வணக்கம் மக்களே...
தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ எனது இந்த வலைப்பதிவு உறவினர்களிடம் அறிமுகம் பெற்றுவிட்டது. அமெரிக்காவில் இருந்தெல்லாம் வாழ்த்துச் செய்தி வருவதாக ஊருக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். ஒரு வகையில் என் உறவினர்கள் இப்பொழுதாவது என் எண்ணங்களையும் கொள்கைகளையும் தெரிந்துக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். ஆனால், கழிவறையில் அமர்ந்து கனநேரம் சிந்தித்தபோது இனி எல்விராவையும் நெப்போலியனையும் பற்றியெல்லாம் எழுத முடியாதே என்று அடிவயிற்றில் ஓர் கலக்கம் ஏற்பட்டது. எனது கருத்து சுதந்திரத்தில் நானே கல்லடித்துக்கொண்டது போல தோன்றியது. மேலும் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தும், கட்டிலில் புரண்டு புரண்டு படுத்து சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வந்தேன். எழுதுவேன். என்னவெல்லாம் என் மனதில் தோன்றுகிறதோ, எல்லாவற்றையும் எழுதுவேன். யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை.
ஆகட்டும்... சில வாரங்களுக்கு முன் என் தந்தையின் உடல்நிலை சரியில்லாதது பற்றியும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பற்றியும் எழுதியிருந்தேன். இப்போது வாசகர்களாகிய உங்கள் வார்த்தைகள் பலிக்க, உறவினர்களின் பிரார்த்தனைகள் பலிக்க நோய்வாய்ப்பட்டிருந்த ராஜேந்திர சோழனாகிய (!!!) என் தந்தை மீண்டு வந்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு. நான் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது போலவே கருப்புச்சட்டையில் கம்பீரமாகவே வீடு திரும்பினார் தந்தை. அதுமட்டுமில்லாமல் டிஸ்சார்ஜ் ஆவதற்கு முந்தய நாளே தங்கையாரிடம் வீட்டு மொட்டைமாடியில் புத்தம் புதிய திராவிடர் கழக கொடியை ஏற்றச் சொல்லிவிட்டார்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அய்யம்மா (என் தந்தையின் தாயார்) ஆரத்தி எடுக்க அப்பா புதிய பூமி படத்தில் வரும் எம்.ஜி.ஆர் போல முரண்டுபிடித்தார். அடுத்த பத்து நாட்களுக்கு அடுத்ததடுத்து உறவினர்களும் நண்பர்களும் வந்து அப்பாவிற்கு தைரியம் சொன்னபோது தான் உறவுகளின் உன்னதத்தை உணர்ந்துக்கொண்டேன். அப்பாவிற்கு பிடிக்குமே என்று ஒரு டி.வி.டி முழுக்க எம்.ஜி.ஆர் ஒளிப்பாடல்களை தேடித்தேடி சேகரித்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர் பாடல்களை பார்த்த உற்சாகத்திலா என்று தெரியவில்லை, அப்பா எதிர்பார்த்ததைவிட வேகமாகவே இயல்புவாழ்க்கைக்கு திரும்பிவிட்டார். இப்போது சாத்துக்குடி பழங்களையும் ஆப்பிள்களையும் யாருக்கு கொடுப்பது என்று தெரியவில்லை.
(சிறிய எழுத்துக்கள் தெரியாவிடில் வலது க்ளிக் செய்து தனித்திரையில் பார்க்கவும்) |
நடந்து முடிந்த இந்த சம்பவங்களில் இருந்து நான் சில பாடங்களை கற்றுக்கொண்டேன். நீங்களும் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. விளையாட்டுப்பிள்ளையாகவே சுற்றித்திரிந்த நான் இனியாவது கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென்று உச்சிமண்டைக்கு உரைக்க ஆரம்பித்திருக்கிறது. குடும்பத்து பெரியவர்களுக்கு நான் புத்திமதி சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தந்தையை இந்நிலைக்கு ஆளாக்கியதில் முக்கிய பங்கு புகைக்கு இருக்கிறது. வயதில் மூத்தவர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கும் நீங்கள் இதை உணர்ந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். சிலர் உயிரை மயிராக நினைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆனால் உங்களை சுற்றி இருக்கும் நாலு பேருக்கு நீங்கள் தான் உலகம் என்று உணர்ந்து செயல்படுங்கள். நான் எழுதும் இந்த வார்த்தைகள் வீண்போகாது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நாயர் கடையிலும், சதர்லேண்ட் வாசலிலும் ஊதித்தள்ளும் பெருமக்களுக்கும் மேற்கூறிய வார்த்தைகள் பொருந்தும். நாற்பது வயது தாண்டியபிறகு ஞானம் பெற்று பயனில்லை. கேட்கவே மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தகண்ணீர்" படத்தை ஒரு முறை மறக்காமல் பார்த்துவிடுங்கள்.
கடந்த இரண்டு மாதங்களில் அப்பாவிற்கு ஊன்றுகோலாய் இருந்து உதவிய உறவுகளையும் நட்பையும் நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. ஆனால் சிலருடைய பெயரை சொல்லியே ஆகவேண்டும். நான் இருக்க வேண்டிய இடத்தில் வாரிசாக இருந்து உதவிய மைத்துனர் அசோக், ரத்தத்தின் ரத்தமாக இருந்து உதவிய அருண் அண்ணன், அம்மா வீட்டில் இல்லாத் சமயங்களில் மீண்டும் எனக்கும் என் தங்கைக்கும் தாயாக இருந்து அன்பை பொழிந்த அய்யம்மா, தந்தைக்கு பசியாற்ற பாசத்தோடு உணவு கொண்டுவந்த சுப்புலட்சுமி அத்தை, "ஜோதிடசிகாமணி" திருமதி. அவல்பொரி மரகதமணி அத்தை, கேட்ட போதெல்லாம் விடுமுறை கொடுத்து ஒத்துழைத்த அணித்தலைவர் ராஜகோபால் (பேசாமல் பெயரை ராஜபக்சே என்று மாற்றிக்கொள்ளலாம்), மற்றும் பாசம் படைத்த உறவுகள், நலம் நாடிய நட்புக்கள், வர்த்தகர் சங்க, அச்சக உரிமையாளர் சங்க மற்றும் திராவிடர் கழக தோழர்கள் உங்கள் அனைவரின் பொற்பாதங்களையும் தொட்டு வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
அடையாறு மருத்துவமனை பற்றிய எனது கடந்த பதிவை படிக்காதவர்கள் கீழுள்ள இணைப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம் :-
|