Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts

10 August 2015

7.83 ஹெர்ட்ஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2015ம் ஆண்டு துவங்கியதிலிருந்து ஜூன் மாதம் வரை இருபது புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன். ஆனால், கிட்டத்தட்ட ஜூன் மாதக்கடைசியில் படிக்கத் துவங்கிய 7.83 ஹெர்ட்ஸை இப்பொழுது தான் முடித்திருக்கிறேன். அதற்கு புத்தகத்தின் தன்மை மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. பணிச்சுமை, குடும்பப் பொறுப்பு, கொஞ்சம் மன அழுத்தம், அது போதாதென்று காரோட்டும் பயிற்சி, திடுக்கென எதிர்ப்புற சாலையிலிருந்து யூ-டர்ன் அடிக்கும் ஷேர் ஆட்டோக்களை சமாளிக்க வேண்டும், ஹாரன் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாலையைக் கடக்கும் எருமைகளை இடிக்காமல் பிரேக் போடவேண்டும், க்ளட்ச்சில் இருந்து காலை எடுக்கும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் இருக்க வேண்டும், மாடு வேற இழுத்துனு போகுது, பாம்பு கழுத்துல ஊருது, பிளாடரை வேற கரெக்டா அமுக்கி கங்கையில தண்ணி வர வைக்கணும், இதுக்கு மேல டயலாக்கும் சொல்லணும்னா எப்படி ?

சுதாகருடைய 6174 எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். சுதாகர் எனக்கும், என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். 6174 படித்த சமயத்தில், நாமளும் எப்படியாவது ஒரு பெரிய ‘சம்பவம்’ செய்யணும் என்ற வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். (இன்னமும் அந்த கங்கு அணையாமல் தான் இருக்கிறது). அவருடைய இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ்.

7.83 ஹெர்ட்ஸ் ஒரு அறிவியல் புனைவு நாவல். ஆனால், கணினி, ரோபோக்கள் என்று இல்லாமல் பயோ-டெரரிஸம், பாலி பாஸ்பேட், ஸை-ஆப்ஸ் (Psyops) என்று வேறு தளத்தில் பயணிக்கும் ஸை-ஃபை !

ஓநாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனைக் கண்டால் விலகிச் செல்பவை. ஆனாலும் அவற்றைக் கொடிய விலங்கு என்றே கருதுகிறோம் என்ற சுவாரஸ்ய வரிகளுடன் தான் நாவல் துவங்கியது. ஆனால், சில பக்கங்கள் தாண்டியதும் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்கான சில காரணங்கள் –

- ஒரு நபர் அல்லது ஒரு இடம் அல்லது ஒரு சம்பவத்தைப் பற்றி படிக்கும்போது அந்த விஷயம் அப்படியே நம் முன்பு காட்சியாக விரிய வேண்டும். 7.83 ஹெர்ட்ஸின் அத்தியாயங்களை அதுபோல என்னால் காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. இதே சிக்கல் எனக்கு 6174ன் பிற்பகுதியிலும் இருந்தது. அது இங்கே பதினெட்டாம் பக்கத்திலேயே துவங்கிவிடுகிறது. 


- ஓவர் டீடெயிலிங்: உண்மையில் சுதாகரின் டீடெயிலிங் பிரம்மிப்பாக இருக்கிறது. அநியாயத்துக்கு தகவல்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார். நிறைய டாபிக்கைப் பற்றி நாவலில் மேலோட்டமாகவே சொல்லியிருந்தாலும் அதற்கான தகவலை சேகரிக்க சுதாகர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. ஆனால், இவ்வளவு டீடெயிலிங் தேவையா ? தொடர்ச்சியாக தகவல்கள், தகவல்கள், தகவல்கள் என்பதே அயர்ச்சி தருகிறது. 

- ஜார்கன்ஸ்: சாமானியர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் எளிமையாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்து. ஐ.சி.பி ஸ்பெக்ட்ரோமீட்டர், ATC ஆக்ஸி டெட்ராசைக்கிள், கேனிட்ஸ் ஜீனோடைப்பிங் என்று புரியாத மொழியில் ஏதேதோ எழுதிக்கொண்டே போகும்போது தொடர்வதற்கு சிரமமாக இருக்கிறது. சுஜாதாவும் ஸை-ஃபை எழுதினார். ஆனால், எல்லோருக்கும் புரியும் மொழியில். பாய்ஸ் படத்தில் நிலநடுக்கம் வந்ததும் எல்லோரும் வீதிக்கு வந்து கூடிப் பேசிக்கொள்வார்கள். அங்கே ஜெனிலியாவின் அப்பாவும் ஒரு காமன் மேனும் ‘ரிக்டர்’ அளவை எப்படி கணக்கிடுவார்கள் என்று பேசிக்கொள்வார்கள். சுஜாதாவின் வெர்ஸடைலிட்டிக்கு அது ஒரு நல்ல உதாரணம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, சுதாகர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் எனக்கு சுத்தமாக ஆர்வமில்லாத சப்ஜெக்ட். அதனாலேயே பல கொட்டாவிகளுக்கு மத்தியில் படிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் தடையில்லாத வாசிப்புக்கு திரும்ப வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 January 2014

பட்டியல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் மூட்டை மூட்டையாக புத்தகங்கள் வாங்கி அவற்றை லிஸ்ட் போடும் ஆசாமி கிடையாது. மிகவும் செலக்டிவ். எனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது, புத்தகங்கள் வாங்குவதில் கூட. புத்தகக்காட்சியை எடுத்துக் கொண்டால், முதலில் ஒருநாள் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாளாக சென்று ஒன்றிலிருந்து தொடங்கி எல்லா கடைகளையும் பார்வையிட்டு ஒரு சுற்று வருவேன். இடையிடையே நல்லதாக ஏதாவது கண்ணில் பட்டால் (புத்தகங்கள் தான்) குறித்து வைத்துக்கொள்வேன். இரண்டாவது நாள், யாராவது ஒரு நண்பருடன் சென்று அவர் புத்தகங்கள் வாங்குவதையும் கையில் எடுத்து பார்த்துவிட்டு நிராகரிக்கும் செய்கைகளையும் மானிட்டர் செய்வேன். அவர் புத்தகங்கள் பற்றி ஏதாவது சொன்னால் அதை வாங்கி காதில் போட்டு வைத்துக்கொள்வேன். மூன்றாவது நாள், காலையிலேயே துரிதமாக சென்று நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த பதிப்பகங்களிலிருந்தும் முக்கியமானவை எனக் கருதப்படும் பதிப்பகங்களிலிருந்தும் விலைப்பட்டியல்களை சேகரிப்பேன். அன்றிரவு எல்லா விலைப்பட்டியல்களையும் ஆராய்ந்து வாங்க வேண்டிய புத்தகங்களை பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல ஷார்ட்லிஸ்ட் செய்வேன். நான்காவது நாளில், பட்டியலிட்ட புத்தகங்களை சமர்த்தாக வாங்கிவிடுவேன். வளவளவென மொக்கை போடாமல் சுருங்கச் சொல்வதென்றால் – புத்தகங்கள் வாங்குவதில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் போல. எல்லா இனிப்பு வகைகளையும் ஒரு டின்னில் கொட்டச் செய்து அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு என்று அசடு வழிவேன்.

அப்படி ஷார்ட்லிஸ்ட் செய்து நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் :-
திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.75
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140
ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் – ரூ.75
புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75
பாம்புத்தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100
இழந்த நாகரிகங்களின் இறவாக்கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145
கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30
கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60
ஒரு சிப்பாயின் சுவடுகளில் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.100
சூப்பர் சுப்பு 3D (இரண்டு கண்ணாடிகளுடன்) – ரூ.200
அலமாரி – மாத இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.50
ஃபெமினா தமிழ் – மாத(ர்) இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.180

கிளம்பிவிடாதீர்கள். பினாமி பெயரில் வாங்கிய பட்டியல் இரண்டு உள்ளன. தோழர் செல்வின் இம்முறை மிகவும் குறைந்த அளவில் புத்தகங்கள் வாங்கினாலும் அறிவியல் சார்ந்த புத்தகங்களாக வாங்கினார்.

அவருடைய லிஸ்ட்:
பூமி எனும் கோள் – ஜார்ஜ் கேமாவ் – தமிழில் தி.ஜானகிராமன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா
எப்போது அழியும் இந்த உலகம் ? – ராஜ் சிவா
விஞ்ஞானத்தில் சில விந்தைகள் – முனைவர் மெ.மெய்யப்பன்
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

சில புத்தகங்களை வாங்கலாம் என்ற ஆவல் இருக்கும், ஆனால் கொள்ளை விலை இருக்கும். அல்லது இதைப்போய் காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும். அல்லது வாங்கியபின் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் நமக்காக வாங்கிக் குவிக்க ஒரு ஆபத்பாந்தவன் இருந்தால் எப்படி இருக்கும்...?

தோழர் ஆரூர் மூனா என் பரிந்துரையின் பெயரில் வாங்கிய புத்தகங்கள் :-
வெள்ளையானை - ஜெயமோகன்
ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
கொசு - பா.ராகவன்
நாயுருவி - வா.மு.கோமு
பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
எட்றா வண்டிய - வா.மு.கோமு
மரப்பல்லி - வா.மு.கோமு
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா.மணிகண்டன்
அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
தண்ணீர் - அசோகமித்திரன்
வெல்லிங்டன் – சுகுமாரன்

பட்டியல் முடிந்தது. அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 23122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டிசம்பர் பத்து தொடங்கி ஒரு வாரத்திற்கு இணையம் வேலை செய்யவில்லை. BSNL அலுவலகத்தை அழைத்தால் சம்பந்தப்பட்ட லைன்மேன் ஊருக்கு போயிருப்பதாகவும் (அதுவும் எங்கே...? சாத்தூருக்கு...!) திரும்பிவர மூன்று நாட்களாகும் என்றும் பதில் வந்தது. ஒருவழியாக அவர் திரும்பி வந்து இணைய கோளாறை சரி செய்துக் கொடுத்த நேரம் புனே பயணத்திற்கு கிளம்ப வேண்டியதாக ஆயிற்று.

இணையம் வேலை செய்யாதது கூட ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்டது. பாரதியார், தலைவர் பிறந்தநாள் தொடர்பான ஜல்லிகளை தவிர்த்தாயிற்று. வருடா வருடம் நடைபெறுகிற கூத்துதான். ஒன்று, பாரதியார் பிறந்தநாளை மறந்துவிட்டு தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூப்பாடு போடும் கூட்டம். இரண்டு, பாரதியார், தலைவர் என இருபெரும் சகாப்தங்கள் அடுத்தடுத்த நாட்களில் பிறந்ததை எண்ணி சிலாகிக்கும் கூட்டம். மூன்று, உண்மையில் பாரதியின் பால் ஈடுபாடு இல்லையென்றாலும் முதல் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க வேண்டி, பாரதிக்கு ஒரு சம்பிரதாய வாழ்த்து சொல்லிவிட்டு தலைவர் பிறந்தநாள் கும்மியடிப்பவர்கள். அப்புறம், வழக்கம்போல தலைவர் சமூகத்துக்காக என்ன செஞ்சு கிழிச்சாரு’ன்னு ஒரு குரூப் கேட்கும். அதுக்கு நடிகரிடம் ஏன் சமூக அக்கறையை எதிர்பார்க்குறீங்க’ன்னு தலைவரின் அடிபொடிகள் கேட்கும். இதுல பியூட்டி என்னன்னா – மத்த லொட்டு லொசுக்கு நடிகர்களிடமெல்லாம் எதிர்பார்க்காத சமூக அக்கறையை ஏன் தலைவரிடம் மட்டும் எதிர்பார்க்கிறார்கள்...? என்ற கேள்விக்கு அவருடைய ரசிகர்களுக்கே மிக நன்றாகத் தெரியும். இருந்தாலும் வேறென்ன செய்வது...? திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கிட்டு இருந்துதானே ஆகணும்...!

ஒரு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு ஆறு நாட்கள் புனே பயணம். மஹாராஷ்திரா, மொழிப்பற்றில் தமிழகத்தை மிஞ்சிய மாநிலம் போல. பெரும்பாலும் கடைகளுடைய பதாகைகளில் மராத்தி மட்டுமே காணப்படுகிறது. ஆட்டோக்களில் எல்லாம் பயங்கர சின்சியராக மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். அதுவும் எப்படி என்றால் மீட்டரில் ஐம்பத்தி நான்கு ரூபாய் காட்டினால் கர்ம சிரத்தையுடன் மீதி ஆறு ரூபாய் சில்லறை தேடித் தருகிறார்கள். அதேபோல மூன்று நபர்களுக்கு மேல் ஏற்றுவதில்லை. பெருநகரம் இல்லை என்பதாலோ என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்து விதிகள் சகஜமாக மீறப்படுகிறது. போகிறபோக்கில் யாருடைய வாகனத்தையாவது தட்டிவிட்டு போனால் ஒரு மன்னிப்பு கூட கேட்பதில்லை. வள்ளுவரின் வாக்குப்படி கண்டபடி துப்பார்க்கு துப்பாய துப்பி வைக்கிறார்கள். துப்புவதில் படித்தவர் / படிக்காதவர், பாலின பேதமெல்லாம் கிடையாது. நிறைய மல்டிப்ளக்ஸ்கள் உள்ளன. ஆனாலும் சினிமாப்பட போஸ்டர்களை பார்க்க முடிவதில்லை. 

வந்ததுக்கு ஏதாவதொரு லோக்கல் திரையரங்கில் படம் பார்க்கலாம் என்றால் எங்கு பார்த்தாலும் சன்னி லியோனின் ஜாக்பாட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நஷா’ கண்ட வரலாறு நமக்கிருந்தாலும் போனது உறவினர் வீட்டுக்கு என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியதாக போய்விட்டது. வெள்ளி வரை காத்திருந்து அப்சரா சினிமாஸில் தூம் 3 பார்த்தேன். பக்கா லோக்கல் தியேட்டர். ஹிந்தியில் டிக்கெட் விலை எழுதியிருந்ததை பார்த்துவிட்டு ஒரு நைண்டி ருபீஸ் டிக்கெட் என்று நூறு ரூபாயை நீட்டினேன். டிக்கெட்டுடன் மீதி ஐம்பது ரூபாய் கிடைத்தது. என்னடா இது என்று பார்த்தால் ஹிந்தியில் ஐம்பதைத் தான் தொண்ணூறு போல எழுதுகிறார்கள். அரங்கில் படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் போடுகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் எந்தவித கிண்டலோ கேலியோ இல்லாமல் அனைவரும் எழுந்து அட்டேன்ஷனில் நிற்கிறார்கள். தேசிய கீதம் முடிந்ததும் ‘பாரத் மாதாகி ஜே’ என்று கோஷம் எழுப்பிவிட்டு சமத்தாக அமர்ந்துக்கொண்டார்கள். தூம் 3யில் தம், தண்ணி காட்சிகள் இல்லாததால் முகேஷ் ஹரானே செய்திப்படம் காட்டவில்லை.

ஏற்கனவே தூம் வரிசை படங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்ததால் படம் எப்படியிருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பிற்கு எந்த ஏமாற்றமும் கொடுக்காமல் அமீர் கான் மூன்று காட்சிகளிலும் அபிஷேக் ஒரு காட்சியிலும் முறையே பைக், ஆட்டோ வைத்து கொரளி வித்தை காட்டுகிறார்கள். அமீருடன் ஒப்பிடும்போது அபிஷேக் வேடம் மிகவும் டம்மி போல தெரிகிறது. கத்ரினா கைப் அமீர் கானை முன்னே உட்கார வைத்துவிட்டு ஒரு ஸ்ட்ரிப் டீஸிங் பாணி நடனமாடுகிறார் பாருங்கள்... அபாரம்...! இருந்தாலும் பிபாஷா பிசாசு இல்லாதது வருத்தம் தான். ஓரளவுக்கு உடல்மொழியை வைத்து ஹிந்தி வசனங்களை புரிந்துக்கொண்டாலும், உதய் சோப்ரா அடித்த சோக்குகள் எதுவும் புரியவில்லை. சும்மா ஹிந்திக்காரர்களுடன் சேர்ந்து கடமைக்கு சிரித்து வைத்தேன். படம் முடிந்து வெளிவந்தபோது அடுத்த காட்சிக்கு பேய்க்கூட்டம் கூடியிருந்தது. படம் சூப்பர்ஹிட் போல.

பயண நேரத்தில் படிப்பதற்கென சுதாகரின் 6174 எடுத்துச் சென்றிருந்தேன். நாவலை வெறுமனே படிக்க முடியவில்லை. படிக்கும்போதே குறைந்தபட்சம் ஐம்பது விஷயங்களையாவது கூகுள் செய்யவேண்டும் போலிருக்கிறது. சில விஷயங்களை உள்வாங்கும்பொருட்டு மறுமுறை படிக்க வேண்டும். படித்துவிட்டு அதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.

அதற்கு முன்பு ஒரு சம்பவம். 6174 படித்துவிட்டு தோழர் சிங்கம் என்னிடம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி நாவல் குறித்த ப்ளாட் சொன்னார். என்னுடைய நேரம், நான் அப்போது 6174 படித்திருக்கவில்லை. படித்தபின்பு சிங்கம் சொன்ன கதையும் 6174 கதையும் நிறைய இடங்களில் ஒரே மாதிரியாக இருந்தது. ஒருவேளை சிங்கம் அக்கதையை நாவலாக்கினால் அது 6174-ன் காப்பியாகவே காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அவருடையது 6174-ஐ விட அட்டகாசமான கதை. அடுத்தடுத்த ஸ்டோரி டிஸ்கஷன் சிட்டிங்குகளில் கலந்துக்கொண்டு அக்கதையை மென்மேலும் மெருகேற்ற வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 November 2013

வில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பீட்ஸா பாகம் 2 என்ற பெயருக்கு பின்னாலிருக்கும் அரசியலை சில மாதங்களுக்கு முன்பாகவே கேபிள் சங்கர் மூலமாக அறிந்துக்கொள்ள முடிந்தது. வில்லா படத்திற்கு பீட்ஸாவின் பெயரை சூட்டுவதை கார்த்திக் & தீபன் இருவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தவொரு நல்ல படைப்பாளியாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வியாபாரி...? அதுதான் நடந்திருக்கிறது. படத்தின் ட்ரைலரில் “இது சீக்வலா...?” என்று ஒரு கதாபாத்திரம் கேட்க, “இல்ல சார், டோட்டலா வேற கதை” என்று கதாநாயகன் வாயிலாக மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார் இயக்குநர். அப்போதே வில்லாவில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நம்பிக்கை பிறந்துவிட்டது. இருப்பினும், வில்லா பார்க்கப் போகிறவர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் கவனமாக மனதில் கொள்ள வேண்டும்.

1. பீட்ஸா என்பதை சுத்தமாக மறந்துவிடுங்கள். யாராவது பீட்ஸா என்றால் என்னவென்று கேட்டால் கூட சட்னியும், சாம்பாரும் தொட்டு சாப்பிடக்கூடிய வஸ்து என்று சொல்லுமளவிற்கு மறந்துவிடுங்கள்.

2. எல்லா ஹாரர், ஃபேண்டஸி படங்களுக்கும் பொதுவானது. உங்களுக்கு பகுத்தறிவு என்று ஏதாவது இருந்தால் தயவு செய்து அதனை இரண்டு மணிநேரங்களுக்கு செயலிழக்கச் செய்துவிடுங்கள்.

அசோக் தொழில் நட்டம், தந்தையின் உயரிழப்பு ஆகியவற்றைக் கடந்து பாண்டிச்சேரியில் தந்தையின் பெயரிலிருக்கும் ஒரு வில்லாவிற்கு அதனை விற்கும் நோக்கத்துடன் செல்கிறான். அசோக்குடைய காதலி சஞ்சிதாவிற்கு வில்லா மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் அசோக் சஞ்சிதாவின் முடிவுடன் சமாதானமாக இருக்கும்போது வில்லாவில் ஒரு ரகசிய அறையை கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் ஓவியங்களில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களும், நடக்க இருக்கிற சம்பவங்களும் காணப்படுகின்றன. அதன்பிறகு நடப்பவற்றை பார்வையாளர்களின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.

முதலில், ஹாரர் என்றால் என்ன என்பதை கொஞ்சம் கவனித்துவிடலாம். ஹாரர் என்ற சொல்லுக்கு அதீத பயம் என்று பொருள். ஒரு ஹாரர் படம் என்பது பார்வையாளர்களுக்கு பயமூட்டுவதாக அமைய வேண்டும். ஆனால் பொதுவாகவே, வேறு சில ஜானர்களையும் ஹாரர் படங்களோடு சேர்த்துவிடும் பழக்கம் விக்கிபீடியா காலம் தொட்டே இருந்துவருகிறது. இது ஒரு புறமிருக்கட்டும் படத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் என்றாலே வேலைக்காரி விநோதமாக சிரிப்பது, வாட்ச்மேன் முறைத்து பார்ப்பது, அப்புறம் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் சொல்வாரே அந்த மாதிரியெல்லாம் நடக்கும். வில்லா அத்தகைய படங்களிலிருந்து சற்று விலகியே பயணிக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தினை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அந்த படம் குறுக்கெழுத்து புதிரை நிரப்புவது போல சுவாரஸ்யமானது என்று நண்பர் ஒருவர் விளக்கினார். வில்லாவும் கிட்டத்தட்ட அதுபோல தான். படத்தின் துவக்கத்திலிருந்தே ஆங்காங்கே நமக்கான ஹிண்ட்ஸ் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அதனை புரிந்துக்கொள்ளும்போது பரவசமடைகிறோம். கதை மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே நகர்கிறது. அதுதானே கிக் ! ரகசிய அறையில் உள்ள ஓவியங்களை கதாநாயகன் கண்டுபிடித்ததும் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. சரியாக இடைவேளைக்கு முன்பு ஒரு அதிரடியை காட்ட வேண்டுமென்பதற்காக கிராபிக்ஸில் பொருட்கள் எல்லாம் விழுவதும், பறப்பதுமாக காட்டுகிறார்கள். அங்குதான் துவங்குகிறது வினை, படத்திற்கு !

தமிழ் சினிமா ஹாரர் படங்களில் இன்னொரு பொதுவான விஷயம் உள்ளது. ஆன்மிகம், அறிவியல் இரண்டையும் பெனஞ்சு அடிச்சு ஆன்மிகமும் அறிவியல் தான் தெரியுமோ ? குனிஞ்சு நிமிந்து கோலம் போட்டா பூர்வாங்க உட்கட்டாசனா என்றெல்லாம் க்ளாஸ் எடுக்க துவங்கிவிடுவார்கள். அதுபோக யாராவது ஒரு சாமியாரை வைத்துக்கொண்டு கபடியெல்லாம் ஆடுவார்கள். சமகாலத்தில் சாமியாரை எல்லாம் காட்டினால் போங்கடா நொன்னைகளா என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் ஃபிரெஞ்சு சூனியக்காரன், witchcraft என்றெல்லாம் பாலிஷ்டாக சொல்லி அங்கிருந்து பில்லி, சூனியம், மாந்திரீகம் என்று படிப்படியாக இறங்கி வருகிறார்கள். அதாவது விடுதலைக்கு முன்பு பாண்டிச்சேரியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நரபலியெல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கொடூரமான ஃபிரெஞ்சு சூனியக்காரன் கட்டிய வில்லா அது. அதனால் அந்த வீடு முழுக்க நெகடிவ் சக்தி நிறைந்து கிடக்கிறது. நெகடிவ் சக்திகளை அழிக்கும் முயற்சியும் தோல்வியில் முடிகிறது. அதன்பிறகு வருவது கிளைமேக்ஸ்.

ஹீரோ அசோக் செல்வனை பார்த்துவிட்டு நிறைய பேரு யாரு ? என்றே கேட்கிறார்கள். சூது கவ்வும் படத்தில் பொட்டி தட்டுபவராக நடித்தாரே என்று சொல்லி விளக்க வேண்டியிருக்கிறது. அதிகம் நடிக்க வாய்ப்பில்லாத கதாபாத்திரம். உறுத்தலில்லாமல் செய்திருக்கிறார். அவதார் முக நாயகி சஞ்சிதாவை மறுபடி பார்க்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு இதுவே கடைசி படமாக அமையக் கடவது.

ஒரு கதாபாத்திரம் பெரும்பாலும் தனிமையில் இருப்பதாக காட்டும்போது பார்வையாளர்களுக்கு கதை சொல்ல ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அதற்கு அந்த கதாபாத்திரம் யாரிடமாவது போன் பேசுவது போலவோ, டைரி எழுதுவது போலவோ வைப்பார்கள். அது மாதிரியோ என்னவோ ஒரு ஹீரோ நண்பன் கதாபாத்திரம் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே 7G ரெயின்போ காலணி உட்பட சில படங்களில் நடித்தவர். பெயர் ராஜேஷ் என்று நினைக்கிறேன். படத்தை தன் பங்குக்கு எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்திருக்கிறார். அப்புறம் நாசர், சில குறும்பட முகங்கள், ஒரே ஒரு காட்சிக்காக எஸ்.ஜே.சூர்யா !

இயக்குநர் தீபன் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு நல்வரவு. சில தகவல்களை மேலோட்டமாக தூவிவிட்டு விருப்பமிருந்தால் நீயே தேடி தெரிந்துக்கொள் என்று பார்வையாளர்களின் கையில் விட்டுவிடுவது இவருடைய சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தை நன்றாகவே கடத்தியிருக்கிறார் அதன் பிறகு தான் தடுமாற்றங்கள் துவங்குகின்றன. குறிப்பாக அடுத்த பாகத்திற்கு எப்படி தொடுப்பு கொடுப்பது என்று யோசித்து யோசித்தே அதனை மட்டும் திறம்படச் செய்துவிட்டு இந்த பாகத்தின் முடிவை கோட்டை விட்டிருக்கிறார். அப்புறம், சஞ்சிதாவின் கேரக்டர் என்ன மாதிரியானது என்று சரிவர சொல்லப்படவில்லை. அவருக்கு அந்த வில்லா மீதும் அதன் மர்மங்கள் மீதும் ஆசையா அல்லது பணத்தாசையா அல்லது உண்மையில் அசோக்கை காதலிக்கிறாரா ? என்று கடைசி வரை புரியவே இல்லை.

இறுதியாக இரண்டு விஷயங்கள். ஒன்று, பொதுவாக, ஹாரர் படங்களில் ஒரு முடிச்சு இருக்கும், பின்பு அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு சிக்கல்கள் துவங்கும், இறுதியில் அந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் அல்லது தீர்க்கப்பட்டது போல தோன்றி அடுத்த பாகத்திற்கான தொடுப்பு வைத்து முடிக்கப்படும். ஆனால், வில்லாவில் இறுதிவரை தீர்வு என்பதே இல்லாமலிருப்பது தான் மிகப்பெரிய பலவீனம். ஒருவேளை அதுதான் மாற்று சிந்தனை என்று இயக்குநர் முடிவெடுத்து விட்டாரோ என்னவோ...? அல்லது விஸ்வரூபம் போல அடுத்த பாகத்தையும் சேர்த்துதான் ஒரு கதையாக பார்க்க முடியுமோ என்னவோ...?

இரண்டு, படத்தின் எந்த காட்சிகளும் பயமூட்டுவதாக இல்லை. முதல் பத்தியில் படம் பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வலியுறுத்தினேன் அல்லவா...? அதனோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வில்லா ஒரு ஹாரர் படம் கிடையாது. வேண்டுமென்றால், மிஸ்ட்ரி வகையறாவில் வைக்கலாம். அந்த எண்ணத்தோடு வில்லா’வை பார்த்தால் ரசிக்கலாம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதற்காக வரவேற்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment