26 November 2020

வர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: தொடக்கம்

வர்கலா பயணத்தில் உண்ண, உறங்க, உற்சாக பானம் அருந்த என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். ஏற்கனவே வர்கலா சென்று வந்த சில நண்பர்களிடம் தகவல்கள் கேட்டிருந்தேன். அதில் ஒரு அண்ணன் செளத் வேணாம் நார்த் போ, கீழே இருக்காதே மேலே போயிடு என்று சில சங்கேத குறிப்புகள் கொடுத்தார். எனக்குப் புரியவில்லை. நான் கீழே மேலே பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை. மகிழ்ச்சிதான் முக்கியம். பின்னர், வர்கலாவின் புவியியலை ஆராயும்போது தான் அண்ணன் சொன்னது புரிய வந்தது.

கோவாவைப் போலவே வர்கலாவையும் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கலாம். அதே போல வடக்கு ஆரவாரமானது, தெற்கு அமைதியானது. இரண்டுக்கும் மத்தியில் வர்கலா ஹெலிபேட். வர்கலாவைப் பற்றி கூறும்போது க்ளிஃப் (cliff) என்று குறிப்பிடுகிறார்கள். Cliff என்றால் செங்குத்தாக இருக்கக்கூடிய சிறிய குன்று (குறிப்பாக கடற்கரைக்கு அருகில்) என்று பொருள். மேலே குன்று, கீழே கடல். அண்ணன் சொன்னது இதுதான் !

நான் எனது நான்கு நாள் பயணத்தை இரண்டாக வகுத்துக் கொண்டேன். முதலிரு நாட்கள் தெற்கு, அடுத்த இரு நாட்கள் வடக்கு. தெற்கில் நான் சல்லடை போட்டு தேடிச் சலித்து முன்பதிவு செய்த விடுதியின் பெயர் ஆதாமிண்ட ஸ்வர்க்கம் (Adam’s Paradise). எனக்காகவே பிரத்யேகமாக தயார் செய்தது போலிருந்தது அவ்விடுதி !
 
விடுதி கட்டிடம்
ஹெலிபேடில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில், கிட்டத்தட்ட வர்கலாவின் தென்மூலையில், ஒரு அமைதியான தெருவில் அமைந்திருக்கிறது விடுதி. தனிப்பயணி என்பதால் ஒருவர் மட்டும் தங்கும் சிறிய அறையை பதிவு செய்திருந்தேன். வாடகை நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய். 
 
நீச்சல் குளம்
குன்றின் உச்சியில் விடுதி, முதல் மாடியில் அறை, கீழே நீச்சல் குளம், அதையொட்டி சிறிய லான், அங்கிருந்து கீழே பார்த்தால் பிரம்மாண்டமான அரபிக்கடல், விடுதியிலிருந்து கடற்கரைக்கு இறங்க இரும்பால் செய்யப்பட்ட படிக்கட்டுக்கள். நல்ல வாரநாட்களாக பார்த்து பயணம் செய்ததால் இதையெல்லாம் அனுபவிக்க விடுதியில் என்னைத் தவிர வேறு விருந்தினர்கள் யாருமில்லை !

லானிலிருந்து கடல் !
அறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் ஒரு கனவு அறை இருக்குமல்லவா. என்னுடைய கனவு அறை என்பது ஒருவர் மட்டும் படுக்கும் சிறிய கட்டில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு அலமாரி, சுத்தமான குளியலறை, கழிப்பறை. அது அத்தனையும் கச்சிதமாக அமைந்திருந்தது அந்த அறையில். தொலைக்காட்சி மட்டும் இருந்திருந்தால் பரிபூரணம் ! 

அறையில் மேஜை நாற்காலி
இந்த கோவிட், கீவிட் எல்லாம் வந்தபிறகு, தீவிரமாக WFH செய்துக் கொண்டிருந்த சமயத்தில் வர்கலாவில் நான் தங்கிய அந்த அறையை நினைத்துக் கொள்வேன். நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய் வாடகை. மொத்தமாக நீண்ட நாட்களுக்கு வாடகைக்குப் பிடிப்பதென்றால் இன்னும் குறைவான தொகைக்குக் கூட கிடைக்கும். மேஜை, நாற்காலி, நல்ல காற்று, கடற்கரை, கேரள உணவு. BEVCO சரக்கு, அப்படியே வைக்கம் முகம்மது பஷீரைப் படித்துக்கொண்டு, வாரம் ஒருநாள் ஃபஹத் ஃபாஸில் படமோ, பார்வதி படமோ பார்த்துக்கொண்டு மீதமிருக்கும் காலத்தை நிம்மதியாகக் கழித்திருக்கலாம் என்று தோன்றும்.

அந்த விடுதியில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் ஏதோ அந்தப்புரத்தில் தங்கியிருந்தது போல ஒரு அணுக்கம். கட்டோடு குழலாட ஆட என்று ரிலாக்ஸ்டாக நீச்சல் குளத்தில் மிதப்பது, லானில் அமர்ந்து அரபிக்கடலை ரசிப்பது, இரவில் மதுவுடன் லானில் அமர்ந்து கடலில் சின்னச் சின்ன படகுகளில் தெரியும் வெளிச்சப் புள்ளிகளின் தொகுப்பைப் பார்ப்பது என்று ரம்மியமாகக் கடந்தன அந்நாட்கள்.

இரவு நேரத்து கடல்

குறைகள் என்று பார்த்தால் நீச்சல் குளத்தில் இலைகள் மிதக்கும். லக்ஸுரியை விரும்பும் ஆட்களுக்கு ஒத்து வராது. இரவு நேரத்தில் வெளியே பூச்சிகள் தொந்தரவு (அநேகமாக இது எல்லா விடுதிகளிலும் உண்டு). நான் ஒரே ஒரு கெஸ்ட் என்பதால் விடுதியில் உள்ள உணவகத்தில் சமைக்கவில்லை. நல்ல உணவகம் வேண்டுமென்றால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள டவுனுக்கு செல்ல வேண்டும் அல்லது அதே அளவு தொலைவில் உள்ள வடக்கு வர்கலாவுக்கு செல்ல வேண்டும்.

முதல் நாள் மாலை. சுமார் ஆறரை மணி இருக்கும். சைக்கிளை எடுத்துக் கொண்டு வர்கலா டவுனுக்கு கிளம்பினேன். BEVCO சென்று மது வாங்க வேண்டும், மதுவுடன் சாப்பிட பழங்கள் மற்றும் இரவு உணவு வாங்க வேண்டும். நிதானமாக ஒவ்வொன்றையும் வாங்கி முடிப்பதற்குள் இருட்டிவிட்டது. ஒரு அரை கி.மீ. வரை டவுன் கடைகளும் வெளிச்சங்களும் உதவின. அதன் பிறகு வெறும் இருட்டும் காடும் தான். ஆளரவமற்ற குறுகிய சாலைகள். திடீர் திடீரென ஒளியை பாய்ச்சியபடி கடந்து செல்லும் வாகனங்கள். ஒரு மாதிரி ஹாண்டட் அனுபவமாகிவிட்டது.

அடுத்த நாள் அதே தவறை செய்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். விடுதியில் இருந்து சுமார் முக்கால் கி.மீ. தூரத்தில் ஒரு உணவகம் இருப்பதை பகலிலேயே குறித்து வைத்துக்கொண்டேன். பக்கத்தில் தானே என்று எட்டு மணி வரைக்கும் விடுதியில் இருந்து உ.பா. அருந்திவிட்டு சாவகாசமாகக் கிளம்பினேன். நடைதொலைவு என்பதால் சைக்கிள் எடுத்துச் செல்லவில்லை. ஊர் ஓய்ந்துவிட்டது. ஆள் நடமாட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது. யோசித்துப் பாருங்கள், இருள் சூழ்ந்த சாலை, தூரத்தில் ஒரே ஒரு வீடு, அதிலிருந்து வரும் வெளிச்சம், அங்கிருந்து கேட்கும் தொலைக்காட்சி சத்தம் ஒரு மனிதனை எவ்வளவு தொந்தரவு செய்யும். இது போதாதென்று தெரு நாய்கள் வேறு. இத்தனையையும் கடந்து உணவகத்திற்கு சென்றால் அதன் வாயிலுக்கும் உணவகம் இருக்கும் பகுதிக்குமே முன்னூறு மீட்டர் இருள் பாதை. ஆக, அன்றைய இரவும் திகிலாகவே கழிந்தது.

இவையெல்லாம் தனிப்பயணத்தின் சாதகங்களா பாதகங்களா என்றால் இரண்டும் தான் ! தனியாகச் சென்றதால் தான் இவ்வளவு த்ரில் கிடைத்தது. ஆனால் நண்பர்களுடன் சென்றிருந்தால் இது அப்படியே வேறு மாதிரி உற்சாகமான நிகழ்வாக மாறியிருக்கும்.

முக்கால் கி.மீ. நடந்து சென்றடைந்த அந்த உணவகத்தில் மூன்று மேல்நாட்டு சீமாட்டிகள் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கிட்டாரோ ஏதோ இசைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் பஃபலோ சோல்ஜர் பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஏனோ தேனிசைத் தென்றல் தேவாவும், கெளசல்யாவும் நினைவுக்கு வந்து போனார்கள்.

அடுத்த பதிவு: வடக்கு கடற்கரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2020

வர்கலா – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

ஒரு திரைப்படமோ, ஒரு புத்தகமோ மனதுக்கு பிடித்துவிட்டால் அதன் இயக்குநரின் / எழுத்தாளரின் மற்ற படைப்புகளை தேடுவோமில்லையா. அது போல கோவா சென்றுவந்த பிறகு இந்தியாவில் கோவாவைப் போல என்னென்ன ஐட்டங்கள் இருக்கின்றன என்று தேடத் துவங்கினேன். அத்தேடல்கள் அனைத்தும் இரண்டு ஊர்களை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்துக் கொண்டே இருந்தன. 


ஆம், கோவாவிற்கு இரண்டு தங்கைகள். ஒன்று, கோகர்னா. மற்றொன்று வர்கலா ! 

இரண்டில் ஒன்று என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளவில்லை. இரண்டும் வேண்டும். ஆனால் எது முதலில் என்ற கேள்வி வந்தபோது இரண்டு அங்குலம் முன்னால் வந்து நின்றது வர்கலா. ஏனெனில் அது கேரளா ! மென்சோகம் இழையோடும் சாலைகள், இருமருங்கே நீண்டு வளர்ந்த தென்னைகள், கட்டஞ்சாயா, கள்ளு, பீஃப் கறி இவையெல்லாம் தாண்டி கேரளா என்பது ஒரு உணர்வு !

வர்கலா செழிப்பான கடற்கரை ஸ்தலம் மட்டுமில்லாமல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கூட. அரபிக்கடலின் முத்து, தென்னகத்து காசி போன்றவை வர்கலா பெற்ற பெயர்கள். பாண்டிய மன்னனின் பாவம் போக பிரம்மன் கோவில் கட்டச் சொன்ன இடம், நாரதர் வீசிய வல்கலம் (மரப்பட்டை) வந்து விழுந்த இடம் என்று புராணமும் அதன் பங்குக்கு வர்கலா பற்றி கதைகள் சொல்கின்றன. இங்குள்ள அஞ்செங்கோ (அஞ்சு தேங்காய் என்பதின் வழுவல்) கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயே அரசால் நிர்மாணிக்கப்பட்டது. அரசுக்கு பாதுகாப்பு அரணாகவும், அதே சமயம் வணிகப் தொடர்புக்கு பயன்படுபவதாகவும் இருந்திருக்கிறது இந்தக் கோட்டை. ஆன்மிகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு வர்கலாவைச் சேர்ந்தவர். இவர் அமைத்த சிவகிரி மடம் இன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.
 
எனது இந்தப் பயணம் ஒரு சோலோ பயணம். Solo travel / traveller என்கிற சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களாக தனிப்பயணம் / தனிப்பயணி என்பவற்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கவிஞர் மனுஷி. இனி நாமும் அவற்றையே பயன்படுத்துவோம். சில தவிர்க்க முடியாத / எழுத்தில் கொண்டு வர முடியாத காரணங்களுக்காக எனது பயணத்துணைகள் என்னோடு தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால் நான் தனிப்பயணியானேன் ! 

உண்மையில் தனிப்பயணங்களில் சம அளவில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. சாதகங்களில் பிரதானமானது - சர்வாதிகாரம். அந்த இடத்திற்கு போனால் எனக்கு சளி பிடித்துவிடும், அவ்வளவு தூரம் உட்கார்ந்து வர முடியாது – எனக்கு பைல்ஸ், அலுவலகத்தில் லீவ் தர மாட்டார்கள் (பொய்), அந்த தேதியில் தான் வீட்டில் தலுவை போடுகிறார்கள் போன்ற விவாதங்களுக்கு வேலையில்லை. உங்கள் தேதி, உங்கள் தேர்வு. நீங்கள் திருமணமாகாதவர் என்றால் உங்கள் மேனேஜர் ஒருவரை மட்டும் சமாளித்தால் போதும், திருமணமானவர்களுக்கு இரண்டு. அவ்வளவுதான் ! 

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், சுயமறிதல் போன்ற சில சாதகங்களும் தனிப்பயணங்களில் உண்டு. இவை தவிர, தனிப் பயணங்களில் புது நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது பொது நம்பிக்கை. Introvert என்பதால் அதுகுறித்த கள நிலவரத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. 

பாதகங்களில் பிரதானம் ஒரு நல்ல புகைப்படம் எடுத்துத் தரக்கூட யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான். நம்முடன் நண்பர்கள் இருக்கும்போது கிடைக்கக்கூடிய ஒரு கூடுதல் தைரியம் தனிப்பயணங்களில் சாத்தியமில்லை. மாலை வேளைகளில் ஒருவிதமான வெறுமையுணர்வு தோன்றும்.

இன்னும் case specific சாதக பாதகங்களை இத்தொடரின் இடையிடையே தெரிந்துகொள்வீர்கள். 

திருவனந்தபுரம் மெயில்

தரை மற்றும் வான் மார்க்கங்களில் மிக எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது வர்கலா. சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து வர்கலாவிற்கு தினசரி ரயில் செல்கிறது (திருவனந்தபுரம் மெயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்). எக்மோரிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வர்கலா ரயில் நிலையத்திலிருந்து சில கி.மீ. தூரத்தில் சுற்றுலா தளத்தின் மத்திய பகுதி. ஆட்டோவில் நூறு ரூபாய். ஒருவேளை வர்கலா ரயில் நிலையம் சாத்தியமில்லை என்றால் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஐம்பது கி.மீ. வான்வழி செல்வதென்றால் ஐம்பது கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து கேரள அரசு பேருந்துகள் வர்கலாவிற்கு இயக்கப்படுகின்றன. 
 
பழம்பொரி
என்னிடம் கைவசம் நாட்கள் தாராளமாக இருந்ததால், போக வர இரண்டுக்கும் திருவனந்தபுரம் மெயிலில் டிக்கட் எடுத்திருந்தேன். முதல்நாள் இரவு 7:45க்கு சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் சேலம், ஈரோடு, கோயமுத்தூர் வழியாக அதிகாலையில் கேரளா மாநில பாலக்காடு ரயில் நிலையத்தை கடக்கிறது. டீ, காபி, வடையுடன் பழம்பொரியும் விற்கப்படுவது கேரள வருகையை உறுதிப்படுத்துகிறது. அதன்பிறகு ரயிலில் தினசரி பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை 10.50க்கு ரயில் வர்கலாவை சென்றடைகிறது. 

வர்கலா ரயில் நிலையம்
ஆர்ப்பாட்டமில்லாத சிறிய ரயில் நிலையம். அருகிலேயே நான் நீ என்று போட்டி போடாத ஆட்டோ ஸ்டாண்ட். வர்கலா ஹெலிபேட் என்று கேட்டு வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து சரியாக மூன்றரை கி.மீ. வர்கலா ஹெலிபேட் என்பது ஒரு மலை முகட்டில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சமதளம். ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்குவதற்கான அமைப்பு. அதன் மத்தியில் என்னை இறக்கிவிட்டுச் சென்றார் ஆட்டோ ஓட்டுநர்.   

இருவர் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் மோகன்லாலை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்வார். மெல்ல மொட்டை மாடியின் விளிம்பிற்கு செல்லும் மோகன்லால் கீழே அவருக்காக ஆரவாரம் செய்துக் கொண்டிருக்கும் மக்களைக் காண்பார். அதுபோல நான் அந்த ஹெலிபேடின் மத்திய பகுதியிலிருந்து மலை முகட்டிற்கு மெதுவாக நடந்து செல்கிறேன். 

கீழே வர்கலா கடற்கரையின் பிரம்மாண்டமான எழில்தோற்றம் தோன்றுகிறது. “இருவர்” மோகன்லால் அடைந்ததை விட பரவசமான அனுபவம் அது !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment