அன்புள்ள வலைப்பூவிற்கு,
கலவை இடுகை என்பது எழுதுவது நின்றுபோய் விடக்கூடாது என்பதற்காக
நானாகவே ஏற்படுத்திக்கொண்ட கமிட்மென்ட். எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் கூட
டைரி எழுதுவது போல எதையாவது பதிந்து வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அதையும்
மீறி கடந்த வாரம் எழுத முடியாத அளவிற்கு அலுவலகத்தில் ஆணி. ரிவெட் என்றுகூட சொல்லலாம்.
வாரத்துவக்கத்தில் இரண்டு நாட்கள் காலையிலிருந்து இரவு வரை பன்னிரண்டு மணிநேரம்
பணிபுரிய வேண்டிய சூழல். பன்னிரண்டு மணிநேரம் என்பதில் சிக்கல் இல்லை. போக வர பயண
நேரத்தையும் சேர்த்தால் பதினாறு மணிநேரம். ஆனால் இந்த இரண்டு நாட்களில், பீக்
அவர்ஸில் அலுவலகம் நோக்கி பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர
முடிந்தது. மூட்டு வலி, முதுகு வலி போன்ற சங்கடம் உள்ளவர்கள் அரசு பேருந்தில்
பயணம் செய்தால் பூரண குணமாகிவிடும். அவை இல்லாதவர்கள் பயணம் செய்தால் எல்லா
வலியும் வந்து சேர்ந்துவிடும். பேச்சிலர் ரூம்களில் இருக்கும் டூத்பேஸ்டை போல
பிதுக்கிவிடுகிறார்கள். கிண்டி சுரங்கப்பாதை அருகில் நடந்து செல்பவர்களிடையே கூட
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், சில கூறு கெட்ட குக்கர்கள்
முண்டியடிக்கும் நோக்கில் எதிரில் வருபவர்களுக்கான பாதையில் புகுந்து அட்ராசிட்டி
செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை ட்ராபிக் போலீஸ் மடக்கி லைசென்ஸ் இருக்கா ?
என்று கேள்வி கேட்கப்போகிற நாள் வந்தாலும் வரலாம்.
ஆரூரார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் முதலாவதாக
சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி வேட்டையை துவங்கினேன். ரேகா மணவயதை அடைந்த
ஆர்த்தோடாக்ஸ் குடும்பத்து பெண். மணமகன் தேடுதல் நடைபெறுகிறது. கை நிறைய சம்பளம்
வாங்கும், கெட்ட பழக்கங்களில்லாத என்று சொல்லப்படும் அர்ஜுனுக்கு மணமுடித்து
வைக்கப்படுகிறாள். அர்ஜுன் மேலைநாட்டு நாகரிகத்துடன் வாழ்பவன். அவனுக்கு
சீட்டாட்ட, சிகரெட், மது, மாது பழக்கங்கள் இருப்பது ஒவ்வொன்றாக ரேகாவுக்கு தெரிய
வருகிறது. அர்ஜுனின் நடத்தைகளால் நிம்மதியின்றி தவிக்கிறாள் ரேகா. இறுதியில்
விவாகரத்து என்னும் புரட்சிகரமான முடிவை எடுக்கிறாள். இருபது வருடங்களுக்கு முன்பு
எழுதிய கதை. அப்போதைய காலகட்டத்திற்கு விவாகரத்து என்பதே புரட்சியானதாக
இருந்திருக்கலாம். சமகாலத்தோடு ஒப்பிட்டால் ரேகாவின் விவாகரத்து முடிவை இயற்கையான
எதிரொலிப்பு என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். வேண்டுமானால் ரஞ்சனி செய்ததை
புரட்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்து படிக்க வேண்டிய லிஸ்டில் இருப்பவை :-
ஜே.கே, ஒரு நடுப்பகல் மரணம், கொலை அரங்கம், நிர்வாண நகரம். பரிசீலனைகள்
வரவேற்கப்படுகின்றன.
கலிபோர்னியாவில் புதியதாக ஒரு ரெஸ்டாரென்ட் துவங்கப்பட்டுள்ளது. சரி
அதற்கென்ன என்கிறீர்களா ? உணவகம் கழிவறையுடன் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது வெஸ்டர்ன் டாய்லெட் வடிவமைப்பில் இருக்கைகள், Golden Poop Rice, Smells
like Poop, Bloody Number Two போன்ற உணவுவகைகள். பதறாதீர்கள் உணவுவகைகளின் பெயர்
மட்டும்தான் இப்படி. உதாரணத்திற்கு Black Poop என்கிற பெயர் கொண்டது உண்மையில்
Chocolate Sundae என்ற சுவையான ஐஸ்க்ரீம் ! உணவுகளும் ஒரு மினியேச்சர் டாய்லெட்
பவுல் வடிவில் உள்ள ப்ளேட்டில் படைக்கப்படுகின்றன. தைவான், ஜப்பான் உட்பட
பன்னிரண்டு நாடுகளில் ஏற்கனவே பிரபலமான கழிவறை கான்செப்ட் தான் இப்போது அமெரிக்காவில்
என்ட்ரி அடித்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் வராதா என்று
அலுத்துக்கொள்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம். இங்கே சுகாதாரமற்ற முறையில்
செயல்படும் ஏராளமான உணவகங்கள் உள்ளன. அங்கு சாப்பிட்டால் கழிவறையில் அமர்ந்து
சாப்பிடுகிற உணர்வு தாராளமாக கிடைக்கும். புகைப்படங்கள்.
மூடர் கூடம் பார்க்கக் கிடைத்தது. அபவ் ஆவரேஜ் என்று சொல்லலாம். கதாபத்திரங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள், ஆங்காங்கே சிறுசிறு காட்சிகள்
என ரசிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த படத்தில் ஒரு பத்து வசனங்கள் க்ளாப்ஸ் அடிக்க
வைக்கிற ரகம். அவை தவிர நிறைய சலிப்பூட்டுகின்றன. எனினும் படத்தில் சிந்திக்க வைக்கிற விஷயங்கள் சில இருக்கின்றன, நேரமில்லை. ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்டது. இன்னும் நான்கே வருடங்களில் அட்டகாசமான ஹீரோயினாக வருவார் பாருங்கள். டவுன்லோட் செய்த வெர்ஷனில்
ஃபஸானா போர்ஷன் வரவில்லை.
வார இறுதியில் சுட்ட கதை படம் பார்த்தேன். நேரம் கிடைப்பின் தனி இடுகை
எழுதுகிறேன். ஆரம்பம் படத்திற்கு FDFS டிக்கெட் எடுத்தாயிற்று !
Hunt for Hint விளையாடிய அனுபவத்தை சொல்லியாக வேண்டும். முதல் ஆண்டு
அந்த பக்கமே போகவில்லை. இரண்டாம் ஆண்டு விவரம் தெரியாமல் மெதுவா விளையாடிக்கலாம்
என்று ரெஜிஸ்டர் மட்டும் செய்துவிட்டு சோம்பேறித்தனமாக இருந்துவிட்டேன். இந்த
ஆண்டு, தேதிக்காக காத்திருந்து விளையாடத் துவங்கினேன். சில லெவல்கள் கடந்தபின்பு தான்
புலி வாலை பிடித்துவிட்டதை உணர்ந்தேன். இரண்டு நாட்கள் கணினியை விட்டு எங்கேயும்
நகரவில்லை / நகர முடியவில்லை. அப்படி இப்படியென போராடி இருபது லெவல்களை
தாண்டியிருந்தபோது இரண்டு விஷயங்கள் நிகழ்ந்திருந்தன. ஒன்று, திங்கட்கிழமை
விடிந்து அலுவலகத்திற்கு அழைத்தது. இரண்டு, ஒரு கட்டத்திற்கு மேல் மூளை சரிவர வேலை
செய்யாமல் போனது. குடும்ப நலன் கருதி அத்துடன் விளையாட்டை நிறுத்திக்கொண்டு இனி
வரும் வருடங்களில் ஹண்ட் ஃபார் ஹிண்ட் விளையாடுவதாக இருந்தால் அலுவலகத்திற்கு
நான்கு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டு, தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டபடி
ஹாயாக விளையாட வேண்டும். HFHஐ தயார் செய்த குழுவினருக்கும், வெற்றி பெற்ற மூளைக்காரர்களுக்கும் வாழ்த்துகள் :)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|