31 March 2013

சென்னையில் ஒரு நாள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சென்னையில் ஒரு நாள் - படம் பார்க்கும் ஆவலை பெரிதாக ஏற்படுத்தவில்லை. நண்பர் ஒருவர் டிக்கெட் எடுத்துவிட்டு அழைத்ததால் சென்றேன். சிலசமயங்களில் எதிர்பார்ப்பின்றி பார்க்கும் படங்கள் அதிகம் பிடித்துவிடுகிறது.

சென்னையில் ஒரு இளைஞன் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைகிறான். அதேசமயம், வேலூரில் ஒரு சிறுமிக்கு உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். ஒன்றரை மணிநேரத்திற்குள் இதயத்தை கொண்டு செல்லவேண்டிய கட்டாயம். அது எப்படி சாத்தியமானது என்பதை மற்றும் சில கிளைக்கதைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.


மலையாள ட்ராபிக்கின் மறுபதிப்பு என்பதால் படம் பார்க்கும்போது நியாயமாக நமக்கு ஏற்படவேண்டிய த்ரில் தவறிவிடுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை விட எப்படி நடக்க போகிறது என்ற எண்ணமே மேலிடுகிறது.


பல்முனை பயண திரைக்கதையில் கிட்டத்தட்ட மையப்புள்ளி சேரனுடைய வேடம் என்று நினைக்கிறேன். ஒரே அடியில் பத்து பேரை தூக்கி வீசவில்லை, ஆனால் அப்படியொரு ஹீரோயிசம் சேரனுடைய வேடத்தில். ஆனால் சேரனுடைய நடிப்பு ? திங்கட்கிழமை காலை அலுவலகம் செல்வது போலொரு முகபாவனை. சகல உணர்ச்சிகளுக்கும் அதே தான்.


பூ படத்தில் நடித்த கருவாச்சி பார்வதியா ? பளீரென இருக்கிறார். கதையின் போக்கு அவரை அழவைப்பது துயரம். பிரசன்னாவின் மனைவி வேடத்தில் சினேகாவே நடித்திருக்கலாமே என்று முதலில் தோன்றியது. ஏன் நடிக்கவில்லை என்று படம் பார்த்தபின் தெரிந்துக்கொண்டேன். வெள்ளித்திரை நட்சத்திரமாக பிரகாஷ்ராஜ். அவருடைய மனைவியாக ராதிகா. ராதிகாவின் வேடம் லலிதகுமாரியின் பிரதிபலிப்பாக இருக்கலாம். காவல்துறை அதிகாரியாக சரத்குமார். ஆட்டோகிராப் மல்லிகா, மனோ பாலா, ப்ளேடு தினா, கிருஷ்ணன் பஞ்சு என்று நிறைய நடிகர்களுடன் சில அறிமுகங்கள். யார்றா இவன் என்கிற மாடுலேஷனுடன் ஒரே ஒரு காட்சியில் பாலா சிங் ரசிக்க வைக்கிறார்.


ஒரு தாய் - தந்தை, தன்னுடைய மகனின் காதலியை முதன்முதலாக சந்திக்கும் தருணம் எத்தகைய உணர்வுப்பூர்வமானது. ஆனால் கதையின் சூழ்நிலைப்படி அது அதற்கு எதிர்மறையான தருணமாக அமைந்துவிடுகிறது. அந்த உணர்வை ஜேபியும், லக்ஷ்மி ராமகிருஷ்ணாவும் கண்களில் காட்டிய விதம் அபாரமான நடிப்பு. அடுத்த காட்சியில் காருக்குள் அமர்ந்து மகனுடைய மரணத்தை நினைத்து உடைந்து கதறுவது நடிப்பை கடந்தநிலை. ஒட்டுமொத்த படத்தில் சிறந்த நடிப்பு ஜே.பி லக்ஷ்மி ஜோடியுடையது.


படத்தின் மொத்தக்கதையையும் இருபது நிமிட குறும்படத்தில் சொல்லிவிடக்கூடியது தான். அதை இரண்டு மணிநேர சித்திரமாக சொல்லியிருப்பது முதல் பாதியில் பல இடங்களில் சலிப்பூட்டுகிறது. தவிர, பல காட்சிகளில் செயற்கைத்தனம் இழையோடுகிறது. மிஷன் இஸ் ஆன் என்று சரத்குமார் சொன்னதும் காவல்துறையினர் வெற்றிக்குறி போட்டுக்கொள்வதெல்லாம் டூ மச். ஜிந்தா காலனிஎபிசோடு முழுவதும் உச்சக்கட்ட சினிமாத்தனம். மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்; ராதிகா அவரது கணவரின் பொறுப்பற்ற தன்மையை அழுத்தம் திருத்தமாக கடிந்துக்கொள்கிறார்; அழுது அரற்றியிருக்க வேண்டாமா ?


படத்தின் இறுதியில் இனியா - பிரசன்னா ஜோடியின் மனமுடிவை சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொள்கிறார்கள் என்பது வரைக்கும் மட்டுமே புரிகிறது. இனியாவும் பிரசன்னாவின் நண்பரும் சேர்ந்து பிரசன்னாவிற்கு சின்ன ஷாக் கொடுப்பதற்காக விளையாடினார்கள்; அதை புரிந்துக்கொள்ளாமல் பிரசன்னா அவரசப்பட்டுவிட்டார் என்று வைத்திருந்தால் பெண்மைக்கு பொடலங்காய் கூட்டு வைத்து பெருமை சேர்த்திருக்கலாம். போலவே, பிரகாஷ்ராஜ் அவருடைய மனைவி, மகளை புரிந்துக்கொண்டாரா ? சேரனுக்கு மீடியாவின் கவனத்தை தாண்டி வேறென்ன பெருமைகள் கிடைத்தன ? முதலில் மகனின் இதயத்தை தர மறுத்த ஜேபி - லக்ஷ்மி தம்பதி இன்னொரு உயிர் காப்பாற்ற பட்டதை நினைத்து எப்படி உணர்ந்தார்கள் ? என்று பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அவசர அவசரமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.


திரையரங்கை விட்டு வெளியே வந்தபிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ நல்ல படமாகவே தோன்றுகிறது. பெண் வாகன ஓட்டிகளுக்கு தரவேண்டிய மரியாதை, தன்னுடைய மகன் தன் உதவியின்றி தானே காலூன்றி எழ விரும்பும் தந்தையின் மனப்பான்மை, தன்னுடைய தவறை உணர்ந்து கலங்கும் போக்குவரத்து காவலாளி, புகழ் போதையில் மயங்கிக்கிடக்கும் நடிகர், எந்த ஒரு செயலையும் முடியும் என்று நினைக்கவேண்டிய தன்னம்பிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய மகன் உயிரைப் போல இன்னொரு பெற்றோருக்கு அவர்களுடைய மகள் உயிர் எவ்வளவு முக்கியம் என்கிற புரிந்துக்கொள்ளுணர்வுடன் கூடிய தியாகம் என்று படம் முழுக்க நெகிழ்ச்சிகளின் குவியலாகவும், கலியுக மனிதர்களுக்கு பாடமெடுக்கும் வகுப்பறையாகவும் விளங்குகிறது. பொழுதுபோக்கு படம் என்கிற வகையில் அந்த தரப்பினரையும் திருப்திப்படுத்திவிடுகிறது. இருப்பினும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று உரிமையுடன் கூடிய ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 March 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படக்குழுவினர் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் விளம்பர வடிவமைப்பாளருக்கு தான் சொல்ல வேண்டும். பளீரென்று பல்லிளித்து நம்மை திரையரங்கிற்கு வரவேற்கின்றன. அப்புறம் ரெஜினா. சிவா மனசுல சக்தி தெலுங்கு பதிப்பில் நடித்தவர். தமிழிலும் கண்டநாள் முதல் படத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய அழகு அப்படியே என்னை அலேக்காக ஆம்னி வேனுக்குள் தூக்கிப்போட்டு ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது.

இரண்டு இணை பிரியா நண்பர்கள். வழக்கம்போல தறுதலைகள். உருப்புட்டார்களா என்பதே படத்தின் உருப்படியான கதை.

எல்லா வணிக திரைப்படங்களையும் போல குடிகார நண்பர்கள், கரித்துக்கொட்டும் அப்பா பரிந்துபேசும் அம்மா அல்லது வைஸ் வெர்ஸா, அரைலூஸு கதாநாயகிகள், முழுலூஸு கதாநாயகி அப்பாக்கள் என்று படம் நெடுக நிறைந்திருந்தாலும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா என்கிற காற்று பிரியும் சத்தத்தை நம்மிடமிருந்து வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள். போலவே, நாயகர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரிந்து உச்சக்கட்ட காட்சியில் ஒன்றுசேருவார்கள், யாருமே எதிர்பாரா வண்ணம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்கிற எண்ணத்திற்கெல்லாம் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். 

இரண்டு கதாநாயகர்கள் இருப்பினும் சிவ கார்த்திகேயன்தான் மனதில் நிற்கிறார். மெரினா படத்தில் அய் பஞ்ச்சு என்பாரே, அதே மாடுலேஷன் அதே உடல்மொழி. அவருடைய ஹியூமர் சென்ஸ் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சி.காவுக்கு எழுதிய அதே வரிகள் தான் விமலுக்கும். அவருடைய மாடுலேஷன், உடல்மொழி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. எதிர்மறையாக புரிந்துக்கொள்ளவும்.

பிந்து மாதவியை பற்றி இரண்டொரு பத்திகள் வர்ணித்து எழுதியிருக்கலாம், ரெஜினா இல்லாமலிருந்தால். எழுதினாலும் “உங்களை கம்பேர் பண்ண சொன்னேனா” என்று ரெஜி கோபித்துக் கொள்ளக்கூடும். சுடச்சுட சில துளிகள் தூறினால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் ரெஜினா ! அந்த ஆரஞ்சு சுளை உதட்டிற்காகவே பக்கத்து வீட்டுக்காரரின் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்துவிடலாம். ரெஜிக்கு ஒரு கவர்ச்சிப்பாடல் கூட வைக்காததால் இதற்கு மேலே எதுவும் சொல்ல முடியவில்லை.

பிந்து மாதவியை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ‘மொக்கமூஞ்சி’. மாவு மாதிரி இருக்கிறார். வேண்டுமென்றால் நகைச்சுவை நடிகையாக வட்டமிடலாம்.

பளிச்சென சிவகார்த்திகேயன் - ரெஜினா. ஃபியூஸ் போனது போல விமல் - பிந்து. குட் காம்பினேஷன். 

துணை நடிகர்கள் தங்கள் பங்கிற்கு அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள். பட்டை முருகனின் தாயாரும், டெல்லி கணேஷும் க்ளாஸான நடிப்பு. டெல்லி கணேஷின் கலாசலா டான்ஸ் ரசிக்க வைக்கிறது. சூரி, அவருடைய மாமனார் ஆகியோரும் சிறப்பு.

இந்த படத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரியாத இரண்டு விஷயங்கள். ஒன்று, இசை யுவன். டைட்டிலில் போடாவிட்டால் கடைசி வரை தெரிந்திருக்காது. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பிற்கு முன்னே என்ற நா.முத்துக்குமாரின் வரிகளுக்காக அந்த இசை பிடித்திருக்கிறது. இரண்டு, இயக்கம் பாண்டிராஜ். நகைச்சுவையை மட்டும் அடித்தளமாக வைத்துக்கொண்டு வெவ்வேறு கருவில் படம் எடுக்கிறார். கே.பி.கி.ர.வை பொறுத்தவரையில் நகைச்சுவை மட்டத்தை உயர்த்திவிட்டு கடைசியாக கொஞ்சமாக கருத்து சொல்லியிருக்கிறார். ஃபினிஷிங் டச் நேரடியாக நம்முடைய மனதை டச் செய்தாலும் கூட, அந்த ரயிலடி மரணத்தை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கலகலவென சிரித்துக்கொண்டிருந்த திரையரங்கம் இரண்டே நிமிடத்தில் வாத்தியார் நுழைந்த வகுப்பறை போலாகிவிட்டது.

முழுநீள நகைச்சுவை, இறுதியில் செண்டிமெண்ட் வகையறா படங்களில் பெரும்பாலும் வேறு வழியே இல்லாமல் கதாநாயகன் ஓரிரவில் / ஒரு பாடலில் வாழ்க்கையை வென்றேடுப்பதாக காட்டி நிறைவு செய்வார்கள். அதிலும் நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தான் இருக்கும். (எ.கா: சகுனி தேர்தல் வெற்றி, பாஸ் என்கிற பாஸ்கரன் டுடோரியல் காலேஜ்) இந்தப்படத்திலும் அதுவே தொடர்ந்திருக்கிறது. ஒயின்ஷாப்பில் புட்டி பொறுக்கும் காண்டிராக்ட்டை ஒரே நிமிடத்தில் ஒயின்ஷாப் ஓனரிடம் பேசி வாங்கிவிடுகிறார் நாயகன்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா அடிக்கடி  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் ஒன்பதுல குரு. பொழுதுபோக்கு சினிமா விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 March 2013

பரதேசி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இனி இயக்குனர் பாலா படங்களை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தவர்களில் நானும் ஒருவன். விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு தான் என்னை திரையரங்கிற்கு நகர்த்திச் சென்றது. எப்போதுமே ஒரு படத்தை வெளிவந்ததும் சுடச்சுட பார்ப்பதற்கும், நான்கைந்து நாட்கள் ஆறப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சஸ்பென்ஸோடு படம் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கம், விமர்சனங்களை படித்துவிட்டு பார்க்கும்போது கிடைப்பதில்லை.

பரதேசியைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துவிட்டன. புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் Grotesque என்கிற படத்தை பார்த்தேன். திரைப்பட வரலாற்றில் அதீத வன்முறை கொண்ட பத்து திரைப்படங்களை பட்டியலிட்டால் Grotesque கண்டிப்பாக இடம்பெறும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அது பிடித்ததா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கடுமையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த படம் என்னை அடிக்கடி மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. உங்கள் முகத்தில் தொடர்ந்து கரியை பூசிக்கொண்டே இருக்கும் இருபெரும் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்தாலே உங்களுக்கு காறி உமிழ தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். எனினும் உங்களுடைய கோபம் அவரை துளியளவு கூட பாதிக்கப்போவதில்லை. போன்ற சமயங்களில் Grotesque படத்தில் துன்புறுத்தப்படும் மனிதர்களாக அந்த இருபெரும் அரசியல்வாதிகளை நினைத்துக்கொண்டால் ஒருவித மனநிம்மதி கிடைப்பதை உணருவீர்கள். வன்முறை, செக்ஸ் என்று நம்முடைய உணர்ச்சிகளுக்கு கட்டாயம் ஒரு வடிகால் தேவை. இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும். Noctural emission கேள்விப்பட்டதில்லையா ? அதுபோல பாலாவுடைய ஆழ்மன வன்முறை உணர்வுகளுக்கு அவருடைய படங்கள் வடிகாலாக இருக்கலாம்.

கார்த்திக்கு ஒரு பருத்தி வீரன் கிடைத்தது போல, அதர்வாவிற்கு பரதேசி கிடைத்திருக்கிறது. முதல் படமாக கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதர்வாவின் நடிப்பு ஒன்றும் உறுத்தலாக இல்லையென்றாலும், சாலூர் ராசா என்கிற அந்த வேடத்தில் கச்சிதமாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் அதர்வாவை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வேதிகாவும், தன்ஷிகாவும் நாயகிகள். தன்னுடைய பட நாயகிகளை அவலட்சணமாக காட்சிப்படுத்த முனையும் திருவாளர் பாலாவிற்கு இந்தமுறை தோல்வியே கிடைத்திருக்கிறது. குறிப்பாக தன்ஷிகா, ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார். 

கவிஞர் விக்கிரமாதித்யனும், அதர்வாவின் பாட்டியும் மனதைவிட்டு அகல மறுக்கின்றனர். கிராமத்தில் வசிப்பவர்கள், நிச்சயமாக விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் போன்ற ஒருவரையாவது தங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பார்கள். 

ஆமாம், பரதேசியில் பவர்ஸ்டார் நடிப்பதாக இருந்ததே. இப்படிப்பட்ட கதைக்கு எப்படி பவர் பொருந்துவார் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் வருகிற மருத்துவர் பரிசுத்தம் - அதுதான் பவருக்கு ஒதுக்கப்பட்ட வேடம். இப்போது நடன இயக்குனர் சிவசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அந்த வேடத்தில் மட்டும் பவர் ஸ்டார் நடித்திருந்தால், பரதேசி பஞ்சராகியிருக்கும்.

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன. மற்றபடி இசையைக் காட்டிலும் கேமரா அதிக கவன ஈர்ப்பு செய்கிறது. முதல்காட்சியில் சாலூர் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வதிலிருந்தே கேமராவின் ஆளுமை துவங்கிவிடுகிறது. 

வழக்கமாக பாலா படங்களில் காணப்படும் சில விஷயங்கள் பரதேசியில் இல்லாதது அதிர்ச்சியான ஆறுதல். போலீஸ், நீதிபதிகளை கிண்டலடிக்கவில்லை; திருநங்கை அல்லது போன்ற கதாபாத்திரங்கள் இல்லை; உச்சக்கட்ட காட்சியில் நாயகன் பொங்கி எழுந்து வன்முறையில் இறங்கவில்லை. இப்படி நிறைய இல்லைகள்.

பரதேசியிலிருந்து இருவேறு தரப்பினரும் புரிந்துக்கொள்ள விஷயங்கள் இருக்கிறது. நமக்கு கீழே பணிபுரிபவர்களை அன்பாக நடத்தவேண்டும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேல்மட்டத்திற்கு நேர்மையான உழைப்பை தரவேண்டும். அதையெல்லாம் விட முக்கியமாக சுதந்திரத்தின் மேன்மையை சமகால இளைஞர்களுக்கு உணர்த்தியிருக்கிறது பரதேசி.

நமக்கு ஃபீலிங் படமெல்லாம் பிடிக்காது என்பவர்களுக்காக சொல்கிறேன் - பரதேசி ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நல்ல நிறுவனத்தில் வேலை செய்து, கைநிறைய ஊதியம் வாங்கினாலும் கூட என்ன வாழ்க்கைடா இது ? என்கிற ரீதியில் புலம்புபவர்கள் பரதேசியை பாருங்கள். உங்களுடைய நிலையை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள பழகிவிடுவீர்கள்...!

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

தொடர்புடைய சுட்டி: Grotesque

அடுத்து வருவது: அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 March 2013

பிரபா ஒயின்ஷாப் -18032013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில், அல்லது பொதுவாகவே வட சென்னை வழித்தடங்களில் செய்யும் பப்ளிக் நியுசன்ஸை பார்க்கும்போதெல்லாம் வெறுப்பாக இருக்கும். மாஸ் ஹீரோக்களின் படங்களில் வருவது போல யாராவது வந்து நாலு சாத்து சாத்த மாட்டார்களா என்று தோன்றும். உண்மையில் அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, முனைந்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அப்படி யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றல் வீணாக போகிறதே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அது வீணாகவில்லை என்று சமீபத்திய நிகழ்வுகள் சொல்கின்றன. அந்த மாணவர்களை தலை வணங்குகிறேன் !

என்னுடைய மாணவப் பருவத்தில் மொக்கையான ஃபிகர்களை ஏற்றிவிட்டதை தவிர வேறு எதாவது உருப்படியாக செய்திருக்கிறேனா என்று யோசித்துப்பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த சமயம், இறுதியாண்டு மாணவனை மூன்றாம் ஆண்டு மாணவன் கத்தியால் குத்திவிட்டான். இருவரும் பொறுக்கிகள் தான். ஏதோ பெண்கள் சமாச்சாரம். கத்திக்குத்து வாங்கியவன் செங்கல்பட்டு மருத்துவமனையில். குத்தியவனை வெளியே விட்டால் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று பாதுகாப்பாக வைத்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இயல்பிலேயே எங்களுடைய வகுப்பு மட்டும் மிகவும் கண்டிப்பானது என்பதால் நாங்கள் மட்டும் வகுப்பறைகளில் அமர்ந்துக்கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென, எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்த மற்றொரு வகுப்பை சேர்ந்த மாணவன், “த்தா... நீங்கள்லாம் உள்ளேயே இருந்து கிளாஸை கவனிங்கடா பொட்டைங்களா...” என்று ஷங்கர் பட பொதுஜனம் மாதிரி கத்திவிட்டு போனான். அப்போது வந்ததே என் சகாக்களுக்கு ரோஷம். எல்லோருமாக சேர்ந்து வகுப்பறையை விட்டு வெளியேறினோம். அப்புறம் எல்லோருமா சேர்ந்து கம்பியூட்டர் லேபை அடித்து நொறுக்கியது, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை கொடுத்து எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பியது, டாடா சுமோவில் அடியாட்கள் துரத்தியது எல்லாம் வரலாறு. த்தூ...! ஆனால் அன்றைக்கு எல்லோருடன் சேர்ந்து நானும் வகுப்பறையை விட்டு வெளியே வந்திருக்கக்கூடாது. அட் லாஸ்ட் நானும் அந்த பொறுக்கி, பன்னாடை கூட்டத்தில் ஒருவன்தான் என்பதை மிகுந்த அவமானத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.இந்த வார மொக்கைக்கு ஆச்சு'ன்னு தான் கருட பார்வை படம் பார்க்க போனேன். அருமையான கதைக்கரு. தேசிய நெடுஞ்சாலையில் ‘சாலை விடுதி' என்ற லாட்ஜ் அமைந்திருக்கிறது. ஒரு பெருமழையிரவிற்காக சிலர் அங்கே தங்கிட நேருகிறது. மொத்தம் பதிமூன்று பேர். ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். சிறுவன் உட்பட சிலருடைய சடலங்களும் காணாமல் போகின்றன. எஞ்சியவர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுகின்றனர். கடைசியாக சமூக சேவகி மட்டும் ஒரு காரில் தப்பிக்கிறார். போலீஸ் விசாரணை துவங்குகிறது; பதினோரு சடலங்கள் கிடைக்கின்றன. சிறுவன் உயிரோடு இருக்கிறான்; சமூக சேவகியை கொல்வதற்காக அவளுடைய வீட்டுக்கு செல்கிறான். கொன்றானா ? எதற்காக எல்லோரையும் கொல்கிறான் ? என்பதைச் சொல்லி இரண்டாம் பாகத்திற்கு வழியமைத்து விட்டு படத்தை முடிக்கிறார். சூப்பர் படம் என்று சொல்ல முடியாது. லோ-பட்ஜெட் படங்களுக்கென்றே உரித்தான மொக்கையான நடிகர்கள், காட்சியமைப்புகள் என்று நிறைய குறைகள் இருக்கின்றன. பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியில் எல்லாப் பிணங்களின் கண் இமைகளிலும் அசைவு தெரிகிறது. எனினும் மற்ற லோ-பட்ஜெட் குப்பைகளோடு ஒப்பிடும்போது ஓகே ரகம்.

பழைய ஆனால் சூடான செய்தி. சதீஷ் நாராயணன்’னு நம்மாளு ஒருத்தரு. ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்தவர். அவருடைய மனைவியின் பெயர் ரஜினி (பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல !). ரஜினிக்கு கணவர் மீது சந்தேகம். கணவர் தனக்கு சொந்தமான பொருளை மற்றவருக்காக உபயோகித்து விடக்கூடாது என்றெண்ணிய ரஜினி, வாழைப்பழத்தில் தீ வைத்துவிட்டார். விளைவு - வாழை தோப்பே எரிஞ்சுடுத்து ! இருபது நாட்கள் உயிருக்கு போராடிய சதீஷ், உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது அது மட்டும்தான் எரியும்'ன்னு நெனச்சேன் என்று அப்பாவியாக பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி.

இந்த சம்பவத்தை கேள்விப்படும்போது எனக்கு ஒரு பாரதியார் கவிதை நினைவுக்கு வருகிறது,அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் !
வெந்து தணிந்தது காடு- தழல்
மூப்பினில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

அப்புறம் நடந்ததுதான் டுவிஸ்ட். இரண்டு ஆண்டுகள் கழித்து, வழக்கு அது பாட்டுக்கு ஒரு பாதையில் போய் கடைசியில் சதீஷ் இருபது வருடங்களாக மனைவியை டார்ச்சர் (தினத்தந்தி பாஷையில் செக்ஸ் கொடுமை) செய்தார். அதன் விளைவாக தான் மனைவி தீ மூட்டினார் என்று கேஸ் முடிக்கப்பட்டு, ரஜினி ரிலீஸ் ஆகிவிட்டார்.

கற்றது தமிழ் வணிகரீதியாக தோற்றதால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ராம் மீண்டு(ம்) வந்திருக்கிறார். என்னதான் பீட்டர் விட்டாலும் ராம் மற்றும் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் கெளதம் மேனனை பாராட்டியே ஆகவேண்டும்.மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று...!

அடுத்து வருவது: பரதேசி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 March 2013

அந்தமான் - ஜாலிபாய்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெயருக்கேற்ற தீவு. ஜாலிபாய் டிசம்பரில் துவங்கி மே மாதம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு ரெட் ஸ்கின் என்ற இன்னொரு தீவு திறக்கப்படும்.இரண்டும் ஒரே மாதிரியான தீவுகள். எனவே நீங்கள் செல்லும்போது எந்த தீவு வரவேற்பு கம்பளம் விரிக்கிறதோ, அங்கே சென்றிடுங்கள். ஜாலிபாய் செல்வதற்கு அந்தமான் நிர்வாகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் ஒப்படைத்து விடுவது நல்லது. அனுமதியும் டிக்கெட் கட்டணமும் சேர்த்து 700ரூ. போர்ட் ப்ளேரிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள வண்டூரிலிருந்து தான் படகுகள் புறப்படும். அதுவரை அழைத்துச் செல்ல / மறுபடி கொண்டுவந்து விட நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து செலவு வேறுபடும். மிக முக்கியமாக, ஜாலிபாய்க்கு செல்லும்போது டவல், மாற்றுத்துணி எடுத்துச் சென்றே ஆகவேண்டும். அது தேவைப்படாது என்று நினைப்பவர்கள் ஜாலிபாயை தவிர்த்துவிடலாம். தேவைப்படுமென்றால் கேமரா எடுத்துக்கொள்ளவும். தேவைகேற்ப உற்சாக பானம் அவசியம்.


கழுகுப்பார்வையில் ஜாலிபாய்
தீவுக்குள் பிளாஸ்டிக் குப்பைகள் போட தடை உள்ளது. எனவே, முடிந்தவரையில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கவும். தண்ணீர், உ.பா காரணமாக வாட்டர் பாட்டிலை தவிர்க்க முடியாது; கவலையில்லை, நீங்கள் உள்ளே செல்லும்போது எத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்துச் செல்கிறீர்கள் என்று டோக்கன் போட்டுக்கொள்ள வேண்டும். திரும்பி வரும்போது அதே எண்ணிக்கை பாட்டில்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தீவிற்குள் ப்ளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது என்பதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி அங்கே குப்பை கொட்டுவது மிகவும் எளிது; எனினும் சுயக்கட்டுப்பாடு அவசியம்.

காலை ஏழு மணிக்கு டிபன் அடித்துவிட்டு, மதியத்திற்கு பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினால், எட்டு, எட்டரைக்கு வண்டூர் மரைன் பூங்காவை சென்றடைந்து அங்குள்ள சிறிய மியூசியத்தை சுற்றிப் பார்த்துவிடலாம். காலை ஒன்பது மணி தாண்டியதும் ஓடங்கள் ஒவ்வொன்றாக புறப்படும். சுமார் ஒன்றரை மணிநேர பயணம். ஜாலிபாய் பவழப்பாறைகளால் சூழப்பட்ட தீவு. படகுத்துறை கட்டும்போது அவற்றை அழிக்க வேண்டி வரும் என்பதால் படகுத்துறை இல்லை. எனவே, ஓடங்கள் சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து கண்ணாடி அடிப்புறம் கொண்ட படகுகள் நம்மை தீவிற்கு கொண்டு செல்லும். படகின் அடிப்புறத்தின் வழியாக பவழப்பாறைகளை பார்க்கலாம்.


கண்ணாடி படகினூடே
ஜாலிபாய் - அந்த தீவில் கால் பதித்ததும் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, குறைந்தபட்ச ஆடையைத் தவிர மற்றவை துறந்து கடலில் குதிப்பது. வட இந்திய குலோப் ஜாமூன்களும், ரசகுல்லாக்களும் கடலில் மிதக்கக்கூடும். நான் முன்பே சொன்னது போல சுயக்கட்டுப்பாடு அவசியம். ஒரு பத்து நிமிடங்கள் கடலோடு அளவளாவி விட்டு, ஒரு கட்டிங் அடித்துக்கொள்வது உடலிற்கு உகந்தது. 

ஸ்னார்கலிங் - எளிய புரிதலுக்கும் இளைப்பாறுதலுக்கும்

படகிலிருந்து இறங்கும்போது உங்களுக்கு ஒரு டோக்கன் கொடுத்திருப்பார்கள். இலவச ஸ்னார்கலிங்கிற்கான டோக்கன். போட்டி அதிகமாக இருக்கும், எனவே உங்கள் படகிற்கான ஸ்னார்கலிங் கைடு யாரென்று கண்டுபிடித்து ஒட்டிக்கொள்ளவும். இங்குதான் ஸ்வாரஸ்யம் ஆரம்பம்; நீருக்குள் பார்ப்பதற்கான கண்ணாடியும், சுவாசக்குழாயும் தரப்படும். வாய் வழியாக மட்டுமே சுவாசிக்க முடியும். சுவாசக்குழாயின் மறுபகுதி நீர்நிலைக்கு மேலே இருக்கும். முதலிரண்டு நிமிடங்கள் சிரமமாக இருக்கும்; அப்புறம் பழகிவிடும். பயப்பட வேண்டாம். லைப் ஜாக்கெட் அல்லது ரப்பர் டியூப் வழங்கப்படும். எனவே நீர்மட்டத்திலேயே மிதப்பீர்களே தவிர மூழ்கிவிட வாய்ப்பில்லை. மேலும் கைடு உங்கள் கையைப் பிடித்தபடி நீந்தி வருவார்.


கடல் மீன்களோடு சேர்ந்து நீந்துகிற உணர்வு. கைடு மீன்களின் பெயர்களை சொல்லி ஹிந்தியில் ஏதாவது விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பார். அவரோடு பேச முயற்சிக்க வேண்டாம்; முயன்றால் சுவாசிப்பதில் கவனம் குறைந்துவிடும். கொஞ்ச தூரம் நீந்திய பிறகு உங்கள் இலவச ட்ரிப் முடிந்துவிட்டது. இன்னும் தூரம் செல்ல வேண்டுமென்றால் தூரத்திற்கேற்ப 300/400/500ரூ செலவாகும் என்றார். நான் 300ரூ தர சம்மதித்தேன். ஆழம் சற்று அதிகமானது. பெரிய பெரிய மீன்களும் பவழப்பாறைகளும் தென்பட ஆரம்பித்தன. இப்போது கைடை அழைத்தேன். 500ரூ தருகிறேன், முடிந்தவரை ஆழத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.

கடல் வெள்ளரி
மறுபடியும் மீன்களோடு சேர்ந்து நீந்தத் துவங்கினேன். பவழப்பாறைகள் மீது கால் படாதபடி பார்த்துக்கொள்ள வலியுறுத்தினான். அப்படி கால் வைப்பது அவற்றிற்கும், சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தான். தீடீரென ஒரு ஸ்டார் ஃபிஷ்ஷை கையில் எடுத்து விளக்கம் கொடுத்தான். அடுத்த நொடி, அதை என் கையில் திணித்து விட்டான். இதுவரைக்கும் புத்தகத்திலும் மியூசியங்களிலும் மட்டுமே பார்த்த ஸ்டார் ஃபிஷ் இப்போது என்னுடைய கைகளில்; பரவசமான நிமிடம் அது. கொஞ்ச தூரம் சென்றதும் பெரிய சைஸ் அட்டைப்பூச்சி மாதிரி ஏதோவொன்று கடல் பரப்பில் கிடந்தது. அதையும் கையில் கொடுத்தான். ஸ்டார் ஃபிஷ் கல்லு போல திடமாக இருந்தது, இப்போது கொடுத்திருப்பது வழவழப்பாக இருக்கிறது. பெயர் ஸீ குகும்பர். தமிழாக்கினால் கடல் வெள்ளரிக்காய். அந்த சில நிமிடங்கள், கடவுளைக் கண்ட பரவசத்தோடு கரைக்கு திரும்பினேன்.

நான் - கட்டிங் - கடல்: த்ரீஸம் உல்லாசம் அனுபவித்தோம். நினைவிருக்கட்டும், இங்கிருக்கும் கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைகள் தற்காலிக தென்னை ஓலைக்குடில்கள் மட்டுமே. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இருந்தாலும்கூட. ஆண்களைப் போல பெண்கள் சுலபமாக ஒத்துப்போக இயலாது. கட்டி வந்த மதிய உணவை முடித்துவிட்டு, கடலலை படாத மணல்பரப்பில் படுத்துக்கொண்டேன். முந்தய பத்தியில் குறிப்பிட்டதைப் போன்ற விளையாட்டுகளை விரும்பாத சா.சாதங்கள் கண்ணாடி படகுகளில் பயணித்து நேரத்தை செலவிடலாம்.


அதிகபட்சம் மூன்று மணிநேரங்கள். ஓடங்கள் திரும்பத் தயாராகும். ப்ளாஸ்டிக் பாட்டில்களை கீழே போடாமல் கவனமாக எடுத்து பைக்குள் திணித்துக்கொள்ளவும். திரும்ப வரும்போது நிச்சயம் அயர்ச்சியாக இருக்கும். ஓடத்தின் மேல்பகுதிக்கு சென்று மல்லாக்கப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் சொர்க்கம்...!

திரும்பி வந்தபிறகு நேரம் அனுமதித்தால், வண்டூர் பீச்சையும் பார்த்துவிட்டு வரலாம். அருகில் சில கடைகள் இருக்கிறது. சிப்பியில், மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. மரத்தால் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகளை அந்தமான் நினைவாக வாங்கிக்கொள்ளலாம். மாலை ஆறு மணிக்குள் மீண்டும் ஹோட்டல் அறைக்கு திரும்பிவிடலாம்.

அடுத்து வருவது: போர்ட் ப்ளேர் சிட்டி டூர்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 March 2013

வசந்த மாளிகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கர்ணன் படம் டிஜிட்டலில் வெளியாகி சரியாக ஓராண்டு பூர்த்தியாகவிருக்கிறது. இப்படியொரு தருணத்தில் வசந்த மாளிகையின் மறு வெளியீடு. கிட்டத்தட்ட அதே கொண்டாட்டம், அதே ஆரவாரம். சம்பவ இடம் மட்டும் சாந்தியிலிருந்து ஆல்பட்டிற்கு மாறியிருக்கிறது. ஏன் சாந்தியில் வெளியாகவில்லை ? சொந்த திரையரங்கிலேயே ஓட்டிக்கொண்டார்கள் என்று வரலாறு பழிக்கக்கூடும். சென்ற ஆண்டு வெளிவந்த டிஜிட்டல் கர்ணன் சாந்தியில் ஓடியது ஏழு வாரங்கள், சத்யம் திரையரங்கில் 152 நாட்கள்...! அதுதான் வரலாறு...!!


நான் திரையரங்கை சென்றடைந்தபோது சாலையெங்கும் பட்டாசுக் குப்பைகள் பரவிக்கிடந்து அங்கு ஏற்கனவே நடைபெற்ற உற்சவத்தை அறிவித்தன. விளம்பர பதாகைகள் ஆல்பட்டில் துவங்கி அருகிலிருந்த டாஸ்மாக்கையும் தாண்டி வியாபித்திருந்தன. வசந்த மாளிகை அவருடைய 159வது படம் என்ற புள்ளி விவரத்திற்கு ஒத்திசைந்து 159 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஒலிபெருக்கியில் அவருடைய படப்பாடல்கள் ஒலிக்க, ரசிகர்கள் உற்சாக மிகுதியுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கழுத்தில் ஏதோவொரு மூவர்ண துண்டுடன் தீப்பூசணி ஏந்திக்கொண்டிருக்கிறார். கர்ணன் பார்த்தபோது அவர்கள் குடித்திருப்பார்களோ என்று சந்தேகித்தேன். சர்வநிச்சயமாக அது மது போதையல்ல. அவர் மீது கொண்ட அன்பின் உணர்ச்சிக்குவியல். அவர்தான் சிவாஜி...!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு துருவங்களாக விளங்கிய நடிகர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். ஒருவர் திரைப்படங்களில் நல்லவராக மட்டுமே நடிப்பார், மற்றொருவர் கதைக்கு தகுந்தபடி நடிப்பார். ஒருவர் ஏழைப்பங்காளனாகவே பெரும்பான்மை படங்களில் நடிப்பார். மற்றொருவர் கோர்ட்டு சூட்டு போட்டும் நடிப்பார். முன்னவர் கோட்டு சூட்டு போட்டால் ஊரார் எள்ளி நகையாடுவர். பின்னவர் கோமணம் கட்டினால் கூட ரசிக்கப்படும். அதற்கேற்ப அவர்களுடைய ரசிகர்களும் வேறுபடுவார்கள். முன்னவருடைய ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடியவர்கள், பின்னவருடைய ரசிகர்கள் தர்க்கரீதியாக செயல்படுபவர்கள். ஆனால் அங்கே ஆல்பட் திரையரங்கில் அன்றைய தினத்தில் மட்டும் உணர்வுப்பூர்வமாக உருமாறியிருந்தார்கள் இதய வேந்தனின் ரசிகர்கள்.

ஒலிபெருக்கியில் மயக்கம் என்ன கசிந்திருக்கொண்டிருக்க, ஐம்பது அல்லது அறுபதைக் கடந்த பலரும் தன்னிலை மறந்து நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் தங்கள் அன்பிற்கினிய நாயகன் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பதாக உணர்கிறார்கள். அப்போது அங்கே விவேக் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் சாத்தப்பன் வருகிறார், ஏற்கனவே கர்ணனுக்கு வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து என்னடி ராக்கம்மா என்று ஒலிபெருக்கி அலற, சாத்தப்பனை கூட்டத்தில் நடனமாட இழுத்துவிட்டனர். அவரும் தன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்திவிட்டு போனார்.

மிகுந்த நெருக்கடிக்கிடையில் திரையரங்கிற்குள் நுழைய, உள்ளே சிம்மக்குரலோன். (அந்த வார்த்தையை பயன்படுத்தியமைக்கு சிவாஜி ரசிகர்கள் மன்னிக்க). காருக்குள் பிண்ணனி பாடகர் T.M.செளந்திரராஜன். அவர் காரை விட்டு இறங்கிய சமயம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சூழ்ந்து நின்று கைதட்டி வரவேற்றது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரிபியூட்...! எழுத்துக்காக சொல்லவில்லை, எண்பதை கடந்த TMS, 50ரூபாய் டிக்கெட் வரிசையில் ரசிகர்களுடன் அமர்ந்து முழுப்படத்தையும் பார்த்தார்.

வசந்த மாளிகையை பொறுத்தவரையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, முக்காலத்திற்கும். இப்போதும் கூட வசந்த மாளிகையின் எந்த பாடலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ரிமோட் கண்ட்ரோல் செயலிழந்துவிடுகிறது. தெய்வீகமான காதல் பாடல் என்று வரும்போது சூப்பர் ஸ்டாரே கூட மயக்கம் என்ன பாடலைத் தானே தெரிவு செய்தார். கோவில் திருவிழாக்களில் நடைபெறும் இசை கச்சேரிகளில் யாருக்காக பாடலை பாடியே தீரவேண்டுமென்ற எழுதப்படாத விதிமுறை இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் காலத்தால் அழியாத கொண்டாட்டப் பாடல். அந்தப்பாடலின் இறுதியில் நடிகர்திலகம், கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச்சக்கரம் சுத்துதடா...! அதில் நான் சக்கரவர்த்தியடா...!! என்று முடிக்கும்போது சிலிர்க்காத ரோமங்கள் உண்டா ?

டிஜிட்டல் ப்ரிண்ட், ஸ்டீரியோஸ்கோபிக் ரெஸ்டோரேஷன், லொட்டு, லொசுக்கெல்லாம் இருந்தாலென்ன, இல்லையென்றால் என்ன ? அவருடைய படங்களை பெருந்திரையில் பார்க்கக்கிடைப்பதே போதுமே !


இறுதியாக அறிந்துக்கொண்ட ஒரு தகவலோடு நிறைவு செய்கிறேன். வசந்தமாளிகை படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் திலகத்தின் தாயார் மறைந்துவிட்டார். இறுதிச் சடங்குகள் முடிந்து ஐந்தாம் நாள் வீட்டிலிருந்து நடிகர் திலகம், தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, ‘வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது, படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். மனம் அமைதியாகவாவது இருக்கும்' என்று கூறினார். அத்தனை சோகத்திலும் தயாரிப்பாளரின் நலன் கருதி, ஒத்துழைப்பை நல்கும் அவரின் உயர்ந்த குணத்தை எண்ணி வியந்த தயாரிப்பாளர், படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கினார். நடிகர்திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கமென்ன... இந்த மெளனமென்ன...’ பாடல் காட்சி. கவலையின் ரேகையே தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார். அதுதான் சிவாஜி...!

தொடர்புடைய சுட்டிகள்:
கர்ணன் – கொண்டாட்டத் துளிகள்
ஓ மானிட ஜாதியே!
வசந்த மாளிகை - ரசிகர்களின் கொண்டாட்டமும்... டிஜிட்டல் ஏமாற்றமும்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 March 2013

பிரபா ஒயின்ஷாப் - 11032013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா ? என்னுடைய தன்னம்பிக்கை மட்டம் குறைந்துக்கொண்டிருந்தது. படுக்கையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவினேன். ராஜூ முருகனின் வட்டியும் முதலும். அதை படிக்கக்கூடிய மனநிலை அப்போது இல்லை. வேறொரு சுஜாதா புத்தகத்தை எடுத்தேன். சுமார் இருபது பக்கங்கள் வரை படித்திருப்பேன். எனக்குள் ஒரு ஊக்க மருந்து ஊசி ஏற்றப்பட்ட உணர்வு. நல்லதோ, கெட்டதோ, மொக்கையோ மனதில் தோன்றுவதை எழுது என்று என்னை உந்தித்தள்ளுகிறது. அதனால் தான் அவர் வாத்தியார் என்றழைக்கப்படுகிறார் போல.


*****

சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரை, சுஜாதா பாமரர்களுக்கு மட்டுமே மேதை என்கிற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதாவது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விக்கிபீடியா போன்ற சோர்ஸில் இருந்து, நாட்கள், வாரங்கள், மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பதில் சொல்வாராம். ஹாய் மதனும் அப்படித்தானாம். மேலும் சுஜாதா பெருசா எதையும் சாதிக்கவில்லை. சாகித்திய அகாடமி வாங்கவில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று நிறைய புலம்பல்கள். அய்யா... மதன் எழுதிய வரலாற்று புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா ? அவையெல்லாம் விக்கிபீடியாவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதா ? சரி, சுஜாதாவும் மதனும் இணையத்திலிருந்து தான் சோர்ஸ் எடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் சோர்ஸ் இல்லாமல் எழுத முடியும் ? கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் ? நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.

கணையாழியில் சுஜாதா எழுதியது:
பிரபலமான எழுத்தாளர் நல்ல சிறுகதை எழுத முடியாது; அது காப்பியாக இருக்க வேண்டும்.பிரபல நடிகர் நன்றாக நடிக்க முடியாது; நடித்தால் அது மார்லன் பிராண்டோவைக் காப்பி அடித்தது. நண்பர் கமல்ஹாசன் ஒருமுறை, “நான் சின்ன தப்பு பண்ணாக்கூட ஏன் சார் அத்தனை க்ரிடிக்கலாக இருக்காங்க?” என்று கேட்டார். காரணம் கமல்ஹாசன் என்பது ஒரு எஷ்டாப்லிஷ்மென்ட். அதைச் சாடுவது நவீன மனிதனின் முக்கியமான பொழுதுபோக்கு.

பொதுவாக என்னை பேட்டி காண வருகிறவர்கள் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி ‘நீங்கள் இதுவரை சாதித்தது என்ன?’ ஒரே ஒரு ஆத்மிக்குத்தான் அதற்கு ‘நான் உன்னை பேட்டிக் காண வராம நீ என்னை பேட்டி காண வந்திருக்கிறாயே, அதான்யா சாதனை' என்று பதிலளித்தேன்.

சுஜாதாவை சாடும் பழமை பேசிகளுக்கான பதில் அது.


*****

அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமையல் போட்டி நடந்தது. கலந்துக்கொண்ட பன்னிரண்டு அணிகளில் இரண்டு மட்டுமே ஆண்கள் அணி. நியாயமாக பெண்களை அந்த போட்டியில் கலந்துக்கொள்ளவே அனுமதித்திருக்க கூடாது. ஆண்கள் மட்டும் சமைத்து அதை பெண்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ட்ரிபியூட். ஆனால் அதன் ‘பின்' விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் பெண்களையே சமைக்க விட்டுவிட்டார்கள். கேலிகள் ஒருபுறம், மகளிர் தினத்தன்று என்னுடைய நல்வாழ்வில் பங்காற்றிய மகளிரை எண்ணிப்பார்த்தேன். (i mean counting). என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.


*****

இதோ அதோ என்று ஒருவழியாக விஸ்வரூபம் ஆரோ 3Dயில் பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறக்கும்போது மட்டும் ஏதோ நம் தலைக்கு மேல் பறப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மற்றபடி சிறப்பாக எதுவுமில்லை அல்லது விஸ்வரூபம் அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ற படமில்லை. எப்படியோ பார்த்தாகிவிட்டது, இனி பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்காது. அதற்காக நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்யலாம். இன்னமும் ஆரோ 3Dயில் பார்த்தே தீருவேன் என்று செவ்வாய் இரவுகளில் தேவுடு காப்பவர்கள், C5, 6, 7 அல்லது C12, 13, 14 போன்ற இருக்கைகள் கிடைக்குமாறு பார்த்து முன்பதிவு செய்யுங்கள். ஏனெனில் பல கோணங்களில் இருந்தும் ஸ்பீக்கர்கள் மிக அருகாமையில் அங்குதான் உள்ளன.


*****

நேற்று என்னுடைய மாமனாரோடு ஆல்பட் திரையரங்கில் வசந்த மாளிகை ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி கண்டேன். கர்ணன் பார்த்தபோது அவருக்கு நான்தான் அவருடைய மருமகன் என்று தெரியாது. நான் என்னுடைய பர்ஸை பிரித்தபோது அதில் அவருடைய மகளின் புகைப்படத்தை பார்த்திருப்பாரோ என்று கொஞ்சம் பதறினேன். அப்போது பலே பாண்டியா நடிகர் திலகம் போல மாமா அவர்களே என்று பம்மிக்கொண்டிருந்தவன் இப்போது என்ன மாமா செளக்கியமா ? என்று பருத்திவீரன் கார்த்தி மாதிரி கெத்து காட்ட முடிகிறது. வசந்த மாளிகை பார்த்ததைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைத்தேன். அங்கே கண்ட எழுச்சியை சில வரிகளில் அடக்குவது சாத்தியமில்லை. அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

*****

ஹி ஹி ஹி... கேப்பி சிவராத்திரி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment