23 July 2010

மருத்துவ சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

வணக்கம் மக்களே...

நினைத்த செயல் கைகூடினால் இதைச்செய்வேன், அதைச்செயவேன் என்று சிலர் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள். கடவுள் மேல் உள்ள நம்பிக்கையிலா என்று தெரியவில்லை, ஆனால் மறுபடியும் வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் காவு கொடுக்கின்றனர், தலைமயிரை. அப்படித்தான் நானும் வேண்டிக்கொண்டேன், அப்பாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப் பற்றி பதிவெழுதுகிறேன் என்று. இல்லாத கடவுளிடமா வேண்டிக்கொண்டாய் என்று கேட்கவேண்டாம். வெள்ளுடை தாங்கிய மருத்துவ மக்கள் தான் அப்போது எனது கண்களுக்கு கடவுள் என்று சொல்லப்படுபவர்களாக தெரிந்தனர்.


அகிலா, கள்ளங்கபடமில்லாத மூன்று வயது சிறுமி. ஏழு மாதங்கள் முன்பு வரை, சிரிப்பும் சில்மிஷமுமாக இருந்த சிறுமியிடம் திடீர் தடுமாற்றங்கள். படுத்த படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாதபடி சிறுமி சிறைப்பட்டாள். கடுமையான காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் அவளை வாட்டியெடுத்தது. சில நாட்கள் அவளை ஆராய்ந்த மருத்துவர்கள், அகிலாவின் பெற்றோரிடம் அந்த உறைய வைக்கும் செய்தியை உணர்த்தினர். சிறுமி அகிலா, ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவச்செலவு ஒரு லட்சம் வரை ஆகும் என்று சொன்னதும் வண்டிக்கடையில் பழங்கள் விற்கும் வியாபாரியான அகிலாவின் தந்தை நசுங்கிப்போய் விட்டார். எனினும் மருத்துவர்கள், குழந்தையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும்படி பரிந்துரைத்தனர். இப்போது அடையாறு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகளுக்குப்பின் சிறுமி மீண்டும் சிரிப்பும் சில்மிஷமுமாக இருக்கிறார்.


அகிலாவைப்போல ஒவ்வொரு நாளும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பலதரப்பட்ட நோயாளிகள் இங்கே புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்புகிறார்கள். இயலாத மக்களுக்கு இலவச சிகிச்சை கொடுப்பது சிறப்பம்சம்.


இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரை நினைவிருக்கிறதா...? சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அம்மையார் 1954ம் ஆண்டில் தோற்றுவித்தது தான் இந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. அம்மையாரின் தங்கை 1923ம் ஆண்டு புற்றுநோயால் மறைந்தபோது அவருக்கு ஏற்பட்ட துயரங்கள் அவரை சிந்திக்க வைத்தன. தனது ஒரே மகனை மேலை நாடுகளுக்கு அனுப்பி புற்றுநோய் மருத்துவத்தில் சான்றோனாக்கி அவரைக் கொண்டே மருத்துவமனையை தொடங்கியிருக்கிறார். முதலில் இரண்டு மருத்துவர்களும் பன்னிரண்டு குடில்களுமாக ஆரம்பித்த மருத்துவமனை இன்று ஐம்பத்தி ஆறு ஆண்டுகள் கடந்து ஆலமரமாக விரிந்து நிற்கிறது.


ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகும் அவற்றில் 20 சதவிகித நோயாளிகள் மட்டுமே தங்களுக்கான கட்டணத்தை செலுத்தி சிகிச்சை பெறுவதாகவும் மற்றவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் இங்கே இருக்கும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் ஆசியாவிலேயே சிறந்தவையாக கருதப்படுகின்றன. இத்தகைய வளர்ச்சிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் அளித்த நன்கொடைகள் பெரும்பங்களித்ததாக இங்கே இருக்கும் பழம்பெரும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கே இருநூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் வேறு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தால் இதைவிட நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம் எனினும் சேவை மனப்பான்மையோடு இங்கே பணிபுரிவதாகவும் கமிட்டி மெம்பர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.


அப்பாவின் முதற்கட்ட மருத்துவ ஆய்விற்காக ஒரு காலைப்பொழுதில் காத்திருந்தோம். அப்போது திடீரென மொத்த மருத்துவமனையும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அலறியடித்துக்கொண்டு வந்தது. அப்போல்லோவில் இருந்து துரித வேகத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நின்றது. வண்டியில் இருந்து சுமார் 90 வயது மதிக்கத்தக்க முதியவரை இறக்கினர். அவரது உடலுறுப்புக்களில் பல்வேறு உபகரணங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. உயர்திணையாக உள்ளே சென்றவர் சுமார் அரை மணிநேரத்திற்கு பின்னர் அக்றினையாகத் தான் திரும்பினார். ஒட்டுமொத்த மருத்துவமனையும் கூடி அவருக்கு மரியாதை தெரிவித்தபோது தான் இறந்தவர் முத்துலட்சுமி அம்மையாரின் மகனான பிரபல புற்றுநோய் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி என்று தெரிய வந்தது. உலகம் போற்றிய மருத்துவரான அவரை அதுநாள் வரை டாக்டர், சார், ஐயா என்று எப்படியெல்லாமோ அழைத்திருக்கலாம். ஆனால் அன்று மருத்துவமனையின் வாட்ச்மேன் முதற்கொண்டு "பாடி" என்றே குறிப்பிட்டனர். இதுதான் வாழ்க்கை. இதுதான் உலகம்.


இந்த சம்பவத்திற்கு பிறகு சில மணிநேரங்கள் மட்டும் ஸ்தம்பித்த மருத்துவமனை மறுபடியும் எப்பொழுதும் போல தனது சிறப்பான மருத்துவ சேவையை தொடங்கிவிட்டது. இங்கே ஏழை - பணக்காரன் பாகுபாடில்லை. வேட்டிக்கும் கரை வேட்டிக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. செல்வாக்குகள் செல்லுபடியாகுவது இல்லை. கரன்சிநோட்டுக்கள் கதவுகளை கள்ளச்சாவி கொண்டு திறப்பதில்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை ஒரே வழி. பிற தனியார் மருத்துவமனையைப் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையோ செய்துவிடாமல் பிறந்த குழந்தையை மெல்ல மெல்ல நடக்க வைப்பது போல தந்தையை பக்குவமாக பழக்கபடுத்தி வருகின்றனர். பிறிதொரு நாளில் அதே நகைச்சுவை உணர்வோடும், பழைய பகுத்தறிவோடும் தந்தையார் நலம் பெற்று இல்லம் திரும்புவார் என்ற நம்பிக்கையோடு...
கலங்கிய கண்களுடன்,
N R PRABHAKARAN

அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை சொடுக்கி விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

Post Comment

15 July 2010

அட... திருந்துங்கப்பா...!!!


இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் கிழவியை கட்டிபிடித்து ஊரை ஏமாற்றுவார்களோ தெரியவில்லை...???

உங்களோட கமென்ட் என்னவாக இருந்தாலும் அத மறக்காம சொல்லிட்டு போங்க...

Post Comment