3 June 2019

பிரபா ஒயின்ஷாப் – 03062019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழல்லாத திராவிட மொழிகளில் வெளியான இரண்டு திரைப்படங்களைப் பற்றி இவ்வார ஒயின்ஷாப்பில் பார்க்கலாம்.

முதலாவது, கவளுதாரி (கன்னடம்). யூ-டர்னிற்குப் பிறகு நான் நேரடியாகப் பார்க்கும் இரண்டாவது கன்னட சினிமா. ப்ளாக்பஸ்டர், ஏராளமான பாராட்டுகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாண்டி நம்மவர்கள் பலரும் கவளுதாரியைப் பார்த்து, மற்றவர்களுக்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவளுதாரியில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷிணி பிரகாஷ் மீது எனக்கு ஒரு பிரத்யேக ஆர்வம். அது அப்புறம். முதலில் படத்தைப் பற்றி பார்க்கலாம்.

போக்குவரத்து காவல் துணை ஆய்வாளராக பணிபுரியும் ஷ்யாமுக்கு குற்றப் பிரிவில் இணைய ஆசை. ஆனால் கைகூடவில்லை. இன்னொரு பக்கம் திருமணத்திற்கு மணப்பெண் அமையவில்லை. அந்த சமயத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடத்திலிருந்து மூன்று பேருடைய எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அவை நாற்பது வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட தொல்லியல் துறை அதிகாரி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடையது என்று கண்டுபிடிக்கப்படுகிறது. குற்றப்பிரிவு காவல்காரர்கள் அதனை அலட்சியமாக கையாள, ஷ்யாம் தனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக அந்த வழக்கைத் தொட்டு, அதனால் ஏற்படும் விளைவுகள், அதன் முடிவு மிச்சக்கதை. ப்ரைமில் இருக்கிறது.

கவளுதாரி நிறைய இடங்களில் இரண்டு படங்களை நினைவூட்டுகிறது. ஒன்று, யூ-டர்ன். மற்றொன்று, துருவங்கள் பதினாறு (ஹீரோ வேறு ரகுமான் சாயல்). குறிப்பாக, யூ-டர்னின் வார்ப்புருவை வைத்துக்கொண்டு அதிலே, அதே பாணியிலான வேறொரு கதையை உட்கார வைத்திருக்கிறார்கள். நிறைய இடங்களில் பார்வையாளர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம் படம் முடியும் போது, படத்தில் நிறைய gaps இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

கன்னட சினிமா என்றால் ஹீரோக்கள் பார்ப்பதற்கு ஹீரோ மாதிரி இருக்க மாட்டார்கள் என்றொரு கருத்து உண்டு. ஒருமுறை ஒரு நண்பர் கன்னட தேசத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள், அதே சமயம் அங்கு பிறந்த பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். கன்னட ஹீரோக்களின் தோற்றம் அதனை உறுதிப்படுத்தும். அப்படிப்பட்ட வரலாறு கொண்ட மண்ணில் இருந்து ஸ்மார்ட் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் ரிஷி. கவளுதாரிக்கு பிறகு ரிஷி பட வாய்ப்புகளால் பிஸி !

ரோஷிணி பிரகாஷ்
ரோஷிணி பிரகாஷ் ! நீண்ட நாட்களாக ரோஷிணி மீது ஏனென்றே தெரியாத ஒரு ஈர்ப்பு இருந்து அது ஏன் என்று இப்போது கண்டுபிடித்துவிட்டேன். ஈர்ப்புக்கு காரணம் கெளதமி. ரோஷிணியிடம் கெளதமியின் சாயல் அப்படியே இருக்கிறது. கெளதமி என்றால் இப்போதுள்ள கெளதமி அல்ல. மாசி மாசம் ஆளான பொண்ணு’வில் ஃப்ரெஷ்ஷாக இருப்பாரே அந்த கெளதமி. அதே கூர் நாசி, அதே ஜூஸியான கீழுதடு. சட்டென இருவரும் ஒரே பூர்வீகத்தில் இருந்து வந்திருப்பார்களோ என்று ஐயப்பட்டு விக்கியில் பார்த்தேன். இல்லை, கெளதமி ஆந்திரா. ரோஷிணி மைசூரு. இருக்கட்டும் இரண்டுக்கும் ஒரே ஸ்க்ரிப்ட் தான். 

சமீப வருடங்களில் சந்தனக்கட்டை என்று அழைக்கப்படும் கன்னட சினிமாவில் இருந்து கோலிவுட்டிற்கு அளிக்கப்பட்ட கொடை ஷ்ரதா ஸ்ரீநாத். அந்த வகையில் அடுத்த கொடை ரோஷிணி பிரகாஷாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். ரோஷிணி ஏற்கனவே ஏமாளி(லி) என்ற படத்தில் சிறிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். ரோஷிணியின் பேட்டியைப் பார்த்தேன். ஆங்கிலமும், கன்னடமும், தமிழும் கலந்து, அதிலே தமிழ் இலக்கணத்தை மிக்ஸியில் அடித்து மேலே ஊற்றியது போல கொஞ்சலான ஒரு புது மொழியைப் பயன்படுத்துகிறார். பாரதியார் இருந்திருந்தால் தமிழை விட அதுதான் இனிது என்று ஒப்புக்கொண்டிருப்பார். ரோஷிணி தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வர வேண்டும் !

இரண்டாவது, பார்க்கப்போவது ஆ (Awe) (தெலுங்கு). கவளுதாரியை ரோஷிணிக்காக பார்த்தேன் என்றால் ஆ’வை யாருக்காக பார்த்தேன் என்று தனியாக சொல்ல வேண்டியிருக்காது. ஆனால், அது மட்டும் காரணமல்ல. ஆ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் !

ஒரு உணவகம். அங்கே வரும் வெவ்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களின் பலதரப்பட்ட உணர்வுகளைப் பற்றியும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் காஜல் அகர்வால் எல்லோரையும் கொல்ல வேண்டுமென்ற உணர்வுடன் அதே உணவகத்திற்கு வருகிறார். காஜலுக்கும் உணவகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதைத் தெரிந்துகொள்ள படம் பார்க்க வேண்டும். கதை என்று சொல்வதை விட காட்சித்துணுக்குகளின் தொகுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும். கூடவே மனிதர்களின் வெவ்வேறு உணர்வுகளை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு லெஸ்பியன் ஜோடி, ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறப்போகும் விஞ்ஞானி, ஒரு மந்திரவாதி, அவரோடு போட்டி போட்டு மேஜிக் செய்யும் குழந்தை, டிரக்ஸ் எடுத்துக்கொள்ளும் ஒரு பணிப்பெண், அவளது காதலன், ஒரு சமையல்காரர், ஒரு தங்கமீன், ஒரு போன்சாய் மரம் என்று வெவ்வேறு தரப்பு காண்பிக்கப்பட்டு இறுதியில் எல்லாம் ஒரு புள்ளியில் வந்து முடிகிறது. நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

போகிற போக்கில் லெஸ்பியன் உறவு, பாலின மறுசீரமைப்பு சிகிச்சை, பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள், போதைக்கு அடிமையாதல் போன்ற சமூக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. கடைசி பதினைந்து நிமிட படம் நம்மை ஒரு மாதிரியாக குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது என்பதால் அதிலிருந்து விடுபடுவதற்காகவே இரண்டாவது முறை படம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல கதாநாயகர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள். இரண்டிலும் டைட்டில் பாடல் அட்டகாசமாக இருந்து, ஒரு அமானுஷ்ய உணர்வைத் தருகிறது. இரண்டும் நமக்கு நெருக்கமான மொழிகள் என்பதால் சப்-டைட்டிலை படித்துக் கொண்டிராமல் படத்துடன் ஒன்ற முடிகிறது. இரண்டிலும் துணை வேடங்களில் சில தமிழ் படங்களில் பார்த்து பழக்கப்பட்ட துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இரண்டும் நல்ல படங்கள் !

இப்போது நான் இரண்டு பறக்கோடி எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறேன். ஒரு புறம், இவ்விரு படங்களை யாரும் தமிழில் ரீமேக் செய்துவிடக் கூடாது என்றும், இன்னொரு புறம், தமிழில் நமக்கு விருப்பமான நடிகர்கள், இயக்குநர்களின் கைவண்ணத்தில் இவற்றை பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 May 2019

பிரபா ஒயின்ஷாப் – 27052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புதிய மத்திய அரசாங்கத்தில் வெளியாகும் முதல் ஒயின்ஷாப் !

தேர்தல் முடிவுகள் என்பது பெரும்பாலும் ஒரு புதிராகவே அமைந்துவிடுகிறது. மக்களுக்கு மட்டுமல்ல. பல வருடங்கள் அரசியலில் பழம் தின்று கொட்டையடித்து பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கே கூட. ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று மோடியாருக்கு முன்பே தெரிந்திருந்தால் கடைசி நேர பிரஸ் மீட், கேதர்நாத் தியான ஸ்டண்ஸ் எல்லாம் செய்திருக்க மாட்டார் இல்லையா ? தற்போது மோடியாருக்கு தான் அப்படி செய்ததை எல்லாம் நினைத்தால் சங்கடமாக இருக்கக்கூடும். நூறு சதவிகித தமிழகமும் பா.ஜ.க. வேண்டாம் என்று நினைத்திருந்தால் கூட பா.ஜ.க.வை தவிர்த்திருக்க முடியாது என்பதால் அது குறித்து வருந்துவதற்கு ஒன்றுமில்லை. அதே சமயம் தமிழகத்தின் முடிவுகளைக் கண்டு வியக்காமலும், வருந்தாமலும் இருக்க முடியவில்லை.

குறிப்பாக தி.மு.க. ஆதரவாளர்கள் எல்லோரும் நிஜமாகவே சந்தோஷமாகத்தான் இருக்கிறார்களா அல்லது தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்களா என்று புரியவில்லை. 38 MP தொகுதிகள், இடைத்தேர்தலில் 13 MLA தொகுதிகள் என்பது மகிழ்வான செய்திதான், இதுவே வேறொரு சமயமாக இருந்திருந்தால். ஒருபுறம் தி.மு.க.விற்கு கிளீன் ஸ்வீப் என்கிற சந்தோஷத்தை கெடுத்த தேனி தொகுதி. அதுகூட பரவாயில்லை. 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் இன்னமும் (அதாவது நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற டிஸாஸ்டர்களுக்குப் பிறகும்) தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இதற்கு மேல் இது பெரியார் மண் என்று பெருமையடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது ? இது இடைத்தேர்தல் தான். முழுமையான சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் ஒரு பேச்சுக்கு இதே பாங்கில் சென்றால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 138 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 96 இடங்களையும் கைப்பற்றும். அப்போதும் தி.மு.க.வினர் மண்ணைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அடுத்த சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதிலே தி.மு.க. மட்டும் தனியாக 150+ இடங்களையும், கூட்டணி கட்சிகள் சேர்த்து 180+ இடங்களையும் பெற்றால் மட்டுமே அது வெற்றி.

மீண்டும் பா.ஜ.க. மற்றும் மாநிலத்தில் தொடரும் அ.தி.மு.க. ஆட்சி என்பதால் குறைந்தது அடுத்த சில ஆண்டுகளுக்கு நாம் சந்திக்கப்போகும் டிஸாஸ்டர்கள் :-

  • நீட் தேர்வுகள். அது அதன் நீட்சியாக மற்ற படிப்புகளுக்கும் கொண்டு வரப்படலாம்.
  • சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை செயல்படுத்தப்படும்.
  • ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கெயில் குழாய் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்.
  • காவிரியைத் தர மாட்டார்கள். வேண்டுமானால் சின்னம்மாவைத் தருவார்கள்.

இதுபோன்ற இன்னும் ஏராளமான மின்சார சீண்டல்களுக்கு ஆளாகப்போகிறோம். ஒருவகையில் தி.மு.க.விற்கு இப்போது கிடைத்திருக்கும் வெற்றி ஒரு முள்கிரீடம். இனி தமிழ்நாட்டில் உள்பாவாடை தொலைந்தால் கூட அதற்கு தி.மு.க. தான் காரணம் என்று கேஸ் எழுதுவார்கள். துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க.வே மனமுவந்து எதிர்த்தால் கூட அவர்களால் தடுக்க முடியாது. வேண்டுமானால் நாம் திருமா பாராளுமன்றத்தில் கர்ஜித்தார் என்றோ, கனிமொழி ‘என்ன அநியாயங்க இது ?’ என்று கேள்வி எழுப்பினார் என்றோ கருப்பு, சிகப்பு, நீல நிற ஹார்டின்களை போட்டு சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

இப்படித்தான் கந்தர்வ ராத்திரி என்கிற மலையாள படத்தில் வைராக்கியமாக இருக்கும் விசித்திராவை... வேண்டாம் விடுங்கள்.

***************

துக்கத்தில் இருக்கும் மனதைக் கொஞ்சம் தும்பாடு பற்றி பேசி ஆற்றிக்கொள்வோம். கெட்டவார்த்தை இல்லை. தும்பாடு (Tumbadd) என்பது கடந்த வருடம் வெளியான ஹிந்தி திரைப்படம். 

பூர்த்தி தேவி என்னும் பெண் கடவுள். அளவிலா தங்கமும், தானியமும் கொண்டவள். இப்பூமியானது அவளது வயிற்றில் தான் அமைந்துள்ளது. ஏராளமான கடவுள்களை உருவாக்கிய தேவியின் மூத்த குழந்தையின் பெயர் ஹஸ்தர். ஹஸ்தர் பேராசை கொண்டவன். அவன் தேவியின் தங்கத்தையும், தானியத்தையும் முழுமையாக அடைய நினைக்கிறான். நினைத்தபடி தங்கத்தை சொந்தமாக்கிக் கொள்கிறான். ஆனால் தானியத்தை நெருங்கும் முன் மற்ற கடவுளர்களால் தாக்கப்படுகிறான். அவர்களிடம் இருந்து அவனைக் காக்கும் தேவி, அளவிலா தங்கம் அவனுக்கே சொந்தம், ஆனால் அவனுக்கு தானியம் (அதாவது உணவு) மட்டும் கிடைக்காது என்கிற சாபத்துடன் அவனை தன் வயிற்றில் வைத்து காப்பாற்றுகிறார். இது முன்கதை.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டம். தும்பாடு அரண்மனையில் ஹஸ்தருக்கு அமைக்கப்பட்டுள்ள கோவிலில் அளவிலா தங்கத்துடனும், தீராத பசியுடனும் ஹஸ்தர் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவேளை தங்கக்காசை எடுக்கச் செல்கையில் ஹஸ்தரின் தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டால் அவர்களுக்கு மரணமே ஏற்படாத சாபம் கிடைத்துவிடும். அதற்கு சாட்சியாக அந்த ஊரில் ஒரு மூதாட்டி இருக்கிறார்.

ஹஸ்தர்
இப்போது ஹஸ்தரைப் போலவே பேராசை கொண்ட கதாநாயகன் விநாயக். அவனது சிறு வயதிலிருந்தே அவனுக்கு அந்த புதையலின் மீது ஒரு கண். இதற்கு மேல் கதையை எழுதிப் படித்தால் சுவாரஸ்யமில்லை. ப்ரைமில் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் டப்பிங் உள்ளது.

ஒரு கைவினைப் பொருளை உங்களுக்காக பிரத்யேகமாக தயாரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படத்தின் விஷுவல்ஸ். சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய கதை என்பதால் தேவதாசி, சதி, மன்னராட்சி முறை, சுதந்திரப் போராட்டம், அதை மக்கள் அணுகிய விதம் போன்ற விஷயங்களை லேசாகத் தொட்டுச் செல்கிறது.

படம் பார்த்தபிறகு தும்பாடு படுத்தும் பாடு ஏராளம். ஒரு விஷயம் உறுதி, இரண்டு மணிநேர படம் – அதைப் பார்த்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் அதனை மறந்துவிட முடியாது. குறைந்தது இரண்டு நாட்களுக்காவது தும்பாடின் தாக்கம் இருக்கும். இதனை ஒரு mind-bender என்கிறார்கள். படம் பார்த்த பிறகும் உங்கள் மனதில் ஏராளமான கேள்விகள் எழும் என்பதற்கு நானும் கோராவும் சாட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment