அன்புள்ள வலைப்பூவிற்கு,
புத்தகக்காட்சியில் நித்தியானந்தா கடையில் நுழைந்து ஆனந்த
கீர்த்தன் என்ற ஒலிநாடா வேண்டுமென கேட்டு, அவர்கள் ஒரு கொட்டையை கொடுத்து
அனுப்பியதை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி. அடுத்த வாரம் சொல்லி வைத்திருந்த
ஒலிநாடா வந்துவிட்டதா என்று கேட்பதற்காக சென்றிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவில்லை.
அதற்கு பதிலாக இன்னொரு கொட்டையையும் கொடுக்க முயற்சித்தார்கள். அய்யா, போன வாரமே
வாங்கியாயிற்று என்று சொல்லி தப்பித்துவிட்டேன். என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அவர்கள் என்னை விடமாட்டார்கள் போல. சென்ற வாரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு
வந்தது. நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து பேசுறோம் என்றது ஒரு அம்மையார் குரல்.
வார்த்தைக்கு வார்த்தை அடியேனை அய்யா என்று விளித்தார். ஏற்கனவே அவர்களிடம்
என்னுடைய முகவரி கொடுத்திருந்தேன். அதை வைத்துக்கொண்டு அய்யா, திருவான்மியூரில்
வகுப்பு நடக்குது. வந்தீங்கன்னா வகுப்பில் கலந்துக்கிட்டு சிடியையும் வாங்கிட்டு
போயிடலாம் என்றார். என்ன வகுப்பு என்று தெரியவில்லை. அம்மாடி நான் வசிப்பது
திருவான்மியூர் அல்ல, திருவொற்றியூர். அது தெற்கு, இது வடக்கு என்று சொல்லி
புரியவைத்தேன். அப்படியும் அம்மையார் விடுவதாக இல்லை. விரைவில் மணலியில் வகுப்பு
நடைபெற இருப்பதாகச் சொல்லி கலந்துகொள்ள பணித்திருக்கிறார். பேசாமல் ஒரு எட்டு
போய்தான் பார்த்துவிடலாமா என்றுகூட தோன்றுகிறது. நகிர்தனா திரனனா னா...!
*
ஐ.பி.எல் ஜூது ஏலத்தை பார்த்து கடுப்பாகிவிட்டது. நிறைய நல்ல வீரர்களை
யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானை ஆட்டத்தில்
சேர்த்துக்கொள்வதே இல்லை. சென்றமுறை நிகழ்ந்த கூத்துகளுக்காக இலங்கை வீரர்களை
யாரும் பெரிதாக சீண்டவில்லை. இங்கிலாந்து வீரர்களை ஏன் தவிர்க்கிறார்கள் என்றுதான்
புரியவில்லை. போனியாகாத வீரர்களில் Rusty Theron என்பவர் எனக்கு முக்கியமானவராக
தோன்றுகிறார். அபாரமான மிதவேக பந்து வீச்சாளர். குறிப்பாக இறுதி நேரத்தில்
சிறப்பாக பந்து வீசக்கூடியவர். ஏற்கனவே ஹைதரபாத் அணிக்காகவும் (டெக்கான் கிரானிக்கல்
வசமிருந்தபோது), பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். அசம்பாவிதமாக தெரான் ஐ.பி.எல்லில்
அதிக போட்டிகளில் சோபிக்கவில்லை. இருப்பினும் சில போட்டிகளில் அபாரமாகவும், மற்ற
போட்டிகளில் மோசமில்லை என்ற வகையிலும் தான் விளையாடியிருக்கிறார். தற்சமயம் கொள்ளை
விலைக்கு வாங்கியிருக்கும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களை விட தெரான் எவ்வளவோ பரவாயில்லை.
அதே போல பேட்ஸ்மேன்களில் Richard Levi. ஏற்கனவே மும்பைக்காக விளையாடியிருக்கிறார்.
லெவிக்கு கிடைத்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தென் ஆப்பிரிக்க உள்ளூர்
போட்டிகளை பொறுத்தமட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். தென் ஆப்பிரிக்கா
அணியைப் போலவே, அதன் விளையாட்டு வீரர்களுக்கும் ராசி இல்லையோ என்னவோ...? அவரைத்
தவிர்த்து Cameron White, David Hussey, Jesse Ryder போன்றவர்களும் விலை
போகவில்லை. ஆசிஷ் நெஹ்ராவை சென்னை வாங்கியிருக்கிறது. ஆனால் முனாப் படேல்,
ஆர்.பி.சிங் போன்றவர்களை யாரும் வாங்கவில்லை. இருக்கட்டும் ப்ரீத்தி ஜிந்தா
இருக்கும்வரையில் நமக்கு கவலையில்லை.
*
விஜய் டிவியில் Connexions என்றொரு நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிறு மதியம்
ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்
நேரத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு தவறாமல் பார்க்கிறேன். ஹண்ட் ஃபார் ஹின்ட்
பாணியில் ஆனால் அதிக கஷ்டமில்லாமல் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் சுற்றில்,
இரண்டு புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. இரண்டிற்கும் பொதுவான வார்த்தையை
கண்டுபிடிக்க வேண்டும். வார்த்தை ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இரண்டும் கலந்தும்
இருக்கலாம். மற்ற சுற்றுகளும் இதே போல புகைப்படங்களை வைத்து தான். முக்கியமாக
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நண்டு ஜெகன் போட்டியாளர்களை நன்றாக கலாய்த்து
தள்ளுகிறார். அதே சமயம் போட்டியாளர்கள் யாராவது டென்ஷன் ஆகிவிட்டால் அந்த
சூழ்நிலையை நன்றாக கையாள்கிறார். சென்ற வாரத்தில் தொலைக்காட்சி நடிகை சூசன் ஒரு
போட்டியாளராக கலந்துகொண்டார். ஒரு கட்டத்தில் சூசன் துப்பட்டா அணிந்திருந்த பாங்கை
ஜகன் கிண்டலடித்தார். சூசன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்துவிட்டார். இதுவே விஜய்
டிவியின் வேறு நிகழ்ச்சியாக இருந்தால் இதையே சாக்காக வைத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை
உயர்த்தியிருப்பார்கள். ஆனால் ஜகன் சாமர்த்தியமாக பேச்சை மாற்றி நிலைமை மோசமாவதை
தவிர்த்துவிட்டார். Connexions முடிந்ததும் ஒளிபரப்பாகும் நடுவுல கொஞ்சம்
டிஸ்டர்ப் பண்ணுவோம் என்ற நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது.
*
இப்போது கனெக்ஷன்ஸ் பாணியில் சில கேள்விகள்.
One by Two: இரண்டு படங்களுக்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க
வேண்டும்.
Joint Family: இரண்டு அல்லது மூன்று படங்கள் குறித்த
வார்த்தைகளை சேர்த்து விடை கண்டுபிடிக்க வேண்டும்.
மொக்கையாக இருப்பின் தனிமடலுக்கு வந்து திட்டவும். நன்றாக இருந்தால்
தெரியப்படுத்தவும். வாராவாரம் தொடரலாம்.
*
பிரியாணியில் இடம்பெற்ற மிஸ்ஸிஸிப்பி பாடல் தான் ரீப்பீட்டில்
ஓடிக்கொண்டிருக்கிறது. ஒளி வடிவத்தில் மந்தி டக்கராக செய்த வேலையை ஒலி வடிவத்தில்
ப்ரியா ஹிமேஷ் செய்திருக்கிறார். கடைசி காலத்தில் வாலி எழுதிய பாடலில் கூட
வாலிபால் விளையாடியிருக்கிறார்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|