27 May 2019

பிரபா ஒயின்ஷாப் – 27052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புதிய மத்திய அரசாங்கத்தில் வெளியாகும் முதல் ஒயின்ஷாப் !

தேர்தல் முடிவுகள் என்பது பெரும்பாலும் ஒரு புதிராகவே அமைந்துவிடுகிறது. மக்களுக்கு மட்டுமல்ல. பல வருடங்கள் அரசியலில் பழம் தின்று கொட்டையடித்து பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கே கூட. ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று மோடியாருக்கு முன்பே தெரிந்திருந்தால் கடைசி நேர பிரஸ் மீட், கேதர்நாத் தியான ஸ்டண்ஸ் எல்லாம் செய்திருக்க மாட்டார் இல்லையா ? தற்போது மோடியாருக்கு தான் அப்படி செய்ததை எல்லாம் நினைத்தால் சங்கடமாக இருக்கக்கூடும். நூறு சதவிகித தமிழகமும் பா.ஜ.க. வேண்டாம் என்று நினைத்திருந்தால் கூட பா.ஜ.க.வை தவிர்த்திருக்க முடியாது என்பதால் அது குறித்து வருந்துவதற்கு ஒன்றுமில்லை. அதே சமயம் தமிழகத்தின் முடிவுகளைக் கண்டு வியக்காமலும், வருந்தாமலும் இருக்க முடியவில்லை.

குறிப்பாக தி.மு.க. ஆதரவாளர்கள் எல்லோரும் நிஜமாகவே சந்தோஷமாகத்தான் இருக்கிறார்களா அல்லது தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்களா என்று புரியவில்லை. 38 MP தொகுதிகள், இடைத்தேர்தலில் 13 MLA தொகுதிகள் என்பது மகிழ்வான செய்திதான், இதுவே வேறொரு சமயமாக இருந்திருந்தால். ஒருபுறம் தி.மு.க.விற்கு கிளீன் ஸ்வீப் என்கிற சந்தோஷத்தை கெடுத்த தேனி தொகுதி. அதுகூட பரவாயில்லை. 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் இன்னமும் (அதாவது நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற டிஸாஸ்டர்களுக்குப் பிறகும்) தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இதற்கு மேல் இது பெரியார் மண் என்று பெருமையடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது ? இது இடைத்தேர்தல் தான். முழுமையான சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் ஒரு பேச்சுக்கு இதே பாங்கில் சென்றால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 138 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 96 இடங்களையும் கைப்பற்றும். அப்போதும் தி.மு.க.வினர் மண்ணைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அடுத்த சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதிலே தி.மு.க. மட்டும் தனியாக 150+ இடங்களையும், கூட்டணி கட்சிகள் சேர்த்து 180+ இடங்களையும் பெற்றால் மட்டுமே அது வெற்றி.

மீண்டும் பா.ஜ.க. மற்றும் மாநிலத்தில் தொடரும் அ.தி.மு.க. ஆட்சி என்பதால் குறைந்தது அடுத்த சில ஆண்டுகளுக்கு நாம் சந்திக்கப்போகும் டிஸாஸ்டர்கள் :-

  • நீட் தேர்வுகள். அது அதன் நீட்சியாக மற்ற படிப்புகளுக்கும் கொண்டு வரப்படலாம்.
  • சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை செயல்படுத்தப்படும்.
  • ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கெயில் குழாய் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்.
  • காவிரியைத் தர மாட்டார்கள். வேண்டுமானால் சின்னம்மாவைத் தருவார்கள்.

இதுபோன்ற இன்னும் ஏராளமான மின்சார சீண்டல்களுக்கு ஆளாகப்போகிறோம். ஒருவகையில் தி.மு.க.விற்கு இப்போது கிடைத்திருக்கும் வெற்றி ஒரு முள்கிரீடம். இனி தமிழ்நாட்டில் உள்பாவாடை தொலைந்தால் கூட அதற்கு தி.மு.க. தான் காரணம் என்று கேஸ் எழுதுவார்கள். துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க.வே மனமுவந்து எதிர்த்தால் கூட அவர்களால் தடுக்க முடியாது. வேண்டுமானால் நாம் திருமா பாராளுமன்றத்தில் கர்ஜித்தார் என்றோ, கனிமொழி ‘என்ன அநியாயங்க இது ?’ என்று கேள்வி எழுப்பினார் என்றோ கருப்பு, சிகப்பு, நீல நிற ஹார்டின்களை போட்டு சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

இப்படித்தான் கந்தர்வ ராத்திரி என்கிற மலையாள படத்தில் வைராக்கியமாக இருக்கும் விசித்திராவை... வேண்டாம் விடுங்கள்.

***************

துக்கத்தில் இருக்கும் மனதைக் கொஞ்சம் தும்பாடு பற்றி பேசி ஆற்றிக்கொள்வோம். கெட்டவார்த்தை இல்லை. தும்பாடு (Tumbadd) என்பது கடந்த வருடம் வெளியான ஹிந்தி திரைப்படம். 

பூர்த்தி தேவி என்னும் பெண் கடவுள். அளவிலா தங்கமும், தானியமும் கொண்டவள். இப்பூமியானது அவளது வயிற்றில் தான் அமைந்துள்ளது. ஏராளமான கடவுள்களை உருவாக்கிய தேவியின் மூத்த குழந்தையின் பெயர் ஹஸ்தர். ஹஸ்தர் பேராசை கொண்டவன். அவன் தேவியின் தங்கத்தையும், தானியத்தையும் முழுமையாக அடைய நினைக்கிறான். நினைத்தபடி தங்கத்தை சொந்தமாக்கிக் கொள்கிறான். ஆனால் தானியத்தை நெருங்கும் முன் மற்ற கடவுளர்களால் தாக்கப்படுகிறான். அவர்களிடம் இருந்து அவனைக் காக்கும் தேவி, அளவிலா தங்கம் அவனுக்கே சொந்தம், ஆனால் அவனுக்கு தானியம் (அதாவது உணவு) மட்டும் கிடைக்காது என்கிற சாபத்துடன் அவனை தன் வயிற்றில் வைத்து காப்பாற்றுகிறார். இது முன்கதை.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டம். தும்பாடு அரண்மனையில் ஹஸ்தருக்கு அமைக்கப்பட்டுள்ள கோவிலில் அளவிலா தங்கத்துடனும், தீராத பசியுடனும் ஹஸ்தர் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவேளை தங்கக்காசை எடுக்கச் செல்கையில் ஹஸ்தரின் தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டால் அவர்களுக்கு மரணமே ஏற்படாத சாபம் கிடைத்துவிடும். அதற்கு சாட்சியாக அந்த ஊரில் ஒரு மூதாட்டி இருக்கிறார்.

ஹஸ்தர்
இப்போது ஹஸ்தரைப் போலவே பேராசை கொண்ட கதாநாயகன் விநாயக். அவனது சிறு வயதிலிருந்தே அவனுக்கு அந்த புதையலின் மீது ஒரு கண். இதற்கு மேல் கதையை எழுதிப் படித்தால் சுவாரஸ்யமில்லை. ப்ரைமில் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் டப்பிங் உள்ளது.

ஒரு கைவினைப் பொருளை உங்களுக்காக பிரத்யேகமாக தயாரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படத்தின் விஷுவல்ஸ். சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய கதை என்பதால் தேவதாசி, சதி, மன்னராட்சி முறை, சுதந்திரப் போராட்டம், அதை மக்கள் அணுகிய விதம் போன்ற விஷயங்களை லேசாகத் தொட்டுச் செல்கிறது.

படம் பார்த்தபிறகு தும்பாடு படுத்தும் பாடு ஏராளம். ஒரு விஷயம் உறுதி, இரண்டு மணிநேர படம் – அதைப் பார்த்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் அதனை மறந்துவிட முடியாது. குறைந்தது இரண்டு நாட்களுக்காவது தும்பாடின் தாக்கம் இருக்கும். இதனை ஒரு mind-bender என்கிறார்கள். படம் பார்த்த பிறகும் உங்கள் மனதில் ஏராளமான கேள்விகள் எழும் என்பதற்கு நானும் கோராவும் சாட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 May 2019

பிரபா ஒயின்ஷாப் – 20052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

உலகில் சின்னச் சின்ன பாவங்கள் என்று நிறைய இருக்கின்றன. உதாரணத்திற்கு, சிகப்பு சிக்னல் விழுந்திருக்கும்போது போலீஸ்காரர் இருக்கிறாரா என்று நைஸாக பார்த்துக்கொண்டே எல்லையைக் கடந்து செல்லுதல், ஆஃபீஸில் கலீக் தம் பிரேக் போன சமயம் பார்த்து அவரது சேரை மாற்றி எடுத்துக்கொண்டு அவர் திரும்பி வரும்போது கேஷுவலாக அமர்ந்திருத்தல், ரெஸ்டாரண்ட் போனால் நமக்கு பின்னால் நான்கைந்து பேர் எச்சில் கையோடு நிற்பதைப் பற்றி கூச்சம் எதுவும் கொள்ளாமல் வாஷ் பேசினில் ஒரு மினி குளியலைப் போடுதல் போன்றவை. இவையெல்லாம் ஓரளவிற்கு யாருக்கும் தீங்கிழைக்காத பாவங்கள், ஒருவேளை நீங்கள் சிக்னலைக் கடக்கும்போது பசுமாடு ஏதேனும் குறுக்கே வராத வரை.

லிஃப்டில் இதுபோன்ற சி.சி.பாவங்களை நிறைய பார்க்கலாம் –

நிறைய பேருக்கு லிஃப்டில் போன் பேசும் பழக்கம் உண்டு. ஒன்றுமில்லை, இதற்குக் காரணம் அவர்களின் குடும்பப்பாசம் அல்லது பொறுப்புதான். குறிப்பாக பெண்கள். இவர்கள் ஆஃபீஸில் இருந்து கிளம்புவதற்காக பேகை மாட்டிய அடுத்த விநாடி யாருக்காவது போன் செய்து நான் கிளம்பிவிட்டேன் என்று சொல்ல வேண்டும். அப்பாவுக்கு, கணவருக்கு, வெளியே பைக்கில் காத்திருக்கும் காதலனுக்கு, அப்படியும் இல்லை என்றால் கேப் டிரைவருக்கு. போனை காதுக்கும், தோளுக்கும் இடையே இடுக்கிக்கொண்டு வந்துதான் லிஃப்டிற்குள் நுழைவார்கள். கதவு மூடியதும் இணைப்பில் சிக்கல் ஏற்படும். அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. லிஃப்ட் தரையிரங்குவதற்குள் ஹலோ, ஹலோ என்று நான்கைந்து முறை கூப்பிட்டு பார்த்துவிட்டு, திடீர் ஞானம் பெற்று நான் லிஃப்டில் இருக்கிறேன். வெளியே வந்துட்டு கூப்பிடுறேன் என்று முடிப்பார்கள்.

நம்மூரில் நிறைய பேருக்கு லிஃப்டில் கீழே போக வேண்டுமென்றால் கீழே உள்ள பட்டனை அழுத்த வேண்டும் என்ற விஷயமே தெரியாது. எதற்கும் இருக்கட்டும் என்று மேலே, கீழே என்று இருக்கிற எல்லாவற்றையும் அழுத்தி வைக்கும் ஒரு குரூப். ஏற்கனவே கீழே போவதற்கான பட்டனை யாராவது அழுத்தி வைத்திருந்தாலும், அதன் மீது நம்பிக்கையில்லாமல் ச்சக்கு, ச்சக்கு, ச்சக்குன்னு நான்கைந்து முறை அழுத்துபவர்கள் இன்னொரு வகை. 

பொதுவாக லிஃப்டில் கடைப்பிடிக்க வேண்டிய கல்யாண குணங்கள் –

1. ஒரேயொரு தளம் (அல்லது இரண்டு தளங்கள்) ஏறுவதற்கு லிஃப்டை பயன்படுத்தாமல் இருத்தல்.
2. போன் பயன்படுத்துவதை தவிர்த்தல். பேசுவது மட்டுமில்லாமல் பாடல் கேட்பது, ப்ரெளஸரில் XNXX பார்ப்பது உட்பட.
3. உள்ளே நுழையும் முன், இறங்க வேண்டியவர்கள் இறங்கி முடிக்கும்வரை காத்திருத்தல்.
4. பட்டன்களை மறைத்துக்கொண்டு நிற்காமலிருத்தல். அப்படி சூழல் அமைந்துவிட்டால் மற்றவர்களுக்கு உதவி செய்தல்.
5. ஏதாவது சாப்பிட்டுக்கொண்டோ அல்லது காபி கோப்பையுடன் லிஃப்டில் ஏறாமலிருத்தல்.
6. லிஃப்டில் ஏற்கனவே அறிமுகமானவரைக் காண நேர்ந்தால் ஒரு சின்ன ஸ்மைலோடு நிறுத்திக் கொள்ளுதல். மிச்சத்தை லிஃப்டை விட்டு வெளியேறிய பின் பேசிக் கொள்ளலாம்.
7. நீங்கள் லிஃப்டை பிடித்துவிட்டீர்கள்; உங்கள் நண்பர் பின்தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார் என்றால் சில நொடிகள் வரை லிஃப்டை பிடித்து வைத்திருக்கலாம். அதற்கு மேல் அநாகரிகம்.
8. கடைசி சில தளங்களுக்கு செல்வதென்றால் லிஃப்டின் மூலைக்கு சென்று நின்றுகொள்ளலாம். முதல் சில என்றால் மற்றவர்களை ஏறவிட்டு கடைசியாக ஏறிக்கொள்ளலாம். சூழ்நிலையால் தவறு ஏற்பட்டால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்துகொள்ளுதல்.
9. மற்றவர்களை குறுகுறுவென்று பார்க்காமலிருத்தல். உரசாமல் நிற்பது உடலுக்கு நல்லது. கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த முறைக்காக காத்திருத்தல்.
10. உச்சென்று சப்தம் எழுப்பி உங்கள் விரக்தியை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் இருத்தல். உதாரணத்திற்கு, நீங்கள் ஏழாவது மாடிக்கு போக வேண்டியிருந்து லிஃப்டில் உள்ள மற்றவர்கள் ஒன்றிலிருந்து ஆறு வரை அத்தனை பட்டன்களையும் அழுத்தி வைத்திருந்தால் அதனால் ஏற்படும் டென்ஷனை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது.

திடீரென இன்று லிஃப்ட் எடிக்கெட்ஸ் பற்றி எழுதுவதற்கு சரக்கில்லை என்பது தாண்டி வேறொரு காரணமும் உண்டு. ஒரு நிமிஷம். இனி வரும் பத்திகளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் ஸ்பாய்லர் (அல்லது முழுக்கதை) வரப்போவதால், அதில் உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் இருந்தால் தொடர்ந்து படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன்.

KM சார்ஜூன் என்றொரு இயக்குநர். ஒருமுறை பத்தாவது தளத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டுக்கு போயிருக்கிறார். திடீரென அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய சூழல். லிஃப்டை நோக்கி ஓடுகிறார். லிஃப்ட் தன் கதவுகளை மூடிக்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நல்லவேளையாக உள்ளே ஒரு ஆசாமி இருந்தபடியால் லிஃப்டை தனக்காக சில நொடிகள் நிறுத்தி வைக்குமாறு இறைஞ்சுகிறார். ஆனால் உள்ளே இருந்தவரோ ஒரு asshole. அவர் லிஃப்ட் கதவுகளை மூடச் செய்யும் பட்டனை அழுத்துகிறார். இயக்குநர் லிஃப்டை தவறவிடுகிறார். உடனே இயக்குநரின் மனதிற்குள் ஒரு மணியடிக்கிறது. 

படத்தின் பெயர் ஐரா. ஹீரோயின் நயன்தாரா, ஜர்னலிஸ்ட், இப்போதைக்கு திருமணத்தில் விருப்பமில்லை, பாட்டி வீட்டுக்கு செல்கிறார், யூடியூப் சேனல் துவங்குகிறார், பேய் வீடியோக்கள் போட்டு மானெட்டைஸ் செய்கிறார் என்று ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு அமானுஷ்ய சக்தி சில நபர்களை கொன்று பழி வாங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு லாரி டிரைவர், இரண்டு குடிகாரர்கள், ஒரு பியர் கம்பெனி உரிமையாளர் என்று ஒருவரோடு ஒருவர் நேரடித் தொடர்பில்லாதவர்கள். ஒரு கட்டத்தில் இரு கதைகளும் ஒரு புள்ளியில் வந்து இணைகிறது. அதாவது அந்த அமானுஷ்ய சக்தி அடுத்து ஹீரோயினை பழி வாங்கப் போகிறது. ஆனால் எதற்கு ? அதுதான் சஸ்பென்ஸ்.

அதிலே பாருங்கள். அந்த அமானுஷ்ய சக்தி யாரென்று பார்த்தால் அதுவும் நயன்தாரா தான். இரட்டை வேடம். முதலில் அறிமுகமான நயன்தாராவின் பெயர் யமுனா. அப்படியென்றால் தமிழ் சினிமாவின் விதிகளின் படி இரண்டாவது நயன்தாராவின் பெயர் கங்கா என்றுதானே இருக்க வேண்டும். அதுதான் இல்லை. இரண்டாவது நயனின் பெயர் பவானி. பெரிய ட்விஸ்ட்டுல்ல ! இதில் இயக்குநரின் மஹா கைங்கர்யம் என்னவென்றால் இரண்டாவது நயன்தாரா கொங்கு மண்டலத்தில் பிறந்து, வளர்ந்தவர். அதனால் கொங்கு மண்டல நதியான பவானியின் பெயரை சூட்டியிருக்கிறார். அதே சமயம் இன்னொரு நயன்தாரா கதைப்படி சென்னை பெண் என்பதால் அவருக்கு கூவம் என்றோ, அடையாறு என்றோ பெயர் சூட்ட இயக்குநருக்கு மனம் ஒப்பவில்லை.

கதைக்கு வருவோம். இப்போது பவானியின் ஆவி யமுனாவை பழி வாங்கத் துரத்துகிறது. அது ஏன் என்பதை இரண்டே கால் மணிநேர படத்தில், கிட்டத்தட்ட கடைசி இருபது நிமிடங்கள் வரை சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இவ்வளவு சஸ்பென்ஸ் வைத்து கடைசியாக உடைக்கப்போகும் அந்த விஷயம் பயங்கரமாக இருக்கப்போகிறது என்று பார்த்தால் – பவானி ஒருமுறை பத்தாவது மாடியிலிருந்து இறங்குவதற்கு லிஃப்டை நோக்கி செல்கிறார். அப்போது அதனுள்ளே இருக்கும் யமுனா அவரது அவசரத்திற்காக லிஃப்டின் கதவுகளை மூடச்செய்கிறார். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு உலகத்தின் நிகழ்வுகளையே மாற்றிப்போடும் என்று ஒரு தியரி உள்ளது அல்லவா. அதன்படி பவானியின் வாழ்க்கையில் சில விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு காரணமான ஒவ்வொருவராக பழி வாங்கி கடைசியாக யமுனாவைக் கொல்ல வருகிறார். கொன்றாரா இல்லையா என்று அமேஸான் ப்ரைமில் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது எனக்கு வேறு மாதிரியான பயங்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஒருமுறை இப்படித்தான் இரவில் லிஃப்டில் தனியாக நுழைந்தேன். எதிரே சற்று தொலைவில் ஒரு அழகான இளம்பெண் லிஃப்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். இரவு, இளம்பெண், தனியாக லிஃப்டில் - யார் தான் தவறவிடுவார்கள் ? லிஃப்ட் கதவுகள் மூடிக்கொள்ளாமலிருக்க அதன் பட்டனை ச்சக்கு, ச்சக்கென அழுத்துகிறேன். ஆனால் பலனில்லாமல் லிஃப்ட் கதவுகள் மூடிக்கொண்டன. எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. அப்புறம்தான் கவனித்தேன். ஸ்பென்ஸர் பிளாஸாவில் உள்ள லிஃப்ட்கள் புராதன காலத்தை சேர்ந்தவை என்பதால் பட்டன் மீதுள்ள குறியீடுகள் அழிந்து போயிருந்தன. நானோ தவறுதலாக லிஃப்ட் திறந்திருப்பதற்காக அழுத்த வேண்டிய பட்டனை விட்டுவிட்டு, மூடிக்கொள்வதற்கான பட்டனைப் போட்டு அழுத்தியிருக்கிறேன். இப்போது அப்பெண்ணுக்கு எனது செய்கையின் விளைவால் எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 May 2019

கோவா – கடற்கரைகளைக் கடந்து

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – டிட்டோஸ் லேன்

கோவா தொடரில் சற்றே நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மறுபார்வையிட விரும்புபவர்களுக்கு இத்தொடரின் முதல் பகுதியின் சுட்டி – தொடக்கம். இங்கிருந்து துவங்கி ஒவ்வொரு பகுதியின் இறுதியில் உள்ள சுட்டியின் மூலம் அடுத்தடுத்த பகுதிகளை படிக்கலாம்.

கோவா பயணத்தை முதன்முதலாக திட்டமிடத் துவங்கியபோது அங்கே ஏராளமான கடற்கரைகளை உள்ளதை கவனித்தோம். ஏராளம் என்றால் ஐம்பதுக்கும் மேல். அது மட்டுமில்லாமல் கடற்கரைகளைத் தாண்டி கோவாவில் ஒன்றுமே கிடையாது என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை. அதன்பிறகு மிகுந்த சிரத்தை எடுத்து கோவாவில் கடற்கரை இல்லாமல் பார்ப்பதற்கு தகுந்த இடங்கள் என்னென்ன இருக்கின்றன என்று தனியாக ஒரு பட்டியலிட்டோம். கடற்கரைகளைக் கடந்து அங்கே தேவாலயங்ககளும் கோட்டைகளும் அருங்காட்சியகங்களும் இருப்பதை கவனித்தோம்.

© Thrillophilia
முதலில், துத்சாகர் அருவி. துத்சாகரைப் பற்றி ஏற்கனவே ரயில் பயணப் பகுதியில் கொஞ்சமாக பார்த்திருந்தோம். கிட்டத்தட்ட கோவாவின் எல்லையில் அமைந்திருக்கிறது. துத்சாகர் மட்டுமல்லாமல் கர்நாடக – கோவா எல்லையில் மேலும் சில அருவிகளும், விலங்கு சரணாலயங்களும் உள்ளன. ஆனால் அவற்றை சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் கோவாவின் மற்ற பகுதிகளை மறந்துவிட வேண்டும். ஒருவேளை முழு கோவாவையும் சலிக்கச் சலிக்க பார்த்தாயிற்று. இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டால் துத்சாகர் உள்ளிட்ட அருவிகளுக்கு பயணம் போகலாம்.

அடுத்ததாக கோட்டைகள். இங்குள்ள கோட்டைகள் போர்த்துகீசிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருப்பதால் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கின்றன. சபோரா கோட்டை - சபோரா என்கிற நதியின் மீது பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை. இதன் சிறப்பம்சம், இங்கிருந்து நாலாபுறமும் கண்காணிக்க முடியும். வகேட்டர் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. 

மாலை நேர சபோரா
மாலை நேரத்தில் கோட்டையின் உச்சியிலிருந்து வகேட்டர் கடற்கரையுடன் அரபிக்கடலில் சூரியன் மறைவதைப் பார்ப்பது கொள்ளை அழகு. கோட்டை, அருகிலேயே கடற்கரை, அங்கே சகலவிதமான வாட்டர் ஸ்போர்ட்ஸ், ஷாப்பிங் செய்ய கடைகள், கடல் உணவகங்கள் என்று எல்லாமே கிடைத்துவிடுவதால் தவறவிடக்கூடாத ஸ்பாட். கூட்டம் அதிகம் என்பது மட்டும்தான் குறை. 

© Trilochana Choudhury
அகுவாடா கோட்டை. மராத்தியர்களிடமிருந்தும் டச்சுக்காரர்களிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ள போர்த்துகீசியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கட்டிய கோட்டை. அகுவாடா என்றால் தண்ணீர் என்று பொருள். பிரம்மாண்டமான கலங்கரை விளக்கம் ஒன்று இங்கே அமைந்துள்ளது. அக்காலத்தில் கப்பல்களுக்கு குடிநீர் சப்ளை இங்கிருந்துதான் நடந்திருக்கிறது. இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதி இங்கே இருந்திருக்கிறது. போர்க்காலங்களில் ஆயுதங்களை சேமித்து வைக்கவும் பயன்பட்டிருக்கிறது. இதனருகே ஒரு சிறைச்சாலையும் (பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை) கூட்டம் அதிகமில்லாத ஒரு கடற்கரையும் உண்டு.

© Yash Shah
ரெய்ஸ் மகோஸ் கோட்டை. மற்ற இரு கோட்டைகளை விட ஒப்பீட்டளவில் சிறியது. போர்த்துகீசிய வைஸ்ராய்களும், அதிகாரிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களுக்கு எதிராக மராத்தியர்கள் போர் தொடுத்தபோது இக்கோட்டை முக்கியமாக விளங்கியது. மண்டோவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

© GoIBIBO
கோவாவின் தலைநகர் பனாஜி. அசல் கோவாக்காரர்கள் இந்த பகுதியின் பெயரை பஞ்சிம் என்று உச்சரிக்கிறார்கள். இதுதான் பாரம்பரியமான பழைய கோவா. இந்த பகுதியில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்களும் பழைய போர்த்துகீசிய கட்டிடங்களும் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது பாம் ஜீஸஸ் பெஸிலிக்கா தேவாலயம் - குழப்பிக்கொள்ள வேண்டாம். பாம் ஜீஸஸ் என்றால் புனித இயேசு. பெஸிலிக்கா என்றால் அரைவட்ட வடிவமுள்ள கிறஸ்தவ கட்டிடமுறை. 

© Kumar Shantanu Anand
இதன் சிறப்பம்சம் இங்குள்ள புனித. ஃபிரான்சிஸ் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல். அதாவது நானூறு வருடங்களுக்கு மேலாக பரமாரிக்கப்பட்டு வரும் உடல். மற்றும் புனித. ஃபிரான்சிஸ் சேவியரின் வாழ்க்கைக் கட்டங்கள் இங்கே ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. தேவாலயம் என்பதைத் தாண்டி கலைநயம் மிகுந்த இடம். ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன.

© Archaeological Survey of India
தேவாலயத்தின் எதிரிலேயே தொல்லியல் துறை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கோவாவின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. பழங்கால சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்துள்ளன. நேரம் காலை பத்து முதல் மாலை ஐந்து வரை. வெள்ளி விடுமுறை.

தொல்லியல் துறை தவிர்த்து கோவாவில் வேறு சில அருங்காட்சியகங்களும் உள்ளன. குறிப்பாக Houses of Goa (கோவாவில் உள்ள பல்வேறு கலாசாரங்களின் கட்டிடக்கலை பற்றியது), Museum of Goa (கைவினை / கலை பொருட்கள் பற்றியது), Museum of Christian Art (கிறிஸ்தவ சிற்பங்கள், ஓவியங்கள்), கோவா சித்ரா அருங்காட்சியகம் (அவர்களின் பண்டைய வாழ்வியல் முறை பற்றியது), Mario Gallery போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருப்பதால் இவற்றை சுற்றிவர நேரம் எடுக்கும். ஆர்வமிருப்பவர்கள் பயண வழியில் பார்க்கலாம் அல்லது பார்ப்பதற்கு தகுந்தபடி பயவழியை அமைத்துக்கொள்ளலாம்.

© Naval Aviation Museum
கோவாவில் உள்ள அருங்காட்சியகங்களிலேயே மிக முக்கியமானது கடற்படை விமான அருங்காட்சியகம். இது விமான நிலையத்திலிருந்து சில கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளதால் சென்றடைவதில் சிரமம் இருக்காது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு கடற்படை சார்பாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு ரக குட்டி விமானங்கள் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உள்ளரங்கத்தில் விமானத்தின் மாடல்களும், பழைய புகைப்படங்களும் உள்ளன, கடற்படை பற்றிய செய்திப்படம் பார்க்க குட்டி தியேட்டர் ஒன்றும் உள்ளது. திங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் அருங்காட்சியகம் திறக்கப்படுவதில்லை. நேரம் காலை பத்து முதல் மாலை ஐந்து வரை.

© Remote Traveler
மாலை நேரம் மண்டோவி நதியில் ஒரு மணிநேர படகு சவாரிகள் கிடைக்கின்றன. படகில் கொங்கனி மற்றும் போர்த்துகீசிய நடனங்கள் இடம்பெறுகின்றன. இதன் விலை முன்னூறு, ஐநூறு என்று படகு நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடுகிறது.

அருவி, கோட்டைகள், அருங்காட்சியகங்கள் தவிர்த்து கோவாவில் கடற்கரையில்லா கொண்டாட்டம் உண்டென்றால் அது கஸினோ. குறிப்பாக நதியில் மிதக்கும் கஸினோக்கள். அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

அடுத்து வருவது: கோவா - மிதக்கும் கஸினோ

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 May 2019

பிரபா ஒயின்ஷாப் – 13052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரம் இரண்டு படங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் இரண்டு இடங்களைப் பற்றி பார்க்கலாம். இரண்டும் சென்னையிலிருந்து சுமார் நூறு, நூற்றியைம்பது கி.மீ. தொலைவில் உள்ள இடங்கள். 

முதலாவது பிரம்மதேசம் ! தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலின் வழியாக பிரம்மதேசம் குறித்த அறிமுகம் ஏற்பட்டது. பல்வேறு காலகட்டத்தில் பயணிக்கும் நாவலில் முதலாம் ராஜேந்திர சோழர் ஒரு பாத்திரமாகவே வருகிறார். ராஜேந்திர சோழரின் கல்லறை திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு அருகேயுள்ள பிரம்மதேசத்தில் அமைந்திருப்பதாக குறிப்பிடுகிறார் தமிழ்மகன்.

தமிழகத்தில் களப்பிரர்கள் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு, சோழர்கள் மீண்டு வந்ததும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடை செய்யப்பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். பார்ப்பனர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. கோவில்களுக்கு அருகே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்கிற பெயரில் நிலம் / குடியிருப்புகள் வழங்கப்பட்டன. அப்படியொரு பிரம்மதேயம் தான் மருவி பிரம்மதேசம் என்று ஆகியிருக்கக்கூடும். தமிழகத்தில் வேறு சில பிரம்மதேசங்கள் கூட உள்ளன. குறிப்பாக நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ஒரு பிரம்மதேசம் உள்ளது. அங்கே புகழ்பெற்ற கோவில் ஒன்றும் உண்டு.

ஒரு நிறைந்த நன்னாளில் பிரம்மதேசத்தை நோக்கி புறப்பட்டோம். பிரம்மதேசம் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வாரநாட்களில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணிக்குள் அங்கே செல்வது உகந்தது. மற்ற நாட்களில் கோவிலின் உள்கட்டமைப்பை பார்க்க முடியாது. சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் தாண்டி, ஆற்காடு செல்லும் வழியில் சிறுகரும்பூர் என்கிற சிற்றூர் வருகிறது. அங்கிருந்து இடதுபுறம் ஒடித்து திருப்பி பத்து கி.மீ. உள்ளே சென்றால் பிரம்மதேசம். சொல்லி வைத்தாற்போல அங்கே ராஜேந்திர சோழர் என்று ஆரம்பித்தால் யாருக்கும் அப்படியொரு இடம் இருப்பதாக தெரியவில்லை. கூகுள் மேப்பை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டே பயணமானோம். பிரம்மதேசம் என்கிற அந்த சிறிய கிராமத்தை கடந்து கொஞ்ச தூரம் சென்றபிறகே கோவில் கண்களுக்கு தெரிகிறது.

துரதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை. பக்கத்தில் விசாரித்தபோது தொல்லியல் அதிகாரி சில மாதங்களாகவே வருவதில்லை என்றார். நுழைவுவாயிலில் பலமாக பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே சென்றோம். (எப்படி என்று கேட்காதீர்கள். பார்க்க படம்). தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியை இப்படி அத்துமீறி நுழைந்திருக்கிறோம் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் பதற்றம். ஆனால் அங்கே யாரும் எங்களை சட்டை செய்ததாக தெரியவில்லை. உள்ளே உள்ளூர் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். (சோழர்கள் காலத்தில் கிரிக்கெட் இருந்திருக்குமா ?) கோவிலின் கோபுரத்தின் அருகே சென்றோம். நிறைய சிதைந்த நிலையில், சில இடங்களில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது மண்டபம். அதிகாரி யாருமில்லாததால் கோவிலின் கர்ப்பக்கிரகம் அல்லது உள்ளறைக்கு சென்று பார்க்க முடியவில்லை. பராமரிப்பில்லாமல் உள்ள பகுதி என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நம்மவர்களுக்கே உரிய ஒரு பழக்கம் மறைவான ஒரு இடம் கிடைத்தால் அங்கே மது அருந்துவது. அப்பழக்கத்திற்கு ராஜேந்திர சோழரும் விலக்கல்ல என்று அங்கிருந்த நீரற்ற கிணற்றில் கிடந்த மதுக்குப்பிகளே சாட்சி. 

கோபுரத்தின் பின்புறம் உள்ள நிலத்தில் பராமரிப்பின்றி ஒரு கல்லறை உள்ளது. ஒருவேளை அது சோழருடைய கல்லறையாக இருக்கலாம்.

தமிழர் வரலாற்றின் மீதோ / தொல்லியல் மீதோ மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத இடம் இது. 

இரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் ஒரு திரையரங்கம். திரையரங்கில் ஸ்பெஷல் என்னவென்றால் அது டென்ட் கொட்டாய் என்பதுதான். தமிழ்நாட்டின் கடைசி டென்ட் கொட்டா ! இத்திரையரங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையை நியூஸ் மினிட் இணையதளத்தில் வாசிக்க நேர்ந்தது. 

சோழனைப் பார்க்கச் சென்ற அதே NH48ல் ஆற்காடுக்கும், வேலூருக்கும் இடையே பூட்டுத்தாக்கு என்ற சிற்றூரில் அமைந்துள்ளது கணேஷ் திரையரங்கம் என்கிற இந்த டென்ட் கொட்டாய். கூகுளில் போன் நம்பர் எல்லாம் முறையாக அளிக்கப்பட்டிருந்ததால் முதலில் அலைபேசினோம். கனிவுடன் பேசிய அரங்கின் உரிமையாளர் படம் பார்ப்பதென்றால் மாலை நேரத்திற்கு மேல் வரும்படியும், மற்றபடி அரங்கை பார்ப்பதென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்றும் சொன்னார்.

நாங்கள் பூட்டுத்தாக்கை சென்றடைந்தபோது அங்கே பயங்கரக்கூட்டம். நேரத்தைப் பார்த்தோம். மதியம் பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது. டாஸ்மாக் திறப்பதற்காக காத்திருந்த கூட்டம்தான் அது. இங்கேயும் ஒரு வாயில், இங்கேயும் ஒரு பூட்டு. ஆனால் அத்துமீற முடியவில்லை. உரிமையாளரை அலைபேசியில் கூப்பிட்டோம். இரண்டு நிமிடங்களில் வருவதாகச் சொல்லி, சொன்னபடி வரவும் செய்தார். சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றில்லாமல் எங்களை நல்ல மரியாதையுடன் நடத்தினார் திரையரங்க உரிமையாளர் கிட்டத்தட்ட பிரஸ் அந்தஸ்து என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

நாங்கள் போன சமயம் திரையரங்கில் கஜினிகாந்த் ஓடிக்கொண்டிருந்தது. டென்ட் கொட்டாய் என்பதால் பகல், மேட்னி காட்சிகள் திரையிட முடியாது. தினசரி மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணிக் காட்சிகள் மட்டும். மேலே ஆஸ்பெட்டா கூரை, ஒருபுறம் திரை, மறுபுறம் ப்ரொஜெக்ஷன் அறை. பக்கவாட்டில் சுற்றுச்சுவரெல்லாம் கிடையாது. திரைக்கு முன் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து விடப்பட்ட மண் பகுதி, அதன்பிறகு பென்ச் பகுதி (இங்கும் ஆண்கள் / பெண்கள் தனித்தனி பகுதி). பென்ச் பகுதி சமீபத்தில் புனரமைக்கப்பட்டு மர நாற்காலிகள் அமைத்திருக்கிறார்கள். அதன்பிறகு பர்சனல் ரூம், அதாவது பாக்ஸ். இங்கே பஞ்சு பொதிக்கப்பட்ட நாற்காலிகள் உள்ளன. டிக்கட் விலை தரைக்கு பத்து, பென்ச் இருபது, பாக்ஸ் முப்பது.

உரிமையாளர் கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் பக்கம் என்று நவீன நுட்பங்களை தெரிந்து வைத்திருக்கிறார். நவீன ஒலியமைப்பு செய்து வைத்திருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளை விட இங்குள்ள ஒலியமைப்பு அபாரமாக இருக்கும் என்றார். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அங்கே இருந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவிற்கு நேரமில்லை. 

தொடர்ந்து உரிமையாளருடன் பேசுகையில் திரையரங்கை தொடர்ந்து நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், மற்ற திரையரங்கினர் மத்தியில் நிலவும் அரசியல் குறித்தும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதனாலேயே பல சமயங்களில் செகண்ட் ரிலீஸ் படங்களையே வெளியிட நேர்வதாகக் குறைப்பட்டுக் கொண்டார். அதே சமயங்களில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், எங்களைப் போல அவ்வப்போது சிலர் விசாரித்து வருவதாகவும் சொன்னார். டாஸ்மாக்கிற்கு நேரெதிரில் திரையரங்கம். அமர்ந்து இளைப்பாற தோதாக மண்தரை. இதனால் உங்களுக்கு நிறைய தொந்தரவுகள் வந்திருக்குமே என்று கேட்டோம். பொதுவாக இங்கு வருபவர்கள் உள்ளூர்க்காரர்கள் தான். அவர்கள் பிரச்சனையெல்லாம் செய்ய மாட்டார்கள். அப்படியே செய்தாலும் போலீஸிடம் தகவல் சொன்னால் போதும் என்றார். 

திரைப்படங்கள் பற்றி பேசும்போது சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கில ஹாரர் படம் அமோக வசூலை அள்ளியதாக சந்தோஷப்பட்டுக்கொண்டார். நான் அந்த ஹாரர் படத்தை பார்த்திருக்கிறேன். இரவுக்காட்சி, அந்த திறந்தவெளி திரையரங்கில் அந்த ஹாரர் படத்தைப் பார்த்தால் பீதி நிச்சயம்.

இன்னொரு நன்னாளில் ராஜேந்திர சோழரின் உள்ளறையையும், பூட்டுத்தாக்கு கணேஷ் திரையரங்கில் இரவுக்காட்சி ஹாரர் திரைப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு அமைய வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 May 2019

பிரபா ஒயின்ஷாப் - 06052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

41 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபா ஒயின்ஷாப் !

இவ்வார ஒயின்ஷாப்பில், தமிழில் வெளியான இரு மெடா-சினிமாக்களைப் பற்றி பார்க்கலாம். மெடா-சினிமா என்றால் சினிமாவைப் பற்றிய சினிமா. இரண்டும் ஒரு வகையில் மாய எதார்த்த படங்கள். 

முதலாவது நாசர் நடிப்பில் வெளியான முகம். பெரும்பான்மை மக்கள் முகம் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள், ஆனால் மறந்திருப்பீர்கள். சற்று நினைவூட்டுகிறேன். முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்களை உடனுக்குடன் ஒளிபரப்பும் வழக்கம் கிடையாது. அப்போது சன் தொலைக்காட்சி திடீரென ஒரு புரட்சியை செய்தது. அச்சமயத்தில் திரைக்கு வந்து ஐம்பது, அறுபது நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த சங்கமம் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக அறிவித்தது. ஒருவேளை இப்போது சங்கமம் திரைப்படம் வெளிவந்து, அதனை அறுபது நாட்கள் கழித்து ஒளிபரப்பினால் பார்ப்பதற்கு ஆளிருக்காது. அப்போதோ தொலைக்காட்சியில் புதிய படம் என்கிற கவர்ச்சியின் காரணமாக மக்கள் சங்கமத்தை பார்த்துத் தீர்த்தார்கள். அடுத்து கொஞ்ச நாள் கழித்து ‘திரைக்கு வந்து சில நாட்களே ஆன’ அடைமொழியுடன் முகம் படத்தை ஒளிபரப்பினார்கள். சங்கமமாவது பரவாயில்லை, முகம் என்று ஒரு படம் திரையரங்கில் வெளியானதே பலருக்கும் தெரியாது. ஆனாலும் புதுப்படம் என்பதால் பார்த்தார்கள். 

முகம் படத்தின் நாயகன் அவனது கோரமான முகத்தின் காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறான். ஒரு சமயத்தில் அவனுக்கு சினிமா சான்ஸ் கிடைக்கிறது, யூனிட்டில் இருந்து வீட்டு வாசலுக்கு காரெல்லாம் அனுப்புகிறார்கள். ஆனால் படத்தில் அவனுக்கு மிகச்சிறிய வேடம். அது மட்டுமில்லாமல் படம் வெளிவந்தபிறகு அவனது முகத்தை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொந்தளித்து ஸ்க்ரீனை எல்லாம் கிழிக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகி ரோஜாவால் உதாசீனப்படுத்தப்படுகிறான். வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் அவனிடம் ஒரு முகமூடி கிடைக்கிறது. அதனை அணிந்து கொண்டதும் அழகான தோற்றம் பெறுகிறான். அதன்பிறகு அவனுக்கு அதுவரையில் கிடைக்காததெல்லாம் கிடைக்கிறது. சினிமாவில் பெரிய ஸ்டார் ஆகிறான். முன்பு அவனை உதாசீனப்படுத்திய ரோஜா இப்போது தர்ணா இருந்து அவனையே திருமணம் செய்துகொள்கிறாள். அவனது முகத்துக்காக திரையைக் கிழித்தவர்கள் இம்முறை திரை முன் ஆரத்தி எடுக்கிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போனாலும் கொஞ்ச நாட்களில் அவன் ஒரு போலியான வாழ்க்கையை வாழ்வதாக உணர்கிறான். பேசாமல் பழைய முகத்திற்கே போய் விடுவதென தீர்மானித்து முகமூடியை கழட்டுகிறான். உடனடியாக அவனது சொந்த வீட்டிலிருந்தே திருடன் என்று வெளியில் துரத்தப்பட்டு, அவனது ரசிகர்களிடமே அடி வாங்குகிறான். பழைய முகத்திற்கு மாற நினைத்த அவனது முடிவை தவறு என்று உணர்கிறான். உலகத்தில் யாரும் யாருடைய நிஜ முகத்தையும் விரும்புவது கிடையாது. எல்லோருக்கும் ஒரு போலி முகம் தேவைப்படுகிறது. (தத்துவார்த்தமாக இருக்கிறது அல்லவா ?) அவன் மீண்டும் முகமூடி அணிந்துகொண்டு தன் போலி வாழ்க்கைக்கு திரும்புவதுடன் படம் நிறைவுறுகிறது. 

இப்படம் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரை மனதில் வைத்து இயக்கப்பட்டது என்று ஒரு காட்சியிலிருந்து புரிந்துகொள்ளலாம். முகமாற்றத்திற்குப் பிறகு பிரபல கதாநாயகனாகும் நாசர், தன்னுடைய படங்களில் தொடர்ந்து ஏழைகள் நல்லவர்களாகவும், பணக்காரர்கள் மோசமானவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறார். இதனால் படம் பார்க்கும் மக்கள் மனதில் பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்ற எண்ணம் தோன்றிவிடும் என்றும். அவர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையற்று போய்விடுவார்கள் என்றும் தீவிரமாக சிந்திக்கிறார். அருகிலிருக்கும் எடுபிடி பெரிய ஸ்டாரான பிறகு இவ்வளவெல்லாம் சிந்திக்கக் கூடாது என்று அவரை சமாதானப்படுத்துகிறார். இதுபோன்ற ஒரு கான்வர்சேஷன் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பதாக ஆஃப் த ரெக்கார்ட்ஸ் செய்தி. 

நாம் பார்க்கப்போகும் இரண்டாவது படம் – சீதக்காதி. சீதக்காதியை விலாவரியாக விவரிக்க வேண்டிய அவசியமிருக்காது. ‘அய்யா’ ஆதிமூலம் அபாரமான நாடக நடிகர். ஆனால் சினிமா யுகத்தில் நாடகம் எடுபடவில்லை. மக்கள் நாடகங்களை புறக்கணிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அய்யா ஆதிமூலம் இயற்கை எய்துகிறார். அதன்பிறகு அவர் ஆவியாக வந்து அவரது நாடகக்குழுவில் உள்ள ஒவ்வொருவர் உடலின் வழியாக நடிப்பைத் தொடர்கிறார். ஒருமுறை அய்யா அவரது குழுவில் உள்ள ஒரு இளைஞன் மூலம் நடிப்பதைப் பார்த்து இயக்குநர் ஒருவர் அந்த இளைஞனை சினிமாவில் கதாநாயகனாக்குகிறார். அய்யா இளைஞன் மூலமாக ஆவியாக சினிமாவில் நடிக்கிறார். அய்யாவின் அபார நடிப்பால் அவர் பெரிய ஸ்டாராகிறார். பெரிய ஹீரோ ஆனதும் இளைஞன் அய்யாவின் ஆவியை அவமதிக்கிறான். அதன்பிறகு வெவ்வேறு உடல்கள் மூலமாக அய்யா தொடர்ந்து நடிக்க, மக்களும் அவர்களது நடிப்பிற்கு பின்னாலிருப்பது அய்யாதான் என்பதை உணர்ந்து அதுவரை இளைஞனைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் அதன்பிறகு அய்யாவைக் கொண்டாடத் துவங்குகிறார்கள். பின்னர் திரைத்துறையினர் செய்யும் சீரழிவுகளைக் கண்டு மனம் நொந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்கிறார் அய்யா. அவர் தொலைதூர கிராமத்துப் பள்ளியொன்றின் ஆண்டுவிழாவில் ஒரு சிறுவன் உடல் வழியாக நடித்துக்கொண்டிருப்பதாக படம் நிறைவுறுகிறது. 

இந்த இரண்டு படங்களும் ஏறத்தாழ ஒரே பாணி, ஆனால் இரண்டு எக்ஸ்ட்ரீம் விஷயங்களை முன் வைக்கிறது. முதலாவது படத்தின் படி, சினிமாவுக்கு லட்சணமான முகம் அவசியம், அது மட்டுமிருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிறது. இரண்டாவது படம், முகமெல்லாம் அவசியமே இல்லை. அபார நடிப்பாற்றல் மட்டுமிருந்தால் போதும் மக்கள் ஒரு அருவத்தைக் கூட கொண்டாடுவார்கள் என்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இவை இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்.

அழகான முகத்திற்கு கிடைக்கும் வெற்றியைக் கூட ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். அந்தக்கால எம்.ஜி.ஆர் துவங்கி அர்ஜுன் தேவரகொண்டா வரைக்கும் நிறைய உதாரணர்கள் உளர். ஆனால் அவர்கள் முகத்துக்காக மட்டும் வெற்றியடையவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைவிட நடிப்பாற்றலுக்காக மட்டும் ஒருவர் வெற்றியடைகிறார் என்பது சுத்த பேத்தல். ஒரு பேச்சுக்கு நடிப்பாற்றலை மட்டும் வைத்துதான் சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து முடிவாகிறது என்று வைத்துக்கொள்வோம். இங்குள்ள சில ஸ்டார்களின் நிலைமைகளை நினைத்துப் பாருங்கள். நான் பெயர்களைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ள விரும்பவில்லை. நீங்களாகவே யூகித்துக்கொள்ளுங்கள்.  

தமிழ் சினிமாவின் கதாநாயக அந்தஸ்துக்கு தேவையானது அழகான முகம் மட்டுமோ, அபார நடிப்பு மட்டுமோ கிடையாது. அது பெப்ஸி, கோக், கே.எப்.ஸி. மாதிரி யாருக்கும் புரியாத ஒரு ரகசிய ஃபார்முலா. இதுவரையில் இங்கே கொண்டாடப்பட்ட நாயகர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு அனாலிஸிஸ் செய்தால் அதிலிருந்து ஒரு பேட்டர்னையும் கண்டுபிடிக்க முடியாது. 

ஒருவேளை முக அழகுதான் நாயக அந்தஸ்தை தீர்மானிக்கிறது என்றால் வித்யுத் ஜம்வாலும், நடிப்பாற்றல் தான் தீர்மானிக்கிறது என்றால் குரு சோமசுந்தரமும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்கள். 

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment