29 August 2011

பிரபா ஒயின்ஷாப் – 29082011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வெங்காயம்:
சி.பி.செந்தில் எழுதிய “வெங்காயம்” பட விமர்சனத்தில் படத்தின் இயக்குனர் “சங்ககிரி” ராச்குமாரே வந்து பின்னூட்டம் போட்டிருந்தார். நிச்சயமாக இது பதிவுலகிற்கும், பதிவர்களுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் தான். இதற்காகவே வெங்காயம் படத்தை பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஆனால், ஏமாற்றமளிக்கும் வகையில் ஒரு வாரத்திலேயே படம் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டுவிட்டது. இயக்குனரிடம் பேசியபோது தியேட்டர் கிடைக்காத காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் அடுத்த வாரத்தில் மீண்டும் வெளியாகும் என்று தெரிவித்தார். பெரிய பட்ஜெட் படங்களே தியேட்டர் கிடைக்க “மங்காத்தா” ஆடிக்கொண்டிருக்கும்போது வெங்காயம் போனியாவது என்னவோ சந்தேகம்தான். மகாலட்சுமியோ கிருஷ்ணவேணியோ மனது வைத்தால்தான் உண்டு.

போராட்டம்:
ராஜீவ் கொலையாளிகள் (என்று சொல்லப்படும்) மூவரின் தூக்குதண்டனையை நிறுத்தக்கோரி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராடுவதாக செய்திகளில் படித்தேன். இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். ஈவ் டீசிங், ரவுடியிசம், ஆராஜகம், பப்ளிக் நியூசன்ஸ் இதையெல்லாம் விட்டுவிட்டு இந்தமாதிரி முற்போக்கான செயல்களில் ஈடுபடும் அவர்களை பாராட்டவேண்டும். ஆனால், தூக்குதண்டனையை நிறுத்தக்கோரி செங்கொடி என்ற இளம்பெண் உயிர்தியாகம் செய்திருக்கும் விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு உயிரை கொடுப்பது அபத்தமாக இருக்கிறது. இனியும் தூக்குதண்டனையை நிறுத்தாவிட்டால் செங்கொடியின் தியாகம் அர்த்தமற்று போய்விடும்.

தமிழ் புத்தாண்டு:
"நித்திரையில் இருக்கும் தமிழா...!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...!"

கலைஞர் “முயலுக்கு நாலு கால்” என்று சொன்னால் “இல்லையில்லை... கலைஞர் ஒரு தமிழன துரோகி, போலி நாத்திகவாதி, சுயநலவாதி... அவர் சொல்வது எல்லாவற்றையும் நான் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன்... நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்...” என்று சொல்பவர்களுக்கு மேலே உள்ள பாரதிதாசன் கவிதையை டெடிகேட் செய்கிறேன். எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்பவர்கள் சமஸ்கிருத புத்தாண்டாம் ஏப்ரல் பதினான்கையே பிடித்து தொங்குங்கள்.

அன்னாயிசம்:
நேற்றிரவு ஃபேஸ்புக்கில் மாடர்ன் மங்கை ஒருவர் “Happy Anna-Pendence Day” என்று ஸ்டேட்டஸ் அப்டேட் விட்டிருந்தார். அவரை மடக்கி தங்கச்சி... ஜன் லோக்பால்ன்னா என்னன்னு கேட்டேன். பாப்பா பேந்த பேந்த முழிச்சது. அப்படின்னா இனிமேல் அன்னா-பென்டன்ஸ், ஆயா-பென்டன்ஸ்ன்னு எதையாவது உளறாதேன்னு சொன்னேன். சகோதரி சூடாயிட்டார். சில நிமிடங்களில் என்னுடைய கருத்துக்களை எச்சில் தொட்டு அழித்துவிட்டு என்னுடைய நட்பையும் முறித்துக்கொண்டார். (இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க...) தொடர்ந்து இதேமாதிரி பேஷனுக்காக அன்னாயிசம் பேசும் யூத்துகளை கலாய்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

அறிவிப்பு:
சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் (அந்த இடத்தே விடவே மாட்டீங்களா) வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது. இதுவரை பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளாத, புதிய பதிவர்களுக்கு முன்னிலைபடுத்துவதே இந்த பதிவர் சந்திப்பின் நோக்கம். பிரபல பதிவர்களும் வரலாம். ஆனால் விட்டத்தை பார்த்து தாடி சொறிவது, பின்னவீனத்துவ இலக்கியம் பேசுவது இதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவர் சந்திப்பை பரப்புரை செய்வதற்காக பஸ்ஸிற்கு பலே பிரபுவும், டிவிட்டருக்கு ஜில்தண்ணியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பதிவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயணச்செலவை சென்னை பதிவர் சங்கத்தலைவர் கே.ஆர்.பி.செந்தில் ஏற்றுக்கொள்வாராக. பதிவர் சந்திப்பின் மேலதிக விவரங்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக்கவும்.

இந்த வார ஜொள்ளு:
(இந்த வாரத்துல ஒருமுறைதான் ஜொள்ளு விட்டியான்னு கேட்கப்பிடாது... இது இந்த வாரம் முழுக்க விட்ட ஜொள்ளு...)
மரண நேரத்தில்... உன் மடியின் ஓரத்தில்...
இடம் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்...

ட்வீட் எடு கொண்டாடு:
டிவிட்டரில் கடந்தவாரம் Famous Lies என்றொரு trending போய்க்கொண்டிருந்தது. அதன் வரிசையில் நான் ரசித்த சில ட்வீட்டுகள்... 
kaattuvaasi காட்டுவாசி
வாசன் ஐ கேர்.... நாங்க இருக்கோம்... #FamousLies (நீங்க இருப்பீங்கடா... நாங்க இருப்போமா????)

kaattuvaasi காட்டுவாசி
இப்பத்தான் நினைச்சேன்... நீங்களே வந்துட்டீங்க... #FamousLies

kaattuvaasi காட்டுவாசி
இதுதான் எனக்கு பர்ஸ்ட் டைம்... #FamousLies

iParisal Parisalkaaran
பெண்களுக்கு கடலளவு பொறுமை உண்டு. #FamousLies

iParisal Parisalkaaran
பொண்ணுகன்னாலே எனக்கு அலர்ஜிப்பா..! #FamousLies

iParisal Parisalkaaran
நாளைக்கு கண்டிப்பா குடுத்துடறேன்.. #FamousLies

2009ம் ஆண்டே வலைப்பூ தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் ஐந்து இடுகைகளோடு நிறுத்திக்கொண்டவர் இப்போது ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அநேகமாக நாம் எல்லோருமே பதிவுலகம் வந்த புதிதில் என்னங்கடா இந்த சீனியர் பதிவர்களின் தொல்லை தாங்க முடியலைன்னு நினைச்சிருப்போமே அந்த மாதிரி ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் பாருங்கள். வேலை தேடும் இளைஞர்களை விழிப்புணர்வுடன் இருக்கச்சொல்லும் இவர் எதற்காக சமச்சீர் கல்வியை குப்பையில் போடச் சொல்கிறார் என்று கேளுங்களேன்.

சிறப்பு அறிமுகப்பதிவர்: வடக்குபட்டி ராம்சாமி
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமியும் ஸ்டைலையும், அல்டிமேட் பதிவர் “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் சிந்தனைகளையும் உரித்துவைத்தாற்போல பதிவுலகத்திற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் வடக்குபட்டி ராம்சாமி.

ஃபேஸ்புக்கில் பிரசித்தி பெற்ற வடக்குபட்டியார் கடந்தமாதம் தான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தமிழ்மணத்தை பற்றி கூட தெரியாத வெள்ளந்தியாக இருக்கிறார். (பார்த்து சூதானமா நடந்துக்கோங்கப்பு... இது கலவர பூமி...) இவர் இதுவரை எழுதியுள்ள பதினோரு இடுகைகளையும் பார்வையிட்டேன். அவற்றில் பாதி முழுப்பதிவாக இல்லாததாலும், மற்றவை எனது கருத்துக்களுக்கு முற்றிலும் எதிராக அமைந்திருப்பதாலும் வலைப்பூவின் இணைப்பு மட்டும் தருகிறேன்.

இந்த வார பாடல்:
மறுபடியும் பெண்களை டார்கெட் செய்து ஒரு ரொமாண்டிக் பாடல். களவாணி படத்தை இயக்கிய சற்குணத்தின் அடுத்த படைப்பான “வாகை சூட வா” படத்தில் இடம் பெற்றுள்ள “சரசர சாரக்காத்து...” என்று ஆரம்பிக்கும் பாடல். இயக்குனரின் நண்பரான புதுமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், அநேகமாக நம் எல்லோருக்குமே பிடித்த சின்மயி குரலில் ஒலிக்கிறது இந்த பாடல். தொடக்கத்தில் அமைதியான நதியைப் போல மென்மையாக ஆரம்பிக்கும் பாடல் சில நிமிடங்களில் உற்சாகவெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. வைரமுத்து வரிகளில் கிராமத்து மண்வாசம் வீசுவது மட்டுமில்லாமல் பாடலே படத்தின் கதையையும் சொல்கிறது. பாடலிலிருந்து எனக்கு பிடித்த வரிகள், தலைவி தலைவனிடம்: “மீனுக்கு ஏங்குற கொக்கு நீ... கொத்தவே தெரியல மக்கு நீ...”. போன வாரத்திலிருந்து சுமார் 300 முறைக்கு மேல் இந்தப்பாடலை கேட்டிருப்பேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

இந்த வார காணொளி:
உலகத்திலேயே நீளமான இந்த பாம்பு நம்முடைய அதிர்ஷ்டம் இப்போது இறந்து போயிருக்கிறது. A MUST WATCH VIDEO. தவற விட்டு விடாதீர்கள்.

இந்த வார புகைப்படம்:
பேச்சிலர்கள் ரூமில் ரங்கோலி கோலம் போட்டால் இப்படித்தான் இருக்கும்.
இந்த புகைப்படத்தை மணிஜிக்காகவும் இன்னபிற குடிமகன்ர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்.

இந்த வார தத்துவம்:
முதலிரவில் மனைவி துறந்திடும் வெட்க ஆடையை அவள் வளைக்காப்பில் அணிந்து நிற்கிறான் கணவன்...!!! (இதுவும் டிவிட்டரில் படித்தது) - உபயம்: மாயவரத்தான்

இந்த வார மொக்கை:
கண்ணா... வாழ்க்கையில பேனாவை தொலைச்சா வேற பேனா வாங்கிக்கலாம்...
ஆனா பேனா மூடியை தொலைச்சிட்டா வேற வாங்க முடியாதுப்பா... வாங்க முடியாது...

அதனால எல்லாரும் “டிக்-டிக்” பேனாவையே வாங்குவோமாக...
என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

13 August 2011

புத்தக வாசிப்பு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தகத்தின் முதல் வரியிலிருந்து “முற்றிற்று” என்பது வரை இடைவிடாது புத்தகங்கள் வாசிப்போரை நான் அறிவேன். ஆனால் நான் அவர்களை “நன்கு படித்தவர்கள்” என்று கூறமாட்டேன். ஏனெனில் அத்தகையோர் தாங்கள் படிக்கும் விஷயங்களை நல்லவை என்றும் கெட்டவை என்றும் பிரித்து, நல்லவைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை மறந்து விடுவதில்லை. எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு மூளையைக் குழப்பிக்கொள்வார்கள். நல்லவைகளை மறந்துவிட்டுக் கெட்டவைகளை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் பிரகிருதிகளும் உண்டு. தங்களுக்குள்ள திறமையையும் அறிவையும் அபிவிருத்தி செய்துகொள்வதே, புத்தகங்களைப் படிப்பதன் முக்கிய நோக்கம். உங்கள் ஜீவனத்திற்கோ அல்லது மானிட வாழ்க்கையின் உயர்ந்த அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கோ அவசியமான சாதனங்களை ஒவ்வொருவரும் புத்தகப்படிப்பின் மூலம் பெறுகிறார்கள். படிப்பதன் முதல் நோக்கம் அதுதான். இரண்டாவது நோக்கமென்னவெனில் நாம் வாழும் உலகத்தைப் பற்றிய பொது அறிவைப் பெறுவதே. எனினும் படித்தவைகளை அத்தியாயம், அத்தியாயமாக செங்கல்களைப்போல் மனதில் அடுக்கிவைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பலனும் ஏற்படாது. படித்து மனதில் பதிய வைத்துள்ள பல்வேறு விஷயங்களையும் பிரயோஜனகரமான முறையில் ஒன்று சேர்த்து ஓர் அறிவு மாளிகையாக நிர்மாணிக்க வேண்டும். இல்லாவிடில், தாங்கள் அதிகமாகப் படித்துள்ளோமென்ற வீண் கர்வத்தைத் தவிர வேறு எவ்வித பலனும் ஏற்படாது.

வாசிக்கும் கலையை நன்கு அறிந்து கொண்டிருப்பவர்கள் ஒரு புத்தகத்தையோ அல்லது பத்திரிக்கையையோ வாசித்தால், அதில் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உடனே பகுத்துணர்ந்துக் கொள்வார்கள். அதைக்கொண்டு அவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் சுலபமாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். அப்படியானால்தான் படிப்பின் மூலம் பலன் ஏற்பட முடியும்.

உதாரணமாக ஒரு பிரசங்கி, தாம் பேசப்போகும் விஷயம் பற்றிய சகல தகவல்களையும் நன்கு அறிந்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் தன் அபிப்ராயங்களை ஆட்சேபிக்கும் எதிரிகளைச் சமாளித்து சமாதானப்படுத்த முடியாது. மற்றும் தம்முடைய அபிப்ராயங்கள் நியாயமானவையாக இருப்பினும் கூட சரியான வாதங்களுடன் அவைகளை ஸ்தாபிக்கவும் எதிரியின் ஆட்சேபங்களைத் தவிர்க்கவும் முடியாது.

மேலே உள்ள விஷயங்கள் அனைத்தையும் கூறுவது நானல்ல. ஹிட்லரின் “மெய்ன் காம்ப்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “எனது போராட்டம்” என்ற நூலில் இருந்து சுடப்பட்ட வரிகள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

Easy A – பதின்பருவ திருவிளையாடல்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முன்னெச்சரிக்கை: கலாச்சார காவலர்களுக்கு உகுந்த பதிவல்ல...

திரைப்பட வகையறாக்களில் (Genre) டீன் படங்கள் என்றொரு வகையுண்டு. அதாவது பதின்பருவ வயதினரை குறிவைத்து அவர்களுக்காகவே எடுக்கப்படும் திரைப்படங்கள். இவ்வகை திரைப்படங்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரியையே சுற்றி நகரும். நட்பு, முதல் காதல், பெற்றோருடனான தவறான புரிதல்கள் போன்றவைகளை சொல்லும். கசமுசா சமாச்சாரங்களும் கட்டாயம் இருக்கும். காம நினைவுகளையும், ஈர நனைவுகளையும் அநேகமாக எல்லோருமே பதின்பருவ வயதில் கடந்திருப்போம்தானே. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் அவ்வப்போது நடந்தாலும் ஓரளவிற்கு வெற்றியடைந்த டீன் படமென்றால் பாய்ஸ் படத்தைச் சொல்லலாம். ஹிந்தியில் “ஜானே து...” ஒரு நல்ல உதாரணம். அப்படி ஒரு குதூகலமான படத்தைப் பற்றிய பதிவுதான் இது.

- Title: Easy A
- Tagline: Let’s not and say we did
- Country: United States
- Language: English
- Year: 2010
- Genre: Teen, Comedy
- Cast: Emma Stone, Penn Badgley, Amanda Bynes
- Director: Will Gluck
- Producers: Will Gluck, Zane Devine
- Cinematographer: Michael Grady
- Editor: Susan Littenberg
- Music: Brad Segal
- Length: 92 Minutes

தமிழ் சினிமாக்களை போலவே ஆரம்பிக்கிறது. ஹீரோயின் ஒரு வேலாயி, அவரது தோழி ஒரு லோலாயி. ஒரு வாரக்கடைசி நாட்களை தன்னுடன் செலவிடும்படி ஹீரோயினிடம் தோழி கேட்கிறாள். ஹீரோயினுக்கு விருப்பமில்லை. எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் தான் ஒரு நண்பனுடன் டேட்டிங் போக இருப்பதாக பொய் சொல்கிறாள். திங்கட்கிழமை காலை தோழி ஹீரோயினிடம், டேட்டிங்கில் என்ன நடந்தது என்று கேட்டு நச்சரிக்கிறாள். மேலும், ஒருபடி மேலே சென்று அவளது கற்பை சந்தேகிக்கிறாள். தோழியின் தொல்லை தாங்கமுடியாமல் ஹீரோயின் “ஆமாம், நான் கற்பை இழந்துவிட்டேன்...” என்று பொய் சொல்ல பிரச்சனை ஆரம்பிக்கிறது.

ஹீரோயின் கற்பை இழந்துவிட்டதாக பள்ளி முழுவதும் வதந்தி, வதந்தீயாக பரவுகிறது. ஹீரோயினுடைய நன்மதிப்பு சீரழிகிறது. முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு என்ற எண்ணத்தில் ஹீரோயினும் பல்வேறு சூழ்நிலைகளில் இந்த பொய்யை வளர்க்கிறாள். ஒரு பொய் பல பொய்களாக உருவெடுக்கின்றன. ஒரு கட்டத்தில் ஹீரோயினை பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்று எதிர்ப்புக்குரல்கள் கிளம்புகின்றன. அதுவரை நடந்த சம்பவங்களை படத்தின் தலைப்பைப்போல ஈசியாக எடுத்துக்கொண்ட ஹீரோயின் முதல்முறையாக வருத்தப்படுகிறாள். ஊருக்கு உண்மை உரைக்க விழைகிறாள். அவளுடைய எண்ணம் நிறைவேறியதா...? இல்லையா...? என்பதே மீதிக்கதை.

பொதுவாகவே ஒவ்வொரு முறை மேலை நாட்டு திரைப்படங்களை பார்க்கும்போதும் என் எண்ணத்தில் தோன்றுவது இதுதான்: அவர்கள் வாழ்க்கையை எவ்வளவு ஈசியாக எடுத்துக்கொள்கிறார்கள். அவங்க நாட்டு ஹீரோக்களுக்கு அப்பாவை கொன்றவர்களை பழி வாங்கும் வேலையில்லை, அவர்களுக்கு ஊரில் இருக்கும் ரவுடிகளை லப்பர் வைத்து அழிக்கும் அவசியம் இல்லை. சந்தோஷமாக வருகிறார்கள், நம்மையும் சந்தோஷப்படுத்துகிறார்கள், தொடர்ந்து சந்தோஷமாக வாழ சொல்லிக்கொடுக்கிறார்கள். தட்ஸ் ரியல்லி க்ரேட்...!!!

இந்தப்படத்தில் ஹீரோவைப் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட். குடுகுடுப்பைக்காரர் மாதிரி அடிக்கடி வந்து ஹீரோயினுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு செல்கிறார். கடைசியில் அவர்தான் ஹீரோயினின் கை பிடிப்பார் என்பது மட்டும் புரிகிறது.

ஹீரோயின் எம்மா ஸ்டோன். இவரை பார்த்தால் அழகாக தெரியவில்லை. பார்க்க, பார்க்கத்தான் அழகாக தெரிகிறார். ஹீரோயினின் ஆங்கிலம் பேசும் ஸ்டைல், முக பாவனைகள் அசத்தல். இந்தப்படத்தின் மூலம் ஹீரோயின் நல்ல புகழை சம்பாதித்திருக்கிறார். சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

படம் ஆரம்பித்தபோது ஹீரோயினை தவிர எல்லோருமே அழகாக இருக்கிறார்களே என்று தோன்றியது. (எப்பவுமே செகண்ட் ஹீரோயினை ரசிப்பதுதானே நம்ம ஸ்டைல்). இந்தமுறை செகண்ட், தேர்ட், போர்த் எல்லாமே கலக்கல். முக்கியமாக மரியா பாத்திரத்தில் நடித்தவர் பார்ப்பதற்கு டென்னிஸ் வீராங்கனை அனா சாயலில் செம அழகு. ஹீரோயினின் தோழிகளாக வரும் ரீ பாத்திரமும், நீனா பாத்திரமும் கூட அழகில் அசத்துகிறார்கள், அடித்து சாத்துகிரார்கள்.

“The Scarlet Letter” எனும் நாவலை அடிப்படையாகக்கொண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம். சென்சாரில் பல கத்திரி வாங்கிதான் வெளிவந்தான். “F”ல் ஆரம்பிக்கும் ஆங்கில கெட்டவார்த்தை மட்டும் 47 இடங்களில் கத்திரிக்கப்பட்டதாம். ஆனாலும் படம் இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது.

கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் இளந்தாரிகள் மாத்திரம் பார்க்கலாம்.

பதிவிறக்க லிங்குகள்:
நேரடி லிங்குகள் கிடைக்கப்பெறவில்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 August 2011

ஹிட்லரின் தத்துபித்துவங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஹிட்லர் எழுதிய "மெய்ன் காம்ப்" புத்தகத்தின் தமிழ் பதிப்பான "எனது போராட்டம்" என்ற நூலில் இருந்து சில பத்திகளை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். இவை தத்துவங்களா அல்லது பித்துவங்களா என்று நீங்களே தரம் பிரித்துக்கொள்ளுங்கள். எழுத்துநடையில் ஆரிய வாசனை கலந்திருப்பது மொழிபெயர்ப்பாளர் கைங்கரியம் - அதற்காக வருந்துகிறேன்.

பத்திரிகைகள்:

பத்திரிக்கைகளின் சக்தி பிரமாதமென்று கூறப்படுகின்றது. அது உண்மையே. சகலருக்கும் பள்ளிக்கூட கல்வியானது இளம்வயதில் முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் எல்லோருக்கும் கல்வி போதித்து வருவது பத்திரிகைகள் தான். பத்திரிகை வாசிப்போர் மூன்று பிரிவினராவர்:
1.        தாங்கள் வாசிப்பதை எல்லாம் நம்புகிறவர்கள்.
2.        தாங்கள் வாசிக்கும் எதையும் நம்பாதவர்கள்.
3.        தாங்கள் வாசிப்பதை ஆராய்ந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டு எது நல்லது எது கெட்டதென்ற தீர்மானத்திற்கு வருவோர்.

முதலாவது கோஷ்டியினரின் தொகைதான் மிகவும் அதிகம். பெரும்பாலான பாமர ஜனங்களும் அக்கொஷ்டியைச் சேர்ந்தவர்களே. பிறர் சமைத்து வைத்த பதார்த்தங்களை, நல்லதாயினும் கெட்டதாயினும் ருசி பார்க்காமல் சாப்பிட்டுவிடுவதுபோல், அவர்கள் பிறர் எழுதும் விஷயங்களையும் அப்படியே நம்பிவிடுகிறார்கள். அதற்கு ஓரளவு திறமையின்மையும், ஓரளவு அறியாமையுமே காரணம். இதைத்தவிர, சோம்பேறித்தனம் காரணமாகவும் அவர்கள் தங்களுடைய யோசனா சக்தியை உபயோகிப்பதில்லை. எனவே தினசரி பிரச்சனைகள் விஷயத்தில் அவர்களுடைய நிலைமையை உருவாக்குவது முற்றிலும் பத்திரிக்கைகளேயாகும். சத்திய சந்தர்களும் பேரறிஞர்களும் எழுதுவதை எல்லாம் அவர்கள் நம்புவதன் மூலம் அளவற்ற நன்மையே உண்டாகும். ஆனால் பத்திரிகைகளில் எழுதுவோர் எல்லாம் அவ்விதமிருக்கின்றனரா? அயோக்கியர்களும், பொய்யர்களும் எழுதுவதை ஜனங்கள் நம்பிவிடுவதன் மூலம் பிரமாத ஆபத்தே நேரிடுகிறது.

இரண்டாவது கோஷ்டியினரின் தொகை முதல் கோஷ்டியினரின் தொகையைக் காட்டிலும் சிறிது குறைவாகும். இவர்களில் பலர் ஏற்கனவே முதல் கோஷ்டியிலிருந்தவர்கள். பத்திரிக்கைகளின் கூற்றுகளை நம்பி அடுக்கடுக்காக ஏற்பட்ட ஏமாற்றங்களால் சலித்துப்போனவர்கள். எனவே அச்சடித்த எதையும் அவர்கள் நம்பமாட்டார்கள். பத்திரிகைகளைக் கண்டாலே அவர்களுக்கு நஞ்சைக்கண்டது போலிருக்கும். பத்திரிக்கைகளை வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் அவைகளில் காணப்படும் விவரங்களை எல்லாம் வெறும் பொய்க் களஞ்சியங்கள் என்றும் தவறான கூற்றுகள் என்றும் தள்ளிவிடுவார்கள். அவ்வாறு நம்பிக்கையிழந்தவர்களைச் சமாளிப்பது தான் கடினமான காரியம். தீவிரமான எவ்வித அலுவலுக்கும் அவர்கள் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

மூன்றாவது கோஷ்டியினர் மிகச்சிறுபான்மையானவர் ஆவர். அவர்கள் தான் பகுத்தறிவுள்ளவர்கள்; எவ்விஷயத்தையும் தங்கள் சொந்த புத்தியையும், பகுத்தறிவையும் கொண்டு சீர்த்தூக்கிப் பார்த்து ஒரு முடிவிற்கு வரும் குணமுடையவர்கள். பத்திரிக்கைகளிலுள்ள விஷயங்களைக் கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டார்கள். ஒரேயடியாக மூடப்பிடிவாதங்கொண்டு நம்பாமலிருக்கவும் மாட்டார்கள். தங்கள் சொந்த அறிவை உபயோகித்து, சக்கையைத் தள்ளிவிட்டு சாத்திரத்தை மாத்திரமே கிரகிப்பார்கள். எனவே பத்திரிக்கைப் புளுகுகளால் அவர்களிடையே எவ்வித ஆபத்தும் ஏற்படாது.

சரித்திரப்பாடம்:
நம் பள்ளிக்கூடங்களில் உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது. சரித்திரப்பாடம் கற்றுக்கொடுப்பதன் நோக்கம், சில தேதிகளையும் சம்பவங்களையும் மாணவர்கள் மொந்தையுருப்போட்டு மனப்பாடம் செய்துக்கொள்ள வேண்டுமென்பதல்ல. இதைப் பெரும்பாலான உபாத்தியாயர்களும் உணர்ந்துக்கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட தளபதியோ அல்லது வேறெவறோ பிறந்த தினத்தையோ அல்லது ஓர் யுத்தம் ஆரம்பமான தேதியையோ, ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளையோ அறிந்துக்கொள்வதில் மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை எல்லாம் அவ்வளவு முக்கிய விஷயங்களா?

சரித்திர பிரசித்தமான சம்பவங்களுக்குக் காரணங்களையும், அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திரப்பாடத்தின் தத்துவம்.

டிஸ்கி: இந்த புத்தகத்தை படிப்பதற்கு இரவல் தந்த நண்பர் "அஞ்சாசிங்கம்" செல்வினுக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

வகுப்பறைக்குள் அலப்பறை - பாகம் 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்னுமா வகுப்பறை வயதை தாண்டவில்லை என்று கேட்பவர்களுக்கு, “வாழ்க்கையே ஒரு வகுப்பறை...” என்றெல்லாம் பின்நவீனத்துவ மொக்கையை போட விரும்பவில்லை. வகுப்பறை நேரம் முடிந்துவிட்டது. ஆனால் அலப்பறைதான் முடிந்த பாடில்லை. இது சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்பு வகுப்பறையில் என்னை வசப்படுத்திய ஒரு பெண்ணை பற்றிய பதிவு. (நம்புங்க... ஒரே ஒரு பொண்ணு தான்...).

குளிக்காமல் கொள்ளாமல்
வகுப்பறைக்கு வருகிறேன்...!
உன் கூந்தல் அருவியில்
குளிப்பதற்காக...!

பிடித்திருந்தது...!
நீ என் கைகளை
பிடித்திருந்தது...!

ஏய் பெண்ணே...!
என்னைச் சிலுவையில் அறைந்துவிடு...!
அந்தச் சிலுவை
உன் கழுத்துச்சங்கிலியில்
இருந்தால் மட்டும்...!

இவற்றுள் முதல் கவிதை முற்றிலும் உண்மை. (வகுப்பறை முழுவதும் நாரி நசநசத்துவிட்டது).

இரண்டாவது கவிதை முழுக்க முழுக்க கற்பனையே. அந்தப்பெண் என் முகத்தை கூட முழுமையாக பார்த்திருக்க மாட்டாள். (ஆம், ஒன் சைட் ஃபீலிங்க்ஸ்).

மூன்றாவது கவிதையின் முதல் வரியில் அவளின் பெயரை குறிப்பிட வேண்டுமென்று கொள்ளை ஆசை. அனுமதியில்லாமல் அவளது பெயரை எழுதுவது நாகரிகமில்லாததால் டன் கணக்கான வருத்தத்துடன் “பெண்ணே” என்று மையமாக எழுதிவிட்டேன்.

நடிகையின் படங்கள் கற்பனைக்காக மட்டுமே. மற்றபடி கவிதைகள் அவளைப் பற்றி மட்டுமே.

மூன்றாவது கவிதைக்கு டாப்சி சிலுவை அணிந்த படத்தை சிரமம்கொண்டு தேடினேன், கிடைக்கவில்லை. (அவள் ஒரு ஜாடையில் டாப்சி போலவே இருப்பாள். ஐயாம் கே.பி.கருப்பு)

மலரும் நினைவுகள்: இதன் முதல் பாகத்தை எழுதியபோது அதை கிண்டலடித்து உல்டா செய்து ஒரு கும்பல் காறித்துப்பியதை மறக்க முடியாது. என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் மோசமான நாள் அது. இந்தமுறை எத்தனை பேர் துப்ப போறாங்களோ...???

முந்தய பதிவுகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

பால்கனி – 12082011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நாட்டுநடப்பு என்ற பெயரில் முன்பொரு முறை எழுதிய செய்தி தொகுப்பைப் போல இனி வாராவாரம் உலக செய்திகளை தாங்கி பால்கனி என்ற பெயரில் பதிவிடுகிறேன். இதை பால்கனி (balcony) என்றும் எடுத்துக்கொள்வதும், பால் + கனி என்று எடுத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மிக்கல் பார்சா என்ற சேகரிப்பாளர், தன் வசமிருந்த மர்லின் மன்றோவின் "அந்தமாதிரியான" டேப்பை ஏலத்திற்கு விட்டு பெரும்பணம் சம்பாதிக்க நினைத்திருக்கிறார். ஏலத்தின் ஆரம்ப விலையாக 4,80,000 டாலர்கள் நிர்ணயிக்க, வாங்குவதற்கு ஒருத்தரும் முன்வரவில்லையாம். சரி, போனால் போகட்டும் பாதி விலைக்கு தருகிறேன் என்று கூவி அழைத்திருக்கிறார். அப்பொழுதும் யாரும் வந்ததாக தெரியவில்லை. காரணம், காணொளியில் இருப்பது மன்றோவே அல்ல. அவரைப்போலவே உள்ள வேறொரு நடிகை என்கின்றனர். ஆனால் பார்சாவோ அது 1946ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆறு நிமிட காணொளி. அதிலிருப்பது மன்றோதான் என்று மன்றாடுகிறார்.
(பர்மா பஜாருக்கு எப்போ வரும் #டவுட்)

ஆஸ்திரியா நாட்டின் வியன்னா மாநகரில் உள்ள ஒரு அருங்காட்சியக ஊழியர் கை, கால், முகம் கழுவியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா...? அவர் கை, கால், முகம் கழுவியது தண்ணீரில் அல்ல சிறுநீரில். பணி நீக்கம் செய்யப்பட 57 வயது நபர் இதுபற்றி கூறுகையில், நான் கடந்த 23 வருடங்களாக என்னுடைய சிறுநீரில்தான் முகம் கழுவி வருகிறேன். இது ஒரு யூரின் தெரபி சிகிச்சை. இது தன்னை நோய் நொடியில்லாமல் வாழ வழிவகை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
(அய்யய்யே... பாஸூ உச்சா போயிட்டார்...)

வெளிநாட்டு ஜொள்ளு:
பாப்பா பேரு பிப்பா
சூர்யா ஒரு பவுடர் விளம்பரத்தில், உலகிலேயே மிகச்சிறிய ஏசி என்று அறிமுகப்படுத்துவார். ஜப்பானில் அதைவிட சிறிய ஏசி கண்டுபிடித்திருக்கிறார்களாம். ஜப்பானின் தாங்கோ (Thanko) எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கூலரின் எடை சுமார் 28 கிராம் மட்டுமே. “பின் கூலர்” என்றழைக்கப்படும் இதனை நம் டையோடு இணைத்துக்கொள்ளலாம்.

USB மூலமாக இணைத்து இதனை பயன்படுத்தலாம் அல்லது பேட்டரி மூலமாகவும் பயன்படுத்தலாம் என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். பேட்டரி இணைப்பதன் மூலம் இதை பாக்கெட்டில் போட்டு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். இதன் விலை வெறும் 31 அமெரிக்க டாலர்கள் மட்டுமே...!

அமெரிக்கா தான் வாங்கும் கடன் உச்சவரம்பை 14.3 ட்ரில்லியன் டாலர்களிலிருந்து 16.7 ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தியிருக்கிறது. இதன் மூலமாக மிகப்பெரிய நிதி நெருக்கடி ஒன்று தற்காலிகமாக (கவனிக்க, தற்காலிகமாக) தவிர்க்கப்பட்டுள்ளது என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சி வந்தால் சைனா, இந்தியா, தைவான், கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் என்று தெரிகிறது.
(தெருவுக்கா போறேள்...??? – அதுக்குள்ளயா... இன்னும் நாள் இருக்கு...)

பொது இடங்களில் நடிகைகள் அணிந்துவரும் உடைகள் நம்மூரில் மட்டுமல்லாமல் மேலைநாடுகளிலும் சர்ச்சையை கிளப்புகின்றன. இதை ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக்கொள்ளும் கலாச்சாரத்தை அநேகமாக மேலைநாட்டு நடிகைகளிடமிருந்துதான் நம் நாட்டு நடிகைகள் கற்றிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். இந்த போட்டோகிராபர்ஸ் என்றாலே எனக்கு பிடிக்காது என்று சலித்துக்கொள்ளும் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோகன் சமீபத்தில் ஒரு உணவகத்திற்கு டீ-ஷர்ட் அணிந்து வந்திருக்கிறார். இதில் விந்தை என்னவென்றால் உள்ளாடை எதுவும் அணியவில்லை. மறந்துட்டாங்களாமாம்.
(உணவகத்திற்கு வந்தவர்களுக்கு செம தீனிதான்...)
(யோவ் மணி... எங்க ஸ்டில்லை தேடுற...? அதெல்லாம் இங்கே போடமுடியாது...)

முந்தய பதிவுகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

சாப்பாட்டுக்கடை – பெலித்தா நாசி கான்டார்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அலுவலக நண்பர்கள் சிலர் பெலித்தாவில் இரவு உணவு சாப்பிடப்போவதாக பேசிக்கொண்டனர். உணவகத்தின் பெயரே விந்தையாக இருந்ததால் என்னதான் இருக்கிறதென்று பார்த்துவிட முடிவு செய்தேன். சென்னையின் பல பிரபல உணவகங்கள் அமைந்துள்ள தி.நகர், சர் தியாகராயா சாலையில் அமைந்திருந்தது அந்த உணவகம். உணவகத்தின் முழுப்பெயர் “பெலித்தா நாசி கான்டார்”. (சரியாகத்தான் உச்சரிக்கிறேனா...???)

பெயர்க்காரணம்:
பெலித்தா – நம்மூர் சிம்னி விளக்கு வகையறாவில் ஒரு விளக்கை குறிக்கிறது. (பார்க்க: உணவகத்தின் லோகோ). நாசி கான்டார் – முதலில், ஹோட்டல் ஆரம்பித்தவரின் ஜாதிப்பெயராக இருக்குமென்று அபத்தமாக எண்ணினேன். நாசி என்றால் சாதம் / சோறு என்று பொருள். கான்டார் என்றால் வியாபாரிகள் பயன்படுத்தும் துலாபாரம் போன்றது. முன்பொரு காலத்தில் இதன் ஒரு பக்க கூடையில் சோற்றையும் மறுபுற கூடையில் சிக்கன், மட்டன், மீன், இறால் இத்யாதி குழம்புகளுடன் வியாபாரிகள் தெருத்தெருவாக மொபைல் வியாபாரம் செய்வார்களாம்.

மலேசிய உணவகம்:
தமிழ்நாட்டில் சரவண பவன் எந்த அளவிற்கு பிரபலமோ அதைவிட மலேசியாவில் பிரபலம் வாய்ந்த உணவகம் பெலித்தா. மலேசியாவில் மொத்தம் 27 கிளைகள் உள்ளதாக இவர்களுடைய மெனு கார்டை பார்த்து தெரிந்துக்கொண்டேன். திருநெல்வேலிக்கு அல்வா எப்படியோ, தூத்துக்குடிக்கு மக்ரோன் எப்படியோ அதுபோல மலேசியாவுக்கு, அதிலும் குறிப்பாக பினாங் மாநிலத்திற்கு விருந்தினர்கள் யாராவது வந்தால் பெலித்தாவில் சாப்பிட்டீர்களா என்று ஒரு பேச்சுக்காகவாவது விசாரிப்பார்களாம். மலேசியாவில் பெலித்தா உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்படுகின்றன. சென்னைவாசிகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை.

உணவகத்தின் வடிவமைப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும். இயற்கை சூழல் விரும்பிகளுக்காக வெளியே வராந்தா பகுதியில் சிலபல (சிம்மக்கல் கவனிக்க...!!!) மேஜைகள் இருந்தன. நான் சென்றது கோடைகாலம் என்ற காரணத்தினால் வெளியே ஒன்றிரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அதைத்தாண்டி உள்ளே சென்றால் ஏசி அறைகள். குடும்பத்துடன் வருபவர்களுக்கென்று தனியாக சோபா இருக்கைகளும் இருக்கின்றன. இது தவிர மாடியறையும் உள்ளது. அங்கே நான் சென்று பார்க்கவில்லை.

மெனு கார்டே நான்கைந்து பக்கங்களுக்கு விஸ்தாரமாக இருந்தது. பல உணவுவகைகளின் பெயர்களே வாயில் நுழையாத நிலையில் அத்தகைய உணவுவகைகள் வாயில் நுழையுமா என்று சந்தேகமாகவே இருந்தது. உடன் வந்த நண்பர்கள் மீன் குழம்பு சாப்பாடு நன்றாக இருக்குமென்று சொன்னதால் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நானும் அதையே ஆர்டர் செய்தேன். ஒரு தட்டில் சாப்பாடும், மற்றொரு கிண்ணத்தில் மீன் குழம்பும் வந்தது. இரண்டு வகையான காய்கறி பொரியல், கடித்துக்கொள்ள ஒரு அப்பளம், அப்புறம் வேகவைத்த வெண்டைக்காய் இரண்டு. இந்த காம்பினேஷன் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் பிடித்திருந்தது. இதையெல்லாம் விட எதிர் டேபிளில் குடும்பத்துடன் வந்து அமர்ந்த மலேசிய இளைஞியை ரொம்பவும் பிடித்திருந்தது.

ஐஸ் கச்சாங்
இட்லி, தோசை என்று நம்மூர் உணவுவகைகளை சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு பெலித்தா உண்மையிலேயே ஒரு ஒளிவிளக்குதான். அதிலும் நீங்கள் அசைவப்பிரியர்கள் என்றால் கொண்டாட்டம்தான். மீன் வகை உணவுகள் பெலித்தாவில் பிரசித்தம். இது தவிர இறால் உணவுவகையான சம்பல் உடாங், நண்டு வகையான கெடாம் மசாலா, மட்டன் குழம்புவகையான கம்பிங் ரோஸ், சிக்கன் குழம்பு ஐயாம் குர்மா ஆகியவைகளையும் ஒருபிடி பிடிக்கலாம். தெலுர் மசின் என்ற பெயரில் வேகவைத்த வாத்து முட்டைகள் கிடைக்கின்றன. முக்கியமாக ஐஸ் கச்சாங் என்ற ஐஸ்கிரீம் வகையறா உள்ளது. இதை தவறவிட்டால் பெலித்தாவிற்கு போனதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.

பொருளாதார அடிப்படையில் பார்த்தால் கொஞ்சம் காஸ்ட்லியான உணவகம்தான். இரண்டு பேர் திருப்தியாக சாப்பிட வேண்டுமென்றால் நானூறிலிருந்து எழுநூறு ரூபாய் வரை ஆகலாம்.

என்னுடைய ரேட்டிங்:
உணவு: 7/10
சர்வீஸ்: 6/10
செலவு: 5/10

உணவக முகவரி:
பெலித்தா நாசி கான்டார்,
எண்: 17 & 18, அப்பாசாமி டவர்ஸ்,
சர் தியாகராயா ரோடு, தி.நகர்,
சென்னை – 600017.

தொலைபேசி எண்: +91-44-24335759
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment