30 April 2018

பிரபா ஒயின்ஷாப் – 30042018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அமேஸான் ப்ரைமில் இணைந்து நான்கு மாதங்கள் ஆகியும் அதில் ஒரு சினிமா கூட பார்க்கவில்லை. அதன் நிரலியை திறந்தால் ஒன்று ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம் என்று பார்க்கவே கூடாது என்று நினைக்கும் படங்கள் அல்லது தீரன், துப்பறிவாளன், மாயவன் போன்ற பார்த்த படங்கள் வருகின்றன. பின்னர் ஸ்க்ரோல் செய்து, செய்து அதில் பழைய தமிழ் படங்கள் நிறைய இருப்பதை கவனித்தேன். குறிப்பாக, ஏ.வி.எம்., மெட்ராஸ் டாக்கீஸ், நிக் ஆர்ட்ஸ், கே.டி.குஞ்சுமோன் படங்கள். இவற்றைக் கண்டதும் மனது உற்சாகமடைந்தது. பட்டியலில் இருந்த சில படங்கள் நான் பார்க்க வேண்டுமென நினைத்து, முடியாமல் போனவை.

எனது ஐந்து வயதில் திருடா திருடா பார்க்க விரும்பினேன். ஏனென்றெல்லாம் தெரியவில்லை, விரும்பினேன் அவ்வளவுதான். அப்போது அமைதிப்படையும் வெளியாகியிருந்தது. அப்பா என்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாக சொன்னபோது திருடா திருடா போகலாம் என்றேன். அதற்கு டிக்கட் கிடைக்கவில்லை என்று என்னை ஏமாற்றிவிட்டு அமைதிப்படைக்கு அழைத்துச் சென்றார். அந்த ஏக்கம் மனதின் அடியாழத்தில் எங்கேயோ இருந்திருக்குமென நினைக்கிறேன். தீனாவில் தன் வளரிளம் பருவ தங்கைக்கு அவள் சிறுவயதில் ஆசைப்பட்டு கிடைக்காத பொருட்களை அஜித் வாங்கித்தருவார். அதுபோல அப்போது ஆசைப்பட்டு கிடைக்காத திருடா2 இப்போது அமேஸான் ப்ரைமில் கிடைத்து ஏக்கத்தை தீர்த்துவிட்டது.

ஒருவேளை திருடா திருடாவை அப்போது பார்த்திருந்தால் கூட இத்தனை உளப்பூர்வமாக பார்த்திருக்க மாட்டேன். அப்போது எனக்கு மணிரத்னம் தெரியாது, சுஜாதா தெரியாது, ஏ.ஆர்.ரஹ்மான் தெரியாது. ஹீரா தெரியாது. படத்தில் வரும் கரன்ஸி சம்பந்தப்பட்ட விஷயங்கள் புரிந்திருக்காது.

கதை என்ன, படம் எப்படி என்று சொல்ல வேண்டியிருக்காது. (அதனால் கடைசியா என்ன சொல்ல வர்றீங்க பாஸ். படம் பார்க்கலாமா வேண்டாமா ? என்கிற கேள்விக்கு இடமில்லை). படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாகிவிட்டன. இருந்தும் எனக்கு சில ஆச்சர்யங்களை கொடுத்தன.

முதல் ஆச்சர்யம்: சந்திரலேகா (அனு அகர்வால்)
முதலில் யாரோ ஒரு பெண் என்று துவங்கி, போகப் போக அழகாகத்தானே இருக்கிறார் என்று தோன்ற ஆரம்பித்து, கடைசியில் யாரு இவர் இவ்வளவு க்யூட்டாக (அதற்கு ரோகிணியின் குரலும் ஒரு காரணம்) என்று கூகுள் செய்ய வைத்துவிட்டார். விபத்தொன்றின் காரணமாக இவரது சினிமா வாழ்க்கை சீக்கிரமாக முடிந்திருக்கிறது. ப்ச் !

இரண்டாவது ஆச்சர்யம்: சி.பி.ஐ. அதிகாரி லஷ்மி நாராயணன் (எஸ்.பி.பி.)
எஸ்.பி.பி.யின் அறிமுகக்காட்சியிலேயே சுஜாதாவின் டச்சை எளிதில் உணரலாம். கிட்டத்தட்ட தன்னையே கதாபாத்திரமாக எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். மனைவியின் அன்பில் சரணடைந்த ஒரு கணவன், அதே சமயம் பணி என்று வந்துவிட்டால் கண்டிப்பான நபர். வொர்க், லைஃப் பேலன்ஸை எளிதாக கற்றுக்கொடுக்கும் ஒரு வேடம். 

மூன்றாவது ஆச்சர்யம்: முக்கோணக் காதல்
ஹீராவுக்கு இரண்டு ஹீரோக்களையும் பிடித்திருக்கிறது. இருவருடனும் நெருக்கமாக பழகுகிறார். அஃப்கோர்ஸ், ஆனந்தை மட்டும்தான் துணை என்கிற வகையில் காதலிக்கிறார். இருப்பினும் வழக்கமான தமிழ் சினிமா அறங்களை மீறி ஒரு பெண் ஒரே சமயத்தில் இருவருடன் பழகுவது புதுமை. ஒரு காட்சியில் ஆனந்த் – ஹீரா இருவரும் பரஸ்பரம் காதலை சொல்லிக்கொள்கிறார்கள். அதே சமயம் இன்னொரு இணைக் காட்சியில் அனு பிரஷாந்திடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி (விளையாட்டாகத்தான்) கேட்கிறார். கோலியுட் விதிகளின்படி இச்சூழ்நிலைக்கு ஆனந்த் – ஹீரா, பிரஷாந்த் – அனு ஆடிப்பாடும் பாடல் தானே இடம்பெற வேண்டும். ஆனால் இங்கே பிரஷாந்துக்கும் ஹீராவுக்கும் டூயட் வருகிறது.

நான்காவது ஆச்சர்யம்: தீ தீ தித்திக்கும் தீ...
பாடல்கள் அனைத்தும் ரஹ்மானின் வெறித்தனமான ஹிட்ஸ் என்றாலும் இந்த ஒரு பாடலை மட்டும் கேட்டதே இல்லை. கொஞ்சம் எராட்டிக் தொனியில் இருப்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாமல் இருக்கக்கூடும். நல்ல ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். ஹீராவின் உச்சபட்ச அழகு இதுவாகத்தான் இருக்க வேண்டும். என்ன ஒரு நேர்த்தியான கழுத்து ஹீராவுக்கு !

ட்ரீம்ஸ், கண்களால் கைது செய், கண்ணாடி பூக்கள், லவ் பேர்ட்ஸ் போன்றவை என் வாட்ச்லிஸ்டில் இருக்கின்றன.

**********

மதனின் கி.மு. கி.பி. படித்துக்கொண்டிருக்கிறேன். ப்ரீஃப் ஹிஸ்டரி பாணி புத்தகம். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு கி.மு. கி.பி. படித்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பேன். 

விகடனாரின் வாசகர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் என்பதால் எளிமையாக புரியும்படி எழுதுகிறேன் என்று மட்டையடி அடித்திருக்கிறார் மதன். ஒரே சப்பாத்தியை ஏதோ நாலைந்து குரங்குகள் பிடுங்கிய மாதிரி கோண்ட்வானா கண்டம் பீஸ்பீஸாகப் பிய்ந்தது என்று எழுதுகிறார். எவ்வளவு பெரிய விஷயத்தை குரங்கு – சப்பாத்தி என்று ஜஸ்ட் லைக் தட் கடக்கிறார் பாருங்கள். கூடவே டைனோசர் எழுந்து நின்றால் எல்.ஐ.சி. பில்டிங் உயரம் இருக்கும், உலகின் ஆதி மனிதன் இப்போது வந்தால் அவரிடம் மைலாப்பூர் விலாசம் கேட்கலாம் என்று நிறைய சிக் ஜோக்ஸ்.

கடைசியாக தமிழ்மகனின் வேங்கை நங்கூரம் படித்தேன். அதற்கடுத்து இதுதான். இரண்டிலும் மனிதர்களிடம் நாகரிகம் தோன்றியது பற்றி வருகிறது. ஹரப்பா, மோஹன்ஜதாரோ வருகிறது. தமிழ்மகன் அங்கே கண்டுபிடிக்கப்பட்டது தமிழ் நாகரிகம்தான் என்று சில சான்றுகளை சொல்லி நிறுவ முயல்கிறார். மதன் இதுகுறித்து குறிப்பிடும்போது சர்வதேச தொல்பொருள் ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் உலகின் முதல் நகரம் இந்தியாவில் தோன்றிய பெருமை நமக்குக் கிடைக்கும் என்று மட்டும் சொல்கிறார். இரண்டு புத்தகங்களுக்கும் இடையே ஒரு நூலளவு வித்தியாசத்தை என்னால் கவனிக்க முடிகிறது.

மற்றபடி தகவல்களைப் பொறுத்தவரையில் குறை சொல்வதற்கில்லை. சில தகவல்களை புத்தகத்தில் படித்ததுடன் நிறுத்திவிடாமல் மேற்கொண்டு கூகுள் செய்தால் நன்மை பயக்கும். உலகின் முதல் மனிதர் – ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண் என்கிறார். க்ரோ-மேக்னன் என்கிறார். (இதுகுறித்து மேலும் அறிந்து கொள்வதற்காக mitochondrial eve மற்றும் cro-magnon என்று கூகுள் செய்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது).

**********

சில வாரங்களுக்கு முன் செக்ஸில் ஆண்கள் பொதுவாக செய்யும் தவறுகள் சிலவற்றை பட்டியலிட்டிருந்தேன். இம்முறை பெண்கள்.

- தேவைப்படும் சமயம் தேவை என்று நேரடியாக சொல்லாமல் குறிப்புகளால் உணர்த்த முயல்வது. (பொதுவாக ஆண்கள் மக்குகள். அவர்களது மூளை அவ்வாறு வேலை செய்வது கிடையாது).
- பிணம் போல படுத்துக் கொள்வது. (இணைக்கு நெக்ரோஃபிலியா இருந்தாலொழிய இப்படி செய்வது தவறு).
- ஓரல் செக்ஸ் என்பதை ஏதோ பாவச்செயல் / அருவருக்கத்தக்க செயல் என்று கருதுவது.
- உற்சாகமாக உடலில் விளையாடிக் கொண்டிருக்கையில் என்னங்க, இன்னைக்கு உங்க அம்மா என்னை என்ன சொன்னாங்க தெரியுமா என்று ஆரம்பிப்பது.
- பெரும்பாலான பெண்கள் தங்கள் இணை சுத்தமாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் தங்களை அவ்வாறு வைத்துக்கொள்வதில்லை.
- கவனம் வேலையில் இருக்கும் சமயம் வந்து, நான் குண்டாயிட்டேனா என்றோ இப்ப முன்னாடி மாதிரி இல்லல்ல (மார்பகங்களை காட்டி) என்றோ கேட்பது.
- பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு லிபிடோ (கூகுள் செய்யுங்கள்) அதிகம். அதற்காக சுவிட்ச் போட்டதும் தமையன் எழுந்துகொள்வான் என்று நினைத்தல் தவறு.
- முதல் கூடலுக்குப்பின் ஆண் மீண்டெழ கால அவகாசம் கொடாமல் அவனைப் போட்டு நிமிண்டுவது.
- தோழியின் செக்ஸ் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுவது, அதை விட உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருந்தாலொழிய தவறு. குறிப்பாக தோழி கணவனின் செயல்களை பட்டியலிடுவது மாபெரும் தவறு.
- செக்ஸின் முக்கியமான கட்டத்தில் அவசரமாக சிறுநீர் வருகிறது என்று கழிவறைக்கு ஓடுவது !

பொறுப்பு துறப்பு: இப்பட்டியல் எல்லோருக்கும் பொருந்தாது. இது பொதுவான பட்டியல். உதாரணத்திற்கு முதல் பாயிண்டை எடுத்துக்கொள்ளுங்கள். தேவை என்பதை தேவை என்று சொல்வது. பெரும்பாலான இந்திய கணவர்களைப் பொறுத்தவரையில் பெண்கள் செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு. எனவே இப்பட்டியலை உங்கள் இணையின் மனநிலைக்கு தகுந்தவாறு பட்டி டிங்கரிங் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 April 2018

பிரபா ஒயின்ஷாப் – 23042018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஐம்பத்தி ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்க வாசம். கடைசியாக ஆறு அத்தியாயம் பார்த்தபோதே எஸ்கேப்பில் தேசிய கீதம் ஒலிபரப்பவில்லை. எல்லோரும் ஏதோ எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் கடந்த பிராயத்தின் புண்ணியங்கள் காரணமாக எஸ்கேப்பில் அதையும் ஒளிபரப்பவில்லை. (ஒருவேளை நான் அச்சமயம் பார்த்து சாக்கோ டோநட் வாங்க போயிருக்கலாம்). ஸ்ட்ரைக் முடிந்தாலும் பெரிய படங்கள் என்று சொல்லப்படுபவை எதுவும் வெளியாகாததால் தியேட்டரில் மழைக்கால வேலைநாள் அளவுக்குத்தான் கூட்டம் இருக்கிறது. 

மெர்க்குரி ! கமலின் பேசும் படத்திற்கு பிறகு வரும் மெளனப் படம் என்கிறார்கள். இப்படத்திற்கு எந்த பில்டப்பும் இல்லையெனில் கூட கார்த்திக் சுப்பராஜூக்காகவே பார்த்திருப்பேன். முதலில் இது மெளனப் படமே கிடையாது என்பது என் புரிதல். மெளனப் படம் என்பது சொல்ல வரும் விஷயங்களை வசனங்களின்றி புரிய வைக்க வேண்டும் இங்கே வசனம் என்று சொல்வது சப்-டைட்டில்களையும் சேர்த்து. ஒரு உதாரணத்திற்கு, கமலின் பேசும் படத்திற்கு சப்-டைட்டில் போட்டால் எப்படி இருக்கும் அல்லது சப்-டைட்டில் போட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் பேசும் திறனை இழந்தவர்கள் என்பதாலேயே அது மெளனப் படம் ஆகிவிடாது. ஒருவேளை இப்படத்தை கா.சு. நார்மல் தமிழ் சினிமாக எடுத்திருந்தால் கூட மொத்த படத்திலும் பதினைந்து வசனங்களுக்கு மேலே வைத்திருக்க முடியாது. 

பாதரச ஆலையின் விபத்தின் விளைவுகள் தான் இப்படத்தின் கரு. ஸ்டெர்லைட் தொடர்பான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போது மெர்க்குரி போன்ற படங்கள் வருவது பெரிய மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்திவிடாது என்றாலும், சிறு துரும்பையாவது கிள்ளிப்போடும். காப்பர் வேண்டும் ஆனால் ஸ்டெர்லைட் வேண்டாமாம்; மின்சாரம் வேண்டும் ஆனால் கூடங்குளம் வேண்டாமாம் என்று எகத்தாளம் பேசுபவர்களுக்கு கொஞ்சம் அறிவை இதுபோன்ற படங்கள் வழங்கக்கூடும். சுமார் இருபது நிமிடத்தில் சொல்லக்கூடிய ஒரு குறும்பட கன்டென்டை நூற்றி எட்டு நிமிடங்களுக்கு வளர்த்திருக்கிறார்கள். இருப்பினும் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக நகர்கிறது. கொஞ்சம் பொறுமையுடன் படம் பார்த்தால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

மெர்க்குரியின் அடிநாதமான ஒரு காட்சியில் மிகப்பெரிய பிழை ஒன்றை செய்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அடுத்து வரும் சிகப்பு நிற பத்தி ஸ்பாய்லர் என்பதால் படம் பார்க்காதவர்கள் ஸ்கிப் செய்துவிடலாம்.

படத்தின் திருப்புமுனை காட்சியில், பேசும் & கேட்கும் திறனை இழந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் நள்ளிரவில் காரில் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்துஜா காரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். சனந்த் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருந்து காரின் ஹெட்லைட்டை அணைத்து அணைத்து விளையாடுகிறார். மூன்றாவது முறை இப்படி அணைக்கும்போது விபத்து நேர்கிறது. படத்தின் இறுதியில் இப்படியொரு விபத்து நிகழ்ந்ததற்கு காரணம் அவர்களுக்கு கேட்கும் திறனில்லாதது தான் காரணம் என்பதுபோல காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் விபத்துக்கு காரணம் அவர்களுடைய குறிக்கொழுப்பு தான். இப்படி விளக்கை அணைத்து விளையாடும் காட்சியை வைத்ததற்கு பதிலாக நாயை இடித்துவிடாமல் இருக்க காரை திருப்பியதாகவோ அல்லது வேறு மாதிரியாகவோ காட்சிப் படுத்தியிருக்கலாம்.

**********

கிறிஸ்தவ புராணங்களில் வரும் ஆதாம் – ஏவாள் கதையை எல்லோரும் அறிந்திருப்போம். தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் கூட ஆதாம் – ஏவாள் பற்றி நிறைய எழுதித் தீர்த்துவிட்டு, ஏவாளின் தங்கச்சி வரைக்கும் போய்விட்டார்கள். அதென்ன ஏவாளின் தங்கை ? இதனை இரண்டு விதமாக புரிந்துகொள்ளலாம். புராணத்தின் படி ஆதாம் – ஏவாள் முதல் மனிதர்கள். அதன்பிறகு தோன்றிய மனிதர்கள் அனைவரும் அவர்களது வழி வந்தவர்கள். அப்படியிருக்க ஏவாளுக்கு தங்கை என்று ஒருவர் இருக்க வாய்ப்பில்லை. எனவே படைக்கப்படாத ஒரு அழகி, அதாவது படைப்பாற்றலை தாண்டிய அழகி என்று பொருள் கொள்ளலாம். இரண்டாவது, பெரும்பாலான ஆண்களுக்கு (கவனிக்க: எல்லோருக்கும் அல்ல) என்னதான் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் போல அழகாக இருந்தாலும் மனைவியின் தங்கை மீது ஒரு கண் இருக்கும். அதனால் கூட பா.விஜய் அப்படி எழுதியிருக்கலாம்.

ஆனால் பைபிள் அல்லாத இன்னொரு புராணத்தில் ஏவாளுக்கு ஒரு சகோதரி (அக்கா அல்லது தங்கை) இருக்கிறார். அவளது பெயர் லிலித் !

சித்தரிக்கப்பட்ட லிலித்
முதன்முதலில் பண்டைய பாபிலோனிய புராணமொன்றில் லிலித் தோன்றினாள். லிலித் என்பவள் சிறகுகள் கொண்ட பெண் சாத்தான். கர்ப்பிணி பெண்களை தாக்குவது லிலித்தின் குணம். பைபிளில் லிலித்தை பற்றிய குறிப்புகள் இல்லையென்றாலும், சில செவிவழி கதைகளில் லிலித்தை பற்றி இப்படி சொல்கிறார்கள் – கடவுள் என்பவர் முதன்முதலாக தூசியில் இருந்து ஆணை படைக்கிறார். பிறகு அதே போல தூசியில் இருந்து ஒரு பெண்ணை படைக்கிறார். இப்படி தனித்தனியாக படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்து வாழாமல் அவரவர் விருப்பபடி வாழ்ந்தனர். இருவருக்கும் சச்சரவுகள் தொடர்ந்தன. லிலித் கடவுளிடம் சென்று முறையிட்டாள். அநேகமாக கடவுள் கதாபாத்திரம் ஒரு ஆண் என்பதால் லிலித்தின் குற்றச்சாட்டுக்கு கடவுள் செவி சாய்க்காமல் அவளை திரும்பப் பெறுகிறார். ஒரு வகையில் உலகின் முதல் பெண்ணியவாதி மற்றும் புரட்சியாளர் லிலித் தான். பின்னர் ஆதாமின் விலாவிலிருந்து ஏவாளை படைக்கிறார் கடவுள். அவர்களின் மகிழ்வான வாழ்வின் விளைவாக ஏவாள் கருவுருகிறாள். இதனைக் கண்டு பொறாமையடைகிற லிலித் ஏவாளையும் கருவிலிருக்கும் குழந்தையையும் கொல்ல நினைக்கிறாள். இதன் தொடர்ச்சியாக காலம் காலமாக லிலித் கர்ப்பிணி பெண்களுக்கு தொந்தரவு தருவதாக கதை போகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஜீரோ என்கிற தமிழ் படம் இக்கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. துவக்கத்தில் நல்ல காதல் கதையைப் போல துவங்கும் ஜீரோ, மெல்ல அமானுஷ்யமாக உருவெடுத்து, பின்னர் ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ மதம் பரப்பும் அஜெண்டாவாக மாறுகிறது. இறுதியில் வானத்தில் இருந்து ஒரு ஒளி வந்து கதாநாயகியின் வயிற்றுக்குள் உட்கார்ந்து கொள்கிறது. இப்படி முழு மத பிரச்சார படமாக அமைந்த ஜீரோவை இயக்கியவரின் பெயர் ஷிவ் மோஹா !

**********

இன்று புத்தக தினம். கடந்த சில வருடங்களாகவே புத்தக தினத்தை முன்னிட்டு பெரியார் திடலில் ஒரு மினி புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சனி மாலை அக்கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஜனவரியில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் எல்லா விற்பனையாளர்களும் ஒரே பாணியில் ஸ்டால் அமைத்திருக்க, நம்ம விகடனார் மட்டும் ஒரு தினுசாக இன் / அவுட் போட்டு இப்படி உள்ளே சென்று, அப்படி வெளியே வர வேண்டும் என்று படம் காட்டுவார்கள். மேலும் வெளியே வரும் வாயிலின் அருகே ஒரு ஆசாமி நின்றுக்கொண்டு நம்மை குறுகுறுவென்று பார்ப்பார். நாம் புத்தகங்கள் எதையாவது திருடிவிட்டோமா என்று கண்காணிக்கிறாராம் (அப்படியே திருடிட்டாலும்). விகடன் ஸ்டாலுடைய ஒரே பயன் அதன் பின்புறம் உட்கார்ந்து இளைப்பாறலாம் என்பதுதான் ! அதுபோல திடலில் நடைபெறும் கண்காட்சியில் ஒரு சிஸ்டம் வைத்திருக்கிறார்கள். வாயிலின் ஒருபுறம் நுழைந்து, அப்படியே கீழ் தளம் நுழைந்து, கீழ் தளத்தின் மறுபுறம் வெளிவந்து, வாயிலின் மறுபுறம் வெளியேற வேண்டும். ஒருவேளை நீங்கள் முதல் சில கடைகளில் ஒரு புத்தகத்தை பார்த்து வைத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் மறுபடியும் அக்கடைக்கு செல்ல வேண்டுமென்றால் கண்காட்சியை விட்டு வெளியே வந்துவிட்டு மறுபடியும் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே நுழையும் வாசகர்கள் எல்லா கடைகளையும் பார்க்க வேண்டுமென்று இப்படியொரு வினோத ஏற்பாடு !

மேலும் திடல் புத்தகக் காட்சியில் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துகொண்டு வருவதாக தோன்றுகிறது. குழந்தைகளுக்கான போர்ட் புக்ஸ், பிளாட்பாரங்களில் விற்கப்படும் ஆங்கில நாவல்கள், (ஒரு கடையில்) ராஜேஷ் குமாரின் பாக்கெட் நாவல்கள் போன்றவை கிடைக்கின்றன. கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலே இல்லை. (அச்சடித்து விற்பனையாகாத புத்தகங்களை எல்லாம் என்னதான் அய்யா செய்வீர்கள் ?). ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் உயிர்மை ஸ்டால். இங்கே செல்லமுத்து குப்புசாமி மற்றும் வாமு கோமுவின் சில புத்தகங்கள் கிடைக்கின்றன. மனுஷ்யபுத்திரனின் ஒரு குண்டு சைஸ் 800 ரூபாய் புத்தகம் பாதி விலையில் கிடைக்கிறது. சுஜாதாவின் நாடகங்கள் முழுத்தொகுதி சேதாரமான நிலையில் ஒரே ஒரு காப்பி இருக்கிறது. உயிர்மையில் ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி மற்றும் லக்ஷ்மி மணிவண்ணனின் வெள்ளைப் பல்லி விவகாரம் (சிறுகதைத்தொகுப்பு) வாங்கினேன். டிரான்ஸ் இசையைப் பற்றி தெரிந்து கொண்டதில் இருந்து பாப் மார்லியைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்திருக்கிறது. குறிப்பாக அவர் ஏன் எப்போதும் போதை வஸ்துகளுடன் தொடர்புபடுத்தப் படுகிறார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது.   

திடலில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நாளை மறுநாள் (25/04) வரை தினசரி காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை நடைபெறுகிறது. இது தவிர புத்தக தினத்தை முன்னிட்டு இணையத்திலும் தள்ளுபடி விற்பனைகள் நடைபெறுகின்றன. அமேஸான் கிண்டிலில் தமிழ்ப் பிரபாவின் பேட்டை, எஸ்.ரா.வின் எனது இந்தியா உட்பட சில புத்தகங்கள் சகாய விலையில் கிடைக்கின்றன. காமன் ஃபோல்க்ஸ் என்கிற தளத்தில் குறிப்பிட்ட புத்தகங்கள் முப்பது சதவிகித தள்ளுபடியில் விற்பனை செய்யபடுகின்றன. 

புத்தக தினத்தில் நம் அன்புக்குரியவர்களுக்கு புத்தகங்கள் பரிசளித்து அவர்களை மகிழ்விக்கலாம். இதையெல்லாம் மாங்கு மாங்கென்று எழுதிக்கொண்டிருக்கும் உங்கள் அன்புக்குரியவனுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 April 2018

கோவா – வடக்கு கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – கர்லீஸ்

கோவாவில் இரண்டு பிரதான நதிகள் ஓடுகின்றன – மண்டோவி மற்றும் ஸுவாரி. இவையிரண்டும் சேர்ந்து கோவாவின் கடலோரப் பகுதிகளை மூன்றாகப் பிரிக்கின்றன. ஸுவாரி நதிக்கு கீழே கோவா விமான நிலையம் துவங்கி கல்கிபாகா கடற்கரை வரை இருப்பது தெற்கு கோவா. மண்டோவி நதிக்கு மேலே அகுவாடா கோட்டை துவங்கி க்வேரிம் கடற்கரை வரை வடக்கு கோவா. இவ்விரு நதிகளுக்கும் இடையே உள்ள நிலபரப்பு – மத்திய கோவா (பஞ்ஜிம், இதனை பழைய கோவா என்று குறிக்கிறார்கள்).

சுமார் முப்பத்தைந்து கி.மீ. நீளமுள்ள வடக்கு கோவா கடலோரத்தில் ஏறக்குறைய இருபது கடற்கரைகள் உள்ளன. இங்குள்ள கடற்கரைகள் நமது மெரீனா போல ஒரே ஸ்ட்ரெச்சில் இல்லாமல் நதிகளாலும், சிறிய கால்வாய்களாலும், குன்றுகளாலும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை அவை அவ்வாறு பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் மெரீனா உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாக இருந்திருக்காது. பொதுவாக கோவாவின் கடற்கரைகளை மேப்பில் பார்த்தால் அடுத்தடுத்து வரிசையாக இருப்பது போல தோற்றமளிக்கும். ஆனால் ஓர் கடற்கரையிலிருந்து அடுத்த கடற்கரைக்கு வர வேண்டுமென்றால் குறுக்கு சந்துகள் வழியாக பிரதான சாலையை அடைய வேண்டும், மீண்டும் அடுத்த கடற்கரைக்கு அருகிலுள்ள குறுக்கு சந்துகள் வழியாக கடற்கரையை அடைய வேண்டும். இதனால் எல்லா கடற்கரைகளையும் காண வேண்டுமென நினைத்தால் ஏமாறுவீர்கள். 

வடக்கு கோவாவில் உள்ள கடற்கரைகளையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் சுருக்கமாக பார்க்கலாம். வழக்கத்தை மீறி இப்பதிவில் டெக்ஸ்டை விட கூடுதலாக படங்கள் பதிகிறேன். பொறுத்தருள்க !

க்வெரிம் பீச் (அல்லது கெரி பீச்) – கோவாவின் வடக்கு மூலையில் உள்ள கடற்கரை. இக்கடற்கரைக்கு அப்பால் ஒரு நதி ஓடுகிறது. நதியைக் கடந்தால் மகாராஷ்டிரா. ஒப்பீட்டளவில் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் கூட்டம் குறைவு. இங்கிருந்து மகாராஷ்திர எல்லையில் அமைந்துள்ள திறக்கோல் கோட்டைக்கு படகு சவாரி செய்யலாம். 

க்வெரிம் கடற்கரை செயற்கை பாறைகள்
க்வெரிம் கடற்கரையிலிருந்து மகாராஷ்டிர எல்லை
அடுத்து நாம் பார்க்கப் போகும் ஏழு கடற்கரைகளிலும் ரஷ்யர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். 

அரம்போல் பீச்: சமீபகாலமாக கூட்டம் அதிகம் சேரும் கடற்கரை. வரிசையாக குடில் உணவகங்களும், அவற்றின் முன்பாக பிகினியில் படுத்திருக்கும் ரஷ்ய பெண்கள். அரம்போல் கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய மலை அமைந்திருக்கிறது. ட்ரெக்கிங் பிரியர்கள் கவனத்திற்கு. இம்மலையில் இருந்து பாரா கிளைடிங் செய்யலாம். கோவாவில் பாரா கிளைடிங் அமைந்துள்ள ஒரே இடம் இதுதான் !

அரம்போல் கடற்கரை - ஏரியல் வியூ
மண்ட்ரெம் பீச்: கூட்டம் குறைவான, அமைதியான கடற்கரை. கரையில் இடையிடையே கடல்நீர் குட்டை போல தேங்கியிருப்பதால் அவற்றை உங்களுக்கான பிரத்யேக நீச்சல் குளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மரத்தால் அமைக்கப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள்ளது.

மண்ட்ரெம் கடற்கரையின் சிறு பாலம்
அஷ்வெம் பீச்: அமைதியான சிறிய கடற்கரை. செந்நிற பாறைகள் அமைந்திருக்கின்றன. உணவகங்கள் மிகக் குறைவு.

அஷ்வெம் கடற்கரையின் செந்நிற பாறைகள்
மோர்ஜிம் பீச்: அவள் பட கிளைமாக்ஸில் காட்டப்படும் பீச். வரிசையாக பல ரஷ்ய பிகினி தேவதைகளை ரசிக்கத்தரும் கடற்கரை. கடல் ஆமைகளை பராமரிக்கும் நிலையம் இங்கு அமைந்துள்ளது. 

மோர்ஜிம் கடற்கரையின் எழில்தோற்றம்
வகேட்டர் பீச்: வாட்டர் ஸ்போர்ட்ஸ் கொண்டுள்ள கடற்கரை. பாரா செய்லிங், பம்ப் ரைட், வாட்டர் ஸ்கூட்டர் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம். கடற்கரைக்கு அருகாமையில் சபோரா கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் மீதிருந்து கடற்கரையை பார்த்தால் கொள்ளை அழகு !

சபோரா கோட்டையிலிருந்து வகேட்டர்
ஓஸ்ரான் பீச்: பாறைகள் கொண்ட சிறிய கடற்கரை. கோவா கடற்கரைகளில் பிகினிகள் சகஜம். ஆனால் இங்கே அதையும் தாண்டி புனிதமான சில விஷயங்களையும் பார்க்கலாம். பாறையொன்றில் சிவனின் முகம் தெரிவதாகக் கூறப்படுகிறது. 

ஓஸ்ரான் கடற்கரை
ஓஸ்ரானில் சிவன் முகம்
அஞ்சுனா பீச்: அஞ்சுனா பகுதியில் அமைந்துள்ள கர்லீஸ் பற்றி முந்தைய பகுதியிலேயே பார்த்திருந்தோம். அஃதில்லாத மற்றொரு கடற்கரை. இங்கே ஜனத்திரள் கொண்ட பகுதியும் உண்டு, சற்று நடந்தால் தனிமையும் கிடைக்கும். ஷாப்பிங் செய்ய ஏராளமான கடைகள் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம். வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளது.

அஞ்சுனா ஷாப்பிங் பகுதி
பாகா பீச்: கோவாவின் மோஸ்ட் வாண்டட் கடற்கரை. கூட்டம் அதிகம் இருக்கும். இரவு வாழ்க்கைக்கு பெயர் போனது. பாகா பீச்சின் பின்புறம் பார்ட்டிகள் நடக்கும் டிட்டோஸ் லேன் உள்ளது. (டிட்டோஸ் லேன் பற்றி அடுத்த பகுதியில் தனியாக பார்க்கலாம்). வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளது.

பாகாவின் நீளமான கரை
இரவு நேர பாகா
கேலங்குட்டே பீச்: பாகாவின் பிரதி; மற்றொரு முனை. பாகாவில் கூட்டம் அதிகம் என நினைப்பவர்கள் இங்கே பாகாவிலிருந்து நடந்தே வந்துவிடலாம்.

கேலங்குட்டே கடற்கரை
கேண்டோலிம் பீச்: ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவான வாட்டர் ஸ்போர்ட்ஸ் கொண்ட கடற்கரை. கூடுதலாக ஜெட் ஸ்கீயிங், கட்டுமரப் பயணம் போன்றவை கிடைப்பது சிறப்பம்சம்.

சிங்க்வெரிம் பீச்: பம்பாய் படத்தின் உயிரே பாடலை படம்பிடித்த அகுவாடா கோட்டைக்கு அருகில் உள்ள கடற்கரை. வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளது. வடக்கு கோவாவின் கடைசி பீச்.

அகுவாடா கோட்டையிலிருந்து சிங்க்வெரிம்
டோனா பாலா பீச்: வடக்கிற்கும், தெற்குக்கும் மத்தியில் பழைய கோவாவில் அமைந்துள்ள கடற்கரை. குறிப்பிடும்படியான அம்சம் இங்குள்ள வியூ பாயிண்ட். ஷாப்பிங் செய்ய கடைகள் உண்டு.

டோனா பாலா
இவை தவிர்த்து குட்டிக் குட்டியாக கோகோ பீச், கெக்டோல் பீச், மிராமர் பீச், டெவில்’ஸ் ஃபிங்கர், ஓஷோ பீச் மற்றும் பெயரே கேள்விப்படாத நிறைய கடற்கரைகள் உள்ளன. இக்கடற்கரைகளை சென்று பார்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. சில சமயங்களில் அக்கடற்கரைக்கு செல்ல போதுமான சாலை வசதி இராது. அப்படியே போய் பார்த்தாலும் அங்கே குறிப்பிடும்படியாக ஏதும் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் முழு கோவாவையும் சுற்றிப் பார்த்து முடித்துவிட்டு எக்ஸ்ப்ளோர் மோடில் இருக்கும்போது இக்கடற்கரைகளை போய் பார்க்கலாம்.

மற்றபடி மேலே சிறுகுறிப்பு கொடுக்கப்பட்ட கடற்கரைகளை இரண்டாகப் பிரித்து பட்டியலிடுகிறேன். தவறவிடக் கூடாதவை மற்றும் பார்க்க வேண்டியவை. பட்டியலில் இல்லாத கடற்கரைகளை தவிர்த்தால் பாதகம் ஒன்றுமில்லை என்று அறிக.

தவறவிடக்கூடாதவை:
வகேட்டர்
அஞ்சுனா
பாகா
சிங்க்வெரிம்
மோர்ஜிம்

பார்க்க வேண்டியவை
க்வெரிம்
அரம்போல்
ஓஸ்ரான்
டோனா பாலா

அடுத்த கட்டுரையில் கோவாவில் உள்ள சாகச விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

அடுத்து வருவது: கோவா – அட்வெஞ்சர்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 April 2018

பிரபா ஒயின்ஷாப் – 16042018


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வாரயிறுதி ஈ.சி.ஆரில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியையும், துறைமுகத்தில் போர்க்கப்பல்களை பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்ட நிகழ்வையும், அதன் தேதிகளையும் போட்டுக் குழப்பிக்கொண்டு கடைசியில் இரண்டையும் பார்க்க முடியாமல் வீணானது.

**********

மருத்துவர் ஷாலினியின் அந்தரங்கம் இனிமையானது என்கிற நூலை கிண்டிலில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஷாலினி சில ஆச்சர்யமான விஷயங்களை முன் வைக்கிறார்.

தற்போது மேற்குலகில் காமத்தை பரந்த மனப்பான்மையுடன் அணுகுகிறார்கள். இந்தியாவில் இன்னும் அப்படிப்பட்ட சூழல் இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு சூழல் நேரெதிராக இருந்தது என்கிறார். அதாவது ஆங்கிலேயர்கள் கட்டுப்பட்டித்தனமாகவும், இந்தியர்கள் பரந்த மனப்பான்மையுடன். நாற்காலிக்கு கூட கால் வெளியே தெரியக்கூடாது என்று மூடி மூடி பழக்கப்பட்ட ஆங்கிலேயர்களின் கலாசாரம் நம்மை அறியாமல் நம் மக்களிடம் திணிக்கப்பட்டுவிட்டது என்கிறார். இந்தப் பக்கம் இப்படியிருக்க அந்த பக்கம் அமெரிக்காவிலிருந்த ஆங்கிலேயேர்கள் ஆடை விஷயத்தில் ஒரு புதிய புரட்சியை செய்தார்கள். பின்னர், இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனாலும் நாம் ஆங்கிலேயர்கள் கற்றுக்கொடுத்த மூடிமறைக்கும் கலாசாரத்தையே பின்பற்றுகிறோம். ஆங்கிலேயர்கள் கரையேறிவிட்டனர்.

அந்த கால தமிழ் இலக்கியங்களை படித்தாலே நம் முன்னோர்கள் செக்ஸுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று புரிந்துக்கொள்ளலாம். (முன்னோர்கள் முட்டாள் இல்லை !). திருக்குறளில் காமத்துப்பால் என்று ஒரு அத்தியாயமே வருகிறது. தமிழில் மட்டுமல்ல, காமசூத்ரா என்கிற உலகின் முதல் செக்ஸ் நூலைக் கொண்டது இந்திய இலக்கியம். கிறஸ்தவ பாதிரியாரான கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (தமிழில்: வீரமாமுனிவர்) திருக்குறளின் அறம் மற்றும் பொருளை மட்டும்தான் மொழிபெயர்த்தார் என்பதை ஷாலினி சுட்டிக்காட்டுகிறார். காமத்துப்பால் கிறிஸ்தவ மதத்திற்கு ஏற்புடையது அல்ல என்று புறக்கணிக்கிறார். ஆனால் அவர் விட்டாலும் கூட இப்போதுள்ள பாதிரியார்கள் காமத்துப்பாலை செயலிலேயே காட்டி வருகிறார்கள்.

இப்புத்தகத்தின் கிண்டில் வடிவம் அமேஸானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 

**********

தினசரி நான்கு அல்லது ஐந்து டீ குடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. திடீரென ஒரு சமயம் டீ இல்லை, காபி தரட்டுமா என்று யாரேனும் கேட்டால் முகம் உம்மென்று மாறிவிடுகிறது. என்றைக்கும் காபி என்பது டீயின் மாற்று கிடையாது என்பது என் கருத்து.

உலகிலேயே நீருக்குப் பிறகு அதிகம் குடிக்கப்படும் திரவம் டீ ! மூன்றாம் இடம் காபிக்கு. (நான்காவது பியர் !) இதற்கு முக்கிய காரணம் உலகில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு சீனா. அதற்கடுத்து இந்தியா. இப்படி மெகா ஜனத்தொகையை கொண்டுள்ள முதல் இரண்டு நாடுகளில் தேயிலை உற்பத்தியாவதால் அது அதிகம் பருகப்படுகிறது. 83 சதவிகித இந்தியர்கள் டீ குடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், இந்தியாவின் தரமான தேயிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு எஞ்சியிருக்கும் மூன்றாம், நான்காம் தர தேயிலை பொடிதான் நம்மிடம் விற்பனைக்கு வருகின்றன.

காபி கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே தேயிலை கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. முதன்முதலில் டீயை உலகிற்கு அறிமுகப்படுத்திய தேசம் சீனா. இது குறித்து எழுத்தாளர் எஸ்.ரா தனது உணவு யுத்தம் தொடரில் சில விஷயங்களைச் சொல்கிறார். சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்துவந்து விழவும், அதைக் குடித்த மன்னர் புதிய பானமாக இருக்கிறதே என டீயை சிறப்பு பானமாக அறிமுகம் செய்தார் என்கிறார்கள். தேயிலைத்தூளில் கலப்படம் செய்யப்படும் பொருட்களை எஸ்.ரா. பட்டியிலிடுகிறார். அவற்றை படித்தால் டீயின் மீதுள்ள ஆர்வமே போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன். காபி கண்டுபிடிக்கப்பட்ட கதை அதைவிட சுவாரஸ்யமானது - எத்தியோப்பியாவில் இடையர்கள் சிலர் தங்களின் ஆடுகள் வழக்கத்துக்கு மாறான ஆற்றலுடன் இரவிலும் தூங்காமல் இருப்பதைக் கண்டு காரணத்தைத் தேடினார்கள். பின்பு, அவை காபி கொட்டைகளை சாப்பிடுவதாலேயே அவ்வாறு இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள்.

காபி, டீ இரண்டும் தூக்கம் வராமல் இருக்க உதவுகிறது. தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் புத்துணர்வு தரக்கூடியது. காபியில் கெஃபெயின் என்னும் சாரம் உள்ளது. கெஃபெயினும் புத்துணர்வு தரக்கூடியதுதான். இதனை சென்ட்ரல் நெர்வஸ் சிஸ்டம் ஸ்டிமுலன்ட் என்கிறார்கள். தொடர்ந்து காபி குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடக்கூடும். அதிக காபி வயிற்று உபாதைகளையும், நரம்பு தளர்ச்சியையும் தோற்றுவிக்கலாம். டீயிலும் கெஃபெயின் உண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு.

டீயோ, காபியோ குறைவாக அருந்துவது நல்லது. காலையில் துயில் எழுந்ததும் ஒருமுறை, மதிய உணவிற்கு பிறகு கண்கள் மய்யமாக சொருகும்போது ஒருமுறை !

**********

சென்ற வாரத்தில் தமிழகம் வந்த மோடியை எதிர்க்கும் வண்ணம் GoBackModi என்கிற ஹேஷ்டேகை பிரபலப்படுத்தினார்கள் இணைய சமூக ஆர்வலர்கள். இந்த ஹேஷ்டேக் அன்றைய தினம் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் சில மணிநேரங்கள் முதலிடத்தையும் பெற்றது.

2011ல் நியூ யார்க் வால் ஸ்ட்ரீட்  போராட்டங்களின் போதுதான் ஹேஷ்டேக் என்கிற சொல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார்கள். ஒரு சம்பவம் குறித்த எல்லா தகவல்களையும் ஒரே சமயத்தில் தெரிந்துகொள்வது ஹேஷ்டேகின் முதன்மை பயன்பாடு. பெரும்பான்மை சமூகம் மற்றும் அதிகார வர்க்கத்தின் கவனத்தை பெற்றுத்தரும் வல்லமை கொண்டது ஹேஷ்டாக். ஒரு விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நன்கொடைகள் வசூலிக்கவும் கூட பயன்படுகின்றன.

ஒரு உதாரணம் தருகிறேன் 2014ல் விர்ஜின் மொபைல் நிறுவனமும், ஆஸி ஹார்வெஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து #mealforameal என்கிற ஹேஷ்டேகை அறிமுகப்படுத்தினர். இணைய பயனாளிகள் இந்த ஹேஷ்டேகுடன் தாங்கள் சாப்பிடும் உணவை படமெடுத்து பதிய வேண்டும். பகிரப்படும் ஒவ்வொரு படத்திற்கும் ஆஸி ஹார்வெஸ்ட் ஒரு நபருக்கு ஒரு வேளை உணவு வழங்கும்.  இதன் மூலம் ஏறத்தாழ இரண்டு லட்சத்தி இருபதாயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சொல்கிறது.

எல்லோருடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே ஹேஷ்டேகின் நோக்கம். ஆனால் இதுவரை GoBackModi ஹேஷ்டேக் சம்பந்தப்பட்டவருக்கு சுரணை ஏற்படுத்தியது போலவே தெரியவில்லை.

இதற்கிடையே இன்னொரு முட்டாள் குரூப், ஒரே போஸ்டில் இம்பொசிஷன் எழுதுவது போல நூறு முறை ஒரே ஹேஷ்டேகை போட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது என்று கண்டுபிடித்த குழுவிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment