19 April 2011

வில்பர் சற்குணராஜின் சிம்பிள் சூப்பர்ஸ்டார்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

"உலகமெங்கும் உள்ள அன்பார்ந்த உள்ளங்களே... உங்கள் அனைவரையும் பிரசித்தி பெற்ற இந்திய தேசத்தில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். நம் அன்புக்கு பாத்திரமான உலக பிரசித்தி பெற்ற சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜ் தன்னுடைய இரண்டாவது சிடியை வெளியிட்டுள்ளார். இந்த சிடியானது இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஒலிபெருக்கி மூலமாக வரும் இந்த பாட்டுகளை நீங்கள் மிகவும் ரசிபீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். நன்றி வணக்கம்..." இப்படித்தான் ஆரம்பிக்கிறது வில்பர் சற்குணராஜின் சிம்பிள் சூப்பர்ஸ்டார் இசைப்பேழை. தொடர்ந்து இதே வரிகள் ஆங்கிலத்தில், பின்னணியில் இந்திய தேசிய கீதம்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா படத்தை தாளித்து ஒரு நகைச்சுவை இடுகை போட்டிருந்தேன். அதே பாணியில் இப்போது சிம்பிள் சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜை கலாய்த்து ஒரு ஜாலி பதிவை போடலாம் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன், பாடல்களை கேட்கும்வரை. இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்குணராஜின் பாடல்களை போட்டு கிறுக்குத்தனமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்.

யார் இந்த வில்பர் சற்குணராஜ்...? வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், கழுத்தில் டை என்று சேல்ஸ்மேன் போல காட்சி தரும் இவரை யூடியூப் பயனாளிகளுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். இந்தியாவின் முதல் யூடியூப் நட்சத்திரம் என்று கூட சொல்கிறார்கள். கூகிளில் "WIL" என்று டைப் செய்தால் வில் ஸ்மித்துக்கு முன்பாக வில்பர் சற்குணராஜ் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கிழக்கத்திய கழிப்பறையை பயன்படுத்துவது எப்படி என்று மேலை நாட்டவர்களுக்கு வகுப்பெடுத்த வாத்தியார். இவருடைய "லவ் மேரேஜ்" ஒளிப்பாடல் யூடியூபில் மிகப்பெரிய ஹிட். இப்போது இவரே இசையமைத்து, பாடல் எழுதி, பாடி வெளியிட்டுள்ள இசைப்பேழை தான் சிம்பிள் சூப்பர்ஸ்டார்.

மொத்தம் பதிமூன்று பாடல்கள். அவற்றுள் மூன்று பாடல்கள் முதல்முறை கேட்டபோதே பச்சக் என்று மனதில் ஒட்டிக்கொண்டு பலமுறை கேட்கத்தூண்டின. பாடல் வரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் டி.ராஜேந்தர் ஆங்கிலத்தில் ரைம்ஸ் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஆனாலும் பிடித்திருக்கிறது. சிம்பு - லொள்ளு சபா ஜீவா இருவரது குரல்களையும் சேர்த்து பிசைந்ததுபோல ஒரு வசீகரமான குரல்.

அட்டைப்பட பாடலான சிம்பிள் சூப்பர்ஸ்டார் பாடல் முதல் பாடலுக்கு சரியான தேர்வு. இசைப்பேழையின் மீது ஒரு அதீத ஆர்வத்தை தூண்டும் விதமாக அந்தப்பாடல் அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து வரும் சூப்பர் மொபைல் என்ற பாடல் நவீன யுகத்தில் மொபைல் போனின் அவசியம், மகத்துவம், அற்புதங்களை எடுத்துச் சொல்லுகிறது.

பாங்க்ரா நடனத்தையும் பாம்பு நடனத்தையும் பற்றி நமக்கு வகுப்பெடுக்கும் பாடல்கள் உள்ளன. குறிப்பாக பாங்க்ரா நடனத்தைப் பற்றி பாடும்போது, பாங்க்ரா நடனம் ஆடுவதற்கு பஞ்சாபியாக இருக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. "PUT YOUR HANDS IN THE AIR... DANCING LIKE YOU DONT CARE... THIS IS THE FIRST CLASS BANGHRA..." என்று ஆங்கில விளக்கம் தருகிறார்.

அனீ ரோஸு... அனீ ரோஸு... என்றொரு பாடல். கிராமிய இசையையும் மேற்கத்திய இசையையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்களே, அது உண்மை என்று இந்தப்பாடலை கேட்டுதான் தெரிந்துக்கொண்டேன். ஆமாங்க, எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தாலும் தன்னையே அறியாமல் நடனமாட வைக்கிறது இந்தப்பாடல். பாடல் வரிகளிலும் ஆங்காங்கே நகைச்சுவை பொதிந்திருக்கிறது.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றி ஒரு பாடல் இருக்கிறது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் கிளம்பும் நேரம் முதற்கொண்டு ரயிலில் இருக்கும் மேற்கத்திய கழிவறை வரைக்கும் புட்டு புட்டு வைக்கிறார். (மனிதருக்கு கழிவறை மீது அப்படி என்னதான் ஆர்வமோ...?)

அப்புறம், லவ் மேரேஜ் பாடல். முன்னரே குறிப்பிட்டது போல இது ஏற்கனவே சூப்பர் ஹிட்டான பாடல். இந்தப்பாடலை கேட்டபோது, "உங்க நாட்டுல எல்லாம் அம்மா, அப்பா பாக்குறவங்கள தான் கல்யாணம் பண்ணிப்பீங்களாமே..." என்று விசித்திரமாக என்னிடமொரு கேள்வி கேட்ட பிரேசில் தோழி ஏனோ நினைவுக்கு வந்தார்.

ஒட்டுமொத்தமாக இசைப்பேழையை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் இது ஒரு கலாச்சார கதவு. மேலை நாட்டவர்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை புரிந்துக்கொள்ளும் வகையில் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தொண்ணூறு சதவிகிதம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளது ஒரு பிளஸ் பாயின்ட். குறிப்பாக, பாங்க்ரா நடனம், பாலிவுட் ஸ்டார், வைகை எக்ஸ்பிரஸ் போன்ற பாடல்கள் வெளிநாட்டவர்களுக்கு ஒரு டூரிஸ்ட் கைடு போல விளங்குகின்றன. அதேபோல, வங்கதேசத்தில் அமைந்துள்ள பனானி ஏரியைப் பற்றிய பாடலும், இத்தாலியில் அமைந்துள்ள கலியாரி தீவைப் பற்றிய பாடலும் நமக்கு ஒரு டூரிஸ்ட் கைடாக அமைந்துள்ளன.

குறைகள் என்று சொல்ல வேண்டுமென்றால், சில இடங்களில் இரைச்சலின் காரணமாக பாடல் வரிகளை சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. சில பாடல்கள் ஒரே மாதிரியாக, குறிப்பாக கிறிஸ்தவர்களின் துதிப்பாடல்களைப் போலவே அமைந்துள்ளன.

எனிவே, தனியொரு மனிதராக பாடல் எழுதி, இசையமைத்து, பாடி இப்படியொரு உயரத்தை எட்டியிருக்கும் வில்பர் சற்குணராஜின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும். அவருக்கு எனது சல்யூட். அதுமட்டுமில்லாமல் சத்தமே இல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருவதாக அறிகிறேன். அப்படி இருக்கும்போது, இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் செய்ததற்காக மட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 April 2011

பிரபா ஒயின்ஷாப் - 04042011

வணக்கம் மக்களே...

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப்பின் பிரபா ஒயின்ஷாப்பை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************
ஒரு கடைக்கோடி கிரிக்கெட் ரசிகனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா வெற்றியடைந்ததும், ங்கொய்யால மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடலாமா என்றென்னுமளவிற்கு குறுந்தகவல்கள் குவிந்துக்கொண்டிருந்தன. சில குறுந்தகவல்கள் என்னையும் ரசிக்க வைத்தன. இன்னொருத்தன் அனுப்பியிருந்தான், 1983ம் ஆண்டு ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததாம் (இந்தியா உலககோப்பை வென்றது). 1996ம் ஆண்டு ராவணன் சீதையை லவட்டிக்கொண்டு போனானாம் (இலங்கை கோப்பையை வென்றது). 14 வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போது ராமன் சீதையை மீட்டு வந்துள்ளானாம். தக்காளி... யாருடா உங்களுக்கு இந்தமாதிரி எல்லாம் யோசிக்கக் கத்துக்கொடுக்குறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த ராமன் - ராவணன் புராணத்தையே பாடுவீங்க. அந்த குறுந்தகவலை உருவாக்கியவன் மட்டும் என் கையில் கிடைத்தால் @#$%^&*

**************************************************
ஏற்கனவே ஒரு ஒயின்ஷாப் இடுகையில் ஓவியர் இளையராஜா பற்றி சிலாகித்திருந்தேன். மேலும், ஒரு குறிப்பிட்ட ஓவியம் இணையத்தில் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தேன். இப்போது கூகிள் பஸ் பயணிகள் சிலரது உதவியால் அவரது இணையப்பக்கம், மெயில் ஐடி, அலைபேசி எண் என்று சகலமும் கிடைத்திருக்கிறது.
இணையப்பக்கம்: http://www.elayarajaartgallery.com
மெயில் ஐடி: artistilayaraja@gmail.com
அலைபேசி எண்கள்: 98411 70866, 94882 21569

வீட்டு, அலுவலக முகவரி கூட கிடைத்தது. யாருக்காவது அவசியமாக தேவைப்பட்டால் தெரிவிக்கவும், மெயிலுகிறேன்.

**************************************************
இந்த உலகக்கோப்பையின் போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களில் High Definition தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் ரொம்பவே டூ மச். அதுவும் கிட்டத்தட்ட எல்லா விளம்பரங்களும் ஒரே தீமில். எது டிவியில காட்டுறாங்க, எது நிஜத்துல நடக்குதுன்னு வித்தியாசமே தெரியாதாமாம். அதிலும் கிரிக்கெட் பந்தில் இருந்து வைரங்கள் தெறிப்பது போல சித்தரிக்கப்பட்ட தோனி தோன்றும் சோனி பிராவியா (என்ன பிராவோ...?) விளம்பரம் ஏகத்தும் எரிச்சலூட்டியது. (ம்ம்ம்... நம்ம வீட்டுல தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி தான்).

**************************************************
தமிழில் தட்டச்சு செய்வது குறித்து உதவி கேட்டிருந்தேன். என்னையும் மதித்து மெயில் அனுப்பிய Syed Mustafa, மனம் திறந்து... (மதி), LK, Yuva, மாப்ள ஹரிஸ், Jayadev Das, prakash kumar, Pari T Moorthy, பிரகாசு, Rathnavel Natarajan, venkat kumar, modi rizi ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அழகியுடன் பழகிக்கொண்டிருக்கிறேன். மறுபடியும் குறில் - நெடில், வல்லினம் - மெல்லினம் - இடையினம் என சில சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் இதைவிடவும் சிறப்பானதொரு தட்டச்சு மென்பொருள் கிடைக்காதென்றே எண்ணுகிறேன்.

**************************************************
இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

**************************************************
வரலாற்றில் இந்த நாள்:
35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். (என்ன பன்னிக்குட்டி சிம்ரனோமேனியா பார்ட் டூ ரெடியா...???)

**************************************************
ட்வீட் எடு கொண்டாடு:

கருணாநிதியின் கதாநாயகி தேர்தல் அறிக்கையை வில்லனாக வந்த கருத்துக்கணிப்புகள் கதறக் கதறக் கற்பழிப்பதை என்னென்று சொல்ல?!


ஸ்ரீலங்கா அணியில்மட்டும் 22 ஃபீல்டர்கள் இருக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறார் என் மனைவியார் #எல்லாப்பக்கமும் நிக்கறாங்களே

 
உலகக்கோப்பையை இந்தியா வென்ற செய்தியை மட்டும்தான் ஜெயா டிவியும், கலைஞர் டீவியும் ஒரே மாதிரி தெரிவித்தன.

 
மின்னலே படமும் துள்ளுவதோ இளமை பாடல்களும் பிடிக்காது என சொல்லும் ஆண் நண்பர்களை இன்னும் சந்திக்கவில்லை., #டிபால்ட் ரசனை போல ;)

**************************************************
பதிவுலகில் புதியவர்:
உரைகல் - ஐ.ரா.ரமேஷ்பாபு
பதிவுலகின் பன்னிரண்டு நாள் குழந்தை. நம்மை சிரிக்கவும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறது இந்தக்குழந்தை. இவருடைய மிஸ்டர்.எக்ஸ் ஜோக்ஸ் படித்து கொஞ்சம் சிரியுங்கள், ஊழல் குறித்த இடுகையை படித்து கொஞ்சம் சிந்தியுங்கள். ஜாக்கியைப் போல உங்களுக்கும் பெண்குழந்தை வேண்டுமென்றால் இதைப் படியுங்கள்.

**************************************************
எனக்குப் பிடித்த பாடல்:
குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தில் "விழிகளிலே விழிகளிலே..." என்றொரு பாடல். ட்ரைலரில் கேட்டபோது கொஞ்சமாக வசீகரித்தது. இப்போது காணொளியாக பார்க்கும்போது ரொம்பவும் பிடித்திருக்கிறது. காதலிக்கும் எல்லோருக்கும் பிடிக்கவே செய்யும். ஆனாலும் ரம்யா நம்பீசனை சைட் அடிக்காமல் இருக்க முடியவில்லை. செம ஹோம்லிப்பா...!!!

**************************************************
இந்த வார புகைப்படம்:
கோடைகாலத்திற்கு இதமாக உங்களுக்காக ஒரு தர்பூசணி...!!!

**************************************************
இந்த வார காணொளி:
சென்ற வாரத்தில் ஒருநாள் தெரியாத்தனமாக இந்த காணொளியைப் பார்த்துவிட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். நீங்களும் அத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக விரும்பவில்லை. எனினும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் கீழுள்ள இணைப்பை சொடுக்கிப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=f9vty62P2hE

**************************************************
இந்த வார எஸ்.எம்.எஸ்:
"கறை நல்லது..." - கவுதம் கம்பீர்

**************************************************
ஒரு புதிர்க்கேள்வி:
5+3+2=151022
9+2+4=183652
8+6+3=482466
5+4+5=202541
அப்படின்னா 7+2+5=???????

(விடை சொல்பவருக்கு மட்டும் வடை வழங்கப்படும்...)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 April 2011

லத்திகா - "போட்ராமொக்க" விமர்சனம்

வணக்கம் மக்களே... 

சின்னத்திரையில் போடும் குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரையில் வெளியாகும் குறும்புப்படம் வரை எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக விமர்சனம் எழுதும் "பதிவுலக பாக்யராஜ்" சி.பி.செந்தில்குமார் திடீரென ஓலகப்படம் லத்திகாவிற்கு விமர்சனம் எழுதாமல் போக, பதிவுலகமே அதிர்ந்து போயிருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்பான பதிவுலக சூழ்நிலையில் சிபியை தொடர்புக்கொண்டோம். மனிதர் சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகாததால் கவலையுடன் கட்டிங் அடித்துக்கொண்டிருந்தார். லத்திகா விவகாரம் குறித்து விசாரித்தபோது "அந்த ஹீரோவின் முகத்தை பார்த்தாலே வாமிட் வருது" என்று கருத்து தெரிவித்தார். (ம்ம்ம்... அமைதி அமைதி பவர் ஸ்டார் ரசிகர்கள் கோபம் கொள்ள வேண்டாம்). அவருக்கே அந்த நிலையென்றால் நமக்கு...!!! இருப்பினும் தொடர்ச்சியாக அரசியல் தோசையை தின்றுக்கொண்டிருக்கும் பதிவுலக வாசகர்களுக்கு கொஞ்சம் காமெடி காராசேவு தேவையல்லவா. எனவே அத்தகைய சமூகப்பருப்பை சுமந்துக்கொண்டு திரையரங்கிற்கு சென்றேன்.

ஆத்தா... பையன் பயப்படுறான் ஆத்தா...
தியேட்டர் நொறுக்ஸ்
- பல வருடங்களுக்குப்பின் சென்னை அபிராமி திரையரங்கம் சென்றிருந்தேன். ஒவ்வொரு திரையரங்கமும் ஒவ்வொரு தீமில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நான் சென்ற திரையரங்கம் சீன வடிவமைப்பை கொண்டிருந்தது.

- நேற்றைய முந்தயநாள் செய்தித்தாளில் லத்திகாவிற்கு "காதலர்கள் கொண்டாடும் கண்ணியமான படம்" என்று விளம்பரம் போட்டிருந்தார்கள். அது நூறு சதவிகிதம் உண்மை. நிறைய பேர் ஜோடியாக வந்திருந்து இறுதி இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தனர்.

- இடைவேளையின் போது யதார்த்தமாக திரும்பிப்பார்த்தால் ஒரு ஜோடி பதார்த்தமாக ரொமான்ஸ் செய்துக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் விலகிக்கொண்டனர். (இன்னும் எத்தனை ஜென்மத்துக்கு பாவம் சுத்தி அடிக்கப்போகுதோ...!!!)

- அநேகமாக பவர் ஸ்டாரின் சொந்தபந்தம் என்றெண்ணுகிறேன், சுமார் 20 பேர் ஓசி டிக்கெட்டில் உள்ளே நுழைந்திருந்தனர். நான் 110 ரூபாயை வீணடித்ததை நினைத்து வயிரெரிந்துக்கொண்டிருந்தேன்.

- விவரம் தெரியாமல் உள்ளே நுழைந்திருந்த சிலர் இடைவேளையின் போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினார்கள்.

கதைச்சுருக்கம்:
ஒரு கட்டிட கட்டுமான நிறுவனம் வைத்திருக்கிறார் பவர் ஸ்டார். ஊரே போற்றிப்புகழும் அவரின் வாழ்வில் திடீரென புயல் வீசுகிறது. அவர் குழந்தையையும், மனைவியையும் யாரோ கடத்திவிட தலைவர் அவர்களை மீட்கிறாரா...? இல்லையா...? என்பதை வெண்திரையில் பார்த்து வெந்து சாவுங்கள்.

பவர் ஸ்டார் சீனிவாசன் - இரண்டாவது படமென்றே சொல்ல முடியவில்லை. ரொமான்ஸ், சென்டிமன்ட், ஆக்ஷன், டான்ஸ் என்று மிரட்டியிருக்கிறார். ஒப்பனிங் சாங் முடியும்போதே டிக்கெட் எடுத்த 110 ரூபாய் கழிந்துவிட்டது, கூடவே நானும் கழிந்துவிட்டேன். தலைவர் ஓடிவரும் ஸ்டைலைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். பெருச்சாளி பொந்துக்குள்ள ஓடுமே அதே போன்றதொரு  ஓட்டம். கிட்டத்தட்ட பாதி படத்துக்கு ஓட மட்டும்தான் செய்கிறார்.

முதல் பாதி முழுக்க திகட்ட திகட்ட திணிக்கப்பட்ட ஹீரோயிசம் இரண்டாம் பாதியில் இம்மியளவு கூட இல்லை. ஹீரோ அழுது அழுதே சாகடிக்கிறார்.

இரண்டு கதாநாயகிகள். இருவருமே எப்பொழுதும் இரவாடையுடனேயே தரிசனம் தருகின்றனர். இருப்பினும் நமக்கு தப்பாவே பார்க்கத் தோணலை.(அவ்வளவு நல்லவனாடா நீ...? என்று சந்தேகிக்க வேண்டாம். இரண்டுமே மொக்கை பிகருங்க). இந்த லட்சணத்தில் போஸ்டர்களில் பிட்டுப்பட ரேஞ்சுக்கு போஸ் வேறு கொடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர சம்பந்தமே இல்லாமல் ரகுமானை அடிக்கடி காட்டுகிறார்கள். (சஸ்பென்ஸாமாம்....)

படத்தில் இரண்டு பாடல்கள் அருமையாக இருந்தன. ஒன்று "இதயக்கனி" படத்தில் இடம்பெற்ற "நீங்க நல்லா இருக்கோணும்" என்ற பாடல். மற்றொன்று "டாக்டர் சிவா" படத்தில் இடம்பெற்ற "மலரே குறிஞ்சி மலரே..." என்ற பாடல். இது இல்லாம இன்னும் நாலஞ்சு பாடல் இருக்கு. எல்லாமே ஸ்பூப் ரகம். அதிலும் இரண்டாம் பாதியில் படம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும்போது கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு ராப் பாடல். தலைவரைச் சுற்றி பத்து அழகிகள் தொட்டுத்தொட்டு ஆட தலைவர் அவர்களை கண்டுக்கொள்ளாமல் அசால்ட்டாக கடந்துபோகிறார்.

படம் ஆரம்பிக்கும்போது அய்யன் திருவள்ளுவருக்கு நன்றி கார்டு போட்டார்கள். அது ஏனென்றால், நம்ம பவர் ஸ்டாரின் பர்ஸ்ட் நைட் பாடலில் ஒரு குறளை பாடல் வரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அது காமத்துப்பால் என்று சந்தேகிக்க வேண்டாம். "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதே அந்தக்குறள். ங்கொய்யால அதை ஏன் பர்ஸ்ட் நைட்டுல பாடுறாருன்னுதான் எனக்கு புரியவே இல்லை.

மேலும், கிளைமாக்ஸுக்கு முன்பு வரும் ஒரு சோகப்பாடலில் "இது என் விதி என்பதா... இறைவன் செய்த சதி என்பதா... எவரோ நமக்கு செய்த கதி என்பதா..." என்று நம் நிலைமையைப் பற்றி அவரே பாடுகிறார்.

ஆங்... தொழில்நுட்பத்தைப் பற்றி சொல்ல மறந்துட்டேனே. கார் கண்ணாடியில் காட்சிகள் தெரியும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்துல ஏகப்பட்ட கருத்து சொல்லியிருக்காங்க...
- அனாவசியமாக மனைவியின் மீது சந்தேகப்படக்கூடாது.
- வீட்டில் மனைவியை வைத்துக்கொண்டு பி.ஏவிடம் ஜொள்ளு விடக்கூடாது.
- முக்கியமா, இந்தமாதிரி படத்தை இனி பார்க்கக்கூடாது.

ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்க பார்ப்போம்
சூப்பர்ஸ்டாரின் பாபா, இளையதளபதியின் சிவகாசி, சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்னி போன்ற படங்களை கம்பேர் செய்யும்போது இந்தப்படத்தில் ஹியூமர் ரொம்பவே கம்மிதான். இருப்பினும் இந்தப்படத்தை ஒருமுறை பார்த்தால் எப்பேர்ப்பட்ட மொக்கை படத்தையும் பார்க்கக்கூடிய ஒரு அபார தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.

எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 62 (முன்னாடி ஒரு மைனஸ் சிம்பல் போட்டுக்கோங்க...)
எதிர்ப்பார்க்கப்படும் குமுதம் ரேட்டிங்: த்தூ...!!! (இது புது ரேட்டிங்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment