21 September 2016

பாடிகாட் முனீஸ்வரன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சம்பவம் நடந்து சுமார் 25 வருடங்கள் ஆகியிருக்கும். அப்பொழுதெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் சைக்கிள் பயன்பாடு அதிகம். தொழிலாளிகள் தங்கள் வேலை நேரம் முடிந்தபிறகு ஒன்றாக சைக்கிளோட்டியபடி தத்தம் வீடுகளுக்கு திரும்புவார்கள். தொழிலாளர்கள் வீடு திரும்பும் வழியில் பாலமொன்று அமைந்திருந்தது. அந்தப் பாலம் அப்போது பேய்கள் உலவும் இடமாக கருதப்பட்டது. காரணம், பாலத்திற்கு கீழே அமைந்துள்ள சுடுகாடு. இரவில் சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்கள் உறங்காமல் பாலத்தின் மீது உலவுவதாக எல்லோரும் பரவலாக பேசிக்கொண்டனர். இரவில் தனியாக அப்பாலத்தை கடந்து செல்பவர்கள் தீயசக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு பல துன்பங்களுக்கு ஆளான கதைகள் உண்டு.

மாடசாமி, தினமும் அந்தப் பாலத்தை கடந்து வீடு திரும்பும் தொழிலாளிகளில் ஒருவர். ஒருநாள் அவருக்கு தொழிற்சாலையில் வேலைப்பளு அதிகமிருந்து நள்ளிரவு ஆகிவிட்டது. முதலில் அங்கேயே உறங்கிவிடலாம் என்றுதான் யோசித்திருக்கிறார். ஆனால் வீட்டில் தனியாக இருக்கும் அவருடைய மனைவியையும் குழந்தைகளையும் நினைத்து கிளம்பிவிட்டார்.

கும்மிருட்டு. மாடசாமி சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டிருக்கிறார். பாலத்தை நெருங்கிவிட்டார். ஆள் நடமாட்டமேதுமில்லை. சைக்கிள் பாலத்தின் மீது ஏறத்துவங்கியது. மற்றவர்களை ஒப்பிடும்போது மாடசாமி கொஞ்சம் தைரியமான ஆசாமி என்றாலும் அவரும் மனிதர்தானே. வீட்டிற்கு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை மட்டும் மனதில் நிறுத்தி, மூச்சிரைக்க சைக்கிளை மிதிக்கிறார். 

மனித மனம் ஒரு குரங்கு. ஒரு விஷயத்தை செய்யவே கூடாது என்று அதிக கவனம் எடுக்கும்போது தான் அந்த விஷயத்தை செய்வதில் மனித மனம் ஆர்வம் காட்டும். திரும்பிப் பார்க்கக் கூடாது என்று நினைத்தவருடைய கண்கள் சுடுகாட்டை நோக்கி பார்க்கின்றன. மயான அமைதி என்பார்களே, அதனை முதல்முறையாக உணர்கிறார். அவருடைய உடலில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. தன்னிலை உணர்ந்து மீண்டும் வேகமாக சைக்கிளை மிதிக்கத் துவங்குகிறார்.

பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்றபோது எதிர்பாராவிதமாக திடீரென சைக்கிள் நின்றுவிடுகிறது. செயின் எதுவும் கழன்றுவிட்டதா என்று குனிந்து பார்க்கிறார். அப்படி எதுவும் இல்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. யோசித்தபடி சைக்கிளை மிதிக்கிறார். சைக்கிள் நகர்கிறது. ஆனால் முன்பைப் போல எளிதாக அவரால் ஓட்டமுடியவில்லை. இத்தனைக்கும் இப்போது பாலத்தை விட்டு இறங்கிக்கொண்டிருக்கிறார். சைக்கிள் கேரியரில் ஒரு கனத்த உருவம் உட்கார்ந்திருப்பதாக அவரது உள்ளுணர்வு சொல்கிறது. போகப் போக கேரியரில் கனம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சைக்கிளை ஓட்டுவதற்கு தெம்பின்றி நின்றுவிடுகிறார். இப்போது பின்னாலிருந்து, “ம்ம்ம்ம்” என்றொரு உறுமல் ஒலி கேட்கிறது. அவருடைய பின்னங்கழுத்தில் ஒரு சூடான மூச்சுக்காற்று. மூச்சுக்காற்றும், உறுமலும் அவரை நிற்காமல் ஓட்டு என்று கட்டளையிடுவதைப் போல இருந்தது.

சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்க துணிவில்லாமல் ஓடத் துவங்குகிறார் மாடசாமி. ஏறத்தாழ பாலத்தை கடந்துவிட்டார். அப்போது ஏதோ ஒன்று அவருடைய காலை இடறிவிட நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார். அவ்வளவுதான். இனி தப்பிக்கவே முடியாது என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டவர் தனது குலதெய்வத்தை வேண்டிக்கொள்கிறார். எவ்வளவு நேரம் அப்படி விழுந்து கிடந்தார் என்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்த சுருட்டு வாசம் மூக்கைத் துளைத்தது. பயம் சற்று விலகி மெதுவாக எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே சாலையோரமாக ஒரு பெரியவர் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தார். மாடசாமி தன்னுடைய பயணத்தில் முதல்முறையாக இன்னொரு மனிதரை காண்கிறார். அந்த உணர்வே அவருக்கு தைரியமூட்ட பெரியவருக்கு அருகில் சென்றார். வாயிலிருந்து சுருட்டு புகை பரவ, பளீரென வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த முதியவர், “யாரப்பா நீ” என்று அதட்டும் தொனியில் கேட்டார்.

மாடசாமி, நடந்த விவரம் அனைத்தையும் கூறுகிறார். வண்டி எங்கே என்கிறார் பெரியவர். பாலத்தை நோக்கி கை காட்டுகிறார். என்னோடு வா என்று பாலத்திற்கு அழைக்கிறார் பெரியவர். தொழிலாளியோ பயத்தில் மறுக்கிறார். தைரியம் சொல்லி அழைத்துச் செல்கிறார் பெரியவர். பாலத்தில் சைக்கிள் அனாதையாக கிடக்கிறது. அங்கே வேறு யாரும் இருந்ததற்கான அடையாளமே இல்லை. இருவருமாக சைக்கிளை தள்ளிக்கொண்டு வருகிறார்கள். பாலத்தைக் கடந்து பின் அந்த சாலையின் எல்லை வரை வந்த முதியவர், “என் எல்லை முடிகிறது. வண்டியை வழியில் எங்கேயும் நிறுத்தாமல் வீட்டுக்குப்போ !” என்று கட்டளையிட்டிருக்கிறார். சுருட்டு வாசம் மட்டும் அவரைத் தொடர்ந்தது.

மேலே சொன்ன கதையில் வரும் பாலம் தற்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், அண்ணா சாலையையும் சென்டிரல் ரயில் நிலையத்தையும் இணைக்கும் பாலம். கதையில் வரும் சுருட்டு பெரியவர் வேறு யாருமில்லை, முனீஸ்வரனே தான். இந்தக்கதை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கதையில் வரும் விவரணைகள், சுடுகாடு, பாலம், பாலத்தின் எல்லையில் முனீஸ்வரன் எல்லாமே பொருத்தமாக இருக்கிறது. பாலத்தின் முடிவில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவில் சமீப வருடங்களாக அசுர பிரசித்தி அடைந்துவருகிறது.

புகைப்படம்: ஸ்ரீநிவாசன்
அதென்ன பாடிகாட் முனீஸ்வரன் ? பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் குல தெய்வமான முனீஸ்வரன் சிலையை தங்களுடன் கொண்டுவந்து, இங்கிருக்கும் ஒரு மரத்தடியில் வைத்து வணங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தற்போது தலைமைச் செயலகம் இயங்கிவரும் பகுதியில் தான் முனீஸ்வரன் இருந்திருக்கிறார். 1920ம் ஆண்டு பல்லவன் பணிமனைக்கு முன்பாக இடம் பெயர்க்கப்பட்டார் முனீஸ்வரன். அக்காலகட்டத்தில் பல்லவன் இல்லத்தில் பேருந்துகளுக்கு ‘பாடி கட்டும்’ வேலைகள் நடந்தன. வாகனங்களுக்கு பாடி கட்டும் இடத்தில் அமைந்திருந்ததால் முனீஸ்வரன் – பாடிகாட் முனீஸ்வரன் ஆனார்.

அதே போல, தற்போது கோவில் அமைந்திருக்கும் இடம் ப்ரிட்டிஷ் காலத்தில் கவர்னரின் பாதுகாப்பு படையினருக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. கவர்னர்’ஸ் பாடிகாட் ஏரியா என்றழைக்கப்பட்ட அப்பகுதிக்கு வந்து குடியேறியதால் பாடிகாட் முனீஸ்வரன் ஆனார் என்போரும் உண்டு. அப்படியெல்லாம் இல்லை, வாகனகளுக்கு பாதுகாப்பு தரும் பாடிகார்டாக இருப்பதால் பாடிகாட் முனீஸ்வரன் என்று தற்போதைய தலைமுறையினர் உறுதியாக நம்புகின்றனர்.

நான் சுமார் ஏழெட்டு வருடங்களாக தினசரி பாடிகாட் முனீஸ்வரனை கடந்து செல்கிறேன். ஆரம்பத்தில் பார்த்த முனீஸ்வரனுக்கும் தற்போதுள்ள முனீஸ்வரனுக்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன. நாளுக்கு நாள் முனீஸ்வரனின் புகழ் பரவிக்கொண்டிருக்கின்றன. தினசரி அப்பகுதியை கடக்கும்போது சுமார் இருபது வாகனங்களாவது பூஜைக்காக காத்திருக்கின்றன. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எண்ணி இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் சென்னையின் செல்வம் கொழிக்கும் கோவிலாக பாடிகாட் முனீஸ்வரன் மாறப் போகிறார். என்னைக் கேட்டால் பல்லவன் இல்லத்திற்கும், சென்டிரலில் இருந்து அண்ணா சாலை செல்வதற்கும் வேறு இடத்தை இப்போதே பார்த்து வைத்துக்கொள்வது அரசுக்கு நல்லது !

தகவல்கள்: இணையம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment