அன்புள்ள வலைப்பூவிற்கு,
முந்தைய பகுதி: கோவா – மிதக்கும் கஸினோ
கோவா தொடரில் மீண்டும் ஒரு நீண்ட
இடைவெளி விழுந்துவிட்டது. மறுபார்வையிட விரும்புபவர்களுக்கு இத்தொடரின் முதல்
பகுதியின் சுட்டி –
தொடக்கம்.
இதுவரை கோவாவின் பிரதான அடையாளங்களான
கர்லீஸ், டிட்டோஸ் லேன், கஸினோ போன்றவற்றை பார்த்தோம். இக்கட்டுரையில் முற்றிலும்
வேறொரு கோவாவை பார்க்கப்போகிறோம். தெற்கு கோவா !
கோவா தொடர் முதல் பகுதியில் வடக்கு
கொண்டாட்டம், தெற்கு அமைதி என்று எழுதியிருந்தேன். கோவாவில் வடக்கு, தெற்கு என்பது
ரஹ்மான். ராஜா போன்ற இரு துருவங்கள், முறையே. முதலாவது துவண்டு போயிருக்கும் மனிதனை
துள்ளி எழுந்து ஆட வைக்கும் என்றால், இரண்டாவது அம்மனிதனை அரவணைத்து
ஆறுதல்படுத்தும். இதை ஏன் வெகு குறிப்பாக ரஹ்மான், ராஜாவோடு ஒப்பிடுகிறேன் என்றால்
ரஹ்மானின் இசையும் சமயங்களில் ஆறுதல்படுத்தும். போலவே ராஜாவின் இசையும்
உற்சாகமூட்டும். ஆனால் இருவரது இசையின் பிரதான குணமும் முதலில் சொன்னதுதான்.
கோவாவும் அதுமாதிரி தான். வடக்கில் அமைதியான கடற்கரைகளும் உண்டு. தெற்கில்
கொண்டாட்டமான கடற்கரைகளும் உண்டு.
நாங்கள் முதலிரு தினங்களை வடக்கில்
களித்துவிட்டு, தெற்கை நோக்கி பயணித்தோம். பஞ்சிம் நகரத்தைக் கடந்ததும் ஆரவாரங்கள்
குறைந்து தெற்கின் ஆதிக்கம் துவங்குகிறது. தெற்கின் அழகை புரியும்படி உதாரணத்தோடு
சொல்ல வேண்டுமென்றால் ‘தெறி – ஈனா மீனா டீக்கா’ பாடலைப் பாருங்கள். கதைப்படி கேரளா
என்று சொல்லப்பட்டாலும் இந்தப்பாடலின் பெரும்பகுதி தெற்கு கோவாவில் தான்
படமாக்கப்பட்டுள்ளது. குறுகிய அகலம் கொண்ட நீண்ட சாலைகள், இருமருங்கிலும் சீரான
இடைவெளியில் தென்னை மரங்கள், இடையிடையே சிற்றூர்கள், போர்த்துக்கேய கட்டிடமுறையில்
கட்டிய வீடுகள் என்று ரம்மியமாக வரவேற்கிறது தெற்கு.
தெற்கு கோவாவின் சாலைகள் |
பொதுவாக தெற்கு கோவா ஒரு ஃபீல் குட்
பகுதி. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு தெற்கு ஒரு மன உளைச்சலைத் தந்தது. ஒரு
வெறுமை உணர்வு. பள்ளிப்பருவத்தில் வெள்ளி மாலை துவங்கி இரு தினங்கள் மகிழ்ச்சியாக
சுற்றித்திரிந்துவிட்டு ஞாயிறு மாலை இருளத்துவங்கியதும் மனதில் ஒரு மென்சோகம்
சூழும் இல்லையா ? அதுதான் எனக்கு ஏற்பட்டது. அதுவும் நாங்கள் வடக்கிலிருந்து
தெற்கு பயணிக்கும் போது வழியில் மத்திய கோவாவில் அமைந்துள்ள தேவாலயம்,
அருங்காட்சியகம் எல்லாம் பார்த்து களைத்திருந்தோம். தெற்கில் போய்தான் உணவு என்று
மதியம் சாப்பிடக்கூட இல்லை. ஆளரவமற்ற சாலைகள். தெற்கு கோவாவை சென்றடையும் போது
மாலை நான்கு மணி. பிற்பகலின் இளவெயில் வேறு, 'நான் கிளம்புகிறேன்' என்று சதாய்க்கும் புதுக்காதலியைப் போல வாட்டியது. இவையெல்லாம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இது எனது தனிப்பட்ட உணர்வு. அநேகமாக மற்றவர்களுக்கு தெற்கு கோவா மகிழ்வான உணர்வையே
கொடுக்கும் என்று நம்புகிறேன்.
கோல்வா கடற்கரை |
ஏற்கனவே நேரம் ஆகிவிட்டதால் அறைக்கு
செல்வதற்கு முன்பு நல்ல பீச் ஒன்றிற்கு சென்று மதிய உணவை முடித்துவிடலாம் என்று
முடிவானது. கோல்வா கடற்கரையைச் சென்றடைந்தோம். இக்கடற்கரை மர்கோவா ரயில்
நிலையத்திலிருந்து நேர்க்கோட்டில், ஒப்பீட்டளவில் மிக அருகிலிருப்பதால்
வந்திறங்கி, “நேரா பீச்சுக்கு வண்டியை விடுப்பா” என்பவர்கள் இங்குதான் வருகிறார்கள்.
பெரியப் பெரிய ‘ரக்ஸாக்’ பைகளை சுமந்தபடி சுற்றும் பயணிகளை இங்கு பார்க்கலாம்.
வாட்டர் ஸ்போர்ட்ஸ் இருக்கின்றன. கடைத்தெரு உள்ளது. கடற்கரை மணலில் நடந்தபடி
உணவகங்களைப் பார்வையிட்டோம். ஒவ்வொரு உணவகத்தின் வாயிலிலும் பணியாளர் ஒருவர்
நின்று நடந்து செல்பவர்களை அழைத்தபடி இருந்தனர். ஒரு உணவகத்தை கடக்கும்போது
மட்டும் தமிழ்க்குரல் எங்களை அழைத்தது. தெற்கிலிருந்து ஒரு குரல் ! அங்கே அடைக்கலமானோம். கோவாவின் அடையாள
பியரான கிங்ஸ் பருகியபடி மதிய உணவை முடித்துவிட்டு, விடுதியை நோக்கி பயணித்தோம்.
அதற்கு முன் கோவா – போர்த்துகீஸ் இடையே
உள்ள உறவு பற்றி ஒரு சிறுகுறிப்பு. 1498ம் ஆண்டு, போர்த்துகேய பயணி வாஸ்கோடகாமா இந்தியாவை
அடையும் கடல் வழியைக் கண்டுபிடித்து கேரள மாநிலம், கோழிக்கோடை வந்தடைந்தார். அதுமுதல்
போர்த்துகேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே வணிகம் துவங்கிற்று. குறிப்பாக
இந்தியாவின் மிளகு, லவங்கம், கிராம்பு போன்றவற்றை இங்கிருந்து ஏற்றுமதி செய்தனர்.
இவற்றிற்குண்டான மருத்துவ குணங்களை கண்டுணர்ந்திருந்த
போர்த்துகேயர்கள் அவற்றை தங்கம், வெள்ளியை விட மதிப்பாகக் கருதினர். அதற்கு மாற்றாக
அங்கிருந்து ஆடைகள், வெள்ளி, செம்பு பாத்திரங்களை இறக்குமதி செய்தனர்.
வணிகப் போக்குவரத்து வழக்கமாகி ஒரு
கட்டத்தில் போர்த்துகேயர்கள் தங்கள் முகாமிற்கு தோதான இடமாகக் கருதிய கோவாவில்
கால் பதித்தனர். அப்போது கோவா முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது. கோவாவை படையெடுத்த
போர்த்துகேயர்கள் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் திம்மய்யா உதவியுடன் போரில் வென்று
கோவாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதன்பிறகு நான்கரை நூற்றாண்டுகள்
கோவாவில் போர்த்துகேயர்கள் ஆட்சி தொடர்ந்தது, இந்திய விடுதலையின் பிறகும் கூட.
1961ம் ஆண்டு இந்திய அரசு ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் கோவாவை மீட்டெடுத்தது.
இந்திய ஆட்சியின் கீழ் வந்த பிறகு கோவாவின் பழைய தடயங்களை மாற்றி அதனை ஒரு
சுற்றுலா தலமாக அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தை வடக்கு ஏற்றுக்கொண்டாலும் தெற்கு
மட்டும் இன்னமும் விடாப்பிடியாக அதன் பழைய அடையாளங்களைக் கொண்டுள்ளது. தெற்கிற்கு
எப்போதும் அந்தக் குணம் உண்டு !
கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள்
கடந்துவிட்டது. இன்னமும் கோவாவில் போர்த்துகேய தாத்தாக்களும், மாமாக்களும் சின்னதாக
ஒயின்ஷாப்போ, ஹோட்டலோ, ஹோம் ஸ்டேயோ வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
போர்த்துகேயர்கள் மட்டுமல்லாமல் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற பல ஐரோப்பிய
நாட்டினர் இங்கு வசிக்கிறார்கள் என்று அறிகிறேன். இந்த ஐரோப்பியர்களுக்கு
இந்தியர்கள் என்றால் ஏதோவொரு ஒவ்வாமை இருக்கிறது. ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள்
கோவா பயணத்தில் ஒருநாள் தெற்கு கோவாவின் தெருக்கள் வழியாக ஸ்கூட்டரில் சென்றுக்
கொண்டிருந்தோம். மேப்பில் பாதையைத் தேடுகையில் கவனம் பிசகி ஸ்கூட்டர் தெருவோர கால்வாயில்
லேண்டாகி இருவரும் கீழே விழுந்தோம். சத்தம் கேட்டு தெருவில் வசிக்கும் ஐரோப்பியர்கள்
பலர் வெளியே வந்தனர். வந்து வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட எங்களையும்
ஸ்கூட்டரையும் தூக்கவோ, உதவி செய்யவோ இல்லை.
ஹோட்டல் செக்-இன் இன்னொரு படி மேல். டோனா
ஸா மரியா (Dona Sa Maria) என்ற விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்தோம். தெற்கு
கோவாவில் கார்மோனா என்ற சிற்றூரில் ஒதுக்குபுறமாக அமைந்திருந்தது அந்த விடுதி. உரிமையாளர்
ஒரு இத்தாலியர். எங்களைப் பார்த்ததும் அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை.
தயங்கித் தயங்கி எங்களை அழைத்து, தனக்கும் மேக் மை ட்ரிப்புக்கும் ஏதோ பஞ்சாயத்து
இருப்பதாகவும், அதனால் அதன்மூலம் பதிவு செய்பவர்களைத் தன்னால் தங்க வைக்க முடியாது
என்றும் கூறினார். மாற்றாக அருகில் அவரது நண்பருடைய ஹோம் ஸ்டே ஒன்றில் தங்க
வைப்பதாகக் கூறினார். அதே சமயம் அங்கே வந்த வெளிநாட்டு இணையருக்கு அறை ஒதுக்குவதை
நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம்.
விடுதி (மிச்செட்'ஸ் ஹோம் ஸ்டே) |
அப்போது நாங்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தோம்.
அவருடன் வாதம் செய்யும் அளவிற்கு தெம்பில்லை. அதனால் அவர் அழைத்துச் சென்ற ஹோம்
ஸ்டேவில் தஞ்சமடைந்தோம்.
கார்மோனா கடற்கரை |
ஒரு இரவு முழுக்க கஸினோவில் ஆட்டம்
போட்ட களைப்பில், தெற்கு கோவாவின் பகல் பொழுதை தூக்கத்திடம் பறிகொடுத்தோம்.
எஞ்சியிருந்த ஒரு இரவை டக்கீலாவிடம். கடைசியாக எங்கள் ஹோம் ஸ்டேயில் இருந்து நடை
தூரத்தில் அமைந்திருந்த கார்மோனா கடற்கரைக்கு சென்றோம். நீளமான கடற்கரை.
துவக்கத்தில் நான்கைந்து குடில் உணவகங்கள். அவற்றைத் தாண்டி ஆளரவமற்ற, சுத்தமான, அமைதியான
கடற்கரை. ஒரு கொண்டாட்டமான சினிமாவைப் பார்த்து முடித்தபிறகு அமைதியாக ஸ்க்ரால்
ஆகும் எண்ட் க்ரெடிட்ஸ் போல அமைந்திருந்தது அது !
படங்கள்: இணையம்
அடுத்து வருவது: கோவா - நிறைவு
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|