அன்புள்ள வலைப்பூவிற்கு,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதிய
இரண்டு (குறு)நாவல்களை படித்தேன். குடும்ப நாவல் ஜி.அசோகன் இவற்றை மீள் பிரசுரம்
செய்திருக்கிறார். முதல் நாவல் வெறும் 90 சிறிய பக்கங்கள். மீதிப்பக்கங்களை
ஜெயலலிதா இரங்கல் கட்டுரைகள் (கீழே இப்படிக்கு தமிழக மக்கள் என்று எழுதப்பட்ட
இரங்கல் கட்டுரையை உண்மையாக எழுதியவர் கிடைத்தால் கையை உடைக்க வேண்டும்), ஜெயலலிதாவின்
பழைய சினிமா புகைப்படங்கள், ஜெயலலிதா பற்றிய துணுக்குச் செய்திகள், கட்டுரைகள்,
அவர் மேடைகளில் சொன்ன குட்டிக்கதைகள் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கிறார்கள். சில
விஷயங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. குறிப்பாக ஜெயலலிதா சொந்தக்குரலில் சில பாடல்கள்
பாடியிருக்கிறார் என்பதும், அதுவும் அடிமைப்பெண் அம்மா என்றால் அன்பு பாடலை
பாடியவர் ஜெயலலிதா என்பதும் ஆச்சர்யம். ஜெயலலிதா எழுதிய நாவல்களை பேருந்தில் வைத்து
படித்தால் பார்ப்பவர்கள் எங்கே வாங்கினீர்கள் ? எப்போது வாங்கினீர்கள் ?
என்றெல்லாம் கேட்டு கண் வைக்கிறார்கள்.
முதல் நாவலின் பெயர் ஒருத்திக்கே
சொந்தம். எந்தவித விசேஷங்களும் இல்லாத தட்டையான, ஆணாதிக்க சிந்தனை கொண்ட நாவல்.
ரவிக்கும் பத்மினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் கடிதங்களில்
காதல் புரிகிறார்கள். திருமணம் நின்றுவிடுகிறது. காலப்போக்கில் ரவி சினிமாவில்
பெரிய ஸ்டார் ஆகிவிடுகிறான். அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமும்
நடந்துவிடுகிறது. இந்நிலையில் அவனது வாழ்க்கையில் பத்மினி மீண்டும் வருகிறாள்.
பழைய காதலை மறக்காத ரவி பத்மினியையும் மணமுடித்து, மனைவியையும் தக்க
வைத்துக்கொள்ளும் பயங்கரமான கதை. கேட்பதற்கே ரொம்ப மொக்கையாக இருந்தாலும் அந்த
காலக்கட்டத்தில் வெளிவந்த பல கருப்பு – வெள்ளை திரைப்பட கதைகளுடன் ஒப்பிடும்போது
ஒருவேளை இதனை சினிமாவாக எடுத்து எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – லதா (அல்லது டபுள் ஜெயலலிதா) நடித்திருந்தால் படம்
வெற்றிவிழா கண்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
இரண்டாவது நாவல் உறவின் கைதிகள். ராஜீவ்
என்ற ஒரு பிரபல சினிமா நடிகனைப் பற்றிய கதை. ஒரு வகையில் பார்த்தால் முதல் நாவலில்
வரும் ரவியின் வாழ்க்கையில் இடையில் வரும் சம்பவங்களை ராஜீவின் கதை என்று
எடுத்துக்கொள்ளலாம். அல்லது ரவியின் கதையின் மற்றொரு கோணம். ஒரு பாதி கதை
முடியும்போதே இது எங்கே போய் முடியப்போகிறது என்று ஓரளவிற்கு யூகித்துவிட
முடிகிறது. ஆனால் சேச்சே எழுதியிருப்பது ஜெயலலிதா அப்படியெல்லாம்
பாலச்சந்திரத்தனமாக எழுதியிருக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டே படித்தேன். என்
நம்பிக்கை பொய்யானது. ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் எழுதியிருந்தாலும் இது
பிரசுரிக்க தகுதியில்லாத, பிரசுரம் ஆகக்கூடாத ஒரு கேவலமான நாவல். ஒருவகையான குரூர
மனப்பான்மை கொண்டவரால் மட்டுமே இது மாதிரி கதைகளை எல்லாம் கற்பனை செய்ய முடியும்.
இப்போது என் கவலை என்னவென்றால் என் மேஜையில் இருக்கும் சில புத்தகங்களை என் அம்மா
அல்லது அப்பா படிப்பார்கள். ஒருத்திக்கே சொந்தம் நாவலை என் அம்மா படித்துவிட்டார்.
அடுத்து உறவின் கைதிகளையும் படிப்பதற்கு முன் அதனை எரித்துவிட வேண்டும்.
சில அரியப்படங்களை யூடியூபில் தேடிப்
பார்த்து வருகிறேன். அந்த வரிசையில் பார்த்தது பொன்னி. 1976ல் வெளியான மலையாள சினிமா.
கமலஹாசன், லக்ஷ்மி நடித்தது. மலையட்டூர் ராமகிருஷ்ணன் எழுதிய பொன்னி நாவலின்
திரைப்பட வடிவம் இது. பொன்னி நாவல் அல்லது சினிமா சொல்ல நினைத்த விஷயங்கள் – 1.
ஆதிவாசி இன குழுக்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. கலப்பு மணம் புரிவதில்
தவறில்லை. 2. காடுகளை அழிப்பது தவறு, 3. ஆதிவாசி மக்களுக்குள் மூடநம்பிக்கைகள்
இருக்கக்கூடாது. ஆனால் உண்மையில் படம் இந்த விஷயங்களில் இருந்து தடம் புரண்டு கமல்
– லக்ஷ்மி ரொமான்ஸ் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் நாம் ஏதாவது
பி-கிரேடு படம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்று சந்தேகமே வந்துவிட்டது.
அந்தக்கால கமல் ரசிகைகளுக்கு செமத்தியான படம். படம் முழுக்க சட்டையில்லாமல் தான்
வருகிறார். இதிலே ரொமான்ஸ் காட்சிகளுக்கு டப்பிங்கில் முக்கல், முனகல் வேறு
சேர்த்திருக்கிறார்கள். 1960ல் கேரளாவில் ஒரு பணிபுரிந்த ஒரு சப்-கலெக்டர் தான்
பார்த்த சம்பவங்களை கதையாகச் சொல்லி அதனை மலையட்டூர் ராமகிருஷ்ணன்
எழுதியிருக்கிறார். தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த பொன்னியின் தமிழ் பெயர்
கொல்லிமலை மாவீரன் !
தற்போது யுவல் நோவா ஹராரி எழுதிய
சேபியன்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். (ஞாபகமிருக்கிறதா ? கமலஹாசன் பரிந்துரைத்த
புத்தகம்). 2011ம் ஆண்டு ஹிப்ரு மொழியில் வெளியாகி உலகெங்கிலும் வரவேற்பைப்
பெற்று, 2014ல் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. விரைவில் தமிழிலும் வெளிவரும்.
முப்பது பக்கங்கள் தாண்டிவிட்டேன். முன்னூறு பக்கங்களில் எழுத வேண்டிய விஷயங்களை
கேப்ஸ்யூலில் அடக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மையச்சரடு இதுதான். ஒரு காலத்தில்
பூமியில் நியாண்டர்தால், டெனிசோவன் உட்பட பல்வேறு மனித இனங்கள் இருந்தன. அவற்றை
எல்லாம் அழித்து நம்முடைய ஹோமோ சேபியன்ஸ் மட்டும் பிழைத்திருக்கிறார்கள். பொதுவாக
வெளிநாட்டு ஆங்கில புத்தகங்கள் என்றால் படிப்பதற்கு கடினமானதாக இருக்கும். ஒவ்வொரு
வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும் களஞ்சியத்தில் தேடிக் கண்டுணர வேண்டும்.
சேபியன்ஸில் அந்த சிக்கல்கள் எதுவுமில்லாமல் பளிங்கு மாதிரி புரியக்கூடிய எளிமையான
ஆங்கிலம். ஆரம்பநிலை ஆங்கில வாசிப்பாளர்கள் கூட தயங்காமல் வாங்கிப் படிக்கலாம்.
ராகவா லாரன்ஸ் படங்கள் எதுவும் எனக்கு
பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவருடைய படங்களில் ஒன்றை மட்டும்
கேரண்டியாக எதிர்பார்க்கலாம். நல்ல டான்ஸ் மற்றும் கிளாமர் இரண்டும் கொண்ட பாடல்
ஒன்று கண்டிப்பாக இருக்கும். காஞ்சனாவில் கருப்பு பேரழகா, காஞ்சனா 2வில் டாப்ஸி
கருப்புப் புடவையில் பேரழகியாக வரும் பாடல்களைச் சொல்லலாம். மொட்ட சிவா கெட்ட
சிவாவில் அதுமாதிரி இரண்டு பாடல்கள் இருக்கின்றன.
ஒன்று, ஹரஹர மஹாதேவகி. அப்பப்பா
ராய் லட்சுமி ! நெய்யில் செய்ப்பட்ட சிலை போல
இருக்கிறார். எவ்வளவு இறக்கம் காட்ட முடியுமோ அவ்வளவு காட்டியிருக்கிறார்.
லாரன்ஸுடன் போட்டி போட்டுக்கொண்டு டான்ஸும் ஆடியிருக்கிறார். இரண்டாவது, ஆடலுடன்
பாடலை ரீமிக்ஸ். இதிலே நிக்கி கல்ராணி வருகிறார். இதிலே நிக்கியின் கிளாமரை விட,
லாரன்ஸின் டான்ஸை விட, ஷங்கர் மஹாதேவனின் கின்னென்ற குரல்தான் அதிகம் ஈர்க்கிறது.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|