28 April 2013

யாருடா மதன் ?

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சமகாலத்தில் வித்தியாசமாக ட்ரைலர் கட் பண்ணுவதே வாடிக்கையாக மாறிவிட்டது. யாருடா மகேஷ் ?, சொன்னா புரியாது, ஹாய் டா போன்ற படங்களின் ட்ரைலர் ஒரே மாதிரி இருந்து தொலைத்து குழப்படி செய்கிறது. அந்த குழப்படியை கண்டுணர்ந்த பின்னும் யாருடா மகேஷை பார்க்க முடிவு செய்ததற்கு காரணம், ஸோ சிம்பிள் - ஹீரோயின் டிம்பிள்.

கதையின் முதல் வரியில் ஹீரோ வழக்கம் போல பொறம்போக்கு பொறுக்கி என்று எழுதி எனக்கே போரடித்துவிட்டது. ஒரு மாற்றத்திற்காக ஹீரோயின் மட்டும் அரைலுஸாக இல்லாமல் செம சார்ப்பு ! இருவரும் சேர்ந்து காதல், கலவி, கல்யாணம் மூன்றையும் முறையே செய்கிறார்கள். ஒரு மகனும் இருக்கிறார். அந்த மகன் ஹீரோவுடன் செய்த இரண்டாவது ‘க'வில் பிறக்கவில்லை, மகேஷ் என்கிற வேறொருவருக்கு பிறந்தவன் என்று ஹீரோவுக்கு தெரிய வருகிறது. யாருடா அந்த மகேஷ் ? என்பதே பேதிக்கதை.


படத்தின் துவக்கத்தில் சில காட்சிகள் ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்திருந்தன. சொல்லப் போனால் ட்ரைலரில் பாதி முதல் சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் கூட ஏதோ ஆங்காங்கே பெய்யும் லேசான தூரலை போல சிரிப்பு மூண்டது. சனா ஒபராய் உரித்த கோழி மாதிரி தோன்றி சூடேற்றினார். டிம்பிளும் தான். நாயகனும் நாயகியும் கலவி கொள்ளும் காட்சி ஒன்று உள்ளது. நல்லது. ஆனால் அந்த காட்சிக்குப்பின் கலவிக்குப்பின் துவண்டுபோன தசைபிடிப்பை போல படமும் துவண்டு விடுகிறது. பிரச்சனை என்னவென்றால் படம் முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை. ஒரு எழவும் இல்லை.


கலவி காட்சிக்குப்பின் நாயகி Im virgin. This is my old t-shirt என்கிற வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருக்கிறார். நாயகனுடையதில் Atlast i did it என்று பொறிக்கப்பட்டுள்ளது. எண்பதுகளின் சினிமாக்களில் இருமலர்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் குறியீடு நினைவுக்கு வருகிறது.


சாப்பிடத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் என்கிற பழமொழியை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் நாயகன் சந்தீப். ஆந்திர வாடை திரையரங்கின் கடைசி இருக்கை வரை பரவுகிறது. அதிகபட்சம் நான்கைந்து சுமார் மூஞ்சிகள் ரசிகைகளாக கிடைக்கலாம்.

டிம்பிள் சோப்பேட் - சிரித்தால் கன்னத்தில் குழி விழுமே அதற்கு ஆங்கிலத்தில் டிம்பிள் என்று பெயர். அதன்பொருட்டு அன்றே அம்மையாருக்கு டிம்பிள் என்று பெயர் சூட்டிய அவருடைய பெற்றோரை பாராட்டியே தீர வேண்டும். டிம்பிளின் போதையேற்றும் கண்களும், முக சாயல் கொஞ்சமும் டிஸ்கோ சாந்தியை நினைவூட்டுகின்றன. டிம்பிளின் மேலுதடு சாறு நிரம்பிய சாத்துக்குடி சுளையைப் போல கிண்ணென்று இருக்கிறது. மேலுதடே இப்படியென்றால் கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.


நண்டு ஜெகனை எனக்கு பிடிக்கும். பொதுவாக விஜய் டிவி வளர்த்துவிட்டவர்கள் எல்லோருமே ரசிக்க வைப்பார்கள். ஆனால் வாய்ப்பிருந்தும் கூட ஜகன் பெரிதாக எடுபடவில்லை. லொள்ளு சபா சுவாமிநாதன், ரோபோ சங்கர், ஸ்ரீநாத் என்று நிறைய மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. அந்த சமயத்தில் வெளியே எழுந்து தம்மடிக்க செல்பவர்களை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஓஓடும் உனக்கிது ரொம்ப ரொம்ப புதுசு என்கிற பாடல் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது. அதனை பாடியுள்ள அன்னா காத்தரீனா என்கிற மலையாள பாடகி தன்னை கூகிளில் தேட வைத்து வெற்றி பெற்றுள்ளார்.


உண்மையில் படத்தின் இயக்குனர் கூட தன்னை தேட வைத்திருக்கிறார். யாருடா மதன் ? என்று கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்கிறேன். மதன் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துவிட்டு இன்னமும் அரியர்ஸ் க்ளியர் செய்யாத மக்கு மாணவனாக இருக்கக்கூடும். அதனால் தான் பாஸ்கர், வாத் த டக் ? போன்ற அரதப்பழசான கல்லூரி மாணவர்கள் ஸ்லாங்கை பயன்படுத்தியுள்ளார். படத்தின் மிக மொக்கையான காட்சியொன்றில் ஒரு கதாபாத்திரம் பார்ப்பவர்களை எல்லாம் பீர் பாட்டிலால் மண்டையை உடைக்கிறது. சர்வ நிச்சயமாக அது இயக்குனர் மதனாகத்தான் இருக்க வேண்டும். ஒருவேளை நான் மதனை சந்தித்தால் கேட்க விரும்பும் கேள்வி: ஏன் சார் எஸ்.ஓ.யூ.டி.எச் மாதிரி படம் எடுத்திருக்கீங்க ?


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 April 2013

ஸ்ரீனு வைட்லா வாரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்த வாரம்... ஸ்ரீனு வைட்லா வாரம் !

அரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் பாட்ஷா (தெலுங்கு) படத்தில் ஒரு காட்சி. தெலுங்கு படங்களின் பெயர்களையும் அதன் இயக்குனர்களின் பெயர்களை மாற்றி மாற்றி இணைக்கிறார் ஒரு நகைச்சுவை நடிகர். அவருடைய தெலுங்கு சினிமா அறியாமைக்காக ஜூனியர் என்.டி.ஆரும் காஜலும் சேர்ந்து அவருக்கு கும்மாங்குத்து குத்துகிறார்கள். நானும் தெலுங்கு சினிமா அறிவில் அவரைப் போலத்தான். சில மாதங்களுக்கு முன்பு தவறான திரையரங்கிற்குள் நுழைந்த குற்றத்திற்காக கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்கிற சினிமாவில் த்ரிஷாவின் ஆளோடு நயன்தாரா கும்மி அடிப்பதை பார்க்க வேண்டிய துயர நிலைக்கு ஆளானேன். அதற்கு முன்பு கன்னுக்குட்டிக்காக மகதீராவின் தமிழ் மொழிபெயர்ப்பு பார்த்திருக்கிறேன், அவ்வளவுதான். இப்பொழுதும் அப்படித்தான். கன்னுக்குட்டிக்காக பாட்ஷா, சம்முக்குட்டிக்காக தூக்குடு !

முதலில் பார்த்தது பாட்ஷா. இஸ்லாமிய போராளிகள் பற்றிய செய்திப்படத்துடன் கதை துவங்குகிறது. அவர்களை அழிக்க நினைக்கும் காவித் தீவிரவாதியாக ஜூனியர் என்.டி.ஆர். போக்கிரி கதைக்கும் பாட்ஷா கதைக்கும் ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஆஷிஷ் வித்யார்த்தி, மகேஷ் ராவத் என்று சில லோக்கல் வில்லன்கள். அவர்களை கொன்றுவிட்டு ஹாங்காங்கிலோ பேங்காக்கிலோ இருக்கும் மெயின் வில்லன் கெல்லி டார்ஜியை உச்சக்கட்ட காட்சியில் கையாலே அடித்து சாகடிக்கிறார். ஷாயாஜி ஷிண்டே கூட நடித்திருக்கிறார். மொழி புரியாததால் படத்தில் யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. மொழி புரிந்தாலும் அப்படித் தானிருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் ஒரு கோஷ்டி ஹிந்திக்கார வில்லன்கள் தெலுங்கு பட உலகை அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாரதி என்கிற படத்தை எடுத்துத் தொலைத்ததற்காக திராவிடன் எப்படியெல்லாம் வேதனை அனுபவிக்கிறான் ?

வழக்கம்போல காதுகளில் தாழம்பூவை சுற்றும் ஒரு நம்பகத்தன்மையில்லாத காட்சியில் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுகமாகிறார். அன்னாருக்கு யார் மேக்கப் போட்டார்கள் என்று தெரியவில்லை. உடல் முழுக்க ஹீரோ மாதிரி அலங்கரிக்கப்பட்டவர், உதட்டில் மட்டும் ஹீரோயின் போல அலங்கரிக்கப்பட்டுள்ளார். நடனத்தின்போது சாட்டையிலிருந்து விடுவிக்கப்பட்ட பம்பரம் போல சுற்றிச்சுழல்கிறார். இரண்டு கால்களையும் ‘V’ வடிவத்தில் அகட்டி வைத்துக்கொண்டு பாதங்களை அப்படியும் இப்படியுமாக திருக்குவது தான் ஜூ.என்.டி.ஆரின் ஸ்பெஷாலிட்டி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் சில ஆண்ட்டிகளோடு சேர்ந்து அவருடைய அப்பா மாதிரி ஆ(ட்)டிக்காட்டும் போது தியேட்டரில் உள்ள பத்து பேரும் பாப்கார்ன் கொறிக்கிற சத்தம் விண்ணைப் பிளக்கிறது.

கன்னுக்குட்டி கதைப்படி சமூக ஆர்வலர். வாழ்க்கையை ரசித்து வாழ்பவர். அதாவது நாம் கன்னுக்குட்டியை ரசித்துக்கொண்டே வாழ்கிறோமே அப்படித்தான். ஒரு காட்சியில் சிகப்பு நிற சல்வார், பச்சை நிற ஷால் அணிந்துவரும்போது அப்படியே தூக்கிவைத்து... கொஞ்சலாம் போல இருக்கிறது. அடிக்கடி ஜூ.என்.டி.ஆரை நெஞ்சோடு சாய்த்து நம் வயிற்றில் ஜெளுசிலை விதைக்கிறார்.

இரண்டாவதாக பார்த்தது தூக்குடு. தமிழில் அதிரடி வேட்டை. பிரதான கதையில் பெரிய மாற்றமில்லை. தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் கதை. கூடவே உள்ளூர், உலக வில்லன்களை பந்தாடுகிறார். அப்புறம் கொஞ்சம் அப்பா செண்டிமெண்ட். தமிழ் மொழிப்பெயர்ப்புக்காக கொஞ்சம் டிங்கரிங் வேலைகள் செய்திருக்கிறார்கள். என்.டி.ஆருக்கு பதில் எம்.ஜி.ஆர், தாராவியை காட்டிவிட்டு மெட்ராஸ் என்கிறார்கள், நடுநடுவே ரஜினி - கமல் ஜல்லியெல்லாம் அடித்திருக்கிறார்கள். ஜூனியர் என்.டி.ஆருடன் ஒப்பிடும்போது மகேஷ் பாபு கொஞ்சம் அடக்கி வாசிப்பவராகவே தெரிகிறது.

சம்முக்குட்டி ஐ.பி.எஸ் ஆக வேண்டுமென்பது அவருடைய தந்தையின் விருப்பம். சம்முவோ அப்பாவை ஏமாற்றிவிட்டு இத்தாலியில் ஃபேஷன் டிசைனிங் படிக்கிறார். ஆனால் பார்ப்பதற்கு குத்து விளக்கு ஏற்றுவதற்கு ஏற்ற ஆளாக தோற்றமளிக்கிறார். இரண்டாம் பாதியில் காணாமல் போனது மென்-சோகம்.

மேற்கண்ட ஸ்ரீனு வைட்லாவின் இரண்டு படங்களுக்கு கூட பெரிய வித்தியாசமில்லை. அதே டெம்ப்ளேட். இரண்டிலும் மாஸ் ஹீரோ, லட்டு ஹீரோயின், பிரம்மானந்தம், எம்.எஸ்.நாராயணா, அதே வில்லன் நடிகர்கள், அதே ஆண்ட்டி நடிகைகள், ஃபாரின் லொக்கேஷன், முதல் பாதியில் ஒரு பார் டான்ஸ் பாடல், இரண்டாம் பாதியில் ஒரு குத்துப்பாடல், இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் பனிப்பிரதேசத்தில் ஆடும் ஒரு ஹிட் பாடல் என்று நிறைய அதே அதே. நீயா நானா இடைவேளையின் போது சாப்பிட்டு பாருங்க ஜம்முன்னு இருக்கும்'ன்னு ஒரு அம்மையார் சொல்லுவாரே... அவரு ஸ்ரீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் போல. இரண்டிலும் ஐட்டமாய் ஆடி அசத்துகிறார். ஆனால் உள்ளூர் ஊறுகாய் மீனாட்சி தீட்சித்துக்கு மேற்கத்திய ரக பார் டான்ஸ் பாடலையும், ப்ரேசில் ஸ்காட்ச் நிகோல் எமி மேடலுக்கு நாட்டுப்புற ரக குத்தாட்டத்தையும் கொடுத்த ஸ்ரீனுவின் நகைமுரண் ரசிக்க வைக்கிறது.

பாட்ஷாவில் ரிவேஞ்ச் நாகேஸ்வர ராவ் என்று ஒரு கதாபாத்திரம், அதீத வன்முறை காட்சிகளையும், தூக்கலான ஆபாசக் காட்சிகளையும் படமாக்கும் இயக்குனர்களின் மீது காறித் துப்புகிறது. அந்த எச்சில் ஸ்ரீனுவின் மீதும் பட்டுத் தொலைக்கிறது. கழுத்தில் துப்பாக்கியால் சுடுவது, இடுப்புக்கு கீழே ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து குத்துவது என்று மேற்கூறிய இரண்டு படங்களிலும் ஏதோ சிகப்பு நிற திரவம் ரசிகர்கள் மீது தெறிக்கிறது. அது தக்காளி ஜூஸாக இருக்கக்கூடும். கவர்ச்சியை பொறுத்தவரையில் ஸ்ரீனு அடக்கி வாசித்திருப்பது ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. டோலிவுட்டில் ஸ்ரீனுவுக்கு தமிழில் கே.எஸ்.ரவிகுமார் மாதிரி ஆட்களுக்கு இருக்கக்கூடிய மரியாதை இருக்கலாம். அதனால் சக தெலுங்கு மசாலாப்பட இயக்குனர்களை போல இறங்கி அடிக்க தயங்கலாம். அந்த காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு ரிவேஞ்ச் நாகேஸ்வர ராவ் கதாபாத்திரமாக இருக்கலாம்.

ஆனால் ஒன்று, காஜலையும் சமந்தாவையும் வைத்து சைவ சினிமா எடுப்பதற்கு பதிலாக ஸ்ரீனு வைட்லா தன்னுடைய இரண்டு கரங்களையும்.... கூப்பிவைத்து சாமி கும்பிடலாம் !


இரண்டு படங்களை அடுத்தடுத்து பார்த்ததைப் பற்றி நண்பர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். காஜல், சமந்தா இருவரில் யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட்கிறார். நான் அவரிடம் பதில் கேள்வி கேட்டேன் - உங்களுக்கு உங்களுடைய இரண்டு கண்களில் எது அதிகம் பிடிக்கும் ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 15042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும் புகையிலை விழிப்புணர்வு செய்திப்படத்தை பற்றி எழுதியிருந்தேன். அது உண்மையில் பார்க்க சகிக்கவில்லை, உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் என்கிற ரீதியில் சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். உண்மையில் அப்படி யாரும் மின்னஞ்சல் அனுப்பவில்லை என்றாலும் எழுதிக்கொண்டிருக்கும் பத்தியின் தொடுப்புக்காக அப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. முதலில், சிகரெட் பாக்கெட்டின் மீது புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று அச்சடித்தார்கள். அப்படி போட்டால் மட்டும் புகை பிடிப்பவர்கள் உணர்ந்து நிறுத்திவிடுவார்களா என்று எகத்தாளம் பேசினார்கள். அடுத்தது நெஞ்சாங்கூட்டின் நெகடிவ் படத்தை சிகரெட் அட்டையில் பொறித்தார்கள். அதுவும் எடுபடவில்லை. இப்போது முகேஷ் ஹரானே புகை பிடிப்பவர்களை அதிர வைக்கிறார். நண்பர்கள் குழுவாக திரையரங்கிற்கு வந்திருக்கும் பட்சத்தில் புகை பிடிக்கும் பழக்கமுள்ள நண்பனை மற்றவர்கள் உனக்காக தான்டா போடுறாங்க என்று சொல்லி கிண்டலடிக்கிறார்கள். புகை பிடிப்பவர்களும் கூட மனதளவில் மிரளத்தான் செய்கிறார்கள். அது நல்ல அறிகுறி தானே ! நூற்றில் ஒருவர் கைவிட்டால் கூட நல்ல விஷயம். அதற்காக மற்ற தொண்ணூற்றி ஒன்பது பேரும் அந்த செய்திப்படத்தை சகித்துக்கொள்ளலாம்.

அண்ணா சாலை எல்.ஐ.சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தேவி திரையரங்கம் நோக்கி நடந்துக்கொண்டிருந்த போது, ஒரு மூதாட்டி சாலையை கடப்பதற்காக காத்திருந்தார். அடியேனைக் கண்டதும் முகம் மலர்ந்தார். மறுக்க முடியுமா ? தமிழர்களையும் ஆயா செண்டிமெண்ட்டையும் அவ்வளவு எளிதாக பிரித்துவிட முடியாது. ஒளவையார் காலத்திலிருந்து மயக்கம் என்ன தனுஷ் வரைக்கும் அப்படித்தான். அந்த நேரம் பார்த்து இரண்டு இள வயது பெண்கள் எங்களை கடந்து சென்றார்கள். அந்த சுமார் மூஞ்சிகளை இம்ப்ரஸ் செய்வதற்கு நான் ஆயாவை பயன்படுத்துவதாக அவர்கள் நினைத்து கொள்ளக்கூடும் என்பது அச்சுறுத்தலாக இருந்தது. அதைவிட எனக்கு தனியாக சாலையை கடப்பதில் எப்போதுமே ஒரு மிரட்சி உண்டு. சமயங்களில் வாகன ஒட்டிகளையும் மிரள வைத்துவிடுவேன். கிண்டி தாமரை - ஒலிம்பியா சந்திப்பிற்கு வார நாட்களில் மதியம் ஒரு மணி வாக்கில் வந்தால், நான் யாரிடமாவது சாவுகிராக்கி என்று திட்டு வாங்கும் காட்சியை ரசிக்கலாம். ஆயாவோடு கடக்க இருப்பது அண்ணா சாலை, அதுவும் காலை பதினோரு மணி. கடைசியில் ஆயாவின் துணையோடு பத்திரமாக சாலையை கடந்துவிட்டேன். அந்த ஆயாவிற்கு என்னுடைய நன்றிகள் !

சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தையல் கடைக்கு ஏற்கனவே சிலமுறை சென்றிருக்கிறேன். அங்கு பணிபுரியும் தையற்காரரை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. மேஜையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவருடைய விசிட்டிங் கார்டில் தையல் துறையில் குறிப்பாக சினிமா கலைஞர்களுக்கு தைப்பதில் இருபது வருட அனுபவம் உள்ளவர் என்று தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டதும் பொறி தட்டியது. நீங்க சினிமாவுல நடிச்சிருக்கீங்க தானே சட்டென்று கேட்டுவிட்டேன். ஆமாம் நிறைய படத்துல நடிச்சிருக்கேன்... நீ எந்த படத்துல பாத்த’ன்னு கேட்டார். கள்ள பருந்து என்கிற அந்த கேடு கெட்ட படத்தின் பெயரை தயங்கியபடியே சொன்னேன். சிரித்தார். அந்த மாதிரி படங்கள் கருப்பு பணத்தை வெளுப்பதற்காக, வேண்டுமென்றே ஓடக்கூடாது என்கிற நோக்கத்தோடு எடுக்கப்படுகின்றன என்று விவரித்தார். அப்படியும் எங்களை மாதிரி ஆட்கள் பார்க்கிறார்களே என்று சிரித்து வைத்தேன். நீ ஸ்டில்லை பார்த்து ஏமாந்திருப்ப என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வீராசாமி தொடங்கி லத்திகா, மேதை என்று அடுத்தவாரம் பார்க்கவிருக்கிற திருமதி தமிழ் வரைக்குமான என்னுடைய வரலாற்றைச் சொன்னதும் வெலவெலத்துப் போய்விட்டார். அப்புறம் ஆசுவாசமாகி அந்தமாதிரி படமெல்லாம் நீ நினைக்கிற மாதிரி இல்லை சிஷ்யா... சுத்தி நூறு பேரு பார்த்திட்டு இருப்பாங்க... தப்பான எண்ணம் எதுவும் தோணாது என்று விளக்கினார். நீ கூட சீன் பட ஹீரோ மாதிரி தான் இருக்குற. சான்ஸ் வாங்கித்தர்றேன். நடிக்கிறியா ? என்றதும் கள்ளபருந்தாக மாறி அங்கிருந்து பறந்தேன்.

நான் டைம் மெஷினை கண்டுபிடித்துவிட்டேன் - என்று ஈரானிய விஞ்ஞானி அலி ரசெக்கி அறிவித்திருக்கும் செய்தி எனக்கு கொஞ்சம் ஆர்வத்தீயை கிளப்பத்தான் செய்தது. அதாவது என்னுடைய எண்ணத்தில் டைம் மெஷின் என்பது லிஃப்ட் மாதிரியான ஒரு அறை. அதற்குள் சென்று அமர்ந்துக்கொண்டு பட்டனை தட்டினால் நாம் விரும்பிய வருடத்திற்கு நேரே சென்றுவிடலாம். அதாவது இறந்தகாலத்திற்கு சென்று ஏவாளுக்கு இன்னொரு ஆப்ஷன் கொடுக்கவோ, மன்னர்களிடம் சென்று நீங்கள் ஒரே அம்பில் சிங்கம், மான், கரடி, காட்டுப்பன்றியை கொல்வீர்கள் என்று கப்ஸா விட்டு பரிசில் பெறவோ செய்யலாம். அல்லது எதிர்காலத்திற்கு சென்று ரஜினி ஐஸ்வர்யா ராய் மகளைப் பார்த்ததும் பாடி ஸ்டெடியா இருந்துச்சு; மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு என்று பேட்டி கொடுப்பதையோ, ஜூன் மாதத்திற்கு மேல் தமிழகத்தில் மின்தடை இருக்காது என்று அப்போதைய முதலமைச்சர் குஷ்பூ அறிக்கை விடுவதையோ கண்டு களிக்கலாம். நாம் பார்த்த சினிமாக்களில் டைம் மெஷின் என்றாலே அப்படித்தானே காட்டுகிறார்கள். ஆனால் ஈரானிய விஞ்ஞானி என்ன சொல்கிறார் என்றால் அவர் உருவாக்கிய மெஷினில் அமர்ந்து ஒரு பட்டனை தட்டினால் அது நம்முடைய எதிர்காலத்தை கிட்டத்தட்ட துல்லியமாக கணித்து ஒரு தாளில் அச்சிட்டு கொடுக்குமாம். இதைக் கேட்டதும் நம்ம கன் பவுடர் ஷண்முகராஜன் என்ன சொல்றாரு தெரியுமா ? - “நீ டோண்ட் வொரி பண்ணிக்காத... நான் சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியக்காரன் கிட்டயே கேட்டுக்குறேன்...”

கிழக்கத்திய கழிவறையில் கக்கா போவது எப்படி ?, லுங்கி கட்டுவது எப்படி ? என்றெல்லாம் யூடியூபில் பார்த்திருக்கிறோம். அந்த மாதிரியெல்லாம் நமக்கு நடைமுறை வாழ்க்கையில் பயன்படாத, ஆனால் தகவல் உள்ளடக்கிய காணொளி - விண்வெளியில் பல் தேய்ப்பது எப்படி ? இவருடைய விண்வெளி சம்பந்தப்பட்ட மற்ற காணொளிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 April 2013

அந்தமான் பயணம் - தகவல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


அந்தமான் தொடர் ஒருவழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை. கீழ்காணும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடரை முழுமையாக வாசித்து வந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் பயன் பெறலாம்.

சீசன்:
அந்தமானில் டிசம்பர் துவங்கி மே மாதம் வரை சீசன். மற்ற மாதங்களில் சென்றால் என்ன என்று கேட்கலாம் - மழை பெய்து உங்கள் சுற்றுலா திட்டத்தை கலைக்கலாம், முன்னறிவிப்பின்றி உள்ளூர் கப்பல்கள் ரத்து செய்யப்படலாம். அதற்கு மேல், சில தீவுகள் சீசன் தவிர்த்து மற்ற காலகட்டத்தில் பராமரிப்பிற்காக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். க்ளைமேட்டை பொறுத்தவரையில் அதிக வெயிலுமில்லாமல் குளிருமில்லாமல் மிதமாகவே இருக்கும்.

பயணம்:
கப்பலில் சென்றால் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும். பயண நேரத்தில் முழுமையாக மூன்று நாட்கள் கழிந்துவிடும். விமானச்செலவு நான்காயிரத்தில் தொடங்கி சமயங்களில் பதினெட்டாயிரம் வரை கூட செலவாகலாம். விமான கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்கிறோமோ அதற்கு தகுந்தபடி விலை வேறுபடும். சனி, ஞாயிறுகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. பயண நேரம் இரண்டு மணி நேரம் பத்து நிமிடம்.

தங்குமிடம்:
ஏசி இல்லாத அறைகள் எனில் நாள்வாடகை அறுநூறிலிருந்து துவங்கும். ஏசி அறை வாடகைகள் ஆயிரத்திலிருந்து துவங்குகிறது. முடிந்தவரையில் போர்ட் ப்ளேரின் மையப்பகுதியில், அதாவது அபெர்டீன் பஜார், செல்லுலர் ஜெயில் அருகில் அறை எடுத்துக்கொள்வது சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். நான் வசித்த பகுதியின் பெயர், தெலானிப்பூர். அங்கே ஹாலிடே-இன் என்கிற தரமான ஏசி ஹோட்டல், எதிரிலேயே தர்பார் ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட், மதுக்கூடம் என சகலவசதிகளும் உள்ளன.

எத்தனை நாள் தேவை ?
முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, அந்தமான் முழுவதையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகக்கூடும். லகரங்களில் செலவு செய்ய வேண்டி வரும். முக்கியமான சில இடங்களை மட்டும் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். இங்கிருந்து பயணம் செய்யும் நாளை ஓய்வாக கழிக்கலாம், அங்கே சுற்றிப்பார்க்க ஆறு நாட்கள், திரும்பவும் அங்கிருந்து பயணிக்க வேண்டிய நாள் - மொத்தமாக எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவாக சுற்றிவரலாம். ஆறு அல்லது ஏழு நாட்கள் கைவசம் இருக்கும்போது சில இடங்களை தவிர்த்துவிடலாம். அதை விடவும் குறைவான நாட்கள் வைத்திருப்பவர்கள் அந்தமான் செல்வதையே தவிர்த்துவிடலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
நாள் 1: சென்னை - போர்ட் ப்ளேர் விமானப்பயணம் - ஓய்வு - மாலையில் கார்பன்'ஸ் கோவ் கடற்கரை
நாள் 2: போர்ட் ப்ளேர் சிட்டி டூர் (சாத்தம் ஸா மில், ஃபாரஸ்ட் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம், ZSI மியூசியம், அந்த்ரோபாலஜிக்கல் மியூசியம், மீன் காட்சியகம், அறிவியலகம், காந்தி பூங்கா, செல்லுலர் ஜெயில்)
நாள் 3: ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்
நாள் 4: பாராடங் சுண்ணக்குகைகள், மட் வால்கேனோ
நாள் 5: ஹேவ்லாக் - ராதாநகர், எலிபேண்ட் கடற்கரைகள்
நாள் 6: ஜாலிபாய், வண்டூர் கடற்கரை
நாள் 7: மவுண்ட் ஹேரியட் & சிடியா டாப்பு கடற்கரை
நாள் 8: பயண நிறைவு - சென்னை திரும்புதல்

பட்ஜெட் (இரண்டு நபர்களுக்கு)
பயணச்செலவு (Up and Down) : Rs.18000 - 32000
தங்குமிடம் (7 நாட்களுக்கு): Rs. 7000 - 10000
சுற்றுலா செலவு: Rs.12000 - 20000
இதர செலவுகள்: Rs.5000

மொத்தத்தில் இரண்டு நபர்களுக்கு செலவு நாற்பதாயிரத்தில் துவங்கி எழுபதாயிரம் வரை ஆகலாம்.

சில டிப்ஸ்
- அந்தமானில் திங்களன்று அருங்காட்சியகங்கள் விடுமுறை. எனவே போர்ட் ப்ளேர் சிட்டி டூர் திங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளவும். போலவே ராஸ் ஐலேண்ட் புதன் விடுமுறை. எனவே நாட்களை சரியாக திட்டமிடவும்.
- எங்கு சென்றாலும் ஒரு பையில் மாற்றுத்துணி, டவல் மற்றும் குடிநீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும். நம்மின மக்கள் உற்சாக பானமும் !
- ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இத்தனை மணிக்கு மறுபடியும் படகிற்கு வரவேண்டும் என சொல்லி அனுப்புவார்கள். அதனை சரியாக பின்பற்றவும்.
- Avomine போன்ற கடல் நோய்மை தவிர்க்கும் மாத்திரைகளை உடன் வைத்திருக்கவும். உடல் ஒத்துழையாது என்று தெரியும் பட்சத்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பே மாத்திரையை உட்கொள்ளலாம்.
- பயணத்தில் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்துவிட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்னேற்பாடு அவசியம்.
- ஷாப்பிங்கிற்கு தனியாக ஒருநாளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்திருக்காமல் பிடித்த பொருட்களை கண்டால் உடனடியாக வாங்கிவிடவும்.

சில DON'Ts
- கடற்கரைகளிளிருந்து சிப்பிகள், பவளப்பாறைகளை சேகரிக்க வேண்டாம். எப்படியும் விமான நிலைய சோதனையில் அகப்படுவீர்கள்.
- ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும். உதவியாளரின் கட்டளையை மீறி செயல்பட வேண்டாம்.
- கார்பின்’ஸ் கோவ் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகளை முதலை இழுத்துச்சென்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எச்சரிக்கை !
- நார்த் பே மற்றும் ஜாலிபாய் கடற்கரைகளில் உள்ள பவளப்பாறைகள் மீது கால்வைக்க வேண்டாம். அது அவற்றிற்கும் சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
- ஆதிவாசிகளை கண்டால் அவர்களை புகைப்படம் எடுக்கவோ, அவர்களுக்கு பொருட்கள் வழங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மீறினால் ஜாமீன் கிடைக்காதபடி சிறையில் தள்ளப்படுவீர்கள். உங்களை அழைத்துச்சென்ற சுற்றுலா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- குப்பைகளை, குறிப்பாக ப்ளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றாலும் கூட சுற்றுச்சூழலின் நன்மை கருதி குப்பை போடாமலிருப்பது நல்லது.
- போட்டோ, வீடியோ தடை செய்யப்பட்ட இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

பதிவில் விட்டுப்போன சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் கேட்கவும். அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் எனில் பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள், தொடர்பு எண்கள், பிற தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். செல்போன் எண்ணிற்கு அழைக்க வேண்டாம். அது பெரும்பாலும் உயிரற்ற நிலையில் தான் இருக்கும்.

அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 April 2013

அந்தமானில் நிறைவு நாள் - விமானப்பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கிட்டத்தட்ட பயணத்தொடரின் இறுதிக்கு வந்துவிட்டோம். கடைசியாக ஒருநாள் ஓய்வாக குடித்துக் களிக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தபோது நம் பயண கர்த்தா நம்மை அழைத்து, மவுண்ட். ஹேரியட் - சிடியா டாப்பு போயிட்டு வாங்க சார்... என்று அன்பொழுக கேட்டார். பணம் எதுவும் வாங்கவில்லை. வாங்குவதாக இருப்பின் ஐநூறு ரூபாய் வாங்கியிருக்கக்கூடும். காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு மதிய உணவை பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பினோம். முந்தய பதிவொன்றில் கண்ட சாத்தம் படகுத்துறையில் இருந்து சிறிய கப்பலொன்றில் புறப்பட்டோம். இருபது நிமிடப் பயணம். அதன்பின்பு சிறிது நேர மகிழ்வுந்து.


மவுண்ட் ஹேரியட் - பெயரைக் கேட்டதும் ஏதோ எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ ரேஞ்சுக்கு நினைத்து வைத்திருந்தேன். ஹேரியட் டெயிலர் என்கிற துரையம்மாவின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. 365மீ உயரம். எவரெஸ்டின் ஐந்து சதவிகிதம் கூட கிடையாது, எனினும் அந்தமானிலேயே உயரமான மலை. எரிமலை குழம்பு ஏதோ காணக் கிடைக்கப்போகிறது என்று நினைத்தவனுக்கு மறுபடியும் ஏமாற்றம் தான்; காரக்குழம்பு கூட கிடைக்கவில்லை. உண்மையில் அது காட்டுப்பகுதியில் ‘வியூ பாயிண்டுகள்' எல்லாம் வைத்து அமைக்கப்பட்ட சிறு பூங்கா. ஆனால் இயற்கை இயற்கையாகவே இருக்கக்கூடிய பகுதி. அமைதியான சூழல், அதனை லேசாக குலைக்க முயலும் பறவையின் கூக்குரல், அலாதியான காற்று என்று நாற்பதை கடந்தவர்களுக்கு உகந்த சூழல்.

சிடியா டாப்பு - என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. இது மறுபடியும் ஒரு கடற்கரை பகுதி. கடற்கரைக்கு செல்வதற்கு முன்பு உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஆனால் அதன் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. சிலவகை முதலைகள், மான்கள், குரங்குகள் மாத்திரம் காணக் கிடைக்கின்றன. அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ மேடுபள்ளங்கள் தாண்டி பயணித்தால் சிடியா டாப்பு கடற்கரை. இந்த கடற்கரைக்கு மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் சென்றால் விஷுவல் ட்ரீட். மற்ற கடற்கரைகள் போல பெரிய ஆரவாரங்கள் இருக்காது. குடும்ப பாங்கான கடற்கரை. SLR கேமராக்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல்.


அபெர்டீன் பஜார் - போர்ட் ப்ளேரின் அங்காடித்தெரு. அந்தமான் மக்களை பொறுத்தவரையில் பஜாரில் எல்லாமே கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும், சுற்றுலாப்பயணிகளுக்கு அது சரிப்பட்டு வராது. ஏனெனில் பஜாரில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் துணைக்கண்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை. விலை அதிகம், தரம் எதிர்பார்க்க முடியாது. தவிர, திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம், சாத்தூர் காராசேவு போல அந்தமானுக்கென்று ஸ்பெஷல் எதுவும் கிடையாது. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடைசி நாளில் ஷாப்பிங் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். அந்தமானை பொறுத்தவரையில் பிடித்த பொருளை சுற்றுலா தளங்களில் பார்த்தால் உடனே வாங்கிவிடுவது உத்தமம்.


அந்தவகையில் அந்தமானில் இருந்து வாங்கிவர உகந்த சில பொருட்கள் - அந்தமான் கடற்கரையின் படங்கள் பொறித்த டீ-ஷர்ட், மரத்தில் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகள், சிப்பியில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள். என்னுடைய கொள்முதலாக பன்னிரண்டு ஜரவா பொம்மைகளை வாங்கிவந்து உறவினர் இல்லங்களுக்கு கொடுத்தேன்.

*************************


அந்தமானை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளி செல்லும் மழலையின் மனநிலையில் தான் இருந்தேன். அதைவிட முதல் விமானப்பயணம் என்கிற படபடப்பு. ஏர் சிக்நெஸ் என்று கூகிளில் போட்டு தேடிக்கொண்டிருந்தேன். அன்றைய தினம் டிசம்பர் 26. சுனாமி நாள். நகரில் அதற்கான நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னுடைய விமான நேரம் காலை பதினோரு மணி. கோ ஏர். ஒன்பதரை மணிக்கெல்லாம் நிலையத்திற்கு சென்று அமர்ந்துவிட்டேன். விமான நிலையத்திற்கு கூட வீர சவார்க்கரின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். அந்தமானுக்கு கோ ஏர், ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா - ஆகிய நான்கு விமான சேவைகள் மட்டுமே உள்ளன. மலிவான மன நிறைவிற்கு கோ ஏரை தேர்ந்தெடுக்கலாம்.


என்னுடைய மூட்டை முடிச்சுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனக்கு முன்னர் பரிசோதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்கரையில் இருந்து சில அரிய வகை சிப்பிகளை பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்; ஸ்கேனிங் கருவி காட்டி கொடுத்துவிட்டது. விமான நிலைய பணியாட்களுக்கு தமிழ் தெரியாததால் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் சந்தேகங்களை கேட்டுக்கொண்டேன். என்னுடைய மூட்டை முடிச்சுகளையெல்லாம் சென்னைக்கு கொண்டு வந்திடுவீங்க தானே என்று நான்காவது முறை கேட்டபோதும் அவள் உதிர்த்த புன்னகை அழகாகத்தான் இருந்தது. பயணம் தொடங்க பதினைந்து நிமிடங்களே இருந்தன. பேருந்து ஒன்று எங்களை விமானத்திற்கு அருகாமையில் கொண்டு சென்றது.


வானில், வெகு தொலைவில் மட்டுமே பார்த்து ரசித்த விமானம். பழவந்தாங்கல், பரங்கிமலை பக்கம் விமானம் சற்று தாழ்வாக பறந்தாலே பரவசமடைவேன். அது இப்போது சில அடிகள் தொலைவில் நின்றுக்கொண்டிருக்கிறது. நான் அதில் பயணிக்கப்போகிறேன். விமானம் ஏறுவதற்கு முன்பே பறந்துக்கொண்டு தான் இருந்தேன். விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். தடதடவென படியேறினேன் - சென்னையில் கப்பலேறிய அதே வேகத்துடன். ஜன்னலோர இருக்கை வாய்த்திருந்தது. அலைபேசியில் உள்ள ஃப்ளைட் மோடை முதன்முறையாக பயன்படுத்தி பெருமை அடைந்தேன். எத்தனை சினிமாக்களில் சீட் பெல்ட் காமெடி பார்த்திருப்போம். அவ்வளவையும் பார்த்தும்கூட சீட் பெல்ட் மாட்டத்தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் நயன்தாராவோ, ஹன்சிகாவோ குறைந்தபட்சம் தனிஷ்கா முகர்ஜியாவது அமர்ந்திருந்தால் உதவி கேட்டிருக்கலாம். கெரகம், ஒரு வட இந்திய சோம்பப்டி அமர்ந்திருந்தான். பெருமுயற்சி எடுத்து இறுதியில் நானே அணிந்துக்கொண்டேன்.

கழுகுப்பார்வையில் அந்தமான் தீவுகள்

மணி பதினொன்றை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது. விமானம் இடமும், வலமுமாக திரும்பி ஏதோ விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென ரன்வேயில் நுழைந்து தடதடத்து உயரே எழும்பியது. அந்தமான் தீவுகளை விட்டு கடந்த சில நிமிடங்கள் கண்கொள்ளா காட்சி. கழுகுப்பார்வையில் குட்டி குட்டியாக தீவுகள் ! அதன்பிறகு கீழே வெண்பஞ்சு மேகங்களை தவிர வேறொன்றும் தெரியவில்லை. மேகங்களுக்கு இடையில் கூட எதுவும் தெரியவில்லை. ரிலேடிவ் ஸ்பீட் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதிவேக ரயிலில் செல்லும்போது வெளியே இருக்கும் மரம், செடி கொடிகளை பார்க்கும்போது தான் ரயிலின் வேகம் தெரியும். அருகிலேயே இன்னொரு அதிவேக ரயில் அதே வேகத்தில் பயணித்தால் இரண்டு ரயில்களும் நின்றுக்கொண்டிருப்பது போலவே தோன்றும். போலவே மிக மிக தொலைவில் பார்த்து பழக்கப்பட்ட மேகங்களை மிக அருகில் பார்ப்பதாலோ என்னவோ விமானம் ஏதோ அந்தரத்தில் நின்றுக்கொண்டிருப்பதாகவே தோன்றியது.

சிங்கார சென்னை
சென்னையை அடைய வேண்டிய நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருந்தேன். தீப்பெட்டி சைஸில் ஒரு பொருள் கீழே தெரிந்தது. ஹார்பரில் நிற்கும் கப்பல் என்று சோம்பப்டி அவனுடைய புது மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னது சரிதான், மெரீனாவின் விசாலமான கரையை கடந்து விமானம் சென்னைக்குள் நுழைந்துக்கொண்டிருந்தது. தரையிறங்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்குமோ ? பரமசிவன் படத்தில் லைலா முருகா முருகா என்று முனங்குவாரே. மறுபடியும் விமானம் இடமும் வலமுமாக ஏதோ ஆட்டம் காட்டி சின்ன ஜெர்க் கூட இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கிவிட்டது. முதல் வேலையாக அந்தமான் அங்கிளுக்கு போனை போட்டு கோட்டான கோடி நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.


விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் தோன்றிய உணர்வு - யப்பா என்னா வெய்யிலு !


அடுத்து வருவது: அந்தமான் பயணம் - அசத்தல் டிப்ஸ்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 08042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில் ஒரு நாள் - படம் பற்றியதல்ல. என்னுடைய பள்ளிப்பருவ நண்பர் ஒருவர் திடீரென முந்தய வாசகத்தில் குறிப்பிட்ட படத்திற்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பதாக அழைத்தார். நண்பர் என்னைப்போன்ற  ஏழைகளை தன்னுடைய டெபிட் கார்டை வைத்து சொறிந்துவிடக் கூடியவர். தங்க முட்டையிடும் வாத்து. அவருடைய அன்பின் பாதையில் சென்று S2 மாலில் சுற்றி ப்ளாக் ஃபாரஸ்ட், சாக்கோ லாவா கேக்கெல்லாம் வாங்கி சாப்பிட்டாயிற்று. அடுத்தது தாக சாந்தி. அங்கே இங்கே என்று சுற்றித்திரிந்து இறுதியில் கழுதை கெட்டா குட்டிச்சுவரு என்ற சொலவடைக்கு ஒத்து தி.நகர் ஈகிள் பாருக்கு சென்று அமர்ந்தோம். நண்பர் சிக்நேச்சர் தவிர்த்து வேறு எதையும் தொடுவதில்லை என்று தன்னுடைய வரலாற்று பெருமையை பேசிக்கொண்டிருந்தார். சிக்நேச்சர் டேபிளுக்கு வந்தது போல இருந்தது. அடுத்த நிமிடம் நண்பர் திரவத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு சைட் டிஷ்ஷை சாப்பாடு போல சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் இந்தமாதிரியான நண்பர்கள் வாய்க்கிறார்கள். என்னுடைய குணநலன்களுக்கு ஒத்திசைகிற நண்பர் வாழ்நாளுக்கும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எல்லோருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இயற்கையின் படைப்பில் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். இன்னமும் எனக்கான பரமனை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

*************************

ஜுராசிக் பார்க் 3Dயில் வெளிவந்திருக்கிறது. நான் முதன்முதலில் பார்த்த ஆங்கிலப்படம் அது தானென்று நினைக்கிறேன். என் வயதையொட்டிய இளைஞர்களில் பெரும்பான்மைக்கு ஜுராசிக் பார்க் படத்தின் மீதான சுவாரஸ்ய நினைவுக் குவியல் இருக்கக்கூடும். தேவி வளாக திரையரங்கங்கள் கிட்டத்தட்ட என்னுடைய ஹோம் தியேட்டர் போலாகிவிட்டன. வாரத்தில் ஏதாவது ஒரு படமாவது தேவியில் பார்த்துவிடுகிறேன். கூட்டமும் அதிகம் சேருவதில்லை என்பதால் ஏதோ எனக்கு மட்டும் ஸ்பெஷலாக திரையிடுவது போன்ற உணர்வு தோன்றி உற்சாகமூட்டுகிறது. ஜுராசிக் பார்க்கை தேவி பாலாவில் பார்த்தேன். நான்கைந்து ஆங்கில 3D படங்களின் ட்ரைலர் காட்டினார்கள். அத்தனையும் அசத்தலாகவே இருக்கின்றன. அவற்றை புரிந்துக்கொள்ள வேண்டியாவது ஆங்கிலம் கற்க வேண்டும். திரையரங்குகளில், ஒரு கையெழுத்து, மாறியது தமிழனின் தலையெழுத்து என்று ஒரு செய்திப்படம் போடுகிறார்கள். அதைப்பார்க்கும்போது புகையிலை தரக்கூடிய கொடிய... மிகவும் கொடிய நோய் அப்படியொன்றும் அருவருப்பாக தோன்றவில்லை. நல்லவேளை முகேஷ் இதையெல்லாம் பார்ப்பதற்கு உயிரோடு இல்லை. தமிழில் டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் பம்மாத்து போலவே ஹாலிவுட்டில் 3D டக்கால்ட்டி போல. எனினும், 3D நுட்பம் தாண்டி கிளாசிக் சீரியஸ் என்பதற்காக டைட்டானிக், ஜுராசிக் பார்க் போன்றவைகளை மறுபடி பார்க்கலாம். அநேகமாக அடுத்த மாதத்தில் ஷெர்லின் சோப்ராவின் இயல்பான நடிப்பில் காமசூத்ரா 3D வெளியாகக்கூடும்.

*************************

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு ஏதோவொன்றை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. உதாரணத்திற்கு நீயா நானா. சில சமயங்களில் சில்லறைத்தனமான தலைப்புகளை ஒட்டி விவாதம் நடந்தாலும் கூட அதிலிருந்து ஒன்றிரண்டு படிப்பினைகளாவது கிடைத்து விடுகின்றன. நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு பேர் பேசியது எனக்கு மனதளவில் தெளிவைக் கொடுத்தது. முதலாவது, 56 இடங்களில் நேர்முகத்தேர்விற்கு சென்று வேலை கிடைக்காமல் 57வது இடத்தில் பணம்கட்டி ஏமாந்து தற்கொலைக்கு முயன்று மீண்ட இளைஞர். ஒருமுறை தற்கொலைக்கு முயன்றாலும் கூட, பணம் கட்டி ஏமாந்தாலும் கூட, தற்போது அத்தகைய குழப்பங்களில் இருந்து மீண்டு தீர்மானமான வாழ்க்கையை எட்டியிருக்கும் அந்த இளைஞர் என்னுடைய கண்களுக்கு சாதனையாளராகவே தெரிகிறார். நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறவிருந்த தற்கொலை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

இரண்டாவது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட திருநங்கை. நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கிற திருநங்கைகள் எப்படியிருக்கிறார்கள். பகலில் ரயிலில் கைதட்டி பிச்சை எடுக்கிறார்கள், மாலையில் டாஸ்மாக்கில் குடித்துக் களிக்கிறார்கள், இரவில் சப்வேக்களுக்கு அருகில் நின்று அழைக்கிறார்கள். சரி, அதைப்பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். ஊடகங்களில் வெளிப்படும் திருநங்கைகள் தங்களுக்கென்று ஒரு துக்க பிலாசபி வைத்திருப்பார்கள். எங்களுக்கும் மனசிருக்கு என்பது போன்ற நெஞ்சை அடைக்கும் துக்கம் கலந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவராக தெரிந்தார். எவ்வளவு நாள் தான் நானும் செண்டிமெண்டாவே ஃபீல் பண்ணுறது என்று கேட்டு, மிகவும் ஹாஸ்யமாக தன்னுடைய வித்தியாச அனுபவங்களை சில நிமிடங்கள் பகிர்ந்துக்கொண்டார். அவர் தன்னுடைய ஞான நிலையை அடைய எத்தனை இன்னல்களை கடந்து வந்திருப்பார் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற திருநங்கைகள் அவரை ஒரு முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம்.

*************************

தொண்டை மண்டலத்தைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த விஜய நகரப் பேரரசில் ராயர் என்ற கன்னட பிராமணர்கள் பலர் முக்கியப் பதவிகளை வகித்தனர். ராயர்களுக்கு அதன் பொருட்டு அரசு மானியமாக அளித்த சென்னையின் வடக்குப்பகுதி ராயர்கள் வசித்த ராயர்புரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி ராயபுரம் ஆனது. ராயபுரம் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை உயர் வகுப்பினர் வசிக்கும் செல்வபுரியாய் இருந்த செய்தி இன்று பலருக்கும் தெரியாது. வசதிமிக்க பார்சி இனத்தவரும், ஆங்கில கனவான்களும் சிரும்பி வசித்த கடற்கரையுடன் கூடிய ராயபுரத்தின் கடந்தகாலம் அடங்கிவிட்ட பேரலையாய் நம்முன் நிற்கிறது. (ராயபுரம் பற்றி நம்ம சென்னை ஏப்ரல் மாத இதழில்...)

*************************

உலகிலேயே அருவருப்பான உணவுகள் என்று சில உள்ளன; போலவே குரூரமான முறையில் தயார் செய்யப்படும் உணவுகள் சில உள்ளன. மேற்கூறிய இரண்டு பட்டியலிலும் இடம்பெற தகுதியுள்ள ஜப்பானிய மீன் உணவுவகை - இகிஸுகுரி. உணவகத்தில் ஒரு தொட்டியில் மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மீனை காட்டினால், உடனடியாக சமையல் வல்லுநர் அதனை பிடித்து உயிருடன் சமைத்துக் கொடுப்பார். உயிருடன் எப்படி சமைப்பது ? பார்க்க காணொளி:


இப்ப சொல்லுங்க, இனிமேல் தியேட்டரில் முகேஷை பற்றிய செய்திப்படம் போடும்போது கண்ணை மூடிக்கொள்வீர்களா ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment