25 September 2017

பிரபா ஒயின்ஷாப் – 25092017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எனக்கும் செர்லாக்குக்குமான தொடர்பு மூன்று வயதுடன் முடிந்துவிட்டது. துப்பறிவாளன் பார்க்கும் எண்ணமும் இருக்கவில்லை. விமர்சன அலைகள் என்னை திரையரங்கிற்கு கொண்டு சேர்த்தது. 

ஏதேதோ படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு துப்பறிவாளனை ஆறாவது நாளில் பார்த்தது என் பாவக்கணக்கில் சேர்ந்துவிடும். துவக்கத்தில் குறிப்பாக விஷால் அறிமுகமாகும் காட்சியில் கிறுக்குத்தனமாக தோன்றும் துப்பறிவாளன் இடைவேளை வரை காமோ சோமோ என்று முன்னேறி, அதன்பின் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளாக அவிழ்க்கப்பட்டு படம் முடியும் வேளையில் ங்கொம்மாள என்னமா எடுத்திருக்கான்யா என்று வியப்பு ஏற்படுகிறது. சுஜாதாவின் கணேஷ் – வசந்த்தை நினைவூட்டிய திரைப்படம். இன்னும் சிலமுறை பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. நேரம்தான் பிரச்சனை. 


துப்பறிவாளனிடம் என் மனம் கவர்ந்த விஷயங்கள் :-

1. மரண தொழில்நுட்பங்கள். விபத்தாக முன்னிறுத்தப்படும் கொலைகள் என்பது தமிழ் சினிமாவில் சில வருடங்களாக டிரென்டில் இருக்கிறது. அது எப்படி என்பதில் தான் சுவாரஸ்யம். செயற்கையாக மின்னலை வரவழைப்பது, லாஃபிங் கேஸை காரின் ஏர் ஃபிரெஷனரில் கலப்பது, ரைஸின் எனும் நச்சுப்பொருளை உடலில் செலுத்தி உறுப்புகளை செயலிழக்க வைப்பது என்று ஒவ்வொன்றும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. 

2. டெவிலின் கதாபாத்திர வடிவமைப்பு. பெரிய பெரிய தப்பு காரியங்களை எல்லாம் கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாமல் சாதாரணமாக செய்யும் ஆள். அறுவை இயந்திரத்தால் பிணத்தை அறுத்துவிட்டு, ரத்த வெள்ளத்தில் இருக்கும்போது கூட காபியை ஒரு மிடறு சுவைத்துவிட்டு அதன் சுவையை கண்களை மூடி சிலாகிக்கும் ஆள். 

3. சண்டைக் காட்சிகள். ஒருவேளை அயல்நாட்டு சினிமாக்களில் இருந்து எடுத்திருக்கலாம். மவுத் ஆர்கன் சண்டைக்காட்சி, சீன உணவக சண்டைக்காட்சி, சற்றே நீளம் என்றாலும் மாங்க்ரூவ் காட்டு க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என்று ஒவ்வொன்றும் தரம். குறிப்பாக சீன உணவக சண்டைக் காட்சி !

துப்பறிவாளன் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாமோ என்று தோன்ற வைத்த விஷயங்கள் :-

1. விஷால் கதாபாத்திரம். கணியன் பூங்குன்றன் புத்திசாலித்தனமான துப்பறிவாளன். ஆனால் ஒருவனுக்கு முதுகில் எல்லாம் மூளை இருக்கக்கூடாது. க.பூ நிறைய விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் தன்னுடைய பார்வை கோணத்திலேயே இல்லாத விஷயங்களை எல்லாம் எப்படி அவரால் கண்டுபிடிக்க முடிகிறது ? சினிமாவில் துப்பறிவாளராக இருப்பது சுலபம். இயக்குநர் சொல்லும் விஷயங்களை செய்தால் போதும். அப்புறம், விஷால் ஏன் கிறுக்கன் போல நடந்து கொள்கிறார் ? (முதலில் பாடி மவுண்ட் கேமராவை தடை செய்ய வேண்டும் ?)

2. பிரசன்னா கதாபாத்திரம். பிரசன்னாவின் மீது உங்களுக்கு அப்படியென்ன கோபம் மிஷ்கின் ? பிரசன்னாவின் மனோஹர் கதாபாத்திரம் இரண்டு விஷயங்களுக்கு பயன்படுகிறது. ஒன்று க்ளைமாக்ஸ், இன்னொன்று பார்வையாளர்களிடம் விஷாலை உரையாட வைப்பது. மற்றபடி சுத்த டம்மி. அடிக்கடி விஷால் கதாபாத்திரத்தால் அவமானப்படுத்தப்படுகிறார். ஒருவேளை பிரசன்னாவையும் புத்திசாலியாக காட்டியிருந்தால் இது கணேஷ் – வசந்த்தே தான் !

3. காஸ்டிங் அபத்தங்கள். யார் யாரோ நடிக்க வேண்டிய வேடங்களில் யார் யாரோ நடிக்கிறார்களே என்றே கவலையாக இருக்கிறது. பிரசன்னாவின் வேடம் ஒரு துயரம் என்றால் வினய்யின் வேடம் பெருந்துயரம். எப்பேர்ப்பட்ட கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு அதனை போயும் போயும் வினய்யிடம் கொடுத்திருக்கிறீர்களே அய்யா.

4. காதல் காட்சிகள். எதை வேண்டுமானாலும் விடுவார்கள் ஆனால் காதலை மட்டும் விட்டுத்தொலைக்கவே மாட்டார்கள். முதலில் கதாநாயகி என்பதே துப்பறிவாளனுக்கு தேவையில்லை. அதிலே ஒரு காதல் வேறு. குறிப்பாக தன் சட்டையை அனு அணிந்தார் என்பதற்காக கோபப்படுவதும், ஷாப்பிங் மால் விபத்துக்குப் பின் அனுவிடம் விஷால் உளறுவதும் எரிச்சலூட்டும் காட்சிகள்.

5. கதை சொல்வதில் உள்ள வேகம். ஒவ்வொருமுறை கணியன் தான் கண்டுபிடித்ததை விவரிக்கும்போது மனப்பாடச் செய்யுளை மறந்துவிடுவதற்கு முன்பு ஒப்புவித்துவிடும் தொனியிலேயே பேசுகிறார். பொதுவாக மற்ற படங்களில் இதுபோன்ற சமயங்களில் இண்டர்கட் காட்சி வைப்பார்கள். மிஷ்கின் தன் படங்களுக்கு வரும் எல்லோரும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்.

ஒரு வகையில் துப்பறிவாளனின் பலம், பலவீனம் இரண்டும் அதன் வினாதத்தன்மை என்று சொல்லலாம். மிஷ்கின் ஏராளமான குறியீடுகள் வைத்து படம் எடுக்கும் நபர். பிசாசு படத்தின் குறியீடுகளை இணையத்தில் பலரும் டீகோட் செய்து எழுதியபோது நான் அரண்டு போயிருக்கிறேன். பிசாசு படத்தை நான் அப்படியொரு கோணத்தில் பார்க்கவே இல்லை. அதே போல துப்பறிவாளனையும் சிலர் டீகோட் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். காட்சிகளின் பின்னணியில் வரும் ஓவியங்களைப் பற்றி ஒரு பதிவில் படித்தேன். பின்னணியில் ஓவியங்கள் வருகின்றன என்பதையே நான் கவனிக்கவில்லை. 

ஒரு காட்சியில், ஒரு டிராவல் அலுவலகத்தில் ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருக்கிறார். ஜான் விஜய் வந்து கிறுக்கன் மாதிரி சோபா வந்திருக்கு என்கிறார். உடனே அவசர அவசரமாக கடை சாத்தப்படுகிறது, படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருந்தவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப் படுகிறார், இன்னொரு அறையில் எல்லோரும் அவசர அவசரமாக குழுமி... பாஸ்தா சாப்பிடுகிறார்கள். வினய் சமைக்கிறார், மற்றவர்களுக்கு பங்கு வைத்து பரிமாறுகிறார் என்பதை ஒருவகையில் தொடர்புப்படுத்தி பார்க்க முடிகிறது. ஆனால் அந்த படிவம் பூர்த்தி செய்பவரை வெளியேற்றுவது எல்லாம் நெருடுகிறது. 

கொஞ்சம் லேட் பிக்கப் என்றாலும் சாயிஷா சேகல், அனு இம்மானுவெல் போன்ற அழகிய நடிகைகள் தமிழ் தயாரிப்பாளர்கள் கண்களில் படத் துவங்கியிருக்கிறார்கள். கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் அணுகினால் கொடுக்கிறேன்.

ராதா ஜோகேந்திரனுக்காக நான் ஆணையிட்டால் பார்க்கவேண்டிய சூழலுக்கு ஆளானேன். எப்படி இதுமாதிரி படங்களை எல்லாம் எடுக்கிறார்கள் என்று திகைத்துப் போனேன். ஆர்வம் தாங்காமல் இயக்குநரை கூகுள் செய்தேன். பெயர் தேஜா. கடந்த பதினேழு வருடங்களில் பதினைந்து, இருபது படங்களை இயக்கியிருக்கிறார். ஒன்றும் சொல்வதற்கில்லை. தமிழில் ஹரி, சுராஜ், லிங்குசாமி, தரணி, அட்லி, பூனை சிவா போன்றவர்களை கிட்டத்தட்ட தேஜாவின் வகையறாவிற்குள் அடைக்கலாம். ஆனால் தேஜா அதைவிட கீழே பேரரசு லெவலில் இருக்கிறார். வித்தியாசம் என்னவென்றால் தமிழில் பேரரசுவை மறந்துவிட்டார்கள், தெலுங்கில் தேஜா இன்னும் சர்வைவ் ஆகிக்கொண்டிருக்கிறார். டோலிவுட் ஒரு பத்து வருடங்கள் கோலிவுட்டை விட பின்தங்கியிருக்கிறது.

நான் ஆணையிட்டாலில் தமிழுக்காக நாசர், மயில்சாமி, நண்டு ஜகனை வைத்து சில காட்சிகளை மட்டும் படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் இரண்டே இரண்டு பாஸிட்டிவான விஷயங்கள். 

ஒன்று, வசனங்கள். உதட்டுல சூடு பட்டவனுக்குத்தான் சிகரெட் பிடிக்கிற தகுதி இருக்கு, பாம்புக்கு புத்து வேணும்ன்னா எறும்புதான் வேலை செய்யணும், காசு இருக்குறவன் திருப்பதிக்கு போனாலும் மொட்டைதான் அடிச்சு விடுவாங்க, கிரீடம் வச்சு விடமாட்டாங்க – இப்படி நிறைய வசனங்கள். அப்புறம் தமிழக அரசியலை ஒத்து சில வசனங்கள் வருகின்றன. 

இரண்டாவது, காஜல் அகர்வால். பச்சைக்கிளி முத்துச்சரம் என்று பழைய எம்.ஜி.ஆர் பாடல் பின்னணியில் காஜல் அறிமுகமாகும் காட்சி அதகளம். அதைத் தொடர்ந்து ஒரு ரொமாண்டிக்கான பாடல். அதன்பின் படம் அது இஷ்டத்துக்கு நாராசமான திசைக்குப் போய் காஜலை காணாமல் ஆக்கிவிடுகிறது. என்னென்னவோ நடந்து கடைசியில் காஜலாலேயே இக்கொடுமைகளை எல்லாம் தாளமுடியாமல் ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் டியூப் இணைப்பை துண்டித்துக் கொள்கிறார். அதன்பிறகு கடைசி அரைமணிநேர படத்தில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. காஜல் மூச்சு நின்றதும், எழுந்து தடதடவென திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டேன்.

காஜல் அகர்வால் அவருடைய கேரியரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரிய ஆரம்பித்துவிட்டது. போதாத குறைக்கு குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாராம். பொதுவாக நடிகைகள் இம்மாதிரி படங்களில் நடித்ததும் ஒரு பெண்ணியவாதி இமேஜ் வந்து சேர்ந்துக்கொள்ளும். அதன்பின் எல்லாம் சுபம் தான் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 September 2017

பிரபா ஒயின்ஷாப் – 18092017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நடுவில் கொஞ்ச நாட்களாக புத்தகம் படிக்கும் பழக்கமே நின்று போய்விட்டது. பேருந்தில் ஏறினால் ஒரு குட்டித்தூக்கம் போடத் தோன்றுகிறது. அல்லது ஃபேஸ்புக் நேரத்தை விழுங்குகிறது. கொஞ்சம் சிரமப்பட்டு அதிலிருந்து மீண்டு கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழி படித்தேன்.

சின்னச் சின்னதாக முப்பத்தியொரு கட்டுரைகள். அநேகமாக ப்ளாகில் எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன். முதல் கட்டுரை இட்லியை பற்றியது. அக்கட்டுரையானது இட்லியில் துவங்கி கிராமத்து ஆட்டுக்கல், திருமண வீடு என்று நீண்டு ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு இட்லிக்கடையின் அறிமுகத்துடன் நிறைவடைகிறது. கா.பு.வின் கட்டுரைகளுக்கென்று ஒரு வார்ப்புரு இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தை கவனிக்கிறார். பின்பு அதனுடனான அவரது தொடர்பை நினைவுக்குறிப்புகளுடன் விவரிக்கிறார். ஃபினிஷிங் டச்சாக மீண்டும் நிகழ்காலத்தின் சம்பவம் குறித்து ஒரு இறுதி வரி. உதாரணமாக, மகேஷிண்ட பிரதிகாரம் பார்க்கிறார். அது அவருக்கு சில பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது. அவற்றை சுவையாக விவரிக்கிறார். இன்னொரு கட்டுரையில், நீண்ட வருடங்களுக்குப் பிறகு நெல்லை ராம் – முத்துராம் திரையரங்கில் படம் பார்க்கிறார். அங்கிருந்து நெல்லையில் இருக்கும் / இருந்த திரையரங்குகளைப் பற்றி சுவையாக விவரிக்கிறார். எல்லாக் கட்டுரைகளுக்கும் பொதுவான விஷயம் சுவையான வர்ணனை என்பதுதான் இங்கே அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய விஷயம். இடையிடையே தீவிரமாக சில விஷயங்களையும் சொல்லிவிட்டுச் செல்கிறார், சிறு தெய்வங்களின் மீதும், நாட்டார் பாடல்களின் மீதும் இயல்பாகவே கா.பு.வுக்கு ஒரு நாட்டம் இருப்பது தெரிகிறது. நடுவில் அவ்வப்போது சரவணன் சந்திரன் எட்டிப் பார்த்துவிட்டு போகிறார். நம் எல்லோரிடமும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் பலருக்கு எழுதுவதில் விருப்பம் இருப்பதில்லை. அல்லது திறமை இல்லையென்று நினைத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இவருடைய கட்டுரைகளை படித்தால் ஒரு உந்துதல் கிடைக்கக்கூடும். இவருடைய கட்டுரைகள் அத்தனை எளிமையாக, அவ்வளவுதான் பார் பெரிய அலங்காரமெல்லாம் வேண்டாம் உன் அனுபவத்தை அப்படியே எழுதினாலே போதுமென சொல்கின்றன.

கார்த்திக் புகழேந்தி கம்யூனிஸ சிந்தனையாளராக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அவருடைய பதிப்பகத்திற்கு ஜீவா படைப்பகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். மேலும் அவரது புத்தக அட்டைப்படத்தில் தா.பாண்டியன் நடந்து செல்வது போன்ற படத்தினை பிரசுரித்திருக்கிறார்.

மகளிர் மட்டும் வெளியாகும்போது அதனை பார்க்க திரையரங்கம் அழைத்துச் செல்ல வேண்டுமென்பது பிக் பாஸின் நீண்ட நாட்களுக்கு முந்தைய கோரிக்கை. அதனை நிறைவேற்றியாயிற்று. பெண்ணிய சினிமாக்களுக்கு மனைவியுடன் செல்வது என்பது ஏறக்குறைய தற்கொலைக்கு சமம். அதையும் இதையும் காட்டி நம்மை குற்ற உணர்விற்குள் தள்ளி விட்டுவிடுவார்கள். நல்லவேளையாக மகளிர் மட்டும் அத்தனை உக்கிரம் கிடையாது.

கதை என்று புதிதாக எதுவுமில்லை. டிரைலரில் பார்த்த அதே விஷயங்கள் மட்டும்தான் கதை. இடையிடையே சில எரிச்சல்களை தவிர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமாக நகர்கிறது. சிக்ஸர் அடிக்க வேண்டிய களம். ஆனால் பாதுகாப்பாக சிங்கிள் ரன் மட்டும் ஓடியிருக்கிறார்கள்.

கவுசல்யா – சங்கர் என்கிற நிஜப்பெயர்களை படத்தில் பயன்படுத்தியது, ஈழ நினைவேந்தல் காட்சி என்று நிறைய ஃப்ரேம்களில் ஆச்சர்யப் படுத்தியிருக்கிறார்கள்.

மகளிர் மட்டுமில் மூன்று விஷயங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. முதலாவது, அவரவருக்கான சின்ன வயது காஸ்டிங். நாசருக்கு நாசரின் மகனையே நடிக்க வைத்தாயிற்று. பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி, லிவிங்க்ஸ்டன் என்று எல்லோருடைய சின்ன வயது நடிகர்களும் முக அமைப்பு ஒத்துப்போகும் அளவிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக இதற்குப் பின்னால் பெரிய உழைப்பு இருந்திருக்க வேண்டும். குறிப்பாக சரண்யாவின் சின்ன வயது கதாபாத்திரம் அத்தனை கச்சிதம்.

இரண்டாவது, பாவல் நவகீதனின் கேரக்டர். குற்றம் கடிதலில் வந்தது போலவே இதிலும் இவருக்கு முக்கியமான துணை கதாபாத்திரம். அவ்வப்போது இவருடைய ஹிந்தி கலந்த தமிழ் உச்சரிப்பும், எப்போதும் ரஜினிகாந்த் போல வாயை வைத்துக் கொண்டிருப்பது எரிச்சலைக் கொடுத்தால் கூட அந்த வேடத்திற்கு தன்னால் முடிந்த நீதியை செய்திருக்கிறார்.

மூன்றாவது, பானுப்ரியாவின் சின்ன வயது வேடத்தில் நடித்த அழகி ! சின்ன வயது காட்சிகள் இடையிடையே வந்தாலும் நேரம் குறைவு என்கிற நம் ஆதங்கத்தை புரிந்துகொண்டு அவரையே பானுப்ரியாவின் மகளாகவும் நடிக்க வைத்திருக்கிறார்கள். சீரான மூக்கு, கூரான கண்கள், கோதுமை நிறமென கச்சிதமான அழகி. அஜித் ரசிகர்கள் அடிக்கடி ஸ்க்ரீன் பிரசன்ஸ் என்பார்களே அதற்கு அர்த்தம் புரிந்துக் கொண்டேன். இவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் என் கண்கள் அவரைவிட்டு அகலவில்லை. அகல முடியவில்லை. 

அழகியின் பெயர் ஷோபனா கார்த்திகேயன். அறிமுகப்படம் என்கிறார்கள். கொஞ்சம் டிக் செய்து பார்த்தேன். இவருடைய முன்னாள் சினிமா பெயர் ஜெஸின். ஜெஸின் கார்த்திக், ஜெஸின் டிக், ஜெஸின் தீபிகா என வெவ்வேறு பெயர்களில் மாடலாகவும், நடிகையாகவும் இருந்திருக்கிறார். ஒரு சில தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். போத்தீஸ், ஏர்டெல், கே.எப்.சி உட்பட சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். 2013ல் மெம்மித்தரம் பிரேமிஞ்சுகுன்னம் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். தமிழில் அங்குசம் என்கிற படத்தில் ஒரு சின்னஞ்சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். தோண்டத் தோண்ட சில பழைய புகைப்படங்கள் எல்லாம் கிடைத்தன. அதை வைத்து பார்க்கும்போது கோலிவுட்டில் ஒரு சுற்று வரக்கூடிய எல்லா தகுதிகளும் ஷோபனாவிடம் இருக்கிறது. சினிமா ப்ரோக்கர் சொன்னார், ஜோசியக்காரர் சொன்னார் என்று ஷோபனா மூக்கு அறுவை சிகிச்சை மட்டும் செய்து கொள்ளாமலிருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 September 2017

பிரபா ஒயின்ஷாப் – 11092017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த வாரத்தில் ஒருநாள் நீலநிற சதுர முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரமெங்கும் ஆங்காங்கே நின்று துண்டு பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அவசரமாக அவர்களை புறக்கணித்துவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தால் ஒரு சக பணியாளர் அத்துண்டு பிரசுரத்தை கொண்டு வந்து எல்லோரையும் அதிலுள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஏன் ? ஏனென்றால் மிஸ்டு கால்கள் கொடுத்தால் நதிகள் இணையுமாம். யார் ? காடுகளை அழித்து ஆசிரமம் கட்டிய ஒரு ஆசாமியார். புல்ஷிட் ! நாட்டில் எது நடந்தாலும் ஒரு குரூப் சிரத்தை எடுத்து சேஞ்.ஆர்க் பெட்டிஷனில் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கும். நானும் கூட அப்பாவியாக அதில் ஒருமுறை இணைந்திருக்கிறேன். இதுவும் கிட்டத்தட்ட ஆன்லைன் பெட்டிஷன் வகையறா தான். இதன் கான்செப்ட் என்னவென்றால் நீங்கள் பெட்டிஷன் கையெழுத்திட்டாலோ, மிஸ்டு கால் கொடுத்தாலோ நீங்கள் அவ்விஷயத்திற்கு ஆதரவு கொடுத்ததாக கணக்கில் கொள்ளப்படும். இறுதியில் குறிப்பட்ட எண்ணிக்கை ஆதரவு கிடைத்ததும் அது மொத்தமாக சம்பந்தப்பட்ட துறைக்கு சமர்ப்பிக்கப்படும். ஒரே கோரிக்கையை இப்படி ஒரே சமயத்தில் ஏராளமான பேர்கள் கோரும்போது அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை பரிசீலனை செய்யலாம். சேஞ்.ஆர்கை பொறுத்தவரையில் சில சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி கண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் மீனவப் பிரச்சனையோ, ஈழப் பிரச்சனையோ பெட்டிஷன் கையெழுத்திட்டு ஒரு துரும்பு கூட நகரவில்லை என்பதே நிஜம். நதிகளை இணைக்கும் கேம்பெயினில் கோடிகளை இறைக்கும் ஜக்கி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் உபயோகமான காரியங்கள் செய்திருக்கலாம் என்பது ஒருபுறம் தோன்றினாலும், ஜக்கி ஏதோ பெருசாக திட்டம் போடுகிறது என்பதை நினைத்து கலக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் நீட் எதிர்ப்புக் குரல்களுக்கு இடையில் சன்னமாக சில புரியாத புதிர், குரங்கு பொம்மை விமர்சனங்களை கவனித்திருப்பீர்கள். இரண்டு படங்களையும் தேவி திரையரங்கில் அடுத்தடுத்த காட்சிகள் பார்த்தேன். 

குரங்கு பொம்மை வணிக சினிமாவிற்கும், கலைப் படைப்பிற்கும் இடையே ஊசலாடுகிறது. ஆமாம், கு.பொ.வின் மினிமலிஸ போஸ்டர்களைப் பார்த்து அது ஒரு கலைப்படைப்பாக இருக்கும் என்று நம்பிவிட்டேன். ஒரு குரங்கு பொம்மையின் படம் அச்சிட்ட பயணப்பையைச் சுற்றியே கதை நகர்கிறது. இறுதியில் அப்படி அந்தப்பையில் என்னதான் இருக்கிறது என்பதை ஒரு சிறிய திருப்பத்துடன் கொடுத்திருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் கு.பொ.வின் கதையை அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் சுருக்கிவிடலாம். நடுவில் ஹீரோயின் வேண்டும், டூயட் வேண்டும் என்பதற்காக ஒரு காதல் (கதாநாயகி டெல்னா டேவிஸ் அழகு !), போலீஸ் ஸ்டேஷன் காட்சி என்று நீள்கிறது. ஒரேயொரு போலீஸ் ஸ்டேஷன் காட்சி மட்டும்தான். அதன்பிறகு இப்படத்தில் காவல்துறையையே மறந்துவிட்டு ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கொடூர குற்றங்கள் புரிகிறார்கள்.

குரங்கு பொம்மையில் பாரதிராஜா
விதார்த்தை எனக்குத் தெரிந்து மூன்றாவது படத்தில் இதே மாதிரியான வேடத்தில் பார்க்கிறேன். இரண்டு பேருடைய நடிப்பு, கதாபாத்திரம் இப்படத்தில் ரசிக்க வைக்கிறது. ஒருவர், பாரதிராஜா. அவருடைய கடைசி காட்சியில் அவர் சொல்லும் அந்த குட்டிக்கதையும், பாவனைகளும் பிரமாதம். ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்த முயலும் காட்சி அது. இரண்டாமவர், குமரவேல். இவர் எப்படிப்பட்டவர் என்பதை சுருக்கமாக அறிமுகக்காட்சியிலேயே காட்டிவிடுகிறார்கள். அதன் பிறகு இவர் நேக்காக செய்யும் காரியங்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. 

புரியாத புதிர் ஒரு நான்கு வருடங்களாக கோடம்பாக்கத்தில் சாந்தியடையாத ஆவியாக உலாவி ஒரு வழியாக வெளியாகியிருக்கிறது. டிரைலரை பார்த்து சைக்கோ திரில்லர் போலிருக்கிறதே என்று நம்பி கண்ணியில் கால் வைத்துவிட்டேன். செக்ஸ் ஸ்கேண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கதை நகர்ந்து, பழி வாங்கும் படலத்தில் முடிகிறது. ம்ஹூம் நான்கு வருடங்கள் இல்லை. சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய படம் என்பதை மனதில் இருத்திக்கொண்டே படம் பார்ப்பது நல்லது. ஸ்கேண்டல்கள் பார்ப்பது தவறு என்று சினிமாக்காரர்கள் நமக்கு பாடமெடுக்கும் துர்பாக்கிய சூழலில்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

புரியாத புதிர்
புரியாத புதிரில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு நல்ல விஷயம் அதன் அழகியல். இயக்குநர் நிச்சயமாக ஒரு ரசனையான ஆளாக இருக்கக்கூடும். கலை அலங்காரம், படமாக்கப்பட்ட இடங்கள் போன்றவை அதனை உறுதி செய்கின்றன. வசனங்கள் ஒரு சினிமாவுக்காக எழுதப்பட்டவை போலில்லாமல் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையேயான காதல் உணர்வு அத்தனை அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் காயத்ரி. அவரது நலனுக்காக டிஸ்சார்ஜுக்குப் பின் தனியாக தங்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். எனவே விஜய் சேதுபதி காயத்ரியை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். காதலருடைய வீட்டில் முதல்முறையாக நுழைகிறார் காயத்ரி. அப்போது அவருடைய கண்களும், கால்களும் காட்டும் காதல் அடடா ! காயத்ரி நீங்கள் கொஞ்சம் நன்றாக தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நல்ல டப்பிங் கலைஞரை பணியில் அமர்த்திக் கொள்ளுங்கள். மேலும் ஒப்பனை, உடை சமாச்சாரத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான களம் காத்திருக்கிறது.

இவ்விரு படங்களுக்கும் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. படைப்பாளிகள் என்றால் கொஞ்சம் கிறுக்குத்தனம் இருக்கும் என்பார்கள். இவ்விரு திரைப்படங்களின் இயக்குநர்களுக்கும் அந்தக் கிறுக்கு சற்றே கூடுதலாக இருக்கிறது. குரங்கு பொம்மையின் ஒரு காட்சியில் நரிக்குறவர்கள் நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்னால் குழந்தைக்கு தொட்டில் கட்டி படுக்க வைத்ததாகவும் விடிந்தபிறகு லாரி அங்கே இல்லையென போலீஸில் புகார் செய்கிறார்கள். கதைக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத காட்சி இது. அடுத்த காட்சியிலேயே நகர சாலையொன்றில் பின்புறத்தில் தொட்டில் குழந்தையோடு ஒரு லாரி விரைவதாக காட்டுகிறார்கள். பாரதிராஜா – விதார்த் – குரங்கு பொம்மை படம் போட்ட பை இவை மூன்றிற்கும் உள்ள தொடர்பு எத்தனை குரூரமானது ? குறிப்பாக ஒரு ஷாட்டில் அப்பையை நாயொன்று முகர்வதாக காட்டுவதற்கு எப்படி அய்யா உங்களுக்கு மனது வந்தது ? இன்னொரு புறம் பெண்களை ஜஸ்ட் லைக் தட் கேவலப்படுத்தவும் தவறவில்லை. இப்படத்திற்கு சென்ஸார் கொடுத்திருப்பது யூ / ஏ !

குரங்கு பொம்மைக்காவது பரவாயில்லை, புரியாத புதிர் யூ சான்றிதழ் பெற்ற படம். உண்மையில் புரியாத புதிர் சொல்ல வந்தது நல்ல விஷயம்தான், ஆனால் அதைச் சொன்ன விதம் அதனை அதற்கு நேரெதிராக மாற்றிவிட்டது. ஸ்கேண்டல் பார்ப்பதும், பகிர்வதும், அப்படிச் செய்யும் உங்கள் நண்பர்களை மெளனமாக ஆதரிப்பதும் தவறு என்பதே இயக்குநர் சொல்ல வந்தது. ஆனால் என்ன நடக்கிறது. ஒருவரை பழி வாங்க வேண்டுமென்றால் அவர் பைக்கில் போகும்போது அருகிலுள்ள ஏசி பேருந்தில் பயணம் செய்து அதன் கண்ணாடி மாய்ஷரில் கோலம் போட வேண்டும். அவரை காதலிப்பது போல நடித்து வலையில் வீழ்த்த வேண்டும். அப்புறம் தன்னைத்தானே ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து யாரோ அனுப்புவது போல அவருக்கே அனுப்பி அவரை மன உளைச்சலில் தள்ள வேண்டும். தற்கொலை முயற்சி செய்ய வேண்டும். முடிந்தால் கடைசியாக ஒருமுறை அவருடன் ஜல்ஸா செய்துகொள்ள வேண்டும். கடைசியாக உனக்கு பிரிவின் வலி புரிய வேண்டும் என்று அவரிடம் தத்துவார்த்தமாக பேசி தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அப்பப்பா. ஒரு சிம்பிளான விஷயத்தை சொல்ல ஏன் இப்படி யூ டர்ன் போட்டு, டேபிளை எல்லாம் நொறுக்குகிறீர்கள் ரஞ்சித் ? உங்களுக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறது. ஆனால் செய்துகொள்ள பயம் என்றால் உடனே புரியாத புதிர் பார்க்கவும். அத்தனை டீடெயிலிங். உங்கள் டீடெயிலிங்கில் தீயை வைக்க. ரத்தம் சொட்டச் சொட்ட கை நரம்பைக் காண்பிப்பதை முதலில் தடை செய்ய வேண்டும். இத்தனை குரூரமாக படங்கள் எடுக்கக்கூடாது என்றில்லை. குடும்பங்கள் கொண்டாடும் என்று தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்துவிட்டு ரத்தம் காட்டக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.

இவ்விரு படங்களும் ஒரு வகையில் பொதுபுத்தி மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன. குரங்கு பொம்மை, ‘இந்த மாதிரி செய்பவர்கள் எல்லாம் அவ்வளவு ஈஸியா சாகக்கூடாது சார்’ என்கிற பொதுபுத்தி. புரியாத புதிர், ‘உங்க வீட்டு பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தா என்ன சார் செய்வீங்க’ என்கிற பொதுபுத்தி.

இவ்விரு படங்களில் சொல்லப்படும் அறம், அதாவது மாரல் சயின்ஸ் ஒருமாதிரி போலியாக இருக்கிறது. குரங்கு பொம்மையில் வில்லன் கோடிகளை சம்பாதிக்கிறான். வாழ்க்கையை ஒரு சுற்று அனுபவிக்கிறான். ஆனால் கை, கால்கள் இழந்து துயரப்படுகிறான். கிட்டத்தட்ட குற்றமே தண்டனை க்ளைமாக்ஸை நினைவுக்கு வருகிறது. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாதவன் என்று காட்டப்படும் வில்லன், க்ளைமாக்ஸில் மனம்வருந்தி கண்ணீர் விடுவதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. புரியாத புதிரில் ஸ்கேண்டல் ஒரு பெண்ணின் உயிரை பறிக்கிறது. அதற்கு காரணமான ஆண்களை பழி வாங்கும் படலத்திலும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். நியாயமாக அதுவும் ஸ்கேண்டலில் தானே சேர வேண்டும். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 September 2017

பிரபா ஒயின்ஷாப் – 04092017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

1948. தென்னாப்பிரிக்காவில் ‘அப்பர்தீட்’ (தீட்டு ?) எனும் நிற துவேஷ விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது. அப்பர்தீட் சட்டம் தென்னாப்பிரிக்கர்களை கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. கறுப்பினத்தவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டன. 'வெள்ளையருக்கு மட்டும்' எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகளில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது. அப்பர்தீட் முறைக்கு மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. பல்வேறு புரட்சி இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. 

விளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கறுப்பின வீரர்கள் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட அனுமதிக்காதது மட்டுமில்லாமல் மற்ற கறுப்பின அணிகளுடனும் அந்நாட்டின் அணி விளையாடாமல் இருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மட்டும்தான் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடும். அந்த அணிகளிலும் வெள்ளையின வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது டொ’லிவெரா என்கிற கறுப்பின வீரர் இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார். டொ’லிவெரா யாரென்றால் தென்னாப்பிரிக்காவில் பிறந்து நிற துவேஷத்தால் உரிமைகள் பறிக்கப்பட்டு அதனால் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். 1968ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அச்சமயம் டொ’லிவெரா நல்ல ஃபார்மில் இருந்தும் கூட அவருக்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பெற்ற ஒரு வீரருக்கு காயம் ஏற்பட அவருக்கு பதிலாக டொ’லிவெரா அழைக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் எதிர்ப்பலைகள் கிளம்புகின்றன. மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இறுதியாக இங்கிலாந்து அணி தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறது. தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து தென்னாப்பிரிக்கா இடைநீக்கம் செய்யப்படுகிறது.

மண்டேலா - க்ளெர்க் உடன்படிக்கை
1991ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அப்பர்தீட் முறை ஒழிக்கப்பட்டது. தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் இணைக்கப்படுகிறது. இதற்குள் நான்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைகள் நடந்து முடிந்துவிட்டன. 1992ம் ஆண்டு ஆஸி, நியூஸியில் நடைபெற்ற உலகக்கோப்பையே தெ.ஆ பங்கேற்ற முதல் உலகக்கோப்பை. அதுவரையில் நிற துவேஷம் காரணமாக தெ.ஆ அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கெப்ளர் வெஸல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். ஒன்பது அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். முதல் போட்டியே அப்போதைய உலக சாம்பியன் ஆஸியுடன். ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்த கெப்ளர் வெஸல்ஸ் தான் ஆட்டநாயகன். லீக் ஆட்டங்களின் முடிவில் எட்டு போட்டிகளில் ஐந்தை வென்று மூன்றாமிடத்தை பிடித்தது தெ.ஆ. 

அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல். மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முதல் இன்னிங்க்ஸ் முடிக்கப்படாததால் ஐந்து ஓவர்கள் குறைக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட 45 ஓவர்களில் இங்கிலாந்து 252 ரன்கள் குவித்திருந்தது. அப்போதைய கிரிக்கெட் விதிமுறைகளின்படி அது பெரிய ஸ்கோர். தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அதிரடியாக இல்லையென்றாலும் நிதானமாக இலக்கை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியாக 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை. மழை குறுக்கிடுகிறது. அப்போது டக்வொர்த் – லிவிஸ் முறை கிடையாது. (ட-லி முறைக்கும் எதிர்ப்பாளர்கள் உண்டு). அப்போதைய மழை விதிமுறைகளின்படி இரண்டாவது அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டால், ஒவ்வொரு ஓவர் குறைக்கப்படும்போது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் டார்கெட்டில் இருந்து கழிக்கப்படும். அதாவது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் ரன் எதுவும் அடிக்கவில்லை என்றால் இரண்டாவது அணிக்கு முதல் ஓவர் குறைக்கப்படும்போது டார்கெட் குறையாது. அவ்விதிகளின்படி மழையின் குறுக்கீட்டால் ஒரு ஓவர் குறைக்கப்படுகிறது. டார்கெட் குறையவில்லை. 7 பந்துகளில் 22 அடிக்கவேண்டும். மழை தொடர்கிறது. முதலாவது விளையாடிய இங்கிலாந்து இரண்டு மெய்டன் ஓவர்கள் கொடுத்திருக்கிறது. அதனால் மீண்டும் டார்கெட் குறையவில்லை. ஒரு பந்தில் 22 ரன்கள். பன்னிரண்டு நிமிட மழை. கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க, 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.

இப்போட்டியின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? என்னைப் பொறுத்தவரையில் அநியாயம். ஒருவேளை மழை குறுக்கிடாமல் 13 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தால் அதனை நியாயமான தோல்வியாக ஏற்றிருக்கலாம். எதற்காக இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு அநேகமாக புரிந்திருக்கலாம். கிட்டத்தட்ட NEET தேர்வும் 1992 உலகக்கோப்பையின் மழை விதிமுறைகளும் ஒன்றுதான்.

NEET தேர்வு காய்ச்சலில் இட ஒதுக்கீடு தொடர்பான நிறைய மொன்னைத்தனமான பதிவுகள் / வாட்ஸப் ஃபார்வேர்டுகள் ஃபேஸ்புக்கில் பரவிக்கிடக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் நியாயம் தானே என்று நினைக்கத்தோன்றும் பதிவுகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? என்று ஒரு கேள்வி. மருத்துவம் என்றில்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மதிப்பெண்கள் என்பது போட்டியில் வடிகட்டுவதற்கு மட்டுமே பயன்படும். பயிற்சிதான் முக்கியம். சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள் நாளடைவில் வேர்ட் ஆஃப் மவுத்தில் புகழ் பெறுகிறார்கள், சாதிக்கிறார்கள். மென்பொருள் துறையை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் 65 – 70 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான். அதனால் 90 சதவிகிதம் எடுத்தவர்கள் மென்பொருள் துறையில் சாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. யாராக இருந்தாலும் பயிற்சி இருந்தால் சாதிக்கலாம். இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கியவரை முன்னேற்றி விடுவதற்காக அல்ல, இன்னார் படிக்க கூடாது என கல்வி முழுமையாக மறுக்கப் பட்டு காலம் காலமாக கூலியாக மட்டுமே இருக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக புத்தக வாசம் படாத படி பார்த்துக் கொண்ட இனத்திற்கு, எந்த படிநிலை அமைப்புப்படி அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ அந்த படிநிலையின் ரிவர்ஸ் வெர்ஷன்தான் இந்திய இட ஒதுக்கீடு முறை. இட ஒதுக்கீட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் துளியும் சம்மந்தமில்லை. இப்போது தென்னாப்பிரிக்காவின் அப்பர்தீட் பற்றிய பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

சம நீதி - சமூக நீதி
இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் நீண்டகால வாதம் நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்பது. சமூகநீதி வேறு, சம நீதி வேறு. ஒரு அம்மா தான் பெற்ற பிள்ளைகள் அனைவரின் மீதும் பாரபட்சமில்லாமல் பாசம் வைப்பது சமநீதி. அதே அம்மா, பெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் வாழ்வில் கஷ்டப்படும் போது, மற்ற பிள்ளைகளை விட ஒப்பீட்டளவில் பின்னுக்கு இருக்கும் போது, வசதியாக இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து தான் பெறும் பணம், பொருளை கூட இல்லாத பிள்ளைக்கு கொடுப்பாள். அந்த பிள்ளையை பற்றியே அவள் முழு சிந்தனையும், புலம்பலும் இருக்கும். அதற்காக மற்ற பிள்ளைகளை வெறுப்பதாக அர்த்தமில்லை, இது தான் சமூக நீதி !

விவரம் தெரியாமல் இதுபோல பதிவிடும் அற்பர்களை விடுங்கள். எல்லாம் தெரிந்தும் குரூரமாக ஒரு இறப்பைக் கூட கொச்சைப் படுத்துபவர்களை என்ன சொல்வது ? ஒரேயொரு ஆறுதல். பதிவுலகம் வந்த நாள் முதல் ஏராளமான மிதவாத / நடுநிலைவாத நண்பர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இப்பொழுதாவது நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்று புரிந்திருக்கும்.

நன்றி: வாசுகி பாஸ்கர் (பதிவின் சில மேற்கோள்கள் தோழர் வாசுகி பாஸ்கரின் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment