5 April 2017

மசினகுடி – சென்றடைதல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: பந்திப்பூர் வனச்சாலை

மசினகுடி எல்லையைத் தொட்டதும் ஒரு இளைஞர் வேகமாக வந்து எங்கள் வாகனங்களை வழிமறித்தார். அந்த சமயத்தில் அவருடைய உடல்மொழி ஒரு போக்குவரத்து காவலருடையதைப் போல இருந்தது. ஏதோ தகாத செயல் புரிந்துவிட்டோம் போலிருக்கிறது என்று பயந்துக்கொண்டே வாகனத்தை நிறுத்தினால் அண்ணன் காட்டுலாவிற்கு (ஜங்கிள் சஃபாரி) ஆள் சேர்க்கிறார். அப்போதைக்கு அது குறித்து முடிவு எதுவும் எடுக்காததால் அந்த நபரின் அலைபேசி எண்ணை மட்டும் பெற்றுக்கொண்டு ஊருக்குள் நுழைந்தோம். அதற்குள் மழை கொஞ்சமாக பெய்வது போல துவங்கி, முக்கால்வாசி நனைந்திருந்தோம்.

மசினகுடியை சுற்றி ஏராளமான ரெஸார்டுகள் உள்ளன. Jungle, Wild, Forest போன்ற குறிச்சொற்களை தங்களுடைய பெயர்களில் தாங்கி சுமார் ஐம்பது ரெஸார்டுகளாவது இருக்கக்கூடும். அவற்றில் ஒற்றை இரவு வாடகை மூன்றாயிரத்தில் துவங்கி, பத்தாயிரம் வரை இருக்கின்றன. வாங்குகிற பணத்திற்கேற்ப அவற்றில் நீச்சல் குளம், கேம்ப் ஃபயர் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. இவை தவிர்த்து நேரடியாக காட்டில் கூடாரமடித்து தங்குவதற்கான ஏற்பாடுகளும் கிடைக்கின்றன. இதற்கென காட்டுப்பகுதிக்கு நன்கு அறிமுகமான, சமையல் தெரிந்த உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர். இந்த சேவைக்கு ஒரு நபருக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் என்று கேள்விபட்டேன். எங்களுடையது பட்ஜெட் ட்ரிப் என்பதால் மசினகுடி ஊர்பகுதியிலேயே அறை எடுப்பதென முடிவெடுத்திருந்தோம். அதற்கென சில தங்குமிடங்களைக் கூட ஏற்கனவே பட்டியலில் குறித்து வைத்திருந்தோம்.

மசினகுடி ஊர் என்று நான் குறிப்பிடுவது இரண்டு சிறிய தெருக்களையும், ஒரு பிரதான சாலையையும் உள்ளடக்கியது. தெருக்கள் மற்றும் சாலையின் நீளம் சுமார் இருநூறு மீட்டர் இருக்கலாம். சுற்றுலாத்தளத்திற்கான அடையாளங்கள் அதிகம் இல்லை. பிரதான சாலையில் டெய்லர் கடை, ஃபோட்டோ ஸ்டூடியோ, மளிகைக் கடை, மருந்துக் கடை, பிராய்லர் கோழிக்கறி கடை என்று சகலமும் இருக்கின்றன. டாஸ்மாக் இருக்கிறது. சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. அங்கே பழங்கள் இருக்கின்றன. பழங்கள் என்றால் உள்ளூர் பழங்கள் அல்ல. நவீன கலப்பின திராட்சைகள், ஆரஞ்சுகள், ஆப்பிள்கள் என நகரத்தில் கிடைக்காத பழங்கள் கூட இங்கே கிடைக்கின்றன. எஞ்சியிருக்கும் சிறிய உணவகங்களும், விடுதிகளும் தான் சுற்றுலா தளத்திற்கான அடையாளங்கள். முதலில் சேவியர் லாட்ஜை பார்த்தோம். அறுநூறு ரூபாய் வாடகை. ஒப்பீட்டளவில் விசாலமான அறை. இரண்டு கட்டில்கள். இருப்பினும் மேஜை, அலமாரி, தொலைகாட்சி ஆகியவை இல்லாதது குறையாக தெரிந்தது. அடுத்தது ஆலப்பத் லாட்ஜ் சென்றோம். அங்கே இருந்த சிப்பந்தி அறை என்றதும் ஒரு முரட்டுத்தனமான கேள்வியைக் கேட்டு எங்களை திகைக்க வைத்தார். ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்களா ? என்பதுதான் அந்த கேள்வி. எங்களுக்கும் அந்த சிப்பந்திக்கும் தனிப்பட்ட உறவுமுறை / நட்பு இல்லையென்றால் கூட முதல் கேள்வியே இத்தனை அதிரடியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஆசுவாசமடைவதற்குள் குடிச்சிட்டு பிரச்சனை பண்ணுவீங்களா ?, போலீஸ் வந்தா நீங்கதான் பாத்துக்கணும் என்று அடுத்தடுத்த அணுகுண்டுகளை போட்டார். குறிப்பாக இறுதியில் அவர் கொடுத்த போலீஸ் எச்சரிக்கை எங்களுக்கு கோபமூட்டியது. இங்கே என்ன பிராத்தலா செய்கிறோம் ? எல்.சி.டி டிவி இருந்தும் கூட அந்த விடுதியை புறக்கணித்தோம். 

கொங்கு லாட்ஜ்
அடுத்தது வகையாக வந்து சிக்கியது கொங்கு லாட்ஜ். கீழ் மற்றும் முதல் தளங்களில் அறைகள். அடித்தளத்தில் மதுக்கூடம். விடுதி உரிமையாளரை / சிப்பந்தியை சந்திப்பதற்கு முன்பாகவே மதுக்கூட பிரஜை ஒருவர் ஆஜராகிவிட்டார். கேம்ப் ஃபயர், ட்ரெக்கிங், சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தருவதாக அரைபோதையில் சொன்னார். எந்த சுற்றுலா தளத்திற்கு சென்றாலும் இதுபோன்ற முகவர்கள் உங்களை அணுகுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமக்கு உதவ முன்வருகிறார்களே என்று இவர்களிடம் சிக்கினால் நம்மை நொங்கெடுத்து விடுவார்கள். இவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு நாம் தரவேண்டிய விலை ஒரு கட்டிங். அப்படி ஐம்பது ரூபாயை அந்த நபரிடம் கொடுத்தபிறகு நாங்கள் மசினகுடியில் இருந்து கிளம்பும் வரை அவரை பார்க்கவே முடியவில்லை. 

அறையிலிருந்து இயற்கைக்காட்சி
இதற்குள் விடுதி உரிமையாளர் வந்துவிட்டார். அறை வாடகை நாளொன்றிற்கு எண்ணூறு ரூபாய். சிறிய அறைதான். தொலைக்காட்சி, அலமாரி, மேஜை ஆகியவை இருந்தன. கூடுதல் மெத்தையும், போர்வையும் தருவதாகக் கூறினார். அறையிலிருந்து இயற்கைக்காட்சி சிறப்பாக இருந்தது. உடனடியாக அங்கே குடிபுகுந்துக் கொண்டோம். மதிய உணவை (மோசமான பிரியாணி) முடித்துக்கொண்டு, பயணக்களைப்பில் முரட்டுத் தூக்கம் தூங்கி, மறுநாள் காலையில் தான் எழுந்தோம்.

எழுந்தபோது மிதமான தலைவலி. தூக்கத்திற்கிடையே கடைத்தெருவுக்கு போய் பழங்களும், சிற்றிடை உணவுகளும் வாங்கி வந்து, சீஸனில்லாத மாம்பழ ஜூஸை பருகி, கதைகள் பேசித்தீர்த்ததாக மங்கலாக ஏதேதோ குழப்பமான நினைவுகள் எஞ்சியிருந்தன. ஒரு பழகிய ஊரைப் போல பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தேநீர் அருந்தியபடி பேச்சு கொடுத்தபோது முந்தைய இரவு அந்த சாலையின் முனை வரை யானை வந்து சென்றதாக சொன்னார்கள்.

அடுத்த பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 03042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

லைஃப் என்றொரு ஸை-ஃபை ஹாரர் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலத்தில். தேவியில் இரவுக்காட்சி பார்த்தோம். தோம் என்பது நண்பர் அஞ்சாசிங்கம். இதுபோன்ற படங்களுக்கு அஞ்சா ஒரு கோனார் நோட்ஸ். மேலும் அவர் விரும்பும் சப்ஜெக்ட் என்பதாலும் தந்திரமாக பேசி நைட்ஷோவுக்கு வரவழைத்தேன். 

கிட்டத்தட்ட The Last Day on Mars. விண்வெளி ஓடத்தில் ஆறு விஞ்ஞானிகள் செவ்வாயில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணிலிருந்து ஒரு ஒற்றை அணு உயிரினத்தை கண்டுபிடிக்கிறார்கள். வளிமண்டலத்தை வெவ்வேறு வகையில் சீரமைத்து ஆராய்ந்து அதற்குகந்த வளிமண்டல சூழலை அமைத்துக் கொடுக்கிறார்கள். அந்த உயிரினத்தின் அணுக்கள் பல்கிப் பெருகுகின்றன. அதற்கு மேல் ஒரு ஸை-ஃபை ஹாரரில் என்ன நடக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை. ஆனால் பரபரப்பான ஒன்றரை மணிநேரம். சில சமயங்களில் முதுகுத்தண்டை சில்லிட்டது. (முன்பெல்லாம் ஹாரர் பட விமர்சனங்களில் தவறாமல் இடம்பெறும் இந்த க்ளிஷே வார்த்தைக்கு புத்துயிர் தந்த எழுத்தாளருக்கு நன்றி). சில காட்சிகள் ரொம்பவும் கோரம். கோரம் என்றால் ஷோவுக்கு முன்னால் ஜெயஸ்ரீயில் சாப்பிட்ட மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் வெளியே வந்துவிடுமோ என்று அச்சப்பட வைக்கிற கோரம். இத்தனைக்கும் கேனிபல் படங்களில் இதைவிட பன்மடங்கு கோரங்களை பார்த்திருக்கிறேன். Grotesque பார்த்திருக்கிறேன். அகண்டதிரையில் என்பதாலோ என்னவோ ஒரு மாதிரியாகிவிட்டது. பக்கத்தில் உள்ள மனிதர் பாயாசம் சாப்பிடுவதுபோல ஜாலியாக பார்த்துக்கொண்டிருந்தார். பூமி முக்கால் பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. ஆனால் CRV வந்துவிழும்போது மட்டும் ஏன் எங்கேயாவது நடுக்கடலில் போய் விழாமல், மீதமிருக்கும் பூமியிலும் வந்து விழாமல் கடற்கரையில் வந்து விழுகிறது ? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சர்ப்ரைஸ். ஆனால் இரண்டாம் பாகம் எல்லாம் தாங்காது ஸ்வாமி !

படம் பார்க்க வந்தபோது சிங்கம் சேபியன்ஸ் பற்றி எழுதியிருந்ததை விசாரிக்கிறார். இன்னொரு நண்பர் பின்னூட்டத்தில் ஹோமோ டியூஸ் பரிந்துரைக்கிறார். இதன்மூலம் ஒயின்ஷாப் என்பது கிணற்றில் போட்ட கல் அல்ல என்று தெரிகிறது. குறைந்தது இரண்டு பேர் படிக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆசுவாசமாக இருக்கிறது.

சேபியன்ஸில் முதல் யூனிட், முதல் சேப்டர் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா. இரண்டாவது சாப்டர் மற்ற இனங்களிடமில்லாத சேபியன்ஸின் தனித்தன்மை பற்றி பேசுகிறது. ஒன்று, மொழியறிவு. பெரும்பாலான உயிரினங்கள் தங்கள் இனத்திற்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஏதேனும் வழிமுறைகள் வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, சிம்பன்ஸி ஒரு குறிப்பிட்ட சப்தத்தை எழுப்பினால் சிங்கம் வருகிறது ஜாக்கிரதை என்று பொருள். அதைக் கேட்டு மற்ற சிம்பன்ஸிகள் உஷாராகிவிடுகின்றன. ஆனால் சேபியன்ஸ் மொழி இன்னும் விசாலமானது. அதன்மூலம் சிங்கம் எங்கே வருகிறது, எவ்வளவு பெரிய சிங்கம், எவ்வளவு வேகமாக வந்துக்கொண்டிருக்கிறது, எப்படி தப்பிக்கலாம் என்று நிறைய தகவல்கள் பரிமாறவும், விவாதிக்கவும் தோதாக இருக்கிறது. மட்டையடி உதாரணம் என்றால் விமர்சக சிம்பன்ஸி ஒரு படம் பார்த்தால் குப்பை என்று மட்டும்தான் சொல்லும். அதுவே சேபியன் என்றால் படத்தில் கதைச்சுருக்கம் என்ன ?, ஹீரோயின் பற்றிய ஜொள்ளு விவரணை, ஒளிப்பதிவு சுமார், எடிட்டிங் சூப்பர், எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் எல்லாம் சொல்லுமாம். சேபியன்ஸின் இன்னொரு தனித்துவம் புனைவுத்திறன். அதன் மூலம் இல்லாத ஒன்றை உருவாக்கி, அதன் மீது நம்பிக்கைகள் வளர்த்து, ஒருமித்த உணர்வெழுச்சி கொள்வது. அதுதான் சேபியன்ஸ் மற்ற மனித இனங்களை வெல்லக் காரணம் என்கிறார் ஆசிரியர். இருபது நியாண்டர்தால்களால் ஒற்றுமையாக இருக்க முடியும். அதிகபட்சம் நூறு. ஆனால் அதற்கு மேல் தாண்டினால் அந்தக் குழுவில் பிணக்குகள் ஏற்படும். ஆனால் சேபியன்கள் ஆயிரக்கணக்கில் கூட ஒற்றுமையாக இருப்பார்கள். இனம், மதம் போன்ற உணர்வுகள் அவர்களை இணைக்கும்.

சேபியன்ஸை துரிதமாக வாசிக்க முடியவில்லை. ஆனால் அதற்கு புத்தகத்தின் தன்மையோ, மொழியோ சத்தியமாக காரணமில்லை. ஒன்று, அது நமக்கு சிந்திப்பதற்கு தரும் விஷயங்கள். பாதி பக்கம் படிப்பதற்குள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதைப்பற்றி யோசிக்குமாறு நேரிடுகிறது. இன்னொன்று, புத்தகம் தடியாக இருப்பதால் முதுகுப்பையில் வைத்து எடுத்துச் செல்ல தோதாக இல்லை. பொதுவாக புத்தகங்கள் படிப்பதில் அருவி அணுகுமுறையைத் தான் கையாள்வேன். அதாவது ஒரு புத்தகத்தை முழுமையாக முடித்தபின் அடுத்த புத்தகம். ஆனால் சேபியன்ஸிற்கு அதனை பின்பற்றினால் தேக்கநிலை ஏற்படும். எனவே அவ்வப்போது ஒரு சேப்டர் சேபியன்ஸ். பிரதானமாக மற்ற புத்தகங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

சென்ற வாரம் புத்தகம் படிக்க முடியாததற்கு இன்னொரு காரணம், கண்ணில் ஏற்பட்ட நோய்த்தொற்று. இரவு படுக்கப் போகும்போது சாந்தமாக இருந்த கண்கள் காலையில் விழித்துப் பார்த்தால் வேட்டையாடு விளையாடு ராகவனுடையதைப் போல இருக்கின்றன. கம்ப்யூட்டர் முன்னால் உட்காரக்கூடாது, புத்தகம் படிக்கக்கூடாது, போனை தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். டெலிகேட் பொஸிஷனில் சிக்கிக்கொண்டேன். பொதுவாக மருத்துவ விடுப்புக்கு மேலாளரை சமாதானப்படுத்துவது சிரமமான காரியம். ஆனால் கண்ணில் ஏதாவது பிரச்சனை என்றால் பூரண கும்ப மரியாதையுடன் விடுப்பு அளிக்கப்படும். ஒருமுறை கடமை தவறா ஊழியனாய் கண் தொற்றுடன் அலுவலகம் சென்றுவிட்டேன். மேலாளர் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி, விடுப்பு கொடுத்தார். 

மற்ற காரணங்கள் சொன்னால் நிறைய கேள்வி கேட்பார்கள். பொய்கள் பல்கிப் பெருகும். பள்ளியில் படிக்கும்போது எதற்கெடுத்தாலும் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் தான். மறுநாள் போனால் ஃபீவர் ஒரே நாளில் சரியாகிவிட்டதா என்று நக்கலடிப்பார்கள். அப்போது, கூட ரெண்டு நாள் விடுப்பு எடுத்திருக்கலாமோ என்று தோன்றும். எனக்கெல்லாம் பள்ளியில் மட்டுமில்லாமல் கல்லூரியில் கூட இந்த லீவ் லெட்டர் இம்சைகள் தொடர்ந்தன. நிறைய பொறியியல் கல்லூரிகள் இப்படித்தான். சினிமாக்களில் காட்டுவது போல இல்லை. என் கல்லூரிக் காலத்தில் நான் எப்போது விடுப்பு எடுத்தாலும் குறிப்பிடும் ஒரே காரணம் கோயிங் டூ டெம்பிள்’ தான். தெய்வகாரியம் என்பதால் மறுக்க முடியாது. நக்கலடிக்கவும் முடியாது. தற்போது அலுவலகங்களில் அநேக ஊழியர்கள் பயன்படுத்தும் விடுப்புக் காரணம் ‘ஸ்டொமக் அப்செட்’. பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கொண்டுவரும்போது பையில் மேலோட்டமாக அழுக்கு பனியன், ஜட்டிகளை வைப்போம். ஜட்டிகளுக்குள் கையை விட்டு நோண்டமாட்டார்கள். அனுபவரீதியாக நிரூபணமான யுக்தி இது. ஸ்டொமக் அப்செட் என்பதும் அப்படித்தான். எந்த மேலாளரும் ஓ ! அப்படியா ? எப்படிப் போச்சு ? என்று கிளறல் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற யோசனையாக இருக்கலாம். ஆனால் சில மேலாளர்கள் பாதாள சாக்கடை அடியாழம் வரை செல்வதற்கு கூட தயங்குவதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ஊழியர் விடுப்பு எடுத்துவிட்டு ஸ்டொமக் அப்செட் என்றால் கிளிஷேவாக இருக்குமென்று கருதி டிஸ்ஸண்ட்ரி என்ற புது வார்த்தையைப் போட்டார். மேலாளரிடம் வசமாக சிக்கினார். டிஸ்ஸண்ட்ரி, டயோரியா, லூஸ் மோஷன் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகளை நுட்பமாக விளக்கினார். ஒருவருக்கு டிஸ்ஸண்ட்ரி வந்தால் அந்த தெருவே நாறிப்போகும் என்றார். அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும்படி ஆகிவிட்டது. மேலாளரின் வேற்றுத்துறை சார்ந்த அறிவைக் கண்டு தான். அந்த தருணத்தில் மேலாளர் ஒரு கேஸ்ட்ரோ-எண்ட்டராலஜிஸ்ட்டாக மாறுவதை நான் கண்கூடாக பார்த்தேன். 

பொதுவாக உலகில் ஒருவர் மருத்துவம் படித்தால் அவர் மருத்துவர், சிவில் எஞ்சினியரிங் படித்தால் அவர் பில்டிங் காண்டிராக்டர், ஆட்டோமொபைல் படித்தால் அவர் மெக்கானிக், இப்படி ப்ளம்பர், டெய்லர் என ஏராளமான துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனால் மேனேஜராக இருந்தால் மட்டும் இவர்கள் எல்லோருமாகவும் இருக்கலாம். ஏன்னா அவங்க டிஸைன் அப்படி !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment