் எதுவும் தென்படவில்லை. புறவழியில் வைத்திருக்கிறார்களோ என்னவோ ?

பதினொன்றரை மணிக்கு அரங்கை அடைந்துவிட்டேன். அரை நிஜாருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்ன, சில வயதுப்பெண்கள் ஏதோ சிக்கன் தொடைக்கறியை பார்ப்பதுபோல குறுகுறுவென்று பார்க்கும்போது கூச்சத்தில் நெளிய வேண்டியதாகிவிட்டது.

வழக்கமாக கடை எண் ஒன்றில் தொடங்கி அப்படியே ZIGZAG-ஆக ஒரு வலம் வருவேன். அதேபோல முதல்முறை செல்லும்போது எந்த புத்தகமும் வாங்க மாட்டேன். கடை எண்களை மட்டும் குறித்துக்கொண்டு புத்தகக் காட்சி நிறைவடைவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சென்று வாங்குவேன். இன்றும் அப்படித்தான் தொடங்கினேன். முதலிரண்டு வரிசைகளுமே சுவாரஸ்யக்குறைவாக இருந்தது போல ஒரு எண்ணம். 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி ?, கனவுகளும் பலன்களும், நீங்களும் ஜோசியர் ஆகலாம் போன்ற புத்தகங்களே கண்ணில் பட்டன. அதை விட்டால் இந்திரா செளந்திரராஜன் வகையறா குடும்ப நாவல்கள். சுமார் மூன்று வரிசைகள் கடந்தபின்னர் ஒரு கடையில் சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைத்தன. இந்தமுறை கடை எண்ணை குறித்து வைக்கவில்லை. நம் பதிவர்கள் இருக்கிறார்களே, எமகாதகர்கள். ஆளாளுக்கு ஒரு செட் புத்தகம் வாங்கினால் என்னவாம். சுஜாதா புத்தகங்கள் சல்லிசு விலையில் என்றால் போங்காட்டம் ஆடி மொத்தத்தையும் மூட்டை கட்டிவிடுவார்கள். சென்றமுறை அப்படித்தான் ஏமாந்தேன். அதனால் கையோடு புத்தகங்களை வாங்கிவிட்டேன்.

1. வடிவங்கள் (விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு)
2. 60 அமெரிக்க நாட்கள் (பயண அனுபவம்)
3. டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு (நாடகம்)
4. விபரீதக் கோட்பாடு (நாவல்)
5. 24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்பது முரண்)
6. படிப்பது எப்படி ?
7. சிறுகதை எழுதுவது எப்படி ?

ஏழு புத்தகங்கள் சேர்த்து நூற்றி ஐம்பது ரூபாய். தொடர்ந்து உலவினேன். ஏனோ கூட்டம் அதிகமில்லை. வி.ஐ.பிக்கள், சக பதிவர்கள் யாரும் தென்படவில்லை. கடந்த ஆண்டு, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் பில் கவுண்ட்டரில் சந்தித்த சுமாரான ஃபிகர் இன்னமும் என்னை நினைவில் வைத்து புன்னகைத்துவிட்டு செல்கிறாள்.

நான்கைந்து வரிசைகள் கடந்ததும் ரைம்ஸ் கடை அளப்பறைகள் ஆரம்பமானது. ஆளாளுக்கு ஒரு எல்.சி.டி தொலைகாட்சி வைத்துக்கொண்டு அதில் ஆத்திச்சூடியோ, ஆன்னா ஆவன்னாவோ, டோரா பூஜியோ அலறவிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ஒரு யுவதி தன்னுடைய குழந்தையை வாக்கரில் அமர்த்தியபடி அழைத்து வந்திருக்கிறாள். அது ‘வீல்’ என்று கத்தி கூப்பாடு போடுகிறது. எரிச்சல் அதிகமானது. அந்நேரம் பார்த்து கண்ணில் பட்ட லிச்சி ஜூஸ் சற்று தணியச் செய்தது.

3012ல் உலகம் அழியுமா ?, இஸ்லாம் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கிறது போன்ற குபீர் சிரிப்பை வரவழைக்கும் புத்தகங்கள் கண்ணில் படுகின்றன. இன்னொரு கடையில் பத்து, பதினைந்து ஆபீசர்ஸ் டை கட்டியபடி கிடைக்கிற பெற்றோர்களை பிடித்து மூளைச்சலவை செய்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜ் டிவி கடையில் வைக்கப்பட்டிருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘நாடோடி மன்னன்' டிவிடிக்களையெல்லாம் அள்ளிக்கொண்டு செல்ல வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. அஜித் புகைப்படத்தை அட்டையில் பொறித்த ஐந்து RITZ சஞ்சிகைகளை வாங்கி பையில் சொருகிக்கொண்டேன். பசியெடுக்க ஆரம்பித்தது. ஏறத்தாழ கடைசி வரிசைக்கு வந்திருந்தேன். காட்சிப்பிழை சிற்றிதழில் தேர்ந்தெடுத்து நான்கை வாங்கினேன். சந்தா கட்டிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

வெளியே வந்ததும் குல்பி ஐஸ், ஸ்வீட் கார்ன், வாழைத்தண்டு சூப், ஐஸ்க்ரீம் என்று வரிசையாக கடைகள். சாப்பிட வாங்க என்ற பெரிய ஃபுட் கோர்ட் மாதிரி ஒன்று. உள்ளேயே நுழையவில்லை. மாலையில் சசிகுமார், சமுத்திரக்கனி வருவதாக பேசிக்கொண்டார்கள். அயர்ச்சியாக இருந்தது கிளம்பி வந்துவிட்டேன். மீண்டும் நாளை செல்ல வேண்டும்.

அடுத்து வருவது: கண்ணா லட்டு தின்ன ஆசையா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 January 2012

புத்தகக் கண்காட்சி புலம்பல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


எழுதி போர் அடிக்குது அதான் இந்த ஆடியோ முயற்சி... நீங்க முழுசா கேக்கனுங்கறதுக்காக சொல்லல, ஆடியோவின் கடைசியில் ஒரு பஞ்ச் வச்சிருக்கேன்... கேட்டு பாருங்க...!





என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 February 2011

கொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்ந்தால்...?


வணக்கம் மக்களே...

மீண்டுமொரு நாள் புத்தக சந்தையில் பதிவுலக நண்பர் ஒருவருடன் மேயந்துக்கொண்டிருந்தேன். வானதி பதிப்பகம் வாசலில் நின்று புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று நண்பர் நீங்க, சாண்டில்யனின் கடல்புறா நாவலை படித்திருக்கிறீர்களா...? என்றார். நான் சாண்டில்யனா...? யாருங்க அவருன்னுற மாதிரி பேந்தப் பேந்த முழிச்சேன். அந்த ஜெர்க்கை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஏதோ நான் சாண்டில்யன் ஒருவரது புத்தகங்களைத் தவிர அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவன் போல இல்லிங்களே... என்று நெற்றிச்சுருக்கி பதில் சொன்னேன். சாண்டில்யன் எழுத்துக்களை படிக்காதவனெல்லாம் உயிரோட இருக்குறதே வேஸ்டுன்னு சொல்றா மாதிரி ஏற இறங்க ஒரு லுக் விட்டார்.

அதன்பிறகு அவருக்கே தெரியாமல் சில சாண்டில்யன் நாவல்களை நோட்டமிட்டபடி வந்தேன். ஒவ்வொன்றிலும் மன்னர் காலத்து கதை என்பது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பொதுவாக இந்தமாதிரி நாவல்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஆன்மிக புத்தகமாக இருந்துவிடுமோ என்ற ஐயப்பாடு. நண்பர் பார்த்த பார்வை மனதை பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. சரி, என்ன தான் இருக்கிறதென்று படித்துப் பார்த்துவிடுவோமே என்று எண்ணம் மெலிதாக எட்டிப்பார்த்தது. முப்பதிற்கும் மேற்பட்ட நாவல்களில் எதை வாங்குவது என்று தெரியவில்லை.

மறுபடியும் அந்த நண்பரிடமே சென்று வெட்கத்தை விட்டு சாண்டில்யன் நாவல்களில் எது அருமையாக இருக்கும் என்றொரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியைக் கேட்டேன். அவர் கடல் புறா என்று கையை நீட்டி காண்பித்தார். ஆங்கே உண்மைத்தமிழன் பதிவு சைஸில் மூன்று புத்தகங்கள் இருந்தன. வெளங்கிடும்ன்னு மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஒரு மரியாதைக்காக அந்த மூன்றில் ஒன்றினை கையில் தூக்கிப்பார்த்தேன். என்னுடைய புஜங்கள் இதுநாள் வரை பலமில்லாமல் இருந்ததன் ரகசியம் புரிந்தது. நண்பர் ஜீன்ஸ் போட்டிருந்த பிகர் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த கேப்பில் நைஸாக புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்தேன்.

அடுத்தமுறை சாண்டிலயனைப் பற்றி கொஞ்சம் விக்கிபீடியா பார்த்து தெரிந்துக்கொண்டு மீண்டும் புத்தக சந்தைக்கு சென்றேன். ஓவர் டூ வானதி பதிப்பகம். அடுக்கி வைத்திருந்த நாவல்கள் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்துக்கொண்டிருந்தேன். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் எது குறைந்த விலை, குறைந்த பக்கங்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது சாண்டில்யனின் எழுத்துக்களை ருசி பார்த்துவிடும் முனைப்பில் ராஜ யோகம் என்ற தலைப்பிட்ட நாவலை தேர்ந்தெடுத்தேன்.

அடுத்ததாக சாரு. பதிவுலகை பொறுத்தவரையில் இங்கே சாருவின் சாற்றை ஒருதுளி கூட விடாமல் பிழிந்துக்குடித்தவர்கள் அதிகம். (சாருவையே பிழிந்தவர்கள் அதைவிட அதிகம்). இவ்வாறாக சாருவை ஆராதிக்கும் ஒரு கூட்டமும், சாருவை அசிங்கப்படுத்தும் ஒரு கூட்டமும் இருக்குமிடத்தில் சாருவைப் பற்றி எழுதவே பயமாக இருக்கிறது. ஏனெனில் எனக்கு சாரு பற்றி எதுவும் தெரியாது என்பதே அப்பட்டமான உண்மை.

சாருவைப் பற்றி முதல் முதலாக அறிந்துக்கொண்டது குமுதத்தில் தொடராக வெளிவந்த கோணல் பக்கங்களின் மூலமாகத்தான். நான் படித்த சில எபிசோடுகளும் மது, மாது சார்ந்தவையாகவே இருந்தன. அந்த போதையும் எழுத்துநடையில் இருந்த வசீகரமும் எனக்கு பிடிக்கவே செய்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த புத்தக சந்தையில் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) சாருவின் எழுத்துக்களை இன்னும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கலகம், காதல், இசை என்ற கட்டுரைத்தொகுப்பை வாங்கினேன்.

ஏன் அந்த புத்தகத்தை வாங்கினேன் என்று பின்னாளில் என்னை நானே திட்டிக்கொண்டேன். சத்தியமா சொல்றேன், அந்த புத்தகத்தில் இருக்கும் எதுவுமே எனக்கு புரியவில்லை. ஒருவேளை பின்நவீனத்துவவாதிகளுக்கு மட்டும்தான் புரியுமோ என்னவோ...? அதன்பிறகு அந்த புத்தகத்தை அலமாரியில் இருந்து எடுக்கவே இல்லை. பரிசளிக்கும் சாக்கில் யாருடைய தலையிலாவது கட்டிவிட வேண்டுமென்று உத்தேசம்.

அப்புறம், பதிவுலகம் வந்தபின்பு குறிப்பாக நித்தியானந்தா டிவி சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டிருந்த சமயம் சாருவை நக்கலடித்து ஆங்காங்கே சில பதிவுகள் எழுதப்பட்டு வந்தன. படிப்படியாக மனதில் சாருவின் மீதிருந்த மரியாதை தேய்ந்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது எந்திரன், மன்மதன் அம்பு படங்களின் விமர்சனங்களை படிக்க நேர்ந்தது. அதன்பிறகு சொல்லவே வேண்டும். சாருன்னா யாருன்னு கேட்குற அளவுக்கு மாறினேன்.

என்னதான் நடந்தாலும் ஒருசிலர் சாருவை சிலாகிப்பதை பார்க்கும்போது என்னதான் இருக்கிறது சாருவிடம் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் தேகம் நாவலை வாங்கியிருக்கிறேன். யாரோ ஒருவர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு நாவலைப் படிக்கும்போது எந்தவித எதிர்ப்பார்ப்பும் மனதில் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் மட்டுமே நாவலை முழுமையாக ரசிக்க முடியுமென்று. எனவே எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. யாரிடமும் கருத்து கேட்கவில்லை. கேட்டாலும் தெளிவான விடை கிடைப்பதில்லை. ஒருவர் ராஸ லீலா மாதிரி யாரும் எழுத முடியாதுன்னு சொல்றார். ஒருவர் ஜீரோ டிகிரி தான் சாருவின் மாஸ்டர் பீஸ் என்கிறார். மற்றொருவர் ஜீரோ டிகிரி படித்தால் தலைவலி நிச்சயம் என்கிறார். இப்படியாக சாருவைப் பற்றி தெளிவான எண்ணங்கள் கிடைக்காத நிலையில் எந்தவித எதிர்ப்பார்ப்புக்களுமின்றி தேகத்தில் இருந்து சாருவை படிக்க ஆரம்பிக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 December 2010

34வது சென்னை புத்தகக் காட்சி 2011

வணக்கம் மக்களே...

வாசிப்பனுபவம் வாய்த்த சென்னைவாசிகளுக்கு வருடம்தோறும் திருவிழாவாக வந்து மகிழ்ச்சி தரும் புத்தக்காட்சி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

இடம்:  புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி, (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), சென்னை 600030.
தேதி:   04-01-2011 முதல் 17-01-2011 வரை
நேரம்:  மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை (வார நாட்கள்)
        காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை (விடுமுறை நாட்கள்)

-          அனைத்து புத்தகங்களுக்கும் 10% சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும். அது நமக்கு ஒரு பொருட்டில்லை எனினும் புதியவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அமையட்டும்.
-          சுமார் 650 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
-          இங்கே கிடைக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மற்றும் இன்னபிற மொழி புத்தகங்களும் கிடைக்கும்.
-          சமய புத்தகங்களில் இருந்து சமையல் புத்தகங்கள் வரை எல்லா வகையறா புத்தகங்களும் கிடைக்கும்.
-          இது தவிர்த்து தினந்தோறும் தமிழறிஞர்களின் சொற்பொழிவு நடைபெறும். அதன் அட்டவணை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு: http://bapasi.com/

புத்தக சந்தை குறித்த எனது அனுபவத்துளிகள் சில:
- இது எத்தனையாவது வருடம் என்று சரிவர நினைவுக்கூர முடியவில்லை. ஆனால் புத்தக சந்தை காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்றுவந்த காலம்தொட்டே சென்றுவருகிறேன். அப்பொழுதெல்லாம் ஸ்டால்கள் தமிழக தெருக்களை போல கோணல் மாணலாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இப்போது நடைபெறவிருக்கும் இடத்தில் ஸ்டால்கள் பாண்டிச்சேரி தெருக்களை போல நேராகவும் சீராகவும் இருக்குமென்பது தனிச்சிறப்பு.

- ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை பார்வையிட ஒரு முறை புத்தகங்களை வாங்குவதற்கு ஒரு முறை என்றும் இரண்டுமுறை செல்வேன். இந்தமுறை நான் ஆணிபுடுங்கிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புத்தக சந்தை பத்து நிமிட பயணமே என்பதால் தினமும் கூட செல்லலாம்.

- வருடாவருடம் வாசிப்பனுபவம் வாய்க்காத அதே சமயம் ஆர்வமுள்ள நண்பர்கள் ஒருவருக்காவது புத்தக சந்தையை அறிமுகப்படுத்துவேன். மேலும் அவர்களுக்கு என் சாய்ஸில் ஏதாவதொரு புத்தகத்தை பரிசளிப்பேன். இந்தமுறை யாரை அழைத்துச் செல்வதென்று இதுவரை முடிவு செய்யவில்லை.

- சிற்றிதழ்களை வாங்குவதில் எனக்கு ஒரு அலாதிப்பிரியம் உண்டு. வருடாவருடம் உயிர்மை, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களை தேடித் தேடி வாங்குவேன். இந்த முறை வழமையை விட அதிக அளவில் புத்தகங்கள் வாங்க விருப்பம்.

- கிழக்கு பதிப்பகம், விகடன் பப்ளிகேஷன்ஸ், நக்கீரன் பதிப்பகம் போன்ற கடைகளுக்குள் நுழைந்தால் வெளியே வருவதற்கே மனமிருக்காது. அவர்களும் அதற்கு தகுந்தபடி நான்கு ஸ்டால்களை ஒன்றாக இணைத்து ப்ரைம் ஸ்டால் போட்டு நம்மை மகிழ்விப்பார்கள்.

- சென்ற ஆண்டு புத்தக சந்தைக்கு சென்றபோதே வலைப்பூ வைத்திருந்தேன் என்றாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்த பின்பு காணும் முதல் புத்தக சந்தை இதுதான். எனவே எனது புத்தக தேடல் நிச்சயம் இந்தமுறை புது வகையில் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

- பார்வையாளன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், அஞ்சாசிங்கம் மண்டையன் என்று நிறைய பேரிடம் புத்தக சந்தைக்கு உடன் வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். மேலும் அந்தநாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்.

- என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏனோ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் மீது ஒரு அதீத ஆர்வம் வந்திருக்கிறது. அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மைக்கேல் க்ரிக்டன் புத்தகங்களில் எதையாவது வாங்கிப் படிக்கவேண்டுமென விரும்புகிறேன். அத்தகைய புத்தகம், நமது புத்தக காட்சியில் கிடைக்குமா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

டிஸ்கி: பதிவை படித்துவிட்டு ஓட்டு போட்டு கருத்து தெரிவிக்கும் வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment