25 June 2011

ஜூன் 26 நினைவேந்தல்

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது...? ஒருவேளை அப்படி செய்தால்தான் இறந்தவர்களின் ஆத்மா "சாந்தி" அடையுமோ...? இதென்ன கருமம் மெழுகுவர்த்தி பிடித்துக்கொண்டு ஜெபக்கூட்டம் மாதிரி... என்றெல்லாம் எண்ணிப்பார்த்தேன். இது சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் அஞ்சலிக்கூட்டம் அல்ல. நமது தமிழ் உறவுகள் இலங்கை அரசால் சித்திரவதை செய்யப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை சர்வதேச சமூகத்திற்கும், ஊடகங்களுக்கும் உணர்த்தவிருக்கும் அடையாளக்கூட்டம். தூங்கிக்கொண்டிருக்கும் (அ) தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு "நாங்க இருக்கோம்டா..." என்று சொல்லி செவிட்டில் அறையும் கூட்டம்.

சாதாரண பொதுமக்களாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணும் லட்சம் தமிழர்களும், ஜூன் 26 மாலையில் மெரீனா கடற்கரைக்கு வாருங்கள். வரலாற்றை நம் பக்கம் திருப்புவோம். 

ஐ.நாவின் மனித உரிமை தினத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலையில், தமது பாதுகாவலர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டு பின் ஒவ்வொரு பதுங்கு குழியாய் நின்று சிங்கள விலங்குகள் வேட்டையாடியதால் மாண்டுபோன நமது தமிழ் உறவுகளை நினைவு கூறுவோம். நமது சொந்தங்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து வந்து அந்த வீரர்களுக்காகவும், போராளி மக்களுக்காகவும் மரியாதை செலுத்துவோம். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை மெரினாவிற்கு அழைத்து வருவோம். ஒரு மாபெரும் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தி அதன் மூலமாக தமிழர்களின் ஒற்றுமையை இந்திய அரசுக்கும், நமது கோரிக்கையான “தமிழீழத்தை விடுதலை செய்” என்பதை சர்வதேசச் சமூகத்திற்கும் முகத்தில் அறைந்து சொல்லுவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.


மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

Post Comment

17 June 2011

அந்தர் பல்டி

1996,

"அ.தி.மு.கவிற்கு ஓட்டு போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..."

2011,

"அ.தி.மு.க தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது..."


"அடங்கப்பா... பல்ட்டின்னா பல்ட்டி இது அந்தர் பல்ட்டிடா சாமீ..."


Post Comment

12 June 2011

ஆரண்ய காண்டம் - ஆயிரத்தில் ஒன்று

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தப்படத்தை பார்க்கப்போகிறேன் என்று சொன்னதும், சென்சார் கட் வாங்கின படம்ன்னு கேள்விப்பட்டதும் கிளம்பிடுவியே... என்று சில நண்பர்கள் ஏளனம் பேசினார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு படமா...? என்று புருவம் உயர்த்தினர். எனினும் இந்தப்படத்தின் விளம்பர யுக்தியால் ஈர்க்கப்பட்டு நீண்ட நாட்களாக இதற்காக காத்திருந்தேன் என்பதே உண்மை. வண்ணாரப்பேட்டை மகாராணி திரையரங்கிற்கு சென்றிருந்தேன். சனிக்கிழமை இரவு என்பதால் குடிமகன்களின் வருகை அதிகமாக இருந்தது. ஒருசில முகங்கள் மட்டுமே படத்தின் வேல்யூ தெரிந்து வந்ததாக தெரிந்தது.


கதைச்சுருக்கம்:
சிங்க பெருமாள் ஒரு அண்டர்கிரவுண்ட் தாதா. அவரது வலது கையாக பசுபதி. இதேபோல கஜேந்திரன் மற்றொரு தாதா. அவரது வலது கையாக கஜபதி. இவர்களுக்கு மத்தியில் கஜேந்திரனுக்கு சேர வேண்டிய ஒரு போதைப்பொருள் சரக்கை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் சிங்க பெருமாள், கஜேந்திரன் இருவருமே பசுபதியுடன் பகையாக, பழி தீர்த்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.

இதுதான் காட்ஃபாதர் காலத்திலிருந்தே பார்த்த கதையாச்சே என்று கொட்டாவி விட்டால் திரைக்கதையால் திரும்பிப்பார்க்க வைக்கிறார் தியாகராஜன். சொல்லப்போனால் இது தமிழ் சினிமாதானா...? என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு நிறைய காட்சிகள். முதல் சில நிமிடங்களின்போது ஏதோ டாக்குமெண்டரி படம் போல நகர்ந்து அப்படியே மெல்ல மெல்ல மெட்ரோ ரயிலாக வேகமெடுக்கிறது கதை. (மோனோ ரயில் என்றும் வைத்துக்கொள்ளலாம்).

தாதா மற்றும் தாத்தா சிங்கபெருமாளாக ஜாக்கி ஷெராஃப். இதே பாத்திரத்தை நாம் பிரபுவாகவோ, ராஜ்கிரனாகவோ இன்னபிற குணச்சித்திர நடிகர்களாகவோ நிறைய படங்களில் பார்த்திருப்போம். அவர்களில் ஒருவரே இந்தப்படத்திலும் நடித்திருந்தால் சலிப்பு தட்டியிருக்கும். நாம் இதுவரை பார்த்திராத ஜாக்கி என்பதால் வசீகரித்தது. அனுபவத்திற்கேற்ப அருமையான நடிப்பு. இவர் "ஈ" என்று பல்லைக்காட்டுவது மாத்திரம் நம்மை "ங்கே" என்று தலைசொறிய வைக்கிறது.

பசுபதியாக சம்பத். இவர்தான் படத்தின் ஹீரோ என்று சொல்லலாம். இவருடைய கேரக்டர் நாம் ஏற்கனவே சென்னை - 28, சரோஜா படங்களில் பார்த்த அதே முரட்டுத்தனமான கேரக்டர்.

சப்பையாக ரவிகிருஷ்ணா. அவருக்கேற்ற பாத்திரம். கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்திலும் பதிவிலும் பெண்ணில்லாத குறையை தீர்க்கிறார் யாஸ்மின் பொன்னப்பா. ஜாக்கியின் கீப்பாக வரும் இவருக்கு ஒரு கிளைக்கதையும் அதன் மூலம் ஒரு மெசேஜும் படத்தில் உண்டு.

படத்தில் அதிமுக்கியமாக பாராட்டப்பட வேண்டிய நடிப்பு என்றால் அது காளையன் கதாப்பாத்திரத்தில் நடித்த சோமசுந்தரத்தினுடையது. அட... அட... அட... நடிப்பு, மொழி நடை, உச்சரிப்பு, அங்க அசைவுகள் என்று வெளுத்துக்கட்டியிருக்கிறார். இவருடைய மகன் கொடுக்காப்புலியாக வரும் சிறுவன் வசந்தின் நடிப்பும் அவ்விதமே சிறப்பு.

கஜேந்திரனாக ஸ்டன்ட் மாஸ்டர் ரேம்போ ராஜ்குமார். இவரைப் பார்த்தால் சமயங்களில் சிரிப்பு தான் வருகிறது. இன்னும் சில கதாப்பாத்திரங்கள். அப்புறம் அஜய்ராஜ், இவர்தான் படத்தில் ஆண்ட்டி-ஹீரோ. இவர் பேசும் வசனங்களை கேட்கும்போது சுவாமி சரக்கானந்தா பளிச்சென்று நினைவுக்கு வந்தார்.

இசை யுவன், ஆனால் பாடல்கள் இல்லை என்றால் ஏமாற்றம் தானே. ஆனால் பின்னணி இசையின் மூலம் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசை பல இடங்களில் உலகப்படங்களுக்கு நிகர். சில இடங்களில் உலகப்படங்களை இமிடேட் செய்வதுபோலவும் இருந்தது. ஒளிப்பதிவும் அவ்விதமே சிறப்பு. பெரும்பாலான காட்சிகள் நான் பார்த்து பழகிய வடசென்னையில் எடுக்கப்பட்டிருந்தது, "இது நம்ம ஏரியா..." என்று குதூகலிக்கச் செய்தது.

வசனங்கள்தான் இந்தப்படத்தை எனக்கு பிடிக்க வைத்தது என்றும் கூறலாம். "சாராயம் வாங்கிக்கொடுத்தவர் சாமி மாதிரி..." போன்ற வசனங்கள் சிரிக்கவும் "சிந்திக்கவும்" வைத்தன. (எனக்கு ஓசி சரக்கு வாங்கித்தந்த சாமிகளுக்கு இந்த வசனத்தை டெடிகேட் செய்கிறேன்).

படத்தின் ப்ளஸ்:
- கடந்த பத்தியில் குறிப்பிட்டது போல வசனங்கள்.
- அனைத்து நடிகர்களின் மிகைபடுத்தப்படாத நடிப்பு.
- பின்னணி இசை, ஒளிப்பதிவு.

படத்தின் மைனஸ்:
- ஸ்டார் வேல்யூ இல்லாதது.
- கெட்டவார்த்தைகள், வன்முறைக் காட்சிகள்.

எனக்குப் பிடித்த காட்சி:
ஜாக்கி ஷெராஃப் துப்பாக்கியால் சுடப்பட்டதும் அவர் துடிதுடித்து சாகும் காட்சி. அப்படியொரு அற்புதமான நடிப்பு.

வெர்டிக்ட்:
இடைவேளை வரை மின்னல்வேகம். ஏகப்பட்ட குபீர்சிரிப்பு வசனங்கள், காட்சிகள். இரண்டாம் பாகம் மித வேகம். கொஞ்சம் அரைத்தது என்றாலும் படம் முழுக்க சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. படத்தின் நீளம் 153 நிமிடங்கள் என்று விக்கிபீடியா சொன்னாலும் படம் இரண்டு மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது. (சென்சார் அதிகாரிகள் புண்ணியத்தில்). அடுத்தவாரம் அவன் இவன் படம் வெளிவந்ததும் நிச்சயம் இந்தப்படம் காணாமல் போய்விடும். ஒரு நல்ல தமிழ் சினிமாவிற்கு நாமெல்லாம் கொடுக்கும் மரியாதை அதுதானே.

இன்னும் சில அப்பாவிகள் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள் - அவார்டு படம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment