27 November 2017

பிரபா ஒயின்ஷாப் – 27112017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தீரன் அதிகாரம் ஒன்று பார்த்தாயிற்று. இரண்டு தடவை. சில படங்களை இரண்டாவது முறை பார்க்க வேண்டிய நிர்பந்தம் என்பது திருமணமானவர்களுக்கே உண்டான சங்கடங்களில் ஒன்று. எனினும் நானும் சில விவரங்களுக்காக தீரனை மீண்டும் பார்க்க விரும்பியிருந்தேன். 

சிறுகுறிப்பாக, தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான கமர்ஷியல் ஆக்ஷன் மசாலா படம். தீரனிடம் எல்லோரையும் கவனிக்க வைத்த விஷயம் அதன் கதை. அடிக்கடி நினைப்பேன். சினிமாக்காரர்கள் போலீஸ் ரெகார்டுகளையும், மனநல மருத்துவமனை கேஸ் வரலாறுகளையும் புரட்டினாலே அவர்களுக்கு லட்சக்கணக்கான கதைகள் கிடைக்கும். ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கு என்றெல்லாம் ஆபாசமாக உளற வேண்டியதில்லை. அப்படி போலீஸ் கேஸ் கட்டுகளிலிருந்து ஒரு சுவாரஸ்யமான கதையை முந்திக்கொண்டு எடுத்திருக்கிறார் வினோத். அது மட்டுமல்ல தீரன் என்கிற ஃப்ரான்ச்சைஸை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார். இனிவரும் காலங்களில் தீரன் அதிகாரம் 133 வரை கூட எடுக்கலாம் என்னும் அளவிற்கு நம்மிடம் விஷ ஊசி வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன. 

தீரனைப் போலவே இந்த ஆண்டு புதிதாக நிறுவப்பட்ட இன்னொரு ஃப்ரான்ச்சைஸ் துப்பறிவாளன். என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு ஃப்ரான்ச்சைஸ்களும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள தங்க முட்டையிடும் வாத்துகள். ஆனால் சினிமாக்காரர்கள் அவற்றை கண்ணும் கருத்துமாக கையாள்வார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் வாத்துகளை கழுத்தறுத்துப் போடுவதில் சினிமாக்காரர்கள் ஸ்பெஷலிஸ்டுகள். எப்போதும் சீக்வெல் படங்கள் எடுக்கும்போது அது முந்தைய பாகத்தைப் போல சிறப்பாக இல்லை என்று பேச்சு வந்துவிட்டாலே அது அதன் குறிக்கோளில் தோல்வியடைந்துவிட்டதாக பொருள். அந்த வகையில் தீரன், துப்பறிவாளன் படங்களின் அடுத்த பாகங்களை எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக துப்பறிவாளன் அடுத்த பாகத்தை மிஷ்கினும், தீரனின் அடுத்த பாகத்தை வினோத்தும் இயக்காமல் இருப்பது நல்லது. முடிந்தால் மாற்றி இயக்கிப் பார்க்கலாம். எல்லாம் வெற்றிகரமாக அமைந்தால் இன்னொரு பத்து வருடங்களுக்குப் பிறகு தீரனும், துப்பறிவாளனும் ஒருசேர தோன்றும் படத்தை யாரேனும் இயக்கலாம். கொஞ்சம் அளவிற்கு அதிகமாக ஆசைப் படுகிறேனோ ?

இவ்வளவு சிலாகிப்பதால் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான படம்தான். ஆனால் பார்வையாளர்கள் அதனை செமத்தியான படம் என்று சொல்லும் அளவிற்கு அதன் இயக்குநர் காட்சிகளை தந்திரமாக கட்டமைத்திருக்கிறார். படத்தின் கதையை சில அத்தியாயங்களாக பகுத்து, ஒவ்வொன்றையும் விஸ்தாரமாக தயார் செய்கிறார் வினோத். இதனை இயக்குநரின் முதல் படமான சதுரங்க வேட்டையிலும் நாம் பார்த்திருப்போம். இந்த பாகங்களை தனித்தனியாக பார்த்தால் கூட ஒரு சிறுகதை படித்தது போல துண்டாகப் புரியும். மேலும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் பார்வையாளர்களை அக்காட்சிக்கு தயார் செய்கிறார், காட்சியின் இறுதியில் அது ஒரு பயங்கரமான காட்சி என்று நிறுவியும் விடுகிறார்.

ஸ்பாய்லர்கள் கவனம் ! பனே சிங் கைதாகும் காட்சியை எடுத்துக் கொள்வோம். சமாதானம் பேசப்போகும் தீரனுக்கு கொள்ளைக் கும்பல் பற்றிய ஒரு தகவல் கிடைக்கிறது. அது என்ன என்பது பார்வையாளர்களுக்கு முதலில் சொல்லப் படவில்லை. ஆனால் அவன் சமாதானம் பேசுவதை விடுத்து வேறு ஏதோ விவகாரமாக செய்யப் போகிறான் என்று மட்டும் புரிகிறது. தகவல் கிடைக்கும் இடத்திற்கு தன் அணியுடன் போய் காத்திருக்கிறான். தகவல் வருகிறது. பெரிதாக ஒன்றுமில்லை. பனே சிங் எனும் முக்கிய குற்றவாளி அவ்வழியாக வரும் பேருந்தொன்றில் பயணிக்கிறான். தீரனின் அணி அவனை கைது செய்கிறது. எப்படி ? கைது வாரண்டை காட்டி, மிஸ்டர் பனே சிங், யூ ஆர் அண்டர் அரெஸ்ட் என்று கிடையாது. பனே சிங்கை பலவந்தமாக கைது செய்ய முற்படும்போது அவன் பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பிக்க முயல்கிறான். தீரனின் அணி அவன் தப்பித்துவிடாமல், அதே சமயம் உயிரிழந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறது. பனே சிங்கிற்கும் தீரனின் அணிக்கும் ஒரு நீண்ட போராட்டம் காட்சிப் படுத்தப்படுகிறது. அந்த நீண்ட காட்சியின் முடிவில் பார்வையாளர்களின் மனதில் அடேங்கப்பா என்றொரு போலியான ஆச்சர்யம் ஏற்பட்டுவிடுகிறது. இதே போல பவாரியா கொள்ளையர்கள் ஆய்வாளர் சத்யாவின் வீட்டை கொள்ளையடிக்கும் காட்சி, பனே சிங்கை அவனுடைய கிராமத்தில் வைத்து கைது செய்ய முயலும் காட்சி, இறுதியில் ராஜஸ்தானிய கிராமத்தில் நடைபெறும் ஓநாய் சண்டைக்காட்சி என்று ஒவ்வொரு நீளமான காட்சியிலும் வினோத் ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கிறார். ஆச்சர்யமில்லை, படம் வெற்றியடைகிறது. 

மற்றபடி இயக்குநர் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சொல்லப்போனால் தீரன் ஒரு பீரியட் படம். ஆனால் அதற்குண்டான உழைப்பு அவ்வளவாக தெரியவில்லை. வசந்த மாளிகை டிஜிட்டல் வெர்ஷன், பளபள அட்டை காமிக்ஸ் எல்லாம் எப்போது வந்தது ஸ்வாமி ? மேலும் ஒரு ரயில் சண்டைக்காட்சியில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொருவராக பரவியிருக்கும் காவல்துறையினர் ப்ளூடூத் அல்லது அது போன்றதொரு சாதனத்தில் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். கதை நடைபெறும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அத்தனை வளர்ந்திருக்கவில்லை.

சில காட்சிகளை பார்க்கும்போது அதனை தியேட்டரில் ரசிகர்கள் எல்லாம் விசிலடிக்க வேண்டும் என்ற நோக்கில் படம் பிடித்திருப்பார்கள் போல தெரிகிறது. இக்காட்சிகளில் எல்லாம் கார்த்தியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஒரு காட்சியில் கொள்ளை கும்பலிடம் பிடிபட்ட லாரியை சோதனை போடுகிறார்கள். அதற்கு என்னவோ கார்த்தி லாரியின் மீது ஏறி நின்றுக்கொண்டு ‘புல் !’ என்று கத்துகிறார். ஏன் ஸ்வாமி அதை கீழே நின்று சொல்லக்கூடாதா ? இன்னொரு காட்சியில் பயங்கரமாக ஏதோ செய்யப்போகிறார் என்று நாம் யூகிக்கும் தருணத்தில் ‘லத்தி சார்ஜ்’ என்று அதே தொனியில் கத்துகிறார். மொத்த படத்தில் நான்கைந்து முறை இதே தொனியில் கத்துகிறார் கார்த்தி. பீஸ் ப்ரோ !

வழக்கமாக கமர்ஷியல் ஆக்ஷன் படமென்றால் அதில் ஹீரோயினுக்கு வேலை இருக்காது அல்லவா. பெரும்பாலான படங்களில் இரண்டாம் பாதியில் ஹீரோயின் காணாமல் போய்விடுவார். அத்தோடு க்ளைமாக்ஸில் உறுத்தும்படியாக திடீரென தோன்றி, அய்யர் வந்து கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஹீரோ ஹீரோயினிக்கு தாலி கட்டுவதாக சுபம் போடுவார்கள். நம் இயக்குநர் தந்திரமாக முதல் பாதியின் இறுதியில் ஹீரோயினை காலி செய்கிறார். அத்தோடு நில்லாமல் ஹீரோயின் மீதான ஹீரோவின் காதலை ஒரு எமோஷனல் அஸ்திவாரம் அமைத்து அதிலேயே ஜம்மென்று படுத்துக்கொள்கிறார். 

ஆனால் பாருங்கள் காதல் காட்சிகள் அப்படியொன்றும் செல்ஃப் எடுக்கவில்லை. ரகுல் நல்ல அழகிதான். ஆனால் அவருடைய பயன்பாடு என்னவென்று பாவம் இயக்குநருக்கு தெரிந்திருக்கவில்லை. மேலும் கார்த்தியும் ரகுலும் காதல் செய்யும்போது அவர்கள் நிஜமாகவே காதல்தான் செய்கிறார்களா என்றே சந்தேகப்படும்படியாக அழுத்தமில்லாமல் இருக்கின்றன காட்சிகள். பேசாமல் இருவருக்கும் வீட்டில் பார்த்து மணமுடித்து வைப்பதாக காட்டியிருந்தால் இவ்வளவு தொந்தரவுகள் இருந்திருக்காது. ரகுல் வேறு கார்த்தியை பழங்கால அத்தையைப் போல மாமா மாமா என்று அழைத்து கடுப்பேற்றுகிறார்.

இரண்டாம் பாதியில் வரும் டிங்கட் டிங்கட் டிங்கனா பாடல் தரம். ரகுலின் பயன்பாடு தெரியாத இயக்குநருக்கு ஸ்கார்லெட்டின் பயன்பாடு தெரிந்திருப்பது ஆச்சர்யம். வேற்று மொழி ஆட்கள் பேசும் வசனங்களுக்கெல்லாம் சப்டைட்டில் போட்டு சோதனை செய்யாமல், அதே சமயம் உறுத்தாமல் தமிழ் பேச வைத்தது நல்ல துவக்கம். தீரனின் பிரதான பலம் அதன் கதைதான். படம் பார்த்தபிறகு ஒரிஜினல் தீரன் ஜாங்கிட்டின் தீரச் செயல்களை இணையத்தில் படித்தேன். சினிமாவுக்காக கொஞ்சம் ஜிகினா காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி பெரும்பான்மை கதையும் நிஜமும் ஒத்துப்போகிறது. நடந்த சம்பவத்தைத் தான் படமாக்கியிருக்கிறார்கள், இதனை ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான படம் என்றெல்லாம் சீரியஸாக முறுக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 November 2017

பிரபா ஒயின்ஷாப் – 20112017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிறைய சொதப்பல்களுடனும் நிறைய ஆச்சர்யங்களுடனும் கோவா பயணம் முடிந்திருக்கிறது. மற்றபடி ஜனவரி 22 வரை கோவா பயணம் குறித்து எழுதுவதற்கு தடை உத்தரவு இருப்பதால் 2018ல் விரிவாக பார்க்கலாம்.

இப்போது ஒரு பாடல் பற்றி...

நீண்ட ப்ளேலிஸ்ட் என்பது கிட்டத்தட்ட பட்டினத்தாரின் கரும்பு போன்றது. எல்லாப் பாடல்களும் இனிமையானவைதான். ஆனால் இடையே திடீரென ஒரு பாடலில் மனது நின்றுவிடும். கரும்பு இனிக்கும். அக்குறிப்பிட்ட பாடல் மட்டும் ரிப்பீட்டில் ஒலிக்கும். அப்படி சமீபத்தில் இனித்த கரும்பு தீக்குருவி. படம்: கண்களால் கைது செய்.

இப்பாடலை இத்தனை வருடம் தவறவிட்டதற்காக வருந்துகிறேன். எதோம்மா எதோம்மா என்று ஏதோ மாதிரிதான் தொடங்குகிறது பாடல். தொடர்ந்து ஹரிணியின் குரலில்

தீக்குருவியாய்
தீங்கனியினை
தீக்கைகளில்
தீஞ்சுவையென
தீப்பொழுதினில்
தீண்டுகிறாய்

மனித உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் பாயும் முறையை எப்படியோ கண்டுணர்ந்து அதனை இசை வடிவமாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழுக்கென இருக்கும் தனித்துவமான ஒலிச்சுவையை இப்பாடலில் உணரலாம். இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தேன்மொழி தாஸ் ! கவிஞரின் வரிகள் ஒரு வகையான ரசனை என்றால், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதன் சிறப்பை இன்னும் கூட்டுகிறது. ஹரிணியின் குரல் கேக்கின் மீது வைக்கப்பட்ட செர்ரி !

அடுத்தது சரணம். கடந்த ஒரு வாரத்தில் இந்த முதல் சரணத்தை மட்டும் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.

சில்லிடவா சீண்டிடவா
கிறங்கிடவா கிறக்கிடவா
கை தொடு தந்திரா !
அடி யாழ் உடலிலே
வாள் இடையிலே
நுரையாய் மறையாதா
நிறைத்திடு நந்திதா !
இடையோர மூன்றாம்பிறையே
முத்தம் ஏந்தி வா வா...
இமையோரத் தூவல் சிறையே
துயில் தூக்கிப் போ போ...

ஆண்குரல் முகேஷ் ! அவருடைய முதல் பாடல். பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு போக வேண்டிய பாடலை ரஹ்மான் முகேஷிற்கு கொடுத்ததாக முகேஷே ஒரு பேட்டியில் சொல்கிறார். இவருடைய குரலில் வரும் இறக்கங்களும் கிறக்கங்களும் பயங்கரம் ! இரண்டாவது சரணத்தில் சொல்லிடு நந்திதா என்று கெஞ்சலாக / கொஞ்சலாக பாடுமிடம் அபாரம்.

ஒருவேளை நீங்களும் என்னைப்போல இப்பாடலில் மயங்கி இதன் ஒளிப்பிரதியை பார்க்க நினைத்தீர்கள் என்றால் செத்தீர்கள். மொத்தமாக கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் வசீகரனும், ப்ரியா மணியும் டாம் & ஜெர்ரி போல ஸ்விஸ் தெருக்களில் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடுகிறார்கள். இன்னொரு பக்கம் பழைய தூர்தர்ஷன் காண்டம் விளம்பரங்களில் எல்லாம் வருவது போல ஹீரோவும் ஹீரோயினும் அரை நிர்வாணமாக வந்து போகிறார்கள். உச்சபட்ச வன்கொடுமை என்பது வசீகரனின் முகபாவனைகள் தான். ப்ரியா மணி போன்ற அல்வாவோடு ஜல்ஸா பண்ணும்போது கூட க்ரீன் டீ குடித்த மிஸ்டர் பீன் மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்.

தேன்மொழி தாஸ்
இப்பாடல் உருவான விதம் பற்றி கவிஞர் தேன்மொழிதாஸ் (பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்) கூறியிருப்பது -

பாரதிராஜா அவர்களின் 'கண்களால் கைது செய்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது, ரஹ்மான் சாரின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பாடல் கம்போசிங்கின்போது செல்வேன். ஒருநாள் சிறிய பாடல் மெட்டைக் கொடுத்து 'இதற்கு வரிகளை எழுதுங்கள்' என்றார். அந்தப் பாடலை ஹெட்போனில் கேட்டேன். அந்தப் பாடலுக்கு 'கப குபா'ன்னு பின்னணியில் ஒரு இசை வந்தது. அதற்கு மூன்று பக்கத்துக்கு வரிகளை எழுதிக் காட்டினேன். பின்னணி சத்தத்துக்கு இத்தனை வரிகளை எழுதியுள்ளீர்களே! என பாராட்டிய ரஹ்மான் சார், ‘நீண்டநாட்களாக என்னிடம் ஒரு மெட்டு உள்ளது. அதற்கு வரிகளை எழுத முடியாமல் இருக்கிறது. எங்கே? நீங்கள் எழுதுங்கள் பார்ப்போம்!என்று மெட்டைக் கொடுத்தார். ஒரு மெட்டல் புளூட்டில் இடைவெளி விடாமல் அந்த இசை வாசிக்கப்பட்டிருந்தது. அது, சவாலான மெட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். அதற்கு நான் 'தீக்குருவியாய் தீங் கனியினை தீக் கைகளில் தீஞ் சுவையென தீப் பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே தந்திரனே பூமந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியில் தேடுகிறாய் தந்திரா' என்று பாடல் வரிகளை எழுதி அவரிடம் காண்பித்தேன். படித்த ரஹ்மான் சார் 'இன்றே இந்தப் பாடலை பதிவாக்கிவிடுவோம்' என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வேலையில் இறங்கினார். அவருடைய குருநாதர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜான்சன், அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாடினார். 'ஏதோமா ஏதோ மாதிரி போதே என்ன வழியில்லையா' என்று ஜான்சன் தொடங்க, முகேஷும் ஹரிணியும் 'தீக்குருவியாய் தீங் கனியினை' பாடலைப் பாட ஆரம்பிக்க அருமையான மெலடி பாடலை கேட்க முடிந்தது.

கண்களால் கைது செய் படத்திற்கு வசனம் எழுதியது நம் சுஜாதா என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். படம் குறித்தும், தீக்குருவி பாடல் குறித்தும் சுஜாதா அவருக்கே உரிய பாணியில் எழுதியவை –

கோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டும்போது தினம் ஒரு ஸ்வர்ண மாளிகைக்கான வினைல் விளம்பரத்தில் ஓர் அழகான பெண்ணின் முகத்தைப் பார்ப்பேன். என்னையே விழுங்குவதுபோலப் பார்வை. இந்தப் பெண்ணைக் கோடம்பாக்கம் விட்டு வைக்காதே என்று யோசித்தேன். கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தி  விட்டார். பெயர் ப்ரியாமணி. கண்களால் கைது செய் என்னும் கவிதைத்தனமான தலைப்பு கொடுத்துவிட்டு ஒரு க்ரைம் கதை பண்ண விரும்பினார் பாரதிராஜா. அவருடைய உதவியாளராகப் பணிபுரிந்த ப்ரேம் கொடுத்த ஐடியா. ஹோப் டைமண்ட் போன்ற ஒரு மிகப் பெரிய வைரத்தை ஒரு கண் காட்சியில் திருட்டுப் பழக்கம் உள்ள பணக்காரக் கதாநாயகன் திருடிவிடுவதாகவும் கண்காட்சியில் அதற்குப் பொறுப்பேற்றிருந்த விற்பனைப் பெண்ணான கதாநாயகி மேல் பழி விழுவதாகவும் போலீஸ் விசாரணையில் கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போலக் கதாநாயகனுடன் சுவிட்சர்லாந்து சென்று அவன் எங்கே வைரத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று கண்டு பிடிக்க நாய்க்குட்டியின் கழுத்திலும் மீன் தொட்டியிலும் தேடி…  இப்படிக் காமா சோமா என்று கதை சென்றது. அதைக் கூடிய வரையில் இஸ்திரி போட்டு நேராக்க முயன்றேன்.

ஒரு கட்டத்தில் எல்லாம் செட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்விஸ் போகவேண்டிய கெடுவில் படப்பிடிப்பைத் துவக்கிவிட்டார். சித்ராலட்சுமணன் கோ-டைரக்டர். தோத்தாத்திரிதேன்மொழி என்று இரண்டு அசிஸ்டண்டுகள். தேன்மொழி புதுக்கவிதை எழுதும் பெண் கவிஞர். ஏ.ஆர்.ரெஹ்மான் மெட்டு ஒன்றுக்கு அவர் எழுதிய பாடல் வரிகள் (தீக்குருவி) இன்று வரை யாருக்காவது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்.

ப்ரியாமணி அந்தப் படத்தில் பஸ் ஸ்டாண்டில் காணாமற்போன குழந்தைப் போலத்தான் தெரிந்தார். மாடலிங் உலகமும் சினிமா உலகமும் வேறு என்று தெரிந்துகொள்ளவே அவருக்கு நாளாயிற்று. கதாநாயகனும் புது நடிகர். கோயமுத்தூரிலிருந்து வந்த அழகான முஸ்லிம் இளைஞர். அவர் பெயரை மாற்றி கொச்சைச் தமிழில் அவரையே பேச வைத்தது படத்துக்குப் பெரிய பின்னடைவாயிற்று. ப்ரியாமணியின் குரல் சரியில்லை என்று அவருக்குத் தமிழ் சினிமாவின் அனைத்துக் கதாநாயகிகளுக்கும் குரல் தரும் சவீதாவோ ஜெயகீதாவோ டப்பிங் குரல். கண்களால் கைது செய் தமிழ் மக்களின் கவனத்தைக் கைது செய்யவில்லை.  மறுபடியும் இது ஒரு த்ரில்லரா, காதல் கதையா என்கிற குழப்பத்தில் தவித்தது கதை.

சுஜாதாவின் வரிகளை படித்ததும் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆறுதல் – கதாநாயகனுக்கு வசீகரன் என்கிற பெயரை தலைவர் தான் சூட்டியிருக்கிறார் !

தகவல்கள் உதவி:
விஜய் மகேந்திரன் (மின்னம்பலம்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 November 2017

பிரபா ஒயின்ஷாப் – 13112017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான்கு நாட்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஒயின்ஷாப்பின் இப்பிரதியை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் நான் கோவாவின் ஏதாவது ஒரு கடற்கரையில் உற்சாகமாக இருப்பேன்.

புதிய காதலி எஸ்கேப்பில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலாவது, ஜியோஸ்டார்ம். இரண்டாவது, அவள்.

ஜியோஸ்டார்ம் படம் பார்க்கப் போனதே ஏறக்குறைய ஒரு டிஸாஸ்டர் பட க்ளைமாக்ஸ் போலாகிவிட்டது. ஸ்பென்ஸரிலிருந்து வெளியே வரும்போதே இடியுடன் கூடிய கனமழை. சுமார் நூறு பேர் மழை நிற்பதற்காக காத்திருக்க, ஒரு கதாநாயகனை போல அவர்களை விலக்கிக்கொண்டு நான் வெளியே வந்து, மேலேயிருந்து கேட்ட இடி சப்தம் காமராசு பட லைலாவை நினைவூட்ட, பயந்தபடியே நடந்துவந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் நுழையும்போது என்னிரு ஷூக்களிலும் தலா ஒரு லிட்டர் தண்ணீர் சேர்ந்திருந்தது. சதக்கு சதக்கு என்று ஈர ஷூக்களை குற்ற உணர்வுடன் மிதித்துக்கொண்டு திரையரங்கம் சென்றால் அங்கே நிறைய பேருக்கு அதே நிலைதான்.

நம் தமிழ் சினிமாக்களில் ஹீரோ அரசியல்வாதியின் சட்டையைப் பிடித்தால் நாமெல்லாம் சிலிர்த்துப் போய் சில்லறையை சிதறவிடுவது போல ஹாலியுட்டில் விண்வெளிப் படங்களுக்கு சிலிர்ப்பு அதிகம் என்று ஒருமுறை (ஹாய்) மதன் சொல்லியிருந்தார். ஜியோஸ்டார்மும் அந்த வரிசைதான். 

பருவநிலை மாற்றங்களால் உலகில் ஆங்காங்கே பேரழிவுகள் நிகழத் துவங்குகின்றன. அவற்றிலிருந்து உலகை காப்பாற்றுவதற்காக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு விண்வெளி முகாம் அமைத்து செயற்கைக்கோள்களை நிறுவுகின்றன. விண்வெளி முகாமின் பெயர் ‘டச்சு பாய்’ ! (ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா ?). துவக்கத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டச்சு பாயை உலக நாடுகள் குழுவிடம் ஒப்படைப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக அதன் சில செயல்பாடுகள் தவறாக அமைகின்றன. அப்கானில் ஒரு கிராமமே உறைந்து போகிறது, ஹாங் காங்கில் பூமியின் அடியிலுள்ள எரிவாயுக் குழாய்கள் வெடிக்கின்றன. டோக்கியோவில் பனிக்கட்டி மழை பொழிகிறது, இவற்றிற்கெல்லாம் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக ஜியோஸ்டார்ம் எனப்படும் உலகளாவிய பேரழிவு ஏற்படப்போகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு, இறுதியில் சதி முறியடிக்கப்பட்டதா என்று சொல்கிறது கிளைமாக்ஸ் !

அண்ணன் – தம்பி சென்டிமென்ட், அப்பா – மகள் சென்டிமென்ட், கொஞ்சம் காதல், ஒரு படுக்கையறைக் காட்சி என்று பக்கா தமிழ் சினிமா கண்டென்ட். ரீமேக் செய்தால் நல்ல இரட்டை ஹீரோ சப்ஜெக்ட் தயார். ஒரே ஆள் டபுள் ஆக்ஷனும் செய்யலாம். 

ஆப்கன், ஹாங் காங், டோக்கியோ வரிசையில் நம் இந்தியாவின் மும்பையும் ஒரு காட்சியில் வருகிறது. இந்தியா என்றதும் ஒரு புழுதி படர்ந்த கடைத்தெரு, அழுக்கான மனிதர்கள், அழுக்குச் சட்டையில் ஒரு சிறுவன், அவனுடன் அழுக்காக ஒரு நாய் என்று அழுக்காக காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவின் பார்வையில் இந்தியா ஒரு அழுக்கான நாடு என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே பிரேசிலை காட்டும்போது கடற்கரையில் மக்கள் திரளாக அமர்ந்து ஓய்வெடுப்பது போலவும், அரபு நாட்டைக் காட்டும்போது உயர, உயரமான கட்டிடங்களையும் காட்டுகிறார்கள்.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஜியோஸ்டார்ம் தோல்விப்படம் என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் படத்தின் விஷுவல்கள் எப்போதும் போல என்னை மலைப்படையவே செய்தன.

அவள் ! துவக்கத்தில் ஏதோ டப்பிங் படம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். முழுக்க இல்லை போலிருக்கிறது. முதலில் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி. ஸ்ரீமன் போன்ற கும்பல் இல்லாமல் நீட்டாக படம் எடுத்ததற்கே இயக்குநரின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டும்.

நான் படம் பார்க்கப் போன சமயத்தில் எஸ்கேப்பில் நான்கைந்து அய்யம்மாக்கள் படம் பார்க்க வந்திருந்தார்கள். படம் முழுக்க, நய்ய நய்ய என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக சித்தார்த் – ஆண்ட்ரியா ரொமான்ஸ் செய்யும் போதெல்லாம் அய்ய, இன்னாடி இவன் ஒட்டிக்கினே இருக்கான், ம்க்கும் என்று சலம்பியபடி இருந்தார்கள். யாரோ ஒரு புண்ணியவான் நிர்வாகத்திடம் முறையிட்டு அவர்கள் வந்து அய்யம்மாக்களிடம் சொல்லிவிட்டு போனார்கள். அப்போதும் முக்கல்களும், முனகல்களும் குறைவதாக இல்லை. ஒருமுறை DND ஷோ முயன்று பார்க்க வேண்டும்.

அவள் - அச்சு பிச்சு காமெடி எல்லாம் இல்லாத கலப்படமில்லாத ஹாரர் படம். இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சித்தார்த் – ஆண்ட்ரியா தம்பதியர் வசிக்கிறார்கள். அவர்களுடைய பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் வருகிறது. அந்த பக்கத்து வீடுதான் டார்கெட். இதுவரை நாம் பார்த்த அத்தனை ஆங்கில, கொரிய, (தரமான) தமிழ் பேய்ப் படங்களின் சாயலும் அவளிடம் தெரிகிறது. ஏன் ஒரு கட்டத்தில் சந்திரமுகி கூட தெரிகிறது. அப்படி இருந்தும் படம் நம்மை பயப்பட வைக்கிறது என்பதுதான் அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய விஷயம். மற்றபடி, சிலாகிக்கும் அளவிற்கெல்லாம் கிடையாது.

ஒரு கட்டத்தில் படம் அறிவியலிலிருந்து முழுக்க அமானுஷ்யத்திற்கு தாவும் போதே பாதி சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் எப்படா போடுவீங்க என்று நம்மை நன்றாக காக்க வைத்துவிட்டு காட்டும் ஃப்ளாஷ்பேக் அப்படியொன்றும் அழுத்தமாக இல்லை. சொல்லப்போனால் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஒரு மோசமான சித்தரிப்பு. அதிர்ச்சி மதிப்பீடு காட்டுகிறேன் பேர்வழி என்று இத்தனை குரூரமாக காட்டியிருக்கக் கூடாது. 

படம் முடிந்தபிறகு ரோஸினா பள்ளத்தாக்கு என்கிற ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்று கூகிள் செய்து பார்த்தேன். ப்ச் இல்லை. குறிப்பாக பிரம்மாண்ட மலை பின்னணியில் கொண்ட வீடு அபாரம். அது கிராபிக்ஸாகக் கூட இருக்கலாம்.

எப்படியும் எடுத்து வைத்திருக்கும் வன்முறையின் அளவிற்கும், ஹாரர் தன்மைக்கும் ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கப் போகிறது. அதை முழுக்க பயன்படுத்திக் கொள்ளலாமே என்று சித்தார்த் – ஆண்ட்ரியாவை செமத்தியாக ஜல்ஸா பண்ண விட்டிருக்கிறார்கள். (அதற்காக படம் பார்க்கலாம் யாரேனும் நினைத்திருந்தால் யூடியூபில் காரிகை கண்ணே காணொளிப் பாடல் இருக்கிறது. பார்த்துவிட்டு உட்காரவும்).

அனிஷா விக்டர்
தமிழ் சினிமாவின் முக லட்சணமான நடிகைகள் என்றொரு பட்டியலிட்டால் அதில் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயமாக இடமிருக்காது. ஆனால் அவர் முகத்தில் காட்டும் சின்னச் சின்ன பாவனைகள். வெட்கம், குறும்பு, காதல், காமம் எல்லாம் சான்ஸே இல்லை. அனிஷா விக்டர் சிறப்பான அறிமுகம். 

இப்படத்திற்கு இது ஏதோ பெண் குழந்தைகளுக்கு ஆதரவான படம் என்கிற நினைப்பில் அவள் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். படம் முடிந்தபிறகு காட்டப்படும் ஸ்லைடு அந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இயக்குநருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இப்படத்தின் சில பகுதிகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 November 2017

பிரபா ஒயின்ஷாப் – 06112017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மெர்சல் படம் பற்றியும் அதையொட்டிய சர்ச்சைகள் குறித்தும் எழுத வேண்டும் என்று நினைத்து முடிப்பதற்குள் அந்த டாபிக் எக்ஸ்பயரானது மட்டுமில்லாமல் அதன்பிறகு மட்டுமே நான்கைந்து டாபிக்குகள் மாறியாயிற்று !

மெர்சல் பார்த்ததும் எனக்கு இவனை போடுறதுக்கெல்லாம் எதுக்குடா கிரிக்கெட் பேட்டு, ஹாக்கி ஸ்டிக் என்றுதான் தோன்றியது. மெர்சல் வெற்றிப்படம் என்று பேசிக்கொள்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா ? ட்ரோல் செய்வதற்கான அளவிற்கு போதுமான கண்டென்ட் அதில்  இல்லை. அதே சமயம் த்தா என்னமா எடுத்திருக்கான்யா என்று சிலாகிக்கவும் எதுவுமில்லை. சுருக்கமாக சொல்வதென்றால், மண்ணு மாதிரி இருக்கிறது.

மெர்சல் படத்தின் கதை ஒரு பார்த்து, பார்த்து, பார்த்து, பார்த்து சலித்த மஹா திராபையான கதை. அப்பாவை கொன்றவர்களை மகன்(கள்) பழிவாங்கும் கதை. இதை எழுதுவதற்கே எனக்கு சலிப்பாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் எப்படி இதையெல்லாம் ஒரு கதை என்று நம்பி அதனை வேலையத்து போய் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதைதான் இப்படி என்றால், திரைக்கதை அதற்கு மேல். ஒரு காட்சி கூட புதிது கிடையாது. குறைந்தது நூறு படங்களையாவது நினைவூட்டும் காட்சிகள். சில ஆட்களை கடத்திக் கொல்கிறார், ஏனென்று ஒரு வறட்டு மொக்கை ஃபிளாஷ்பேக், சரி அப்புறம். பிரதான வில்லனான எஸ்.ஜே.சூர்யா சொல்லிக்கொள்ளும்படி ஏதாவது செய்கிறாரா என்றால் அவசர அவசரமாக தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஸ்பாட்டான பின்னி மில்லுக்கு வந்து ஹீரோக்களுடன் சண்டையிட்டு மடிகிறார். அதன்பிறகு என்னாங்கடா என்றால் படம் முடிந்துவிட்டது என்கிறார்கள்.

மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, ஷங்கரின் சிஷ்யராயிற்றே. அதனாலேயே அவரைப் போலவே அங்கங்கே பூனையைப் பிடித்து சிரைத்து வைத்திருக்கிறார். உதாரணமாக, ஒரு காட்சியில் ஒரு கோவில் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. அதன் அருகில் உயரமாக ஒரு தண்ணீர் டாங்கி அமைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் சிறியதுதான். அதிலிருந்து கொஞ்சம் தள்ளி ராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்ம ஆள் நெருப்பு பற்றி எரிவதைக் கண்டதும் விறுவிறுவென்று லாரியை எடுத்துவந்து ராட்டினத்தை சாய்க்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் அதனை கையாலேயே இழுத்து (இவரு பெரிய புஜபல பராக்கிரமசாலி), அதனை தண்ணீர் டாங்கியின் மீது தள்ளி, டாங்கியிலிருந்த தண்ணீர் நெருப்பின் மீது கொட்டி, பிற்பாடாவது நெருப்பு அணைந்ததா என்றால் இல்லை. இக்காட்சியைக் குறித்து இரண்டு விஷயங்கள் :-

1. இதனை பாகுபலியோடு ஒப்பிடாதீர்கள். அதன் கான்டெக்ஸ்ட் வேறு. நம் மன்னர்களின் வீரத்தைப் பற்றிய அதீத புனைவுகளின் திரை வடிவம் அது !
2. ஏற்கனவே இதே போன்ற காட்சியைக் கொண்ட அநேகனை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே இப்படி தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்க மாட்டார்கள். மேலும் கதைப்படி அது கற்பனைக் காட்சி !

இப்போது இந்த அட்டு சீனுக்காக எத்தனை ஆயிரம் பேர் வேலை மெனக்கெட்டு எத்தனை நாட்கள் உழைத்திருப்பார்கள் என்று நினைத்தாலே கிறுகிறுவென்று வருகிறது. இதைத்தான் இவர்கள் அடிக்கடி ஒரு சினிமா எத்தனை பேருடைய உழைப்பு தெரியுமா என்று கோபப்படுகிறார்கள். கடல் நீரை வாளியில் அள்ளிக்கொண்டு கரையில் ஊற்றுவதற்கு பெயர் உழைப்பு அல்ல, முட்டாள்த்தனம்.

படத்தில் சின்னச் சின்னதாக பிடித்திருந்த சில சுவாரஸ்யங்கள் :-

1. வடிவேலுவின் சில்லாக்கி டும் !
2. ரோஸ் மில்க் கான்செப்ட்
3. சமந்தாவின் ஸ்லாங் (சொந்தக்குரல் என்று கேள்வி)
4. சத்யராஜின் விளையாட்டுகள்

எவ்வளவு யோசித்தாலும் அதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை. காஜல் அகர்வாலை எல்லாம் பார்த்தாலே பாவமாக இருக்கிறது. 

சர்ச்சைகள் செக்ஷனுக்கு வருவோம். வாட்ஸப் நம்ம ஆட்களை எப்படி கெடுத்து வைத்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் மெர்சல். இருந்துவிட்டு போகட்டும். ப்ளாகில் ஒரு ஐநூறு வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதினாலே அதில் ஏதாவது தகவல் / எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவா என்று கூகிள் செய்து கவனமாக சரி பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சினிமா எடுப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் ? அதுவும் இது ஜாலியான லவ் படமோ, காமெடி படமோ கிடையாது. நேரடியாக இந்திய அரசை விமர்சிக்கிற முக்கியமான விஷயம். அதைப் போய் அசிங்கமாக வாட்ஸப்பில் இருந்து திருடி அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

GST பற்றிய பிழையான வசனம், டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனம் போன்ற ஒன்றிரண்டை தவிர்த்துப் பார்த்தால் மத்திய அரசை கோபப்படுத்தும் வகையில் எல்லாம் எதுவுமில்லை. (அப்படிப் பார்த்தால் ஜோக்கர் படத்திற்காக நம் திருவாளர் ஐம்பத்தியாறு அங்குலம் இந்நேரம் தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்). தேவையில்லாமல் தூக்கிவிட்டு படத்தைக் கொஞ்சம் கூடுதலாக ஓட வைத்துவிட்டார்கள்.

மருத்துவத் துறையை பற்றி சொன்ன விஷயங்களில் ஓரளவிற்கு உண்மை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருமுறை மதுரை போயிருந்த சமயம், ஆட்டோகாரரிடம் பேசிக்கொண்டிருந்தோம். மதுரையில் எங்கே சாலை விபத்து நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டுமென அவர்களுக்கு ரகசியமாக அறிவுறுத்தப் பட்டிருக்கிறதாம். அதற்காக அவர்களுக்கு கமிஷன் உண்டாம். சிஸேரியன் கட்டாயங்களை நிறைய மருத்துவமனைகளில் கண்கூடாக பார்க்கிறோம். இதில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் எல்லா மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இப்படி இல்லை என்பதுதான். நம் எல்லோருக்கும் ஐந்து ரூபாய் டாக்டரைப் போன்ற ஒரு மருத்துவரையாவது தெரிந்திருக்கிறது. நாம்தான் ஏனோ அவர்களை மருத்துவராகவே மதிப்பதில்லை. இன்னமும் சுகப்பிரசவத்திற்காக காத்திருக்கும் மருத்துவமனைகள் நிறைய இருக்கின்றன. 

மெர்சலில் காயப்படுத்தப்பட்ட அரசியல், மருத்துவம் இரண்டு விஷயங்களும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே நிறைய படங்களில் அடித்து துவைக்கப்பட்டவையே. அரசியலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போதுள்ள எல்லா பெரிய நடிகர்களும் அரசியல்வாதியின் சட்டையைப் பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் மாஃபியா என்பது சமீபத்திய வருடங்களில் ஒரு புது ஜான்ராவாக உருவெடுக்கும் வகையில் நிறைய எடுத்துவிட்டார்கள். ஆனாலும் மெர்சலுக்கு மட்டும் இத்தனை அழுத்தம் கொடுக்க வேண்டிய காரணம் அரசியல்.

இன்னொரு விஷயம் இருக்கிறது. நீண்ட வருடங்களாகவே நம் ஷங்கர், மணிரத்னம், முருகதாஸ், கேவி ஆனந்த் வகையறாக்களின் போலி சமூக உணர்வு. உதாரணத்திற்கு, கத்தி என்கிற படத்தை எடுத்துக்கொள்வோம். கத்தி வெளியாகியிருந்த சமயம் ஒரு நண்பர் அதனை பார்த்துவிட்டு வந்து முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சோஷியல் காஸுக்காக எடுத்திருக்கிறார்கள் என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. கத்தி படத்தின் அதிநாதம் கார்ப்பரேட் எதிர்ப்பு. ஆனால் அப்படத்தை தயாரித்தது பக்கா கார்ப்பரேட் நிறுவனம். அரசியல்வாதிகளை விமர்சித்த கோ என்கிற படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின். இதைத்தான் போலித்தனம் என்கிறேன். நேரடியாக சொல்வதென்றால் எச்சைத்தனம். திரைக்கு வெளியே சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் இணக்கமாகவே இருக்கிறார்கள். திரையில் மட்டும் சும்மா உள்ளுளாயி காட்டுகிறார்கள். அதனால் நாம் இதற்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஐ லவ் ஜோசப் விஜய் என்றெல்லாம் ஹாஷ்டாக் போட வேண்டியதில்லை. அநீதியும், அநீதியும் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதையும் தாண்டி மெர்சலுக்கு ஆதரவாக களமாடியவர்கள் ஒன்று, பிஜேபி எதிர்ப்பாளர்கள் அல்லது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவானவர்கள் என்று விஜய்யும் அட்லியும் புரிந்துகொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment