31 October 2016

கொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: ஆகாயகங்கை 

கொல்லிமலை என்றாலே நம் நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை சித்தர்கள் ! கொல்லியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் மட்டும் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் பிரதானமானது கோரக்கர் குகை. எப்படியாவது கோரக்கர் குகையை பார்த்துவிட வேண்டுமென்று கொல்லியில் இறங்கியதிலிருந்தே விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை சொல்கிறார்கள். ஒரு சிலர் அப்படியொரு குகை இல்லவே இல்லை என்கிறார்கள். தீர விசாரித்தபிறகு, ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியிலிருந்து பிரிந்து காட்டுக்குள் நீண்டதூரம் சென்றால் கோரக்கர் குகையை காணலாம் என்று தெரிந்துக்கொண்டோம். ஆனால் அங்கே வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் செல்ல முடியும் என்றும் குகைக்கு செல்வதென்றால் காலையிலேயே கிளம்பிவிட வேண்டுமென்றும் மீண்டும் திரும்பி வர மாலையாகிவிடும் என்றும் சொன்னார்கள். எனவே கோரக்கர் குகைக்கு செல்லும் எண்ணத்தை ஒருமனதாக கைவிட்டோம்.

சித்தர்கள் குகையை தவிர்த்து கொல்லியில் இருக்கும் சில முக்கிய கோவில்களைப் பற்றி பார்க்கலாம்.

1. அறப்பளீஸ்வரர் கோவில்
ஆகாயகங்கை அருவியின் முகப்புக்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது அறப்பளீஸ்வரர் கோவில். கோவிலுக்கு சென்றுவிட்டு அருவிக்கு இறங்குவதோ அல்லது அருவியில் குளித்தபிறகு கோவிலுக்கு செல்வதோ உங்கள் செளகர்யம். ஆனால் கோவில் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டுவிடுகிறது. அத்துடன் மீண்டும் பிற்பகல் நேரத்தில் தான் திறக்கப்படுகிறது. எனவே அதற்கேற்றபடி திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.

புகைப்படம்: HolidayIQ
அக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கோவிலின் அருகே அமைந்துள்ள பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. அப்போது ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. இச்சம்பவத்தால் இங்கிருக்கும் சிவனுக்கு அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

2. கொல்லிப்பாவை (அ) எட்டுக்கையம்மன் கோவில்
அறப்பளீஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மாசிலா அருவி போகும் வழியில் அமைந்திருக்கிறது எட்டுக்கையம்மன் கோவில். முன்பே வழி தெரியாததால் வாய்வழி கேட்டு கோவிலை அடைந்தபோது அங்கே கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை கண்டு அதிர்ந்தோம். ஏற்கனவே ஆகாயகங்கைக்காக ஆயிரம் படிகள் இறங்கி ஏறிய களைப்பு. இங்கே குறைந்த எண்ணிக்கை படிக்கட்டுகள் மட்டுமே என்பதை தீர விசாரித்தபின் இறங்கினோம். 

அக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.

இங்கே நுழைந்ததும் பல்வேறு அளவுகளில் மணிகளும், தாயத்துகளும், விசிட்டிங் கார்டுகளும் தொங்குவதை காண முடிந்தது. பூசாரி இருக்கிறார். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்கிறார். சில கோவில்களில் ஏன் புகைப்பட அனுமதி மறுக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா ? பூசாரி கவனிக்காத சமயத்தில் தந்திரமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். வெளியிலேயே மரத்தடியில் கேட்பாரற்று வீற்றிருக்கிறார் இன்னொரு எட்டுக்கையம்மன். சிறப்பு தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் கிளம்பினோம்.

3. மாசி பெரியசாமி கோவில்
இதற்குள் கால தாமதமாகிவிட்டதால் மாசி பெரியசாமி கோவிலை தவிர்த்துவிட முடிவு செய்தோம். எனினும் சுருக்கமாக சில தகவல்கள். எட்டுக்கையம்மன் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மாசி பெரியசாமி கோவில். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. 

பொதுவாகவே கொல்லிமலையில் நிறைய சைவ, சமண கோவில்கள் இருக்கின்றன. தோராயமாக கூகுள் மேப்பில் உலவினால் கூட ஆங்காங்கே பழங்கால சமண கோவில் / சிலை காணப்படுகிறது. அவற்றில் குறிப்பாக நெகனூர்பட்டி என்கிற ஒதுக்குப்புற கிராமத்தில் ஒரு பழங்கால சமணர் கோவில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கே சென்றால் இன்னொரு ஆச்சர்யம் கிடைத்தது. இவை தவிர்த்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இவற்றை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம். 

அதற்கு முன்பாக கொல்லிமலையில் ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில சிறிய அருவிகள் உண்டு. அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடுத்த இடுகை: மற்ற அருவிகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 October 2016

கொல்லிமலை - ஆகாயகங்கை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: தொடக்கம்

கொல்லிமலை ஒரு தேனிலவு என்றால் அதில் மணப்பெண் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி !

கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆகாயகங்கையை தவிர்க்கவே கூடாதென்பது என் எண்ணம். ஆனால் அனைவரும் அணுகத்தக்க வகையில் இருக்கிறதா ஆகாய கங்கை என்றால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கொல்லியின் மைய சிற்றூரான செம்மேட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில், மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. மலையிலிருந்து ஆயிரத்தி சொச்சம் படிக்கட்டுகள் இறங்கியபிறகே அருவியைக் காண முடியும். ஆயிரம் படிக்கட்டுகள் என்பதால் உடல் / மன உறுதி குறைபாடு கொண்டவர்களுக்கு உகந்ததல்ல. நீர்வீழ்ச்சியை சென்றடைய ரோப்-கார் சேவை வேண்டுமென்பது சுற்றுலா பயணிகளின் நீண்டகால விருப்பம். எனினும் அதன் நடைமுறை சாத்தியம் குறைவே என்று தோன்றுகிறது.

நீர்வீழ்ச்சிக்கு இறங்கும் இடத்தில் முடவாட்டு கால் கிழங்கு சூப் கிடைக்கிறது. ‘முடவாட்டு கால்’ என்பது கொல்லியில் விளையும் ஒரு கிழங்கு வகை. பார்ப்பதற்கு ஆட்டின் கால்களைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது மூட்டு வலிக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. எனவே, படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்போ அல்லது ஏறிய பிறகோ சூப் குடிப்பது நல்ல பலனை தரக்கூடும்.

ஒரு காலத்தில் நீர்வீழ்ச்சிக்கு இறங்கிச்செல்ல சீரான படிக்கட்டுகள் எல்லாம் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அப்படியில்லை முறையான படிக்கட்டுகள், பிடிப்புக்கு இரும்புக்கம்பிகள், ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு தோதான இடங்கள் என போதிய வசதிகள் உள்ளன. பேரலில் இலவசக் குடிநீர் கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் இதனை அவ்வப்போது நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் இறங்கியேற சிரமப்படுவதால் நூறு படிக்கட்டு தொலைவிலேயே குடிநீரை வைத்துவிடுகின்றனர். எனவே கட்டாயமாக குடிநீரும், தேவைப்பட்டால் க்ளுக்கோஸ் மற்றும் முதலுதவி பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது.

படிக்கட்டுகள் இறங்க இறங்க அருவியின் சிணுங்கல் கேட்கத் துவங்குகிறது. இதுவே நம் உடல் களைப்பை மறக்கடித்து அருவியின் மடிக்கு அழைத்துச் செல்கிறது. ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் (2010) பல தடைகளை கடந்து சோழ நகரத்தை கண்டடையும் குழுவினர் பரவசமடைவார்கள், மரியான் இறுதிக்காட்சியில் கடலைக் கண்டதும் பெரும் நிம்மதியடைவார் தனுஷ். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காணும் அந்த நொடியில் இவ்விரு உணர்வுகளும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. சுமார் நூற்றியைம்பது அடி உயரத்திலிருந்து (அவ்வளவாக) பாறைகளின் இடையூறு ஏதுமின்றி நேரடியாக பாய்கிறது அருவி !

ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஆகாய கங்கைக்கு வந்திருக்கிறேன். அப்போது என்னால் அருவிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தூரத்திலேயே அருவியின் சாரலும் கடுங்குளிரும் இணைந்து என்னை தடுத்து நிறுத்தியது. இப்போது அப்படியில்லை. அருவியின் சீற்றம் குறைந்துவிட்டதா அல்லது பருவ வேறுபாடா என்று தெரியவில்லை. இம்முறை நேரடியாக அருவியிலேயே தலைகாட்ட முடிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு தான். காயமேற்படாமல் கற்களால் அடிப்பது போல பொத பொதவென்று ஊற்றுகிறது அருவி. கொல்லியில் உள்ள பல்வேறு மூலிகைகளை கடந்துவந்து பாய்வதால் அருவிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணிநேரம் அருவியோடு உறவாடிவிட்டு திரும்பினோம்.

படியேறும்போது தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதே புரிகிறது. நானாவது பரவாயில்லை. அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஏறினேன். சகாக்களில் ஒருவர் அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவருடைய மோஜோவிற்கு நான் வாழ்க்கை தர வேண்டுமென சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். இதே போல பல நடுத்தர வயதுக்காரர்களும் ‘உஸ்ஸு, அஸ்ஸு’ என்று புலம்பிக்கொண்டு சரிவதைக் காண முடிந்தது. அதே சமயம் வயதான சிலர் கூட தெம்பாக படியேறுவதையும் காண வியப்பாக இருந்தது.


நண்பரின் ஐபோனில் எடுக்கப்பட்ட ஸ்லோமோஷன் வீடியோ. கீழே லுங்கியை அட்ஜஸ்ட் செய்பவரை பொறுத்துக்கொள்ளவும் :)

ஆயிரம் படிக்கட்டுகள் இறங்கி ஏறுவது சிரமம் தான். ஆனால் ஆகாய கங்கை தரும் அனுபவம் அந்த சிரமத்தை தாராளமாக ஈடு செய்துவிடுகிறது. ஆகாய கங்கை தவிர்த்து கொல்லியிலேயே வேறு சில அருவிகளும் உண்டு என்று கேள்விப்பட்டோம். அதற்கு முன் கொல்லியில் உள்ள சில கோவில்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 October 2016

மியா கலிஃபா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தொடக்கத்தில் ஏதோ குமாஸ்தா வேலைக்கான நேர்முகத்தேர்வு போலத்தான் இருக்கிறது. ஆனால் தேர்வாளரின் கேள்விகள் எல்லாம் விவகாரமாக இருக்கின்றன. “வயதென்ன ?” என்கிறார். “பாய்ஃபரெண்ட் இருக்கா ?” என்கிறார். “உறவு வைத்துக்கொள்வீர்களா ?” என்கிறார். எல்லா கேள்விகளுக்கும் ‘மனம் நிறைந்த’ தன்னம்பிக்கையுடன், புன்னகை பூத்தபடி பதிலுரைக்கிறார் அந்த இருபத்தியொரு வயது யுவதி. அங்கே இங்கே சுற்றி கடைசியில் மேலாடையை விலக்கும்படி கேட்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் !

மேலே விவரித்துள்ள காட்சிதான் பிரபல நீலப்பட நடிகை மியா கலிஃபாவின் ஆடிஷன் என்று இணையம் சொல்கிறது. மியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் 1993ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு ஏழு வயது இருக்கும்போதே குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பெயர்ந்துவிட்டனர். பள்ளிப் பருவத்தில் மியாவுக்கு லாக்ராஸ் விளையாட்டு என்றால் பிரியம். லாக்ராஸ் என்பது வடகிழக்கு அமெரிக்காவில் பிரபலமான களவிளையாட்டு. கிட்டத்தட்ட நம் ஹாக்கி போன்றது. சிறிய ரப்பர் பந்தை வைத்து விளையாடக்கூடியது. பள்ளிப்படிப்பு முடித்ததும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றார். மியாவுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

அப்போது மியாவுக்கு 21 வயது. 'வாட்டபர்கர்' என்ற அமெரிக்காவின் பிரபலமான உணவகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். ஸ்கோர் என்ற வயது வந்தோருக்கான இதழின் ஆசிரியர் டேவும் அவரது நண்பர்கள் மூவரும் மதிய உணவிற்காக தொடர்ந்து சில நாட்கள் அவ்வுணவகத்திற்கு செல்ல நேர்கிறது. அப்போது மியா பரிமாறிய பர்கர்களின் சுவையோ என்னவோ அவர்களை ஹெவியாக ஈர்த்துவிடுகிறது. தங்களுடைய போர்னோ இணையதளமான ஸ்கோர்லேண்டின் சேவைகளுக்காக மியாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஸ்கோர்லேண்ட் என்பது பிரம்மாண்ட மார்பகங்கள் கொண்ட மாடல்களின் படங்கள் / காணொளிகளை மட்டும் பிரத்யேகமாக வெளியிடும் தளம். உணவகம் என்பதால் மியாவிடம் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஒரு துண்டுச்சீட்டில் தங்கள் விருப்பத்தையும், இணையதள முகவரியையும் எழுதி மியாவிடம் கொடுக்கின்றனர். அதனை உணவக கழிப்பறைக்குச் சென்று பிரித்துப் பார்த்த மியா, தனக்கு கிடைத்த வாய்ப்பை புளியங்கொம்பாய் கைப்பற்றுகிறார்.

மியாவின் கலைப்பயணம் இங்கிருந்துதான் துவங்குகிறது. 2014 அக்டோபரில் மியாவின் முதல் நீலப்படம் வெளியாகிறது. மியாவின் கோதுமை நிறமும், கூடைப்பந்து அளவுள்ள அங்கங்களும் அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பிட்டுப்பட ரசிகர்களை ஈர்த்துவிட்டது. குறிப்பாக நீலப்படங்களில் வரும் BJ என்ற வித்தையில் மியா கை தேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். “நீ பார்த்தாயா?” என்று கேட்காதீர்கள். பார்த்தவர்களை பார்த்தேன். இரண்டு மாதங்களிலேயே 'போர்ன் ஹப்' என்கிற பிரபல இணையதளம், பலான இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகை மியா என்று அறிவிக்கிறது, கூடவே நம்பர் 1 நீலப்பட நடிகை என்றும் அறிவிக்கிறது.

பிரபலமானாலே பிராப்ளம்களும் பின்னாடியே வருமல்லவா ? தன்னுடைய காணொளி ஒன்றில் பர்தா அணிந்து தோன்றியதால் தன் தாய்நாடான லெபானானில் இருந்தும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை சந்திக்கிறார் மியா. இது குறித்து வாஷிங்க்டன் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், அக்காணொளியை பகடியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் மேலும் ஹாலிவுட் படங்களில் இஸ்லாமிய மதம் இதைவிட பன்மடங்கு இழிவுபடுத்தப்படுகிறது என்று கூறுகிறார். எதிர்ப்புக்குரல்கள் குறைந்தபாடில்லை. மியாவின் குடும்பத்தினரே கூட அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனால் இணையத்தில் மியாவை தேடியவர்கள் எண்ணிக்கை மட்டும் ஐந்தாக உயருகிறது. பியர் நிறுவனம் ஒன்று மியாவின் கண்ணாடியை மட்டும் வைத்து குறும்பாக ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது. டைம்ஃப்ளைஸ் எனும் இசைக்குழு மியாவுக்காகவே பிரத்யேக பாடலை வெளியிடுகிறது. 

மியாவின் கண்ணாடியுடன் பியர் விளம்பரம்
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் திரைக்குப் பின்னால் என்னதான் நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்கு வந்த கொலை மிரட்டல்களுக்கு பயந்து பணிந்துவிட்டாரா ? தெரியவில்லை, இருக்கலாம். கடந்த ஜூலையில் அதே வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த மற்றொரு பேட்டியில் தான் போர்னோ துறையில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கிறார். மியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் கூட பிப்ரவரி 2015க்கு பிறகு புதிய காணொளிகள் இல்லை. ஆறுதலளிக்கும் வகையில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டும் அவ்வப்போது தன் படங்களை பதிவேற்றி சாஃப்ட்போர்ன் சேவையாற்றி வருகிறார் மியா.

இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். மியாவைப் போலவே இன்னொரு நீலப்பட நடிகை சன்னியை அரவணைத்துக் கொண்டது போல மியாவையும் ஏன் பாலிவுட் அரவணைக்கக்கூடாது ? சன்னி ‘பிக் பாஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு சமயத்தில், மியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக பேச்சு அடிப்பட்டது. அப்போது ‘இந்தியாவில் காலடி எடுத்து கூட வைக்கமாட்டேன்’ ஒரேயொரு ட்வீட் போட்டு இந்திய இதயங்களை நொறுக்கிவிட்டார் மியா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 October 2016

கொல்லிமலை - தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கொல்லிமலை – மலைகளின் இளவரசி ! தென்னிந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களிலேயே குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. ஏனென்றால் வரலாற்றுச் சிறப்புகளையும், ஆன்மிகப் பெருமைகளையும் கொண்ட, அதே சமயத்தில் சுற்றுலாவிற்கும் உகந்த மலை வாசஸ்தலம் கொல்லிமலை. மேலும் சென்னையிலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த தூரம். தோராயமாக 370 கி.மீ.

மூலம்: கூகுள் மேப்ஸ்
கொல்லிமலைக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கொல்லி மலையுச்சிக்கு சென்றடைய மொத்தம் 70 கொண்டையூசி வளைவுகளை கடக்க வேண்டும். இதனை கூகிள் மேப்ஸில் பார்த்தால் நம் இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதிகரித்த இயதுடிப்பை ECGயில் ப்ளாட் செய்தது போலிருக்கும். சுயமாக வாகனம் ஓட்டிச்செல்பவர்களுக்கு இது ஒரு கொடுப்பினை. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கொல்லிமலைக்கு செல்வதென்று முடிவு செய்தோம்.

ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை, அதிகாலை நான்கு மணிக்கு துவங்கியது எங்கள் பயணம். மூன்று பேர், இரண்டு வாகனம், ஒரு இலக்கு – கொல்லிமலை.

நேர்த்தியான திட்டமிடலுடன், ராணுவ ஒழுங்குடன் துவங்கியது எங்கள் பயணம். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இடைவேளை. சராசரியாக மணிக்கு 50 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டுமென திட்டம் வகுத்துக்கொண்டோம். அதன்படி அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பிய நாங்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, (கள்ளக்குறிச்சிக்கு முன்பாக ஒருமணிநேர உணவு இடைவேளை) கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திம்மநாயக்கன்பட்டி வழியாக மலையடிவார கிராமமான காரவள்ளியை மதியம் 12:15க்கு சென்றடைந்தோம்.

இதில் ஆத்தூரிலிருந்து திம்மநாயக்கன்பட்டி வழியாக வந்தது மட்டும் மோசமான அனுபவமாக அமைந்தது. இந்த பாதையில் நிறைய சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுவாகவே மோசமான சாலைகள் என்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியது. திம்மநாயக்கன்பட்டி வழிக்கு பதிலாக கொஞ்சம் சுற்றி சேலம், ராசிபுரம் வழியை தேர்ந்தெடுத்திருந்தால் சாலை நன்றாக இருந்திருக்கக்கூடும்.


காரவள்ளியில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு 70 கொண்டையூசி வளைவுகளை ஸ்பரிசிக்கத் துவங்கினோம். கடந்தமுறை ஏலகிரி சென்றபோது சில கொண்டையூசி வளைவுகளை கடந்ததுமே நல்ல உயரத்தை அடைந்துவிட்டோம் என்று உணர முடிந்தது. கொல்லிமலை அப்படியில்லை. ஒரு தேர்ந்த உற்சாக பானத்தைப் போல கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற ஆரம்பித்தது.

கொண்டையூசி வளைவுகளினூடே பயணம் செய்யும்போது நீங்கள் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவோ, இளைப்பாறிக்கொள்ளவோ உகந்த நோக்குமுனை முப்பத்தி நான்காவது வளைவில் அமைந்துள்ளது.

இவ்வளைவில் மன்னர் வல்வில் ஓரியை பற்றிய புறநானூற்றுப் பாடலையும் பாடலின் ஓவிய வடிவையும் காணலாம். இச்செய்யுள் குறித்து நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்கிறேன். மன்னர் ஓரியின் வில்லாற்றலை புகழ்ந்து எழுதப்பட்ட செய்யுள் அது ! அதாவது ஓரி ஒரேயொரு அம்பினை எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி ஆகிய விலங்குகளை துளைத்து ஊடுருவி இறுதியாக தரையிலிருக்கும் உடும்பின் மீது பாயுமாம் !

மன்னரின் பராக்கிரமங்களை வியந்தபடி எஞ்சியிருக்கும் கொண்டையூசி வளைவுகளையும் கடந்து செம்மேடு என்ற சிற்றூரை அடைந்தோம். கொல்லிமலையை பொறுத்தவரையில் செம்மேடு தலைநகரம் போன்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு உண்ணவும், உறங்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், செல்பேசிக்கு மீள்நிரப்பு செய்யவும் ஒற்றை நிறுத்தமும், மையப்புள்ளியும் செம்மேடுதான். சகாக்களில் ஒருவரின் ஆலோசனைப்படி வசந்தமாளிகை உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.

அறை தேடும் படலம் துவங்கியது. கொல்லியில் தங்குமிடங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவுதான். பொதுவாக எந்த சுற்றுலா தளத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே ரிஸார்ட் எனப்படும் உல்லாச போக்கிடங்கள் இருக்கும். உல்லாச போக்கிடம் என்றால் குறைந்தபட்சம் நீச்சல் குளம், சிறிய உள்விளையாட்டு அரங்கு, அறையில் குளிர்சாதனப் பெட்டி போன்றவை இருப்பது அவசியம். ஆனால் கொல்லியில் எங்கேயும் நீச்சல்குளம் கிடையாது. பெயரளவில் மட்டுமே ரிஸார்ட். மற்றபடி அவற்றை லாட்ஜ் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒப்பீட்டளவில் நல்லதம்பி (ரிஸார்ட்) மற்றும் P.A. ஹாலிடே இன் ஆகிய இரண்டும் பரவாயில்லை ரகம்.

சில தங்குமிடங்களை பார்வையிட்டுவிட்டு நல்லதம்பியில் செட்டிலானோம். (தங்குமிடங்களை தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விரிவான குறிப்புகளை நாம் தொடரின் இறுதியில் பார்க்கலாம்). 

வெள்ளி மாலை நல்லதம்பியில் ‘முழு’ ஓய்வெடுத்துவிட்டு, சனி காலை கொல்லிமலையை சுற்றிப்பார்க்க உற்சாகமாக தயாரானோம்.

அடுத்த இடுகை: ஆகாயகங்கை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment