19 January 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

இக்கட்டுரையின் விசேஷம் என்னவென்றால் இதனை நீங்கள் புத்தகத்தின் தலைப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது இக்கட்டுரையின் சாராம்சமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒன்றுமில்லை, ஜோக். வேண்டாமா ? சரி ! 

மயிலன் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது ஒரு பார்வையற்றவன் யானையைத் தழுவிப் பார்த்து கற்பனை செய்வது போல அந்நாவல் எப்படி இருக்கும் என்று சில அனுமானங்கள் வைத்திருந்தேன். சுருங்கச் சொல்வதென்றால் இலக்கிய உலகிற்கு இன்னொரு சரவணன் சந்திரன் (இது பாராட்டு !) வருகை தரவிருக்கிறார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது அப்படி இல்லாமல், யாரைப் போலவும் அல்லாமல் தனித்துவமாகக் களமிறங்கியிருக்கிறார் மயிலன் ! 

நாவலின் முதல் வரியே பிரபாகரனின் தற்கொலையில் தான் துவங்குகிறது.  

ஒருவேளை நீங்கள் புத்தகங்களில் பிடித்தமான வரிகளை அடிக்கோடிட்டு படிக்கும் பழக்கம் உடையவரென்றால் இந்தப் புத்தகத்தில் பக்கத்திற்கு ஒரு வரியையாவது அடிக்கோடிட வேண்டியிருக்கும். அத்தனை தத்துவார்த்தமான வரிகள் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.  

பொதுவாகவே எந்த புனைவிலக்கியம் படித்தாலும் அதனை சினிமா படங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் இரண்டு திரைப்படங்களை நினைவூட்டுகிறது. ஒன்று, அர்ஜுன் ரெட்டி. இதுவரை நான் அர்ஜுன் ரெட்டி / ஆதித்ய வர்மா பார்க்கவில்லை என்பது வேறு விஷயம். அப்புறம் எப்படி அர்ஜுன் ரெட்டியை நினைவூட்டுகிறது என்றால் பெரும்பான்மை நேரம் ஃபேஸ்புக்கில் உழல்வதால் சின்ராசின் கூட்டத்துக்கு போகாமலேயே சின்ராசு சொன்ன பழமொழியை மனப்பாடமாக சொல்லும் பயிற்சியைப் பெற்றுவிட்டேன். அந்த வகையில் பிரபாகரின் சில குணங்கள் அர்ஜுன் ரெட்டியுடன் ஒத்துப்போவதாக அறிகிறேன். இரண்டாவது, ஒத்த செருப்பு. குற்ற விசாரணை பாணியில் அமைந்திருந்த அத்திரைப்படத்தின் துவக்கத்தில் ஏராளமான கேள்விகள் பார்வையாளர்கள் மனதில் எழும். பார்த்திபன் மட்டும் கதையை விவரித்துக்கொண்டே வருவார். போகப் போக ஒவ்வொரு கேள்விக்கும் விடை கிடைக்கையில், அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். அதே போல இந்நாவலும் மயிலனின் முதல்-நபர் விவரணையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றியே நகர்கிறது. 

இந்நாவலில் வரும் பிரபாகரன் என்ற பெயர் மட்டுமல்ல, அந்த பிரபாகரனே நான்தான் என்று மனப்பூர்வமாக உணரும் வகையில் அந்த கதாபாத்திரத்தை என் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். அக்கதாபாத்திரத்தின் எதிர்மறை குணங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். நான்தான் அந்த பிரபாகரன் ! 

இந்நாவலில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பகுதிகளைக் குறிப்பிடுகிறேன். ஸ்பாய்லர் வேண்டாம் என்பவர்கள் இத்துடன் விடைபெறலாம். 

பிரபாகரனின் தற்கொலைக்குப் பிறகு. நாவலிலிருந்து – 

பொதுஜனமாக இருந்தால் அந்த உடல் திரையரங்கத்திலிருந்து நேராகப் பிணவறைக்குத்தான் கொண்டு செல்லப்பட்டிருக்கும். ஒரு மருத்துவனின் உடல் என்பதால் அங்கு உருவான உணர்ச்சிப்பெருக்கில், தாங்கள் எல்லோரும் அறிவியல் தர்க்கங்களை ஓரங்கட்டிவிட்டு, இறந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியிருந்த அந்த பூத உடலை, அங்கு நிலவிய ஏக்கமும் அதிர்ச்சியும் தணியும் வரை, நிகழ்ந்து முடித்த நிஜத்தின் சாரம் உரைக்கும்வரை, சுவாசமளித்தும் இருதயத்தை அழுத்தியும் தவிர்க்கமுடியாத தோல்வியை அர்த்தமேயின்றி ஏற்க மறுத்துக்கொண்டிருந்தோம் என்று ரொம்பவே உருக்கமாக பாஸ்கர் சொன்னார். ஒரு கணம் எனக்கும் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது போல இருந்தது. 

பூங்குன்றனும், பிரபாகரும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருப்பவர்கள். ஒருநாள் பூங்குன்றன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவனது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பிரபாகரனின் அன்றைய நடவடிக்கைகள், நாவலிலிருந்து – 

நான்கு பெரிய சாக்குப் பைகளை வாங்கி வந்து பூங்குன்றனின் துணிகளையும், பொருட்களையும், புத்தகங்களையும் தனித்தனியே மூட்டைக்கட்டி அறையின் ஓரத்தில் ஒதுக்கிவைத்து, ஒரு பெரிய போர்வையை அவற்றின் மீது போர்த்தி மறைத்து வைத்தான். இரண்டு துப்புரவுப் பணியாளர்களை அழைத்து வந்து அறையைக் கழுவிவிட்டான். அந்த மின் விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த மிச்ச கயிற்றை ஏறி அறுத்தெடுத்து, சுவற்றிலிருந்த அந்த ஜோக்கர் படங்களையும் கிழித்து ஒரு செய்தித்தாளுக்குள் போட்டு கசக்கி ஜன்னலுக்கு வெளியே வீசினான். கடைக்குப் போய், ஜவ்வாதையும் பன்னீரையும் வாங்கிக் கலந்து அறையில் ஆங்காங்கே தெளித்துவிட்டு, ஒரு கொத்து சைக்கிள் ஊதுபத்தியைக் கொளுத்தி அறையின் மூலைகளில் பிரித்துப் பிரித்து வைத்தான். அதோடு அறையைப் பூட்டிவிட்டு எங்களின் அறைக்கு வருவான் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவன், மாலை ஆறு மணியளவில் போய் குளித்துவிட்டு வந்து, நடு அறையில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு, பூங்குன்றன் தொங்கிய அதே மின்விசிறியை வேகமாகச் சுழலவிட்டுக்கொண்டு, கால்மேல் கால் போட்டபடி புத்தகத்தை எடுத்துவைத்து வாசித்துக்கொண்டிருந்தான். 

துக்கம் தன் மாபெரும் நிழலை கவித்திருந்த அந்த அறையில், அப்போது நிலவிய காரிருளை, பிரபாகர் சட்டையே செய்யவில்லை. 

மயிலனின் விரிவான விவரணைகளை படிக்கும்போது இந்நாவலில் வரும் பெரும்பாலான விஷயங்கள் எந்தவித பாசாங்கும் இல்லாமல் எழுதப்பட்ட உண்மைச் சம்பவங்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக எல்லோருக்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மீது ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா ? அது இந்நாவலைப் படித்தால் மாறக்கூடும். அவர்கள் என்ன மாதிரியான சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ! 

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
மயிலன் ஜி சின்னப்பன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 208
விலை ரூ.250 

************************************************ 

இனி சில பர்சனல் அனுபவங்கள் - 

மயிலனிடம் நட்பும், மரியாதையும் கொண்டவர் என்ற முறையில் இந்நாவலை என் மனைவியும் அவருக்கென ஒரு தனிப்பிரதி வாங்கிக்கொண்டு படித்தார். அவரது கர்ப்பக்காலத்தில் நான் அவரிடம் வலுக்கட்டாயமாக படிக்கக்கொடுத்து அவர் ஏனோதானோ என்று அரைகுறையாகப் படித்த நாவல்களைத் தவிர்த்துவிட்டால் இதுதான் அவர் படிக்கும் முதல் நாவல். 

முதலில் நான் இரண்டு அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு நேரம் கிடைக்காமல் வைத்திருந்தேன். அதற்குள் அவர் எட்டு அத்தியாயங்களைக் கடந்திருந்தார். அதன்பின் இருவரும் அருகருகே அமர்ந்து படிக்கத் துவங்கினோம். சரியாக, ஐந்து அத்தியாயங்கள் முடிந்ததும் இந்த நாவல் இப்படித்தான் போகப் போகிறது என்று ஒரு ஸ்பாய்லரை அவருக்கு முன்பு தூக்கிப் போட்டுவிட்டு நான் ஜாலியாகப் படிப்பதைத் தொடர்ந்தேன். 

ஒரு நாவலை இப்படி இணையான நேரத்தில் நாங்கள் இருவரும் அதுகுறித்து விவாதித்துக் கொண்டே படித்தது பரவசமான அனுபவமாக அமைந்தது. இடையிடையே வரும் மருத்துவம் தொடர்பான வார்த்தைகளுக்கு அர்த்தத்தை நான் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதே போல காஜி, கரமைதுனம் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அவர் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். குறிப்பிட்ட அத்தியாயத்தை வாசிக்கையில், நான் எந்த வரியை அடிக்கோடிடுவேன் என்று கணித்து, நான் அதனை அச்சுபிசகாமல் செய்யும்போது மகிழ்ந்துகொள்வார்.  

நாவலின் மீதான ஈடுபாட்டின் காரணமாக திடீர், திடீரென நாவலை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொள்வார். அந்த சமயங்களில் நான் வேறு விஷயங்கள் பேசினாலும் அவரது காதில் விழாது. ஒரு வகையில் ஒரு வாசகன் அனுபவிக்கும் தொந்தரவுகளை அவர் புரிந்துகொள்ளும் வகையில் சில நிகழ்வுகள் அமைந்தது. நான் ஏன் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடி சின்டெக்ஸ் டேங்கிற்கு அருகில் ஏறி அமர்ந்து புத்தகம் படிக்கிறேன் என்று அவருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் எனது வாசக உணர்வுகளைப் புரிந்துகொண்டு சில கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்திருக்கிறார். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment