26 April 2017

மசினகுடி – மோயாறு பள்ளத்தாக்கு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: சென்றடைதல்

மசினகுடியில் சுற்றிப் பார்ப்பதற்கென்று நிறைய இடங்கள் கிடையாது. நானாகவே கூகுள் மேப்பை அங்குலம் அங்குலமாக துழாவி சில இடங்களுக்கு நட்சத்திர குறியிட்டு வைத்திருந்தேன். இந்த நட்சத்திர குறியிட்டுக்கொள்ளும் வசதி கூகுள் மேப்பின் ஒரு உபயோகமான பயன்பாடு. 

முதலில் மரவக்கண்டி நீர்தேக்கத்திற்கு சென்றோம். வெளியே ‘அனுமதி இல்லை’ அறிவிப்புப்பலகை. சில கட்டிடப்பணியாளர்கள் வேலை செய்துக்கொண்டிருந்தனர். அவர்கள், யாராவது அதிகாரிகள் கேட்டால் மட்டும் சுற்றிப்பார்க்க வந்தோம் என்று சொல்லச் சொன்னார்கள். முகப்பில் விநாயகர் ஆலயம். கடந்து உள்ளே சென்றால் மரண அமைதியுடன் ஒரு சிறிய நீர்த்தேக்கம். 

மரவக்கண்டி நீர்த்தேக்கம்
சில நிமிடங்கள் மட்டும் அங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதற்கு மேல் அங்கே விசேஷம் எதுவுமில்லை.

அடுத்ததாக சிக்கம்மன் கோவில் நோக்குமனை. அப்படித்தான் மேப் சொல்கிறது. ஆனால் அங்கே நோக்குமுனையெல்லாம் இல்லை. சிறிய அம்மன் (சிக்கம்மன் என்றால் சின்ன அம்மன் என்று பொருள்) கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

சிக்கம்மன் கோவில் கோபுரம்
கோவில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் மோயாறு பள்ளத்தாக்கின் ஒரு பகுதி தெரிகிறது. இந்தமுறை பிரகாஷும், அப்புவும் அவரவர் பைக்குகளோடு காதல் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

அடுத்து சென்ற இடம் மோயாறு நீர் மின்னாற்றல் மையம். 

மோயாறு பின்னணியில் மோஜோ (மற்றும் R15)
குடும்பத்துடன் புளிச்சோறு கட்டிக்கொண்டு சென்று பார்ப்பதற்கு தோதான இடம். மற்றபடி பிரமாதமாக ஒன்றுமில்லை. மேலும் நீர்தேக்கத்தின் ஆரம்பப்பகுதி வரை மட்டும்தான் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதைத்தாண்டி சென்றால் சிடுசிடுவென ஒரு அதிகாரி அமர்ந்திருக்கிறார். போட்டோ எடுக்காதே, அதன் மேலே ஏறாதே, கோட்டைத் தாண்டி வராதே என்று அதட்டுகிறார்.

அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் இருந்தது சிகூர் அருவி மற்றும் மோயாறு பள்ளத்தாக்கு. மோயாறு நீர் மின்னாற்றல் மையத்தைக் கடந்து கொஞ்சதூரம் போனால் மேப்பில் ஒரு நூலளவு சாலை தெரிகிறது. அதன் முடிவில் அருவியும் பள்ளத்தாக்கும் இருப்பதாக காட்டுகிறது. இது முழுக்க முழுக்க மேப்ஞானம் தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கே சாலையே இல்லை. ஆஃப் ரோடு என்றதும் மோஜோ முரட்டுக்காளை துள்ளிக்குதித்து பாய, R15 அதனைத் தொடர, குத்துமதிப்பாக மேப் காட்டிய வழியில் போக, அது ஒரு ஆளில்லா செக் போஸ்டுக்கு வந்து நின்றது. மறுபடியும் அனுமதி இல்லை என்கிற அறிவிப்புப்பலகை. அனுமதி கேட்க ஆட்களுமில்லை. சுற்றி அரை கி.மீ.க்கு அங்கு ஆட்களே இல்லையென உறுதியாக சொல்லிவிடலாம். இவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்பிப்போனால் சரியாக இருக்காதென தடையை கடந்தோம். 

உள்ளே கற்களாலான பாதை நீள்கிறது. சுற்றிலும் காடு. வீடு, மனிதர்கள் நடமாட்டம் எல்லாம் சுத்தமாக இல்லை. திடீரென அங்கே கரடியோ, புலியோ, யானைகளோ வந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று தெரியவில்லை. இதில் மிகைப்படுத்துதல் எதுவுமில்லை. நிஜமாகவே அங்கே வனவிலங்குகள் ஏதேனும் வந்திருந்தால் நாங்கள் வீடு திரும்பியிருக்க மாட்டோம். எங்களுடையது கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம். அழிந்துவரும் அரியவகை உயிரினமான சிகப்பு-தலை கழுகுகள் வசிக்கும் வனப்பகுதி இது. கிட்டத்தட்ட சந்திரமுகி அரண்மனைக்குள் நுழையும் முருகேசனைப் போல பயந்தபடி நடந்தோம். அள்ளு விட்ருச்சு. இதோ அதோ என்று பாதை நீண்டுக்கொண்டே இருக்கிறது. இறுதியில் மலையின் முகட்டுக்கே வந்துவிட்டோம். 

மோயாறு பள்ளத்தாக்கு !
அங்கேதான் பியூட்டி ! அம்மலையின் முகட்டில் இருந்து எட்டிப்பார்த்தால் சொர்க்கம் தெரிகிறது. ஆமாம், ஆளரவமற்ற மலை முகடு, ரம்மியமான இயற்கைக்காற்று, செங்குத்தான சரிவு, அதிலே மெலிதாக பாயும் அருவி எல்லாவற்றையும் விட பிரமிப்பைத் தரக்கூடிய அபாரமான பள்ளத்தாக்கு. இந்த இடத்தை தமிழகத்தின் கிராண்ட் கேன்யன் என்று சொல்லலாம். 

சிகூர் அருவி
செக் போஸ்ட் தாண்டியதற்கும், வனவிலங்குகளுக்கு அஞ்சியபடியே காட்டைக்கடந்ததற்கும் வொர்த்தான இடம். மழைக்காலத்தில் வந்திருந்தால் இன்னும்கூட அட்டகாசமாக இருந்திருக்கும். சிகூர் அருவியில் தண்ணீர் பாய்வதை பார்த்திருக்கலாம். வனவிலங்குகள் நீர் அருந்துவதற்கு இங்கேதான் வருவதாக கூறுகின்றனர். சிலிர்ப்பான சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் செக் போஸ்டுக்கு திரும்பினோம். அப்போது செக் போஸ்டில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்துவிட்டது. எனினும் சகஜமாக பேசிக்கொண்டே காலேஜ் சீனியர்களைக் பார்த்த ஃப்ரெஷ்ஷர்ஸ் போல கடக்க முயன்றோம். அந்த யுக்தி உபயோகமாக இல்லை. இருவரும் எங்களை மடக்கி யாரைக் கேட்டு செக் போஸ்டை கடந்து சென்றீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டார்கள் என்பது சில நிமிடங்கள் மிரட்டினார்கள் என்று மாறியது. ஃபாரஸ்ட் ரேஞ்சருக்கு தகவல் சொல்லியாச்சு இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடுவார் என்பது வரை போய்விட்டார்கள். இடையிடையே அவர்களுடைய பேச்சு பணம் பறிக்கும் நோக்கில் இருந்ததையும் யூகிக்க முடிந்தது. ஐநூறு, ஆயிரம் வரை பரவாயில்லை. ஃபாரஸ்ட் ரேஞ்சர் வரையெல்லாம் விஷயம் போய்விட்டால் தலைக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று அவர்கள் மிரட்டியபோது அடிவயிறு கலங்கியது. சுமார் பத்து நிமிடங்கள் இருக்கும். பிரகாஷும், அப்புவும் பேசிப் பேசியே அந்த இளைஞர்களை கரைத்தார்கள். கடைசியாக எங்களை சேதாரமில்லாமல் அனுப்பி வைக்க முடிவெடுத்தனர். இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கு சொன்ன காரணம் விசேஷமானது. சென்னையிலிருந்து வர்றீங்கன்னுறதால விடுறோம். அங்க என்ன நடக்குதுன்னு டிவியில் பார்க்கிறோம் என்றார். (அநேகமாக ஜல்லிக்கட்டு போராட்டம். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. போராட்டக்குழுவுக்கு ஸ்தோத்திரம் !) விட்டால் போதும் என்று விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பி மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கு வந்தபிறகு தான் பேசிக்கொண்டோம். 

இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தேறியபிறகு மணி மதியம் இரண்டு. அடுத்ததாக பார்ப்பதென்றால் பைக்காரா நீர் மின்னாற்றல் மையம் (அருவி அல்ல). பிரத்யேக அனுபவமாக சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை பார்த்துவிட்டோம். ஆனால் அதைத் தாண்டி வேறெதுவும் இடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லை’ பலகை, சிடுசிடு அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

இரவுக்கு முழுமையாக நான்கு மணிநேரங்கள் இருக்கின்றன. சிறிய யோசனைக்குப்பின் நிபந்தனையுடன் கூடிய முடிவொன்றை எடுத்தோம். மசினகுடியிலிருந்து முப்பத்தியாறு கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. அவற்றில் வளைந்து ஊட்டியின் எல்லையை மட்டும் தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பதுதான் அந்த திட்டம். ஆனால் ஊட்டி தனி ப்ராஜெக்ட் என்பதால் அங்குள்ள சுற்றுலா இடங்களை தொடக்கூடாது என்பதுதான் நிபந்தனை. வாகனங்கள் ஊட்டியை நோக்கி உறுமத்துவங்கின...

(தொடரும்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 24042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜம்பு என்றொரு பழம்பெரும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்த்தேன். இந்தியன் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியானது. தமிழின் முதல் ஜங்கிள் சினிமா. ஜம்புவுக்கு அநேகமாக இன்னொரு பலான ‘முதல்’ பெருமையும் உண்டு. அதை கடைசியில் சொல்கிறேன்.

நாகரிக மனிதர்களில்லாத (ஒரே ஒருவனைத் தவிர) தீவொன்றில் ஒரு புதையல் இருக்கிறது. விமான விபத்தொன்றில் சில பயணிகள் அத்தீவில் சிக்கிக்கொள்கின்றனர். அங்கிருக்கும் 'அரை நாகரிக' ஜம்பு அவர்களை காப்பாற்றுகிறான். புதையலை அவன்தான் பாதுகாத்து வைத்திருக்கிறான். அதனை அரசிடம் முறையாக ஒப்படைப்பதே அவனுடைய லட்சியம். மீதிக்கதையை யூகிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு கதையை யோசித்து (சுட்டிருந்தால் கூட) அதனை சாத்தியபடுத்தியதே ஒரு சாதனை தான். என்ன ஒன்று, இம்மாதிரி அரதப்பழைய படங்களை பார்க்கும்போது சில விஷயங்களை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, நகைச்சுவை. குறிப்பாக தேங்காய் சீனிவாசனுடையது. அக்காலத்தில் எல்லாம் படத்தின் கதையம்சம், தரம் என்பதையெல்லாம் தாண்டி அதிலே உள்ள சிறப்பம்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் படம் பார்த்திருக்கிறார்கள் என்று புரிகிறது. உதாரணத்திற்கு நான்கு சண்டைக்காட்சிகள், ஐந்து பாடல்கள், வெளிநாட்டு லொகேஷன்கள் என திரையில் சில வித்தைகளை காண்பித்தால் பார்ப்பதற்கு கூட்டம் வந்துவிடும் போலிருக்கிறது. இப்போது ஒரு படத்தில் ஒரு யானையை காண்பித்தால் அதனை பார்வையாளர்கள் ஒரு செட் பிராப்பர்டியாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் அக்காலத்தில் யானையைப் பார்ப்பதற்காகவே ஆட்கள் வந்திருக்கக்கூடும். ஏன் சொல்கிறேன் என்றால் ஜம்புவில் இடையிடையே எங்கிருந்தோ லவட்டிய மிருகங்கள் தோன்றும் ரீல்களை சொருகியிருக்கிறார்கள். மிருகங்கள் மேட்டிங் செய்வதைக் கூட விட்டுவைக்கவில்லை. அப்புறம் திடீர் திடீரென கவர்ச்சிப்பாடல்கள் வருகின்றன. திடீர் திடீரென சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நான்கைந்து ஹீரோயின்கள். எல்லோரும் ஜெய்சங்கரை காதலிக்கிறார்கள். அதிலே பாருங்கோ, மெயின் ஹீரோயினுக்கு ஜெய்சங்கர் மீது காதல். ஜெய்சங்கருக்கும் அவர் மீது காதல். ஆனால் இடையில் ஜெய்சங்கர் சூழ்நிலை காரணமாக இன்னொரு நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்படும் மெயின் நாயகி, துணை நாயகியிடம் சென்று ஒரு பழத்தைக் கொடுக்கிறார். துணை நடிகை அதனை ஒரு கடி கடித்துவிட்டு மெயினிடம் கொடுக்கிறார். இப்பொழுது மெயின் ஒரு கடி. எவ்வளவு திவ்யமாக காட்சியமைத்திருக்கிறார்கள் பார்த்தேளா ! 

ப.பாண்டி பார்த்தேன். குடும்பத்தினரின் சாய்ஸ் என்பதால் வேண்டாவெறுப்புடன் தான் சென்றேன். ஆனால் பார்க்கப் பார்க்க படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

முதல் பாதியில் அப்பா – மகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய வருகிறது. பக்கத்திலேயே அப்பாவை வைத்துக்கொண்டு இதுபோன்ற காட்சிகளை பார்ப்பதற்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. அரவான் வெளிவந்தபோது நானும் என் அப்பாவும் திரையரங்கில் சென்று பார்த்தோம். ஒரு பாடலில் ஆதியும் தன்ஷிகாவும் செமயாக ரொமான்ஸ் செய்வார்கள். அப்போதுகூட எனக்கு இவ்வளவு நெருடலாக இருந்ததில்லை. ஆனால் ப.பாண்டி பார்க்கும்போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அதுவும் அடிக்கடி ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி என்ன மிஸ்டர் பிள்ளை, ஏன் மேன் பெத்த என்று அப்பாவை நக்கல் செய்துக்கொண்டிருக்கும் எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ப.பாண்டியை பொறுத்தவரையில் வேறு சில படங்களை நினைவூட்டினால் கூட முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டாம் பாதி ரேவதி வரும்வரை சுமார்தான். யாரோ ஒரு மீம் உற்பத்தியாளர் சத்யராஜ் – மடோனா செபஸ்டியன் தோற்ற ஒற்றுமையை வைத்து போட்ட மீம் என் மனதில் ஊன்றிவிட்டது. மடோனாவை பார்த்ததும் சத்யராஜ் நினைவுக்கு வருகிறார். பொன்னியின் செல்வன் என்றொரு தமிழ்ப்படத்தில் கண் பார்வையற்ற அப்பாவித் தாயாக நடித்திருப்பார் ரேவதி. ப.பாண்டி பார்க்கும்போதுதான் ரேவதியை அதுமாதிரி படங்களில் நடிக்க வைத்தது எவ்வளவு பெரிய பாவம் என்று உரைக்கிறது. பேசாமல் மடோனாவுடைய வேடத்தைக் கூட ரேவதியே செய்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு இளமையாய் தெரிகிறார். எல்லா இளைஞர்களுக்கும் தங்களுடைய வயதான காலத்தைப் பற்றி ஒரு கனவு இருக்கும். யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க போதிய சேமிப்பு, தனக்கென ஒரு தனி உலகம், கமிட்மெண்ட்ஸ் இல்லாத சுதந்திர வாழ்க்கை போன்ற கனவுகள். அதற்குள் ஒரு காதலும் வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் ப.பாண்டி. ஃபீல் குட் படம் என்பார்களே அது இதுதான். 3 என்கிற மஹா நெகடிவ் எண்ணம் கொண்ட படத்தை எடுத்த குடும்பப் பாவத்தை கழுவிக்கொண்டார் தனுஷ்.

படத்தின் பெயர் ஏன் ப.பாண்டி தெரியுமா ? ஏனென்றால் பவர் என்றால் ஆங்கிலம். அது இருந்தால் வரி விலக்கு கிடையாது. தன்னுடைய படத்திற்கு என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள அதன் படைப்பாளிக்கு உரிமை உண்டு. ஆனால் முதலில் ஒரு பெயர் வைத்துக்கொண்டு, நைஸாக வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பு வரி விலக்கிற்காக பெயரை மாற்றிக்கொள்வது என்பது ஓழ் பஜனை. இந்த பஜனைக்கெல்லாம் அடிக்கோலிட்டது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்கிற அரசாணை. முதலில், சினிமா படங்களுக்கு எதற்காக அய்யா வரி விலக்கு. ஏதோ காமராஜர் வரலாறு, அன்னை தெரஸா வரலாறு என்றால் ஆல்ரைட் வரி விலக்கு கொடுக்கலாம். மேலும் வரி விலக்கால் ரசிகர்களுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது. அப்புறம் என்ன ம.க்கு வரிவிலக்கு. அடுத்ததாக வந்த ஆட்சியில் அரசாணையை கொஞ்சம் திருத்தி அமைத்தார்கள். தமிழில் பெயர், யூ சான்றிதழ் உள்ளிட்ட சில விதிமுறைகள். இதிலே உள்ள சிக்கல் என்னவென்றால் இந்த அரசாணைக்கு பின்னர் தமிழில் ஸாஃப்ட் எராட்டிகா படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. வருவதே இல்லை என்று கூட சொல்லலாம். அப்படியே யாராவது படமெடுத்தால் கூட வரி விலக்கிற்கு ஆசைப்பட்டு மொத்த பிட்டுக்களையும் கத்தரித்துவிட்டு யூ சான்றிதழ் வாங்கிக்கொண்டு, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய பாடம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். தமிழில் நான் கடைசியாக பார்த்த (ஒப்பீட்டளவில்) நல்ல ஸாஃப்ட் எராட்டிகா ‘தேகம் சுடுகுது’. ஜூலை ஒன்றாம் தேதிக்குப் பிறகு இந்த வரி விலக்கு பஜனையெல்லாம் இல்லை என்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. உண்மை என்றால் ஸ்கெட்ச் என்ற தலைப்பை வரைபடம் என்று மாற்றத் தேவையில்லை. 2.0 படத்தின் சான்றிதழில் இரண்டு புள்ளி பூஜ்யம் என்று குறிப்பிடத் தேவையில்லை. முக்கியமாக மீண்டும் புல்லுக்கட்டு முத்தம்மாக்களையும். கள்ளப்பருந்துகளையும் எதிர்பார்க்கலாம்.

புத்தக தினத்தை முன்னிட்டு பெரியார் திடலில் ஐம்பது சதவிகித தள்ளுபடி புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வருடாவருடம் நடைபெறும் போலிருக்கிறது. 

சுமார் நாற்பது அரங்குகள் இருக்கும். குளிர்பதன வசதி செய்ப்பட்ட அரங்கு. உயிர்மையில் இரவல் காதலி உட்பட சில கேள்விப்பட்ட தலைப்புகள் கிடைக்கின்றன. பழைய ஆங்கில நாவல்கள் / புத்தகங்கள், குழந்தைகளுக்கு போர்ட் புக் வாங்குவதற்கு பொருத்தமான இடம். நீங்கள் மிகுந்த பொறுமைசாலி என்றால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களிலிருந்து சில பொக்கிஷங்களை கண்டெடுக்கலாம். கடந்த வருடம் உயிர்மையில் சுஜாதாவின் குட்டி சைஸ் புத்தகங்கள் கிடைத்தன. மேலும் சென்னை வெள்ளத்தில் சேதமான புத்தகங்களை தள்ளுபடியில் கொடுத்தார்கள். இம்முறை அப்படியான கொடுப்பினைகள் எதுவுமில்லை. வாசகர்கள் எல்லாக் கடைகளையும் நிச்சயமாக கவனிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அரங்கு அமைப்பை ஒரு தினுசாக வைத்திருக்கிறார்கள். அரங்கு அமைப்பை திட்டமிட்டவர் கொஞ்சம் பகுத்தறிவோடு செயல்பட்டிருக்கலாம். நானெல்லாம் புத்தகக் காட்சியில் நான்கு சுற்று வருவேன், பார்த்த கடைகளுக்கே திரும்பத் திரும்ப சென்று பார்ப்பேன். எனக்கு இந்த அமைப்பு பயங்கர எரிச்சல். முதலில் ஒரு சுற்று முடித்துவிட்டு, முக்குக்கு முக்கு நிற்கும் வாலண்டியர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு, அவர்களையும் பதிலுக்கு திட்டிவிட்டு ரிவர்ஸில் ஒரு சுற்று அடித்தேன். மறுபடியும் ஒரு நேர்ச்சுற்று. இறுதியில் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் வாங்கவில்லை. இச்சிறப்பு புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவடைகிறது. தவற விடாதீர்கள். இடம்: பெரியார் திடல், எழும்பூர், சென்னை. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

முதலில் குறிப்பிட்ட ஜம்புவின் சிறப்பம்சம் அதன் தாராள கவர்ச்சி. தற்போது ஒரு தமிழ் சினிமா எடுத்தால் கூட அதில் இவ்வளவு கவர்ச்சி காட்ட மாட்டார்கள். விளையாட்டுக்கு சொல்லவில்லை. நிஜமாகவே காட்டமாட்டார்கள். ஜம்புவில் ஜெயமாலா என்றொரு நடிகை நடித்திருக்கிறார். சபரிமலை புகழ் ஜெயமாலா அல்ல. அவர் வெள்ளை நிற வேட்டித்துணியை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு தண்ணீரில் நனைகிறார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. தமிழில் முலைக்காம்புகளை (நேரடியாக இல்லையென்றாலும்) காட்டிய முதல் சினிமா ஜம்புவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (ஸ்டில் வேண்டுபவர்கள் Jamboo Jayamala என்று கூகிளலாம்). இப்பொழுதெல்லாம் கறிக்கடையில் தொங்கும் கோழியைக் கூட ஸ்மட்ஜ் செய்கிறார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 17042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுஜாதாவின் கமிஷனருக்குக் கடிதம் படித்தேன். நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி, கமிஷனருக்குக் கடிதம் இவையெல்லாம் சுஜாதா ஆரம்பகாலத்தில் எழுதிய நாவல்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் நான் வாசிப்பின் அடுத்தக்கட்டத்திற்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று சோதிக்க வேண்டும். கதையின் துவக்கத்தில் மைசூரு ரோடு ஆர்.வி.காலேஜ் திருப்பத்தில் ஒரு விபத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஹிட் அண்ட் ரன். அந்த கேஸ் காவல்துறையிடம் வருகிறது. விறுவிறுப்பான ஒரு புலனாய்வு நாவலை படிக்கப் போகிறோம் என்று உட்கார்ந்தால் ஒரு முக்கோணக் காதல் கதை. அதுவும் ரொம்ப ரொம்ப பழையதாக இருக்கிறது. இடையிடையே குற்ற வழக்குகளும் பின்னணியில் வருகிறது. ஆனால் அதில் துளி கூட சுவாரஸ்யமில்லை. கதையில் மாயா என்கிற பெண் காவல்துறையில் ஏ.எஸ்.பி.யாக பதவியேற்கிறாள். சமூகத்தை திருத்தி சேவை செய்ய வேண்டும் என்பது அவளுடைய நோக்கம். ஆனால் காவல்துறையைப் பொறுத்தவரையில் அத்துறையில் ஈவு, இறக்கம், ஈர வெங்காய மனிதாபிமானத்திற்கு எல்லாம் வேலையே இல்லை என்பது கதையின் அடிக்குறிப்பு. சமூக சேவை செய்ய விரும்பிய மாயா இறுதியில் காவல்துறை பணியை ராஜினாமா செய்துவிட்டு காதலிக்கக் கிளம்பிவிடுகிறாள்.

அடுத்து படிப்பதற்காக என்னிடம் உயிர்மையின் கம்பெனி எழுத்தாளர்கள் மூவருடைய புத்தகங்கள் இருக்கின்றன. எதை (முதலில்) தொடலாம் ?

    1. அஜ்வா – சரவணன் சந்திரன்
    2. நீர் – விநாயக முருகன்
    3. நீருக்கடியில் சில குரல்கள் – பிரபு காளிதாஸ்

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. குழம்பிவிடாதீர்கள். இது ஒரு படத்தின் தலைப்பு. VSOP என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். படத்தின் தலைப்பை சுருக்கினால் VSOP என்று வருவதே பாவம் அதன் இயக்குநருக்கு ஏதேச்சையாகத்தான் ஸ்ட்ரைக் ஆகியிருக்கிறது. டைட்டில் டிஸைனில் வருவதுகூட சோடா மூடி தானே தவிர நீங்கள் நினைப்பது போல கிடையாது. 

இரண்டரை மணிநேர படத்தில் கடைசி கால் மணிநேரம் மட்டும்தான் விஷயமிருக்கிறது. அதுகூட ஒரு குறும்பட அளவிற்குத்தான் ஓர்த். பிச்சைக்காரனுக்கு பிச்சைக்காரன் செக்யூரிட்டி என்பதுபோல ராஜேஷ் – ஆர்யா – தமன்னா என்று கூட்டணி கனக்கச்சிதம். ஆர்யா அடிக்கடி ஹா ஹா ஹா செம கலாய் மச்சி செம கலாய் மச்சி என்பதும், பதிலுக்கு சந்தானம் அற்ற்றிவு கெட்டவனே என்று கடிந்துகொள்வதுமாகவே கடந்து செல்கிறது முக்கால்வாசி படம். இதிலே வாசு... சரவணா... வாசு... சரவணா... என்று ஆர்யாவும் சந்தானமும் அடிக்கடி மாறி மாறி சிணுங்கிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது ஒரு 'கே' படமோ என்று நினைக்கும்படி ஆகிவிடுகிறது. ஒரேயொரு கதையை வைத்துக்கொண்டு ஆறு படங்களை இயக்கிவிட்டார் ராஜேஷ். இதிலே சிவா மனசுல சக்தி மட்டும் கொஞ்சம் ஒப்புக்கொள்ளக்கூடிய ரகம். அதன்பிறகு கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பின் லுல்லா சைஸுக்கு ஆகிவிட்டார். ராஜேஷுக்கெல்லாம் கூச்சமாகவே இருக்காதா என்று ஒரே யோசனையாக இருக்கிறது. ராஜேஷை விட்டுத் தள்ளுங்கள். சந்தானம் இருக்கிறார், டைம்பாஸ் ஆகிவிடும் என்று தனக்குத்தானே அற்பசமாதானம் செய்துக்கொண்டு அன்னாருடைய படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் மொக்கைகள் இருக்கும்வரை ஆறு படங்களென்ன நூறு படங்கள் கூட இயக்குவார். 

நேற்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சுஜாதா எனும் பன்முக ஆளுமை நிகழ்வு குறித்த முன்னறிவிப்பை கவனிப்பதற்கு தாமதம் செய்துவிட்டேன்.

நடந்துமுடிந்தவாசகசாலை நிகழ்வின் அழைப்பிதழ்
தனிப்பட்ட சில காரணங்களால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதது குறித்து வருத்தம்தான். குறிப்பாக அதிஷா, பரிசல் இருவருடைய பேச்சையும் கேட்க முடியாதது நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். அதனை குறைக்கும் விதமாக யூடியியூபில் அந்நிகழ்வின் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் நாவலைப் பற்றி அதிஷா பேசியிருக்கிறார். அந்த நாவலை படித்தபோது எனக்கு தோன்றிய விஷயங்கள் அதிஷாவோடு ஒத்துப்போகின்றன. நிறைய இடங்களில் அதிஷா ஒரு குழந்தை போல பேசுகிறார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையெல்லாம் யோசிக்காமல் மனதிலிருந்து வெளிப்படையாக பேசுகிறார். மதராஸப்பட்டினம் படத்தின் முதல் பாதி காட்சிகள் ரத்தம் ஒரே நிறத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என்று நேரடியாகவே குறிப்பிடுகிறார். பொன்னியின் செல்வன் நாவலை தன்னால் முழுமையாக படிக்கவே முடியவில்லை. ரொம்ப போர் என்கிறார். எனக்கெல்லாம் இப்போது வரை சக வாசிப்பாளர்கள் யாரிடமாவது அளவளாவினால் அவர்களிடம் நான் பொன்னியின் செல்வன் படித்ததில்லை என்று சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது. சுஜாதாவின் சிறுகதைகள் பற்றி பரிசல் பேசியிருக்கிறார். பரிசலின் பேச்சைக் கேட்கும்போது இந்த பதிவின் முதல் சில வரிகளை அழித்துவிடத் தோன்றுகிறது. பதினைந்து நிமிடங்கள்தான் பரிசலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் பாலம் கதை விடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போலவே சுஜாதாவின் மறுபடி (1), முதல் மனைவி போன்ற சிறுகதைகள் என்னால் மறக்க முடியாதவை.

துல்லியமான ஒலி, ஒளி அமைப்புடன் வாசகசாலை நிகழ்வை படம் பிடித்து யூடியூபில் அளித்த ஸ்ருதி தொலைக்காட்சிக்கும், காணொளி இணைப்பை பகிர்ந்துக்கொண்ட எடிட்டர் கெளதமுக்கும் என் அன்பு கலந்த நன்றி. இணைப்புகள் உங்கள் பார்வைக்கு.


தோழர் உதயநிதி சுமாராக நடித்தாலும், அவருடைய படங்கள் ரொம்ப சுமாராக இருந்தாலும் அவருடைய படங்களில் இரண்டு விஷயங்கள் நன்றாக அமைந்துவிடுகின்றன. ஒன்று லட்டு லட்டான ஹீரோயின்கள். இரண்டாவது, அட்லீஸ்ட் ஒரு ஹிட் பாடல். நயன்தாரா, எமி ஜாக்சன் என்று உதயநிதியின் லட்டு லிஸ்டில் புதுவரவு ரெஜினா (முழுப்பெயர் தமிழ் எழுத்துருவில் கஷ்டம்). படம் – சரவணன் இருக்க பயமேன். மாநகரம் பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் ரெஜினாவை எவ்வளவு சொத்தையாக பயன்படுத்துகிறார்கள் என்று வருத்தப்பட்டேன். இப்பொழுதுள்ள தமிழ் நடிகைகளில் செக்ஸியான உதடுகளை கொண்டவர் யாரென்று ஒரு ஆய்வு செய்தால் அதில் சந்தேகமே இல்லாமல் ரெஜினா முதலிடம் பிடிப்பார். ஆக்ட்ரெஸ் ட்ரோல் போன்ற பலான ஃபேஸ்புக் பக்கங்களில் ரெஜினாவை செட்யூஸிங் குயின் என்கிறார்கள். தமிழில் வெறுமனே ஹீரோக்களை திருத்திக்கொண்டிருக்கிறார். சரவணன் இருக்க பயமேனிலும் விசேஷமாக எதுவும் இருந்துவிடப் போவதில்லை. இப்போதைக்கு இந்தப்பாடலைத் தவிர. உதயநிதிக்கு நண்பேன்டாவில் ஊரெல்லாம் உன்னைக்கண்டு, மனிதனில் அழகழகா அவ தெரிவா அமைந்தது போல ச.இ.ப.வில் எம்புட்டு இருக்குது ஆசை அமைந்திருக்கிறது. டி.இமானின் இசையில் ஷான் ரோல்டன், கல்யாணி பாடியிருக்கும் ஸ்லோ பாய்சன் உங்களுக்காக –


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 10042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

துண்டுத் துண்டாக அவ்வப்போது சின்னத்திரையில் பார்த்த சில காட்சிகள் பிடித்திருந்ததால் ரோமியோ ஜூலியட் (2015ல் வெளிவந்த தமிழ்ப்படம்) பார்த்தேன். சராசரி பொழுதுபோக்கு சினிமாவிற்கான நல்ல உதாரணம் ரோமியோ ஜூலியட். காதலியால் ஏமாற்றப்பட்ட காதலன் அவளுக்கு நூதனமுறையில் தன் காதலை புரிய வைத்து அவளுடன் இணைகிறான். இந்த ஒன்லைன் கேட்பதற்கு கொஞ்சம் புதிதாக இருக்கிறதில்லையா ? முன்பே சொன்னது போல துண்டுத்துண்டாக சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஆனால் முழுப்படமாக பார்க்கும்போது ஒருவித தொய்வு வந்துவிடுகிறது. மேலும் கதையில் நிறைய தர்க்கப்பிழைகள். லட்டு மாதிரி இருக்கும் மதுமிளாவை பார்த்தபிறகும் அவருடைய தோழியான ஹன்சிகாவைப் போய் காதலிக்கிறார் ஜெயம் ரவி. எவ்வளவு பெரிய தர்க்கப்பிழை இது ! அடுத்தது மச்சி மச்சி என்று செல்லம் கொஞ்சிக்கொண்டு ஜெயம் ரவியிடம் வந்து அழகாக ப்ரொபோஸ் செய்கிறார் பூனம் பஜ்வா. அவரையும் விட்டுவிட்டு ஹன்சிகாவிடமே தொங்கிக்கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. தமிழில் மட்டும் ஹன்சிகா பதினைந்து படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துவிட்டார் என்பதை நினைக்கும்போது ஜெயம் ரவி மட்டுமல்ல அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களின் மீதும் கோபமாக இருக்கிறது. அப்படி என்ன பெருசாக இருக்கிறது ஹன்சிகாவிடம் ?

பூர்ணா, பூனம் பஜ்வா... ஏன் காஜல் அகர்வால் கூட... இன்னும் சில நடிகைகள் இருக்கிறார்கள். திரைத்துறையில் நுழையும்போது வெகு சாதாரணமாக இருக்கிறார்கள். வருடங்கள் கடந்தபின் ஒரு மதுபானத்தை போல மேம்படுகிறார்கள். பூனம் பஜ்வா சேவலில் அறிமுகமான போது அப்படியொன்றும் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் ரோமியோ ஜூலியட்டில் செம்ம க்யூட்டாக இருக்கிறார். ரோமியோ ஜூலியட் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது பூனம் டைலூஷன் பாயிண்டை தாண்டிப் போய்விட்டார். ஒரு சுற்று அகலமாகிவிட்டார். கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட். வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. 

எட்டு தோட்டாக்கள் பார்த்தேன். இத்திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்திருக்கும் மீரா மிதுன் என்பவர் என்னுடைய முன்னாள் சக ஊழியர் என்ற வகையில் அவரை சில முறை பார்க்கவும், அவரிடம் பேசவும் செய்திருக்கிறேன். மீரா என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்பதற்காகவும், பக்கத்தில் பார்த்து சைட்டடித்த பெண்ணை வெண்திரையில் சைட்டடிப்பதற்காகவும் எட்டு தோட்டாக்களுக்கு சென்றேன். மேலும் வெளிவந்த முதல் நாளே விமர்சகர்களின் ஓஹோபித்த பாராட்டுகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. 

கதாநாயகனாக நடித்திருக்கும் வெற்றி அரும்பாடுபட்டு எட்டு தோட்டாக்களை படுகொலை செய்ய முயன்றிருக்கிறார். சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராத வகையறா. எல்லாவற்றிற்கும் முகத்தில் பூஜ்ய பாவனை. சர்வநிச்சயமாக இவர் தயாரிப்பாளருக்கு நெருக்கமான ஆளாக இருக்க வேண்டும். வெற்றியிடமிருந்து படத்தை காப்பாற்றியிருப்பது நாசர், எம்.எஸ்.பாஸ்கர் என்கிற இரண்டு நடிப்புலக ஜாம்பவான்கள். நாசருக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றால் கூட அவருடைய கதாபாத்திரமும், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களும் பிடித்திருந்தன. எம்.எஸ்.பாஸ்கர் அமர்க்களம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் சுமார் பத்து நிமிடங்களுக்கு அவருக்கு மட்டும் க்ளோசப் ஷாட் வைத்திருக்கிறார்கள். அதில் அத்தனை நுட்பமாக நடித்திருக்கிறார் எம்.எஸ்.பி. 

தொழில்நுட்பத்தரம், பரபரப்பான திரைக்கதை, நாசர் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு போன்றவை இருந்தாலும் ஒரு திரைப்படம் நமக்குள் கடத்துகிற உணர்வு மிக முக்கியமானது. அந்த வகையில் எட்டு தோட்டாக்கள் முழுக்க ஒரு போலி மனிதாபிமானம் விரவியிருப்பதைக் காண முடிகிறது. தானே புண்ணை சொறிந்துக்கொண்டு தானே மருந்தும் தடவுவது போல. உங்களுக்கு துரோகமிழைத்த ஒருவர் உங்களிடம் வந்து அவர் இழைத்த துரோகத்தை யாரோ செய்தது போல நெஞ்சுருகி உங்களுக்கு ஆறுதல் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? அப்படியிருக்கிறது எட்டு தோட்டாக்களின் அடிப்படை கதை. ஒன்றுமில்லை, நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இதுபோன்ற எண்ணம் ஒரு முறையாவது தோன்றியிருக்கும். காதலி / காதலன் துரோகமிழைக்கும் போது, மேனேஜர் காண்டு ஏற்றும்போது, அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரும்போது, நாட்டில் அநீதிகள் நடக்கும்போது, ம்மாள ஒரு துப்பாக்கி மட்டும் இருந்தால் டொப்புன்னு சுட்டுட்டு போயிட்டே இருக்கலாம் என்று தோன்றும். அப்படிப்பட்ட பெர்வர்ட்டட் கற்பனை நிஜமானால் எப்படியிருக்கும் என்பதுதான் கதை. அதில் எதுவும் தவறில்லை. ஆனால் அதே குரூர குணம் கொண்ட ஒருவன், நெகிழ, நெகிழ பதினைந்து நிமிடங்கள் (அதுவும் அவன் யாருடைய பணியை கெடுக்கிறானோ அவனிடமே) பேசுவது உறுத்துகிறது. இறுதியில் இது பழிவாங்கும் உணர்வை ஆதரிக்கும் சாதாரண பொழுதுபோக்கு படமா அல்லது அற போதனை ஏதாவது செய்ய முயற்சிக்கிறார்களா என்று குழப்பமாகவே இருக்கிறது. எட்டு தோட்டாக்களின் கதை அகிரா குரோசோவாவின் ஸ்ட்ரே டாக் படத்தின் தழுவல் என்று படித்தேன். வெளிநாட்டு சினிமாக்களில் இருந்து படம் எடுப்பவர்கள் அதனை அப்படியே எடுத்து வைத்தால் கூட எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கிறது. அதனை தமிழ் சினிமாவுக்கு தகுந்தாற்போல மாற்றுகிறேன் பேர்வழி என்று கொத்து பரோட்டா போட்டுவிடுகிறார்கள். மேலும் காதல், அபர்ணா பாலமுரளி, பாடல்கள் என நிறைய தேவையில்லாத விஷயங்களை சேர்த்து நேரத்தை நீட்டியிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எட்டு தோட்டாக்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. வெறும் நல்லவனாக மட்டும் இருப்பவர்களுக்கு இவ்வுலகம் உகந்ததல்ல. நல்லவனா இருந்தா பெருமாள் கோவில் வாசல்ல விபூதிக்கடை வேணும்னா போடலாம் என்று நாசருக்கு ஒரு வசனம் கொடுத்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால் பெருமாள் கோவில் வாசலில் விபூதிக்கடை போடும் டெண்டரைக்கூட எம்.எல்.ஏ.வுக்கோ, மந்திரிக்கோ லஞ்சம் கொடுத்து கைப்பற்ற வேண்டிய துர்பாக்கிய சூழலில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

மீராவைப் பற்றி மறந்தே போய்விட்டேன். தன்னுடைய மாடலிங் புகைப்படங்களில் இருப்பது போலில்லாமல் அழகாக இருக்கிறார் மீரா. இவருடைய வேடம் இப்படித்தான் இருக்கும் என்று முன்பே யூகித்திருந்தேன். அது சரியாக அமைந்திருந்தது. மூன்று சிறிய காட்சிகளில் வருகிறார். அதில் ஒன்று அழுகைக்காட்சி. வாய்ப்பு கிடைத்தால் பெரிய நடிகையாக வருவார் என்பதில் சந்தேகமே இல்லை. ஒருவேளை மீராவை எப்பொழுதாவது சந்திக்க நேர்ந்தால் ஏன் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்துகொண்டீர்கள் ? என்று கேட்கவேண்டும். உங்களுக்கு பழைய மூக்குதான் அழகு மீரா !

ஒருமுறை டிஸ்கவரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாசர் தமிழ் சினிமாவில் அதிகமாக அவமானப்படுத்தப்பட்ட வார்த்தை ‘புரட்சி’ என்று பேசியதாக நினைவிருக்கிறது. அதுபோல திரைத்துறையில், திரைக்கு வெளியே தவறாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘ப்ரொமோஷன்’. இப்பொழுதெல்லாம் ஒரு படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை அதன் ப்ரொமோஷனுக்காகவே செலவிடுவதாக சொல்கிறார்கள். ஒரு படத்தை எடுத்து முடிப்பதை விட, அதனை கச்சிதமாக ப்ரொமோட் செய்வதுதான் முக்கியம் என்கிறார்கள். அந்த வகையில் எட்டு தோட்டாக்கள் டீம் செமத்தியாக வேலை பார்த்திருக்கிறார்கள். செய்துக் கொள்ளட்டும். ஆனால் ப்ரொமோஷன் என்பது படைப்பில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துரைத்து கவனம் ஈர்க்க வேண்டுமே தவிர இல்லாததைச் சொல்லி பார்வையாளர்களை ஏமாற்றக்கூடாது. சொல்லி வைத்தாற்போல நிறைய பேர் எட்டு தோட்டாக்கள் துருவங்கள் பதினாறை விட நல்ல படம் என்று எழுதியிருக்கிறார்கள். இரண்டு தலைப்புகளிலும் எண் வருவதால் இப்படி விபரீதமாக ஒப்பிடுகிறார்களா அல்லது இணைய விமர்சகர்களுக்கே உரித்தான மாஸ் மனோபாவமா என்று தெரியவில்லை. யாராவது இப்படி அபத்தமாக ஒப்பிடுவதைப் பார்த்தால் வாயிலேயே ரெண்டு போட வேண்டுமென தோன்றுகிறது. ப்ரொமோஷன் என்கிற பெயரில் நீங்கள் இப்படி மற்றவர்களை ஏமாற்றி தற்காலிக கவன ஈர்ப்பு வேண்டுமானால் செய்யலாம், மற்றபடி காலவோட்டத்தில் உங்கள் மீதான நம்பகத்தன்மையை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள் கோப்பால் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2017

மசினகுடி – சென்றடைதல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: பந்திப்பூர் வனச்சாலை

மசினகுடி எல்லையைத் தொட்டதும் ஒரு இளைஞர் வேகமாக வந்து எங்கள் வாகனங்களை வழிமறித்தார். அந்த சமயத்தில் அவருடைய உடல்மொழி ஒரு போக்குவரத்து காவலருடையதைப் போல இருந்தது. ஏதோ தகாத செயல் புரிந்துவிட்டோம் போலிருக்கிறது என்று பயந்துக்கொண்டே வாகனத்தை நிறுத்தினால் அண்ணன் காட்டுலாவிற்கு (ஜங்கிள் சஃபாரி) ஆள் சேர்க்கிறார். அப்போதைக்கு அது குறித்து முடிவு எதுவும் எடுக்காததால் அந்த நபரின் அலைபேசி எண்ணை மட்டும் பெற்றுக்கொண்டு ஊருக்குள் நுழைந்தோம். அதற்குள் மழை கொஞ்சமாக பெய்வது போல துவங்கி, முக்கால்வாசி நனைந்திருந்தோம்.

மசினகுடியை சுற்றி ஏராளமான ரெஸார்டுகள் உள்ளன. Jungle, Wild, Forest போன்ற குறிச்சொற்களை தங்களுடைய பெயர்களில் தாங்கி சுமார் ஐம்பது ரெஸார்டுகளாவது இருக்கக்கூடும். அவற்றில் ஒற்றை இரவு வாடகை மூன்றாயிரத்தில் துவங்கி, பத்தாயிரம் வரை இருக்கின்றன. வாங்குகிற பணத்திற்கேற்ப அவற்றில் நீச்சல் குளம், கேம்ப் ஃபயர் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. இவை தவிர்த்து நேரடியாக காட்டில் கூடாரமடித்து தங்குவதற்கான ஏற்பாடுகளும் கிடைக்கின்றன. இதற்கென காட்டுப்பகுதிக்கு நன்கு அறிமுகமான, சமையல் தெரிந்த உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர். இந்த சேவைக்கு ஒரு நபருக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் என்று கேள்விபட்டேன். எங்களுடையது பட்ஜெட் ட்ரிப் என்பதால் மசினகுடி ஊர்பகுதியிலேயே அறை எடுப்பதென முடிவெடுத்திருந்தோம். அதற்கென சில தங்குமிடங்களைக் கூட ஏற்கனவே பட்டியலில் குறித்து வைத்திருந்தோம்.

மசினகுடி ஊர் என்று நான் குறிப்பிடுவது இரண்டு சிறிய தெருக்களையும், ஒரு பிரதான சாலையையும் உள்ளடக்கியது. தெருக்கள் மற்றும் சாலையின் நீளம் சுமார் இருநூறு மீட்டர் இருக்கலாம். சுற்றுலாத்தளத்திற்கான அடையாளங்கள் அதிகம் இல்லை. பிரதான சாலையில் டெய்லர் கடை, ஃபோட்டோ ஸ்டூடியோ, மளிகைக் கடை, மருந்துக் கடை, பிராய்லர் கோழிக்கறி கடை என்று சகலமும் இருக்கின்றன. டாஸ்மாக் இருக்கிறது. சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. அங்கே பழங்கள் இருக்கின்றன. பழங்கள் என்றால் உள்ளூர் பழங்கள் அல்ல. நவீன கலப்பின திராட்சைகள், ஆரஞ்சுகள், ஆப்பிள்கள் என நகரத்தில் கிடைக்காத பழங்கள் கூட இங்கே கிடைக்கின்றன. எஞ்சியிருக்கும் சிறிய உணவகங்களும், விடுதிகளும் தான் சுற்றுலா தளத்திற்கான அடையாளங்கள். முதலில் சேவியர் லாட்ஜை பார்த்தோம். அறுநூறு ரூபாய் வாடகை. ஒப்பீட்டளவில் விசாலமான அறை. இரண்டு கட்டில்கள். இருப்பினும் மேஜை, அலமாரி, தொலைகாட்சி ஆகியவை இல்லாதது குறையாக தெரிந்தது. அடுத்தது ஆலப்பத் லாட்ஜ் சென்றோம். அங்கே இருந்த சிப்பந்தி அறை என்றதும் ஒரு முரட்டுத்தனமான கேள்வியைக் கேட்டு எங்களை திகைக்க வைத்தார். ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்களா ? என்பதுதான் அந்த கேள்வி. எங்களுக்கும் அந்த சிப்பந்திக்கும் தனிப்பட்ட உறவுமுறை / நட்பு இல்லையென்றால் கூட முதல் கேள்வியே இத்தனை அதிரடியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஆசுவாசமடைவதற்குள் குடிச்சிட்டு பிரச்சனை பண்ணுவீங்களா ?, போலீஸ் வந்தா நீங்கதான் பாத்துக்கணும் என்று அடுத்தடுத்த அணுகுண்டுகளை போட்டார். குறிப்பாக இறுதியில் அவர் கொடுத்த போலீஸ் எச்சரிக்கை எங்களுக்கு கோபமூட்டியது. இங்கே என்ன பிராத்தலா செய்கிறோம் ? எல்.சி.டி டிவி இருந்தும் கூட அந்த விடுதியை புறக்கணித்தோம். 

கொங்கு லாட்ஜ்
அடுத்தது வகையாக வந்து சிக்கியது கொங்கு லாட்ஜ். கீழ் மற்றும் முதல் தளங்களில் அறைகள். அடித்தளத்தில் மதுக்கூடம். விடுதி உரிமையாளரை / சிப்பந்தியை சந்திப்பதற்கு முன்பாகவே மதுக்கூட பிரஜை ஒருவர் ஆஜராகிவிட்டார். கேம்ப் ஃபயர், ட்ரெக்கிங், சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தருவதாக அரைபோதையில் சொன்னார். எந்த சுற்றுலா தளத்திற்கு சென்றாலும் இதுபோன்ற முகவர்கள் உங்களை அணுகுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமக்கு உதவ முன்வருகிறார்களே என்று இவர்களிடம் சிக்கினால் நம்மை நொங்கெடுத்து விடுவார்கள். இவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு நாம் தரவேண்டிய விலை ஒரு கட்டிங். அப்படி ஐம்பது ரூபாயை அந்த நபரிடம் கொடுத்தபிறகு நாங்கள் மசினகுடியில் இருந்து கிளம்பும் வரை அவரை பார்க்கவே முடியவில்லை. 

அறையிலிருந்து இயற்கைக்காட்சி
இதற்குள் விடுதி உரிமையாளர் வந்துவிட்டார். அறை வாடகை நாளொன்றிற்கு எண்ணூறு ரூபாய். சிறிய அறைதான். தொலைக்காட்சி, அலமாரி, மேஜை ஆகியவை இருந்தன. கூடுதல் மெத்தையும், போர்வையும் தருவதாகக் கூறினார். அறையிலிருந்து இயற்கைக்காட்சி சிறப்பாக இருந்தது. உடனடியாக அங்கே குடிபுகுந்துக் கொண்டோம். மதிய உணவை (மோசமான பிரியாணி) முடித்துக்கொண்டு, பயணக்களைப்பில் முரட்டுத் தூக்கம் தூங்கி, மறுநாள் காலையில் தான் எழுந்தோம்.

எழுந்தபோது மிதமான தலைவலி. தூக்கத்திற்கிடையே கடைத்தெருவுக்கு போய் பழங்களும், சிற்றிடை உணவுகளும் வாங்கி வந்து, சீஸனில்லாத மாம்பழ ஜூஸை பருகி, கதைகள் பேசித்தீர்த்ததாக மங்கலாக ஏதேதோ குழப்பமான நினைவுகள் எஞ்சியிருந்தன. ஒரு பழகிய ஊரைப் போல பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தேநீர் அருந்தியபடி பேச்சு கொடுத்தபோது முந்தைய இரவு அந்த சாலையின் முனை வரை யானை வந்து சென்றதாக சொன்னார்கள்.

அடுத்த பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 03042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

லைஃப் என்றொரு ஸை-ஃபை ஹாரர் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலத்தில். தேவியில் இரவுக்காட்சி பார்த்தோம். தோம் என்பது நண்பர் அஞ்சாசிங்கம். இதுபோன்ற படங்களுக்கு அஞ்சா ஒரு கோனார் நோட்ஸ். மேலும் அவர் விரும்பும் சப்ஜெக்ட் என்பதாலும் தந்திரமாக பேசி நைட்ஷோவுக்கு வரவழைத்தேன். 

கிட்டத்தட்ட The Last Day on Mars. விண்வெளி ஓடத்தில் ஆறு விஞ்ஞானிகள் செவ்வாயில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணிலிருந்து ஒரு ஒற்றை அணு உயிரினத்தை கண்டுபிடிக்கிறார்கள். வளிமண்டலத்தை வெவ்வேறு வகையில் சீரமைத்து ஆராய்ந்து அதற்குகந்த வளிமண்டல சூழலை அமைத்துக் கொடுக்கிறார்கள். அந்த உயிரினத்தின் அணுக்கள் பல்கிப் பெருகுகின்றன. அதற்கு மேல் ஒரு ஸை-ஃபை ஹாரரில் என்ன நடக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை. ஆனால் பரபரப்பான ஒன்றரை மணிநேரம். சில சமயங்களில் முதுகுத்தண்டை சில்லிட்டது. (முன்பெல்லாம் ஹாரர் பட விமர்சனங்களில் தவறாமல் இடம்பெறும் இந்த க்ளிஷே வார்த்தைக்கு புத்துயிர் தந்த எழுத்தாளருக்கு நன்றி). சில காட்சிகள் ரொம்பவும் கோரம். கோரம் என்றால் ஷோவுக்கு முன்னால் ஜெயஸ்ரீயில் சாப்பிட்ட மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் வெளியே வந்துவிடுமோ என்று அச்சப்பட வைக்கிற கோரம். இத்தனைக்கும் கேனிபல் படங்களில் இதைவிட பன்மடங்கு கோரங்களை பார்த்திருக்கிறேன். Grotesque பார்த்திருக்கிறேன். அகண்டதிரையில் என்பதாலோ என்னவோ ஒரு மாதிரியாகிவிட்டது. பக்கத்தில் உள்ள மனிதர் பாயாசம் சாப்பிடுவதுபோல ஜாலியாக பார்த்துக்கொண்டிருந்தார். பூமி முக்கால் பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. ஆனால் CRV வந்துவிழும்போது மட்டும் ஏன் எங்கேயாவது நடுக்கடலில் போய் விழாமல், மீதமிருக்கும் பூமியிலும் வந்து விழாமல் கடற்கரையில் வந்து விழுகிறது ? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சர்ப்ரைஸ். ஆனால் இரண்டாம் பாகம் எல்லாம் தாங்காது ஸ்வாமி !

படம் பார்க்க வந்தபோது சிங்கம் சேபியன்ஸ் பற்றி எழுதியிருந்ததை விசாரிக்கிறார். இன்னொரு நண்பர் பின்னூட்டத்தில் ஹோமோ டியூஸ் பரிந்துரைக்கிறார். இதன்மூலம் ஒயின்ஷாப் என்பது கிணற்றில் போட்ட கல் அல்ல என்று தெரிகிறது. குறைந்தது இரண்டு பேர் படிக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆசுவாசமாக இருக்கிறது.

சேபியன்ஸில் முதல் யூனிட், முதல் சேப்டர் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா. இரண்டாவது சாப்டர் மற்ற இனங்களிடமில்லாத சேபியன்ஸின் தனித்தன்மை பற்றி பேசுகிறது. ஒன்று, மொழியறிவு. பெரும்பாலான உயிரினங்கள் தங்கள் இனத்திற்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஏதேனும் வழிமுறைகள் வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, சிம்பன்ஸி ஒரு குறிப்பிட்ட சப்தத்தை எழுப்பினால் சிங்கம் வருகிறது ஜாக்கிரதை என்று பொருள். அதைக் கேட்டு மற்ற சிம்பன்ஸிகள் உஷாராகிவிடுகின்றன. ஆனால் சேபியன்ஸ் மொழி இன்னும் விசாலமானது. அதன்மூலம் சிங்கம் எங்கே வருகிறது, எவ்வளவு பெரிய சிங்கம், எவ்வளவு வேகமாக வந்துக்கொண்டிருக்கிறது, எப்படி தப்பிக்கலாம் என்று நிறைய தகவல்கள் பரிமாறவும், விவாதிக்கவும் தோதாக இருக்கிறது. மட்டையடி உதாரணம் என்றால் விமர்சக சிம்பன்ஸி ஒரு படம் பார்த்தால் குப்பை என்று மட்டும்தான் சொல்லும். அதுவே சேபியன் என்றால் படத்தில் கதைச்சுருக்கம் என்ன ?, ஹீரோயின் பற்றிய ஜொள்ளு விவரணை, ஒளிப்பதிவு சுமார், எடிட்டிங் சூப்பர், எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் எல்லாம் சொல்லுமாம். சேபியன்ஸின் இன்னொரு தனித்துவம் புனைவுத்திறன். அதன் மூலம் இல்லாத ஒன்றை உருவாக்கி, அதன் மீது நம்பிக்கைகள் வளர்த்து, ஒருமித்த உணர்வெழுச்சி கொள்வது. அதுதான் சேபியன்ஸ் மற்ற மனித இனங்களை வெல்லக் காரணம் என்கிறார் ஆசிரியர். இருபது நியாண்டர்தால்களால் ஒற்றுமையாக இருக்க முடியும். அதிகபட்சம் நூறு. ஆனால் அதற்கு மேல் தாண்டினால் அந்தக் குழுவில் பிணக்குகள் ஏற்படும். ஆனால் சேபியன்கள் ஆயிரக்கணக்கில் கூட ஒற்றுமையாக இருப்பார்கள். இனம், மதம் போன்ற உணர்வுகள் அவர்களை இணைக்கும்.

சேபியன்ஸை துரிதமாக வாசிக்க முடியவில்லை. ஆனால் அதற்கு புத்தகத்தின் தன்மையோ, மொழியோ சத்தியமாக காரணமில்லை. ஒன்று, அது நமக்கு சிந்திப்பதற்கு தரும் விஷயங்கள். பாதி பக்கம் படிப்பதற்குள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதைப்பற்றி யோசிக்குமாறு நேரிடுகிறது. இன்னொன்று, புத்தகம் தடியாக இருப்பதால் முதுகுப்பையில் வைத்து எடுத்துச் செல்ல தோதாக இல்லை. பொதுவாக புத்தகங்கள் படிப்பதில் அருவி அணுகுமுறையைத் தான் கையாள்வேன். அதாவது ஒரு புத்தகத்தை முழுமையாக முடித்தபின் அடுத்த புத்தகம். ஆனால் சேபியன்ஸிற்கு அதனை பின்பற்றினால் தேக்கநிலை ஏற்படும். எனவே அவ்வப்போது ஒரு சேப்டர் சேபியன்ஸ். பிரதானமாக மற்ற புத்தகங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

சென்ற வாரம் புத்தகம் படிக்க முடியாததற்கு இன்னொரு காரணம், கண்ணில் ஏற்பட்ட நோய்த்தொற்று. இரவு படுக்கப் போகும்போது சாந்தமாக இருந்த கண்கள் காலையில் விழித்துப் பார்த்தால் வேட்டையாடு விளையாடு ராகவனுடையதைப் போல இருக்கின்றன. கம்ப்யூட்டர் முன்னால் உட்காரக்கூடாது, புத்தகம் படிக்கக்கூடாது, போனை தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். டெலிகேட் பொஸிஷனில் சிக்கிக்கொண்டேன். பொதுவாக மருத்துவ விடுப்புக்கு மேலாளரை சமாதானப்படுத்துவது சிரமமான காரியம். ஆனால் கண்ணில் ஏதாவது பிரச்சனை என்றால் பூரண கும்ப மரியாதையுடன் விடுப்பு அளிக்கப்படும். ஒருமுறை கடமை தவறா ஊழியனாய் கண் தொற்றுடன் அலுவலகம் சென்றுவிட்டேன். மேலாளர் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி, விடுப்பு கொடுத்தார். 

மற்ற காரணங்கள் சொன்னால் நிறைய கேள்வி கேட்பார்கள். பொய்கள் பல்கிப் பெருகும். பள்ளியில் படிக்கும்போது எதற்கெடுத்தாலும் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் தான். மறுநாள் போனால் ஃபீவர் ஒரே நாளில் சரியாகிவிட்டதா என்று நக்கலடிப்பார்கள். அப்போது, கூட ரெண்டு நாள் விடுப்பு எடுத்திருக்கலாமோ என்று தோன்றும். எனக்கெல்லாம் பள்ளியில் மட்டுமில்லாமல் கல்லூரியில் கூட இந்த லீவ் லெட்டர் இம்சைகள் தொடர்ந்தன. நிறைய பொறியியல் கல்லூரிகள் இப்படித்தான். சினிமாக்களில் காட்டுவது போல இல்லை. என் கல்லூரிக் காலத்தில் நான் எப்போது விடுப்பு எடுத்தாலும் குறிப்பிடும் ஒரே காரணம் கோயிங் டூ டெம்பிள்’ தான். தெய்வகாரியம் என்பதால் மறுக்க முடியாது. நக்கலடிக்கவும் முடியாது. தற்போது அலுவலகங்களில் அநேக ஊழியர்கள் பயன்படுத்தும் விடுப்புக் காரணம் ‘ஸ்டொமக் அப்செட்’. பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கொண்டுவரும்போது பையில் மேலோட்டமாக அழுக்கு பனியன், ஜட்டிகளை வைப்போம். ஜட்டிகளுக்குள் கையை விட்டு நோண்டமாட்டார்கள். அனுபவரீதியாக நிரூபணமான யுக்தி இது. ஸ்டொமக் அப்செட் என்பதும் அப்படித்தான். எந்த மேலாளரும் ஓ ! அப்படியா ? எப்படிப் போச்சு ? என்று கிளறல் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற யோசனையாக இருக்கலாம். ஆனால் சில மேலாளர்கள் பாதாள சாக்கடை அடியாழம் வரை செல்வதற்கு கூட தயங்குவதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ஊழியர் விடுப்பு எடுத்துவிட்டு ஸ்டொமக் அப்செட் என்றால் கிளிஷேவாக இருக்குமென்று கருதி டிஸ்ஸண்ட்ரி என்ற புது வார்த்தையைப் போட்டார். மேலாளரிடம் வசமாக சிக்கினார். டிஸ்ஸண்ட்ரி, டயோரியா, லூஸ் மோஷன் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகளை நுட்பமாக விளக்கினார். ஒருவருக்கு டிஸ்ஸண்ட்ரி வந்தால் அந்த தெருவே நாறிப்போகும் என்றார். அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும்படி ஆகிவிட்டது. மேலாளரின் வேற்றுத்துறை சார்ந்த அறிவைக் கண்டு தான். அந்த தருணத்தில் மேலாளர் ஒரு கேஸ்ட்ரோ-எண்ட்டராலஜிஸ்ட்டாக மாறுவதை நான் கண்கூடாக பார்த்தேன். 

பொதுவாக உலகில் ஒருவர் மருத்துவம் படித்தால் அவர் மருத்துவர், சிவில் எஞ்சினியரிங் படித்தால் அவர் பில்டிங் காண்டிராக்டர், ஆட்டோமொபைல் படித்தால் அவர் மெக்கானிக், இப்படி ப்ளம்பர், டெய்லர் என ஏராளமான துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனால் மேனேஜராக இருந்தால் மட்டும் இவர்கள் எல்லோருமாகவும் இருக்கலாம். ஏன்னா அவங்க டிஸைன் அப்படி !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment