Showing posts with label chemistry. Show all posts
Showing posts with label chemistry. Show all posts

10 August 2015

7.83 ஹெர்ட்ஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2015ம் ஆண்டு துவங்கியதிலிருந்து ஜூன் மாதம் வரை இருபது புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன். ஆனால், கிட்டத்தட்ட ஜூன் மாதக்கடைசியில் படிக்கத் துவங்கிய 7.83 ஹெர்ட்ஸை இப்பொழுது தான் முடித்திருக்கிறேன். அதற்கு புத்தகத்தின் தன்மை மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. பணிச்சுமை, குடும்பப் பொறுப்பு, கொஞ்சம் மன அழுத்தம், அது போதாதென்று காரோட்டும் பயிற்சி, திடுக்கென எதிர்ப்புற சாலையிலிருந்து யூ-டர்ன் அடிக்கும் ஷேர் ஆட்டோக்களை சமாளிக்க வேண்டும், ஹாரன் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாலையைக் கடக்கும் எருமைகளை இடிக்காமல் பிரேக் போடவேண்டும், க்ளட்ச்சில் இருந்து காலை எடுக்கும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் இருக்க வேண்டும், மாடு வேற இழுத்துனு போகுது, பாம்பு கழுத்துல ஊருது, பிளாடரை வேற கரெக்டா அமுக்கி கங்கையில தண்ணி வர வைக்கணும், இதுக்கு மேல டயலாக்கும் சொல்லணும்னா எப்படி ?

சுதாகருடைய 6174 எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். சுதாகர் எனக்கும், என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். 6174 படித்த சமயத்தில், நாமளும் எப்படியாவது ஒரு பெரிய ‘சம்பவம்’ செய்யணும் என்ற வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். (இன்னமும் அந்த கங்கு அணையாமல் தான் இருக்கிறது). அவருடைய இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ்.

7.83 ஹெர்ட்ஸ் ஒரு அறிவியல் புனைவு நாவல். ஆனால், கணினி, ரோபோக்கள் என்று இல்லாமல் பயோ-டெரரிஸம், பாலி பாஸ்பேட், ஸை-ஆப்ஸ் (Psyops) என்று வேறு தளத்தில் பயணிக்கும் ஸை-ஃபை !

ஓநாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனைக் கண்டால் விலகிச் செல்பவை. ஆனாலும் அவற்றைக் கொடிய விலங்கு என்றே கருதுகிறோம் என்ற சுவாரஸ்ய வரிகளுடன் தான் நாவல் துவங்கியது. ஆனால், சில பக்கங்கள் தாண்டியதும் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்கான சில காரணங்கள் –

- ஒரு நபர் அல்லது ஒரு இடம் அல்லது ஒரு சம்பவத்தைப் பற்றி படிக்கும்போது அந்த விஷயம் அப்படியே நம் முன்பு காட்சியாக விரிய வேண்டும். 7.83 ஹெர்ட்ஸின் அத்தியாயங்களை அதுபோல என்னால் காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. இதே சிக்கல் எனக்கு 6174ன் பிற்பகுதியிலும் இருந்தது. அது இங்கே பதினெட்டாம் பக்கத்திலேயே துவங்கிவிடுகிறது. 


- ஓவர் டீடெயிலிங்: உண்மையில் சுதாகரின் டீடெயிலிங் பிரம்மிப்பாக இருக்கிறது. அநியாயத்துக்கு தகவல்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார். நிறைய டாபிக்கைப் பற்றி நாவலில் மேலோட்டமாகவே சொல்லியிருந்தாலும் அதற்கான தகவலை சேகரிக்க சுதாகர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. ஆனால், இவ்வளவு டீடெயிலிங் தேவையா ? தொடர்ச்சியாக தகவல்கள், தகவல்கள், தகவல்கள் என்பதே அயர்ச்சி தருகிறது. 

- ஜார்கன்ஸ்: சாமானியர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் எளிமையாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்து. ஐ.சி.பி ஸ்பெக்ட்ரோமீட்டர், ATC ஆக்ஸி டெட்ராசைக்கிள், கேனிட்ஸ் ஜீனோடைப்பிங் என்று புரியாத மொழியில் ஏதேதோ எழுதிக்கொண்டே போகும்போது தொடர்வதற்கு சிரமமாக இருக்கிறது. சுஜாதாவும் ஸை-ஃபை எழுதினார். ஆனால், எல்லோருக்கும் புரியும் மொழியில். பாய்ஸ் படத்தில் நிலநடுக்கம் வந்ததும் எல்லோரும் வீதிக்கு வந்து கூடிப் பேசிக்கொள்வார்கள். அங்கே ஜெனிலியாவின் அப்பாவும் ஒரு காமன் மேனும் ‘ரிக்டர்’ அளவை எப்படி கணக்கிடுவார்கள் என்று பேசிக்கொள்வார்கள். சுஜாதாவின் வெர்ஸடைலிட்டிக்கு அது ஒரு நல்ல உதாரணம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, சுதாகர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் எனக்கு சுத்தமாக ஆர்வமில்லாத சப்ஜெக்ட். அதனாலேயே பல கொட்டாவிகளுக்கு மத்தியில் படிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் தடையில்லாத வாசிப்புக்கு திரும்ப வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment