6 November 2010

சிறகொடிந்த மைனாக்கள் - மைனா விமர்சனம்

வணக்கம் மக்களே... 

ஒரு வழியாக தீபாவளி ஓய்ந்தபிறகு நேற்றிரவு மைனா படம் பார்க்க சென்றிருந்தேன். முன்பதிவு எதுவும் செய்யாததால் எங்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் M.S.M திரையரங்கிலேயே பார்க்கலாமென்று முடிவு செய்தோம். 10 மணி படத்திற்கு 9.40க்கே உள்ளே போய் உட்கார்ந்துக்கொண்டோம். முதலில் சுமார் முப்பது நாப்பது பேர் இருந்தது போல தெரிந்தது. ஆனால் படம் ஆரம்பிக்கும் வேளையில் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்துவிட்டது.

கதைச்சுருக்கம்
விவரம் தெரிந்த வயதில் இருந்து ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்களின் கதை. கதை தேனீ மாவட்டம் குரங்குனி என்ற மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கிறது. மனைவியையும் சிறுவயது மகளையும் (நாயகி) ஒரு குடிகார கணவன் கைவிட்டுவிட அவர்களது தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான் ஒரு சின்னப்பையன் (நாயகன்). நாளடைவில் சிறுவர்கள் வளர அவர்களது காதலும் வளர்கிறது. பின்பு ஒருநாள் நாயகனும் நாயகியும் முத்தம் கொடுத்துக்கொள்வதை நாயகியின் அம்மா பார்த்துவிடுகிறார். காதலுக்கு தடையாய் இருக்கும் அவரை நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டேடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்ய அதன் பிறகு நடக்கும் திருடன் போலீஸ் விளையாட்டே கதை. இதற்கு மேல கதையை சொல்லி உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை.

தீபாவளியும் தீபாவளிக்கு முந்தைய நாள் நடக்கும் சம்பவங்களே கதை. வழக்கமான தமிழ் சினிமா கிராமத்து காதல் கதைகளைப் போலவே படம் ஆரம்பிக்கிறது. ஹீரோ சிறையில் இருந்து தப்பித்து வந்தபிறகே படம் சூடுபிடிக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே சிறுவர்கள் விளையாட பந்துக்கு காசு கொடுக்கும் காட்சியில் போலீஸ் அதிகாரியின் குணத்தையும், தனது அண்ணிகளை எல்லாம் நாசூக்காக புடவை மாற்ற வைக்கும் காட்சியில் போலீஸ்காரரின் மனைவியின் குணத்தையும் காட்டிவிடுகிறார்கள். இடைவேளை வரை சாதாரண ஒரு தமிழ் படமாக கதை நகர, இரண்டாம் பத்தியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

நாயகன்
விதார்த் தொட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர். நடிப்பில் பெரிய சிகரங்களை தொடாவிடிலும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சண்டித்தனம் செய்யும் கிராமத்து ஆளாக அறிமுகமாகிறார். ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். உதாரணத்துக்கு எந்த மகராசன் தூக்கிட்டு போகப்போறானோ... என்று நாயகியைப் பார்த்து ஒரு பெண்மணி சொல்ல அந்தப் பெண்ணிற்கு குட்டு வைக்கும் காட்சி.

நாயகி
அமலா ஏற்கனவே சிந்து சமவெளி படத்தில் அனாகாவாக அறிமுகமானவர். ஆனால் இந்தப் படத்திலும் அறிமுகம் என்றே போடுகிறார்கள். இந்தப் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. மற்றபடி அமலா ஓர் பேரழகி. சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இந்தக் கூற்றை மறுக்க மாட்டார்கள். பார்ப்பதற்கு கொஞ்சம் தமன்னா சாயலில் இருக்கும் இவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்.

தம்பி ராமையா
சில்லுனு ஒரு காதல் உட்பட பல படங்களில் வடிவேலுவுக்கு எடுபிடியாக நடித்தவர். இவர் தான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை எடுத்தவர் என இன்றுதான் தெரிந்துக்கொண்டேன். ஜெயில் வார்டன் கேரக்டரில் நடித்திருக்கிறார். நாயகன் நாயகிக்கு அடுத்தபடியாக அல்லது அவர்களுக்கு இணையான கேரக்டர் என்று சொல்லலாம். காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குகிறார். நடிப்பில் ஆங்காங்கே வடிவேலுவின் சாயல் தெரிக்கிறது. உதாரணத்துக்கு, காட்டில் புலி படத்தை பார்த்து பயப்படும் காட்சி.

மற்றும் பலர்
இவர்களைத் தவிர முக்கிய கேரக்டர் என்று பார்த்தால் போலீஸ் அதிகாரியாக வரும் சேது. ஜஸ்ட் லைக் தட் சிறப்பாக நடித்திருக்கிறார். உதாரணம் பேருந்து விபத்துக்காட்சி. இது தவிர பெயர் தெரியாத சில நடிக நடிகையர். நாயகனின் தந்தை, நாயகியின் தாய், போலீஸ்காரரின் மனைவி என்று அனைவருமே அவரவர் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசை
இமான் இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பல் என்றே சொல்லலாம். ஆனால் பாடல்கள் ஓரளவிற்கு சுமார் ரகம். ஜிங்கி ஜிங்கி... என்று ஆரம்பிக்கும் பாடல் குத்துப்பாடல் இல்லாத குறையை தீர்க்கிறது. மற்ற பாடல்களில் நீயும் நானும்... என்று ஆரம்பிக்கும் பாடலும் கையப் புடி... என்று ஆரம்பிக்கும் பாடலும் மனதில் நிற்கிறது.

இன்ன பிற
படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டியே ஆகவேண்டும். மலைவழிச்சாலையில் கதை பயணிப்பதால் புகுந்து விளையாடி இருக்கிறார். வசனங்களில் ஆங்காங்கே பளிச் தெரிகிறது. ஆனால் அட்ராசக்க ஸ்டைலில் வசனங்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து பதிவு போட முடியவில்லை.

எனக்குப் பிடித்த காட்சி
பஸ் விபத்து காட்சி நாயகன், நாயகி, இரண்டு போலீஸ் அதிகாரிகள், சக பயணிகள் உட்பட மலைச்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கையில் பஸ் மலையில் இருந்து தவறி விழப்போக எப்படியோ விழாமல் விளிம்பில் நிற்கிறது. பேருந்தில் இருந்த அனைவரும் தப்பித்துவிட இரண்டு போலீஸ் அதிகாரிகள் மட்டும் பஸ்சில் சிக்கித் தவிக்கிறார்கள். அதிலும் சேதுவின் நிலை ரொம்பவும் மோசம். ஒரு கண்ணாடி மீது படித்திருக்கும் அவர் கொஞ்சம் அசைந்தால் கூட கண்ணாடி கிழிந்து அதலபாதாளத்தில் விழுந்து விடும் அபாயம். அப்போது நாயகன் அவர்களைக் காப்பாற்றும் காட்சி அருமை. காட்சி அமைப்பு, வசனம் இரண்டிலும் என் மனதில் நின்ற காட்சி இதுதான்.

சில குறைகள்:
-          நாயகி பூப்பெய்தும் காட்சி. இத்தகைய காட்சிகளை தமிழ் சினிமாவில் காமெடிக்காக பயன்படுத்துவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
-          நாயகி தேர்வுக்கு படிக்க வெளிச்சமில்லாத பொழுது நாயகன் மின்மினிப்பூச்சிகளை பாட்டிலில் போட்டு கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.
-          சோகமான க்ளைமாக்ஸ் தான் வைப்பேன் இன்று இயக்குனர்கள் ஏன்தான் அடம பிடிக்கிறார்களோ...?

தீர்ப்பு
ஏற்கனவே தமிழ் சினிமாவில் இதே போன்ற உருக்கமான திரைப்படங்கள் நிறைய வந்து இருப்பதால் இந்த படத்தை மக்கள் ரசிப்பது கஷ்டம். நெகட்டிவான க்ளைமாக்ஸை தவிர்த்து இருக்கலாம். சில காட்சிகளில் பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்கலாம் திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது. காதலில் இருப்பவர்கள் என்றால் ரசிக்கலாம். மற்றவர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம். யாராவது படத்தை பார்க்க முடிவு செய்திருந்தால் தயவுசெய்து தனியாக சென்று பாருங்கள். நான்கைந்து நண்பர்களோடு சென்று கலாட்டா செய்தபடி பார்ப்பதெல்லாம் படத்தின் மீது தவறான புரிதலையே ஏற்படுத்தும்.

படம் நன்றாக இருக்கிறது ஆனால் ஓடாது (ங்கொய்யால நம்ம ஜனங்க என்னைக்கு நல்ல படங்களை ஓட வச்சிருக்காங்க)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 November 2010

கோலி அப்டேட்ஸ் - தீபாவளி ஸ்பெஷல்

நந்தலாலா ரிலீஸ்
சில நாட்களுக்கு முன்பு எனது பதிவொன்றில் நந்தலாலா ரிலீஸ் ஆகாததை பற்றி புலம்பித் தள்ளியிருந்தேன். அது யாருடைய காதிலாவது கேட்டுவிட்டதா என்று தெரியவில்லை. நேற்றைய செய்தித்தாளை பிரித்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி.

நவம்பர் 26ல் இந்தக் குழந்தை பிறக்கின்றது என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். தீபாவளிக்கு கேட்காமலே புதுத்துணி வாங்கி கொடுத்தது போல இருந்தது. ஒரே ஒரு குறை என்னவென்றால் குறிப்பிட்ட நாளன்று சில ஆணிகள் இருப்பதால் முதல் நாள் முதல் காட்சி பார்க்கமுடியாது. நைட் ஷோ பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன். இன்னமும் தியேட்டர் பெயர்கள் எதுவும் அறிவிக்கப்படாததால் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது. ம்ம்ம்... நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

25வது நாள் வெற்றி விழா
முன்பெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடியதென்றால் 175வது நாளை வெள்ளிவிழா என்ற பெயரில் விழா எடுத்து கொண்டாடுவார்கள். பிறகு தொலைகாட்சியின் தாக்கம் அதிகரித்ததால் 100வது நாளையே விமரிசையாக கொண்டாட ஆரம்பித்தார்கள். இப்பொழுதெல்லாம் முதலுக்கே மோசம், போட்ட காசை எடுத்தாலே போதும்னு சொல்றாங்க. ஆனா இங்கே ஒருத்தங்க அவங்க படம் 25 நாள் ஓடினதை விழா எடுத்து கொண்டாடியிருக்காங்க. என்ன படம்னு கேக்குறீங்களா... கலைத்தாயின் தங்கபுதல்வன் அமரேஷ் கணேஷ் நடித்த நானே என்னுள் இல்லை தான். இந்த படம் வெளிவந்த ஒரு தியேட்டர் ஆபரேட்டரிடம் படம் பற்றி கருத்து கேட்டபோது நானே தியேட்டருக்குள் இல்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். என்னவோ... இவங்களே படம் எடுத்து, இவங்களே இயக்கி, இவங்களே நடிச்சு, இவங்களே விழாவும் கொண்டாடுறாங்க. காக்கைக்கும் தன குஞ்சு பொன்குஞ்சு.

குமுதத்தின் Xclusive
நேற்று வெளிவந்த குமுதத்தில் கமலின் Xclusive பேட்டி என்று கடைகளில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

கமல் மீதுகொண்ட காதலில் பத்து ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கினேன். முதலில் கமலைப் பற்றி நாலு வரிகள்... அதன்பிறகு மூன்று பக்கங்களுக்கு விளம்பரம். மறுபடி ஒரு அரைப்பக்கத்திற்கு கமல் பேட்டி... அதன்பிறகு ஒரு பக்க விளம்பரம். கடைசியாக ஒரு முக்கால் பக்க பேட்டியை போட்டுவிட்டு முடிவில் கவிதை, கலைஞர், லட்சியம், மன்மதன் அம்பு அடுத்த இதழில்... என்று அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருந்தார்கள். எனக்கு முழு போதையிலிருக்கும்போது மோர் குடித்தது போல இருந்தது. அப்போ என்ன மயித்தை தான் இந்த இதழில் கேட்டார்கள் என்று தெரியவில்லை.

தீபாவளி ரேஸ்
தீபாவளிக்கு உத்தமப்புத்திரன், வ, மைனா, வல்லக்கோட்டை ஆகிய நான்கு தமிழ் படங்கள் உட்பட Action Replay என்ற ஹிந்தி படமும் Street Dance 3D என்ற ஆங்கிலப் படமும் வெளியாகிறது. இந்தப் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தபோது தீபாவளியோடு எந்திரன் என்னும் நரகாசுரன் ஒழிந்துவிடுவான் என்றே தோன்றுகிறது. தீபாவளி படங்களில் வ பார்க்கலாமா அல்லது மைனா பார்க்கலாமா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. உங்கள் கருத்துக்களை இந்த வலைப்பூவில் ஓரத்தில் இருக்கும் ஓட்டுப்பெட்டியில் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

உலகப்பட ஆர்வம்
கேபிள் சங்கர், பார்த்ததும் படித்ததும், அட்ராசக்க இவர்களின் பதிவுகளை அடிக்கடி படித்து படித்து தமிழ் சினிமாவின் மொக்கை படங்களை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. நேற்று ஒரு நண்பனை நீதானா அவன் படத்தை பார்க்கக் கூப்பிட்டதற்கு அவனா நீ என்றுக் கேட்டான். அதோடு விடாமல் அசிங்க அசிங்கமாக வசைமொழி பாடினான். சரி, இந்த ஒருமுறை விட்டுவிடுவோம் மேதை அல்லது லத்திகா ரிலீஸ் ஆகும்போது நிச்சயம் பையனை கடா வெட்டிவிடவேண்டுமென மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

மேலே குறிப்பிட்ட மேதை மற்றும் லத்திகா படங்கள் எப்போ ரிலீசாகும்னு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

டிஸ்கி: பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடாம போறவங்களுக்கு சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்னி படத்தின் டி.வி.டி பரிசாக அனுப்பி வைக்கப்படும். நல்ல பதிவு, நல்ல தொகுப்பு, நல்ல பகிர்வு, nice, :) இந்த மாதிரியெல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டீங்கன்னா டாகுடர் லத்திகா சீனிவாசனை வச்சி கடிக்க விட்ருவோம்.

Post Comment