28 August 2017

பிரபா ஒயின்ஷாப் – 28082017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வார ஒயின்ஷாப் முழுவதும் விவேகம் என்பதை எச்சரித்துவிடுகிறேன். அலுப்பாக இருந்தால் நேரடியாக நான் ஆரம்பம் படம் வந்தபோது எழுதியதையே படித்துக் கொள்ளலாம்.

விவேகத்தைப் பற்றிய என் கணிப்புகள் சில பிசகிவிட்டன.

1. ஏ.கே.யின் சர்வைவல் படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் என்று நினைத்திருந்தேன். காரணம் ரிலீஸுக்கு முன்பு டீஸர், டிரைலர், போஸ்டர்களில் சர்வைவல் பகுதி முன்னிறுத்தப்பட்டிருந்தன. படத்தில் அது வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் வருகிறது.

2. காஜல் அகர்வாலுக்கு ஒரு மாண்டேஜ் பாடல் உட்பட பத்து நிமிடக்காட்சிகள் மட்டும் இருக்கும் என்று யூகித்திருந்தேன். அதுவும் பொய்த்துவிட்டது. மாறாக அத்துரோகத்தை அக்ஷராவுக்கு நிகழ்த்தியிருக்கிறார்கள். (காஜலின் வேடம் பற்றி பிற்பகுதியில் பார்க்கலாம்).

மற்றபடி படம் நன்றாக இருக்காது என்ற என் கணிப்பில் எந்த பிசகுமில்லை. எனக்கு பிரச்சனையில்லை. நான் கொடுத்த 47 ரூபாய் 20 பைசாவிற்கு தேவி தியேட்டர் ஏஸியில் இளைப்பாறியதற்கும், வீணா இன் வியன்னா கேட்டதற்கும், காஜல் அகர்வாலை பார்த்ததற்கும் சரியாக போய்விட்டது. மற்றவர்கள் படம் பார்ப்பதற்கு முன் ஒருமுறை யோசித்துக் கொள்வது நல்லது.

கடந்த நான்கு நாட்களில் விவேகத்தை பல தரப்பினரும் போதுமான அளவிற்கு கழுவி ஊற்றிவிட்டார்கள். அதனால் படத்தின் பாஸிடிவ் விஷயங்களை முதலில் பார்க்கலாம்.

1. அக்ஷரா ஹாஸனின் அறிமுகம் மற்றும் அறிமுகத்திற்கு முன்பு வரும் ஃபேஸ்மேக்கர் டிராக்கிங், ஹோலோகிராம் காட்சிகள்.
2. அஜித்துக்கும் காஜலுக்கும் இடையே உள்ள அன்னியோன்யம். காதலாட பாடல். மோர்ஸ் கோட். அதை க்ளைமாக்ஸில் கனெக்ட் செய்த உத்தி.
3. இரண்டாம் பாதியில் அஜித்துக்கும் விவேக் ஓபராய்க்கும் நடக்கும் ஒரு மனக்கணக்கு விளையாட்டு.

இனி நெகடிவ் விஷயங்கள் -

1. ஒரு படத்திற்கு எப்போதும் ஆரம்பம், முடிவு, இடைவேளைக்கு முந்தைய காட்சி மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். நடுவில் உள்ள காட்சிகள் மொக்கையாக இருக்கலாம் என்றில்லை. இம்மூன்றும் சரிவர அமைந்தால் மற்றவை மறக்கப்படும், மன்னிக்கப்படும். விவேகத்தின் முதல் காட்சி ஒரு அபத்தக்களஞ்சியம். தமிழே தெரியாத போர் வீரர்களிடம் அஜித் தமிழில் நீண்ட, அன்னாயிங் வசனமொன்றை பேசுகிறார். அத்தனை பேரும் துப்பாக்கிகளை அஜித் மீது குறிவைத்து காத்திருக்கிறார்கள். நான்கைந்து ஹெலிகாப்டர்கள் வேறு பறக்கின்றன. அத்தனையும் மீறி தல பாலத்திலிருந்து தலைக்குப்புற டைவ் அடித்தபடியே வீரர்களை கைத்துப்பாக்கி கொண்டு சுட்டு வீழுத்துவதும், அவர்கள் பதிலுக்கு சுடும் குண்டுகள் ஒன்று கூட தோழர் மீது படாததும் அப்பப்பா ! அந்த ஒரேயொரு காட்சி மட்டும் போதும் விவேகத்தை வச்சு செய்ய !

2. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். ஆனால் அஜித்துக்கு இப்படத்தில் சறுக்கலே கிடையாது. முதுகில் குத்தினாலொழிய அவரை யாராலும் வீழ்த்தவே முடியாது. அக்ஷன் படங்களைப் பொறுத்தவரையில் வில்லன் ஹீரோவுக்கு நிகரான பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும். தர்மத்தினை வாழ்வுதனை சூது கொஞ்சம் கவ்வ வேண்டும். இறுதியில் தர்மம் வெல்ல வேண்டும். அப்போதுதான் சுவாரஸ்யம் இருக்கும்.

3. எரிச்சலூட்டும் வசனங்கள். எப்போதாவது தத்துவம் சொன்னால் பரவாயில்லை. எப்போதுமே தத்துவம் சொல்லிக்கொண்டே இருந்தால். வசனங்கள் எழுதியதும் சிவா என்றே நினைக்கிறேன். அவர் உடனடியாக மணிமேகலை பிரசுரத்தை தொடர்பு கொண்டு அவர் எழுதிய பொன்மொழிகள் புத்தகத்தை பிரசுரிக்கச் சொல்லி கேட்கலாம். இப்போது வேலைகளை தொடங்கினால் ஜனவரி புத்தகக்காட்சியில் வெளியிட்டுவிடலாம்.

4. படத்தின் கதை இதுதான் என்பதையே பார்வையாளர்களுக்கு பொறுமையாக சொல்லப்படவில்லை. குத்துமதிப்பாக விவேக் ஓபராய் கெட்டவருப்பா, அஜித் நல்லவரு என்று நாமாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. திடீரென ஒரு காட்சியில் ஷேடோ கவர்ன்மென்ட், சீக்ரெட் சொஸைட்டி என்கிறார்கள். ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஒதுக்கி (துப்பாக்கியில் வரும் ஸ்லீப்பர்செல்ஸ் விவரணை போல) அதனைப்பற்றி இன்னும் விலாவரியாக காட்டியிருக்கலாம்.

5. இறுதிக்காட்சி. முன்பே சொன்னதுபோல கிளைமாக்ஸ் என்பது ரசிகர்களின் மனநிலை மீது முக்கிய பங்கு வகிக்கிறது. விவேகத்தை எடுத்துக்கொண்டால் அஜித் எப்படியும் அந்த சதியை முறியடித்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் விவேக் ஓபராய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவ்விடத்தை வந்தடைகிறார் என்பதுடன் படம் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு ஒரு ஃபைட் சீன் என்பது கூட சம்பிரதாயமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் காஜல் பாட்டு பாடுவதெல்லாம் ரசிகர்களின் சோதித்துப் பார்க்கும் சாடிஸ மனப்பான்மை.

இவை போக பொதுவாக சில விஷயங்கள்,

6. பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் தங்கள் பேட்டிகளில் தவறாமல் ஒரு வாக்கியத்தை சொல்வார்கள். அவருடைய ரசிகர்களுக்காக சில விஷயங்களை சேர்த்திருக்கிறோம் என்பார்கள். தியேட்டரில் ரசிகர்கள் விசிலடித்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அவர்கள் அப்படி செய்ய வேண்டுமென்றே வலிந்து சில காட்சிகளை, செய்கைகளை திணிப்பது நல்லதல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அஜித் மெதுவாக திரும்பிப் பார்ப்பது, நடந்து வருவது, சம்பந்தமே இல்லாமல் சக்ஸஸ் மீட் வைப்பவர்களை நக்கல் விடுவது, பைக்கில் வீலிங் செய்வது, சட்டையைக் கழட்டுவது என்று மொத்தமாக ஒரு இருபது காட்சிகளை படத்தில் வைத்துவிடுகிறார்கள். வைத்துவிட்டு தெறிக்குது, ஒழுகுது என்று வடை சுடுகிறார்கள்.

7. பெரிய பட்ஜெட், கடின உழைப்பு ஓகே. ஆனால் நிஜமாகவே இவ்வளவு பெரிய பட்ஜெட் இப்படத்திற்கு தேவையா ? இப்படத்திற்கு இத்தனை தேசங்களில் படம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லையே ? சர்வைவா பாடலில் குறுக்கும் நெடுக்குமாக ஹெலிகாட்பர்கள் தேவையில்லாமல் அட்மாஸ்பியரில் பறக்கின்றன. ஒரு காட்சியில் விரையும் மெட்ரோ ரயில்களுக்கு மத்தியில் சண்டை போடுகிறார்கள். அஜித் ஏன் ஸ்வாமி சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் ? யாராவது கேட்டார்களா ?

உடனடியாக அஜித் சில விஷயங்களை நிறுத்துவது நல்லது. அவருக்கு.

1. கூலிங் கிளாஸ்.
2. சால்ட் அண்ட் பெப்பர்
3. நடப்பது.
4. சுடுவது.
5, பைக் சேஸிங் காட்சி.
6. முதுகில் குத்துப்படுவது.
7. எரிக்க எரிக்க எழுந்து வருவது.
8. ஸ்லோ மாடுலேஷன் டயலாக் டெலிவரி.
9. வில்லனால் / அல்லக்கைகளால் புகழப்படுவது.

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அஜித் செய்தபோது ரசித்தோம். ஆனால் அதையே செய்துக்கொண்டிருந்தால்... ருசிக்காக இரண்டு இட்லி கூடுதலாக சாப்பிடலாம். ஐம்பத்தி ஏழு கிலோ இட்லியெல்லாம் முடியாது ! அஜித்தின் சில முந்தைய படங்களில் இதேபோன்ற காட்சிகள் வந்தால் கூட அதையும் மீறி ஒரு ரசிகனாக அக்காட்சிகள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும். இப்போது அந்நிலை கடந்தாயிற்று. ஆங்கிலத்தில் கூஸ்பம்ஸ் என்பார்களே அது ஒட்டுமொத்த விவேகத்தில் ஒருமுறை கூட எனக்குத் தோன்றவில்லை. எனக்குள் இருக்கும் அஜித் ரசிகன் கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறான். ஒரேயொரு ஆறுதல். முன்பெல்லாம் அஜித் படங்கள் என்றாலே துணை கதாபாத்திரங்கள் எல்லாம் ‘தல’ என்ற வார்த்தையை வைத்து எத்தனை விதமான வாக்கியங்கள் அமைக்கலாம் என்ற சொல் விளையாட்டை விளையாடுவார்கள். நல்லவேளையாக அது விவேகத்தில் இல்லை.

ஒரு விவேக் நகைச்சுவை காட்சியில் அவரது மனைவியாக வருபவர் விவேக் ஓபராயுடன் மட்டும் ஒருமுறை நடித்துவிட வேண்டும் என்று விளையாட்டாய் சொல்வார். அந்த துணை நடிகை மனம் தளராமல் காத்திருந்தால் அவருடைய ஆசை கூடிய விரைவில் நிறைவேறலாம். அந்த அளவிற்கு ஒரு சொத்தை வில்லனாக விவேக் ஓபராய். அதுவும் பட ரிலீஸிற்கு முன்னால் குழுவினர் அளித்த பேட்டிகளில் எல்லாம் சொல்லிவைத்த மாதிரி, அவரை வில்லன் என்று சொல்ல முடியாது. ஒரு முக்கியமான காதாபாத்திரம் என்று சொல்லியிருந்தார்கள். சஸ்பென்ஸ் காயத்ரி வைக்கிறார்களாம். 

விவேகத்தின் சந்தோஷமான விஷயம் – காஜல் அகர்வால். (காஜல் என்னோட சந்தோஷம்ன்னு சொல்றத விட என்னோட சந்தோஷமே காஜல்தான்னு சொல்லலாம்). தமிழில் காஜல் அகர்வால் நடித்ததிலேயே சிறப்பான கதாபாத்திரம் என்றால் அது விவேகம் படத்தின் யாழினிதான். பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்றாலே அரைக்கிறுக்காக காட்டுவார்கள். காஜலும் பெரும்பாலான படங்களில் ஒரு முட்டாள் காதலியாகத்தான் வந்திருக்கிறார். குறிப்பாக, ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற குப்பை தலைவியை திட்டமிட்டு பங்கம் செய்தது போலிருந்தது. ஒப்பீட்டளவில் மாற்றான் கொஞ்சம் பரவாயில்லை. விவேகத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பம் முதல் இறுதிவரை அர்த்தமுள்ள கதாபாத்திரம் காஜலுக்கு கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 August 2017

பிரபா ஒயின்ஷாப் – 21082017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கனவு ராட்டினம் நாவலை படித்துவிட்டு அதன் நீட்சியாக நீண்டகாலமாக பார்க்க நினைத்திருந்த படமொன்றை பார்த்தேன். படத்தின் பெயரை ட்ரீம் மாஸ்டர். ட்ரீம் மாஸ்டரை என்னுடைய வாட்ச் லிஸ்டில் குறித்து வைத்து ஆறு மாதங்களுக்கு மேலாகி இப்போதுதான் பார்க்க முடிந்தது. காரணம் ட்ரீம் மாஸ்டர் ஒரு சாஃப்ட் போர்னோ. அதனை பேருந்திலோ, ரயிலிலோ வைத்து பார்க்க முடியாது. சக பயணிகள் என்பவர்கள் நீங்கள் படிக்கும் புத்தகத்தையும், பார்க்கும் வீடியோக்களையும் கூச்சமில்லாமல் எட்டிப்பார்ப்பவர்கள். நீங்கள் வெண்முரசு படித்தாலொழிய சக பயணிகளின் தொந்தரவிலிருந்து தப்பிக்க முடியாது.

ட்ரீம் மாஸ்டரின் கதாநாயகன் ஒரு பேராசிரியர். அவர் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் செய்கிறார். அவரது கனவில் ஒரு செக்ஸ் பிசாசு அவரைத் தொடர்ந்து துன்புறுத்துகிறது. அதிலிருந்து மீள்வதற்காக பேராசிரியர் மூன்று பேரின் உதவியைக் கோருகிறார். இரண்டு மாணவிகளும், ஒரு மாணவனும் வருகிறார்கள். அதில் ஒரு மாணவி ஒரு குடும்பத்தில் தத்து பிள்ளையாக வளர்ந்தவர். அவருக்கு அக்குடும்பத்தில் பிறந்த மகனுடன் செக்ஸ் கனவுகள் வருகிறது. மாணவனின் நிலை மோசம். அவரது கனவில் முதல் காதலி வந்து செட்யூஸ் செய்கிறார். கட்டிலில் போய் படுத்துக்கொண்டு இவரை உடலுறவிற்கு அழைக்கிறார். ஆர்வமாய் நுழையப்போனால் கட்டிலைச் சுற்றி கண்ணாடித் தடுப்பு போடப்பட்டுள்ளது. அவரால் பார்க்க மட்டும்தான் முடிகிறது. இவர்களுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்யும் வேளையில் பேராசிரியர் கனவுப் பிசாசிடம் சிக்கி நினைவை இழக்கிறார். இப்போது அவருடைய ஆராய்ச்சி மாணவ / மாணவிகள் அவரை மீட்பதற்காக அவருடைய கனவிற்குள் நுழைகிறார்கள். பேராசிரியரை மீட்கிறார்கள். அனால் துரதிர்ஷடவசமாக ஒரு மாணவி கனவுப் பிசாசிடம் சிக்கிக் கொள்கிறார். இம்முறை பேராசிரியர் எஞ்சியிருக்கும் மாணவன் மற்றும் மாணவி துணையுடன் மாணவியை மீட்கிறார். முதல் பத்தியில் சாஃப்ட் போர்னோ என்று குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். பெர்முடேஷன் காம்பினேஷன் விதிகளின் படி இக்கதையில் எத்தனை விதமான பிட்டுக்களை சேர்க்க முடியும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். கதையம்சத்துடன் கூடிய போர்னோவிற்கு நல்ல உதாரணம் ட்ரீம் மாஸ்டர். IMDBயில் ட்ரீம் மாஸ்டரின் வாலைப் பிடித்துக்கொண்டு போனால் அந்தக் காலத்தில் வெங்கடேஸ்வராவில் திரையிட்ட படங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்கு முன் ராகவேந்திராவில் கனவில் கில்மா என்று ஒரு படம் வந்தது. அது ஒருவேளை ட்ரீம் மாஸ்டரின் தழுவலாகக் கூட இருக்கலாம்.

சில சமயங்களில் புத்தகங்களை நாம் தேர்வு செய்வதில்லை. புத்தகங்கள் தான் நம்மைத் தேர்வு செய்கின்றன. அட்டைப்படமோ, பின்னட்டை வாசகமோ, முன்னுரையோ, தோராயமாகத் திறந்து வாசிக்கும் ஏதோவொரு பக்கமோ காரணமாக நாம் புத்தகத்தை வாங்கிட நேர்கிறது. அப்படி சமீபத்தில் வாங்கியது கிழக்கு பதிப்பகத்தின் டாக்ஸி டிரைவர் (சிறுகதைத் தொகுப்பு). எழுதியவர் ஆனந்த் ராகவ். அருண் வைத்தியநாதன் இயக்கிய நிபுணன் படத்தின் திரைக்கதை ஆசிரியர். இந்த ஆனந்த் ராகவ், அருண் வைத்தியநாதன், முன்னுரையில் இரா.முருகன், பத்ரி சேஷாத்ரி போன்ற பெயர்களை எல்லாம் படிக்கும்போதே கொஞ்சம் அந்நியமாகப்பட்டது. முதல் கதையே இருபத்தியாறு வார்த்தைகள் கொண்ட வாக்கியத்துடன் துவங்கி மிரள வைக்கிறது. ஆனால் பயப்படத் தேவையில்லை. கதைகள் எக்ஸ்ட்ரீம் எளிமை. இவருடைய கதைகளுக்கென ஒரு ஃபார்முலா இருக்கிறது. கதையின் ஆரம்பப்புள்ளி நம் இயல்பு வாழ்க்கையில் பார்க்கும் ஏதோவொரு சம்பவத்தில் இருந்து துவங்கும். உதாரணமாக, சிக்னலில் காத்திருக்கும் போது பார்த்த காட்சி, டாக்ஸியில் பயணித்த அனுபவம். விவரணைகளின் இடையே தேவைப்பட்டால் முன்கதை சொல்லப்படுகிறது. இறுதியில் ஒரு சின்ன ட்விஸ்ட். ஆனந்தின் பலம் அவருடைய விவரணை தான். ஒரு போக்குவரத்து சிக்னலில் அதிகபட்சம் செலவிடும் நேரம் 120 நொடிகள். அதனை ஏழு பக்கத்திற்கு சுவாரஸ்யமாக விவரிக்கிறார். இவரது கதைகளில் விஷயத்தை மட்டும் எடுத்து சுருக்கமாக எழுதினால் இரண்டு பத்திகள் கூட தேறாது. சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை என்று முன்பொரு முறை ஜெயமோகன் தளத்தில் படித்திருக்கிறேன். அதை ஆனந்த் ராகவ் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால்  வருத்தம் என்னவென்றால் அந்த சின்ன ட்விஸ்ட் ரொம்ப சப்பையாக, ப்பூ இவ்வளவுதானா என்று நினைக்க வைக்கும் அளவில் இருக்கிறது. ஒரு கதையில் முதல் நபர் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கிறார். அப்போது சாலையோரத்தில் ஒரு கணவன் மனைவியை அடிப்பதை பார்க்கிறார். இக்காட்சி ஐந்தாறு பக்கங்களுக்கு விவரிக்கப்படுகிறது. அதன்பிறகு பச்சைவிளக்கு ஒளிர்ந்து வாகனங்கள் புறப்படுகின்றன. சரி, அந்த கணவன் – மனைவி சண்டை என்ன சார் ஆச்சு என்று கேட்டால் 'போடா நாயே' என்று கதையை முடிக்கிறார். இன்னொரு கதையில் முதல் நபரின் தகப்பனாருக்கு மூளைச் சாவு ஏற்படுகிறது. நீங்கள் சொன்னால் வெண்டிலேட்டரை நிறுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லிவிடுகிறார்கள். அடுத்த பதினைந்து பக்கங்களுக்கு அப்பா வெண்டிலேட்டரிலேயே இருக்கிறார். பதினாறாவது பக்கத்தில் பொறுக்க முடியாமல் அப்பாவே இறந்துவிடுகிறார். இக்கதைகள் எல்லாம் கடந்த பதினைந்து வருடங்களில் தமிழின் முக்கியமான வார இதழ்களில் வெளியாகியிருக்கிறது என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. முன்னுரையில் இரா.முருகன் தனக்குப் பிடித்த நூறு சிறுகதைகளில் ஆனந்த் ராகவின் ஒரு கதையும் இருப்பதாக எழுதியிருந்தது நினைவுக்கு வர அவசரமாக முன்னுரைக்கு புரட்டினேன். அவர் குறிப்பிட்டிருந்த துளி விஷம் என்ற அச்சிறுகதை தொகுப்பிலேயே இல்லை. யோசித்துப் பார்த்தபின் இரா.முருகனை கொஞ்ச மாதங்களுக்கு முன் சுஜாதா விருது வழங்கும் விழாவில் இணைய விருது பெற்றவர்களை வாழ்த்தி பேச அழைத்திருந்ததையும், அவர் அங்கே வந்து ஃபோரம், யாஹூ சாட் காலத்து நாஸ்டால்ஜியா பேசியதும் நினைவுக்கு வந்தது.

வார இறுதியில் பெற்றோரின் திருமண நாளைக் கொண்டாட சோக்கி தானி சென்றோம். இவ்விடத்தைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ராஜஸ்தான் கலை, பண்பாட்டு பாணியில் அமைக்கப்பட்ட தீம் பார்க். சமீபத்தில் குங்குமம் இதழில் கூட பேராச்சி கண்ணன் சோக்கி தானி பற்றி எழுதியிருக்கிறார். சோக்கி தானி என்றால் அழகிய குக்கிராமம் என்று பொருள். உள்ளே நுழையும்போதே ராஜஸ்தானுக்கே உரிய ராயல் வரவேற்பு கிடைக்கிறது. தொடர்ந்து படகு சவாரி, கிராமத்தை பிரதிபலிக்கும் குடில்கள், மண் பானைகள் செய்பவர், ஒட்டக, குதிரை, சவாரி, மாட்டு வண்டிகள், பொய்க்கால் குதிரை டான்ஸ், மேஜிக் ஷோ என்று ரசிப்பதற்கும் பங்கேற்பதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. டிக்கட் விலை கொஞ்சம் அதிகம்தான். இரவு உணவு உட்பட. சுத்த சைவ உணவு. உணவுக்கூடம் கூட ராஜஸ்தான் பாணிதான். ஒரு நீண்ட மெத்தையில் வரிசையாக அமரச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நபருக்கு முன்பும் ஒரு சின்ன ஸ்டூல். அதிலே தட்டு வைத்து பரிமாறுகிறார்கள். உபசரிப்பில் மாமியார் வீட்டையே மிஞ்சிவிடுகிறார்கள். மாமியார் வீட்டிலாவது வேண்டாம் என்று கண்டிப்பான குரலில் சொன்னால் விட்டுவிடுவார்கள். இங்குள்ள பரிமாறும் நபர் கையைப் பிடித்து நிறுத்தியும் இரண்டு கரண்டி சோற்றை என் தட்டில் வைத்து தட்டை தீட்டாக்கினார். வைத்தது தயிர் சோறு !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 August 2017

பிரபா ஒயின்ஷாப் – 14082017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிவந்த கைகள். கார்ப்பரேட் பின்னணியில் அமைந்த சுஜாதாவின் ராக்கெட் வேக நாவல். விக்ரம் என்கிற இளைஞன் கார்ப்பரேட் ஏணியில் துரிதமாக முன்னேறுகிறான். இலக்கின் அருகே செல்லும் தருவாயில் ஒரு இடையூறு. எம்.பி.ஏ படித்ததாக பொய் சொல்லி வேலையில் சேர்ந்திருக்கிறான். அந்தப் பொய் அவனை மீண்டும் தரையில் இழுத்துப்போட பார்க்கிறது. அச்சூழலை விக்ரம் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே சிவந்த கைகள் ! நாவலை படித்து முடிக்கும்போது அதன் முடிவில் இன்னொரு பத்தி வர வேண்டும் என்று நினைத்து, அதனை மனதுக்குள்ளே எழுதியும் பார்த்தேன். ஒரு பத்தி மட்டும் இல்லை. இரண்டாவது பாகமாக இன்னொரு நாவலே இருக்கிறது (கலைந்த பொய்கள்) என்பதை பிற்பாடு தெரிந்துக்கொண்டேன். 

சிவந்த கைகள் ஒரு வகையில் என்னுடைய சொந்தக்கதை. போலி டிகிரி ஆசாமி என்று எண்ணிவிடாதீர்கள். நான் சொல்ல வந்தது கார்ப்பரேட் சூழலில் அத்தனை எளிதாக பொருந்தாமல், அச்சூழலை ஒருவித தயக்கத்துடன், அச்சத்துடனும் அணுகும், அன்றாடப்பணியில் சின்னச் சின்ன தவறுகள் செய்து, அவற்றை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க மேலும் பல தவறுகள் செய்து, பூசி மொழுகி சர்வைவ் செய்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனைப் பற்றி. 

நாவலில் வருவது போல நேரங்கள் கூடிவந்து திடீரென துறையில் பெரிய ஆளாகும் நபர்களை பார்த்திருக்கிறேன். தேவர் மகனில் சிவாஜி மறைந்தபிறகு கமல் சார்ஜ் எடுத்துக்கொள்வார். அவருக்கு பொறுப்புகள் கூடும். கெட்டப் மாற்றிக்கொள்வார். சொந்த வாழ்க்கையில் தியாகங்கள் செய்வார். நிறைய கேங்ஸ்டர் படங்களில் பார்த்திருப்போம். ஒரு பெரிய தாதாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அதிகாரத்திற்கு வருவார். புதுப்பேட்டையில் அன்பு என்கிற தாதாவை வீழ்த்தி கொக்கி குமார் அவருடைய இடத்திற்கு முன்னேறுகிறான். அதே போல கார்ப்பரேட்டில் கூட சில சமயங்களில் இரண்டாம் நிலையில் இருப்பவரே முதல் நிலையில் இருப்பவரை மிதித்து தள்ளிவிட்டு முன்னேறுவதை பார்க்கலாம். சில சமயங்களில் சில லக்கி பாஸ்டர்டுகளுக்கு யாரையும் வீழ்த்த வேண்டிய அவசியம் இருக்காது. காற்று பலமாக வீசி, இலைகள் உதிர்வதால் அதிகாரம் வந்து சேரும். 

நான் சொல்வதெல்லாம் எக்ஸப்ஷனல் கேஸஸ். மற்றபடி பெரும்பாலான சமயங்களில் கார்ப்பரேட்டில் வேலை கிடைப்பது, வேலை செய்வது, பதவி உயர்வு கிடைப்பது எல்லாம் மற்ற துறைகளில் உள்ளதைப் போலவே சவாலான விஷயம்தான். ஆனால் சினிமாவில் மட்டும் இவையெல்லாம் வெகு சுலபமாக கிடைப்பதாக தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கடைசி மகனை (தருண் கோபி) மட்டும் படிக்க வைக்கிறார்கள். அவருக்கு படிக்கும்போது கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த முதல் நாளே அவருக்கு தனியறை ஒதுக்கப்படுகிறது. மதிய உணவுக்கு லெக் பீஸ் வைத்து பிரியாணி தருகிறார்கள். இதனை தமிழ் சினிமாக்களில் தாராளமாக பரவிக்கிடக்கும் தர்க்கப்பிழைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. பின்தங்கிய கிராமப்புற / முதல் தலைமுறை பட்டதாரிகளின் அறியாமையை இதுபோன்ற காட்சிகள் பலப்படுத்துகின்றன. கிராமப்புற மாணவர்கள் கார்ப்பரேட் பணியிடங்களில் சோபிக்க முடியாது என்று சொல்லவில்லை. தருண் கோபிக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் இடம் கிடைக்கிறது என்றால் அதற்காக அவர் எத்தனை உழைக்கிறார், என்ன மாதிரியான முயற்சிகள் எடுக்கிறார், என்னென்ன திறன்களை வளர்த்துக் கொள்கிறார் என்பது பற்றி படத்தில் ஒரு துரும்பைக் கூட காட்டவில்லை, அட்லீஸ்ட், ஒரு அறுபது நொடி மாண்டேஜ் காட்டியிருக்கலாம்.

மாயாண்டி குடும்பத்தார் பரவாயில்லை. யாரடி நீ மோகினி ஒட்டுமொத்தமாக மென்பொருள் துறையையே கொத்துபரோட்டா போடுகிறது. வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருக்கும் திருவாளர் தனுஷ் நயன்தாராவிற்காக அவர் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத் தேர்வில் கலந்துகொள்கிறார். எழுத்துத் தேர்வில் ஒன்றும் தெரியாமல் உட்கார்ந்திருக்கிறார். நயன்தாரா வந்து டென்ஷன் ஆகாம யோசிங்க என்கிறார். உடனே கடகடவென எழுதி முடித்து அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகிறார். குரூப் டிஸ்கஷனில் தமிழில் பேசுகிறார். (ஐ.டி. நிறுவனங்களில் தமிழில் பேசுவது சகஜம்தான் என்றாலும் குரூப் டிஸ்கஷனில் ஏய் திராவிட சமுதாயமே என்றெல்லாம் ஆரம்பித்தால் துரத்திவிடுவார்கள்). நேர்முகத் தேர்வில் மல்டி த்ரெடிங், ஃபாரின் கீயின் பயன்பாடு, வொய்ல் – டூ வொய்ல் வேறுபாடுகள் போன்ற சப்பையான கேள்விகள் கேட்கிறார்கள். தனுஷ் அதுவும் தெரியாமல் முழிக்கிறார். நயன்தாராவை பார்த்ததும் துரித ஸ்கலிதம் ஏற்பட்டது போல பதில்கள் வந்து விழுகின்றன. வேலைக்கு சேர்ந்தபிறகு நயன்தாரா அவரைப் பார்க்கவில்லை என்கிற கடுப்பில் கமாண்ட் ப்ராம்டில் ASDF என்று டைப் செய்கிறார். துறையில் உள்ள அத்தனை சிஸ்டமும் கீக்கீ என்று சப்தமெழுப்புகின்றன. மேனேஜர் வந்து லார்டு மாதிரி கத்துகிறார் (இதில் மட்டும் தர்க்கப்பிழை இல்லை). குற்ற உணர்வில் தனுஷ் இரவு முழுக்க அலுவலகத்திலிருந்து கீபோர்ட் நடனம் புரிகிறார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு இன்னும் தீவிரமாக கோட் எழுதுகிறார். நீண்டநேர போராட்டத்திற்குப்பின் திரை ஹலோ வேர்ல்ட் என்பதைப் போல கோட் ஆக்டிவேட்டட் என்று பிரசுரிக்கிறது. அடுத்து ஆன்சைட் வாய்ப்பு கிடைப்பது, ஆஸ்திரேலியாவில் கூத்தடிப்பது என்று நீள்கிறது. மேலும் பல படங்களில் மென்பொருள் பணியாளர்கள் என்றாலே இப்படித்தான் ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்கள், ஐரோப்பிய ஆங்கிலம் பேசுவார்கள், சனிக்கிழமை இரவென்றாலே பப்புக்கு செல்வார்கள், சகஜமாக செக்ஸ் வைத்துக்கொள்வார்கள் என்று நிறைய பொதுமை படுத்தல்களை காணலாம்.

மென்பொருள் துறையைப் பற்றி படம் எடுப்பவர்கள் அத்துறையை பற்றி கொஞ்சம் டேபிள் வொர்க்காவது செய்துவிட்டு எடுப்பது உத்தமம். கோட் அடிப்பது என்றால் காதலர் தினம் கவுண்டமணி மாதிரி கீபோர்டில் தடதடவென அடிப்பது அல்ல. அது இருட்டு அறையில், உருவமற்ற ஒரு பொருளை தேடும் புதிர். அப்பொருளை தேடும் சமயத்தில் உங்களுக்கு முரட்டுக்குத்துகள் விழும். கொடிய மிருகங்கள் உங்களை கூட்டு வன்புணர்வு செய்து, குதத்தைக் கிழிக்கும். ரத்தம் வடிய, வடிய பொருளைத் தேடிக்கண்டுபிடித்து ஆட்டோ டிரைவர் மாணிக்கம் மாதிரி சிரிக்க வேண்டும். எல்லாம் முடித்து நீங்கள் செய்த வேலையின் அளவு என்னவென்று பார்த்தால் சொற்பமாக இருக்கும். குறிப்பாக, டீபக்கிங் எனும் பிழை திருத்தத்தை எடுத்துக்கொண்டால் பலமணிநேர உழைப்பின் விளைவாக ஒரேயொரு வரியை மட்டும் மாற்றம் செய்திருப்பீர்கள்.

மகளை பள்ளியில் சேர்க்கும் புதிய படலத்தில் காலடியெடுத்து வைத்திருக்கிறேன். இதென்ன பிரமாதம் என்று கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேன். உள்ளே நுழைந்தால் தான் அதிலிருக்கும் பல வேடிக்கைகள், அபத்தங்கள் புரிகிறது. டீச்சர்கள் எல்லாம் ஒரு மாதிரி செயற்கையாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். நீங்கள் தமிழகத்தில் ஏர்போர்ட், ஸ்டார் ஹோட்டல் போனால் கூட நீங்கள் தமிழில் பேசினால் உங்களிடம் தமிழில் பேசுவார்கள் அல்லது முயற்சிப்பார்கள். இங்கே அந்த பேச்சுக்கே இடமில்லை. ஃபீஸ் என்ற பெயரில் நான் எஞ்சினியரிங் படித்த தொகையை கேட்கிறார்கள். டொனேஷன் என்பதை ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் என்று நாசூக்காக கேட்கிறார்கள். மகளுக்கு ஓரல் டெஸ்ட் வேறு இருக்கிறது என்கிறார்கள். இன்னும் என்னென்ன கொடுமைகளை பார்க்கப் போகிறேனோ ? எதற்கும் இப்போதே அலெக்ஸாண்டரின் குதிரை பெயரை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 August 2017

பிரபா ஒயின்ஷாப் – 07082017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மாதவன் ஸ்ரீரங்கத்தின் கனவுராட்டினம் நாவலை வாங்கியபோது முன்னுரை, பின்னட்டை வாசகம் எதுவும் படிக்காமல் தான் வாங்கினேன். மனிதர் ஏமாற்றியிருக்க மாட்டார் என்பது சிமோனிலா கொடுத்த நம்பிக்கை. அது வீண்போகவில்லை. அதையும் தாண்டி நாவலின் முதல் சில அத்தியாயங்களை கடந்தபோதே அது ஒரு அற்புத அனுபவத்தை கொடுக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. நாவலின் தலைப்பு தான் கதை. கனவுகள் ஏன் குழப்பமாக இருக்கின்றன, ஏன் மறந்துவிடுகின்றன, ஏன் காட்சிகள் கோர்வையில்லாமல் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புதிய சிந்தனையை முன்வைக்கிறார் மாதவன். சில வார இதழ்களில் முதல் சில பக்கங்களில் புதிர் பிரசுரித்துவிட்டு அறுபதாம் பக்கத்தில் விடை என்பார்கள். நமக்கு அறுபதாம் பக்கம் போகும்வரை கவனம் அதிலேயே இருக்கும், புதிர் அத்தனை சிறப்பாக இருந்தால். அதுபோல கனவுராட்டினத்தின் ஐந்தாறு அத்தியாயங்கள் தாண்டியபிறகு எனது சிந்தனையெல்லாம் நிறைவுப்பகுதியையும் அதிலே வரப்போகும் ட்விஸ்டைப் பற்றியுமே இருந்தது. பதினாறாவது (மொத்தம் பத்தொன்பது) அத்தியாயத்தில் முடிச்சுகள் அவிழத் துவங்குகின்றன. அதன்பிறகு பரபரத்து, மூன்றாம் உலகப்போர் வரையெல்லாம் சென்றுவிட்டு மெய்யுலகிற்கு வருகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு நாவலின் முடிவில் அவ்வளவு திருப்தியில்லை. வருத்தம் என்பதைவிட ஆதங்கம் என்றால் பொருத்தமாக இருக்கலாம். சில படங்களைப் பார்த்தால், பாவி மனுஷன் இதைக் கொஞ்சம் வேறு மாதிரி மாற்றி எடுத்திருந்தால் செமத்தியாக இருந்திருக்குமே என்று தோன்றும். உதாரணம், ஆயிரத்தில் ஒருவன். மாதவனின் நாவலைப் படிக்கும்போது அதே போல தோன்றுகிறது. மற்றபடி ஒட்டுமொத்தமாக நாவல் ஓர் பரவச உணர்வைக் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. 

மாதவனுடைய முன்னுரையில் இந்நாவலை இரண்டே முழு நாட்களில் எழுதி முடித்ததாக சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு நாள் கணக்கு என்னைக் கொஞ்சம் உறுத்துகிறது. ஒரு மனிதனால் இரண்டே நாட்களில் இத்தனை அருமையான நாவலை எழுத முடியுமென்றால் ஏன் அந்த மனிதன் கூடக் கொஞ்ச நாட்கள் எடுத்து அதனை இன்னும் செப்பனிட்டு, மெருகேற்றக் கூடாது. இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தம், அவசரம் ? நான் கனவு ராட்டினம் நாவலை படித்து முடிப்பதற்கே இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேன். அஃப்கோர்ஸ், முழு தினங்கள் அல்ல. இருந்தாலும் இத்தனை குறுகிய காலத்தில் ஒருத்தர் ஒரு முழு நாவலை எழுதி முடிக்கிறார் என்பதே எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. ஒருவேளை மாதவனை சந்தித்தால் அவருடைய கையை, காலை உடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் எல்லார் எழுத வேண்டியதையும் இந்த ஒரு ஆளே எழுதிவிடுவார்.

ஒரு உண்மையைச் சொன்னால் நான் கொஞ்சம் மிகைப்படுத்துவதைப் போல தோன்றலாம். நீங்கள் நம்பாமல் கூட போகலாம். கனவுராட்டினம் படித்ததில் இருந்து நான் என்னுடைய மனம் கனவுகளை வேறொரு கோணத்தில் அணுகத் துவங்கியிருக்கிறது. மாதவன் சொல்வது போல பல பரிமாணங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ராட்டினம் என்பதை நம்பத் துவங்கிவிட்டேன். குறிப்பாக கனவுகளில் ஏதோவொரு கேள்விக்கான விடையைத் தேடுகிறேன். முன்னெப்போதும் இருப்பதைவிட கனவுகள் சற்று கூடுதலாக நினைவில் இருப்பதைப் போல உணர்கிறேன். (மீண்டும் கனவுதுரத்தி குறிப்புகள் வருகிறது உஷார் !). கனவுகள் வெவ்வேறு திசையில் பயணித்து நம்மைக் குழப்பும்போதும், கனவுகளின் அடுக்குகளில் வழுக்கும்போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதே சமயம் கனவு பாதியில் கலைந்து விடும்போது அதனால் ஏற்படும் சஸ்பென்ஸை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்ன இவன் பைத்தியம் மாதிரி ஏதோ உளறிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறதா ? பொறுங்கள். உலகின் சில முக்கியமான கண்டுபிடிப்புகள் கனவுகளின் விளைவுகள் என்பது உங்களுக்கு தெரியுமா ? உதாரணமாக, கூகுள். ஒட்டுமொத்த இன்டர்நெட்டையும் தரவிறக்கி அவரவர் கணினியில் சேமித்து வைத்துக்கொள்வது போன்ற கனவு அவருக்கு தோன்றியிருக்கிறது. பைத்தியக்காரத்தனம் என்று நினைக்காமல் அவர் அதனை செயல்படுத்த முனைந்ததில் கூகுள் தோன்றியது. தையல் இயந்திரம் கண்டுபிடித்த எலியாஸின் (Elias Howe) கனவு சுவாரஸ்யமானது. தையல் இயந்திரம் கண்டுபிடிக்கும் செயல்முறையின் இடையே முன்னேற்றமில்லாமல் சிக்கியிருந்தார் எலியாஸ். அப்போது எலியாஸின் கனவில் அவர் ஒரு கேனிபல் கூட்டத்திடம் (நரமாமிசம் உண்பவர்கள்) சிக்கிக் கொள்கிறார். தையல் இயந்திரத்தை கண்டுபிடிக்காவிட்டால் கொன்றுவிடுவோம் என்று அவர்கள் எலியாஸை மிரட்டுகிறார்கள். அவரால் கனவில் கூட அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. கேனிபல் கூட்டம் அவரை ஈட்டியால் தாக்கிக் கொலை செய்கின்றனர். ஈட்டியின் முனையில் ஒரு துளை. அதுதான் எலியாஸ் தேடிக்கொண்டிருந்த புதிர் சித்திரத்தின் கடைசிப் பகுதி ! தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜேம்ஸ் கேமரூனின் டெர்மினேட்டர் திரைப்படக் கதை கூட அவருடைய கனவிலிருந்து உதயமான சிந்தனை தான். நோலனின் இன்செப்ஷன் கூட அவருடைய கனவுகளின் பாதிப்புதான் என்கிறார்கள்.

கனவுகளைப் பற்றி பத்து தகவல்களை பார்ப்போம் –

1. பெரும்பாலான கனவுகள் மனிதன் கண் விழித்து ஐந்தே நிமிடங்களுக்குள் மறந்துவிடுகிறது. சில சமயங்களில் பத்து.
2. கனவில் பார்க்கும் முகங்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கனவே பார்த்தவை தான். அது எப்போதோ உங்களுடன் ஒரேயொரு முறை லிஃப்டில் வந்த அந்நியராகக் கூட இருக்கலாம்.
3. சிலருக்கு தங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் சம்பவங்கள் கனவில் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அல்லது சம்பவங்கள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்தது போன்ற தேஜாவு தோன்றலாம்.
4. பயிற்சிகள் மூலம் உங்கள் கனவுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். ஏற்கனவே கண்ட கனவை விட்ட இடத்திலிருந்து தொடரலாம். இதற்கு லூஸிட் ட்ரீமிங் என்று பெயர்.
5. கனவில் உங்களால் படிக்கவோ, டைம் பார்க்கவோ முடியாது. அடுத்தமுறை கனவு வந்தால் நேரம் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
6. கனவில் நிறங்கள் வராது என்பது தவறு. வெறும் 12 சதவிகித மனிதர்கள் மட்டுமே கருப்பு – வெள்ளையில் கனவு காண்கிறார்கள்.
7. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஏறத்தாழ ஆறு மணிநேரங்கள் கனவு காண்பதில் செலவிடப்படுகிறது.
8. சில சமயம் தூங்கி எழுந்ததும் கொஞ்ச நேரத்திற்கு கை, கால்களை அசைக்க முடியாமல், பேச முடியாமல் இருக்கலாம். பயப்பட வேண்டாம். இது நார்மல் தான்.
9. பருவ வயதில் சொப்பன ஸ்கலிதம் ஏற்படுவது இயற்கைதான். அதற்காக சேலம் டாக்டரைப் பார்க்கத் தேவையில்லை.
10. Dimethyltryptamine என்னும் ஆங்கில மருந்து கிடைத்தால் உடனடியாக எனக்கு கூரியர் அனுப்புங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment