கதை என்று புதிதாக சொல்லுவதற்கு எதுவுமில்லை.
இயக்குனருடைய முந்தய படைப்புகளை பார்த்திருந்தால் அதுவே போதுமானது. பொண்ணுங்களை
டன்கணக்கில் கலாய்ப்பது, காதலை காறித்துப்புவது, நட்பையும், நண்பர்களையும்
உயர்த்திக்காட்டுவது – இவையெல்லாம் வெங்கட் பிரபு, செல்வராகவன் மாதிரி
இயக்குனர்களின் தற்போதைய யூத் ஃபார்முலா. அதே பாணியில் மூன்றாவது முறையாக
படமெடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார் ராஜேஷ்.
உதயநிதி – முதல் படமென்று சொல்லவே முடியவில்லை,
எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிப்பு அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க. (ம்க்கும்
கேக்குறவன் கேனைப்பயலா இருந்தா கேரம் போர்டை கண்டுபிடிச்சது
கே.ஆர்.பி.செந்திலுன்னு சொல்லுவியே). எத்தனையோ மாஸ் ஹீரோக்களின் முதல் படங்களோடு
ஒப்பிட்டு பார்க்கும் போது உதயநிதி ஓகே ஓகே ரகம்தான். என்ன, பாடல்காட்சிகளில்,
நடனக்காட்சிகளில் மட்டும் நமது சகிப்புத்தன்மையை கடுமையாக சோதிக்கிறார். க்ளோசப்
காட்சிகள் உங்களை க்ளோஸ் செய்யும் ஆபத்துகள் அதிகம். நிறைய காட்சிகளில் இது ஜீவா
நடிக்க வேண்டிய ரோலாச்சே என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
ஹன்சிகா – பச்சை மைதா மாவு. நடிப்பு.... ஆஹ்
அதெல்லாம் ஓரமா வச்சிடுவோம். அம்மணி அடிக்கடி கீழுதட்டை கடித்துக்கொள்ளும்
(அவருடையதை தான்) அழகிற்காகவே பாஸ்மார்க் போடலாம். ஆனாலும் சின்ன குஷ்புவெல்லாம்
டூ டூ டூ டூ மச். ஹன்சிகா பற்றி பெரும்பான்மை ரசிகர்களுடைய கருத்தை காபி ஷாப்
மாப்பிள்ளை கேரக்டர் புட்டு புட்டு வைக்கிறது. ஓகே ஓகேயை பொறுத்தவரையில்
எதிர்பார்த்ததை விட குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஹன்சிகாவை
பார்த்து சொல்றதுக்கு பெருசா எதுவுமில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
சந்தானம் – ஒரிஜினல் ஹீரோவே இவர்தான். (Fact u
Fact u Fact u Fact u Fact u). தொடர்ச்சியாக பத்து நிமிடங்கள் சந்தானம் வரவில்லை
என்றால்கூட படம் டல்லடிக்கிறது. வசனங்கள் ஒவ்வொன்றிற்கும் திரையரங்கு ஆரவாரம்
செய்கிறது. தொடர்ச்சியாக இயக்குனரின் மூன்று படங்களிலும் ஒரே கேரக்டர், ஆ-ஊன்னா
“டேய்” ன்னு ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற விஷயங்கள் சற்றே கடுப்பை
கிளப்பினாலும் ரசிக்க வைக்கின்றன.
ஜாங்கிரி – கேரக்டரில் நடித்த பெண் செம
செலக்ஷன். வாய்ப்பு கிடைத்தால் கோவை சரளா, ஆர்த்தி மாதிரி லேடி காமெடியனாக
கலக்கலாம், கலாய்க்கலாம். சரண்யாவுக்கு தமிழ் சினிமாவிற்கே உரித்தான அரைக்கிறுக்கு
அம்மா கேரக்டர். இந்தப் படத்துலயும் ஹீரோவுக்கு அப்பா இல்லைன்னு சொன்னா
உதைப்பாங்கன்னு டம்மியா ஒரு அப்பா கேரக்டர். ஹன்சிகாவின் அப்பாவாக சாயாஜி,
அம்மாவாக உமா பத்மநாபன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒரே
ஒரு காட்சியில் சினேகா, ஆண்ட்ரியா, ஆர்யா.
ஆக்சுவல்லி, டைட்டில் போடும்போதுதான் படத்துடைய
இசையமைப்பாளர் யுவனல்ல ஹாரிஸ் என்று தெரிந்தது. பரத்வாஜ், வித்யாசாகர் வரிசையில்
கூடிய விரைவில் ஹாரிஸ் ஓரம் கட்டுப்படுவார் என்றே தெரிகிறது. பாடல்கள் மொக்கையாக
இருக்கிறது, அதற்கு காரணம் ஒருவேளை உதயநிதியின் திவ்யமான முகமோ அல்லது வெளிநாட்டு
தெருக்களில், பாலைவனத்தில் ஆடுவதையோ தொடர்ந்து பார்ப்பதின் காரணமாக ஏற்படும்
சலிப்பாகவோ கூட இருக்கலாம். ப்ச் ஹன்சிகாவாவது ஆறுதல் சொல்லியிருக்கலாம். வேணாம்
மச்சான் பாடல் மட்டும் கொஞ்ச காலத்திற்கு யூத் ஆந்தெமாகவும் மொபைல் ரிங்டோனாகவும்
இருக்கக்கூடும். அந்த பாடலின் குரூப் டான்சர்களில் தலையில் துண்டைக்கட்டிக் கொண்டு
ஆடும் ஆயாவை பாராட்டியே ஆகவேண்டும். முப்பது பேர் ஆடினாலும் தனியாக கவனத்தை
ஈர்க்கிறார். டான்ஸ் மாஸ்டர் தினேஷ் வித்தியாசமான ஃபெர்பாமான்ஸ் என்ற பெயரில்
அஷ்டகோணலாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு பாடலில் ஆடி வெறியேற்றுகிறார் சாக்கிரதை.
இயக்குனர் ராஜேஷ், கமர்ஷியல் படமெடுக்கிறேன்
பேர்வழி என்ற பெயரில் பொலிட்டிக்கல் பொடிமாஸ் போடாமல் இருப்பது மிகவும் ஆறுதலான
விஷயம். ஆனால் தொடர்ச்சியாக ஒரே கதையை திரும்பத் திரும்ப காட்டுவது
வெகுகாலத்திற்கு எடுபடாது என்றே தோன்றுகிறது. இயக்குனரும், சந்தானமும் மாற்றத்தை
காட்டியே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் நிற்கிறார்கள்.
கருத்து, கத்திரிக்காய் ஈர வெங்காயமெல்லாம்
இல்லையென்றாலும் ஓகே ஓகே ஓட்டுமொத்தமாக ஒரு ஃபீல் குட் சினிமா, சினிமாவை சினிமாவாக
பார்ப்பவர்களுக்கு மட்டும். மற்றபடி தரை டிக்கெட் ரசிகர்களுக்காகவே படம் ஓஹோவென
ஓடும் என்பது வேறு விஷயம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Post Comment