27 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 28012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மின்சார ரயில் நிலையங்கள் அருகிலிருக்கும் சிறுசிறு அறைகள், பாழடைந்த வீடுகள் போன்றவற்றை பார்த்திருக்கிறீர்களா ? எனக்கு அவற்றை பார்க்கும்போதெல்லாம் அமானுஷ்ய எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த அறைகளில் யாராவது வசிப்பார்களா ? பீச் ஸ்டேஷன் அருகிலுள்ள ஒரு பாழடைந்த மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மின்விசிறி சுழன்றுக்கொண்டிருக்கின்றது, என்றால் அங்கே யாரோ வசிக்கிறார்கள் தானே ? ரயில்வே துறையில் பணிபுரியும் நண்பர்கள் பாழடைந்த அறைகளுக்குப்பின் இருக்கும் கதையை கூறினால் தன்யனாவேன்.

போலவே, ரயில் பயணத்தின் போது J.K.புதியவன், N.கண்ணையா, SRMU, DMU, மற்றும் தொழிற்சங்கங்களின் ஏய் ரயில்வே நிர்வாகமே, ஓ மத்திய அரசே ரக சுவரெழுத்துகள், சுவரொட்டிகள் கடுப்பை கிளப்பும். ரயில்வே ஊழியர்களுக்காக எழுதப்படும் சுவரெழுத்துகள் எதற்காக பொதுமக்கள் பயணம் செய்யும் பாதையை ஆக்கிரமித்திருக்கின்றன என்று விளங்கவில்லை. சமீபத்தில் ஒருநாள் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கத்தின் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி அது. சம்பவம் இதுதான், ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியை திட்டியிருக்கிறார். நான்கு சுவர்களுக்குள் நடந்த சம்பவம். போஸ்டரில் அவர் இவரை என்ன சொல்லி திட்டினார் என்று விலாவரியாக விம் போட்டு விளக்கியிருந்தார்கள். எது அவமானம் என்று புரியவில்லை.

*****

புத்தகக்காட்சியில் கோபிநாத் எழுதிய புத்தகம் ஏதாவது வாங்கித்தருமாறு சுகன்யா கேட்டிருந்தாள். எனக்கு புரியவில்லை. அம்மணிக்கு அப்படியொன்றும் வாசிப்பார்வம் கிடையாது. கோபிநாத் பிடிக்கும் என்றாள். ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்கன்னு அவரே சொல்லிட்டாரேம்மா என்பது ஒரு சிக் ஜோக் தான் என்றாலும் அந்த புத்தகத்தையே வாங்கினேன். கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன். தமிழில் வெளிவரும் சுய முன்னேற்ற நூல்களை நான் படிப்பதில்லை. இந்த மேனேஜரியல் ஸ்கில்ஸ் இத்யாதி இத்யாதி எல்லாம் அனுபவத்தால் வருவதே அன்றி புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ள முடியாது என்பது என் கருத்து. இருப்பினும் கிழக்கு வெளியிட்ட ரிச்சர்ட் டெம்ப்ளேரின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றை படித்திருக்கிறேன். கோபிநாத்தின் ப்ளீஸ் சுய முன்னேற்ற நூல் மட்டுமன்றி ஒரு நல்ல ஃபீல் குட் நூலென்றும் சொல்லலாம். ரசித்து வாழ்வது எப்படி ? என்று சில பத்திகள் விவரிக்கிறது. என்ன ஒன்று, அடிக்கடி வீடு திரும்பல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. உதாஸ்: உங்களுக்கு காலை டிபனில் உப்புமாவை பார்த்தால் வெறுப்பு வருமே, உங்களுக்கு மதியம் மூணு மணிக்கு வருகிற தலைவலி. இப்படி ஆயிரக்கணக்கான பொதுபுத்தி மேற்கோள்கள் எரிச்சலூட்டுகின்றன. மற்றபடி, சுகன்யா போன்றவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டிய நூல். அவளுக்கு தேவையான நூலை அவளுக்கே தெரியாமல் தேர்வு செய்திருக்கிறாள்.

*****

விக்கிபீடியா, என்சைக்கிளோபீடியா, அன்சைக்கிளோபீடியா - கேள்விப்பட்டிருப்பீர்கள். சமோசாபீடியா ? தமிழ் உட்பட தெற்காசிய பேச்சுவழக்கு வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறது சமோசாபீடியா. டிங்கோல்பி, மாஞ்சா, ங்கொய்யால, அடிங்கோத்தா என்று பல கொச்சை சொற்களுக்கு நகைச்சுவையாக விளக்கம் தருகிறது. மேற்கோள்கள் செம காமெடி. உதாரணத்திற்கு, அல்வா என்ற சொல்லுக்கு அமைதிப்படை படத்தில் சத்யராஜ் கஸ்தூரிக்கு கொடுத்த அல்வா பரபரப்பாக பேசப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.


*****

கருணாவின் காதல் வலி. சமீபத்தில் வெளிவந்திருக்கும் பி-கிரேடு காவியம். பி-கிரேடு என்ற சொல்லுக்கே அவமானம். சென்சார் அதிகாரிகளிடம் அழுது அடம்பிடித்து அம்மா மீது சத்தியம் செய்து ‘ஏ’ சான்றிதழ் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர் கம் கதாநாயகனை கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பொலிகாளையோடு ஒப்பிடலாம். காசு கொடுத்த செய்யவேண்டிய சமாச்சாரத்தை, நான்கு பெண்களிடம் ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி காசி வாங்கி செய்திருக்கிறார். கதைப்படி நான்கு நாயகிகளுள் ஒருவர் நாயகனுடன் தி.மு செக்ஸ் வைத்துக்கொண்டு கர்ப்பமாக இருக்கிறார். அதற்குப்பின் வரும் ஒரு காட்சியில் நாயகன் நாயகியை மம்மம்முக்கு அழைக்க, நாயகி “ச்சீ... அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்...” என்று சிணுங்குகிறார். மற்றொரு காதல்ரசம் சொட்டும் காட்சியில் நாயகனும் நாயகியும் வசனங்களின்றி, ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் என்ற ஹம்மிங்கிலேயே பேசிக்கொள்கிறார்கள். இயக்குனர் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்... ம்ஹூம் விட்டுத்தொலையுங்க. நகைச்சுவைகள் ஒருபுறமிருப்பினும், ஒன்றரை மணிநேர மின்சார செலவு, குறைந்த வாடகை, வழக்கம் போல டிக்கெட் கட்டணம், கேண்டீன், பார்க்கிங் கட்டணங்கள் என்று ஒருவகையில் பி-கிரேடு படங்கள் திரையரங்களுக்கு லாபம் தரக்கூடும்.


*****

நேற்று நீயா நானா பார்த்த விளைவு பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒலிம்பியா பக்கம் இரவு உணவு முடித்துவிட்டு தேமே என்று சென்றுக்கொண்டிருந்தேன். ஒரு ஸ்கூட்டி என்னருகில் வந்து ப்ரேக் அடித்தது. கல்லூரியில் என்னுடன் படித்த தோழி. பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டோம். சில நாட்களுக்குப்பின் ஒரு தொலைபேசி அழைப்பு, மறுபடியும் அவரே. என்னுடைய எண் எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை. பரிவாக என்னைப் பற்றி என் வேலையைப் பற்றி, திருமணத்தை பற்றியெல்லாம் விசாரித்தார். ஒன்றும் விளங்கவில்லை. என் கல்லூரி தோழிகள் யாருக்கும் என் மீது நன்மதிப்பு கிடையாது. இவர் மட்டும் ஏன் இப்படி சொறிகிறார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்ததும் மெதுவாக பேச்சை தொடங்கினார். நானும் என் கணவரும் இணைந்து ஒரு பிஸினஸ் செய்கிறோம். நாங்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று ஆரம்பித்தார். பயங்கர கோபம் வந்தது. இருப்பினும் அந்த விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. அடிக்கடி போன் செய்து இன்னைக்கு மீட்டிங் இருக்கு வர முடியுமா ? என்பார். ஓ தாராளமா வர்றேன்னு சொல்லிவிடுவேன். ஆனால் போகமாட்டேன். சில வாரங்களுக்கு பின்பு அவருக்கு உண்மை தெரிந்துவிட்டது. கடைசியாக கோபத்துடன் ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினார். ரசித்து சிரித்தேன் :)


*****

நேற்று நீர்ப்பறவை படம் பார்த்தேன். வெளியான மறுநாளே பார்த்திருக்க வேண்டியது. தவறான திரையரங்கிற்கு சென்று கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற தெலுங்கு குப்பையில் சிக்கிக்கொண்டேன். நீர்ப்பறவையின் கதைக்களன் வரவேற்க வேண்டியது. எனினும், சொல்ல வந்ததை அழுத்தம் திருத்தம் எதுவுமே இல்லாமல் வெகு சாதாரணமாக போகிற போக்கில் சொன்னதுபோல தெரிகிறது. சீனு ராமசாமி கடிவாளம் போடப்பட்ட குதிரையாக முடக்கப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. வருத்தப்படுவதை விட வேறு என்ன செய்துவிட முடியும் ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 January 2013

காரைக்கால் கட்டிங்...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எச்சரிக்கை:
மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடுவிளைவிப்பதாகும்
புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்

நாகூரிலிருந்து காரைக்காலை நோக்கி நடந்துக்கொண்டிருந்தோம். “ம்ம்ம்... வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் தர்கா... அடுத்தது காரைக்கால் அம்மையார் கோவில்தானே பாஸ்...” என்று அப்பாவியாய் கேட்டவனை கொமட்டில் குத்த வந்தார் மூத்த ஆதினம். அப்படியே வரலாற்று சக்கரத்தில், ப்ரிட்டிஷ், ஃப்ரான்ஸ், பாண்டிச்சேரி, மாஹே என்று ஒரு ரவுண்ட் அடித்து மறுபடியும் காரைக்காலுக்கே கொண்டுவந்து விட்டார். தெளிவடைந்தேன்.

காரைக்கால் எல்லையை தொட்டதும் நிறைய (தாக) சாந்தி நிலையங்கள் கண்ணில் பட்டன. ஆதினமும் நானும் முன்பொருமுறை சிங்கிள் சிட்டிங்கில் முழு பாட்டில் டகீலாவை முடித்துவிட்டு பக்கத்து பில்டிங் வாட்ச்மேனை டார்ச்சர் செய்ததை ஆதினம் மறக்கவே இல்லை. டகீலா மோகம் அவரை பாடாய் படுத்தியது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி டக்கீலா கேட்டார். கெரகம். டக்கீலா புதுச்சேரியில் தான் கிடைக்கும் போல.

நான்கைந்து கடைகளில் டகீலா கேட்டபிறகு எங்கள் கொள்கையை தளர்த்திக்கொள்ள முடிவு செய்தோம். மறுபடியும் முதல் கடைக்கே வந்து பகார்டி கேட்டோம். “ஒங்க ரெண்டு பேருக்கு எதுவும் கிடையாது... மாறி மாறி ஒவ்வொரு கடைக்கு போய் இல்லாத சரக்கை கேக்குறீங்களா... படுவா...” என்று விரட்டியடித்தார் கடைக்காரர். ஹும், கடைக்கா பஞ்சம். எதிரிலிருந்த கடையில் தஞ்சம் புகுந்தோம். பலவண்ண புட்டிகளில் ஸ்மிர்னாப் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு மஞ்சள் நிறத்தவளை அணைத்துக்கொண்டு பாருக்குள் நுழைந்தோம்.



இயற்கையான சூழல் கொண்ட திறந்தவெளி பார். கூட்டம் அதிகமில்லை. எங்களைத்தவிர ஒன்றிரண்டு பேர் அமர்ந்திருந்ததாக ஞாபகம். நாங்கள் சென்றது நட்டநடு மத்தியான வேளை. எனினும் தமிழக டாஸ்மாக்குகள் இதுபோல ஆளரவமின்றி இருப்பது சாத்தியமே இல்லை. மேசை - நாற்காலிகள் வெகு சுத்தமாக இருந்தன. பணியாளர் வந்தார். வழக்கமாக உடும்பு, முயல் இறைச்சி கிடைக்குமென்றும் தற்போது இல்லையென்றும் வருத்தப்பட்டார். நீர்க்கோழி வறுவலை வருத்தத்துடன் வரச்செய்தோம். புட்டிகள் காலியாகின.

இரவுக்கான சாய்ஸ் ஆதினத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முழு பாட்டில் பகார்டி டிராகன் பெர்ரியை வாங்கி காலியான பிஸ்லரி பாட்டிலுக்குள் லாவகமாக நிரப்பினார். போலீஸ் சோதனைச் சாவடியை கடக்க வேண்டுமே. பெட்டிக்கடையில் ஆளுக்கொரு சுருட்டு வாங்கி பற்ற வைத்தோம். ச்சே குப்பை லாரி கடந்துசென்ற உணர்வு. கீழே போட்டு மிதித்துவிட்டு, தள்ளுவண்டிக்கடையில் குஸ்கா வாங்கினோம். கருமம் தக்காளி சாதம். காரைக்காலில் சரக்கு தவிர எதுவும் உருப்படி கிடையாது போல.

சாவகாசமாக தண்ணீர் பாட்டிலுடன் சோதனைச் சாவடியை கடந்து பட்டுக்கோட்டைக்கு பேருந்து ஏறினோம். பேருந்தில் ஆதினத்துடைய பார்வை எங்கோ நிலை குத்தியிருந்தது. சில வரிசைக்கு முன்னால் அழகான இஸ்திரி நின்றுக்கொண்டிருந்தாள். ஆதினமும் நோக்கினார். அவளும் நோக்கினார். நானும் நோக்கினேன். கூடவே அவளுடைய அப்பா அம்மாவும் நோக்கியதால் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது. இப்படியாக பயணித்து பட்டுக்கோட்டையை அடைந்தோம்.

மணமகன் மயிலன் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அறையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு சூரியன் ஓய்ந்ததும், எங்கள் சிறப்பு வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு டாஸ்மாக்குக்கு கிளம்பினோம். சென்னையைத் தவிர வெளியூர் டாஸ்மாக்குகளில் கொய்யாப்பழம், ஆரஞ்சுபழம், வாழைப்பழம் போன்றவை சகஜமாக கிடைப்பது வியப்பளிக்கிறது. பானத்தை பருகியபடி சினிமாவைப் பற்றி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். எதிரிலிருந்த மேசையில் ஒரு வாலிபர் நம்மையே குறுகுறுவென பார்த்தபடி அமர்ந்திருந்தார். நீண்ட நேரம் தொடர்ந்தது.

பின்னர் தயங்கியபடியே எங்கள் எதிரில் வந்து அமர்ந்தார். “நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன்... நீங்க சினிமாக்காரங்க மாதிரி தெரியுறீங்க... எனக்கு ஏதாவது சினிமா சான்ஸ் வாங்கித் தர முடியுமா ?” என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார். எனக்கு முழு ஆட்டுத்தொடையை வறுத்தெடுத்து முன்னால் வைத்தது போல இருந்தது. ஆதினம் அவரை ஆத்து ஆத்து என ஆத்திக்கொண்டிருந்தார். அவர் ஏதோ சினிமா இயக்குனர்களின் கார் சிக்னலில் நிற்கும்போது கண்ணாடி துடைத்துவிட்டு சல்யூட் அடித்தால் அசிஸ்டென்டாக சேர்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பிலேயே பேசிக்கொண்டிருந்தார். திரை இருள ஆரம்பித்தது.


கண்திறந்து பார்த்தபோது அறையில் செருப்பைக்கூட கழட்டாமல் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தேன். மேஜை மீது மூன்று மார்பிஸ் புட்டிகள், கூடவே வேர்க்கடலை பர்பி. என்னடா இது சோதனை ? மயிலன் இவ்வளவு நல்லவராக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

முந்தய பகுதிகள்:
ஆதினங்களின் ஆன்மிக சுற்றுப்பயணம்
வேளாங்கண்ணி தேவாலயம்
நாகூர் தர்கா


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 21012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நேற்று புத்தகக்காட்சியில் செவனே என்று சுற்றிக்கொண்டிருந்தவனை முக்தா ஸ்ரீநிவாசன் அழைத்தார். என்னை மட்டுமல்ல போகிற வர எல்லாரையும் தன்னுடைய கடைக்குள் அழைத்துக்கொண்டிருந்தார். பொதுவாக இந்தமாதிரி அழைப்புகளை நான் சீண்டுவதில்லை. ஆனால் முன்னாள் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்றில்லை. ஒரு என்பது வயது முதியவர் ஆதரவில்லாமல் தனித்தனியாக அமர்ந்திருப்பதை பார்க்கும்போது பாவமாக இருந்தது. உள்ளே சென்றேன். படிக்கிற மாதிரி புத்தகங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் பெரியவரின் திருப்திக்காக விரும்பி வாங்குவதைப் போலவே நடித்து ஏதோவொரு புத்தகத்தை வாங்கினேன். வருங்காலத்தில் “சிங்கத்துக்கு தீனி போடவில்லை...” என்று கமல் மாதிரி ஆட்கள் அறிக்கை விட்டாலும் விடுவார்கள்.


இவனும் பாதிக்கப்பட்டிருக்கிறான்...!
சனிக்கிழமை இரவு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதோவொரு திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டேன். உள்ளே நுழைந்தால் அனுஷ்கா ஓடி வந்துக்கொண்டிருக்கிறார். அவரது மூக்கை வேறு லோ-ஆங்கிள் ஷாட்டில் காண்பித்து... கொடுமைடா...! அப்புறம் ஏதோ சண்டையாம்... சின்னப்பிள்ளை பார்த்தா கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கும். சரியாக பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். தெளிவாகிவிட்டது. சுதாரித்து வெளியே வந்துவிட்டேன். திரையரங்க உரிமையாளர் மணி செட்டியார், “தம்பி... ஏம்பா போற...”ன்னு பின்னாடியே தொறத்திக்கிட்டு வந்தார். ம்ஹூம் நிக்கலையே. அலெக்ஸ் பாண்டியன் - போதையில் கூட பார்க்க முடியாத சூரசம்ஹார மொக்கை...! 60ரூ கொடுத்து டிக்கெட் எடுத்ததை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. புட்டத்துளை.

அடடா, வேட்டி சட்டை என்பது எவ்வளவு அருமையான உடை. இத்தனை ஆண்டுகள் தவற விட்டிருக்கிறேன் என்பது வருத்தமளிக்கிறது. கல்லூரியில் பயின்றபோது நண்பர்கள் குழு ஒருசேர வேட்டி அணிவார்கள். அப்பொழுதெல்லாம் கூட நான் அரை டவுசர் தான். பொங்கலன்று அலுவலகத்திற்கு வேட்டி சட்டையில் சென்றேன். அங்குதான் சிக்கல் ஆரம்பித்தது. ஏன் பாஸ் கருப்பு சட்டையில வந்திருக்கீங்கன்னு சிலர் கேட்கிறார்கள். இதற்கு பதிலளிக்கும்போது அதனை விரும்புபவர்கள் / வெறுப்பவர்கள் / விவாதம் செய்பவர்கள் வேறு விஷயம். ஆனால் அலுவலக சூழலில் நம் உயரதிகாரிகளுக்கு விருப்பமில்லாத செயல்களை செய்யும்போது நமக்கு வேறு வகையில் சுண்ணாம்பு தடவி குப்பியடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே வழக்கம்போல பல்லிளித்துக்கொண்டேன்.

புத்தகக்காட்சியில் நீங்க என்ன பொஸ்தவமெல்லாம் வாங்கினீங்க ? லிஸ்டு கொடுங்கன்னு காமன் மேன் காத்தவராயன் தொடர்ந்து மெயில் அனுப்பி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவருக்காக என்னுடைய பரிந்துரை லிஸ்ட் இதோ :-

1. ஆரஞ்சு பழங்கள் ஆரஞ்சு நிறத்தில்தான் இருக்கின்றன
2. எனக்கு நான் என்றும் பெயர்
3. சாராய போதையில் உழன்றபடி
4. புளியமரத்திலிருந்து தொங்கும் கொங்கைகள்
5. கோவணம் அணிந்த கொசுக்கள்
6. மழைநாளில் குடையை மறந்துவந்த குரங்குக்குட்டி
7. பகல் பஸ் ஸ்டாண்டில் பறக்கும் ரயில்
8. குசுக்கதைகள்
9. ஷகீலா படங்களுக்கு குரல் கொடுப்பவள்
10. ஒரு சாதா தோசையும் கொஞ்சம் கெட்டி சட்டினியும்
11. எருமையின் நிறம் கருப்பு
12. பசுமாடுகள் பல்லிளிப்பதில்லை
13. ஆபிரகாம் லிங்கன் ஆப்பிள் சாப்பிட்டதில்லை

தனக்கு ஒரு புத்தகம் படிக்க தர முடியுமா என்றும் கேட்டிருந்தார். அவருக்கு ஒரு சாதா தோசையும் கொஞ்சம் கெட்டி சட்டினியும் தரலாம் என்றிருக்கிறேன்.

சமீபத்தில் ஆச்சரியமூட்டிய தகவல்: http://www.telegraph.co.uk/science/9814620/I-can-create-Neanderthal-baby-I-just-need-willing-woman.html

போர்க்காய் என்கிற தஞ்சை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் குறும்படத்தின் ட்ரைலர். மெயின் பிக்சர் 25ம் தேதி ரிலீஸ். காத்திருங்கள்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 January 2013

நாகூர் தர்கா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில தினங்களுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய பதிவு. சில கேள்விகள் குடைந்தெடுத்தன. சேதாரத்தை தவிர்க்க சாதுவான இஸ்லாமியர் ஒருவரை சாட்டில் மடக்கி என்னுடைய சந்தேகங்களை ஓரளவிற்கு தீர்த்துக்கொண்டேன்.


தர்கா - பள்ளிவாசல் வேறுபாடு ?
பள்ளிவாசல் என்பது உருவ வழிபாடுகளற்ற தொழுகையிடம். பள்ளிவாசல்களில் மாற்று மதத்தினரை அனுமதிப்பதில்லை. பெண்களுக்கு அனுமதி கிடையாது. தர்கா என்பது இஸ்லாமிய மூதாதையர்களின் கல்லறை.

பெரும்பான்மை இஸ்லாமியர்கள் தர்கா வழிபாட்டின் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பதாக இணையத்தேடலில் தெரிந்துக்கொண்டேன். தர்கா என்பது இந்து மதத்திலிருந்து இஸ்லாமியத்திற்கு மாறியவர்கள் தொடங்கி வைத்தது என்பது அவர்களுடைய வாதம். இந்துக்கள் கோவில்களில் சிலையை நிற்க வைத்து வழிபடுவதைப் போல தர்காவில் பிணத்தை படுக்க வைத்து வழிபடுகிறார்கள் என்று கோபப்படுகிறார்கள்.

சினிமாக்களில் முணுக்குன்னா வழக்கு, போராட்டம் என்று ஆரம்பிக்கும் மத அமைப்புகள் ரஜினி நயன்தாராவை தர்கா என்று அழைத்தபோது பொங்கல் வைக்காததன் அர்த்தம் விளங்கிற்று.

இங்கே ஒரு சிறிய கொசுவத்தி சுருள். அடியேன் பூமியில் அவதரித்து இருபத்தைந்து ஆண்டுகளாக மஸ்ஜித்-ஏ-குத்தூஸ் என்ற பள்ளிவாசலுக்கு நேரெதிரே வசித்து வருகிறேன். எனினும் அதனுள்ளே ஒருமுறை கூட சென்றதில்லை, செல்ல விரும்பியதுமில்லை. அங்கிருக்கும் கணினியில் கோளாறு ஏற்பட்டால் சரிசெய்ய மூத்த ஆதினத்தை தான் அணுகுவார்கள். ஆனால் அவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. கணினியை வெளியே கொண்டுவந்து கொடுத்து சரி பார்க்கச் சொல்வார்களாம். இது ஆதினமே சொன்ன தகவல். மேலும் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அதனுள்ளே பெண்கள் சென்று வந்து பார்த்ததில்லை.

மேற்படி குற்றச்சாட்டுகளை நம் சாட் நண்பரிடம் தெரிவித்தபோது கடுமையாக மறுப்பு தெரிவித்தார். சுத்த பத்தமாக இருந்தால், அதாவது குளித்தல், குடிக்காமலிருத்தல் உட்பட பல ஆகம விதிகளை கடைபிடிப்பவராக இருப்பின் நிச்சயம் மாற்றுமதத்தினரை அனுமதிப்போம் என்கிறார். தான் புதுக்கல்லூரியில் பயின்றபோது மாற்றுமத சகோதரர்களை பள்ளிவாசலுக்குள் அழைத்துச்சென்றதை சுட்டிக்காட்டுகிறார். தவிர பள்ளிவாசல்களில் பெண்களுக்கென தனி நுழைவு வாயில், தனி தொழுகையிடம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படாத பள்ளிவாசல்களில் மட்டும் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

சரி, நம்முடைய தனிப்பட்ட அனுபவத்திற்கு வருவோம். பக்ரீத் திருநாளன்று நானும் மூத்த ஆதினமும் நாகூரில் கால் பதித்தோம். கலவர பூமியில் நுழைந்த உணர்வு. தர்காவிற்குள் எங்களை அனுமதிப்பார்களா என்று குழப்பம். ஒருவேளை யாராவது மடக்கினால், நம்முடைய பெயரை கஸாலி, சிராஜுதீன் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று பேசிக்கொண்டோம்.


தர்காவை நெருங்கிவிட்டோம். அங்கே கடை வைத்திருந்த பெரியவர் நம்மைக் கண்டதும் பாசத்துடன் இருகரம் கூப்பி அழைக்கிறார். காலணிகளை இங்கே இலவசமாக விட்டுக்கொள்ளலாம் என்று ஆஃபர் கொடுக்கிறார். காலணிகளை கழட்டியதும், அங்கே ஒலைத்தட்டுகளில் அடுக்கி வைக்கப்படிருந்த சில காகித பொட்டலங்களை நம்மிடம் கொடுக்கிறார். (மேலே பார்க்க படம். பெரியவருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது). என்ன ஏதென்று புரியவில்லை, வாங்கிக்கொண்டோம். 120ரூ கொடுங்க என்று உரிமையுடன் கேட்டார் பெரியவர். பேந்த பேந்த முழித்தோம். மூத்தவர் பணத்தை எடுத்து கொடுத்தார். இலவசத்திற்கு கிடைத்த சோதனை.

தர்கா கோபுரத்தையும், நுழைவு வாயிலையும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். உள்ளே நுழைந்ததும் ஏதோ மாமனார் வீட்டிற்குள் மருமகன் நுழைந்ததைப் போல புன்னகையுடன் நம்மை வரவேற்றார் ஒரு முசல்மான். வெளியே வாங்கிவந்த வஸ்துக்களை பறித்துக்கொண்டார். கை, கால் கழுவிட்டு வாங்க என்று குழாயடிக்கு அனுப்பிவிட்டார். எங்களுக்குள் குழப்பம் அதிகரித்தது.


பாய் நம்மை உள்ளே அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர வைத்தார். பொட்டலங்களை பிரித்தார். சாம்பல், மண், சர்க்கரை (சீனி), ஊதுபத்தி போன்றவை அவற்றுள் இருந்தன. எல்லாவற்றையும் எங்கள் முன்பு பரப்பி வைத்தார். என்னிடம் பெயர் கேட்டார். அங்கு நிலவிய தெய்வீகம் என்னை மெய்யுரைக்கச் சொன்னது. பிரபாகரன் என்றேன். பெற்றோர் பெயர், தொழில் ஆகியவற்றை கேட்டு தெரிந்துக்கொண்டார். பின்னர் அய்யர் மந்திரம் சொல்வது போல ஏதோ முணுமுணுத்தார். அதாவது என்னுடைய நலம் வேண்டி பிரார்த்திக்கிறார் என்று நானாக புரிந்துக்கொண்டேன். ஆதினத்திடம் பெயர் கேட்டார், ஆனால் பெற்றோர் பெயரை கேட்கவில்லை, மாறாக மனைவியின் பெயர் கேட்டார். எப்படித்தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோ ? மறுபடியும் முணுமுணுப்பு. முடிந்ததும் ஏதாவது செய்யுங்க என்கிறார். மூத்தவர் தன்னுடைய பையில் இருந்து 150ரூபாயை எடுத்து வைத்தார். ஒத்த ஆளுக்கு போற காசில்லை, இங்குள்ள அனைவருக்காகவும்தான் அதனால் இன்னும் கொஞ்சம் போட்டு கொடுங்க என்கிற தொனியில் சொன்னார். இன்னொரு 50ரூபாய் வைக்கப்பட்டது. இப்போது என் பக்கம் திரும்பினார். “பாஸ்... என்னிடம் நயா பைசா கிடையாது... நான் இவருகூட தான் வந்தேன்...” என்று ஆதினத்தை கை காட்டினேன். ஏற்கனவே இருநூறு ரூபாய் தண்டம் அழுதவரை பார்த்து தலை சொறிந்து, பல்லிளிக்கிறார்.

ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பித்து எழுந்தோம். தர்காவை ஒரு எட்டு சுற்றி பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று பாய் திசைக்காட்டிய பாதையை நோக்கினோம். சற்று தொலைவில் இன்னொருத்தர் நின்றுக்கொண்டு “வெளக்கு போடுங்க...” என்று அழைத்தார். நானும் ஆதினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். திரும்பிப்பார்க்காமல் வெளிவரும் பாதையை நோக்கி நடந்தோம். அந்த மனிதர் விடாமல், “வெளக்கு போடுங்க...” என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். போங்கடா ங்கொய்யாங்கோ என்று சொல்லிவிட்டு வெளியேறினோம்.

நடைபெற்ற சம்பவத்திலிருந்து ஒரு விடுவிப்பு தேவைப்பட்டது. எங்கள் கால்கள் காரைக்காலை நோக்கி நடை போட்டன.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 14012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

விகடன் டைம்பாஸ் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கவர்ச்சி புகைப்படங்கள், கத்துக்குட்டி சினிமா விமர்சனங்கள், அதிகப்பிரசங்கித்தனமான பத்திகள், ஃபேஸ்புக் போட்டோக்கள், நியூஸ் கமெண்ட்ஸ், போட்டோ கமெண்ட்ஸ் என்று ஒரு மினி பதிவுலகம் என்று சொல்லலாம். டைம்பாஸில் காணப்படும் கான்செப்ட் என்கிற வஸ்து முழுக்க முழுக்க பதிவுலகில் இருந்து களவாடப்பட்டு காசாக்கப்படுகிறது. சமீபத்தில்  கும்கி - நான் இயக்கியிருந்தால் என்று ஒரு பதிவர் எழுதியிருந்தார். அது ஒரு சூரமொக்கை பதிவு என்பது வேறு விஷயம். எனினும் அந்த கான்செப்டை மட்டும் சுட்டு பக்கங்களை நிரப்பிவிட்டது டைம்பாஸ். இது உதாரணம் மட்டுமே. மூன்று மாதகாலம் டைம்பாஸை பின்தொடர்பவர்களுக்கு இன்னும் தெரியும். ஒரு பத்திரிகைக்கான எந்த ஒரு உழைப்பையும் பயன்படுத்தாத டைம்பாஸ் வெறுமனே நம்முடைய சிந்தனையை, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்களை, நம்மவர்கள் வெள்ளந்தியாய் அனுப்பி வைக்கும் படைப்புகளை கொண்டு லகரங்களில் புரள்கிறது. டைம்பாஸுக்கு படைப்புகள் அனுப்பச்சொல்லி கேட்கும்போது “ப்ரைஸு தர்றோம் பாஸு” என்ற வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அதை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஏனோ வாலி படத்தில் விவேக் சொல்லும் “நீங்க ஒன்னும் சும்மா போட வேணாங்க... காசை இங்க போடுங்க... அட்ரஸை இங்கே எழுதிட்டு போங்க...” என்ற வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. பத்திரிகையில் என்னுடைய பெயர் / புகைப்படம் வெளிவந்திருக்கிறது என்று சிலிர்த்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. டைம்பாஸ் ரக சஞ்சிகைகளில் நம்முடைய பெயர் / புகைப்படம் வெளியாவதற்கு பதிலாக நாமே நம்முடைய வலைப்பூவில் சுதந்திரமாக எழுதிக்கொள்ளலாம்...!


புத்தகக்காட்சி அரங்கில் டோலு குருமா பேசப்போவதாக நண்பர்கள் காத்திருந்தார்கள். வெறுப்பாக இருந்தது. குருமா அப்படியென்ன பேசிவிடப் போகிறார். அவருக்கு அருகிலேயே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மையார் அமர்ந்திருந்தார். சுமார் ஒரு மணிநேர காத்திருப்புக்குப்பின் அம்மையார் பேசினார். கற்பழிப்பு சம்பவங்கள் பற்றியும், ஆண்பிள்ளைகளை ஒழுக்கம் கற்பித்து வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தொகுப்பாளர் வந்து லக்ஷ்மி கிளியின் கொஞ்சல் குரலில் பேசியதாக சொன்னார். எனக்கென்னவோ கிளியின் கொஞ்சல் ஒன்றும் அவ்வளவு இனிமையாக தோன்றவில்லை. அம்மையார் கிளம்பும் தருவாயில் வழிமறித்தோம். சில அடிகள் தொலைவில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். சிலிர்த்துவிட்டேன். ஆரோகணம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உற்சாகமாக இருந்தது என்று கூறினேன். (உங்களை பார்த்ததும் தான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்). ஆங்கில வசனங்களை குறைத்திருக்கலாம் என்றேன். அண்ணா திரையரங்கில் பார்த்தபோது தானும் அதையே உணர்ந்ததாக சொன்னார். அடுத்த படத்தில் பாருங்கள் என்று கட்டைவிரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டிவிட்டு கிளம்பினார். காத்திருக்கிறோம்.

பிரபா ஒயின்ஷாப் என்று கலவை பதிவிற்கு தலைப்பு வைத்துவிட்டு டெம்ப்ளேட் பின்னூட்டக்காரர்களிடம் நான் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது. ஏதோ என்னளவில் கொஞ்சம் சிரத்தையெடுத்து பதிவு போட்டால், “போதை ஏறவே இல்லை”, “சரக்கு சுமார்தான்”, “சரக்கில் காரம் கம்மி”, “சரக்கு சப்புன்னு இருக்கு" என்று பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டு போகிறார்கள். அதுகூட பரவாயில்லை. சரக்கு சுமார் என்று ஒருத்தர் முன்மொழிந்தால் பின்வருபவர்கள் அதையே வழிமொழிகிறார்கள். என்னுடைய எழுத்து மொக்கையாக இருக்கலாம் அது விஷயமில்லை. உண்மையில் பதிவில் என்ன குறைபாடு, சரக்கு சூப்பர் என்று சொல்வதற்கு உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்று வெளிப்படையாக சொன்னால் தானே அது Constructive Criticism.

நம்மூரில் ஆட்டோ என்றழைக்கப்படும் மஞ்சள்நிற மங்கள வாகனம், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, இந்தோனேசியா உட்பட சில கிழக்காசிய நாடுகள் மற்றும் சில உலக நாடுகளில் டுக்-டுக். காரணம் - வாகன செயல்பாட்டின் போது ஏற்படுத்தும் டுக்-டுக் சத்தம். சில இடங்களில் புட்-புட் என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, இந்தோனேசிய நாடுகளில் ஒரேயொருவர் பயணிக்க வேண்டிய சமயங்களில் ஆட்டோவை நாட வேண்டியதில்லை. ஒட்டுனருடன் கூடிய பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஓட்டுனருக்கு உணவு, கூலி,பெட்ரோல் பணம் கொடுத்துவிட்டால் விரும்பியபடி ஊர் சுற்றலாம். இந்தியாவிலும் இனி வரும் காலங்களில் வாடகை டூ-வீலர் யுக்தியை பயன்படுத்தலாம். போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் சமீபத்தில் வெளிவந்த பாரசீக மன்னன் என்ற குப்பை மேற்படி எண்ணத்தை விதைத்தது.

என்ன இது தமிழனுக்கு வந்த சோதனை ? தமிழனுடைய பாரம்பரிய உடையை அணிவதில் தான் எத்தனை சிரமம். ஏற்கனவே சிலமுறை வேட்டி கட்டியிருந்தாலும், அதிகபட்சம் பக்கத்து தெரு வரை மட்டுமே. இன்று ஏதோ ஆர்வக்கோளாறில் காலையிலிருந்து வேட்டி கட்டுவதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெல்ட் வாங்கி வைத்துவிட்டேன். அப்படியே அலுவலகத்திற்கு வேறு செல்லப் போகிறேன். என்னென்ன நடக்கப் போகிறதோ ?

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...!

என்னது தமிழ் புத்தாண்டா ? யோவ் நாங்க தெலுங்குய்யா...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தின் மறுபதிப்பு, சந்தானத்தின் தயாரிப்பு, வசீகரமான தலைப்பு இதையெல்லாம் தாண்டி பவர் ஸ்டார் என்ற தாரக மந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பூர்த்தியானதா ?


மறுபதிப்பு என்பதால் கதை, சஸ்பென்ஸ் உடைப்பு என்பதை பற்றியெல்லாம் கவலை வேண்டாம். எனினும் புதுப்பொலிவான திரைக்கதை.

பவர் ஃபுல்லான வேடத்தில் பவர் ஸ்டார். வழக்கமாக படங்களில் டைட்டில் போடும்போது நாயகனை விட சந்தானம் அதிக விசில் வாங்குவார். இங்கே பவர் ஸ்டார் பெயர் போடும்போது உச்சக்கட்ட ஆர்ப்பரிப்பு. பவர் ஸ்டாருடைய நடிப்பு, வசன விடுவிப்பு பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் குவியத்துக்கு வெளியே பவர் செய்யும் சேட்டைகள் கவனிக்க வைக்கின்றன. பவரை முதல்முறையாக மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் நாயகி சொல்வதைப் போல அவருடைய மைனஸ் ப்ளஸாக அமைந்துவிட்டது.

சந்தானத்தின் நகைச்சுவைகள் லட்டில் புதைத்து வைக்கப்பட்ட உலர் திராட்சைகள். அவருடைய உவமைகள், தத்துபித்துவங்கள் சலிக்காமல் தொடர்ந்திருக்கின்றன. நாயகியிடம் விருப்பம் தெரிவிக்கும் காட்சியில் முகபாவனை அற்புதம்.

பாக்யராஜ் வேடத்தில் புதுமுகம் சேது. சாப்பிடத் தெரியாதவருக்கு லட்டு கிடைத்திருக்கிறது. பனியன் விளம்பர மாடல் மாதிரி நடித்திருக்கிறார்.


விஷாகா - டல் திவ்யாவாக இருந்தவர் தூள் திவ்யா ஆகிவிட்டார். பிடிச்சிருக்கு. பாவாடை தாவணி போட்ட பாலாடை. பாடல் காட்சியில் பஞ்சாபி ஜிலேபி. அடியே என் அன்னக்கிளியே பாடலில் விஷாகாவின் குழைவான பிரதேசங்கள் நம் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கல்லாப்பெட்டியை நிரப்ப முடியாமல் கரகர கணேஷ். கோவை பேச்சுவழக்கில் சரளமாக நடித்திருக்கிறார் கோவை சரளா. உதிரி பாகங்களாக பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, சிவசங்கர் மாஸ்டர் தேவையான அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பவர் குடும்பத்தினர் உறுத்தல். கெளரவ தோற்றத்தில் சிம்பு, கெளதம் மேனன்.

தமன் இசையில் ஆசையே அலை போல பாடலும், விஷாகா தசையில் அடியே என் அன்னக்கிளியே பாடலும் செவிக்கும் கண்களுக்கும் இனிமை, முறையாக.

குறைகள் என்று பார்த்தால், சில காமெடி காட்சிகள் மொக்கை தட்டுகின்றன. குறிப்பாக பவர் குடும்பத்தினர் செய்யும் நகைச்சுவைகள் தெலுங்குத்தனம். கணேஷ் பிணமாக தோன்றும் காட்சி காமெடி எல்லை மீறல். வசன உச்சரிப்பும் வாய் அசைப்பும் பல காட்சிகளில் பொருந்தவே இல்லை. சொல்லப்போனால் பவர் ஸ்டார் பல காட்சிகளில் வாயசைக்கவே இல்லை.

மற்றபடி, முதல் பாதியில் முழுக்க சிரிக்க வைத்து, இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வடைந்து பின்னர் மறுபடியும் சிரிப்பு மூட்டி மொத்தத்தில் ஒரு ஃபீல் குட் படமாகவும், பொதுஜன விருந்தாகவும் அமைந்திருக்கிறது. சந்தானத்தின் முதல் தயாரிப்பு சினிமாவுக்கும், அதன் ரசிகர்களுக்கும் லட்டு கொடுத்து வருடத்தை தொடங்கி வைத்திருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 January 2013

புத்தகக் காட்சி புலம்பல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல புத்தகக் காட்சி ஆரம்பித்துவிட்டாலே கம்யூனிச சிந்தனை, சமூகக் கோபம், அறச்சீற்றம் எச்சச்ச கச்சச்ச இவையெல்லாம் எங்கிருந்தோ பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.


புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ புத்தகக் காட்சி ஆரம்பித்தவுடன் முதல்நாள் முதல்காட்சி சினிமா ரசிகன் போல முண்டியடித்துவிட வேண்டுமென்று எனக்கொரு கோட்பாடு. எனினும் அன்றாட அக்கப்போருகள். வாரநாட்களில் என்னுடைய இயந்திரம் என்னை எங்கேயும் அனுமதிப்பதில்லை.

இன்று காலை வெள்ளென வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டேன். கடந்த வாரம் ஏற்பட்ட சிறிய விபத்தொன்றின் காரணமாக அரை நிஜார் அணிந்து செல்ல வேண்டிய சூழல். (விபத்து என்றதும் வாசகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் :) ). பபாசியில் அரை நிஜாரை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. பச்சையப்பாஸ் எதிரே நடைபெற்ற வரையில் போக்குவரத்து சுமூகமாகவே இருந்தது. நந்தனம் என்றால் திருவொற்றியூரிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.கூகுள் மேப்ஸ் வேறு YMCA ராயப்பேட்டையில் இருக்கிறது என்று சொல்லி குழப்பி வைத்திருந்தது. பிறந்ததிலிருந்து சென்னையில் இருந்துக்கொண்டு YMCA மைதானம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றால் மானக்கேடு. SIET வரை பயணிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதன்பிறகுதான் போக்குவரத்து நெரிசல் விழி பிதுங்கியது. முந்தய புத்தகக் காட்சிகளில் இடம்பெற்றது போல அரங்கு வாயிலில் பழைய புத்தகக்கடைகள் எதுவும் தென்படவில்லை. புறவழியில் வைத்திருக்கிறார்களோ என்னவோ ?

பதினொன்றரை மணிக்கு அரங்கை அடைந்துவிட்டேன். அரை நிஜாருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்ன, சில வயதுப்பெண்கள் ஏதோ சிக்கன் தொடைக்கறியை பார்ப்பதுபோல குறுகுறுவென்று பார்க்கும்போது கூச்சத்தில் நெளிய வேண்டியதாகிவிட்டது.

வழக்கமாக கடை எண் ஒன்றில் தொடங்கி அப்படியே ZIGZAG-ஆக ஒரு வலம் வருவேன். அதேபோல முதல்முறை செல்லும்போது எந்த புத்தகமும் வாங்க மாட்டேன். கடை எண்களை மட்டும் குறித்துக்கொண்டு புத்தகக் காட்சி நிறைவடைவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சென்று வாங்குவேன். இன்றும் அப்படித்தான் தொடங்கினேன். முதலிரண்டு வரிசைகளுமே சுவாரஸ்யக்குறைவாக இருந்தது போல ஒரு எண்ணம். 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி ?, கனவுகளும் பலன்களும், நீங்களும் ஜோசியர் ஆகலாம் போன்ற புத்தகங்களே கண்ணில் பட்டன. அதை விட்டால் இந்திரா செளந்திரராஜன் வகையறா குடும்ப நாவல்கள். சுமார் மூன்று வரிசைகள் கடந்தபின்னர் ஒரு கடையில் சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைத்தன. இந்தமுறை கடை எண்ணை குறித்து வைக்கவில்லை. நம் பதிவர்கள் இருக்கிறார்களே, எமகாதகர்கள். ஆளாளுக்கு ஒரு செட் புத்தகம் வாங்கினால் என்னவாம். சுஜாதா புத்தகங்கள் சல்லிசு விலையில் என்றால் போங்காட்டம் ஆடி மொத்தத்தையும் மூட்டை கட்டிவிடுவார்கள். சென்றமுறை அப்படித்தான் ஏமாந்தேன். அதனால் கையோடு புத்தகங்களை வாங்கிவிட்டேன்.

1. வடிவங்கள் (விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு)
2. 60 அமெரிக்க நாட்கள் (பயண அனுபவம்)
3. டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு (நாடகம்)
4. விபரீதக் கோட்பாடு (நாவல்)
5. 24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்பது முரண்)
6. படிப்பது எப்படி ?
7. சிறுகதை எழுதுவது எப்படி ?

ஏழு புத்தகங்கள் சேர்த்து நூற்றி ஐம்பது ரூபாய். தொடர்ந்து உலவினேன். ஏனோ கூட்டம் அதிகமில்லை. வி.ஐ.பிக்கள், சக பதிவர்கள் யாரும் தென்படவில்லை. கடந்த ஆண்டு, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் பில் கவுண்ட்டரில் சந்தித்த சுமாரான ஃபிகர் இன்னமும் என்னை நினைவில் வைத்து புன்னகைத்துவிட்டு செல்கிறாள்.

நான்கைந்து வரிசைகள் கடந்ததும் ரைம்ஸ் கடை அளப்பறைகள் ஆரம்பமானது. ஆளாளுக்கு ஒரு எல்.சி.டி தொலைகாட்சி வைத்துக்கொண்டு அதில் ஆத்திச்சூடியோ, ஆன்னா ஆவன்னாவோ, டோரா பூஜியோ அலறவிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ஒரு யுவதி தன்னுடைய குழந்தையை வாக்கரில் அமர்த்தியபடி அழைத்து வந்திருக்கிறாள். அது ‘வீல்’ என்று கத்தி கூப்பாடு போடுகிறது. எரிச்சல் அதிகமானது. அந்நேரம் பார்த்து கண்ணில் பட்ட லிச்சி ஜூஸ் சற்று தணியச் செய்தது.

3012ல் உலகம் அழியுமா ?, இஸ்லாம் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கிறது போன்ற குபீர் சிரிப்பை வரவழைக்கும் புத்தகங்கள் கண்ணில் படுகின்றன. இன்னொரு கடையில் பத்து, பதினைந்து ஆபீசர்ஸ் டை கட்டியபடி கிடைக்கிற பெற்றோர்களை பிடித்து மூளைச்சலவை செய்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜ் டிவி கடையில் வைக்கப்பட்டிருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘நாடோடி மன்னன்' டிவிடிக்களையெல்லாம் அள்ளிக்கொண்டு செல்ல வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. அஜித் புகைப்படத்தை அட்டையில் பொறித்த ஐந்து RITZ சஞ்சிகைகளை வாங்கி பையில் சொருகிக்கொண்டேன். பசியெடுக்க ஆரம்பித்தது. ஏறத்தாழ கடைசி வரிசைக்கு வந்திருந்தேன். காட்சிப்பிழை சிற்றிதழில் தேர்ந்தெடுத்து நான்கை வாங்கினேன். சந்தா கட்டிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

வெளியே வந்ததும் குல்பி ஐஸ், ஸ்வீட் கார்ன், வாழைத்தண்டு சூப், ஐஸ்க்ரீம் என்று வரிசையாக கடைகள். சாப்பிட வாங்க என்ற பெரிய ஃபுட் கோர்ட் மாதிரி ஒன்று. உள்ளேயே நுழையவில்லை. மாலையில் சசிகுமார், சமுத்திரக்கனி வருவதாக பேசிக்கொண்டார்கள். அயர்ச்சியாக இருந்தது கிளம்பி வந்துவிட்டேன். மீண்டும் நாளை செல்ல வேண்டும்.

அடுத்து வருவது: கண்ணா லட்டு தின்ன ஆசையா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 January 2013

வேளாங்கண்ணி தேவாலயம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படிக்க: ஆதினங்களின் ஆன்மிக சுற்றுப்பயணம்

சென்ற பாகத்தின் இறுதியில் “வேளாங்கன்னி” என்று குறிப்பிட்டிருந்தேன். விக்கிபீடியா “வேளாங்கண்ணி” என்று சொல்கிறது. அதே விக்கிபீடியா “Virgin of Velai” என்று ஆங்கிலத்தில் சொல்கிறது. இதுபற்றி யாராவது விம் போட்டு விளக்கவும்.


நாங்கள் நாகையிலிருந்து சுமார் அரைமணிநேர பேருந்து பயணத்தில் வேளாங்கண்ணியை சென்றடைந்தோம். கூட்டம் திருவிழா போல இருந்தது. இருப்பினும் இது வழக்கத்தை விட மிக குறைவு என்று  மூத்த ஆதீனம் சொன்னார். ஆலயத்தை நோக்கி நடைபோட்ட பாதையின் இருபுறங்களும் கடைகள். பெரும்பாலும், கிறித்துவ துதிப்பாடல் கேசட்டுகள், கிறித்துவ பரிசுப்பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. “இங்கு மொட்டையடிக்கப்படும்” பலகைகள் தொங்குகின்றன. இயேசு, மாதா உருவங்களுக்கு அருகே நின்று புகைப்படமெடுக்கும் கடைகள் என்று நிரம்பியிருக்கிறது. இவை தவிர்த்து தங்கும் விடுதிகள்.

நடுத்திட்டு என்று சொல்லப்படும் ஒரு இடத்திற்கு ஆதினம் நம்மை அழைத்துச் சென்றார். அங்கிருந்து திரும்பிப் பார்த்த போது அதிசயித்தேன். ஏதோ வாடிகன் நகரத்திற்குள் நுழைந்ததைப் போன்றதொரு உணர்வு. சுற்றிலும் பளீரென வெண்ணிற ஆலயங்கள். தேவாலயங்களும் மக்கள் கூட்டமும் ஞாயிறு காலையை நினைவு கூர்ந்தன.

வழிபாடுகள் விந்தையாக இருக்கின்றன. மெழுகுவர்த்தி ஏற்றலாம், தேங்காய் உடைக்கலாம், மொட்டை அடித்துக்கொள்ளலாம், மரத்தில் தொட்டில் கட்டி விடலாம், மாதாவுக்கு பட்டுப்புடவை சாத்தலாம் - பக்தர்களுக்கு வளைந்துக்கொடுக்கக்கூடிய திருத்தலம். கெடா வெட்டி பொங்கல் வைக்கலாமா என்று தெரியவில்லை. ஆதினம் அவருடைய பங்குக்கு சில மெழுகுவர்த்திகளை வாங்கி வந்தார்.

பளிங்கு மாளிகைக்குள் நுழைந்தோம். கிறிஸ்தவ பாரம்பரிய இசை, கம்பீரமான குரலில் வழிபாடு, மனமுருகி முழங்காலிட்டு வேண்டிக்கொண்டிருக்கும் பக்தர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது யாருக்காவது பரவசநிலை ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். முன்னே நகர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாதா உருவத்தை கண்டோம். ஆதினம் தனது மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துவிட்டு, நம்மிடம் இரண்டை திணித்தார். பின்னர், வேறு வழியில்லாமல் அதையும் அவரே ஏற்றினார்.

வேளாங்கண்ணியின் சிறப்பே அதன் சமத்துவம் தான். அனைத்து மதத்தினரும் வரலாம். விரும்பியபடி கடவுளை கும்பிடலாம். சாதி பாகுபாடுகள் இல்லை என்று சில நிறைகளை பட்டியலிட்டார் மூத்த ஆதினம். எனக்கென்னவோ வியாபார யுக்தியாகத்தான் தோன்றுகிறது. எல்லா மதத்தினரும் வரலாம் என்றாலும் கூட சில வரைமுறைகள் உண்டுதானே. தேவாலயத்திற்குள் விநாயகர் சிலையை அனுமதிப்பார்களா ? தவிர, இங்கு கூடும் கூட்டத்தின் பெரும்பகுதி வாய்வழி பிரச்சாரத்தின் மூலம் வரவழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களுடைய சடங்குகளில் “புது நன்மை" என்ற ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறேன். அதை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு வேளாங்கண்ணி செய்யுமா என்று தெரியவில்லை.

அடுத்ததாக, அங்கிருந்த க்ரில் கம்பிகளில் நிறைய பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. திருட்டுப்போன பொருள் கிடைக்கவேண்டி / கிடைத்துவிட்டால் பூட்டு தொங்கவிடுவார்கள் என்று மூத்தவர் சொன்னார். சற்று தொலைவில் புனித நீர் வழங்கப்படும் குடில் காணக்கிடைத்தது. காலை டிபனுக்கு பிறகு திரவ உணவு எதுவும் உட்கொள்ளாததால் நாவரண்டிருந்தது. வேகமாக உள்ளே நுழைந்து ஒரு குவளை புனித நீரை வாங்கிப் பருகினோம். ம்க்கும்... குறைந்தபட்சம் நன்னாரி சர்பத் மாதிரியாவது இருக்க வேண்டாமா ? சாதா தண்ணிக்கும், புனித நீருக்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. வெளியே, குடிநீர் இங்கே உள்ளது புனித நீரை வீணாக்க வேண்டாம் என்ற பலகை வேறு. மாட்டு மூச்சாவை குடிக்கச்சொல்லாதது வரை ஓகே.

அங்கிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் பழைய தேவாலயம் அமைந்திருக்கிறது. அந்த ஒரு கி.மீ மணல்வெளியில் முட்டிப்போட்டபடி பலர் நேர்த்திக்கடன் / வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள். வருத்தப்பட்டு பாரம் சுமந்தால் பலன் கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள் குறைந்தது இரண்டு வாரங்களாவது வலியில் அவஸ்தைபடக்கூடும். வெயிலோ மழையோ வேலையை காட்டினால் நிலைமை படுமோசமாகிவிடும்.

வேளாங்கண்ணி கடற்கரை. சென்னையை விட அசுத்தமாக இருப்பதில் ஒரு ஆறுதல். கூட்டமும் சேர்ந்து கும்மியடிப்பதால் கடலை ரசிக்க முடியவில்லை. கடமைக்காக கனநேரம் நின்றுவிட்டு திரும்பினோம். மறுபடியும் இருபுறமும் கடைகள். சங்கு, சிப்பி, கிளிஞ்சல்கள் கொண்டு செய்யப்படும் பொருட்களின் மீது எனக்கு எப்போதும் ஆர்வமில்லை. ஒரு பொருள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிறபோதே அது அதன் தனித்தன்மையை இழந்துவிடுகிறது. வேளாங்கண்ணியிடமிருந்து விடை பெற்றோம்...!

அன்றைய தினம் பக்ரீத்...! அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் நாகூர் தர்கா...!!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 07012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வருடக்கடைசி என்றாலே டாப் 10 திரைப்படங்கள், பாடல்கள், சம்பவங்கள், டாப் 10 பரபர, டாப் 10 சொற சொற என்று ஆளாளுக்கு ஆரம்பித்துவிடுகிறார்கள். இது பெரும்பான்மை தரப்புக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் பிரபல ஊடகங்களுக்கு டாப் 10 பட்டியலை வெளியிடுவது கடமை என்றாகிவிட்டதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிவரும் வருடக்கடைசிகளில் டாப் 10 கற்பழிப்புகள், டாப் 10 வங்கிக்கொள்ளைகள், டாப் 10 கள்ளக்காதல்கள், டாப் 10 என்கவுண்டர்கள் போன்ற பட்டியல்கள் வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


சனிக்கிழமை காலை சாவகாசமாக பத்து மணிக்கு கண் திறந்தேன். மின்சாரம் மிஸ்ஸிங். ஷட் டவுன் என்று அம்மா சொன்னார். என் அம்மா தான். தினத்தந்தியின் கடைசி மூன்று வண்ண பக்கங்களை புரட்டினேன். எல்லாம் லோ பட்ஜெட் குப்பைகள். நேரே ஓடியன்மணிக்கு செல்வோம், என்ன படம் பார்க்கப்போகிறோம் என்பதை கடவுளோ, தற்செயலோ அதுவே தீர்மானிக்கட்டும் என்று நடையை கட்டினேன். அருந்ததீ வேட்டை போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. வியர்வை மழையில் நனைத்தாலும் பரவாயில்லையென வீடு திரும்ப எத்தனித்தேன். யூ ஆர் மை ஒன்லி ஹோப் என்று சரண்யா மோகன் சிணுங்கினாள். சந்திரமுகி, அருந்ததீ, காஞ்சனா வரிசையில் என்றெல்லாம் மிரட்டி உள்ளே அனுப்பினார்கள். ஆனால் அவைகளின் கால்தூசு என்றுதான் சொல்ல வேண்டும். கதை, திரைக்கதைக்காக பெரிதாக யோசிக்கவில்லை போல. என்னைப் பொருத்தமட்டில் எந்தவித திகில், த்ரில், அதிர்ச்சியில்லாமல் தட்டையாக நகர்ந்து கடைசியில் வழக்கம்போல சாமியாரின் உதவியோடு சரண்யா மோகன் மீள்கிறார்.

வாழ்நாளில் முதல்முறையாக ஜாக்கி சான் படமொன்றை முழுமையாக திரையரங்கில் பார்த்திருக்கிறேன். தமிழில், என்பது ஆறுதல். CZ12 - பரபர பரபரவென்று படுவேக திரைக்கதை. ஆரம்பத்தில் தொடர்வதற்கு கொஞ்சம் சிரமப்பட்டேன். ஜேம்ஸ்பாண்ட் படங்களை போல ஜாக்கி சாதனங்களை பயன்படுத்துகிறார். நிறைய மசாலாத்தனங்கள், லாஜிக் பூ சுற்றல்கள் இருந்தாலும் ரசிக்க முடிந்தது. ரஜினியை ஏன் நம் மக்கள் ரசிக்கிறார்கள் என்ற உளவியல் புரிகிறது. தமிழ் மொழிமாற்றம் அட்டகாசம். இதுதான் ஜாக்கியுடைய கடைசி அடிதடி படம் என்ற செய்தி அதிர்ச்சி. ஐ வில் மிஸ் ஜாக்கி. (ஐ மீன் ஜாக்கி சான்).

மரணம் யாருக்கும் எப்பொழுதும் வரலாம். ஆனால் அது மிகச்சிறிய கவனக்குறைவால் அநியாயமாக ஏற்படும்போது மனது கிடந்து தவிக்கிறது. உறவினர் வீட்டு மொட்டைமாடியில் விளையாடச் சென்ற பன்னிரண்டு வயது சிறுவன் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால் உடல் கருகி ஊயிரிழந்திருக்கிறான். புகைப்படத்துடன் செய்தித்தாளில் வெளியாகி ஒரு கனம் உலுக்கியெடுத்து விட்டது. சிறுவனின் பெற்றோர்களின் நிலையை கற்பனை செய்யமுடியவில்லை. இதுகுறித்து EBயில் முன்பே புகார் கொடுத்து, அவர்கள் “சரி செய்கிறோம். அதுவரை யாரும் மொட்டைமாடிக்கு செல்ல வேண்டாம்.” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு பழுதான அரசு இயந்திரத்தை நொந்து பிரயோஜனமில்லாத போது நாமே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உதாரணத்திற்கு, குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் உள்ளன. அவற்றை களைந்தாலே நலம். குழந்தைகளிடம், பேய் வருது, சாப்பிடலைன்னா பூச்சாண்டி கிட்ட பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயம் காட்டுவது. போலவே கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றிற்கு பயம்காட்டி வளர்ப்பது. அதேசமயம், மின்சாரம், சாலை போக்குவரத்து, மொட்டை மாடி உயரம் போன்ற நியாயமான பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னும் நிறைய இருக்கு. நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்.

இப்பொழுதெல்லாம் வித்தியாசமாக ட்ரைலர் கட் செய்வதே வழக்கமான விஷயமாகி விட்டது. இனி வரும் காலங்களில் இந்த ட்ரெண்ட் போரடிக்க ஆரம்பித்து விடும் போல இருக்கிறது.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment