Showing posts with label feelings. Show all posts
Showing posts with label feelings. Show all posts

19 July 2013

சாஃப்ட்வேர்க்காரன் சம்பளத்திற்கு எதிர்வினை !

அன்புள்ள வலைப்பூவிற்கு,


நான் பிழைப்பிற்காக தகவல் தொழில்நுட்ப துறையை அண்டியிருந்தாலும் கூட, இன்னமும் கலாசார ரீதியாக என்னுடைய சக பணியாளர்களுடன் ஒன்ற முடியாத நடுத்தர வர்க்க சாதாரணனாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். ஆறாயிரம் ரூபாய்க்கு கூலர்ஸ் வாங்குவது, இரண்டாயிரம் ரூபாய்க்கு சென்ட் பாட்டில் வாங்குவது என சில த.தொ பணியாளர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்து கடுகடுப்பானாலும் கூட இணையவெளியில் அதனை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவ்வாறு வெளிக்காட்டுவது மல்லாக்க படுத்துக்கொண்டு உமிழ்ந்துக் கொள்வதற்கு சமம் அல்லது நம்முடைய பதிவை தெரியாத்தனமாக மேனேஜர் படித்துவிட்டு “வொர்க் கல்ச்சருன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு ? என்று லெக்ச்சர் எடுக்கக்கூடும் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

அதையும் தாண்டி வா.மணிகண்டனுடைய சமீபத்திய பதிவை படித்ததும் ஒரு வயிற்றுக்கடுப்பு கிளம்பியது. கூடை வச்சிருக்குறவங்களுக்கெல்லாம் லைட்டு கொடுக்குறதில்லை என்பது போல பின்னூட்டப்பெட்டியை மூடி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கருத்து / எதிர்வினை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் வா.மணியின் பதிவை படிக்கும் பொது தரப்பு ஆட்கள், த.தொ பணியாளர்களை பார்த்து அய்யோ பாவம் என்று உச்சு கொட்டுவதற்குள் என்னுடைய கருத்தை பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

வா.மணியின் பதிவை நான் முழுமையாக எதிர்க்கவில்லை. பிள்ளைகள் பெற்ற ஒரு குடும்பத்தலைவராக அவர் அவருடைய கவலைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள சில சால்ஜாப்பு காரணங்களை படிக்கும்போது தான் எதைக்கொண்டு சிரிப்பது என்று தெரியவில்லை. தவிர, பிற துறைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் த.தொ ஆட்களை விட அதிகம் சம்பாதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். த.தொ பணியாளர்களும் எல்லோரைப் போலவும் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மற்ற வேலைகளோடு ஒப்பிடும்போது த.தொ பணியாளர்கள் அதிகம் உழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ள இயலாது.

அவருடைய சாஃப்ட்வேர்க்காரன் பற்றிய பதிவு – “என்னத்த சம்பாதிக்கிறோம் ? வேன் ஹியூசனில் சட்டை வாங்குவதற்கும், கே.எப்.சியில் கோழிக்கறி சாப்பிடுவதற்கும், பிள்ளைக்குட்டிகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்வதற்கே மொத்த பணமும் காலியாகிவிடுகிறது. ஆச்சு பார்த்தீங்களா ? மாசக்கடைசியில் நாங்களும் கடன் வாங்கித்தான் பொழப்பை ஓட்டுறோம். நாங்களும் உங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகள் தான் !” என்கிற ரீதியில் செல்கிறது.

மணிகண்டனின் பதிவுடைய முதல் சில பத்திகள் பொருளாதார வீழ்ச்சிக்கு பிந்தைய த.தொ பணியாளர்களின் வாழ்க்கையைப் பற்றி புலம்புகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் த.தொ ஆட்களின் சம்பளம் கணிசமாக குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால் திறமை உள்ளவர்கள் யாரும் தெருவுக்கு வந்துவிடுவதில்லை. “ஆடி” காரில் போய்க்கொண்டிருந்தவர்களை திடீரென அம்பாஸடருக்குள் அமர வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது இவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு, “என்னய்யா பெருசா காசை வாங்கிட்டோம் ? மிஞ்சி மிஞ்சிப்போனா பிச்சைக்காசு ஐம்பதாயிரம். அதை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா ?” என்று தொடர்கிறார்.

// ஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். //

பெருநகரங்களில் சொந்தவீடு இல்லாமல் தங்கி பணிபுரிவது என்பது சிரமமான விஷயம் தான், அதிலும் குடும்பம் குட்டியோடு இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆனால் பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் அனைவருமே பன்னிரெண்டாயிரம் கொடுத்து தான் வசிக்கிறார்களா ? ஏன் ஆறாயிரம், எட்டாயிரத்திற்கெல்லாம் வாடகை வீடுகள் கிடைப்பதில்லையா ? நிச்சயமாக கிடைக்கும். ஆனால், பகட்டாக வாழ்ந்து பழக்கப்பட்ட நம் ஆட்கள் கொஞ்சம் விசாலமாக, கார் பார்க்கிங்குடன் கூடிய, பால்கனி வசதி கொண்ட போன்ற சில சொகுசுக்களை எதிர்பார்ப்பதால் பன்னிரெண்டாயிரம் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வீட்டு வாடகையை பொறுத்தவரையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமே பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தய த.தொ சமுதாயம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்). அப்புறம் பெட்ரோல் செலவு, இன்டர்நெட் செலவு (!!!), பிள்ளைகளின் படிப்புச் செலவு போன்ற சில நியாயமான காரணங்களை சொல்லியிருக்கிறார்.

// இது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் செமி ஃபார்மல்’, வெள்ளியன்று கேசுவல்என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை. //

கவுண்டர் வாய்ஸ்: அவனவனுக்கு ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு இளநியில தண்ணி வரலையாம் !

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், சென்னை / பெங்களுருவில் வேன் ஹியூசன், பீட்டர் இங்க்லேண்ட் தவிர வேற ஜவுளிக்கடைகளே இல்லையா ? ஒருவேளை பிராண்டட் சட்டை அணியாவிட்டால் உடலில் அரிப்பெடுக்குமா ? (ஃபிகர்களுக்காக புதுத்துணி எடுக்க வேண்டியிருக்கிறது என்பது நகைச்சுவைக்காக எழுதிய வரிகளாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்).

// இந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. //

ஏதோ செய்யாத பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கும் தொனியில் எழுதியிருக்கிறார். நீ ஏன் மேன் லோன் வாங்குற ? எதுக்கு EMI கட்டுற ? பகட்டான வாழ்க்கையைத் தேடி வாங்கிய கடனைத்தானே ஓய் அடைக்கிறீர்கள் ?

// இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. //

கே.எப்.சி, பீட்சா கார்னரில் சாப்பிட்டுத் தொலைக்காமல் பெருநகரங்களில் வாழவே முடியாதா ? எனக்குத் தெரிந்து எல்லா மென்பொருள் நிறுவன வளாகங்களின் சுற்று வட்டாரங்களிலும் ஓரிரு தள்ளுவண்டிக்கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் நிச்சயமாக இருக்கும். நம்மவர்களும் கரட்டடிபாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்த புதிதில் அந்த மாதிரி கடையில் எல்லாம் சாப்பிட்டிருப்பார். இப்பொழுது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அதுபோன்ற ரோட்டுக்கடைகளை பார்த்தால் முகம் சுழிப்பதும் ஸ்டோமக் அப்செட் ஆகிடும் என்று சொல்லி சீன் போடுவதுமாக பொழுதைக் கழிக்கின்றனர்.

// அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில்  எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்? //

பிற துறையினர் எல்லாம் நோகாமல் நோம்பி கும்பிடுவது போல அல்லவா இருக்கிறது. கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிறார்களாம். என்னடா இது சோதனை ? ஒருவேளை வயதை குறிப்பிடுகிறாரோ ? யாரும் வேலைக்குச் சேர்ந்ததும் போய் பேராசிரியராக அமர்ந்துவிட முடியாது. பேராசிரியராக முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், விரிவுரையாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் மணிகண்டனுக்கு தெரியாதா என்ன ? முனைவர் பட்டம் எல்லாம் ஒரு விஷயமா என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் வெகுசாதாரணமாக சொல்லிவிடலாம், த.தொ தொழிலாளர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதாக வெளியாட்கள் நினைக்கிறார்களே அது போல.

பொதுவாகவே மணிகண்டனின் வரவு செலவு கணக்கு தப்புக்கணக்காக தோன்றுகிறது. கணக்கு பாடத்தில் அவரு கொஞ்சம் வீக் போல. இருவரும் சம்பாதிக்கிறோம் என்றபடி ஆரம்பித்த அவருடைய பதிவு போகப் போக இருவருக்கும் பொதுவான செலவுகளை அவருடைய சம்பளத்திலிருந்து மட்டும் குறைத்துக்கொண்டு ஆச்சு பார்த்தீங்களா ? ஐம்பதாயிரம் காலி என்று கணக்கை முடித்துவிட்டார். தவிர, மணிகண்டன் போல பிள்ளைக்குட்டிகள் பெற்றெடுத்த த.தொ பணியாளர்கள் இந்நேரம் சொந்த வீடு, கார், சுவற்றில் மாட்டுகிற தொலைக்காட்சி என்று செட்டில் ஆகியிருப்பார்கள்.

// ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய். //

இதுதான் ஃபினிஷிங் டச். ஆக, ஒரு லட்சமில்லை எத்தனை லட்சங்கள் வாங்கினாலும் கூட எல்லாவற்றையும் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ / பகட்டான வாழ்க்கைக்கோ செலவு செய்துவிட்டு மாசக்கடைசியில் எங்க பர்ஸும் காலியாத்தான் இருக்கு, நாங்களும் ஏழைங்க தான் என்று புலம்புவார்கள். மனிதர்கள் அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வது இயல்புதான். ஆனால் புலம்பக்கூடாது. நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல த.தொ வேலை என்பது நாமாகவே வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட நாய் வேடம். குரைத்து தான் ஆகவேண்டும். விருப்பமில்லையென்றால் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிற பேராசிரியராக பணிபுரியலாமே ? பொறியியல், MCA முடித்தவர்களுக்கு நிச்சயமாக கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்துவிடும். அதுவும் இல்லையென்றால் த.தொ இளைஞர்கள் அடிக்கடி ஃபேஷனுக்கு சொல்வதைப் போல ஊருக்கு போயி வெவசாயம் பார்க்கலாம் அல்லது கரட்டடிபாளையத்திற்கோ வள்ளியாம்பாளையத்துக்கோ போய் எருமை மாடு மேய்க்கலாம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment