31 December 2014

2014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு வருடம் துவங்கும்போதும் சென்ற ஆண்டை விட அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். இந்த வருடத்தை பொறுத்தவரையில் அதில் பாதியை கூட நிறைவேற்ற முடியவில்லை. இருக்கட்டும் அடுத்த வருடத்திற்கு கிடைத்துவிட்டது ஈஸியான டார்கெட்!


2014ல் நான் ரசித்த சில விஷயங்கள்...

நாவல்: உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார் 

சுஜாதா நாவல்கள்: ஆ, நில்லுங்கள் ராஜாவே

கட்டுரைத்தொகுப்பு: பாம்புத்தைலம் – பேயோன்

அபுனைவு: கிளியோபாட்ரா – முகில்

ஃபேஸ்புக் எழுத்தாளர்கள்: (வரிசைபடுத்தவில்லை)
VeeBaa Vee (ஃபேஸ்புக் அக்கவுண்டை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்).

பாடல்கள்: (வரிசைபடுத்தவில்லை)
கூட மேல கூட வச்சு – ரம்மி
விண்மீன் விழிகள் – தெகிடி
முன்னே என் முன்னே – சதுரங்க வேட்டை
போ இன்று நீயாக – வேலையில்லா பட்டதாரி
பாண்டி நாட்டு – ஜிகர்தண்டா
இறந்திடவா – மெட்ராஸ்
செல்ஃபி புள்ள – கத்தி
மழைக்காத்தா – ஒரு ஊருல ரெண்டு ராஜா
ஏய் மிஸ்டர்.மைனர் – காவியத்தலைவன்
போகும் பாதை – பிசாசு

பாடகர்: அந்தோணி தாசன் (பாண்டி நாட்டு, கண்ணம்மா)

பாடகி: வந்தனா ஸ்ரீநிவாசன் (கூட மேல கூட வச்சு, மழைக்காத்தா)

இசையமைப்பாளர்கள்: சந்தோஷ் நாராயன் (ஜிகர்தண்டா, மெட்ராஸ்), ஷான் ரோல்டன் (சதுரங்க வேட்டை)

படங்கள்: (வரிசைபடுத்தவில்லை)
தெகிடி
யாமிருக்க பயமே
சதுரங்க வேட்டை
ஜிகர்தண்டா
மெட்ராஸ்

நடிகர், நடிகையர்: (வரிசைபடுத்தவில்லை)
சாந்தினி (கோலி சோடா)
ஐஸ்வர்யா ராஜேஷ் (ரம்மி)
வாணீ கபூர் (ஆஹா கல்யாணம்)
அசோக் செல்வன் (தெகிடி)
ஓவியா (யாமிருக்க பயமே)
நடராஜ் (சதுரங்க வேட்டை)
பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
குரு சோமசுந்தரம் (ஜிகர்தண்டா)
ரித்விகா (மெட்ராஸ்)
ஹரி (மெட்ராஸ்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 December 2014

கந்தன் கருணை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சலூனுக்கும் மருத்துவமனைக்கும் அடிக்கடி செல்வதில்லை. வருடத்தில் ஒன்றிரண்டு முறை 'தலை' காட்டினால் பெரிய விஷயம். எப்போதாவது உடலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் கூட, 'டாக்டர்கிட்ட போனா ஒரே வாரத்தில் சரியாகிடும். இல்லன்னா ஏழு நாள் நீடிக்கும்’ என்று வியாக்கியானம் பேசக்கூடிய ஆள். என்னைப் பொறுத்தவரையில் டோலோ 650 ஒரு சர்வரோக நிவாரணி. என்ன ஆனாலும் ஒரு டோலோவை விழுங்கிவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று திடமாக நம்புபவன். ஆமாம், ஏழு நாள் வரை பிரச்சனையில்லை. ஆனால் எட்டாவது நாள் ஆகிவிட்டால் உடலில் ஏற்பட்ட கோளாறு மனதிலும் தொற்றிக்கொள்ளும். வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு ஓடுவேன். அப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் செல்ல வேண்டியதாகி விட்டது.

மருத்துவரின் மையத்தில் டோக்கன் ஒழுங்குமுறையெல்லாம் கிடையாது. நாம் போனதும் கடைசியாக வந்தது யாரென்று கேட்டுவிட்டு அமர்ந்துகொள்ள வேண்டும். அந்த கடைசி ஆள் எப்போது செல்வார் என்று காத்திருந்து அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல வேண்டும். ஆனால் நம்முடைய நேரம் எப்படி இருக்கும் என்றால், சரியாக நமக்கு பின்னால் கைக்குழந்தையோடு ஒரு அம்மா வருவார். கொயந்தைக்கு உடம்பு சரியில்லை என்று இறைந்து மன்றாடுவார். சரி போகட்டும் என்று விடுவோம். அடுத்தது ஒரு நடுத்தர வயது பெண்மணி பத்து கிலோமீட்டர் மாரத்தான் ஓடிவிட்டு வந்தது போல மூச்சிரைத்துக் கொண்டே வருவார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா ம்ம்ம்ம்மா முடியலயேம்மா என்று தமக்குள் முனகிக்கொள்வார். உடனே ஒரு சோடாவை வாங்கி புளிச் என்று அவருடைய முகத்தில் அடிக்காவிட்டால் ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று நமக்கே பயமாக இருக்கும். அவரை சகல மரியாதையோடு நமக்கு முன்பாக அனுப்பி வைப்போம். அதற்குள் நமக்கு அடுத்து போக வேண்டியவர்கள் எல்லாம் நாங்க போன மாசமே வந்து காத்திருக்கிறோம் தெரியுமா ? என்று நம்மை சத்தம் போட ஆரம்பிப்பார்கள். போய்த் தொலைங்க என்று ஒவ்வொருவரையாக அனுப்பிக் கொண்டிருக்கும்போது யாரேனும் ஒரு இறக்க சுபாவி புன்னகையுடன் நீங்க போங்க சார் என்பார். அவர் வேறு யாருமில்லை நம்மைப் போன்ற இன்னொரு ஈனா வானா தான்.

உள்ளே போனால் அங்கே வீற்றிருப்பார் கந்தன். நியாயமாக பார்த்தால் சேவித்துக்கொள்ள வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவர். எனது தாத்தாவில் துவங்கி எனது மகள் வரை மருத்துவம் பார்த்துவிட்டார். சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். (இப்போது புரிகிறதா நான் ஏன் அவரிடம் மருத்துவம் பார்க்கிறேன் என்று !). எனது பதின்பருவ வயதில் அவரிடம் செல்லும்போது நானொரு அடல்ட் என்று காட்டிக்கொள்வதற்காகவே தோள்பட்டையில் ஊசி குத்திக்கொள்வேன். இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்கும் தோள்பட்டையில் ஊசி போடுவதாக தெரியவில்லை. புட்டம்தான். ஜெண்டாமைஸின், கேராமைஸின் என்று (வயது முதிர்ந்த) செவிலியிடம் மருத்துவ மொழியில் ஏதோ சம்பாஷித்தார். அந்த அம்மாள் எனது இரண்டு புட்டங்களையும் பஞ்சர் ஆக்கினார்.

வழக்கமாக என்னுடைய சிகை அலங்காரத்தைப் பற்றி ஏதாவது கோக்கு மாக்காக கேள்வி கேட்பார் கந்தன். நானும் கோக்கு மாக்காக ஏதாவது பதிலளிப்பேன். இந்தமுறை அது இல்லாததால் ‘ப்ளாக்’ பற்றி கேட்டார். அவரும் முன்பொரு காலத்தில் ‘ப்ளாக்’ வைத்திருந்ததாகவும் அதனை பராமரிக்க நேரமில்லை என்றும் கொஞ்சமாக வருத்தப்பட்டுக் கொண்டார். 

இந்த இடத்தில் மருத்துவர் பற்றி கொஞ்சம் முன்னுரை வேண்டும். ஜிகர்தண்டாவில் சங்கிலிமுருகன் குருவம்மா என்றொரு கதை வைத்திருப்பார். அது அந்த காலத்தில் வெளிவந்திருந்தால் பெரிய ஹிட் ஆகியிருக்கும் என்பார். உண்மையிலேயே குருவம்மா என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது என்று கார்த்திக் சுப்பராஜிற்கு தெரிந்திருக்காது. 2002ல் லிவிங்க்ஸ்டன், தேவயாணி நடிப்பில் வெளிவந்தது. அத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன். பிளாட்பார வாசிகளுக்கு வீட்டின் தேவையைப் பற்றி உணர்த்த வந்த படம் அது. அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மருத்துவர் கந்தன். (இன்னொருவர் தற்சமயம் ச.ம.க சார்பாக நாங்குநேரி ச.ம.உ.வாக பணியாற்றும் எர்ணாவூர் நாராயணன்). அது மட்டுமில்லாமல் அதற்கு முன்பே மருத்துவர் ‘நையாண்டி மேளம்’ என்கிற தமது கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். 

பேச்சு ‘ப்ளாக்’ வரை சென்றுவிட்டதால் மருத்துவரிடம் நையாண்டி மேளம் ஒரு காப்பி கிடைக்குமா ? என்றேன். தற்சமயம் கைவசம் இல்லை. எடுத்து வைக்கிறேன், அடுத்த முறை வரும்போது வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். கிழிந்தது. அடுத்தமுறை நான் அவரிடம் செல்ல மாதங்கள் ஆகக்கூடும். சரி என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.

தற்செயலாக திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்க நூலகத்திற்கு சென்றபோது அங்கே நையாண்டி மேளம் கிடைத்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஒரு மருத்துவர் எழுதிய கவிதைகள் என்பதால் அதனை நியாயத்தராசில் எல்லாம் வைக்க மனம் ஒப்பவில்லை.

மருத்துவர் எழுதிய மருத்துவக் கவிதை ஒன்று :-

உள்ளங்கையில் வெறுமனே
விளையாடிக் கொண்டிருந்தது
இருபத்தைந்து காசு வில்லை

திடீரெனத் தாவிவிட்டது
குழந்தையின் வயிற்றுக்கு

பதைத்துப் போனாள் தாய்
மூக்குத்தியைத் தடவியபடி

‘விழுங்கிவிட்டான் மருத்துவன்
இருபத்தைந்து ரூபாய் !’

இன்னொன்று :-

கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

காலையில் தாமதமாய் கண்விழித்து

நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து

செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து

வயிற்றில் வலியென்றதும்
தன் நெஞ்சில் வலி கொண்டு

ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து

மருந்துக்கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து

ஒரு வழியாக
ஒரு வழி யாக

குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு\

மருத்துவமனை
நீங்கும் வேளை

கட்டணப் பணத்தை
பெட்டியோடு கொடுத்திட்டு

தாயையும் சேயையும்
வாடகைக் காரினில் சுமந்து

வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு

பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா !

மேலதிக தகவல்கள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 December 2014

பிசாசு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எந்த வகையிலும் சேர்க்க முடியாமல் ஒரு புதுமாதிரியாக வெளிவந்திருக்கிறது பிசாசு. கொஞ்சம் ஹாரர், கொஞ்சம் மர்மம், நிறைய செண்டிமெண்ட் சேர்ந்த கலவை.

பிரயாஹாவின் துர் மரணத்துடன் தான் படம் துவங்குகிறது. அழகுப் பிசாசின் மரணத்தை காணச் சகியாதவர்கள் நியாயசீலர் KSRன் கூற்றுப்படி எழுந்து கிளம்பிவிடுவது உசிதம். மற்றவர்கள் தொடர்க...

சாலை விபத்தொன்றில் உயிருக்கு போராடும் பிரயாஹாவை ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கிறார் நாகா. பலனின்றி பலியாகிறார் பிரயாஹா. நேர்ந்த சம்பவம் காரணமாய் மனதளவில் பாதிக்கப்படுகிறான் நாகா. அது மட்டுமில்லாமல் அவனுடைய வீட்டில் சில அமானுஷ்ய அனுபவங்களுக்கும் ஆளாகிறான். போகப் போக இறந்துபோன பிரயாஹாதான் தனது வீட்டில் வசிக்கிறாள் என்பதை உணர்கிறான் நாகா. அதன்பிறகு விளைவுகளும் காரணங்களும் மீதிக்கதை.

அரொல் கொரெலியின் வயலின் இசை இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தில் ஒரே பாடல். அதில் இசை, பாடல் வரிகள், பாடகியின் குரல் என்று அத்தனை விஷயங்களும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றன. பாடியிருப்பது பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்தரா, எழுதியிருப்பது தமிழச்சி தங்கபாண்டியன்.

அடுத்தது ராதா ரவியின் அபாரமான நடிப்பு. இறந்துபோன மகளை விகாரமான உருவில் கண்டதும் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு ஹாரர் படம் என்பதையும் மறக்கடித்து கலங்கடிக்கின்றன.

பிரயாஹா பாவம். இப்படியொரு முதல் படம் எந்த நடிகைக்கும் அமையக்கூடாது. நாகாவின் நடிப்பில் மிஷ்கின் டச் அப்பட்டமாக தெரிகிறது. ப்ளாட்டோ, டீக்கடை ஆசாமி, ஆட்டோ ஓட்டுநர், ஆவி அமுதா என்று நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் உலவுகின்றன. 

உறுத்தலாக நிறைய காட்சிகள். குறியீடுகளாக இருக்கக்கூடும். எனக்கு புரியவில்லை. உதாரணமாக ஒழுகிக்கொண்டிருக்கும் பச்சைக் குடம், ஊர்ந்து மேயும் பூரான்கள், முறைத்துப் பார்க்கும் மஞ்சள் புடவை அம்மாள். இறுதியாக சிகப்பு / பச்சை நிறங்களை வைத்து கபடி ஆடியிருக்கிறார் மிஷ்கின்.

முதுகுத் தண்டை சில்லிட வைக்கிறது என்பார்களே அதுபோன்ற ஹாரர் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு பிசாசு உகந்ததல்ல. இது தமிழ் சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள் அடங்காத ஹாரர். பிரமாதமான படம் என்று சொல்ல முடியாது. சில காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, சில காட்சிகள் நம்முடைய பொறுமையை கடுமையாக பரிசோதனை செய்கின்றன. ஆமாம், பிசாசு படம் பார்க்க நிறைய பொறுமை அவசியம். கிட்டத்தட்ட எருமையின் அளவிற்கு பொறுமை. அப்புறம் கொஞ்சம் படம் பார்க்கும் ஆர்வம். இவையிரண்டும் இருந்துவிட்டால் ஒரு சுஹானுபவம் கிடைக்கப்பெறும். அவ்வளவுதான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 December 2014

கவர்ச்சி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்கிற திரைப்பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஆடிக்கொண்டிருந்த நடிகையின் முகத்தை பார்த்தால் ஒரு வாரத்திற்கு சோறு இறங்காது. ஏனய்யா ஐட்டம் சாங்கில் ஆட வைக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா ? முதிர்ச்சி பெற்ற அந்த அம்மணியின் பெயர் அஷ்மிதா. This is my first film என்று ஒரு பேட்டியில் திருவாய் மலர்ந்திருக்கிறார். அஷ்மிதாவின் திருமுகத்தை ஏதோ ஒரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வரவில்லை. ஒன்றிரண்டு பார்த்திருந்தால் தானே ? கூகுள் செய்தேன். அஷ்மிதா இதுவரை (கூகுளுக்கு தெரிந்து) நடித்திருக்கும் பி-கிரேடு படங்களின் பட்டியல் –
  • கலப்படம்
  • இயக்குநர் (சமீபத்தில் மறைந்த சுருளி மனோகர் இயக்கியது)
  • உனது விழியில்
  • காணும் கனவுகள்
  • என்னைப் பிரியாதே
  • தேள் 
  • காதல் வலி (தெலுங்கில்: இந்த்லோ ராமுடு வீதிலோ மன்மதுடு)
  • கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு

மஸ்காரா பாடலை தொடர்ந்து பார்த்தபோது தொலைக்காட்சி திரையில் குறுக்க மறுக்க ஒரு உருவம் அசந்தர்ப்பமாக நடனமாடிக்கொண்டிருந்தது. பற்றாத குறைக்கு அடிக்கடி பாடலின் வரிகள் திரையில் எழுத்துகளாக தோன்றியது. கராவோக்கேவாம். கருமம் டா. லைட்டிங் வேறு ஏடாகூடமாக இருந்தது. பாடலில் ஏதோ ஒரு குறை இருப்பதை உணர்ந்து யூடியூபில் தேடினால் அதில் இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லாமல் காட்சிகள் பளிச்சிடுகின்றன. விஷயம் என்னவென்றால் தொலைக்காட்சிக்காக பாடலை சென்ஸார் செய்திருக்கிறார்களாம்.

முன்னொரு காலத்தில், ஜில்லா படத்தில் ஜிங்குனமணி ஜிங்குனமணி என்று ஒரு பாடல். அதனை சென்ஸார் அதிகாரிகள் கதறக் கதற கற்பழித்திருந்தார்கள். அதைப் பார்த்த ரசிகர்கள் பலர் போங்கய்யா உங்க பூசாரித்தனமும் வேண்டாம் உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்று விரக்தியுற்றார்கள். ரசிகர்களை விடுங்கள். எங்கேயோ ஆங்கில மண்ணில் பிறந்து நமக்காக கலைச்சேவையாற்ற வந்த அந்த இரண்டு அம்மாள்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் ? 

அதேபோல சிங்கம் படத்தில் அனுஷ்கா திறந்த மனதுடன் நடித்த ஒரு பாடல். அதை ஒருமுறை தொலைக்காட்சியில் பார்த்தபோது திரையில் யாரோ வனஸ்பதியையோ டால்டாவையோ ஈஷியிருக்கிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக ஒரு துணியை கொண்டுவந்து துடைக்கலானேன். அப்புறம் தான் தெரிந்தது அதுவும் சென்ஸார் ஆசாமிகளின் வேலை என்று. அந்தப் பாடலை அப்படியே விட்டிருந்தால் கூட அதிலிருந்த விஷயத்தை அனேகர் கவனித்திருக்க மாட்டார்கள். அதன் மீது வானவில்லில் உள்ள அத்தனை வண்ணங்களையும் பூசி அனைவரது பார்வையையும் பதிய வைத்துவிட்டீர்களே அய்யா. ஆமாம் உங்களுக்கு ஏனிந்த அக்கறை ? அனுஷ்காவுக்கு இல்லாத அக்கறை ? சென்ஸே இல்லாதவர்களுக்கு சார் போடுவது தான் சென்ஸார் என்று அன்றே சொன்னார் எஸ்.ஜே.சூர்யா.

சென்ஸார் கூத்துகள் ஒரு பக்கம் என்றால் அதற்கு நேர் மாறாக ஒரு சிக்கல். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் இடையே ஒரு மெல்லிசான கோடு என்று நடிகைகள் பேட்டியில் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த கோட்டினை பற்றியது தான். ப்ரியா ஆனந்தை எனக்கு பிடிக்கும். எதிர்நீச்சலில் அந்தமான் கடற்கரையில் காட்சியாக்கப்பட்ட ஒரு பாடலில் இருந்து பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த மெல்லிசான கோடு சமாச்சாரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் அந்த பாடல். ஆனால் சமீப படத்தில் ப்ரியா ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள். கவர்ச்சி என்றால் அரைகுறையாக உடுத்திக்கொண்டு தங்கு புங்கென்று குதிப்பது என்று ப்ரியாவுக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உடன் ஆடுவது யாரென்று பார்த்தால் தமிழ் சினிமாவின் தற்போதைய தலைசிறந்த நடிகர் விமல். அன்னாருடைய கைகளை எடுத்து தம்முடைய இடுப்பில் வைத்துக்கொள்கிறார், யாருக்காகவோ புட்டத்தை வெடுக் வெடுக்கென ஆட்டுகிறார் (பார்க்க 3:18). இது தற்காலிகமாக கொஞ்சம் கிளுகிளுப்பூட்டுகிறது என்றாலும் கூட ப்ரியாவின் கேரியருக்கு நல்லதல்ல. இப்படியே ஆடிக்கொண்டிருந்தால் (அதுவும் விமல் போன்ற மகாநடிகர்களுடன்) கூடிய விரைவில் அஞ்சலி லிஸ்டில் நீங்களும் சேர வேண்டியது வரும் ப்ரியா ஆனந்த் !

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

10 December 2014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மொக்கையா படம் எடுங்க, வேணாம்ன்னு சொல்லல. ஆனால் புதுசா ஏதாவது மொக்கை படம் எடுங்க'ன்னு எழுதியதற்கு இவ்வளவு சீக்கிரம் எதிர்வினை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அஜய் – ரென்யா காதலித்து மணம் செய்துகொள்கின்றனர். முதலிரவில் ரென்யா அகால மரணம் அடைகிறாள். மனதளவில் பாதிக்கப்பட்ட அஜய் இறந்துபோன ரென்யாவை (ரென்யாவின் ஆவியை) தொடர்புகொள்ள முயற்சிக்கிறான். அந்த முயற்சியில் ரெட் டோர் என்று சொல்லப்படும் ஒரு மர்மக்கதவை திறந்துவிடுகிறான். அதனால் ஏற்படும் சம்பவங்களை வழவழ கொழகொழவென்று சொல்லி படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக ஹாரர் படங்களில் அமானுஷ்யம் அல்லது அறிவியல் அல்லது இரண்டையும் இணைத்து கதை சொல்லியிருப்பார்கள். ர இதில் எந்த வகையிலும் சேராது. கொஞ்சம் ஆவி இத்யாதிகள், கொஞ்சம் சைக்காலஜி, கொஞ்சம் க்ரைம் த்ரில்லர், கொஞ்சம் மர்மம் எல்லாம் சேர்த்து குழப்பி அடித்திருக்கிறார்கள். ஹாரர் என்றில்லை, எல்லா மர்மக்கதைகளிலும் கதையின் முடிவில் அல்லது முடிவுக்கு முன்னால் முடிச்சுகளை அவிழ்த்துவிட வேண்டும். ர’வில் அப்படியில்லை. செங்கதவு என்கிறார்கள். அதனை திறந்தால் உலகமே அழியும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்கள். செங்கதவை வரலாற்றில் ஏற்கனவே இரண்டு முறை திறந்திருப்பதாக சொல்கிறார்கள். Red door cannot be closed என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசி வரை செங்கதவுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை சொல்லவே இல்லை. முடிக்கும்போது வழக்கம் போல அடுத்த பாகத்திற்கு லீடு, ஆமாம் அது ஒன்றுதான் கேடு.

ஒரு சிலர் தவிர, மற்றவர்களின் நடிப்பு படுசெயற்கை. ஹீரோ அஷ்ரப் எதற்கெடுத்தாலும் ரென்யாடா, ரென்யாமா என்று மொக்கை போடுகிறார். தேடிக் கண்டுபிடித்து ஒரு மொக்கை ஹீரோயினை போட்டிருக்கிறார்கள். நல்லவேளையாக அவர் சில நிமிடங்களில் இறந்துவிடுகிறார் என்றாலும் ஹீரோவின் நினைவுகள் வழியாக அடிக்கடி வந்து உயிரெடுக்கிறார்.

படத்தில் உருப்படியான ஒரே காட்சி - ஒரு மின்தடை ஏற்பட்ட இரவில், அஜய் வீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு உருவம் படியில் ஏறிச்செல்வதை காண்கிறான். டார்ச் லைட் அடித்து பார்க்கிறான். மெஸனைனில் அவனைப் போலவே ஒருவன் நிற்கிறான். அஜய் பதட்டத்துடன் படியேறி அந்த உருவம் நின்ற இடத்திற்கு செல்கிறான். வெறுமையாக இருக்கிறது. அந்த உருவம் நின்ற இடத்தில் நின்று கீழே பார்க்கிறான். இப்பொழுது கீழேயிருந்து அவனைப் போன்ற ஒருவன் அவன் முகத்தில் டார்ச் வெளிச்சம் பாய்ச்சுகிறான்.

முடிவில் ஃபில்மோகிராபி என்று இன்ஸிடியஸ் உட்பட மூன்று ஆங்கில படங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் ட்ரைலரை பார்த்த மாத்திரத்தில் இன்ஸிடியஸ் சாயல் என்று நிறைய பேர் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் இன்ஸிடியஸ் பார்த்ததில்லை. 

EXPERIMENTAL FANTASY THRILLER என்றார்கள். ஆனால் அதற்கான சோதனை எலிகள் பார்வையாளர்கள் தான் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். குழந்தைகள் ஏதோ புதிதாக முயற்சி செய்திருக்கிறார்கள் என்கிற ஒரு காரணத்திற்காக வேண்டுமானால் ர'வை ஒருமுறை பொறுத்துக்கொள்ளலாம். மற்றபடி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 December 2014

13ம் பக்கம் பார்க்க

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கார்த்திக் சுப்பராஜ் கையில் கிடைத்தால் கட்டி வைத்து உதைக்கவேண்டும். அந்த மனுஷன் ஒரு பீட்ஸா எடுத்தார். உடனே ஆளாளுக்கு பொங்கல், உப்புமா, கெட்டிச்சட்டினி என்று வரிசையாக தூக்கிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். பல பூனைகள் கொள்ளிக்கட்டையை எடுத்து உடலில் கோடுகள் இழுத்துக்கொண்டு மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டிருக்கின்றன. (வில்லா, யாமிருக்க பயமே, ஆ போன்றவை மியாவ் லிஸ்டில் வராது). அந்த லிஸ்டில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் பூனை - 13ம் பக்கம் பார்க்க. பாவம் பூனை, பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

கதையின் கரு ஒரளவுக்கு பரவாயில்லை. ஒரு எழுத்தாளர் ஒரு திகில் கதை எழுதுகிறார். தன்னுடைய வழக்கப்படி முதல் ஆளாக மனைவியிடம் படிக்கக் கொடுக்கிறார். மனைவி மர்கயா. பதிப்பாளர் ஒருவர் கதையின் ரைட்ஸ் வாங்கி பதிமூன்றாயிரம் காப்பி அச்சடிக்கிறார். (அடேங்கப்பா கதாசிரியருக்கு அபார கற்பனை). பதிப்பாளரும், பதிமூன்றாயிரம் காப்பிகளும் தீக்கிரை. ஒரேயொரு காப்பி மட்டும் தப்பிப் பிழைத்து ஒவ்வொரு கையாக மாறுகிறது. அதனை படிப்பவர்கள் எல்லோரும் இறக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அதன் பதிமூன்றாம் பக்கத்தில் ஒரு துஷ்ட மந்திரம் எழுதப்பட்டுள்ளது. அதனை வாசித்தால் காட்டேரி வந்து ரத்தம் கேட்குமாம். கொடுக்காவிட்டால் படித்த நபரை ஆ போட்டுக் கொள்ளுமாம்.

படம் தொடங்கியதும் நிஜமாகவே பயந்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூக்கையும் அதன் கீழுள்ள துவாரங்களையும் க்ளோஸப்பில் காட்டி மிரள வைத்திருக்கிறார் இயக்குநர். அட்லீஸ்ட் கதாநாயகியின் துவாரங்களை காட்டினாலாவது நேசோபிலியாக்கள் ரசிக்கக்கூடும். வையாபுரி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற மூத்த துணை நடிகர்களின் மூக்கையெல்லாம் க்ளோஸப்பில் காட்டினால் என்னத்துக்கு ஆவது ?

அப்புறம் ப்ரொடக்ஷன் யூனிட்டில் யாரோ ஒரு பெண்மணி ஊட்டி குளுரில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு தொண்டையை செருமிக்கொண்டே இருந்திருக்கிறார். அதையும் தவறுதலாக படத்தின் பின்னணி இசையோடு சேர்த்துவிட்டார்கள். அந்த அம்மாளுக்கு யாராவது விக்ஸ் மாத்திரை வாங்கிக் கொடுத்தால் உத்தமம். அடிக்கடி பேய்கள் வேறு டாக்கிங் டாம் குரலில் பேசி கிச்சு கிச்சு மூட்டுகின்றன. கிராபிக்ஸ் குப்பை.

ஸ்ரீ ப்ரியங்காவுக்கு பாந்தமான முகம். விளக்கி வைத்த குத்துவிளக்கு போல இருக்கிறார். வசனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நன்றாக இருக்கின்றன. உதாரணமாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா பேசும் வசனம் ஒன்று. தாஜ் நூர் இசையில் டைட்டில் பாடல் சுமார்.

மொக்கையா படம் எடுங்க, வேணாம்ன்னு சொல்லல. ஆனால் புதுசா ஏதாவது மொக்கை படம் எடுங்க'ன்னு தான் சொல்றேன். எத்தனை காலத்துக்கு தான் ஹாண்டட் ஹவுஸ், நியூலி மேரீட் கப்பிள்ஸ் (மேட்டரும் கிடையாது), மனைவியை பேய் பிடிக்கிறது, விபூதி, ருத்ராட்சம் போன்ற தெய்வ சமாச்சாரங்களை கண்டால் பேய்கள் மிரளுவது, சாமியார் உதவியை நாடுவது, ஆன்மிக உபயத்தில் பேயை விரட்டுவது, கடைசியாக இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுக்கும் வகையில் ஒரு மொக்கை க்ளைமாக்ஸ் வைப்பது (ஆனாலும் இரண்டாம் பாகத்துக்கும் உங்களுக்கு ஒரு ஈனா வானா ப்ரொட்யூசர் கிடைப்பார் என்கிற தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது) போன்ற ஈய பித்தளை ஹாரர் படங்களை எடுப்பீர்கள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 July 2014

சதுரங்க வேட்டை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு மனக்குழப்பம். என்ன படம் பார்ப்பது என்பதைப் பற்றியது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து (என்னளவில்) நீண்டகாலம் ஆகிறது. கடைசியாக பார்த்தது யாமிருக்க பயமே. இதுவரையில் இந்த ஆண்டில் வெறும் ஆறு படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். கட்டாயமாக படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த சமயம் என்னிடமிருந்த தேர்வுகள் – வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை, இருக்கு ஆனா இல்ல (படத்தின் பெயர்தான்). பெயரில் தொடங்கி ட்ரைலர் வரை முதலில் ஈர்த்தது இருக்கு ஆனா இல்ல. வேலையில்லா பட்டதாரி நன்றாக இருந்தாலும் பார்ப்பதாக இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். கொஞ்சம் தாமதமாக பிடிக்க ஆரம்பித்தது சதுரங்க வேட்டை. சின்னச் சின்ன விளம்பரங்கள் காட்டியே ஈர்த்துவிட்டார்கள். ஒரு சாமானிய ரசிகனை படம் பார்க்க வைக்க திரைப்படக்குழு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. கொஞ்சம் தயக்கத்துடனேயே எடுத்த முடிவு, முதல்நாள் விமர்சனங்கள் வரத்துவங்கியதும் பார்த்தே தீர வேண்டும் என தெளிவுற்றேன்.

Based on true events என்ற வரிகளை பார்த்ததும் சற்று கடுப்பானேன். கொஞ்ச நேரத்தில் ஏன் அப்படி என்று புரிய ஆரம்பித்துவிட்டது. மண்ணுளி பாம்பு, எம்.எல்.எம், ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என்று தமிழகத்தை கலக்கிய பிரபல மோசடி சம்பவங்களை தொகுத்திருக்கிறார்கள். 

பணத்திற்காக பல மோசடி சம்பவங்களை அரங்கேற்றுபவன் (தினத்தந்தி பாஷையில் மோசடி மன்னன்) காந்தி பாபு. ஒரு முறை காவல்துறையில் சிக்கி அல்லல்படுகிறான். பணம் அவனை காப்பாற்றுகிறது. ஆனால் அவனால் ஏமாற்றப்பட்டவன் ஒருவனால் மரணம் வரை செல்ல நேரிடுகிறது. அதிலிருந்து திருந்தி வாழ முயலும் காந்தி பாபுவுக்கு சமூகம் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை.

காந்தி பாபுவாக நடித்திருக்கும் நடராஜை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை. பாலியுட்டில் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ், தமிழில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மட்டரகமான மசாலா படங்களில். சதுரங்க வேட்டைக்கு பிறகு முந்தய வாசகத்தில் ஒரு வார்த்தையை மட்டும் அடித்துவிடலாம். எதார்த்தமான நடிப்பாலும் உடல்மொழியாலும் கவர்ந்துவிடுகிறார். அவரது மிகைப்படுத்தாத நடிப்பிற்கு விடுதலை கிடைத்ததும் நீதிமன்றத்தில் இருந்து நடந்துவரும் காட்சி ஒரு உதாரணம்.

சரோஜா தேவி புத்தகங்களின் வர்ணிப்பு பகுதியில் ‘வாளிப்பான உடல்’ என்கிற வாக்கியத்தை அடிக்கடி படித்திருக்கிறேன். அதற்கான பொருளை இஷாராவை பார்த்தால் புரிந்துக்கொள்ளலாம். ச்சும்மா பப்பாளி போல இருக்கிறார். ஆனால் ‘ஸ்கோப்’ இல்லாத கதாபாத்திரம். கூடிய விரைவில் இஷாராவை உப வேடங்களிலும் மூன்றாம் தர கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம் என்பது என்னுடைய கணிப்பு.

கவிஞர் பிறைசூடனின் பெயரை படம் முடிந்ததும் டைட்டிலில் பார்த்தேன். எப்போது வந்தார் என்று நீண்ட நேரம் யோசித்தபிறகு விடை கிடைத்தது – ஜட்ஜய்யா !

ஷான் ரோல்டனின் இசையில் முன்னே என் முன்னே பாடல் கொஞ்சம் பிடிக்கிறது. அதன் இடையே வரும் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அபாரம். அதையே படத்தின் இறுதியில் டைட்டில் க்ரெடிட்ஸ் போடும்போது பயன்படுத்தியது நல்ல யுக்தி. என்னைக் கேட்டால் அந்த டைட்டில் க்ரெடிட்ஸ் இசையே படத்தின் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது.

வசனங்கள் படத்தின் அசுர பலம். அப்புறம் ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன சர்காஸ்டிக் சுவாரஸ்யங்கள். ஒரு காட்சியில், ஃப்ரீயா கட்டிங் கொடுக்குற மனசு மதுரக்காரனுக்கு தான்டா வரும், மதுரக்காரன் என்னைக்குடா தண்ணியூத்தி அடிச்சிருக்கான் என்று செம ஓட்டு ஓட்டியிருக்கிறார்கள். அப்புறம் ரைஸ் புல்லிங் பற்றி காவியுடையணிந்த காந்தி பாபு பேசும் வசனம் செம்ம அட்ராசிட்டி. 

எல்லாம் இருந்தும் படத்தில் உணர்வு குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. காந்தி பாபு ஒரு அக்மார்க் அயோக்கியன் என்று முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். அதனாலோ என்னவோ அவரை நையப்புடையும்போது கூட எந்தவித பதட்டமும் பரிதாபமும் வர மறுக்கிறது. உலகத்தில் பணம் மட்டுமே க்ளிஷே கிடையாது என்று தத்துவம் உதிர்க்கிறார் காந்தி பாபு. ஆனால் எல்லா சினிமாக்களிலும் வருவது போல காந்தி பாபுவுக்கு ஒரு சோக ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. திடீரென காந்தி பாபு திருந்தி வாழும்போது கூட, உண்மையில் திருந்திவிட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நிறைய இடங்களில் துல்லியம் தவறவிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கதாபாத்திரம் தூய தமிழிலேயே பேசுகிறது. (அது என்ன எழவுக்காக அப்படி பேசுகிறது என்று புரிபடவில்லை). ஆனால் சில காட்சிகளில் தன்னையே மறந்து ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறது. அதே போல காந்தி பாபு தன்னுடைய சிறுவயது சம்பவங்களைப் பற்றி சொல்லும்போது மட்டும் திடீரென மெட்ராஸ் பாஷையில் பேசுகிறார். நாயகியின் கொங்கு சொல்லாடலிலும் அதே மெத்தனம் தெரிகிறது.

ஒரு கட்டுரையின் முதல் சில வரிகளும், ஃபினிஷிங் டச் எனப்படும் முத்தாய்ப்பான முடிவும் மட்டும் இருந்தால் அதன் நடுவே உள்ள குறைகளை வாசகர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எழுத்துக்கு மட்டுமல்ல, எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும். சதுரங்க வேட்டையும் அப்படித்தான். அதன் முன்னோட்டங்கள் நம்மை திரையரங்கிற்குள் இழுத்துப் போடுகின்றன, அதன் இறுதிக்காட்சி க்ளிஷே என்பதையும் தாண்டி ஒரு சிறிய தாக்கத்தை(யாவது) ஏற்படுத்துகிறது. மற்றபடி இடையில் வரும் காட்சிகள் அப்படியொன்றும் சுவாரஸ்ய மிகுதியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சதுரங்க வேட்டை – புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய ஒரு சுமாரான பொழுதுபோக்கு படம். மிகைபடுத்தப்பட்ட விமர்சனங்களையும் பட முன்னோட்டத்தையும் வைத்து எந்தவித எதிர்பார்ப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் ரசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 July 2014

இடியட் பாக்ஸ் !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கவலைப்படாதீர்கள். விஜய் அவார்ட்ஸில் ஆனந்த யாழுக்கு விருது கொடுக்காதது பற்றியோ, சரவணன் – மீனாட்சி திருமணம் செய்து கொண்டது பற்றியோ அல்லது கனெக்ஷன்ஸ் ஜகன் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என்பதைப் பற்றியோ எழுதி போரடிக்க மாட்டேன். இக்கட்டுரையானது அலுவலக கேண்டீனில் (கார்ப்பரேட் மொழியில் பேண்ட்ரி அல்லது கேஃபெடெரியா) வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி பற்றியது.

நான் முன்பு பணிபுரிந்த அலுவலக கட்டிடத்தில் தொலைக்காட்சி கிடையாது. கேண்டீன் என்று சொல்லப்பட்ட அந்த அறையில் ஒரே சமயத்தில் முப்பது பேர் நின்றாலே மூச்சடைக்கும். போதாத குறைக்கு கேரம் போர்டும், டேபிள் டென்னிஸும் இருந்தன. எனினும் அலுவலகம் அறிவாலயத்திற்கு எதிரே அமர்ந்திருந்தமையால் கேண்டீனுக்கு வெளியே நின்று பார்த்தால் ஹயாத் கட்டிடம் அட்டகாசமாக தெரியும், அப்படியே கீழ் நோக்கினால் அண்ணாசாலையின் அழகை ரசித்துக்கொண்டே தேநீர் பருகலாம். திடீரென அலுவலகம் அலேக்காக கிண்டிக்கு மாற்றப்பட்ட போது கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் புது அலுவலகம் குறித்த ஆர்வ குறுகுறுப்பும் இருந்தன. சில ஏமாற்றங்கள், நிறைய ஆச்சரியங்கள். அந்த ஆ’க்களில் ஒன்றுதான் கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி.

அங்கிருந்த தொலைக்காட்சியில் பெரும்பாலும் டைம்ஸ் நவ் தான் ஓடிக்கொண்டிருக்கும், அதுவும் ம்யூட்டில். அதற்கு உரித்தான ரிமோட் என்கிற வஸ்து யாரிடமிருக்கும் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. திடீரென இரண்டு நாட்கள் NDTV ஓடும், அப்புறம் பழையபடி டைம்ஸ் நவ் வரும். யார் இதையெல்லாம் மாற்றுகிறார்கள், ஏன் வேறு சேனல் வைக்க மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் நான் கேள்வி எழுப்பியதில்லை. 

நாட்டில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட்டால் நியூஸ் சேனல்காரர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கிருந்தாவது ஒரு ஃபூடேஜை லவட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அதையே ரிபீட் மோடில் நாள் முழுக்க போட்டுக்காட்டுவார்கள். சில சமயங்களில் வெறுமனே அரை நொடி ஃபூட்டேஜ் மட்டுமே கிடைத்திருக்கும். அசரமாட்டார்கள். அதையே ஸ்லோ மோஷனில் வைத்து, ரிபீட்டில் ஓட விடுவார்கள். ஃபூட்டேஜில் குறிப்பிட்ட இடத்தில் வட்டமிட்டு காட்டுவார்கள். அந்த வட்டத்திற்குள் அப்படியொன்றும் விசேஷமாக இருக்காது என்பது வேறு விஷயம். அய்யா, ஃபூட்டேஜே கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. சிவகாசி பட்டாசு நிறுவன விபத்து என்று நினைக்கிறேன். அப்போது ஆங்கில செய்தி சேனல்களுக்கு ஃபூட்டேஜ் கிடைக்கவில்லை. ஒன்றுமில்லை, இந்தியா மேப்பை லாங்க்ஷாட்டில் காட்டத்துவங்கி அப்படியே ஜூம் பண்ணி கொண்டு வந்து சிவகாசியில் ஒரு சிகப்பு புள்ளி வைப்பார்கள். மறுபடியும் இந்தியா மேப், ஜூம், சிவகாசி, சிகப்பு புள்ளி. மறுபடியும் இந்தியா மேப், ஜூம், சிவகாசி, சிகப்பு புள்ளி. நீங்களாகவே ஒரு சில நூறுமுறை காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

செய்தி சேனல்களால் சில அனுகூலங்களும் இருந்தன. நியூஸ் ஹவரில் அர்னாப் கோஸ்வாமி வாயசைத்து சத்தம் வராமலிருக்கும் அரிய காட்சியை கண்டுகளிக்கலாம். அர்னாபை ம்யூட்டில் பார்க்கும் கொடுப்பினை யாருக்கு கிடைக்கும். மற்றொன்று, கேண்டீனில் எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது நாம் மட்டும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தால் அறிவு ஜீவி இமேஜ் கிடைக்கும். குறிப்பாக பெண்கள் இருக்கும் சமயங்களில். நான்கைந்து யுவதிகள் கூட்டாக அமர்ந்துகொண்டு, யார் அலுவலகத்தில் அக்குளை ஷேவ் பண்ணாமல் ஸ்லீவ்லெஸ் அணிந்து வருகிறார்கள், டீம் அவுட்டிங்கில் யார் யாரோடு கூத்தடித்தார்கள் போன்ற அதிமுக்கியமான விஷயங்களை விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கே சென்று அவர்களை சுத்தமாக கண்டுகொள்ளாமல் டிவியையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தால் நீங்கதான் ஹீரோ!

கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது மட்டும் தொலைக்காட்சியில் சேனல் மாற்றி வைக்கப்படும். தோனியோ ரவீந்திர ஜடேஜாவோ அல்லது யாரோ சிக்ஸர் அடித்திருப்பார்கள். உடனே கேண்டீனிலிருந்து ஓ’வென ஒரு அலறல் சத்தம் கேட்கும். குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், கிரிக்கெட் பார்ப்பதால் அறிவுஜீவி இமேஜ் கிடைக்காது. எனவே கிரிக்கெட் ஓடும் தருணங்களில் கமுக்கமாக அமர்ந்து வேலை பார்ப்பது உத்தமம். உண்மையிலேயே கிரிக்கெட் ஆர்வம் இருந்தால் க்ரிக்பஸ், க்ரிக்கின்ஃபோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். சில சமயங்களில் லைவை விட முன்கூட்டியே அப்டேட் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். மேட்ச் முடிந்ததும் மொத்தக்கூட்டமும் கேண்டீனில் இருந்து திரும்பி வரும். அச்சமயத்தில் ‘ஏ ஐ ஹேட் கிரிக்கெட்யா... கிரிக்கெட் இஸ் நாட் அட் ஆல் எ ஸ்போர்ட்... சும்மா நின்ன எடத்துல இருந்துக்கிட்டு பந்தை அடிக்கிறானுங்க சோம்பேறிங்க’ன்னு பீட்டர் விடலாம். தேவைப்பட்டால் 11 fools are playing, 11000 fools are watching என்கிற ஜானகி ஷாவின் தத்துவத்தை எடுத்துவிடலாம். அப்புறம் எந்த ஸ்போர்ட் பார்க்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது, ஃபுட்பால், டென்னிஸ், ஃபார்முலா 1. டென்னிஸ் பார்ப்பவர்கள் லியாண்டர் பெயஸ், மகேஷ் பூபதி போன்ற உள்ளூர் ஆட்டக்காரர்களின் பெயர்களை உச்சரிப்பது மகாபாவம். சம்பாஷனைகள் ஃபெடரர், ராடிக் லெவலிலேயே இருக்க வேண்டியது அவசியம். பேஸ்கட்பால் ஆட்டக்காரர்கள் சிலருடைய பெயரை தெரிந்து வைத்திருப்பது நல்லது. எப்படியும் வேறு யாருக்கும் தெரிந்திருக்காது.

ஆங் தொலைக்காட்சி... சமீபத்தில் யாரோ 'என் ரிமோட் என் உரிமை' புரட்சி போராட்டம் நடத்தியிருப்பார்கள் என தெரிகிறது. ரிமோட் பொதுவில் வைக்கப்பட்டு விட்டது. தற்சமயம் தொலைக்காட்சி ஊரான் வீட்டு நெய். அதுவும் அலுவலகத்தில் யாராவது ஃபூடி ஆசாமிகள் பணிபுரிந்தால் கிழிந்தது. ஃபூடி ஆசாமிகள் என்பவர்கள் ஆபீஸில் வேலை ஒன்பது மணிநேரம் என்றால் அதில் பத்தரை மணிநேரம் எதையாவது சாப்பிட்டுக்கொண்டும், கேண்டீனுக்கும் டெஸ்க்குக்கும் எதையாவது (அநேகமாக விசித்திர நிற திரவம்) தூக்கிக்கொண்டு அலைவதுமாக இருப்பார்கள். இடையில் கொஞ்சம் நேரம் கிடைத்தால் டிவிக்கு முன்பு வந்து அமர்ந்துகொண்டு ஃபாக்ஸ் ட்ராவலர் சேனலில் சமையல் குறிப்பு நிகழ்ச்சி பார்க்கத் துவங்கிவிடுவார்கள். மற்றவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பிடிக்கிறதா ? வேறு யாரேனும் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார்களா ? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை கிடையாது. நல்லவேளையாக வேலைநேரம் இரவு பத்து மணியோடு முடிந்துவிடுகிறது. இல்லையென்றால் ஃபூடி ஆசாமிகள் உட்கார்ந்து சமையல் மந்திரம் நிகழ்ச்சி பார்க்க நேரிடலாம்.

என்னதான் தொலைக்காட்சி தொழில்நுட்ப பணியாளர்களுக்காக வைக்கப்பட்டாலும் அதனை அதிக நேரம் பயன்படுத்துவது என்னவோ ஹவுஸ்கீப்பிங் பணியாளர்கள் தான். ரிமோட் இவர்கள் கையில் சிக்கினால் ஆதித்யா அல்லது சிரிப்பொலி. இதில் சில சிக்கல்கள் உள்ளன. அர்னாப் கோஸ்வாமியை ம்யூட்டில் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்குமோ அதற்கு நேர்மாறான உணர்வினை ஏற்படுத்தக்கூடியது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவையை ம்யூட்டில் பார்ப்பது. இன்னொன்று, பெட்ரமாஸ் லைட்டு காமெடி சீன் வந்தால் நம் வீடு மாதிரி கெக்கே பிக்கே என்று சிரிக்க முடியாது.

எப்போது என்று நினைவில்லை, முன்பைப்போல ம்யூட்டில் அல்லாமல் தொலைக்காட்சியில் வால்யூம் வைத்து பார்க்கத் துவங்கிவிட்டார்கள். சக பணியாளர்களில் வடா பாவ் ஆட்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் அவர்கள் ஒன்றுகூடினால் B4U மியூசிக் என்கிற ஹிந்தி பாட்டு சேனலை வைத்துவிடுவார்கள். அடடடடா சும்மா சொல்லக்கூடாது, தமிழ் நடிகைகள் எல்லாம் ஹிந்தி நடிகைகள் வீட்டு மொளகு ரசத்தை வாங்கிக் குடிக்க வேண்டும். பிபாஷா பாசுவோ, தீபிகா படுகோனோ ஆடினால் அல்லது ஷீலா கி ஜவானி பாடலை ஒளிபரப்பினால் நானும் தற்காலிக வடா பாவ் ஆசாமியாக மாறிவிடுவதுண்டு.

ஆரியர்கள் அப்படி என்றால் திராவிடர்களை பற்றி சொல்லவா வேண்டும். இருக்கவே இருக்கிறது சன் மியூசிக், இசையருவி. அதுவும் உச்சி வெய்யில் கொளுத்திக்கொண்டிருக்கிற சமயத்தில் இவர்கள் கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கலான பாடல்களை ஒளிபரப்பி நம்மை மெர்சலாக்குவார்கள். 

'மத்தியான நேரம் பாய் போடச் சொன்னால் மாட்டேன்னு சொல்லுவியா’ - ரஜினி ரவுசு விடுவார்.

பதிலுக்கு மீனா - ‘மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேட்னி ஷோ கூப்பிடுவேள்’ என்று சிணுங்குவார்.

அப்புறம் ரஜினி மீனாவை அலேக்காக தூக்கிக்கொண்டு போய் தொப்பென கட்டிலில் போடுவார். ஜிங்கு சாக்கு ஜிங்...! ஜிங்கு சாக்கு ஜிங்...!

இப்பொழுதெல்லாம் ஹவுஸ்கீப்பிங் ஆட்கள் மத்தியான நேரத்தில் கே டிவியில் படமே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்றவாரத்தில் ஒருநாள் விஜயகாந்த், பானுப்பிரியா நடித்த படமொன்று ஓடிக்கொண்டிருந்தது. பழைய பானுப்பிரியாவை சிக்கென புடவையில் பார்த்ததும் எனக்கு நிலைகுத்திக் கொண்டன. கண்கள். கதை இதுதான். விஜயகாந்தும் பானுப்ரியாவும் கணவன் மனைவி. என்றாலும் பானுப்ரியாவுக்கு விஜயகாந்தை பிடிக்கவில்லை. ஆனால் பானுப்ரியாவின் தாத்தாவான நம்பியார் சொத்துகளை எல்லாம் விஜயகாந்தின் பெயரில் எழுதி வைத்துவிடுகிறார். பானுப்ரியாவுக்கு சொத்தின் மீது ஆசை. உடனே மனோரமா ஆபத்பாந்தவனாக நுழைந்து ஒரு ஐடியா கொடுக்கிறார். அதாவது விஜயகாந்தை செட்யூஸ் செய்து அவருடன் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டால் குழந்தையை வைத்து சொத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று. என்ன ஒரு யோசனை. செட்யூஸ் என்றதும் ஏதோ பானுப்ரியா அவருடைய ஆஸ்தான ஸ்டைலான கருவிழிகளை ஒரு சுற்று உருட்டி, (அவருடைய) உதட்டை கடித்து, அப்படியே கண்களை சொக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக அந்த நேரம் பார்த்து தோழி ஒருவர் எதிரில் வந்து அமர்ந்தமையால் நாகரிகம் கருதி தொலைக்காட்சியிலிருந்து பார்வையை அகற்றிக்கொண்டேன். சில விநாடிகள் கழித்து எதேச்சையாக திரும்புவது போல தொலைக்காட்சியை பார்த்தபோது விஜயகாந்த் பானுப்ரியாவின் தொப்புளில் எண்ணெய் விட்டு தடவிக்கொண்டிருந்தார்.

குறிப்பு: பார்வைக்கு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment