3 May 2011

பிரபா ஒயின்ஷாப் - 03052011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முஸ்கி: பி.எஸ்.என்.எல் கனெக்ஷன் நேரம் காலம் புரியாமல் பெப்பே காட்டுவதால் நேற்று வெளிவர வேண்டிய ஒயின்ஷாப் இடுகை இன்று...

நாட்டுநடப்பைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத நண்பர் ஒருவர் திடீரென டைம்ஸ் ஆப் இந்தியா, என்.டி.டி.வி என்று செய்தி இணையதளங்களை பார்வையிட்டபடி இருந்தார். என்னவென்று விசாரித்தேன். மனிதர் வார இறுதியை கோவாவில் கொண்டாடுவதாக முடிவு செய்து டிக்கெட் எடுத்து வைத்திருந்திருக்கிறார். இப்போது விமானிகள் ஸ்ட்ரைக் காரணமாக விமானம் பறக்குமா பறக்காதா...? பறக்கவில்லை என்றால் டிக்கெட் பணம் மீண்டும் கிடைக்குமா...? என்று தவித்திருக்கிறார். பாவம்யா...


சில படங்களைத் திரையரங்கம் சென்று மூன்று மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஆனால் அதே படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது வசீகரிக்கும். அப்படி ஒரு படம்தான் பதினாறு. சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்ப, அரைத்த மாவுதான் என்றாலும் கிராமத்துக்காதல் சம்பந்தப்பட்ட போர்ஷன் முடியும்வரை படத்தில் இருந்து கவனம் சிதறவில்லை.


ஞாயிறு இரவு எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் சர்வதேச சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜின் பேட்டி ஒளிபரப்பானது. மனிதர் சீரியசாக பேசியே சிரிக்க வைக்கிறார். முழு நிகழ்ச்சியையும் கண்டுகழித்தேன்.


கிழக்கு பதிப்பகத்தின் டிஸ்கவுண்ட் சேல் இந்தமுறை ராயபுரம் வரை பாய்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சுஜாதாவின் மாயா, தீண்டும் இன்பம், ஹாய் மதன் இரண்டு பாகங்கள் ஆகியவைகளை கண்டதும் லபக்கினேன். பின்னர், ரஜினி சப்தமா..? சகாப்தமா...? உள்ளிட்ட மேலும் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ஒருகாலத்தில் 100, 150 ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகங்கள் இப்போது 10, 20 ரூபாய்க்கு கிடைப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது.


இணைய நண்பர் ஒருவர் அவரது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருந்தார். ஏற்கனவே அவரது திருமணத்திற்கு அழைத்தும் செல்லாததால் இந்தமுறை கட்டாயம் சென்றுவிட வேண்டுமென்று கிளம்பினேன். உள்ளே நுழைந்ததும் நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்ட விதமாக சிரித்தமுகத்துடன் வரவேற்று உட்கார வைத்தார். சுமார், அரைமணிநேரம் கழித்து என்னிடம் வந்து ஓ... நீங்கதான் பிரபாகரா...? என்று கேட்க செம பல்பு வாங்கினேன்.

இந்தவார ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் காஜல் அகர்வால் செம க்யூட். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல...

ட்வீட் எடு கொண்டாடு:
ராதா மகளிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது! # இது வளர்த்த புருவமா முன்னூறு ரூவா குடுத்து வரைஞ்ச புருவமா!

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: கலைஞர் பேட்டி #யாருய்யா சொன்னா, எங்க முதல்வர் மக்கள் நல மேம்பாட்டுக்கு உழைப்பதில்லை என்று. வாழ்க முதல்வர்

முதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடிக்காமல், தான் செத்துப் போவதுபோல ஒரு படம் செய்திருக்கிறார் சொம்பு # வானம்

மே டே வாழ்த்து சொன்னவங்களை விட அஜீத் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவங்க தான் அதிகம் போல. ஹ்ம்ம்


பதிவுலகில் புதியவர்: விஜய்கோபால்சாமி
பழைய பதிவர்தான், ஆனாலும் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. இன்ட்லியில் உலவிக்கொண்டிருந்தபோது கிடைத்தார். லேட்டஸ்டாக கருணாநிதி டுவிட்டர் கணக்கு வைத்திருந்தால்...? எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறார் பாருங்கள். பாராட்டுவிழா நடத்துபவர்களுக்கு மத்தியில் பாசத்தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்.


இந்த வார பாடல்:
உத்தமபுத்திரன் படத்தில் இடிச்ச பச்சரிசி... என்றொரு கொண்டாட்டப்பாடல். வழக்கமாக இந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்ததுமே டபக்கென்று சேனல் மாற்றிவிடுவேன். சில நாட்களுக்கு முன்பு வேறு வழியில்லாமல் கேட்டேன். நெனச்ச கனவு ஒன்னு நெஜமா நடந்திருச்சு... என்று ஆரம்பிக்கும் சரணம் வசீகரித்தது. அந்த பெண்குரல் செவிக்கினிமை. பாடியவர் பெயர் சந்கீதாவாம்.


இந்த வார புகைப்படம்:
இந்த போட்டோ உண்மையானது தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அந்த வண்டிகள் விழாமல் செல்லும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.


இந்த வார புதிர்:
ம்ம்ம்... எவ்வளவு கஷ்டமான புதிரைக் கேட்டாலும் பத்து பதினைந்து பேர் சரியான பதிலை சொல்லிவிடுகிறீர்கள். அப்புறம், மின்புத்தகம் வரலைன்னு சலிப்பு வேறு. இனி புதிர் போடுவதாக இல்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 May 2011

நான் அஜித் ரசிகன் - ஏன்...?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்று பிறந்தநாள் காணும் "தல" அஜித் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களோடு இந்த இடுகையையும் சமர்ப்பிக்கிறேன். நான் அஜித் ரசிகனானது எப்படி என்பதை இந்த இடுகையில் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்...


சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பப்படம் என்ற பெயரில் சரத்குமார், சத்யராஜ் படங்களுக்கு மட்டுமே என்னை அழைத்துச்செல்வார்கள். உனக்கு பிடித்த நடிகர் யாரென்று யாராவது கேட்டால் சரத்குமார் என்றுதான் சொல்லுவேன். என்னுடைய விருப்பமே இல்லாமல் அந்த விருப்பம் என்மீது திணிக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதல்முறையாக நண்பர்களுடன் திரையரங்கம் செல்லும் உரிமை கிடைத்தது. அதுவும் தூரத்தில் உள்ள மாநகர திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை. நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓடியன்மணிக்கோ, எம்.எஸ்.எம் திரையரங்கிற்கோ தான் செல்லவேண்டும். வெங்கடேஸ்வரா, ராகவேந்திரா திரையரங்குகளில் பிட்டுப்படங்கள் மட்டுமே வெளியிடுவார்கள் என்பதால் அதற்கும் அனுமதி மறுப்பு தான்.

ஆக, இந்த இரண்டு திரையரங்குகளில் ஒன்றில் தீனாவும் மற்றொன்றில் ஃபிரண்ட்ஸ் படமும் ஓடிக்கொண்டிருந்தன. நான் தன்னிச்சையாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாத காரணத்தால் நண்பர்கள் முடிவின்படி தீனா படத்திற்கு சென்றோம். அதுவே அஜித்துக்கும் எனக்குமான உறவின் முதல் படி. அடிதடி, ஆக்ஷன், பஞ்ச் டயலாக் போன்றவற்றால் சூடேறி கொஞ்சம் அஜித் கவர ஆரம்பித்தார்.


கொஞ்ச நாளைக்கு அந்த பஞ்ச் டயலாக்குகளை மனப்பாடம் செய்து சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எனது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதமாக சிட்டிசன் வெளியானது. படம் வெளியான இரண்டாவது நாளே பார்த்து அப்புறம் வெறியாகி நாற்பத்தைந்து நாட்களுக்குள் படத்தை கெட்டப்புக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒன்பது முறை பார்த்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும் பேனருக்கு பாலபிஷேகம் செய்வது, கோஷம் போடுவது போன்ற அபத்தங்கள் எதையும் செய்ததில்லை. அதற்கு காரணம் எனக்கு அதெல்லாம் செய்யத் தெரியாதது என்று கூட சொல்லலாம். அதற்கடுத்து ரெட் படத்தின் தோல்வியால் கொஞ்சம் வேகம் குறைந்தது.

அடுத்த ஆண்டே தளபதியின் பகவதியும், தலயின் வில்லனும் ஒரே நாளில் வெளியானது. பள்ளியில் அஜித் ரசிகர்கள் - விஜய் ரசிகர்கள் என்று குருப் அமைத்துக்கொண்டு சண்டை போட்டதுண்டு. அப்புறம் பத்தாம் வகுப்பு வந்ததும் கொஞ்சம் படிப்பு, பருவப்பெண்கள் என்று திசைமாறி சினிமா ஆர்வம்  குறைந்தது. அஜித்துக்கும் ராஜா, ஆஞ்சநேயா, ஜனா என்று தொடர்ந்து சறுக்கல்கள்.

அட்டகாசம் படம் வெளிவரும்போது அடித்துபிடித்து முதல்நாள் முதல்காட்சி பார்க்கும் அளவிற்கு தேறியிருந்தேன். அநேகமாக அதற்குப்பின் வெளிவந்த அனைத்து அஜித் படங்களையும் முதல்நாள் முதல்காட்சி தான் பார்த்தேன் என்று எண்ணுகிறேன் (ஜி படத்தை தவிர்த்து). நாளடைவில் அஜித் படங்கள் மொக்கையாக இருந்தாலும் தல என்ற மந்திரச்சொல்லுக்காகவே படத்தை ரசிக்க ஆரம்பித்தேன். மேலும், அஜீத்தைப் பற்றி ஊடகங்கள் சொன்ன பர்சனல் பக்கங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். அவர் சத்தமில்லாமல் செய்துவரும் சமூக சேவைகள், அவரது மேன்லிநெஸ், ஜென்டில்நெஸ் என்று நிறைய பிடித்திருந்தது.

பில்லா படம் வெளிவந்தபோது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்கள் பலரும் அஜித் ரசிகர்கள் என்பதால் விடுதி முழுவதும் திருவிழா போல காட்சியளித்தது. குறிப்பாக பில்லா பாடல்கள், ட்ரைலர் வெளியான தினங்களெல்லாம் கொண்டாட்டம்தான். டிவி ரூமில் பில்லா ட்ரைலர் சத்தத்தை கேட்டால் எல்லா ரூம்களில் இருந்தும் நண்பர்கள் ஓடி வருவார்கள்.

ஏகன் படம் வெளிவந்தபோது ஆர்குட் அஜித் கம்யூனிட்டி தான் எனது இன்னொரு வீடு. சதா சர்வகாலமும் அஜீத்தைப் பற்றிய செய்திகளை படித்து  அகமகிழ்ந்துக் கொண்டிருப்பேன். போகப்போக அந்த ரசிக மோகம் கொஞ்சம் சலிக்க ஆரம்பித்தது என்றால் அது அந்த ஆர்குட் கம்யூனிட்டி அஜித் ரசிகர்கள் தான் காரணம் என்று சொல்லுவேன். ஏகன் படம் வெளியாவதற்கு முந்தய இரவு. மறுநாள் காலைக்காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ப்ரீமியர் ஷோ பார்த்த ரசிகர்கள் சிலர் அஜித் - ஜெயராம் காமெடி அட்டகாசமாக இருக்கிறது, அஜித்தின் டான்ஸ், இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்றெல்லாம் வெறியேற்றிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை அந்த எதிர்பார்ப்புகளோடு படம்பார்த்து எல்லாம் தவிடுபொடியாக, அஜித் ஃபேன்ஸ் என்றாலே அட கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு கடுப்பாகிவிட்டது.

ஆனலும் அஜித் மீதுள்ள கிரேஸ் மட்டும் குறையவில்லை. குறையவும் குறையாது. அசல் படம் வெளிவந்தபோது நான் பதிவுலகின் அரவணைப்பில் இருந்தேன். அப்போது ஒரு மேடைப்பேச்சில் "மிரட்டுறாங்க..." என்று தைரியமாக அஜித் பேசியது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, "நான் நடிகன் அரசியலுக்கு வரமாட்டேன்..." என்று அழுத்தம் திருத்தமாக கூறியது போன்ற சம்பவங்கள் அவர் மீதுகொண்ட மரியாதை எக்கச்சக்கமாக கூடியது.


இப்போது மங்காத்தா வெளிவரவுள்ள நிலையில் 50வது படம், கிரிக்கெட் சூதாட்ட கதை, தாராவி, நெகடிவ் ரோல், நடிகர் பட்டாளம், வெங்கட் பிரபு, யுவன் என்று பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளோடு காத்துக்கொண்டிருக்கிறேன். காத்துக்கொண்டிருக்கிறோம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment