Showing posts with label sudhakar. Show all posts
Showing posts with label sudhakar. Show all posts

10 August 2015

7.83 ஹெர்ட்ஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2015ம் ஆண்டு துவங்கியதிலிருந்து ஜூன் மாதம் வரை இருபது புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன். ஆனால், கிட்டத்தட்ட ஜூன் மாதக்கடைசியில் படிக்கத் துவங்கிய 7.83 ஹெர்ட்ஸை இப்பொழுது தான் முடித்திருக்கிறேன். அதற்கு புத்தகத்தின் தன்மை மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. பணிச்சுமை, குடும்பப் பொறுப்பு, கொஞ்சம் மன அழுத்தம், அது போதாதென்று காரோட்டும் பயிற்சி, திடுக்கென எதிர்ப்புற சாலையிலிருந்து யூ-டர்ன் அடிக்கும் ஷேர் ஆட்டோக்களை சமாளிக்க வேண்டும், ஹாரன் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாலையைக் கடக்கும் எருமைகளை இடிக்காமல் பிரேக் போடவேண்டும், க்ளட்ச்சில் இருந்து காலை எடுக்கும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் இருக்க வேண்டும், மாடு வேற இழுத்துனு போகுது, பாம்பு கழுத்துல ஊருது, பிளாடரை வேற கரெக்டா அமுக்கி கங்கையில தண்ணி வர வைக்கணும், இதுக்கு மேல டயலாக்கும் சொல்லணும்னா எப்படி ?

சுதாகருடைய 6174 எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். சுதாகர் எனக்கும், என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். 6174 படித்த சமயத்தில், நாமளும் எப்படியாவது ஒரு பெரிய ‘சம்பவம்’ செய்யணும் என்ற வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். (இன்னமும் அந்த கங்கு அணையாமல் தான் இருக்கிறது). அவருடைய இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ்.

7.83 ஹெர்ட்ஸ் ஒரு அறிவியல் புனைவு நாவல். ஆனால், கணினி, ரோபோக்கள் என்று இல்லாமல் பயோ-டெரரிஸம், பாலி பாஸ்பேட், ஸை-ஆப்ஸ் (Psyops) என்று வேறு தளத்தில் பயணிக்கும் ஸை-ஃபை !

ஓநாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனைக் கண்டால் விலகிச் செல்பவை. ஆனாலும் அவற்றைக் கொடிய விலங்கு என்றே கருதுகிறோம் என்ற சுவாரஸ்ய வரிகளுடன் தான் நாவல் துவங்கியது. ஆனால், சில பக்கங்கள் தாண்டியதும் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்கான சில காரணங்கள் –

- ஒரு நபர் அல்லது ஒரு இடம் அல்லது ஒரு சம்பவத்தைப் பற்றி படிக்கும்போது அந்த விஷயம் அப்படியே நம் முன்பு காட்சியாக விரிய வேண்டும். 7.83 ஹெர்ட்ஸின் அத்தியாயங்களை அதுபோல என்னால் காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. இதே சிக்கல் எனக்கு 6174ன் பிற்பகுதியிலும் இருந்தது. அது இங்கே பதினெட்டாம் பக்கத்திலேயே துவங்கிவிடுகிறது. 


- ஓவர் டீடெயிலிங்: உண்மையில் சுதாகரின் டீடெயிலிங் பிரம்மிப்பாக இருக்கிறது. அநியாயத்துக்கு தகவல்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார். நிறைய டாபிக்கைப் பற்றி நாவலில் மேலோட்டமாகவே சொல்லியிருந்தாலும் அதற்கான தகவலை சேகரிக்க சுதாகர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. ஆனால், இவ்வளவு டீடெயிலிங் தேவையா ? தொடர்ச்சியாக தகவல்கள், தகவல்கள், தகவல்கள் என்பதே அயர்ச்சி தருகிறது. 

- ஜார்கன்ஸ்: சாமானியர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் எளிமையாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்து. ஐ.சி.பி ஸ்பெக்ட்ரோமீட்டர், ATC ஆக்ஸி டெட்ராசைக்கிள், கேனிட்ஸ் ஜீனோடைப்பிங் என்று புரியாத மொழியில் ஏதேதோ எழுதிக்கொண்டே போகும்போது தொடர்வதற்கு சிரமமாக இருக்கிறது. சுஜாதாவும் ஸை-ஃபை எழுதினார். ஆனால், எல்லோருக்கும் புரியும் மொழியில். பாய்ஸ் படத்தில் நிலநடுக்கம் வந்ததும் எல்லோரும் வீதிக்கு வந்து கூடிப் பேசிக்கொள்வார்கள். அங்கே ஜெனிலியாவின் அப்பாவும் ஒரு காமன் மேனும் ‘ரிக்டர்’ அளவை எப்படி கணக்கிடுவார்கள் என்று பேசிக்கொள்வார்கள். சுஜாதாவின் வெர்ஸடைலிட்டிக்கு அது ஒரு நல்ல உதாரணம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, சுதாகர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் எனக்கு சுத்தமாக ஆர்வமில்லாத சப்ஜெக்ட். அதனாலேயே பல கொட்டாவிகளுக்கு மத்தியில் படிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் தடையில்லாத வாசிப்புக்கு திரும்ப வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 January 2014

பண்பலை குரல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2004ம் ஆண்டு வாக்கில் சென்னையில் ரேடியோ மிர்ச்சியும் சூரியன் பண்பலையும் அடியெடுத்து வைத்து புகழ் பெற்றிருந்த சமயம். அச்சமயத்தில் பேருந்துகளில், கடைகளில், உணவகங்களில், சிறிய தொலைக்காட்சிகளில் என எங்கும் பண்பலைகள் மயமாக இருக்கும். நிறைய பேர் மிர்ச்சி சுச்சியின் விசிறிகளாகியிருந்தனர், நான் உட்பட. நானெல்லாம் சிறிய ரேடியோ ஒன்றை கையோடு வைத்திருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு கூட எடுத்துச்சென்று திருட்டுத்தனமாக கேட்டது நினைவிலிருக்கிறது. ஞாயிறு தோறும் மாலை ஆறிலிருந்து எட்டு வரை மிர்ச்சியில் டாப் 20 பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதனை எங்கிருந்தாலும் தவறாமல் கேட்டுவிடுவேன். நாளடைவில் வதவதவென நிறைய பண்பலை வரிசைகள் வந்துவிட்டன. தொழில்நுட்பங்களும் நிறைய வளர்ந்துவிட்டதால் பண்பலைகள் மறந்து போயிற்று. எனினும் இன்றளவும் பல சிறிய தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பண்பலையில் பாடல்கள் கேட்டபடியே களைப்பு தெரியாமல் பணிபுரிகிறார்கள்.

என்னுடைய அலுவலகத்தில் பணியாளர்கள் வீடு திரும்ப தினசரி வாடகை சீருந்து வசதி உண்டு. அப்படி நான் பயணம் செய்கிற வண்டியில் எப்போதும் பண்பலை ஒலித்துக்கொண்டிருக்கும். ஆரம்பத்தில் எனக்கும் அது பிடித்திருந்தது. நாளடைவில் தினசரி ஒரே மாதிரியான குரல்கள், ஒரே மாதிரியான பேச்சு, ஒரே மாதிரியான பாடல்கள் என்று சலித்துவிட்டது. ஆனால் வாகன ஓட்டுநருக்கு சலிக்கவில்லை. உண்மையில் அவர் வாகன ஓட்டுநர் மட்டுமல்ல, உரிமையாளரும் கூட. அவருடைய வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டு ரேடியோ பொட்டியை கொஞ்சம் நிறுத்த முடியுமா ? என்று கேட்பது எனக்கு அவ்வளவு நாகரிகமாக படவில்லை. அதுவுமில்லாமல் இரவு பன்னிரண்டு மணி வரை தூக்கத்தை கட்டுபடுத்திக் கொண்டு உழைக்கும் மனிதரிடம் போய் பாடலை நிறுத்துங்கள் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும். அதனால் இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு என்று கேட்டுக்கொள்ள பழகிவிட்டேன். ஆனால் புலம்பலாம் இல்லையா...?

முதலில் ஒரு முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் நான் குறிப்பிட இருக்கின்ற மூவருமே உண்மையில் சிறப்பான வானொலி தொகுப்பாளர்களே. லபோ திபோ என்று கத்துபவர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் மூவரும் ஆயிரம் மடங்கு பரவாயில்லை. இருப்பினும் மோனோடோனஸாக அவர்களுடைய குரல்களையே கேட்டுக்கொண்டிருந்ததின் விளைவே இக்கட்டுரை. உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...!

அன்பான அருண்
தினசரி இரவு பத்திலிருந்து பதினோரு மணிவரை சூரியன் பண்பலையில் ஒலிபரப்பாகும் இனிய இரவு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவருடைய குரல் கேட்டதும் பிடித்துவிடக் கூடியது, கேட்கக் கேட்க பிடிக்காமல் போகக்கூடும். மெட்ராஸ் பவன் சிவகுமார் குரல் போலவே இருக்கும். அருண் ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும். யாரையும் விளையாட்டுக்காக கூட கிண்டலடித்து பேசமாட்டார். தொலைபேசி நேயர்களை லைட்டா கலாய்க்கக்கூட மாட்டார், அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன். வெறுமனே தடவிக்கொடுத்துக்கிட்டே இருந்தா பூனை கூட செத்துப்போயிடும்’ன்னு ஜேஜே படத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல இவருடைய பேச்சை கேட்டால் என்னடா இந்தாளு எப்பப்பாரு கொழைஞ்சுக்கிட்டே இருக்கான்னு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அருணுடைய இன்னொரு சிக்கல் பொதுபுத்தி வார்த்தைகள். அதாவது நிகழ்ச்சியின் இடையில் அருமையான கிளைமேட், மண் வாசனை வீசுற இந்த இனிய இரவு நேரத்துல ராஜா சார் பாடல்களை கேட்குறது ஒரு சுகம்தான்ல்ல...? அப்படின்னு ஒரு ‘ல்ல’ போட்டு கேள்வியா முடிப்பார். உண்மையில் நாம் அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும் அவருடைய கேள்விக்கு ஆம் சொன்னதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.

லவ் குரு
அதே இரவு பத்து மணிவாக்கில் ரேடியோ சிட்டியில் ஒலிபரப்பாகும் லவ் குரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரும் கிட்டத்தட்ட அருண் போல தான். யாருக்கும் வலிக்காமல் பேசக்கூடியவர். எப்போதாவது தொலைபேசி நேயர்களிடம் மட்டும் லைட்டா... ரொம்ப லைட்டா... கிண்டலடிப்பார். அருணுடைய குரல் பதிவர் சிவகுமார் போன்றது என்றால் இவருடைய குரல் நடிகர் சிவகுமார் போன்றது. அதாவது ஒருமாதிரி தழுதழுத்த குரலில் பேசுவார். கெரகம் அவர் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சி அப்படி. தினசரி இரவு யாராவது ஒரு காதலன் / காதலியுடைய உருக்கமான கடிதத்தை ஹஸ்கி வாய்ஸில் படித்துக்காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் தீம். ஆனால் அந்த காதல் கடிதங்களை நிலையத்தினரே உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. நாட்டில் என்ன அத்தனை கிறுக்கர்களா இருக்கிறார்கள்...? மேலும், மனமுதிர்ச்சியடையாத காதலர்களை நன்றாக கிண்டிவிடக்கூடிய அளவில் லவ் குரு என்னைப்பொறுத்தவரையில் ஒரு மோசமான நிகழ்ச்சி. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு ஒலியிடுகை வெளியிட்டேன். மிகவும் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் பேசும் காதல் தோல்வி ஆசாமிகள் எப்படி கனகச்சிதமாக பேசுகிறார்கள்...? தொடர்ந்து கேட்டால் லவ் குரு ஒரு நல்ல ஜோடனை நிகழ்ச்சி என்று தெரிந்துவிடும்.

யாழ் சுதாகர்
அப்படியே இரவு பதினோரு மணியளவில் மீண்டும் சூரியன் பண்பலைக்கு திரும்பினால் யாழ் சுதாகரை கேட்கலாம். ரயில் நிலையத்தில் அறிவிப்பு குரலை கேட்டிருக்கிறீர்களா....? வண்டி எண், செல்லும் இடம், பிளாட்பார எண், புறப்படும் நேரம் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரும். அதுபோல யாழ் சுதாகரின் குரல் டெம்ப்ளேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதில் படத்தின் பெயர், பாடலின் முதல் வரி, பாடகர்கள் பெயர், பாடலின் ராகம் போன்றவற்றை உள்ளீடு செய்கிறார்களோ என்பது என்னுடைய ஐயப்பாடு. பயணிகள் கவனத்திற்கு என்று துவங்கும் சொற்றொடர் நம்மை எவ்வளவு வெறுப்பேற்றுமோ அதற்கு இணையாக வெறுப்பேற்றக்கூடிய சொற்றொடர் நாதகலாஜ்ஜோதி இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில். சூரியன் பண்பலையின் தாரக மந்திரமான கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்ற வரிகளை நம்மாளு தூயதமிழில் பொறுமையாக வாசிக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிடுவார். அடிக்கடி சுதாகர் உச்சரிக்கும் இன்னொரு சொற்றொடர் பழைய பாடல்கள் தங்கம் என்றால் புதிய பாடல்கள் தகரம் என்பேன். அப்படியென்றால் சூரியன் பண்பலையில் நாளின் மற்ற இருபத்தி மூன்று மணிநேரங்கள் ஒலிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும் தகரம் என்று அவரே ஒப்புக்கொள்கிறாரா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment