அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒரு மனக்குழப்பம். என்ன படம் பார்ப்பது என்பதைப் பற்றியது. திரையரங்கிற்கு
சென்று படம் பார்த்து (என்னளவில்) நீண்டகாலம் ஆகிறது. கடைசியாக பார்த்தது
யாமிருக்க பயமே. இதுவரையில் இந்த ஆண்டில் வெறும் ஆறு படங்கள் மட்டுமே
பார்த்திருக்கிறேன். கட்டாயமாக படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த சமயம்
என்னிடமிருந்த தேர்வுகள் – வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை, இருக்கு ஆனா இல்ல
(படத்தின் பெயர்தான்). பெயரில் தொடங்கி ட்ரைலர் வரை முதலில் ஈர்த்தது இருக்கு ஆனா
இல்ல. வேலையில்லா பட்டதாரி நன்றாக இருந்தாலும் பார்ப்பதாக இல்லை என்று முடிவு
செய்துவிட்டேன். கொஞ்சம் தாமதமாக பிடிக்க ஆரம்பித்தது சதுரங்க வேட்டை. சின்னச்
சின்ன விளம்பரங்கள் காட்டியே ஈர்த்துவிட்டார்கள். ஒரு சாமானிய ரசிகனை படம் பார்க்க
வைக்க திரைப்படக்குழு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கும்போது
மலைப்பாக இருக்கிறது. கொஞ்சம் தயக்கத்துடனேயே எடுத்த முடிவு, முதல்நாள்
விமர்சனங்கள் வரத்துவங்கியதும் பார்த்தே தீர வேண்டும் என தெளிவுற்றேன்.
Based on true events என்ற வரிகளை பார்த்ததும் சற்று கடுப்பானேன்.
கொஞ்ச நேரத்தில் ஏன் அப்படி என்று புரிய ஆரம்பித்துவிட்டது. மண்ணுளி பாம்பு,
எம்.எல்.எம், ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என்று தமிழகத்தை கலக்கிய பிரபல மோசடி
சம்பவங்களை தொகுத்திருக்கிறார்கள்.
பணத்திற்காக பல மோசடி சம்பவங்களை அரங்கேற்றுபவன் (தினத்தந்தி பாஷையில்
மோசடி மன்னன்) காந்தி பாபு. ஒரு முறை காவல்துறையில் சிக்கி அல்லல்படுகிறான். பணம்
அவனை காப்பாற்றுகிறது. ஆனால் அவனால் ஏமாற்றப்பட்டவன் ஒருவனால் மரணம் வரை செல்ல
நேரிடுகிறது. அதிலிருந்து திருந்தி வாழ முயலும் காந்தி பாபுவுக்கு சமூகம் என்ன
செய்கிறது என்பதே மீதிக்கதை.
காந்தி பாபுவாக நடித்திருக்கும் நடராஜை எந்த வகையில் சேர்ப்பது என்று
புரியவில்லை. பாலியுட்டில் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ், தமிழில் அவ்வப்போது
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மட்டரகமான மசாலா படங்களில்.
சதுரங்க வேட்டைக்கு பிறகு முந்தய வாசகத்தில் ஒரு வார்த்தையை மட்டும்
அடித்துவிடலாம். எதார்த்தமான நடிப்பாலும் உடல்மொழியாலும் கவர்ந்துவிடுகிறார். அவரது
மிகைப்படுத்தாத நடிப்பிற்கு விடுதலை கிடைத்ததும் நீதிமன்றத்தில் இருந்து நடந்துவரும்
காட்சி ஒரு உதாரணம்.
சரோஜா தேவி புத்தகங்களின் வர்ணிப்பு பகுதியில் ‘வாளிப்பான உடல்’
என்கிற வாக்கியத்தை அடிக்கடி படித்திருக்கிறேன். அதற்கான பொருளை இஷாராவை
பார்த்தால் புரிந்துக்கொள்ளலாம். ச்சும்மா பப்பாளி போல இருக்கிறார். ஆனால் ‘ஸ்கோப்’
இல்லாத கதாபாத்திரம். கூடிய விரைவில் இஷாராவை உப வேடங்களிலும் மூன்றாம் தர
கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம் என்பது என்னுடைய கணிப்பு.
கவிஞர் பிறைசூடனின் பெயரை படம் முடிந்ததும் டைட்டிலில் பார்த்தேன்.
எப்போது வந்தார் என்று நீண்ட நேரம் யோசித்தபிறகு விடை கிடைத்தது – ஜட்ஜய்யா !
ஷான் ரோல்டனின் இசையில் முன்னே என் முன்னே பாடல் கொஞ்சம்
பிடிக்கிறது. அதன் இடையே வரும் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அபாரம். அதையே படத்தின்
இறுதியில் டைட்டில் க்ரெடிட்ஸ் போடும்போது பயன்படுத்தியது நல்ல யுக்தி. என்னைக்
கேட்டால் அந்த டைட்டில் க்ரெடிட்ஸ் இசையே படத்தின் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை
ஏற்படுத்துகிறது.
வசனங்கள் படத்தின் அசுர பலம். அப்புறம்
ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன சர்காஸ்டிக் சுவாரஸ்யங்கள். ஒரு காட்சியில், ஃப்ரீயா
கட்டிங் கொடுக்குற மனசு மதுரக்காரனுக்கு தான்டா வரும், மதுரக்காரன் என்னைக்குடா
தண்ணியூத்தி அடிச்சிருக்கான் என்று செம ஓட்டு ஓட்டியிருக்கிறார்கள். அப்புறம்
ரைஸ் புல்லிங் பற்றி காவியுடையணிந்த காந்தி பாபு பேசும் வசனம் செம்ம அட்ராசிட்டி.
எல்லாம் இருந்தும் படத்தில் உணர்வு குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது.
காந்தி பாபு ஒரு அக்மார்க் அயோக்கியன் என்று முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள்.
அதனாலோ என்னவோ அவரை நையப்புடையும்போது கூட எந்தவித பதட்டமும் பரிதாபமும் வர
மறுக்கிறது. உலகத்தில் பணம் மட்டுமே க்ளிஷே கிடையாது என்று தத்துவம் உதிர்க்கிறார்
காந்தி பாபு. ஆனால் எல்லா சினிமாக்களிலும் வருவது போல காந்தி பாபுவுக்கு ஒரு சோக
ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. திடீரென காந்தி பாபு திருந்தி வாழும்போது கூட, உண்மையில்
திருந்திவிட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நிறைய இடங்களில் துல்லியம் தவறவிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு
கதாபாத்திரம் தூய தமிழிலேயே பேசுகிறது. (அது என்ன எழவுக்காக அப்படி பேசுகிறது
என்று புரிபடவில்லை). ஆனால் சில காட்சிகளில் தன்னையே மறந்து ஆங்கில வார்த்தைகளை
உபயோகப்படுத்துகிறது. அதே போல காந்தி பாபு தன்னுடைய சிறுவயது சம்பவங்களைப் பற்றி
சொல்லும்போது மட்டும் திடீரென மெட்ராஸ் பாஷையில் பேசுகிறார். நாயகியின் கொங்கு
சொல்லாடலிலும் அதே மெத்தனம் தெரிகிறது.
ஒரு கட்டுரையின் முதல் சில வரிகளும், ஃபினிஷிங் டச் எனப்படும்
முத்தாய்ப்பான முடிவும் மட்டும் இருந்தால் அதன் நடுவே உள்ள குறைகளை வாசகர்கள்
கண்டுகொள்ள மாட்டார்கள் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது
எழுத்துக்கு மட்டுமல்ல, எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும். சதுரங்க வேட்டையும்
அப்படித்தான். அதன் முன்னோட்டங்கள் நம்மை திரையரங்கிற்குள் இழுத்துப் போடுகின்றன,
அதன் இறுதிக்காட்சி க்ளிஷே என்பதையும் தாண்டி ஒரு சிறிய தாக்கத்தை(யாவது) ஏற்படுத்துகிறது.
மற்றபடி இடையில் வரும் காட்சிகள் அப்படியொன்றும் சுவாரஸ்ய மிகுதியாக இல்லை
என்றுதான் சொல்ல வேண்டும்.
சதுரங்க வேட்டை – புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய ஒரு
சுமாரான பொழுதுபோக்கு படம். மிகைபடுத்தப்பட்ட விமர்சனங்களையும் பட
முன்னோட்டத்தையும் வைத்து எந்தவித எதிர்பார்ப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல்
இருந்தால் ரசிக்கலாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|