வணக்கம் மக்களே...
கொஞ்சம் லேட் விமர்சனமே. நேற்றுதான் பார்த்தேன். பாசிடிவ் விமர்சனம் எழுதுவதா...? நெகடிவ் விமர்சனம் எழுதுவதா....? என்று சத்தியமாக தெரியவில்லை. எனவே என் எண்ணத்தை அப்படியே பதிவு செய்கிறேன். அது எப்படிப்பட்ட விமர்சனம் என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
திரைக்கு முன்...
திரையரங்கத்திற்குள் நுழையும்போது சூர்யா பாடல் உட்பட பத்துநிமிட படம் முடிந்திருந்தது. அதைவிட பெரிய காமெடி, திரையரங்கில் வெறும் ஆறு பேர் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா...? ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது. மூன்று அரங்கம் கொண்ட அம்பத்தூர் முருகன் காம்ப்லெக்சில் காலை 9 மணிக்காட்சிக்கு சென்றிருந்தோம். நாங்கள் அரங்கம் மாறி அமர்ந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். மொத்தத்தில் அறுநூறு பேர் அமர்ந்து படம் பார்க்கும் இடத்தில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். இடைவேளை கூட விடாமல் தொடர்ச்சியாக ரீல் ஒட்டிவிட்டார்கள். நடுவில் ஒருமுறை மட்டும் சிறுத்தை ட்ரைலர் காண்பிக்கப்பட்டது.
சிறுத்தை – முன்னோட்டம்
மறுபடியும் ஒரு போலீஸ் கதை. அண்ணனின் காக்க காக்க, சிங்கம் போன்ற படங்களை எல்லாம் ஒரே படத்தில் தம்பி தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல. அப்படி ஒரு விறைப்பு நம்ம சிறுத்தைகிட்ட. (தேள் எதுவும் கொட்டக்கூடாத இடத்தில் கொட்டிடுச்சு போல). அதுலயும் டபுள் ஆக்ஷன். இன்னொருவர் வழக்கம்போல தமிழ்சினிமாவின் வேலைவெட்டி இல்லாத இளைஞன். தெலுங்கு விக்ரமாற்குடு ரீமேக்காம். வெளங்கிடும்.
சரி இப்போ நம்ம மன்மதன் அம்புவுக்கே போவோம்...
கதைச்சுருக்கம்
ஏற்கனவே பல வலைப்பூக்களில் படித்த அதே வாடிப்போன கதைதான். அதாவது நடிகை நிஷாவும் பிரபல தொழிலதிபர் மதனகோபாலும் காதலிக்கிறாங்க. அவர்கள் காதல், திருமணத்தை நெருங்கும் வேளையில் மதனகோபால் நிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மேஜர் மன்னார் மூலமாக அவரை வேவு பார்க்கிறார். தனது பொருளாதார சூழ்நிலை காரணமாக மேஜர் மன்னார் கொஞ்சம் தகிடுதத்தோம் போட மதனகோபாலும் நடிகை நிஷாவும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.
இதில் மேஜர் மன்னார் அவரது மனைவியை விபத்தில் இழந்த கதை, அந்த விபத்துக்கு காரணம் யார், புற்றுநோயால் அவதிப்படும் மேஜர் மன்னாரின் நண்பர், நடிகை நிஷாவின் தோழி தீபாவின் குடும்பம், மதனகோபாலின் அத்தைப்பெண் சுனந்தா என்று சில கிளைக்கதைகள்.
முக்கிய நடிகர்கள்
- மேஜர் மன்னார் கதாப்பாத்திரத்தில் கமல். வழக்கமான கமல் படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் கமலின் டாமினேஷன் ரொம்பவும் குறைவே. அடக்கி வாசித்திருக்கிறார். கமல் அறிமுகமாகும் காட்சி தவிர்த்து சண்டைக்காட்சி என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. தகிடுதத்தோம் பாடலில் கமல் போட்டது ஒரே ஒரு ஸ்டெப் தான் என்றாலும் அது கமல் ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறது.
- அம்புட்டு அழகு அம்புஜாஸ்ரீ (எ) நடிகை நிஷாவாக த்ரிஷா. ரொம்ப நல்லவங்க. தமிழில் கவிதைகள் எழுதும் தமிழ் நடிகை என்று சொல்லி நம்மை ஏமாற்ற முயல்கிறார். மேலும் சினிமா நடிகைகள் எல்லாம் இவ்வளவு நல்லவங்களா என்று யோசிக்க வைக்கும் ஒரு பாத்திர படைப்பு.
- தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். ஹீரோ போல அறிமுகமாகி, பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை போல தடம் மாறி, வில்லனாக உருவெடுத்து இறுதியில் ஒரு இரண்டாம் நாயகனாக முடிக்கிறார். பாதி படத்தில் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே வளம் வருகிறார். போதையில் இருப்பவர்களின் பேச்சுமுறை மற்றும் பாடி லாங்குவேஜ் காட்டுவதில் கலக்கியிருக்கிறார்.
மற்றும் பலர்
- சங்கீதா. கமலுக்கு அடுத்து படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று குறிப்பிடலாம். ஆரம்பத்தில் லோலாயி போல அறிமுகமாகி போகப்போக நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
- இந்த வரிகளை எழுதுவதற்கே வேதனையாக இருக்கிறது. ஊர்வசி – ரமேஷ் அரவிந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்படியே என் அம்மா அப்பாவை நினைவுப்படுத்தி பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்கலங்க வைத்தது. அதிலும் ஹீமொதேரபி, ரேடியேஷன் போன்ற வார்த்தைகள் என்னை பாடாய்ப்படுத்தியது.
- அடப்பாவிகளா ஒரு அழகு ஓவியத்தையே வீணடித்திருக்கிறார்கள். நம்ம களவாணிப்பொண்ணு ஓவியா இரண்டே இரண்டு காட்சிகளில் தலை காட்டி இருக்கிறார். இந்த மாதிரி எல்லாம் வந்துபோனா தமிழ் சினிமாவில் துண்டு போட முடியாது அம்மணி.
- குருப் என்ற கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. கொச்சின் ஹனீபா இருந்திருந்தால் இந்த கேரக்டரை அல்வா மாதிரி தூக்கி சாப்பிட்டிருப்பார். இப்போது நடித்திருக்கும் குஞ்சன் என்ற நடிகரின் நடிப்பும் ஹனீபாவையே நினைவூட்டுகிறது.
- பிரெஞ்சு நடிகை கரோலின் கமலின் மனைவியாக ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுகிறார். வித்தியாசமான ஒரு பாத்திரத்தில் பாடகி உஷா உதுப்.
- சூர்யா ஒரே ஒரு பாடலில் நடிகர் சூர்யாவாகவே வருகிறார். இயக்குனரும் இசையமைப்பாளரும் ஆளுக்கொரு காட்சியில் தலை காட்டுகிறார்கள்.
பிண்ணனி தொழில்நுட்பங்கள்
- இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் தெரியவே இல்லை சில காட்சிகளை தவிர்த்து. பல காட்சிகள் கமல் படம் என்று சொல்லும் அளவிலேயே இருக்கிறது.
- தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நீலவானம் பாடல் இனிமை. தகிடுதத்தோம் பாடல் முன்னர் குறிப்பிட்டது போல நம்மையும் தகிடுதத்தோம் போட வைக்கிறது.
- வசனங்கள் கலக்கல். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் வசனங்களை எல்லாம் பலமுறை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்க வேண்டுமென தோன்றுகிறது.
- பாரிஸ், பார்சிலோனா, ரோம், வெனிஸ் என்று ஐரோப்ப நாடுகளை சுற்றிக்காட்டியிருக்கிறது மனுஷ் நந்தனின் கேமரா. கப்பல் காட்சிகளும், நீல வானம் பாடலமைப்பும் சபாஷ்.
படம் சொல்லும் கருத்துக்கள்:
கொஞ்சம் சீரியஸ்:
- வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பது. வீரத்தின் உச்சக்கட்டம் மன்னிப்பு கேட்பது.
கொஞ்சம் சிரிப்பு:
- சிட்டி பொண்ணுங்களை சைட் அடிங்க. வில்லேஜ் பொண்ணுங்களை மேரேஜ் பண்ணுங்க.
பஞ்ச் டயலாக்:
- பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும்.
ரசிகனின் தீர்ப்பு:
கமலின் முழுநீள நகைச்சுவைப்படங்கள் பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களுடன் ஒப்பிடும்போது மன்மதன் அம்பு கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. மாறாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தோடு ஒப்பிட்டால் தேவலை. முதல்பாதி நிறைய செண்டிமெண்டாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவை கொட்டிக்கிடக்கிறது.
கமல் ரசிகன் என்ற முறையில் பார்த்தால் ரசிக்கலாம். மற்றபடி சந்தேகம்தான்.
மன்மதன் அம்பு – குறி தவறிவிட்டது
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Post Comment