30 November 2010

என்னை ஏமாற்றிய மலையாளிகள்...!


வணக்கம் மக்களே

நம் தமிழ்மொழிக்கு இணையாக காதிலே தேனை வார்க்கக்கூடிய மொழி என்றால் அது மலையாளம் என்று சொல்லலாம். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் மலையாள ப்ராசஸ் ஒன்று இருந்ததால் எனக்கும் அடிக்கடி அந்த தேனை ருசிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

நான் மட்டுமல்ல பொதுவாக நம்மூரில் எல்லோருமே மலையாளிகளின் பேச்சை விரும்புவார்கள். ஆனால், மலையாளிகள் பேசும் ஆங்கிலத்தை...? நம்மூரில் பொதுவாக மலையாளிகள் பேசும் ஆங்கிலம் என்றால் கிண்டல் தான். (என்னவோ இவனுங்க எல்லாம் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டில படிச்சிட்டு வந்தவுனங்கன்னு நெனப்பு). குறிப்பாக அவர்கள் ஓ போடும் விதம். அதாங்க ஆயிலை ஓயில் என்று கூறுவதும், ஆபிஸை ஒபீஸ் என்று கூறுவதும். இவ்வாறாக எனது அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவரை தமிழர்கள் ஏகத்துக்கும் நக்கலடிப்பார்கள். ஒருநாள், கொஞ்சம் சத்தமாக அவர் காதுபட கலாய்த்துவிட்டார்கள். மனிதர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை. மாறாக அதற்கான காரணத்தை குறிப்பிட்டார். அதாவது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு முன்னதாக பதினாறாம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுகீஸ் ராஜாங்கம் நடந்து வந்தது. அவர்களின் வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பே இப்பொழுது தங்களுக்கும் தொடர்வதாக கூறினார். அன்றிலிருந்து யாரும் அவரை கிண்டலாடிப்பது இல்லை.

நான் கல்லூரியில் படித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவம். விடுதியில் நண்பர்கள் பலர் ஒன்றுகூடி நான் கடவுள் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம். (திருட்டு டி.வி.டி தான்). எங்களுடன் மலையாள நண்பன் ஒருவனும் படம் பார்த்துக்கொண்டிருந்தான். படத்தில் ஒரு வசனம், மாட்டுக்கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை. இந்த வசனத்தை எழுதியவர், நம்ம அறிவு ஜீவி, தத்துவ ஞானி, ஜெயமோகன் அவர்கள். இந்த வசனத்தை கேட்டதும் நண்பர்கள் அந்த மலையாள நண்பனை வறுத்தெடுத்து வருத்தப்பட வைத்துவிட்டார்கள். அந்தப்படம் மட்டுமல்ல நிறைய தமிழ் சினிமாக்களில் மலையாளிகளை கேவலப்படுத்தி காட்டுவார்கள். அரைகுறை ஆடையுடன் வரும் டீக்கடை நாயரின் மனைவிகள் தமிழ் சினிமாவில் பிரசித்தம். (அதற்கு மலையாளிகளும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களின் படங்களிலும் தமிழனை அழுக்கு பிடித்தவனாக சித்தரிப்பதுண்டு).

இதுப்போன்ற திரைக் காட்சிகளையோ, கிண்டல்களையோ நான் எப்போதுமே விரும்புவதில்லை. எனது கண்ணோட்டத்தின் படி, கேரளா என்றால் படிப்பறிவில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக விளங்கும் ஒரு மாநிலம். ஆனால், நேற்று வெளிவந்த ஒரு செய்தியில் மலையாளிகள் மேல் நான் வைத்திருந்த மலையளவு மரியாதை ஏகத்துக்கும் குறைந்துவிட்டது. அந்த கொடுமையை நீங்களே பாருங்க.
தமிழர்கள் கூட இப்படி ஒரு மானங்கெட்ட செயலை செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 November 2010

நம்பியார் நண்பர்கள்

வணக்கம் மக்களே...

இது சில உண்மைச் சம்பவங்களின் பாதிப்பில் எழுதப்பட்ட கட்டுரை.

பெரும்பாலான நண்பர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
-          லவ் பண்ண ஆரம்பிக்கும் முன்பு, லவ் பண்ண ஆரம்பித்த பின்பு.
-          MNCயில் வேலை கிடைக்கும் முன், MNCயில் வேலை கிடைத்த பின்.
-          ஆண் நண்பர்கள் மட்டும் இருக்குமிடத்தில், பெண் நண்பர்களுடன் இருக்குமிடத்தில்.
இது போல பல வகையான உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


நான் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் திடீரென பணியில் இருந்து விலகிவிட்டான். சில வாரங்களுக்குப் பின்பு அவனை ஒரு பொது இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ரீபோக் ஷூ, லெவிஸ் ஜீன்ஸ், கப்பா டீ-ஷர்ட் என்று பயலிடம் பல மாற்றங்கள் தெரிந்தன. தலைமுடி மாவா போட்டு மல்லாக்க படுத்து துப்பிக்கொண்டது போல இருந்தது. (கலரிங்காம்). என்னைப் பார்த்தவன், எங்கேயோ பார்த்தது போல இருக்கே என்ற எண்ணத்தோடு நெற்றி சுருக்கினான். நான் அவனிடம் சென்று ஞாபகப்படுத்தினேன். அவன் என்னைப் பார்த்து, “Oh well, U people will say something like vanakkam ungal sevaikkaaga… in tamil… right…?” என்று அமெரிக்க ஆங்கிலத்தில் பிதற்றினான். அவனை பொளேறென்று அறைய வேண்டும் போல இருந்தது. இயலாமையில் அவனை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மற்றொரு சம்பவம். அப்போது நான் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மொபைல் போன்களின் தாக்கம் பெருமளவில் இல்லாததால் நண்பர்கள் சிலரிடம் மட்டுமே அந்த கருவி இருக்கும். என் அறை நண்பனும் ஒன்றை வைத்திருந்தான். சில சமயங்களில் யாரிடமாவது போனில் ஊரைக் கூட்டும் விதமாக சத்தமாக பேசுவான், பல சமயங்களில் அதே போனில் மிகவும் ரகசியமாக பல மணிநேரங்கள் பேசுவான். பையன் மூலையில் சென்று முட்டை விடும் ரகசியத்தை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும். சில சமயங்களில் வாய்விட்டே கேட்டிருக்கிறேன். குழந்தையுடன் பேசினேன், கொழுந்தியாளுடன் பேசினேன் என்று ஏதாவது கதை அளப்பான். சில மாதங்களுக்குப் பின்பு அவன் ஒரு மன்மதக்குஞ்சு என்பதை அவனது பழைய அறை நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன். (பொறாமை...? லைட்டா...)

அய்யா... சமூகப் பிணைப்பு தளங்கள் சில இருக்கின்றன. இவற்றில் நம்ம பயல்கள் பண்ணும் அளப்பரைகளுக்கு அளவே இல்லை. முன்பெல்லாம் ஆர்குட் ஆக்கிரமித்திருந்தது, இப்போது சில காலமாக மூஞ்சிப்புத்தகம் மூஞ்சியை காட்ட ஆரம்பித்திருக்கிறது. சில நண்பர்கள் இருக்கிறார்கள், பயல்களின் கடைப்பக்கம் தலை வைத்துக்கூட படுப்பது இல்லை. ஆனால், பொண்ணுங்களின் ப்ரோபைல் பக்கம் சென்று காமெடி என்ற பெயரில் மொக்கை போட்டுக்கொண்டு இருப்பார்கள். நேரில் பார்த்தால் த்தா, பாடு, டோமர் என்று லோக்கலாக பேசுவார்கள். ஆனால் ஆர்குட்டில் dude, buddy, yup, nope என்று புரியாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவார்கள். Status Update என்ற ஒன்றிருக்கிறது. அட, எங்கிருந்து பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது ஆங்கில தத்துபித்துவத்தை போட்டு அக்கப்போர் செய்கிறார்கள். அதற்கு கீழே நாலு பொம்பளைபிள்ளைகள் கமென்ட் வேற எழுதுராளுங்க. காலக்கொடுமைடா சாமி...

நண்பர்கள் புடைசூழ புகைத்துக்கொண்டிருப்போம். வழக்கமாக நம்மோடு கும்மியடிக்கும் நண்பன் வருவான். என்ன மச்சி... கிங்ஸா பில்டரா...? என்று கேட்டால் ஏதோ விஜய் படம் சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டா மாதிரி நம்மை ஏற இறங்க பார்ப்பான். அவர் நல்லவராமாம். சரி அதோடு சனியன் ஒழிந்தா என்று பார்த்தால் இல்லை. புகையின் தீமைகளை பற்றி நமக்கு லெக்சர் எடுப்பான். திடீரென அப்பா அம்மாவை பற்றியெல்லாம் பேசி செண்டிமன்ட் மூட் க்ரியேட் பண்ணுவான். சம்திங் இஸ் ராங் என்று திரும்பிப்பார்த்தால் பத்தடி தூரத்தில் ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஒன்று நின்றுக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் மனம் அவனை செந்திலாக கற்பனை செய்துக்கொண்டு புறமுதுகு காட்டி நிற்கச் சொல்லும். கால்கள் கவுண்டமணியாக மாறி அவன் குண்டியிலேயே எட்டி மிதிக்கும்.

கண்ணம்மாபேட்டையில் இருப்பவன் கனடாவில் இருப்பவனோடு கதைக்க ஊன்றுகோலாக இருக்கும் மூஞ்சிப்புத்தகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு துயர சம்பவம். வெளிநாட்டுக்கு ஆணி புடுங்க போன நண்பன் ஒருவன் தனது தோழியின் புகைப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் அப்டேட் செய்திருக்கிறான். இதைப் பார்த்த உள்ளூர் நண்பன் ஒருவன் பழக்க தோஷத்தில் யாரு மச்சி... இந்த சப்பை பிகர்... என்று கமென்ட் போட்டுவிட்டு காப்பி குடிக்க போயிருக்கிறான். திரும்பி வந்தவனுக்கு அதிர்ச்சி. தன்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து அந்த கடல் கடந்த நண்பன் காணாமல் போயிருந்தான். அப்படி இப்படி என்று அவனை தொடர்புகொண்டு கேட்டபோது, என் தோழி உன்னை லிஸ்டில் இருந்து நீக்கச் சொல்லிவிட்டாள்... என்று கூலாக சொல்லியிருக்கிறான். அந்த நண்பனுக்காக கண்ணீர் விட, கோபப்பட,  அவன் என் நண்பனாக தான் இருக்க வேண்டுமா...? ஏன் ஒரு கம்யூனிஸ்டின் நண்பராகவோ, நாத்திகனின் நண்பராகவோ இல்லை யாரோ ஒருவரின் நண்பராகவோ இருக்கக்கூடாதா...?

இவர்கள் எல்லாம் நண்பர்களா..? எதிரிகளா...? துரோகிகளா...? வழக்கம்போல நம்முடைய கேள்விகளுக்கெல்லாம் இந்த சமுதாயம் மெளனம் சாதிக்கிறது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 November 2010

நந்தலாலா - கர்சீப் எடுத்துட்டு போங்க...

வணக்கம் மக்களே...

பலத்த எதிர்(பார்)ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்திருக்கிறது. முதல்நாள் முதல்காட்சி பார்க்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் முக்கியமாக சுற்றுவட்டாரத்தில் எந்த திரையரங்கிலும் வெளியாகாத காரணத்தினால் இரண்டாம் நாளே பார்க்க முடிந்தது.

திரைக்கு முன்...
- சென்னை மாநகரின் பழமையான திரையரங்கில் ஒன்றான சென்னை அகஸ்தியாவில் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அகஸ்தியா திரையரங்கில்தான் சென்னையிலே முதல் முறையாக 70MM வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- சீக்கிரமாகவே திரையரங்கம் சென்றுவிட்டதால் ரசிகர்கள் சிலரது பேச்சுக்களை கேட்க நேர்ந்தது. ஒருத்தர் கெளரவர்கள், புழல், நகரம், மகிழ்ச்சி என்று அவர் சமீபத்தில் பார்த்த படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அட்ராசக்க என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
- பெருசு ஒன்று தான் அந்தக்காலத்தில் பதினாறு வயதினிலே படத்தை இரண்டு ரூபாய் பத்து பைசா கொடுத்து பார்த்த கதையையும் ஷோலே படத்தை நாலு ரூபாய் கொடுத்து பார்த்த கதையையும் சொல்லிக்கொண்டிருந்தது.
- வாலிப குஞ்சுகள் சில ஒவ்வொரு காட்சியிலும் படத்தை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன மயித்துக்கு படம் பார்க்க வந்தார்கள் என்று தெரியவில்லை. %$#@&* ^!@#%

கதைச்சுருக்கம்
பாட்டியின் கவனிப்பில் வளரும் சிறுவன் அஸ்வத். பாட்டியிடம் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் போவதாக போய் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்புகிறான். மனநல காப்பகத்தில் இருக்கும் இளைஞன் காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். இவ்விருவரும் சூழ்நிலையின் காரணமாக சந்திக்க நேரிடுகிறது. இருவரும் தத்தம் தாயை தேடி பயணிக்கின்றனர். அந்த பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களும் நெகிழ்வுகளும் தான் கதை. கடைசியில் இருவரும் அவர்களது தாயை கண்டுபிடித்தார்களா என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்
-          மிஷ்கின் மனப்பிறழ்வு ஏற்பட்டவராக அருமையாக நடித்திருக்கிறார். அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக பேண்ட்டை பிடித்தபடி படம் நெடுக வருகிறார். நிச்சயம் இமேஜ் பார்க்காத ஒருவரால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடியும்.
-          சிறுவன் அஸ்வத், வயதை மீறிய நடிப்பு. புத்திசாலித்தனமான சிறுவன் என்ற பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சுட்டித்தனங்கள் மட்டும் மிஸ்ஸிங்.
-          ஸ்னிக்தா, அதிக காட்சிகள் இல்லையெனிலும் அவரது வேலையை சரிவர செய்திருக்கிறார். ரோகிணி சில நிமிடங்கள் மட்டும்வந்து அழ வைக்கிறார்.
-          நாசர் உட்பட பல நடிகர்கள் ஆங்காங்கே தலைகாட்டி நெகிழ வைக்கின்றனர்.

இசை
படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதே இளையராஜாவின் இசைதான். சிடியில் ஆறு பாடல்கள் இருந்தாலும் படத்தில் இடம் பெறுவது மூன்று பாடல்கள் மட்டும்தான். அந்தப்பாடல்களும் காட்சிகளுக்கு பிண்ணனி இசையைப் போலவே இணைக்கப்பட்டிருக்கின்றன. மெல்ல ஊர்ந்து... என்று ஆரம்பிக்கும் பாடல்கள் சில நொடிகளும், ஒண்ணுக்கொண்ணு... என்று ஆரம்பிக்கும் பாடல் படம் நெடுக ஆங்காங்கே சில இடங்களிலும் வர தாலாட்டு கேட்க நானும்... என்ற பாடல் படத்தின் நாடித்துடிப்பாக விளங்குகிறது. "எலிலே எலிலே..." பாடலை நீக்கியது ஏமாற்றம் அளிக்கிறது.

திரைக்கதை
படத்தில் வசனங்கள் மிகக்குறைவு. அதற்கு பதிலாக படத்திற்கு பக்கபலமாக இருப்பது திரைக்கதை. படம் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் போல காட்சியமைப்புகள். உதாரணமாக, ஊனமுற்றவரின் காலுக்கு கட்டு போட்டுவிட்டு தாங்கி தாங்கி நடந்துபோகும் மருத்துவச்சி, மேரி மாதா சிலைக்கு அருகில் இருக்கும் விளக்கை மிஷ்கினும் சிறுவனும் எடுத்துச்செல்வது போன்ற காட்சிகளை குறிப்பிடலாம்.

இன்னபிற
டைட்டில் ஷாட்டை பற்றி முந்தாநாள் பேட்டியில் மிஷ்கின் சிலாகித்திருந்தார். ஆனால் அப்படி அந்தக் காட்சியில் எப்படி என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை கலைக்கண்களோடு பார்த்தால் புரியுமோ என்னவோ...? மற்றபடி ஒளிப்பதிவில் புதியதொரு மைல்கல்லை எட்டியிருப்பதாக அதுபற்றி தெரிந்த அறிஞர்கள் சொல்கின்றனர். முதல்பாதியில் முக்கால்வாசி படத்தையும் இரண்டாம் பாதியில் மீதி படத்தையும் காட்டியது தமிழ் சினிமாவிற்கு புதுசு.

எனக்குப் பிடித்த காட்சி
படத்தின் உயிரே அந்த காட்சிதான் என்ற காரணத்தினால் அதுபற்றி விவரிக்க விரும்பவில்லை. திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக தாலாட்டு கேட்க நானும்... என்று இளையராஜாவின் குரல் கேட்கும் நொடியில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுவதை தடுக்க முடியவில்லை.

ரசிகன் தீர்ப்பு
உலகப்படத்தின் காப்பி என்பது தொண்ணூறு சதவிகித காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது.

மிஷ்கின் தனது பேட்டிகளில் போடும் ஓவர் சீன்களை எல்லாம் மறந்து எதையும் எதிர்பார்க்காமல் திரையரங்கிற்கு சென்றால் நிச்சயம் படத்தை ரசிக்க முடியும்.

படத்தின் முதல்பாதியில் ஒரு ஐந்தாறு காட்சிகளில் கண்ணீர் துளிர்த்தது. படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் கண்ணீர் தாரைத்தாரையாக என் கண்களில் இருந்து வழிந்துக்கொண்டிருந்தது. அந்த கடைசி இருபது நிமிடங்களுக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம்.

நந்தலாலா மறக்காம கர்சீப் எடுத்துட்டு போங்க
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 November 2010

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்

வணக்கம் மக்களே...

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த பத்து படங்கள் பற்றிய இந்த தொடர்பதிவை எழுத என்னை நண்பர் அருண் பிரசாத் தலைமையில் அழைத்த இம்சை அரசன் பாபுக்குவும், நம்ம பரம்பரையில் வந்த நாகராஜசோழனுக்கும் (நாங்களும் சோழர் பரம்பரை தான்... தெரியுமில்ல...) நன்றிகள்...


கமல் ரசிகனொருவன் பார்வையில்... என்றுதான் தலைப்பில் போட நினைத்தேன். ஆனால் ஏற்கனவே ஒரு கோமாளி (அட... இதுவும் பதிவர் பெயர்தான்) எழுதிவிட்டதால் அதை தவிர்த்துவிட்டேன். ஒரு தனி மனிதராக நாளொரு வண்ணமும் பொழுதொரு பேச்சுமாக இருக்கும் ரஜினியை நான் என்றுமே விரும்பியதில்லை. ஆனால் ஒரு நடிகராக ரசித்திருக்கிறேன். அதற்காக தலைவா... என்று விளிப்பதெல்லாம் டூ மச் மச்சான்ஸ். ஒரு நாள் முழுவதும் விக்கிபீடியாவின் Rajnikath Filmography பக்கத்தை வைத்துக்கொண்டு மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்துக்கொண்டிருப்பதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் என்னை மேலும் கீழுமாக பார்த்தனர். ரஜினி நடிச்ச எனக்கு பிடிச்ச பத்து படங்களை தேர்வு செய்வதற்குள் இடுப்பு பிடிச்சிகிச்சு.

10. பாட்ஷா
அதீத கமர்ஷியல் படங்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை இருப்பினும் சில படங்கள் மட்டும் விதிவிலக்கு. அதுமட்டுமில்லாமல் முதல் முதலாக தியேட்டருக்கு போய் பார்த்த ரஜினி படம் என்பதனாலும் ஒரு ஈர்ப்பு.
எ.பி.கா: தன் தங்கையிடம் தவறாக பேசும் கல்லூரி நிறுவனரிடம் ரஜினி தனியறையில் பேசும் காட்சி.

9. ராஜா சின்ன ரோஜா / ராஜாதி ராஜா
இரண்டு படங்களிலும் வரும் ஒரே மாதிரியான பங்களா காட்சிகளை பார்த்து சில சமயங்களில் குழம்பியதுண்டு. அடிக்கடி டி.வியில் பார்த்து ரசிக்கும் படங்கள். ராஜா சின்ன ரோஜா படத்தில் அண்ணி ஷாலினி நடித்திருப்பது தனி சிறப்பு.
எ.பி.கா: ராஜா சின்ன ரோஜா.... என்ற பாடலும் அதில் வரும் காட்சியமைப்புகளும். சின்ன வயதில் எல்லோருமே ரசித்திருப்பார்கள். இப்பவும்தான்.

8. எந்திரன்
சில எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் ரஜினியின் வரலாற்றில் முக்கியமான ஒரு திரைப்படம். ஷங்கரின் பிரம்மாண்டம், ஐஸின் குளிர்ச்சி, ரகுமானின் இசை என்று படத்திற்கு ஏகப்பட்ட பலங்கள். தவிர சிட்டி v2.0 சர்ப்ரைஸ்.
எ.பி.கா: ஏற்கனவே விமர்சனத்தில் குறிப்பிட்டது போல கோவில் திருவிழாவில் ரஜினி இரும்பு ஆயதங்களை கவர்ந்திழுப்பதும் பெண்கள் அதைப் பார்த்து சாமியாடும் காட்சி.

7. மிஸ்டர் பாரத்
ரஜினி சத்யராஜ் சவால் காட்சிகளுக்காக மிகவும் ரசித்த படம். சத்யராஜின் என்னம்மா கண்ணு வசனமும் பாடலும் செமையா இருக்கும்.
எ.பி.கா: க்ளைமாக்ஸ் காட்சி. கடைசி வரை சிலையை திறப்பாரா மாட்டாரா என்று டென்ஷனாக இருக்கும்.

6. சந்திரமுகி:
நாயகியை மையப்படுத்தி வந்த திரைப்படம் இருப்பினும் ரஜினியின் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தது. இன்றளவும் ரஜினி வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி வசனங்கள் அனைத்தும் மனப்பாடம்.
எ.பி.கா: பேய் வருவதற்கான அறிகுறிகள் பற்றி வடிவேலுவிடம் ரஜினி விவரிக்கும் காட்சி. (இதுக்கு ஏன்ப்பா நீ இத்தனை முறை திரும்புற. இதுக்கு அந்த சாமியார் தேவலை போல இருக்கே.)

5. பில்லா
தல நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் டி.வி.டி வாங்கி பார்த்த படம். ஒரு கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமான டானாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் அபிநயம் பிடிக்கும் ராஜூவாகவும் கலக்கியிருப்பார்.
எ.பி.கா: தனது குருப்பில் இருந்து வெளியேறும் ராஜேஷை கொல்லும் காட்சி. (பழைய பில்லாவை விட புது பில்லாவில் இந்தக் காட்சி டக்கர்.)

4. தளபதி
ரஜினி போலதான் மணி ரத்னமும் அவரை பிடிக்காவிடிலும் அவரது படங்கள் பிடிக்கும். மகாபாரத கதை பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நட்பை பறைசாற்றும் படமாக என் மனதை கவர்ந்த திரைப்படம்.
எ.பி.கா: கொட்டும் மழையில் ரஜினியிடம் அம்ரேஷ் புரி பேசும் காட்சியும் அதை தொடர்ந்து மம்மூட்டி ரஜினியின் குப்பத்திற்கு வருகை தரும் காட்சியும்.

3. தில்லு முள்ளு:
ரஜினி நடித்த ஒரே முழுநீள நகைச்சுவை திரைப்படம். போன வாரம்கூட டிவியில் ரசித்தேன். தமிழ் சினிமாவில் நிறைய ஆள்மாறாட்ட திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்தப்படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
எ.பி.கா: சந்தேகமே இல்லாமல் இண்டர்வியூ காட்சி.

2. முள்ளும் மலரும்
ரஜினி நடித்த உணர்ச்சிப்பூர்வமான திரைப்படங்களுள் ஒன்று. ரஜினி தனக்கும் நடிப்பு வரும் என்று நிரூபித்த படம். மற்றும் ஷோபா, ஜெயலட்சுமி என்று எனக்கு பிடித்தவர்கள் நடித்த படம்.
எ.பி.கா: ரஜினி தனது கையும் வேலையும் பறிபோன நேரத்தில் பேசும் வசனம். (ரெண்டு கால், ரெண்டு கை இல்லைனாலும் பொழச்சுக்குவான் சார் இந்த காளி.)

1. ஆறிலிருந்து அறுபது வரை
ரஜினி நடித்த படங்களில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். ஒரு குடும்பத்தின் சுமைதாங்கியாக நடித்து பல காட்சிகளில் கலங்க வைத்திருப்பார். எனினும் படத்தின் க்ளைமாக்ஸ் சுபமாக முடிவதால் அதிகம் ரசித்த படம்.
எ.பி.கா: மதிய உணவு இடைவேளையில் ரஜினி தனது அலுவலக காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.

டாப் டென்னை தவற விட்ட படங்கள்:
-          முரட்டுக்காளை
-          பொல்லாதவன்
-          மூன்று முகம்
-          மன்னன்
-          அவர்கள்

எனக்குப் பிடித்த பத்து ரஜினி பாடல்கள் (வரிசை படுத்தவில்லை):
-          சிவ சம்போ.... (நினைத்தாலே இனிக்கும்)
-          கண்மணியே காதல் என்பது... (ஆறிலிருந்து அறுபது வரை)
-          மை நேம் இஸ் பில்லா (பில்லா)
-          ஆசையை காத்துல தூது விட்டு... (ஜானி)
-          பொதுவாக என் மனசு தங்கம்... (முரட்டுக்காளை)
-          ராகங்கள் பதினாறு... (தில்லு முள்ளு)
-          காட்டுக்குயிலு மனசுக்குள்ள... (தளபதி)
-          அடிக்குது குளுறு... (மன்னன) [ரஜினி சொந்தக்குரலில் பாடிய பாடல்]
-          தங்கமகனென்று... (பாட்ஷா)
-          இரும்பிலே ஓர் இருதயம்... (எந்திரன்)

ரஜினியுடன் நடித்த நாயகிகளில் எனக்கு பிடித்தவர்கள்:
-          படாபட் ஜெயலட்சுமி (ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும்)
-          ஸ்ரீ ப்ரியா (பில்லா)
-          மாதவி (தில்லு முள்ளு)
-          விஜயசாந்தி (மன்னன்)

ரஜினியுடன் நடித்த வில்லன் / வில்லிகளில் எனக்கு பிடித்தவர்கள்:
-          சத்யராஜ் (மிஸ்டர் பாரத்)
-          ரகுவரன் (பாட்ஷா)
-          ரம்யா கிருஷ்ணன் (படையப்பா)

ரஜினியுடன் நடித்த காமெடியன்களில் எனக்கு பிடித்தவர்கள்:
-          செந்தில் (வீரா, முத்து)
-          கவுண்டமணி (பாபா, மன்னன்)
-          வடிவேலு (சந்திரமுகி)

இதுக்கு மேல ஏதாவது எழுதினா கல்லடி தான் கிடைக்கும்னு நினைக்குறேன். சரி நிறுத்திக்கிறேன். இப்போ இந்தப் பதிவை தொடர யாரையாவது அழைக்க வேண்டுமல்லவா. ஆனால் ஏற்கனவே பதிவர்கள் பலர் இந்த தொடர்பதிவை எழுதிவிட்டார்கள் எனவே இதை அப்படியே எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்று மாற்றி இன்னொரு ரவுண்ட் விடலாம் என்று தோன்றுகிறது. இதுபற்றி நண்பர் அருன்பிரசாத்திடம் கேட்டு அவரும் ஓ.கே சொல்லிவிட்டார்.

ஆக, எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் பதிவினை எழுதுவதற்கு நான் அழைப்பது :-
- ♥♪•நீ-நான்-அவன்•♪♥
எல்லோரும் எழுதி முடிச்சதும் கடைசியா எனக்கு ஒரு சான்ஸ் கண்டிப்பா கொடுங்கப்பா. அதை எழுதுவதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 November 2010

மந்திரப்புன்னகை - விடிய விடிய விமர்சனம்

வணக்கம் மக்களே...

முதற்கண் பதிவர்களுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து அங்கீகாரம் தந்த இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு நன்றிகள்.

முதல்முறையாக ஒரு ப்ரிவியூ திரையரங்கில் பதிவர்களோடு அமர்ந்து பார்த்த படம். பதிவர் சந்திப்பு குறித்து நிறைய எழுத வேண்டி இருப்பதால் அதை சில நாட்களுக்குப்பின் தனி இடுகையாக எழுதுகிறேன். இப்போது நேரடியாக விமர்சனம் மட்டும்...

கதைச்சுருக்கம்
புகை, மது, மாது என்று வாழ்க்கையை கொண்டாடும் ஒரு இளைஞன், யார் சொல் பேச்சையும் கேட்காத Straight Forward ஆசாமி, தனது தொழிலில் சின்சியராக இருக்கும் ஆர்கிடெக்ட். இப்படிப்பட்ட ஒருவன் தான் கதையின் நாயகன். பீர் பாட்டிலை பல்லால் கடித்து திறக்கும் நவநாகரீக யுவதி தான் படத்தின் நாயகி. ஹோண்டா கார் ஷோரூமில் பணிபுரியும் சேல்ஸ் கேர்ள் கதாபாத்திரம். பாரில் நாயகியை பார்க்கும் நாயகனும், காண்டம் வாங்குமிடத்தில் நாயகனைப் பார்க்கும் நாயகியும் ஒருவர் மீது ஒருவர் இம்ப்ரஸ் ஆகின்றனர். பின்னர் தங்களது தொழில் ரீதியில் இருவரும் பழக நேர்ந்து அது காதலாக மலர்கிறது. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் கதையில் ஒரு திருப்பத்தோடு இடைவேளை.

எல்லோரும் தனக்கு தனது அம்மாவைப் போலவே ஒரு மனைவி கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நாயகன் தனது அம்மாவைப் போல மனைவி அமைந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். அது ஏன் என்பதை பின்பாதியில் பிளாஷ்பேக் மூலம் காட்டியிருக்கிறார்கள். நாயகன் நாயகியை அடித்து நொறுக்கி ரத்தம் கசிய கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைகிறார். ஆனால் அடுத்த காட்சியில் நாயகி திடகாத்திரமாக நம் கண்முன் நிற்க நாயகனோ தான் நாயகியை ஏற்கனவே கொலை செய்துவிட்டதாக சத்தியம் செய்து சொல்கிறார். அதன்பின்னர் நாயகனின் மனப்பிறழ்வு பற்றி மனநல மருத்துவர் விளக்குகிறார். நாயகியும் நாயகனின் சூழ்நிலையை புரிந்துக்கொள்கிறாரா...? இருவரும் இணைகிறார்களா...? என்பதே மீதிக்கதை.

முதல் காட்சியிலேயே நாயகன் படுக்கையில் பரத்தையுடன். ஹீரோவின் கேரக்டரே தற்கால இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு கனவாக இருக்கக்கூடிய கேரக்டர். கை நிறைய சம்பளம், தட்டி கேட்க ஆள் இல்லாத சுதந்திரம், அபார்ட்மென்ட் வாழ்க்கை, விடிய விடிய குடி என்று நகர்கிறது. மேலும் யாரிடம் வேண்டுமானாலும் மனதில் நினைத்ததை நினைத்தபடி பேசிவிடும் பாத்திரம். ஹீரோயின் எதையும் போல்டாக செய்யக்கூடியவர். ஆனால் ரொம்ப நல்லவங்க. ஹீரோ எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்குறாங்க. முதல் பாதியில் புரியாத புதிராக இருக்கும் பல முடிச்சுகள் இரண்டாம் பாதியில் அவிழ்க்கப்படுகின்றன.

கரு.பழனியப்பன் நாயகனாக...
ஹீரோவாக நடிக்கும் டைரக்டர்களின் வரிசையில் மற்றுமொரு புதுவரவு. வேறு ஏதாவது கேரக்டர் என்றால் எப்படி நடித்திருப்பார் என்று தெரியவில்லை. ஆனால் அதிகம் பேசாத அசால்ட்டான நாயகன் பாத்திரத்தை அசால்ட்டாக செய்திருக்கிறார். ஆங்காங்கே தான் பேசும் தத்துபித்து வசனங்கள் மூலம் மனதை கவர்கிறார். அடுத்த படத்திலும் நாயகன் வேடம் ஏற்றால் இதே மாதிரியான ஒரு ரோலை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டும்.

கரு.பழனியப்பன் இயக்குனராக...
இயக்குனர் ஒரு ரசிகன். படத்தில் சொல்லப்படும் கருத்துக்கள், காட்டப்படும் காட்சிகள், கதைமாந்தர்கள் என்று ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குனரின் கிரியேட்டிவிட்டியை காட்டுகிறது. ஆனால் புஷ்கர் காயத்ரியின் கிரியேட்டிவிட்டியைப் போல வீணடிக்கப்படாமல் பயன்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் கதை குடைக்குள் மழை படத்தை நினைவுபடுத்துவதையும், அவ்வப்போது மனநல மருத்துவரை காட்டுவதையும் தவிர்த்திருக்கலாம்.

மீனாட்சி (எ) பிங்கி சர்க்கார்
நாயகனின் கண்கள் நாயகியின் கழுத்துக்கு கீழ் பார்ப்பது இல்லை. ஆனால் நம் கண்களால் ஹீரோயின் கழுத்துக்கு கீழ் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஹீரோயின் டூ பீஸ் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடவில்லை. ஆனாலும் அப்படி ஒரு கவர்ச்சி. இதற்கு முந்தய படங்களில் இவ்வளவு அழகாக தெரிந்ததில்லை. ஹீரோயினின் லிப்ஸ்டிக் உதடுகளை க்ளோசப்பில் காட்டுவது, ஸ்ரீகாந்துடன் வரும் படுக்கையறை காட்சி என்று கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். என்ன ஆச்சர்யம், தமிழ் சினிமாவில் நாயகிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். படம் முழுவதும் நாயகி எதார்த்தமாகவும் பதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். டப்பிங்கிற்கு ஏற்றபடி சரியாக வாய் அசைக்காதது மட்டும் குறையாக தெரிகிறது.

சந்தானம்
முதல் பாதி முழுக்க சந்தானம் கலகலப்பூட்டுக்கிறார். வழக்கமான தனது நக்கல் பாணியிலேயே களை கட்டி கல்லா கட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சம்பிரதாயத்திற்காக சில நகைச்சுவை காட்சிகள் மட்டுமே. அதன்பின் வழக்கமான தமிழ் சினிமா லாஜிக் படி குணச்சித்திர வேடத்திற்கு தாவி விடுகிறார்.

மற்றும் பலர்...
-          தம்பி ராமையா: மைனா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இவரது கேரக்டரைசெஷன் சிறப்பாக இருக்கும்படி இயக்குனர் செய்திருக்கிறார்.
-          இசையருவி மகேஸ்வரி: மேற்படி அம்மணி கேரக்டரில் படத்தின் ஆரம்பத்திலேயே கிளுகிளுப்பாக அறிமுகமாகிறார். வருங்காலத்தில் ஐட்டம் சாங்குகளில் ஆடுவார் என்பதில் ஐயமில்லை.
-          டீலா நோ டீலா ரிஷி: கார்பரேட் மாப்பிள்ளை கேரக்டர். ஹீரோயின் வேறொருவரை காதலிக்கிறார் என்று தெரிந்தும் அவர் பின்னாடியே சுற்றி இறுதியில் டம்மி பீசாக்கப்படுகிறார்.
-          இயக்குனரின் முந்தய படங்களில் நாயகனாக நடித்த ஸ்ரீகாந்த் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும் முத்திரை பதித்திருக்கிறார்.

இசை
வித்யாசாகர் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. தண்ணி போட வாப்பா... என்ற சோஷியலிச பாடல் ரசிக்க வைத்தது. டைட்டில் பாடலாக வரும் சித்தன் முகம் ஒன்று... என்ற பாடல் இயக்குனரின் படமாக்கும் விதத்தால் மனதில் நிற்கிறது. மற்றபடி பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

வசனம்
எந்திரன் படத்திற்கு கிராபிக்ஸ் எப்படியோ அதுபோல இந்தப்படத்திற்கு வசனங்கள். படத்தையே தூக்கி நிறுத்தி இருக்கிறது. அட்ராசக்க ஸ்டைலில் நல்ல வசனங்களை தொகுத்து எழுதினால் நான்கைந்து பதிவுகள் போட்டுவிடலாம். நாயகனுக்கு மனப்பிறழ்வு என்பதால் கதைக்கு சம்பந்தம் இல்லாத எதை எதையோ வசனம் என்ற பெயரில் இணைத்திருக்கிறார்கள். ஆனால் அவைகளும் ரசிக்க வைக்கின்றன. உதாரணம்: இமயமலை உருகி வழிந்தால் முதலில் இந்தியா மூழ்குமா சீனா மூழ்குமா...?

இன்ன பிற
படத்தின் கலை இயக்குனர் யார் என்று தெரியவில்லை. ரசனையாக செய்திருக்கிறார். ஹீரோவின் பாத்திரம் ஆர்கிடெக்ட் என்பதும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல இருந்திருக்கும். ஹீரோ வேலை பார்க்கும் அலுவலக கட்டிடம், அலுவலக எம்.டி வீட்டில் அமைந்திருக்கும் மீன் தொட்டி போன்ற காட்சிகளை உதாரணமாக குறிப்பிடலாம். ஒளிப்பதிவு வேலைகளையும் திறம்பட செய்திருக்கிறார் ராமநாத் ஷெட்டி. நாயகியின் காஸ்டியூம் டிசைனர் யாருங்க...? சேலையிலேயே சோலையாக காட்டியிருக்கிறார்.

எனக்குப் பிடித்த காட்சி
கிட்டத்தட்ட முதல் பாதியில் நாயகன் வரும் காட்சிகள் அனைத்துமே பிடித்திருந்தன. மளிகை கடையில் சத்தமாக காண்டம் கேட்டு அதற்கு விளக்கம் கொடுக்கும் காட்சி, பார்க்கில் தனது தந்தையுடன் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காட்சி போன்றவைகளை உதாரணமாக சொல்லலாம்.

சில குறைகள்:
-          இரட்டை அர்த்த வசனங்கள் எக்கச்சக்கச்சக்கமா... சிரிக்க முடிந்தாலும் ரசிக்க முடியவில்லை.
-          மது நாட்டிற்கு வீட்டிற்கு உயிருக்கு கேடு என்று டைட்டிலில் போட்டுவிட்டு விடிய விடிய ராவாக குடிக்கிறார்கள். நெஞ்சு எரியுது.
-          மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒருவனின் கதையை ஏற்கனவே பல படங்களில் பார்த்த சலிப்பு. முக்கியமாக குடைக்குள் மழை.
-          நாயகன் ஒரே காட்சியில் மனப்பிறழ்வில் இருந்து விடுபடுவது நம்ப முடியவில்லை.

ரசிகனின் தீர்ப்பு
ஒவ்வொரு மனிதனுமே ஏதோ ஒரு வகையில் மனப்பிறழ்வு ஏற்பட்டவன் தான். அது எந்த அளவிற்கு என்பதே ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. என்று இயக்குனர் பாலா அவ்வப்போது தனது பேட்டிகளில் சொல்வார். அந்த கருத்தையே படத்தில் வலியுறுத்தி இருக்கிறார்கள். சைக்கோ கதை என்பதால் வறட்சியாக கதை சொல்லாமல் காமெடி, கவர்ச்சி, கருத்து என்று கலந்து கட்டி அடித்திருக்கும் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். பாஸிடிவான க்ளைமாக்ஸ் என்பது மேலும் ஆறுதல் அளிக்கிறது.

வழக்கம்போல தான் படம் நன்றாக இருக்கிறது. பார்க்க வேண்டிய படம். ஆனால் பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடிக்குமா என்று தெரியவில்லை.

டிஸ்கி: பதிவர்களுடன் படம் பார்த்ததால் ஊருக்கு முந்தி விமர்சனம் போடும் நோக்கில் விடிய விடிய எழுதியிருக்கிறேன். எனவே மறக்காமல் உங்கள் வாக்குகளை கண்டபடி குத்துங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2010

சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாருய்யா

வணக்கம் மக்களே...

ஏற்கனவே இரண்டு பதிவுகளை டைப் அடித்து DRAFTல் வைத்திருக்கும் நிலையில் அவையிரண்டையும் ஓரம்கட்ட வைத்திருக்கிறது ஒரு திரைப்பாடல். ஈசன் படத்திற்காக எழுதப்பட்ட ஜில்லா விட்டு ஜில்லா வந்த... என்று ஆரம்பிக்கும் பாடல். எப்போதுமே எனக்கு ஒரு முட்டாள்தனமான பழக்கம் உண்டு (நிறைய இருக்கிறது... அதில் இதுவும் ஒன்று) ஒரு படத்தின் டைட்டில் பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தை பார்ப்பேன். இல்லையெனில் யார் என்ன சொன்னாலும் அந்தப் படத்தில் கவனம் செலுத்தமாட்டேன். இப்படித்தான் அஞ்சாதே படத்தை புறக்கணித்து பின்னர் படம் வெளிவந்து ஐம்பது நாட்களுக்குப்பிறகு பார்த்தேன். மேலும் களவாணி படத்தை இன்று வரை பார்க்கவே இல்லை. அந்த வரிசையில் ஈசன் படத்தையும் பார்க்கவேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் இப்போது என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.


நேற்றிரவு ஈசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கி கேட்டுக்கொண்டிருந்தேன். மொத்தம் ஐந்து பாடல்கள். ஜேம்ஸ் வசந்தன் இசையில் எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தன. அதாவது, முதல்முறை கேட்கும்போதே பிடிக்கும் அளவிற்கு இருந்தன. ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கூட அதுபோல முதல்முறை கேட்கும்போதே பிடித்துவிடாது. ஐந்து பாடல்களில், நான்கு பாடல்கள் படம் சிட்டி சப்ஜெக்ட் என்பதை புரிய வைத்தன, ஒரு பாடலைத் தவிர. அதுவே இந்தப் பதிவின் தலைப்பாக விளங்கும் அந்தப் பாடல். பாடல் ஆரம்பித்ததும் இப்பல்லாம் எல்லாப் படங்களிலும் கிராமத்து திருவிழா பாடல் ஒன்றினை வைத்துவிடுகிறார்கள் என்று சலித்துக்கொண்டேன். ஆனாலும் பிறந்ததிலிருந்து சிட்டியிலேயே வளர்ந்தவன் என்பதால் மனம் அத்தகைய பாடல்களை விரும்பியது.

வழக்கமான நாட்டுப்புற பாடல்களைப் போலவே வந்தனம் வந்தனம்... என்றே ஆரம்பித்தது. ஆனாலும் அந்தக் குரல் என்னை ஏதோ செய்தது. தஞ்சை செல்வி என்ற நாட்டுப்புற கலைஞர் பாடலைப் பாடியிருக்கிறார். இயல்பான, கரகரப்பான ஒரு குரல். அடுத்த வரிகள்...
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா...
தூத்துக்குடி பொண்ணுய்யா... நான் தூத்துக்குடி பொண்ணுய்யா... என் கதையை கேளுய்யா...
சொகத்தை விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாருய்யா...

இந்த வரிகள் பாடலின் மீது ஒருவித எதிர்பார்ப்பை உண்டு பண்ண ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு உட்கார்ந்தேன். ஒரு சிறுகதையை போல சுருக்கென்று வலிக்க வைத்த அந்த பாடலின் வரிகள் உங்கள் பார்வைக்காக...
அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்...
வாழ்க்கையில போண்டியாம்...
எட்டாவதா என்னப் பெத்த எங்கப்பனுக்கிது தெரியல...
சுப்பனும் அத சொல்லல... சுப்பனும் அத சொல்லல...

வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன்...
வக்கனையா நான் நின்னேன்...
எழயும் கர சேர்த்ததினால் எழரையா நான் ஆனேன்...
எழரையா நான் ஆனேன்...

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை...
பீக்காளிக்கு மறுபிள்ளை...
வளையை போல என்ன தட்டி போனானய்யா மாப்பிள்ளை...
துப்பில்லாத ஆம்பிளை... அவன் துப்பில்லாத ஆம்பிளை...

அஞ்சாம் நாள் மூட்டுவலியில் மாப்பிள்ளை தான் படுத்துட்டான்...
என் உசுர எடுத்துட்டான்...
ஒன்னு போனா ஒன்னு வந்து வருசமெல்லாம் சோர்ந்துட்டான்...
கனவையெல்லாம் ஓடச்சிட்டான்... என் கனவையெல்லாம் ஓடச்சிட்டான்...

காய்ச்சலுக்கு காடு வித்தேன்... இருமலுக்கு நிலம் வித்தேன்...
வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்...
மிச்சமாக நான் நின்னேன்... அட மிச்சமாக நான் நின்னேன்...

ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னச் சுத்தி வந்துச்சு...
இள மனச கெடுத்துச்சு...
உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சது...
வயிறு எங்க கேட்டுச்சு...
ஒரு சாண் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்...
நான் எல்லாத்தையும் விக்கிறேன்...
இப்ப இங்க நிக்கிறேன்... என் கதையை முடிக்கிறேன்...
ஒரு சாண் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்...
நான் எல்லாத்தையும் விக்கிறேன்...
இப்ப இங்க நிக்கிறேன்... என் கதையை முடிக்கிறேன்...

மோகன்ராஜ் என்ற கவிஞர் இந்தப் பாடலை இயற்றியிருக்கிறார். தஞ்சை செல்வியின் தமிழ் உச்சரிப்பு கூட பாடலுக்கு பலம் சேர்த்திருக்கிறது. எனக்கு இசையை பற்றி எதுவும் தெரியாது. சில ஆண்டுகளுக்கு தமிழகத்தின் தென்மாவட்டமொன்றில் நடந்த திருமண விழாவில் ஒரு இசைக்கருவியின் இசையை கேட்க நேர்ந்தது. நாதஸ்வரம் போன்றதொரு இசைக்கருவி அது ஆனால் நாதஸ்வரம் இல்லை. அதன் பெயர் என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. நாயனமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அந்த இசைக்கருவியையே இந்தப் பாடல் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது என்ன இசைக்கருவி என்று விவரம் தெரிந்தவர்கள் கேட்டு சொல்லுங்கள்.

தமிழிஷில் ஓட்டு போடுவது, பின்னூட்டமிடுவது இதற்கெல்லாம் முன்னதாக முதலில் இந்தப் பாடலை கேளுங்கள். கீழே பாடுலுக்கான யூடியூப் இணைப்பை கொடுத்திருக்கிறேன் (ஆடியோ மட்டும்):


படத்தில் இந்தப் பாடலை எந்த இடத்தில் எப்படி இணைத்திருப்பார்கள் என்று தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அதற்காகவே படத்தை பார்ப்பதென்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் நந்தலாலாவும் ஈசனும் ஒரே நாளில் வெளியானால் நந்தலாலாவுக்குத்தான் முன்னுரிமை. பின்ன, தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் தான் காத்திருப்பது.

உபரித்தகவல்: பாடகி சின்மயி இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் பாடலையும் அதன் வரிகளையும் புகழ்ந்து ட்வீட்டியிருக்கிறார்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment