வணக்கம் மக்களே...
கிட்டத்தட்ட மொத்த பதிவுலகமே இந்த தொடர்பதிவை எழுதி முடித்தாகிவிட்டது. இப்போது நானும் எழுதுகிறேன். யாராவது தொடருவதற்கு அழைப்பார்கள் என்று காத்திருந்தேன். யாருமே அழைக்கவில்லை. வேறு வழியில்லாததால் அழைப்பில்லாமலே பதிவை தொடருகிறேன். அதுமட்டுமில்லாமல் இதனை ஐம்பதாவது பதிவாக வெளியிட வேண்டுமென்று விரும்பியதால் காத்திருந்தேன்.
1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆரம்பக்காலத்தில் "flying taurus" என்று வைத்திருந்தேன். (ஏன் அப்படி வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை). தொடர்ந்து எழுத ஆரம்பித்த பின்பு "philosophy prabhakaran" என்று மாற்றிக்கொண்டேன். இப்போது எங்கு பார்த்தாலும் தமிழாக்கம் தலை விரித்து ஆடுவதால் "தத்துபித்துவங்கள் பிரபாகரன்" என்று தமிழில் மாற்றிக்கொள்ளலாமா என்று யோசித்து வருகிறேன்.
எனது உண்மையான, முழு பெயர் பிரபாகரன். பெரும் பகுத்தறிவாளரான எம் தந்தை, விடுதலைப்புலி பிரபாகரனின் நினைவாக எனக்கு இந்த பெயரை வைத்ததாக ஒரு வரலாறு உண்டு. நான் எப்போதும் என் பெயரை N.R.Prabhakaran என்று இனிஷியலோடு சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். நண்பர்கள் சிலர் என்னை N R என்று அழைப்பதால் அதுவே கூட சமயங்களில் என் பெயராக மாறி விடுவதுண்டு.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...?
பொழுது போகாத ஒரு மாலைப்பொழுதில் கூகிள் அங்கிளை ஆராயந்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ப்ளாக்கர் என்று ஒன்று இருப்பதை அறிந்தேன். காசா...? பணமா...? சும்மா ஒன்னு ஆரம்பிச்சு வைப்போம்னு ஆரம்பிச்சேன்.
ஆரம்பத்தில் நான் ஆங்காங்கே படிக்கும், பார்க்கும் கதைகள், கவிதைகள், நகைச்சுவைகள், புகைப்படங்கள் இவற்றையெல்லாம் கொண்டு ஒரு பெட்டகமாக உருவாக்க வேண்டுமென்றே ஆரம்பித்தேன்.
நாளடைவில் எனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், பிறரிடம் நேரில் சொல்ல முடியாத விஷயங்களை பதிவுகள் மூலமாக சொல்ல முற்பட்டேன்.
இறுதியாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் படத்தின் விமர்சனம் எழுதியபோது தான் என் சமூகப்பயணம் ஆரம்பமானது.
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முன்பெல்லாம் ஒரு பதிவு எழுதியவுடன், ஆர்குட்டில் இருக்கும் 300 நண்பர்களுக்கும் தனித்தனியாக சென்று scrap அனுப்புவேன். அதில் ஒரு முப்பது பேர் வந்துபோவார்கள். யாராவது பின்னூட்டம் போடமாட்டார்களா என்று ஏங்குவேன். முதல் பாலோயரை பெற நான் என்ன பாடுபட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்.
பின்னர் எதேச்சையாக ஒரு நாள், தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்தேன். அப்போதுதான் நான் கேட்காமலே கேக் கிடைக்க ஆரம்பித்தது. உடனே தமிழிஷ், தமிழ் 10, போகி என்று திரட்டிகள் அனைத்திலும் பதிவு செய்தேன். எனக்கு யாரெல்லாம் பின்னூட்டம் போடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போட ஆரம்பித்தேன். புதுபதிவர்களை தேடிச்சென்று பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தினேன். இப்போது நூறை தாண்டி நடைபோட்டுக்கொண்டிருக்கிறேன்.
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நிறைய... அலுவலகத்தில் நடந்த சம்பவங்களை வைத்து இரண்டு பதிவு எழுதினேன். இதன் மூலம் அலுவலக நண்பர்கள் மத்தியில் என்னுடைய பதிவு பிரபல்யமடைந்தது. எனது அணித்தலைவருக்கும் எனக்கும் நல்ல புரிந்துக்கொள்ளுணர்வு ஏற்பட்டது.
எனது நண்பர்கள் பற்றிய பதிவொன்றினை எழுத முயற்சி செய்தேன். சில நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன எழுதப்போகிறான் என்ற ஆர்வத்தில் ஆதரவு தெரிவித்தார்கள். சில நண்பர்கள் நம்மைப் பற்றி எழுதிவிடுவானோ என்று பயந்து என்னிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்கள்.
கல்லூரியின் பட்டமளிப்பு விழா பற்றிய பதிவொன்றினை எழுதியபோது கல்லூரி விரிவுரையாளர்கள் மத்தியிலும் ஏனைய மாணவர்கள் மத்தியிலும் நன்மதிப்பு கிட்டியது.
எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக எனது தற்காலிக தாயாரை தாளித்து ஒரு பதிவை போட்டபோது கடும் எதிர்ப்பை சந்தித்தேன். பதிவை delete செய்யுமாறு கூக்குரல்கள் கிளம்பின. எழுதிய பதிவை பின்வாங்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறி என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றினேன்.
இப்போதுகூட காதலியை பற்றி ஒரு பதிவு எழுதப்போவதாக சொல்லி அவளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்.
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
முழுக்க முழுக்க பொழுது போக்கத்தான். பதிவெழுதுவதின் மூலம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட எனக்கு தெரியாது.
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்றே ஒன்று மட்டும்தான். அலுவலக ஆணி அடிக்கடி அதிகம் ஆவதால் தூங்குவதற்கே நேரமில்லாமல் தவிக்கிறேன். இதில் இன்னொரு வலைப்பதிவு வேறையா...! அட போங்கப்பா...!
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம்: இது ஒரு சூழ்நிலை கேள்வி. பதிவுலகில் பெரிய சண்டையே நடந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
பொறாமை என்று பார்த்தால் நிறைய இருக்கிறது. அதில் டாப்லிஸ்டில் இருப்பவர்கள் சேட்டைகாரனும், "அவிய்ங்க" ராசாவும். வரலாற்று சிறப்புமிக்க ஒரு பதிவை ஜஸ்ட் லைக் தட் எழுதி முடித்து விடக்கூடிய திறமைசாலிகள்.
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...?
இதை நான் சொல்லியே ஆகவேண்டும். நான் இந்த பதிவை தொடர்ந்ததே இந்த கேள்விக்காகத்தான்.
என் கல்லூரி நண்பன். அவன் பெயர் பொன் மகேஸ்வரன். இன்று வரை நான் எழுதிய அனைத்து பதிவுகளுக்கும் முதல் ரசிகனும் விமர்சகனும் அவனே. அவனுக்கு பதிவுலகம் அதிகம் பழக்கமில்லை. அதனால் அதிகம் பின்னூட்டம் போட்டதில்லை. ஆனால் பதிவெழுதி அரைமணி நேரத்தில் கால் வந்துவிடும். வரிவரியாக மொத்த பதிவையும் விமர்சனம் செய்துவிடுவான். அவன் என் பதிவுகளை பாராட்டி அனுப்பிய குறுந்தகவல்களை இன்னமும் என் செல்பேசியில் சேமித்து வைத்திருக்கிறேன்.
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...?
இது வரை என் புகைப்படத்தை வெளியிட்டதில்லை என்று நினைக்கிறேன். இப்போது உங்கள் பார்வைக்காக...
என்ன பாதி முகம் தான் தெரிகிறது என்று பார்க்கிறீர்களா...? மிச்சத்தை நூறாவது பதிவில் வெளியிடுகிறேன்...
கடைசியாக சொல்லிக்கொள்வது யாதெனில் சமூகப்பதிவுகளை தவிர்த்து இன்னும் நிறைய பர்சனல் பதிவுகள் எழுது வேண்டியிருக்கிறது. இன்னும் நிறைய பேரிடம் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்லுவேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|