27 March 2010

அங்காடித் தெரு - காதலும் கம்யூனிசமும்

வணக்கம் மக்களே...

நேற்றைக்கே படத்தைப் பார்த்துவிட்டு சுடச்சுட பதிவைப் போட்டுவிட எண்ணினேன். உடன் வருவதற்கு யாரும் சிக்காததால் ஒரு நாள் தள்ளிப்போய்விட்டது. நமக்கு பரிட்சயமான தேவியிலும், ஐ ட்ரீமிலும் படம் ரிலீஸ் ஆகாததால் நம்மூர் தியேட்டரிலேயே பார்க்கலாமென்று திருவொற்றியூர் MSMக்கு சென்றிருந்தேன். மலிவான விலையிலேயே டிக்கெட் கிடைத்தது. கூட்டம் கூட அதிகமில்லை. அநோன்ரும் இங்கொன்றுமாக ஒரு ஐம்பது பேர் மட்டுமே இருந்தனர். என்ன செய்வது...? நம்மூர்க்காரங்களோட ரசனை அப்படி. இதுவே அசலாகவோ வேட்டைகாரனாகவோ இருந்திருந்தால் முண்டியடித்துக்கொண்டு வருவார்கள்.
கதைச்சுருக்கம்
படம் க்ளைமேக்ஸில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் விரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கதை ஆரம்பிக்கிறது. மகேஷும் பாண்டியும் நெருங்கிய நண்பர்கள். பள்ளிப்பருவம் கடந்தபின்னர் குடும்ப சூழ்நிலைக்காக சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸில் (நான் அப்படித்தான் சொல்லுவேன்... செந்தில்முருகன் ஸ்டோர்ஸ் என்றெல்லாம் சொல்லமாட்டேன்) வேலைக்கு சேர்கிறார்கள். கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள், காதலிக்கிறார்கள், கம்யூனிசம் பேசுகிறார்கள். மகேஷும் அஞ்சலியும் காதலிலும் வாழ்க்கையிலும் வெற்றிப் பெற்றார்களா என்பதே இறுதிக்காட்சி. இதுபோன்ற நல்ல படங்களுக்கெல்லாம் படத்தின் முடிவு பற்றி சொல்லி உங்கள் சுவாரஸ்யத்தை குறைக்கமாட்டேன்.

படத்தின் ஆரம்பக்காட்சிகள் சில நிமிடங்கள் கிராமத்து காட்சிகள், பருத்திவீரன் போன்ற படங்களைவிட யதார்த்தமாக அமைந்திருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் கதை சென்னை நோக்கி பயணமானது. கதை ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்த பின்னர் இப்படியெல்லாம் பயனிக்குமென நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அண்ணாச்சிகளை படத்தில் இந்தளவுக்கு கிழித்திருப்பார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. அண்ணாச்சி அறிமுகமாகும் காட்சியிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று தெளிவாக உணர்த்திவிடுகிறார் இயக்குனர். கடை ஊழியர்கள் கொத்தடிமைகள் போல நடத்தபடுகின்றனர். சிறையைவிட கொடுமையான ஒரு வாழ்க்கை, பாலியல் வன்முறை செய்யும் எடுபிடி சூப்பர்வைசர் என்றெல்லாம் ரொம்பவே கண்ணீர் சிந்த வைத்துவிட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் அஞ்சலியும் மகேஷும் விரும்புகிறார்கள். கடை ஊழியர்கள் காதலித்தால் என்ன நடக்குமென்பதை முன்னதாகவே ஒரு காட்சியின் மூலம் உணர்த்திவிடுகிறார்கள். இதையும் மீறி காதலில் இறங்கும் காதலர்கள் வென்றார்களா என்று திரையில் பாருங்கள். படத்தின் திரைக்கதை ஆங்காங்கே ஹைக்கூ கவிதை சொல்கிறது. உதாரணத்துக்கு ஸ்ட்ராபெர்ரி சேற்றில் விழும் காட்சியை சொல்லலாம். ரங்கநாதன் தெருவில் சிறுதொழில் செய்பவர்களது காட்சிகள் ஒவ்வொன்றும் நல்ல கருத்துக்கள்.

மகேஷ் 
கல்லூரியில் நடித்த அகிலும் ஐவரும் ஒருவரல்ல என்பதை கிட்டத்தட்ட பாதிப்படம் முடிந்தபின்னரே தெரிந்துக்கொண்டேன். ஆனால் கல்லூரியில் நடித்தவரை விட நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியைவிட இரண்டாம் பாதியில் அதிகம் கவனத்தை ஈர்க்கிறார். காதலிக்காக ரெளத்திரம் பழகிய காட்சிகள் அனைத்தும் அற்புதம்.
அஞ்சலி 
அஞ்சலி இயற்கையாகவே ரொம்ப அழகு. அதனால்தான் அவருக்கு இதுபோன்ற யதார்த்தமான கதைகள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட கற்றது தமிழில் பார்த்தது போலவே ஒரு பாத்திரப்படைப்பு என்று வைத்துக்கொள்ளலாம். குறும்பும் அடாவடியுமாக ஆரம்பக்காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்.

பாண்டி
ஏறத்தாழ படத்தின் நாயகன் என்றே சொல்லலாம். மகேஷின் சோகக்காட்சிகளுக்கு நடுநடுவே வந்து கலகலப்பூட்டுகிறார். இருந்தாலும் கனா காணும் காலங்களில் இவரைப் பயன்படுத்தியதைப் போல இந்த இயக்குனர் பயன்படுத்த தவறியிருக்கிறார். இரண்டாம் பாதியில் கழட்டிவிடப்பட வேண்டிய பாத்திரம் சினேகாவிடம் டச்சப் பாயாக சேர்ந்துவிட்டதாக முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

மற்றும் பலர் 
முன்னர் சொன்னதுபோல ரங்கநாதன் தெருவில் காட்டப்படும் சில பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்தான கருத்துக்களை சொல்லிவிட்டு நகர்கின்றன. சூப்பர்வைசர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வெங்கடேஷ் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புது ரகவில்லன். சோபியா, செல்வராணி என்று நம்ம ஊர் அழகிகளைஎல்லாம் திரையில் பார்க்கும்போது மகிழ்வாக இருந்தது. சினேகா கெளரவ வேடத்தில், சிநேகாவாகவே வந்து செல்கிறார்.

பாடல்கள் 
"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..." என்ற பாடலின் காட்சி அமைப்பும் பாடலின் வரிகளும் அற்புதம். நீண்ட நாட்கள் நிலைக்கக்கூடிய காதல் பாடல். அடுத்தபடியாக "உன் பேரை சொல்லும்..." என்ற பாடல் சிறப்பாக இருக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் வேகத்தடையே.

RESULT
படம் காதலைவிட அதிகமாக கம்யூனிசம் பேசியது இன்ப அதிர்ச்சி. கடையில் வேலை பார்க்கும் ஒரு பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் குதித்த அந்த இடத்தை கழுவிவிட்டு எப்போதும்போல அந்த இடத்தில் கோலம் போடும் காட்சி ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது.

இந்தப்படத்தின் கதைபற்றி அண்ணாச்சிகளுக்கு முன்னதாக தெரியாமல் இருந்திருக்கலாம். தெரிந்திருந்தால் கண்டிப்பாக கேஸ் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அண்ணாச்சிகளின் சர்வாதிகாரத்தையும் முதலாளித்துவத்தையும் போட்டு உடைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தைப் பார்த்த பின்னர் இத்தகைய கடைகளின் முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் ரியாக்ஷன் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென ஆர்வமாக இருக்கிறது.

இனி, ரங்கநாதன் தெருவுக்கு போகும்போதெல்லாம் அங்காடித் தெருவின் ஞாபகம் தான் வரும்.

அங்காடித் தெரு - திருப்தியான ஷாப்பிங்
ஆனால் வலியுடன்,
N R PRABHAKARAN

Post Comment

25 March 2010

காக்னிசன்ட் கனவுகள்

வணக்கம் மக்களே...

சென்ற வாரம் நான் கடந்து வந்த விஷயங்களில் சிலவற்றை இந்தப் பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போல இருக்கே...!
வழக்கம்போல ஒரு மாலைப்பொழுதில் சிந்தனைப்பசி அதிகமாகி வலைப்பூக்களை மொயத்துக்கொண்டிருந்தேன். அப்போது "அவிய்ங்க" ராசாவின் வலைப்பூவில் "போடா கிறுக்குப் பயலே" என்ற பெயரில் ஒரு பதிவு. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நகைச்சுவை பதிவாக இருக்கக்கூடுமென எண்ணினேன். ஆனால் பதிவைப் படித்து முடிக்கும்போது நான் அலுவலகத்தில் இருக்கிறேன் என்பதையும் மறந்து கண்களில் இருந்து கண்ணீர் துளிர்த்தது. பெரும்பாலும் பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே அந்தப் பதிவை படித்திருப்பீர்கள், சிலிர்த்திருப்பீர்கள். படிக்காத பதிவர்களும், வலைப்பூக்கள் அதிகம் பரிட்சயம் இல்லாத எனது சில நண்பர்களும் கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம். ஹும்ஹூம் கட்டாயம் படித்தே தீரவேண்டும்:
"அவிய்ங்க" ராசா இனிமேல் நீங்க "நம்ம" ராசா.
(இந்தப் பகுதிக்கு ஏன் இந்த உபதலைப்பு கொடுத்தேன் என்ற சூட்சுமம் நண்பர்கள் சிலருக்கு புரிந்திருக்கக்கூடும்)

அடிச்ச போதையெல்லாம் இறங்கிடுச்சு...!
இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி. "சென்னையில் போலி மது தொழிற்சாலை கண்டுபிடிப்பு". பாட்டில்களுக்கு மத்தியில் முகத்தை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்த அந்த பாவி என்ஜினியராம். ஒசிக்குடி குடித்தாலும் கவர்ன்மென்ட் சரக்குன்னு தானே நம்பிக்குடித்தோம். சரக்கில் தண்ணீரை கலந்து விற்பனை செய்தீர்கள் பொறுத்துக்கொண்டோம். ஐம்பத்தி ஆறு ரூபாய் சரக்கை எழுபது ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள் சகித்துக்கொண்டோம். இப்போது மொத்தமும் போலிஎன்றால் நாங்கள் எந்த நம்பிக்கையில் குடிப்பது. நம் நாட்டு குடிமகன்களுக்கு செக்யூரிட்டி மிகவும் குறைந்து வருகிறது. போலி மருந்து தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலைஞர் அறிவித்திருக்கிறார். இதுவும் ஒரு மருந்து தானே. இதுபோன்ற சட்டவிரோத செயல் செய்பவர்களை தட்டிக்கேட்காத மைனாரிட்டி தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று புரட்சித்தலைவியாவது ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.
(ஒருவேளை மது என்றாலே போலி தானோ. நெப்போலியன் மேல சத்தியமா நான் மதுன்னு சொன்னது டாஸ்மாக் சரக்கைதாங்க)

வேலை வாங்கித்தரப்போறாராம்
அதே செய்தித்தாளில் எனது ரத்தம் கொதிக்கச் செய்த மற்றுமொரு செய்தி. "தே.மு.தி.க வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன்." என்று கேப்டன் சொல்லியிருக்கிறார். அட டோனி இல்லைங்க... நம்ம விஜயகாந்த சொன்னேன். லட்சகணக்கில் பணத்தை வாரி இறைத்து இவருடைய கல்லூரியில் படித்துவிட்டு இப்போது தறுதலையாக (பதிவராக) இருப்பவனுக்கு இதைப்படித்ததும் ரத்தம் கொதிக்காமல் என்ன செய்யும். கேப்டன் சார், முதலில் நம்ம கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். அதன்பிறகு எதுகை மோனையாக பேசி தேர்தல் பிரச்சாரம் செஞ்சுக்கலாம்... ஆங்.

காக்னிசன்டில் கலவரம்
பர்சனலா ஒரு விஷயம்... என்ஜினியரிங் படித்துவிட்டு கிடைத்த கால் சென்டர் வேலையிலேயே திருப்தி அடைந்திருந்தேன். திடீரென்று மென்பொருள் துறையில் நுழைய வேண்டுமென்ற ஆசை. அதிலும் பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமாங்க்றதைப் போல காக்னிசன்டில் தான் நுழைய வேண்டுமென ஒரு வெறி. ஏன் அப்படி ஒரு வெறி வந்துச்சுன்னு கூடிய விரைவில் சொல்லுகிறேன்... சொல்லித்தொலைக்கிறேன். எதிர்ப்பார்த்த நேரத்தில் ரிட்டன் டெஸ்ட் ஒன்றினை நடத்தினார்கள்.
ஒருவேளை தேர்வாகிவிட்டால் "அஞ்சாதே" பிரசன்னா ஸ்டைலில் வளர்த்த கூந்தலை தியாகம் செய்ய வேண்டுமே என்ற தயக்கம் ஒரு புறம். கடைசியில் கத்தரிக்கு வேலை வைக்காத வண்ணம் தேர்வு முடிவு வெளியாகி எனது திடீர் காக்னிசன்ட் கனவு கலைந்துப்போனது. "இவனை காக்னிசன்டில் சேர்த்தால் காக்னிசன்டில் கலவரம், சாப்ட்வேர் கம்பெனியில் சில்மிஷம் என்று எதையாவது எழுதித்தொலைப்பான்" என்று சுரேஷும் நிரஞ்சும் மேலிடத்திற்கு ரகசியத்தகவல் அனுப்பிவிட்டார்களோ என்னவோ...? எது எப்படியோ...? இனி எப்போதுமே உங்கள் சேவைக்காக பிரபாகரன்.

தலைக்கு வாழ்த்துக்கள்
அஜித் பற்றிய செய்தி சினிமா பக்கத்தில் வந்த காலமெல்லாம் போய் இப்போது ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் வர ஆரம்பித்தது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. ஏப்ரல் பதினாறாம் தேதி தொடங்கவிருக்கும் F2 சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் கலந்துக்கொள்ளும் மூவரில் ஒருவராக நம்ம தல. தல வெற்றியுடன் திரும்புவதற்கு "philosophy prabhakaran" வலைப்பூ சார்பாக வாழ்த்துக்கள்.

அடுத்தது என்ன...?
நாளைக்கு இந்த நேரம் அங்காடித்தெரு படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். அஞ்சலியின் சிரிப்பிற்க்காகவே படத்தை பார்க்கப்போகிறேன். நாளை மாலையே அதுபற்றிய பதிவை போட்டுவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

22 March 2010

பிள்ளையாரின் நான்கு வகை பிறப்புகள்

(வரலாறு குறித்த பதிவுகளையும் போடச்சொல்லி கருத்து தெரிவித்த சுரேஷுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்)
இந்துக்கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனை கணபதி என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.

ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

1. ஒரு நாள் சிவனின் பெண் சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - "நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!..." என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, "பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக்கூடாது..." என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, "காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்...?" என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், "காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்" என்று சொன்னதாகவும், இதுகேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியே வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது, சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3.  பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்ப்க்கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவா பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு, உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மக்கள் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா...? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய்- தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்...? (இவைகளைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாகவே ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்...? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைப் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது.)

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் "கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு, இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்" என்று சொல்லுவதும், மற்றும் "அது ஒரு சக்தி" என்றும், "ஒரு தன்மை அல்லது குணம்" என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள் தான் உணர வேண்டும்.

(சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 "குடிஅரசு" இதழில் எழுதியது)

Post Comment

18 March 2010

தமிழ்ப் படம் கற்றுத்தந்த பாடங்கள்

வணக்கம் மக்களே...

கொஞ்சம் மொக்கையாகத்தான் இருக்கும். என்ன செய்வது...? பூமிக்கும் பண்டோராவுக்கும் உள்ள இடைவெளியை விட எனதிரு பதிவுகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதாக நண்பர்கள் கண்டித்ததால் அவசரமாக இந்த பதிவைப் போடுகிறேன். அது மட்டுமல்ல. மருவத்தூர் பதிவு, அதற்கு ஷிவு போட்ட பின்னூட்டங்கள், சுரேஷுக்கு ஒரு கடிதம் என்று தொடர்ந்து சீரியஸாக போய்க்கொண்டிருந்தால் நமது ஹியுமர் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமென்ற பயத்தில் இந்த பதிவைப் போடுகிறேன்.
படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் படத்தை பார்க்க முடிந்தது. படத்தில் கதை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் விக்கிப்பீடியாவில் மட்டும் பக்கம் பக்கமாக என்னதான் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் தமிழ்ப்படத்தை எப்படி ரசித்தார்களோ, அப்படித்தான் நான் வழக்கமாக பேரரசு, ஹரி படங்களையும் ரசிப்பேன். அந்த வரிசையில் சிவகாசி படத்திற்குப்பின் நான் குலுங்கிச்சிரித்த ஒன்றுதான் தமிழ்ப்படம்.

நாலு லொள்ளு சபா எபிசோடை ஒரே டேக்கில் பார்த்த ஒரு பீலிங். டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே கலாய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கமல் சொன்னது போல கடைசி வரை அதை மெயின்டெயின் பண்ணவும் செய்திருக்கிறார்கள். ஈவன், நாயகன் மற்றும் நாயகியின் பாத்திரங்களின் பெயரில்கூட கலாய்ப்பதை விட்டுவைக்கவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்களேன், முக்கால்வாசி கமர்ஷியல் சினிமாக்களில் நாயகன் பெயர் ஷிவாவாகவும் நாயகியின் பெயர் ப்ரியாவாகவும் தான் இருக்கும்.
கிழக்கே போகும் ரயில், கருத்தம்மாவில் ஆரம்பித்து கந்தசாமி வரை கிழித்திருந்தார்கள். நடிகர்களில் பாக்யராஜ், ராமராஜன் தொடங்கி சிம்பு வரை கலாய்த்திருக்கிறார்கள். முப்பதிற்கும் மேற்ப்பட்ட படங்கள் பஞ்சராக்க பட்டிருக்கிறது. அவற்றுள் எனக்கு பிடித்த நான்கினை மட்டும் போல்ஸில் இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்த காட்சியில் வாக்களித்து விடுங்கள்.
ஏற்கனவே படத்தை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சில எச்சரிக்கைத்துளிகள்:
1. சிறுவர்கள் யாரும் ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளின் மீது ஏறி அமர்ந்து பெடலை சுற்ற வேண்டாம். பின்னர் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.
2. சிவாவைப் போல பரதம் ஆட யாரும் முயற்ச்சிக்க வேண்டாம். படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் தேர்ந்த நிபுணர்களால் பலத்த பாதுக்காப்புகளுக்கு மத்தியில் செய்யப்பட்டது.
3. படத்தில் காட்டப்படும் P.R.S. கள்ளிப்பால் விற்பனைக்குட்பட்டது அல்ல. டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்று P.R.S கள்ளிப்பால் தான் வேண்டுமென யாரும் அடம் பிடிக்க வேண்டாம்.
படம் பார்த்த பின்பு இன்னமும் கூட கலாய்த்திருக்கலாமோ என்று தோன்றியது. அவ்வாறாக இயக்குனர் தவறவிட்ட சில சிக்சர்கள்:
1. வண்டிக்கடைகள் சிதற, மண்பானைகள் நொறுங்க, பொதுமக்கள் தெறித்து ஓட, என்பதுகளில் வெளிவந்த கிராமத்து படங்களில் காட்டப்பட்ட சந்தைக்கடை சண்டைக்காட்சி மிஸ்ஸிங்.
2. பாய்ஸ் பட பாணியில் யூத்துக்கள் பட்டாபி, வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா அறிமுகமாவது அமர்க்களம். ஆனால் பார்த்திபன் அல்லது கெளதம் மேனன் வாய்ஸில் ஒவ்வொரு யூத்துக்கும் ஒரு இன்ட்ரோ கொடுத்திருக்கலாம்.
3. விக்ரமன் படங்களில் வருவது போல "காதல்ங்கறது..." என்று ஆரம்பிக்கக்கூடிய தத்துபித்துவ வசனங்கள் இல்லாதது எனக்கு ரொம்பவே வருத்தம். அட்லீஸ்ட் பேக்ரவுண்டில் "லா லா லா... லா லா லா..." என்று பாடும் சியர் கேர்ள்ஸையாவது கூப்பிட்டிருக்கலாம்.
4. அதிகமாக ஷங்கர் தனது படங்களில் பொதுமக்களை ஊறுகாயாக பயன்படுத்தும் ஒரு காட்சி: நாயகன் கைதாகும் போதோ அல்லது இக்கட்டான சூழலில் இருக்கும்போதோ மக்களுள் லோ கிளாஸ் முதல் ஹை கிளாஸ் வரை நாயகனுக்கு ஆதரவாக கமென்ட் கொடுப்பார்கள். அத்தகைய காட்சி எதுவும் இந்தப்படத்தில் இல்லை.
இது தவிர்த்து நாயகன் புலி பொம்மையோடு சண்டையிடும் காட்சியை ஏற்கனவே ஷாருக்கான் கிழித்துவிட்டதால் அது தேவையில்லை.
சரி சீரியஸான விஷயத்திற்கு வருவோம். படத்தை பார்த்தோம், சிரித்தோம். போதுமா...? சிந்திக்க வேண்டாமா...?
தமிழ்ப்படம் கற்றுத்தரும் பாடங்கள் என்னென்ன...?
1. இனியாவது "அசிலி பிசிலி", "டோல் டப்பி மா" என்று அர்தத்தம் புரியாத அல்கஞ்சாரி குல்கா பாடல்களை ஹிட்டாக்கக் கூடாது.
முக்கியமாக சன் மியுசிக்குக்கு கால் பண்ணி அத்தகைய பாடல்களை அக்காப்பொண்ணு அருக்கானிக்கு டெடிகேட் பண்ணக்கூடாது.
2. தாமு, வையாபுரி, சார்லியெல்லாம் அரியர் பேப்பர் கிளியர் பண்ணலை என்று சொல்லிக்கொண்டு காலேஜ் பக்கம் வந்தால் கூட யாரும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.
3. கழிவறையில் அமர்ந்தபடி ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆவது போல கனவு காண்பது தவறு. அதிலும் தொழிலதிபர் கனவு மிகவும் ஆபத்தானது. வேண்டுமானால் ஏ.ஆர்.ரகுமானைப் போல ஒரே பாடலில் உலகப்புகழ் அடைய முயலுங்கள்.
4. இனியாவது கிழவிகளை கட்டிப்பிடிக்கும் நாயகர்களை கண்டு சிலிர்க்க வேண்டாம். இப்படித்தான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஏமாற்றி வருகிறார்கள்.
5. the ultimate one: இனியாவது ஷங்கர், பேரரசு, ஹரி போன்றவர்களது படங்களைப் பார்த்து அடுத்தர்களது போதைக்கு ஊறுகாயாகாமல் இருங்கள்.


இது போல உங்களுக்கும் ஏதாவது தத்துபித்துவங்கள் தோன்றியிருந்தால் பின்னூட்டம் போட்டு பிதற்றிவிட்டு செல்லுங்கள். பதிவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போடாதவர்களை அந்த விரலை ஆட்டி நடிக்கும் தம்பி படத்தை நூறுமுறை போட்டுக் காட்டுங்கப்பா...
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

12 March 2010

சுரேஷுக்கு ஒரு கடிதம்

வணக்கம் மக்களே...

(தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு, கோவா படத்தை விமர்சிப்பது, சங்கராச்சாரியை கிழிப்பது, பட்டாம்பூச்சியின் அடுத்த பாகத்தை பறக்க விடுவது இவற்றிற்கெல்லாம் முன்னதாக முக்கியமான ஒரு பதிவை எழுதி ஆகவேண்டிய சூழ்நிலை. இது முழுக்க முழுக்க ஒரு personal பதிவு. படிக்க விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம்.)
அன்புள்ள சுரேஷுக்கு,

தங்களது குறுந்தகவலை எனது இன்பாக்ஸில் பார்த்த நொடியில் என் மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே அச்சுப்பிசகாமல் பதிவு செய்கிறேன்.

முதலாவதாக எனது வலைப்பூவிற்கு வருகை தந்ததற்கும் பின்னூட்டம் பதிவு செய்ததற்கும் நன்றிகள்.

சில மாதங்களுக்கு முன்னால் நான் எழுதிய நைட் ஷிப்ட் கட்டுரையில் உங்கள் அனுமதியின்றி உங்களைப் பற்றி சில வரிகள் எழுதியிருந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் அந்தக் கட்டுரையில் இன்னும் காட்டமாக எனது கோபத்தை சில இடங்களில் வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் எனது வலைப்பூ அலுவலகத்தில் பரவ ஆரம்பித்த அடுத்த நாளே கட்டுரையில் இருந்த சில வரிகளை நாகரிகமாக நீக்கிவிட்டேன். இருப்பினும் கட்டுரையில் இருந்த சில வரிகள் உங்களை காயப்படுத்தி இருக்கலாம். அதற்காக நான் மனமார வருந்துகிறேன்.

கட்டுரையை படித்தபின்பு நீங்கள் என்னை கண்டித்திருந்தாலோ, வேறு விதமாக செயல்பட்டிருந்தாலோ சத்தியமாக நான் அதற்காக துளியும் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். but the way u behaved is quite different. This is what Thiruvalluvar said,
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்"
நீங்கள் அனுப்பிய குருந்தகவலைப் படித்தபோது உண்மையில் நான் மனம் வருந்தினேன்.

கட்டுரையில் நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய எண்ணங்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. அதுதான் சரி என்றோ, நடந்தது இதுதான் என்றோ நான் கூறவில்லை. ஆனாலும் கலகலவென சுற்றித்திரிந்த சரவணனை கல்லாக மாற்றிய சம்பவம் எது என்பது உங்களுக்கும் நினைவிருக்கலாம்.

even விஷனும் நானும் கூட நைட் ஷிப்டில் இருக்கும்போது உங்களிடம் முரண்பட்டே இருந்தோம். விஷனுக்கும் எனக்கும் இருக்கும் உணர்வு ஒற்றுமையை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் விஷன் பக்கத்தில்தான் login செய்வேன் என்று அடம் பிடித்ததெல்லாம் இதற்காகத்தான்.

இதுவரை நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் நைட் ஷிப்டில் நடந்து முடிந்தவை. இனி எழுதப்போகும் வரிகள் அனைத்தும் சில வாரங்களுக்கு முன்பு நான் அக்பர் அணிக்கு மாற்றப்பட்டபோது எழுத நினைத்த வரிகள்.

ஒரு காலத்தில் எப்படியாவது இந்த அணியை விட்டு வெளியேறினால் போதுமென நினைத்திருக்கிறேன். ஆனால் நான் அக்பர் அணிக்கு மாற்றப்பட்டபோது நான் இருந்த மனநிலை எனக்கு மட்டும்தான் தெரியும். ஆர்.சதீஷை பார்த்து பொறாமை பட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நிரஞ்ச் உங்களைத் திட்டும்போதும், நாங்கள் செய்த தவறுகளுக்காக உங்களுக்கு அனுப்பப்படும் மெயில்களை பார்த்தபோதும் உங்களது point of viewல் இருந்து சில உண்மைகளை உணர்ந்துக்கொண்டேன்.

தளத்திலேயே உங்களைப் போல சிறப்பாக பணியாற்றக்கூடிய அணித்தலைவர் யாரும் கிடையாது. Here i like to use the word "dedication". எந்த ஒரு அணியும் நமது அணியைப் போல systematicக்காக இருந்ததில்லை. நான் உங்களுடன் இருந்த மனக்கசப்புகளை மறந்து எப்போதோ உங்களுடன் இணைந்து எனக்காகவும் அணிக்காகவும் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். இதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பீர்கள். உணரவில்லை என்றால் இப்போது உணர்ந்துக்கொள்ளுங்கள்.

நான் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். sincerity, dedication, punctuality, politeness இதுபோன்ற பல வார்த்தைகளுக்கான அகராதியாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.

என் வாழ்வில் என்றைக்குமே நான் உங்களைப் போல ஒரு மாமனிதரை மறக்கமாட்டேன். U R A GREAT PERSONALITY. IM ADMIRING U.

என்னுடைய கருத்துக்கும் மதிப்பளித்து இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி. இது மட்டுமல்லாமல் நான் எழுதிய, எழுதும் சமூகப்பதிவுகளையும் நீங்கள் படித்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.

(பி.கு.: எனக்கு சொம்படித்து பழக்கமில்லை. சொம்படிக்கவும் தெரியாது. நான் எனது மனதில் தோன்றிய கருத்துக்களை மட்டுமே எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன்.)
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

9 March 2010

மேல்மருவத்தூர் அபத்தங்கள்

வணக்கம் மக்களே...

செவ்வாடை தொண்டர்கள் சிலர் கட்டாயம் இந்த பதிவை படித்தே தீர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் இந்த பதிவை தேர்ந்தெடுத்தேன். இந்த சமூகத்தின் மீது நான் கொண்ட கோபத்தின் காரணமாக சில இடங்களில் முறையற்ற வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை. தவறாக இருந்தால் மன்னித்தருளுங்கள்.
தலைப்பு கொண்ட கருத்துக்கு செல்வதற்கு முன்னால் சில உப கருத்துக்கள்...

தலையிலேயே குட்டுகிறார்கள்...
சரி நம்ம தல தானே என்று அவ்வப்போது நான் அஜித்தைப் பற்றி கிண்டலாகப் பேசி விமர்சிப்பது உண்டு. அவையனைத்தும் தல மீது நான் கொண்ட பாசத்திலும் உரிமையிலும் மட்டுமே. ஆனால் அஜித்தை மற்றவர்கள் தூற்றும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜாக்குவார் தங்கம், டங்குவார் தகரம் என்று ஆளாளுக்கு தலையை கலாயத்ததில் நான் ரொம்பவே அப்செட். அதிலும் "எனது பக்கங்கள்" என்ற பெயர்கொண்ட அந்த வலைப்பூவில் அஜித் மீது தொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது. 
சம்பந்தப்பட்ட அந்த இடுகைகளுக்கான இணைப்புகள்:

குட்டியாய் ஒரு குட்டி விமர்சனம்
திரைக்கதை என்னவோ சினிமாத்தனமும் மசாலாத்தனமும் நிரம்பி வழிந்தாலும் கதை கொண்ட கரு மட்டும் என் மனதை கடுமையாக கவர்ந்துவிட்டது. ஒருதலைக்காதலின் மகத்துவத்தை படம் கவிதையாய் வாசித்தது. தனுஷின் நடிப்பில் யதார்த்தம் ரொம்ப குறைவு. ஆனாலும் தனுஷை மிகவும் ரசித்தேன். தனுஷின் மேனரிசங்களும் மவுத் ஆர்கன் வாசிக்கும் விதமும் நண்பன் பாண்டீஸ்வரனை நினைவுபடுத்தியது. தனுஷ் - ஆர்த்தி நட்பு புதுசாக இருந்தது. "குட்டிக்கு வார்னிங்" காட்சி சொன்ன கருத்துகள் அனைத்தும் அற்புதம். "feel my love" என்ற வார்த்தையே ஒரு புதுக்கவிதை. நேரம் கிடைத்தால் நீங்களும் பார்த்து feel பண்ணுங்க.

ஆட்டோ சங்கரின் அத்தியாயம்
சில வாரங்களுக்கு முன்பு தபூ சங்கரை புரட்டிய நான் இந்த வாரம் ஆட்டோ சங்கரை புரட்டினேன். படித்த பத்து பக்கங்களிலேயே தன் மொத்த கோபத்தையும் சமூகத்தின் மீது கொட்டியிருந்தான். உண்மைதான். "பிறக்கும்போது யாருமே நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பிறப்பதில்லை. எல்லோருமே குழந்தைகளாகத்தான் பிறக்கின்றனர்". ஆட்டோ சங்கருக்கு நல்ல பெற்றோர் கிடைத்திருந்தால் அவன் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டான். புத்தகத்தை முழுமையாய் முடித்தபின் இதுபற்றி தனிப்பதிவு ஒன்றைப் போடுகிறேன்.

வேதியியலா...? வேசியியலா...?
நீண்ட நாட்களாகவே தியான சாமியார்கள் பற்றி இருந்துவந்த மனக்குழப்பம் இப்போது தீர்ந்திருக்கிறது. "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்", "கதவைத் திற காற்று வரட்டும், மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்", அத்தனைக்கும் ஆசைப்படு", "ரஞ்சிதா ***க்கும் ஆசைப்படு" என்று மையமாக எதையாவது கூறி தியான வியாபாரம் செய்து வந்த கும்பலின் குட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. எப்படியோ என் தமிழ் மக்களுக்கு இதன் மூலமாக கொஞ்சமாவது விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் "நித்தி சரியில்லை ஜக்கியிடம் போவோம்" என்று சென்றால் பிள்ளைவரம் வாங்கிக்கொண்டு திரும்பவேண்டியதுதான்.
இதுவரை தரிசனம் காணாத பக்தர்களுக்காக:

எப்படியோ தேடிக்கண்டுபிடித்து நித்யானந்தர் - ரஞ்சிதா உல்லாச லீலைகளை பார்த்து பாவ விமோட்சனம் அடைந்துவிட்டேன்.  காட்சிகளை விட நக்கீரனின் "நகிர்தனா... திரனனா..." பேக்ரவுண்ட் பாடல் மனதை மிகவும் கவர்ந்தது. என்னைப்போல நீங்களும் கவரப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை சொடுக்கி அந்த பாடலை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

நடுத்தர வயதினர் சிலர் பர்மா பஜாரில் திருட்டு முழியோடு சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. வீடியோவில் நித்யா துள்ளிக்குதித்து எழுந்தருளிய காட்சியை பார்த்தீர்களா...? ச்சே... சான்சே இல்லை... நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். பேசாமல் கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நித்தியானந்தரையும் ரஞ்சிதாவையும் வைத்து எடுத்திருக்கலாம்.  நித்தியாவது டைட்டிலில் "யங் சூப்பர் ஸ்டார்" என்று போட வேண்டுமென அடம் பிடித்திருக்க மாட்டார். நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் இடையில் இருப்பது வேதியியலா வேசியியலா என்று புரியவில்லை.

யார் அடுத்த நித்தியானந்தர்...?
பிரேமானந்தா, சதுர்வேதி, ஜெயந்திரர், தேவநாதன், நித்தியானந்தர் இவர்களது வரிசையில் அடுத்து வரப்போவது யார்...? (புட்டபர்த்தி சாய் பாபாவை ஏற்கனவே ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்கி விட்டாலும் மக்கள் இன்னமும் திருந்திய பாடில்லை). ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சிவசங்கர் பாபா, அமிர்தானந்தமயி, என்று ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ம பேவரிட் கங்காரு... ஸாரி பங்காரு அடிகளார் பற்றி பேசுவோம்.

இப்பொழுதே பங்காருவைப் பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அம்மாவுக்கு இப்பொழுதே வயது எழுபதை கடந்துவிட்டது. இன்னும் ஒருசில ஆண்டுகளில் இறைவனடி சேர்ந்துவிடுவார். அதுமட்டும் நடந்துவிட்டால் இப்போது சாமியாராக திரிபவரை சாமியாக்கி விடுவார்கள். அந்தக் கொடுமை நடப்பதற்குள் விழித்துக்கொள்வோம்.

ஏற்கனவே ஜெயலலிதாவும் அமிர்தானந்தமயியும் அம்மா என்ற வார்த்தைக்கு பெருமை தேடித்தந்தது போதாதென்று பங்காருவும் தன் பங்குக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது 72வது பிறந்தநாளில் 100 கோடியை நலத்திட்டங்களுக்காக மட்டுமே செலவிட்டிருக்கிறார். (எல்லாம் நம்ம வீட்டு பணம்தான்). நலத்திட்டதிற்கே இவ்வளவு தொகை என்றால் அடிகளாரின் சொத்துமதிப்பு எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். (ஐயோ எண்ண முடியாதுங்க... நினைத்து பாருங்கள்) முன்பொரு காலத்தில் அருள்வாக்கு சொல்வதில் ஆரம்பித்தவர் இன்று ஒரு ஊரையே சொந்தமாக்கி இருக்கிறார்.

அம்மா பங்காருவின் காலைக் கழுவி விடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவரது காலைக் கழுவி விடுவதற்கு 25.000, 30,000 என்று நன்கொடை கட்ட வேண்டுமாம். காலைக் கழுவுவதற்கு ஐம்பதாயிரம் வாங்கினால் குண்டியைக் கழுவி விட எவ்வளவு வாங்குவார் என்று தெரியவில்லை. 
என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்

செவ்வாடை தொண்டர்கள் யாராவது வாதாட விரும்பினால் வாருங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

4 March 2010

நித்யானந்தரின் இறுதி ஆன்மிக உரை...! -  நன்றி: தினகரன்

வணக்கம் மக்களே...

இரண்டே நாட்களில் பதிவர்கள் அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் நித்யானந்தரைப் (ர் என்ன ர்... ன் னுன்னே சொல்லலாம்) நித்யானந்தனைப் பற்றி  புகழ்ந்து தள்ளிவிட்டனர். நான் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. வலையில் உலவியபோது ஒரு வரலாற்று சிறப்புமிக்க செய்தி கிட்டியது.

இப்போது ஆசாமியாரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் ஒரே நடுநிலையான நாளிதழ் "தினகரன்"  பிப்ரவரி 18 அன்று வெளியிட்டுள்ள செய்தி:
கோவை: கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில், பெங்களூர் நித்யானந்த தியான பீட நிறுவனர் பரமஹம்ச நித்யானந்தர் நேற்று நிகழ்த்திய அருளுரை:
"மனிதன் துன்பத்தில் சிக்கி தவிக்கிறான். துன்பத்துக்கு காரணம், நாம் செய்த தவறுகள் குறித்த குற்ற உணர்ச்சி, அடைந்த வெற்றிகள் குறித்த பெருமிதம் ஆகியவைதான்.
மனம் என்பது பொருள் அல்ல. அது ஒரு செயல். செயலுக்குள் சிக்காமல் இருப் பது விடுதலை உணர்வை தரும். தோல்வி வந்தால், அதை தைரியமாக சமாளித்து விடுவோம். அது நிகழும் வரையிலான பயமே அதிக துன்பம் தரும். வெளி மனம் தெளிவு. உள்மனம் தவிப்பு.
சரணாகதி என்பது, துன்பம், கோபம், ஆற்றாமை, இயலாமையை விட்டுவிடுவது. என்னை நம்பி சரணடைபவனுக்கு துக்கம் இல்லை என்கிறார் பகவான். மனதை உற்றுநோக்கி கட்டுப்படுத்தும் முயற்சி சிரத்தை. இதுவே தியானம்.
இந்த கணத்தில் வாழ்வதே ஆனந்தம். நிஜம். முடிவு பற்றிய சிந்தனை இல்லாதவனுக்கு வாழ்க்கை குறித்த பயம் இருக் காது. மனதுக்கு முதுமை வராது. 100 சதவீதம் உற்சாகத்துடன் கடைசி வரை செயலாற்றுபன் தலைவன் ஆகிறான். தியாகம் செய்கிறோம் என்ற எண்ணத்தை விடுவதே உண்மையான தியாகம்."
இவ்வாறு பரமஹம்ச நித்யானந்தர் பேசினார்.

source: http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=5897

யாரு உண்மையான தலைவன்னு நீங்களே சொல்லுங்க மக்களே...!!!

Post Comment