வணக்கம் மக்களே...
கால் சென்டரில் ஓர் இரவு, வாய்கள் பேசி அடங்கியிருந்ததன. கண்கள் ரிச்சர்ட் எப்போது கிளம்புவார் என்று காத்திருந்தன. ஒரு வழியாக மனிதர் வீட்டுக்கு கிளம்புவதற்காக ஹெல்மெட்டை கையில் எடுக்க, சில நிமிடங்களில் விழிகளில் இருள் கலந்தது. இதுதான் எனது வாழ்க்கை. தொடர்ச்சியாக நைட் ஷிப்டில் பல மாதங்கள் இருந்து தூக்கத்தை தொலைத்திருந்தேன். அவ்வப்போது அவைலபிலிட்டி இருக்கும் போது ஐந்து நிமிடங்கள், பேருந்து பயணத்தில் ஜன்னல் கம்பியில் தலை இடித்துக்கொள்ளும் வரை ஒரு பத்து நிமிடங்கள், வீடு திரும்பியதும் சிற்றுண்டி தயாராகும் வரை ஒரு சிறு தூக்கம், பதினோரு மணிக்கு காலர் டியூன் வாங்கலையோ சாமி என்று டோகோமோவில் இருந்து கால் வரும்வரை ஒரு தூக்கம், மதிய உணவை சாப்பிடுவதற்கு தங்கை மண்டையில் அடித்து எழுப்பும் வரை மறு தூக்கம், மாலை வெயில் ஜன்னல் வழியாக உள்ளே வரும்வரை ஒரு தூக்கம், மீண்டும் பேருந்தில் ஏறியதும் என்னவளிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வரும்வரை குட்டித்தூக்கம். இப்படியாக தவணை முறையில் தூங்கிக்கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் கண்கள் விஜயகாந்தின் கண்கள் போல மாறி வருகின்றன.
மேலே உள்ள படத்திற்கும் ரிச்சர்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...!!! |
சரி விஷயத்துக்கு வருவோம். என்னைப்போல அலுவலகத்தில் தூக்கத்தை தவிர்க்க முடியாமல் சிரமப்படும் அன்பர்களுக்காக ஒரு பயனுள்ள பதிவை வெளியிட விரும்பியதன் விளைவே இந்தப் பதிவு. நைட் ஷிப்டில் மட்டும்தான் இந்த அக்கப்போர் என்றில்லை. பகல் ஷிப்டில் வேலை செய்வோருக்கும்கூட மதிய உணவை சாப்பிட்டபின் ஒரு மயக்கம் ஏற்படும். இந்த சமயத்தில் உடல் உணவை ஜீரணிக்கும் வேலையில் பிசியாகி விடுவதால் மற்ற ஆணிகளை புடுங்க முடிவதில்லை. இது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்றாலும் நீங்கள் தூக்கக்கலக்கத்தில் உங்கள் அலுவலக தரவுகளை தாறுமாறாக மாற்றி அமைக்கும் அபாயமும் உண்டு. எனவே தூக்கத்தை கலைத்துவிட்டு பின்வரும் ஆலோசனைகளை கவனமாக படித்து செயல்படுங்கள்.
1. அளவுச்சாப்பாடு:
வீட்டில் இருந்து அடுக்கு டிபன் பாக்ஸில் வரும் அசைவ உணவை ஒரு பிடி பிடிப்பது, ஆக்ஸ் போட்டுவிட்டு ஆந்திரா மெஸ்ஸில் போய் ஒரு வெட்டு வெட்டுவது இவற்றையெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மதிய உணவிற்கு பதிலாக காலை உணவில் கவனம் செலுத்தினால் சிறப்பு. மதிய உணவையும் கூட ஒரேயடியாக சிங்கிள் சிட்டிங்கில் சாப்பிடாமால் இரண்டு அளவுச்சாப்பாடாக பிரித்துக்கொள்ளலாம். புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொண்டால் நல்லது.
2. உடற்பயிற்சி:
தினசரி உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். சிலர் நேரமில்லை என்று அலட்டிக்கொள்வார்கள், சிலர் ஏழுகழுதை வயதான பிறகு எக்சர்சைஸ் என்ன வேண்டி கிடக்கு என்று அலுத்துக்கொள்வார்கள். படுத்து எழுந்து உருண்டு தான் உடற்பயிற்சி செய்யவேண்டுமென்ற அவசியமில்லை. முந்தய ஸ்டாப்பிங்கில் இறங்கி நடப்பது, லிப்டுக்கு பதிலாக படிக்கட்டை பயன்படுத்துவது (நம்மூரில் என்னைக்கு லிப்டு வேலை செஞ்சிருக்கு) இவை கூட உடற்பயிற்சி தான்.
3. வேலைகளை பிரித்தறிதல்:
கஷ்டமான ஆணிகளை எல்லாம் காலையில் புடுங்கிவிட்டு சுலபமான ஆணிகளை எல்லாம் மதிய உணவிற்குப்பின் புடுங்கலாம். எது கஷ்டமான ஆணி எது சுலபமான ஆணி என்று எப்படி பிரித்தறிவது. (மொத்தத்தில் நம்ம புடுங்குறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்). செயற்குழு கூட்டம், முக்கியமான சந்திப்புகள் போன்றவற்றை முதல் பாதியில் வைத்துக்கொண்டு கோப்புக்களை ஆராய்வது, மெயில் அனுப்புவது போன்றவற்றை இரண்டாவது பாதியில் வைத்துக்கொண்டால் அலுப்பு தெரியாது.
4. சுற்றுப்புறம் பேணுதல்:
உங்கள் கேபினை உங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாகவும் வைத்திருத்தல் வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களின் புகைப்படம், பூக்கள், உற்சாகமூட்டும் வாசகங்கள் இவ்வாறாக உங்கள் மனதிற்கு பிடித்த எதுவாக இருந்தாலும் ஓகே. இந்த டெக்னிக்கை அறிந்து வைத்திருக்கும் அதிகாரிகள் சிலர் டாட்டூ ஒட்டிக்கொண்டு இடுப்பு காட்டும் டோகோமோ பெண்ணின் படத்தை கேபினில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்.
5. குட்டித்தூக்கம்:
மிகவும் சிரமப்பட்டு தூக்கத்துடன் சண்டை போடுவதைவிட கொஞ்சமாக தூங்கிவிடுவது நல்லது. மெத்தை தலையணை எல்லாம் தேவையில்லை. சாதாரணமாக டேபிளில் அல்லது சேரில் சாய்ந்துக்கொண்டோ கூட தூங்கலாம். எதுவுமே இல்லை என்றால்கூட வெறுமனே கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் உட்கார்ந்திருக்கலாம். ஆனால் இத்தகைய செயல்களை செய்யும்போது ஆள்காட்டி விரலால் கீபோர்டின் டேப் பட்டனை விட்டுவிட்டு அழுத்திக்கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்கும்.
6. கொஞ்சம் தியானம்:
தியானம் உடலை இளமையாக வைத்திருப்பதாக மருத்துவம் கூறுகிறது. மதிய நேரத்தில் கண்கள் சொருகும்போது சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். தியானம் செய்கிறேன் பேர்வழி என்று அப்படியே மட்டையாகி விடவேண்டாம். சீரான மூச்சுபயிற்சி செய்தால் உடலும் மனதும் புத்துணர்ச்சி அடையும். உங்கள் மனதிற்கு பிடித்தமான அல்லது உற்சாகமூட்டும் பாடல்களை கேட்கலாம்.
7. சிறு நடைபயணம்:
ஒரேயிடத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தால் சோம்பல் சேர்ந்துக்கொண்டே இருக்கும். அதற்கு பதிலாக உங்களுக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களை கண்காணிப்பது போலவே அலுவலகத்தை சுற்றி ஒரு ராஜநடை நடக்கலாம். மொட்டை மாடி வரை ஒரு முறை வேகமாக ஓடிவிட்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
8. முகம் கழுவுதல்:
தூக்ககலக்கம் அதிகரிக்கும்போது அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிட்டு வரலாம். இதுபோல கழுவும்போது உள்ளங்கையில் நீரை வைத்துக்கொண்டு அந்த நீருக்குள் கண்களை சில நொடிகள் வைத்திருந்து மூடி மூடி விழித்தால் பெரிய வித்தியாசத்தை உணருவீர்கள். அப்படியே ஆளுயர கண்ணாடி முன் நின்று உங்கள் அழகை ரசித்தால் பயத்தால் உங்கள் தூக்கம் தொலைய வாய்ப்புகள் உள்ளன.
9. பதிவுலகம்:
பெரும்பாலானவர்களது பணி கணினியும் கணினி சார்ந்ததாகவுமே இருக்கின்றன. எனவே தூக்கம் துரத்தும் போது நான் எழுதிய மொக்கை பதிவுகளை எல்லாம் படித்துவிட்டு பக்கம் பக்கமாக பின்னூட்டம் போடலாம். என்னது...? ரொம்ப ஓவரா இருக்கா... ரைட்டு விடுங்க. பதிவுலகில் "அவிய்ங்க", "சேட்டைக்காரன்", "ஜில்தண்ணி" என்று எத்தனையோ நல்ல பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களது பதிவை படித்தும் பயன் பெறலாம்.
10. காபியும் அரட்டையும்:
காபி - சிலருக்கு தூக்கத்தை கொடுக்கும், சிலருக்கு தூக்கத்தை கெடுக்கும். தூக்கத்தை கொடுக்கும் என்று நினைப்பவர்கள் அவித்த வேர்க்கடலையை மாற்றாக பயன்படுத்தலாம். காபியை அணு அணுவாக ரசித்து குடிப்பதை விட பக்கத்து கேபினில் இருக்கும் அனுவுடன் அரட்டை அடித்தபடி குடித்தால் நன்று. டென்ஷனை குறைக்கிறேன் என்று சிகரெட்டை பற்ற வைத்தால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.
எப்படி... தூக்கத்தை குறைக்க நான் சொன்ன பத்து கட்டளைகள் பயனுள்ளதாக அமைந்ததா...? முக்கியமான ஒன்றினை சொல்ல மறந்துவிட்டேன். இந்தப் பதிவிற்கு இன்ட்லியில் ஓட்டு போடாவிட்டாலோ, பின்னூட்டம் எழுதாவிட்டாலோ நிச்சயமாக உங்களுக்கு இரவில் கூட தூக்கம் வராது. அப்படியே தூக்கம் வந்தாலும் கனவில் நான் ரத்த காட்டேரியாக வருவேன்.
இந்தப் பதிவுடன் நமது நைட் ஷிப்ட் நண்பர்கள் சிலரது ரியாலிட்டி படங்களை இணைக்க விரும்பினேன். அவ்வாறாக இணைத்தால் சுரேஷ் வருத்தப்படுவார் என்பதனாலும் சுரேஷ் அணியின் நண்பர்களை இழக்க நேரிடும் என்பதாலும் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவை படித்தபின்பாவது என்னை டே ஷிப்டுக்கு மாற்றுவார்கள் என்ற...
நம்பிக்கையுடன்,
N.R.PRABHAKARAN
பி.கு: மேலே குறிப்பிட்டுள்ள பத்து கட்டளைகளும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. எதையாவது செயல்படுத்துகிறேன் பேர்வழி என்று அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அடிவாங்கினால் நானோ, தத்துபித்துவங்கள் வலைத்தளமோ பொறுப்பல்ல.
|