10 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 10072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நியூ படத்தில் வரும் மணிவண்ணன் கதாபாத்திரம் (சயின்ஸ்) நினைவிருக்கிறதா ? தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த பாத்திரத்தின் அறிமுகக்காட்சி பிடிக்கும். தினசரி அலாரம் ‘அடித்து’ எழுப்பி, பல் துலக்க வைத்து, நீச்சல் குளத்தில் தள்ளி குளிக்க வைத்து, உலர வைத்து, உடை மாற்றித் தயார் செய்ய ஒரு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா. கொசு - தேனீ கலப்பினம், இரட்டை வால் நாய் (அவர்கள் இரண்டாக்க நினைத்தது வேறொன்றை), இரண்டடி தென்னை என்று அதிலே காட்டப்படும் மரபின மாற்றங்களின் காலம் வெகு தொலைவில் இல்லை. சொல்லப்போனால் இயற்கையாகவும், செயற்கையாகவும் ஏற்கனவே நிறைய நடந்திருக்கிறது. உதாரணத்திற்கு, லைகர் (லயன் + டைகர்) என்கிற ஜந்துவைப் பற்றி கூகுள் செய்து பாருங்கள். விவசாயத்தில் ஏதேதோ மரபின மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. வாழைப்பழத்தின் நீளத்தை அதிகரிக்கிறார்கள், கருப்பு திராட்சைகள் கொட்டையில்லாமல் வருகின்றன. விரைவாக காய்க்கக்கூடிய தென்னைகள் கூட வந்துவிட்டன. நான் சொல்ல வந்தது விவசாயப் புரட்சியைப் பற்றியதல்ல என்பதால் அடுத்த பத்திக்கு சென்றுவிடுவோம்.

எஸ்.ஜே.சூர்யா மேலே குறிப்பிட்ட காட்சியில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார் / தவிர்த்துவிட்டார். கொல்லைக்கு போவது. அதனை அப்படியே சொல்வோம். ஏனெனில் இன்னமும் பெருவாரியான இந்திய கிராமங்களில் கொல்லையில் தான் போகிறார்கள். படிப்பறிவு, பணவசதி எல்லாம் வந்துவிட்டால் கூட கொல்லைக்கு போவது என்பதை ஒரு மரபாகவே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் நகர்ப்புறங்களில் ஸ்க்வாட் டாய்லெட் எனப்படும் குத்தவைத்து உட்காரும் முறையில் இருந்து முன்னேறி வெஸ்டர்ன் டாய்லெட் பரவலாகி வருகிறது. எனக்கு சில வருடங்கள் முன்பு வரை வெஸ்டர்ன் கழிவறை பழக்கமே இல்லை. வெளிப்படையாக சொல்வதென்றால் பயன்படுத்தத் தெரியாது. மேலும் ஸ்க்வாட்டில் உட்கார்ந்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துகொள்வதைப் போல வெஸ்டர்ன் சுலபமானதல்ல என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் வாட்டர் கன் என்றழைக்கப்படும் ஃபாஸட்டை இஸ்லாமிய மற்றும் ஆசிய நாட்டு மக்கள் மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்வது அவர்களுக்கு அசெளகரியமானது. 

பிடெட்
இப்போது பிடெட் (Bidet) எனும் நவீன கழிவறை வந்திருக்கிறது. நீங்கள் ஒருவேளை விமான நிலையம் அல்லது நட்சத்திர விடுதிகளில் பார்த்திருக்கலாம். ஜப்பானில் பிரபலம். எழுபது சதவிகித ஜப்பான் வீடுகளில் பிடெட் புழக்கத்தில் இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. பிடெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு பொத்தானை அழுத்தினால் உங்கள் மலத்துவாரத்தை நோக்கி இயந்திரம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும். மேலும் முன்புறம், பின்புறம், தண்ணீரின் வேகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வெவ்வேறு பொத்தான்கள் உள்ளன. 

உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. உங்களுடைய சொந்த மலத்தைக் கூட நீங்கள் தொட வேண்டிய கட்டாயமில்லை. அதே சமயத்தில், உங்கள் மலத்தை மற்றவர் கையாளும் கொடுமையும் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அதிகம். ஐ.ஆர்.சி.டி.சி ரயில்களில் கழிப்பதெல்லாம் என்ன ஆகிறது என்று யோசித்திருக்கிறீர்களா ? சட்டப்பூர்வமாக இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை 1993ல் தடை செய்துவிட்டார்கள். சட்டப்பூர்வமாக மட்டும் ! மேலும் மலம் அள்ளுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழிலாகவும், அதுவே அவர்கள் மீதான அடக்குமுறையாகவும் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. 

மனிதர்கள் மலம் அள்ளுவதை தவிர்ப்பது சாத்தியமா ? விஞ்ஞானத்தால் சாத்தியமாகாதது எதுவுமில்லை. விமானத்தில் கழிவறையை பயன்படுத்தினால் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். வாக்யூம் கிளீனர் போன்ற உபகரணம் கழிவுகளை இழுத்துக் கொள்கிறது. இது சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேமித்து வைக்கப்படுகிறது. விமானம் தரையிறங்கிய பிறகு கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. இத்தனை பெரிய செயல்முறையிலும் மனிதர்களின் ஈடுபாடு கொஞ்சம் தேவைப்படுகிறது. உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் இந்தியா போன்ற நாட்டில் மனிதர்கள் மலம் அள்ளுவதை முற்றிலுமாக அழித்தொழிக்க இன்னும் நூறு வருடங்கள் கூட ஆகலாம். மாற்றம் என்பது படிப்படியாகத்தான் நிகழும். நான் சொல்லவில்லை. ஒரு மஹான் சொல்லியிருக்கிறார்.

அதுவரையில் நாம் என்ன செய்ய வேண்டும் ? 

வெளியிடங்களில் (உ.தா. திரையரங்குகள், பேருந்து நிலையங்கள்) கழிவறையை உபயோகப்படுத்திய பிறகு அதனை நம் வீட்டில் செய்வது போல சுத்தப்படுத்திவிட்டு திரும்ப வேண்டும்.

ரயில்களில் பயணம் செய்யும்போது கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். (கவனிக்க, அடக்கிக்கொள்ள சொல்லவில்லை).

மலம் அள்ளும், சாக்கடையை சுத்தம் செய்யும் மனிதர்களை முதலில் சக மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அட்லீஸ்ட் நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சி, முதல் படி. என்ன இருந்தாலும் பூஜ்யத்தை விட ஒன்று பெரிது தானே ?

வழக்கம் போல பிற்போக்கு சுபாவம் கொண்ட சிலர் இதற்கும் உங்க வீட்டில் நீங்களே தான் மலம் அள்ளுகிறீர்களா ? என்று ஆரம்பிக்கிறார்கள். இவர்களை பார்க்கும்போது எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் என்று சொல்லும் கவுண்டமணியிடம் அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பாஸ் என்று சொல்லும் செந்தில் தான் நினைவுக்கு வருகிறார். க்ரோ அப் கய்ஸ் !

திருவொற்றியூர் நூலகத்திலிருந்து மாதமொருமுறை வாசகர் வட்டக் கூட்டம் என்று குறுந்தகவல் வருகிறது. என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமென சென்றிருந்தேன். டிஸ்கவரியில் நடைபெறும் புத்தக வெளியீடு / விமர்சனக் கூட்டங்களில் நீங்கள் அதிகபட்சம் எத்தனை பேரை பார்த்திருப்பீர்கள் ? நூலகத்திற்கு சென்றதும் முதலில் தற்காலிகமாக கொஞ்சம் பிரமித்துவிட்டேன். கிட்டத்தட்ட நூறு பேர் இருந்திருப்பார்கள். ஆனால் அதில் குறைந்தது எண்பது பேர் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து கட்டாயத்தின் பெயரில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். எல்லோரும் சலசலவென்று பேசிக்கொள்வதும், டீச்சர் வந்ததும் குழுவாக எழுந்து நின்று குட் மார்னிங் (மாலை ஐந்தரை மணிக்கு) சொல்வதுமாக இருந்தார்கள். முன் வரிசைகளில் ஒரு இருபது முதியவர்கள் அமர்ந்திருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல மைக் வேலை செய்யவில்லை. ஒருங்கிணைப்பாளர் கத்தி, கத்தி ஒருவழியாக மாணவர்களை சாந்தப்படுத்தி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதலில் நான்கைந்து மாணவ, மாணவிகள் ஒவ்வொருவராக வந்து காமராஜரைப் பற்றி ஒப்புவித்தார்கள். தப்பான இடத்திற்கு வந்துவிட்டது போல உணர்ந்தேன். இதற்கு மேல் எழுந்து போனால் நன்றாக இருக்காது என்பதாலும், என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தேன்.

படம்: குங்குமம்
நவநீதகிருஷ்ணன் என்கிற இளைஞர் UPSC தேர்வுகளில் கலந்து கொள்வது அத்தனை கடினமானதல்ல என்று மாணவர்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருந்தார். நவநீதனின் செயல்பாடு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மாணவர்களுக்கு முதலில் UPSC என்றால் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய பரிந்துரை என்னவென்றால் நவநீதகிருஷ்ணன் இன்னும் இரண்டு படிநிலைகள் இறங்கி வந்து பேசியிருக்க வேண்டும். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்து அவர்களே, இவர்களே என்று துவங்கி சிறப்புரை ஆற்றினார். காமராஜர் செய்த சமூக மாற்றங்களை எடுத்துரைத்தார். நன்றாக தூக்கம் வரும் சமயத்தில் தேநீரைக் கொடுத்து காப்பாற்றினார்கள். ஆனால், கல்லைப் போட்டு குடிக்கும் அளவில் கொடுத்தது துரதிர்ஷ்டம். ஒருவழியாக, விரிவாகப் பேச ஆசை ஆனால் நேரம் அனுமதிக்கவில்லை போன்ற ஜல்லிகள் எல்லாம் தாண்டி ஏழு மணிக்கு நிகழ்வு முடிவுக்கு வந்தது. அரங்கில் இருந்து வெளியேறும் ஒவ்வொருவரிடமும் ஒருங்கிணைப்பாளர் புன்னகையோடு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். 

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வாசகர் வட்டக் கூட்டத்தை நடத்துபவர்களின் நோக்கத்தில் எந்த பாசாங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதனை அவர்கள் நடத்தும் முறை விரயம். முதலில் கட்டாயப்படுத்தி பள்ளி மாணவர்களை அழைத்து வருதல் தவறு. அப்படியே அழைத்து வந்தாலும் அவர்களை தொடர்ந்து ஈடுபாடுடன் வைத்துக் கொள்ள வேண்டியது ஒருங்கிணைப்பாளர்களின் கடமை. அதற்காக என்னென்ன புதுமைகளை செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய நூலகம் முன்வர வேண்டும். அவர்களே இவர்களே ரக ஆசாமிகளை எல்லாம் விட்டுவிட்டு இளைஞர்களை பேச வைக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 03072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் இடைப்பட்ட ஒரு காலத்தில் தொடர்ந்து சலிக்க சலிக்க மதுரையை பின்னணியாய்க் கொண்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இப்படங்களுக்கு எல்லாம் பொதுவான அம்சம் துவங்கியதும் வாய்ஸ் ஓவரில் ஊரின் பெருமைகளை எடுத்தியம்பி, மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் ஆற்றில் இறங்குவது, நாயக்கர் மஹால், ஜிகர்தண்டா என்று அழகாக செய்திப்படம் காட்டுவார்கள். போகிறப்போக்கில் அரிவாள் கலாசாரம், சாதி ஜல்லியடிப்புகள் (கருப்பாக தேவர் வருடல்கள்) எல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சென்னையை விட அதிகம் ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட ஊர் மதுரையாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். மதுர, மதுரை சம்பவம், வர்றேன்டா மதுரைக்கு, மதுரை டூ தேனீ வழி ஆண்டிப்பட்டி, மதுரை விடிஞ்சா போச்சு என மதுரையை பெயரில் கொண்ட படங்கள் ஒரு தினுசாக நீள்கிறது. இதுபோக சுப்ரமணியபுரம், கோரிப்பாளையம், கூடல் நகர், திருமங்கலம் பேருந்து நிலையம் என்று ஏரியா பெயர்களைக் கொண்ட படங்கள். அநேகமாக காதல் படத்தில் துவங்கி சுப்ரமணிபுரத்தில் தீவிரமடைந்த மதுரை ட்ரெண்ட் இப்போது கொஞ்சம் குறைந்து சசிகுமார், முத்தையா படங்களில் மட்டும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. 

சமீபத்தில் மதுரையை பின்னணியாய் கொண்ட ஒரு படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் 144. ஹீரோ அசோக் செல்வனும், ஹீரோயின்கள் ஓவியாவும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் (டப்பிங் முறையே கீர்த்திகா, ஐஸ்வர்யா) மாய்ந்து மாய்ந்து மதுரை ஸ்லாங்கில் பேசுகிறார்கள். மற்றபடி முதல் பத்தியில் சொன்னது போல மதுரை பெருமைகள் அதிகமில்லை. சுஜாதாவின் வசந்தகால குற்றங்கள் நாவலிலிருந்து கதையின் ஒரு பகுதி எடுக்கப்பட்டிருப்பதாக கிரெடிட் கொடுக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நான் வசந்தகால குற்றங்கள் படித்ததில்லை. படம் பார்க்கும்போது இதில் எந்தப்பகுதி நாவலில் வந்திருக்கும், எப்படி வந்திருக்கும் என்பதையே யோசித்துக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக ஓவியாவின் கதாபாத்திரம் வரும்.

தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக காதலை வைத்தே குப்பை கொட்டிக் கொண்டிருந்தார்கள். நட்பு, குடும்பம், சென்டிமென்ட், ஆச்க்ஷன் போன்ற உப வஸ்துகள் ஒருபுறம். (சில விதிவிலக்குகள் இருக்கலாம்). சமீப வருடங்களாகத்தான் புதுப்புது ஜான்ராக்கள் பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் அதிலேயும் ஒரு காதல், ஒரு டூயட் என்கிற பண்பாடை விட்டதாகத் தெரியவில்லை. 

144 ஒரு ஹைஸ்ட் படம். கொள்ளை அடிப்பது தொடர்பான படங்களை ஹைஸ்ட் படங்கள் என்கிறார்கள். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941) படத்தை தமிழின் முதல் ஹைஸ்ட் படம் என்று சொல்லலாமா ? சந்தேகம் தான். ஹைஸ்ட் படங்களுக்கென சில வழக்குமுறைகள் உள்ளன. தமிழில் வெளிவரும் ஹைஸ்ட் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஹீரோ சின்னச் சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவார். பெரிய கொள்ளை ஒன்றில் ஈடுபட வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கும். கண்டிப்பாக, எவ்வளவு நாளைக்குத்தான் சின்னச் சின்ன வேலையெல்லாம் செய்றது. பெருசா ஒன்னு செய்றோம். செட்டில் ஆகுறோம் என்ற வசனம் இருக்கும்.

ஹைஸ்ட் படங்களின் கதைப்பகுதியை மூன்றாக பிரிக்கிறார்கள். முதலாவது, குழு சேருதல், திட்டமிடுதல். இரண்டாவது, கொள்ளை சம்பவம். மூன்றாவது, கொள்ளைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்கள். 

மங்காத்தாவில் தொடங்கியிருந்தாலும் சூது கவ்வும் படத்தில் சூடு பிடித்த ஹைஸ்ட் ட்ரெண்ட் மூடர்கூடம், சதுரங்க வேட்டை, ராஜதந்திரம், கள்ளப்படம், 144, ரம் என்று நீண்டு, கடைசியாக வெளிவந்த ஹைஸ்ட் படம் மரகத நாணயம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மேலே சொன்ன அத்தனை ஹைஸ்ட் படங்களும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தன. (சில சமயம் மங்காத்தாவில் கண்டெயினரை கடத்தும் காட்சி போன்றவற்றை சகித்துக்கொள்ள வேண்டும்).

ஹைஸ்ட் படங்களை பொறுத்தவரையில் வீட்டில் ஒரு பீரோவில் பணத்தை அல்லது வைரக்கற்களை பூட்டி வைத்திருந்தார்கள். அதன் உரிமையாளரிடம் இருந்து சாவியை அடித்துப் பிடுங்கி கொள்ளை அடித்தார்கள் என்று காட்டினால் அதில் சுவாரஸ்யம் ஏதுவுமில்லை. வரைபடம் பார்த்து திட்டம் வகுக்க வேண்டும், ஒரு அலாரம் சிஸ்டம் இருக்க வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும், சாமர்த்தியம் காட்ட வேண்டும். சூது கவ்வும் படத்தில் வரும் ‘ட்ரோன்’ காட்சி போல ஒரு பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும்.

144ல் ஒரு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. கண்ணாடியில் செய்யப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலை. அதற்கு கீழே பெரிய சைஸில் ஒரு சப்பரம். சப்பரத்தின் வால் பகுதியின் அருகே சென்று பாஸ்வேர்ட் சொன்னால் திறக்கும். உள்ளே தொலைக்காட்சி, தொலைபேசி, ஏர் கூலர், உற்சாக பானங்கள் என சகல வசதிகளும் பொருந்திய ஒரு சிறிய அறை. அறையில் உள்ள ஒரு பெண் ஓவியத்தின் உதட்டுப்பகுதியை சிரிப்பது போல குவித்தால் மேலே உள்ள ஒரு ரகசிய கதவு திறக்கிறது. அதற்குள் ஒரு நம்பர் லாக் சிஸ்டம். அதற்குள் ஒரு சாதாரண லாக் சிஸ்டம். உள்ளே களிமண் பிள்ளையார் மூட்டைகள். ஒவ்வொரு களிமண் பிள்ளையாருக்கு உள்ளேயும் தங்கக்கட்டிகள் இருக்கின்றன.

முன்பெல்லாம் அடிக்கடி வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெறும் நினைவிருக்கிறதா ? நினைவிருந்தால் அத்தகைய சந்திப்புகளில் யாராவது வலைப்பதிவர் அல்லாதவர் வந்து சிக்கிக்கொண்டு படும் அவஸ்தைகளை கவனித்திருப்பீர்கள். ஏண்டா இங்கே வந்தோம் என்பது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் நின்றுக்கொண்டிருப்பார் அந்த மனிதர். போதாத குறைக்கு நம் வலைப்பதிவு நண்பர்களும் அவரை சக வலைப்பதிவர்களிடம் வாசகர் என்று அறிமுகப்படுத்திவிட்டு கொல்லென சிரிப்பார்கள். அதுபோல சமீபத்தில் எனக்கு சம்பந்தமில்லாத ஒரு சந்திப்பில் சிக்கிக்கொண்டேன். பைக்கர்ஸ் மீட் ! பிரதி ஞாயிறு காலை ரைடர்ஸ் எல்லாம் தங்களுடைய எம வாகனத்தை முறுக்கிக்கொண்டு ஈ.சி.ஆரை நோக்கி பயணிக்கிறார்கள். சென்னையிலிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில், மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள முதலியார்குப்பத்தில் (சுருக்கமாக MDK) கூடுகிறார்கள். உன்து எவ்ளோ தருது, உன்னுதை நான் கொஞ்சம் ஓட்டிப் பார்க்கட்டுமா ?, என்து பெருசு என்று சங்கேத மொழியில் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். திடீரென யாரேனும் ஒரு ரைடர் அருகில் உள்ள பாலத்தில் சப்தம் எழுப்பியபடி வீலிங் செய்து காட்ட எல்லோரும் ஆச்சர்யமாக திரும்பிப்பார்க்கிறார்கள். சில ரைடர்கள் தங்களுடைய கேர்ள்ஃபிரண்டை அழைத்து வருகிறார்கள். சிலருக்கு ரைடரே கேர்ள்ஃபிரண்டாக அமைந்திருக்கிறார்கள். நான் அசடு வழிந்தபடி நின்றுக்கொண்டு, ஒருவகையில் நானும் ரைடர்தாங்க. பில்லியன் ரைடர் என்று மொக்கை போட்டு சமாளித்துக் கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணிநேரம் சிறு சிறு குழுக்களாக கூடி நின்று, தத்தம் பைக்குகளை பற்றி விவாதித்துவிட்டு கலைகிறார்கள். இதிலே கொஞ்சம் தீவிரமான மெக்கானோபிலியாக்கள் இருக்கிறார்கள். கானத்தூர் செக்போஸ்ட் தாண்டி வண்டியை ஓரம் கட்டிவிட்டு போகிற வருகிற சாகஸ பைக்குகளையும், கார்களையும் பார்த்து ஜொள்ளு விடுகிறார்கள். விர்ரூம் என்று சப்தமெழுப்பியபடி ஏதேனும் ஒரு வாகனம் கடந்தால், செக்ஸியான பெண்ணைப் பார்த்துவிட்டதுபோல திகைப்படைகிறார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment